You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 21

Quote

21

திருமண வைபவ நிகழ்ச்சி இனிதே தொடங்கியிருந்தது.

அந்த விடியற் காலை பொழுது மங்களகரமான இசையில் நனைந்து கொண்டிருக்க, மல்லியோ தன் கணவனை அந்த மண்டபம் முழுக்க வலைவீசி தேடி கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்த சித்ரா, "மாமா வெளியே யார்கிட்டயோ பேசிட்டு இருந்தாரு" என்று தெரியப்படுத்த.,

"இங்கே எவ்வளவு வேலை இருக்கு... அப்படி வெளியே யாருக்கிட்ட கதை அளந்திட்டு இருக்காரு" என்று மல்லி புலம்பி கொண்டே வாசலை அடைந்தார்.

சித்ரா சொன்னது போலவே நந்தா யாரோ ஒரு இளம் பெண்ணிடம் மும்முரமாக பேசி கொண்டிருந்தை பார்த்த மல்லி அவரை நெருங்கி வந்து, "யாருங்க இவங்க...நம்ம சொந்தகார பொண்ணா?" என்று சந்தேகமாக கேட்க,

"நோ... நோ... என்னோட ஃபேன்?" என்றார்.

"எது?" என்று மல்லி புரியாமல் பார்க்க நந்தா உடனே,

"என் யூ ட்யூப் சானலை ரெகுலரா ஃபாலோ பண்றாங்க... இங்கே மண்டபத்துல என்னை பார்த்து அடையாளம் கண்டுபிடிச்சி வந்து பேசுனாங்க" என்று பெருமையடித்து கொண்டிருந்த அதேநேரம்,

"இவங்கதான் என்னோட வொய்ஃப் மல்லிகா" என்று மல்லியையும் அந்த பெண்ணுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

மல்லிக்கு அப்படியொரு கோபம் வந்தது. அந்த பெண்ணிடம், "ஒரு நிமிஷம்" என்று கைகாட்டி விட்டு கணவரை தனியே இழுத்து வந்தவர்,

"அந்த பொண்ணுக்கிட்ட பேசறதுதான் இப்போ ரொம்ப முக்கியமா?" என,

"நான் இப்போ ஒரு செலிபிரிட்டி மல்லி... இந்த மாதிரி ஆயிரம் பேர் நான் போற இடத்துல எல்லாம் என்னை துரத்தி துரத்தி பேசுவாங்க... நீ அதெல்லாம் பார்த்து பொஸஸிவ் ஆக கூடாது" என்றவர் கூலாக சொல்ல, மல்லிக்குத்தான் சூடேறியது.

"மன்னாங்கட்டி... இவர் மூஞ்சிக்கு பொஸஸிவ் வேற ஆகுறாங்க" என்று தலையிலடித்து கொண்டதோடு கணவனை கடுப்பாக பார்த்து.

"பெரிய செலிபிரிட்டி... ஆமா அப்படி என்ன கிழிச்சிட்டீங்க நீங்க செலிபிரிட்டியாக" என்று கேட்க,

"உனக்கு என்ன தெரியும்... அந்த பொண்ணு கிட்ட கேட்டு பாரு... என் டிஷ்ஷை ட்ரை பண்ணிட்டு ஆஹா ஓஹானு பாராட்டிட்டு இருக்கா" என்றார்.

"அப்படி என்ன டிஷ் ட்ரை பண்ணாளாம்"

"டென் டைப்ஸ் ஆப் உப்புமா... டையிலி ஒரு டைப் செஞ்சு அவ புருஷனுக்கு கொடுத்திருக்கா"

"உயிரோட இருக்கானாமா... அவ புருஷன்" என்று மல்லி சாதராணமாக கேட்க,

"வாயை கழுவுடி... பிள்ளை கல்யாணத்தை வைச்சுக்கிட்டு... இப்படியா அபசகுனமா பேசுவாங்க" என்றார். 

"பையனுக்கு கல்யாணம்னு சாருக்கு இப்பதான் ஞாபகத்துக்கு வருதா... அபசகுனமா பேசுறாங்களாமா அபசுகுனமா... வர கோபத்துக்கு அசிங்க அசிங்கமா பேசி விட்டுருவேன்... ஒழுங்கா உள்ள வந்துருங்க" என்று மல்லி எச்சரிக்கை செய்துவிட்டு உள்ளே செல்ல இதற்கு மேல் பேசினால் மனைவி இடம் பொருள் பார்க்காமல் கழுவி கழிவி ஊற்றுவாள் என்று எண்ணி,

"கொஞ்சம் உள்ளே வேலை இருக்கு... நெக்ஸ்ட் ஒரு சூப்பர் டிஷ்ஷோட மீட் பண்ணலாம்" என்று அந்த பெண்ணிடம் சமாளித்துவிட்டு உள்ளே வந்தார்.

மணமேடையில் திருமண கோலத்தில் அமர்ந்திருந்த வெங்கட்டையும் ஸ்ரீலக்ஷ்மியையும் பார்த்து அவருக்கு மனம் நிறைந்துவிட்டது. மனைவியின் தேர்வில் லேசாக உறுத்தல் இருந்த போதும் அவர்கள் இருவரையும் ஜோடியாக பார்க்கும் போது அவ்விதம் தோன்றவில்லை.

இருவரின் பொருத்தமும் அத்தனை அம்சமாக இருந்தது.

மேடையில் நின்றிருந்த மல்லி அவரை மேலே வர சொல்லி கையசைத்தார். மேலே சென்று நின்றவர் மனைவியின் காதோரம், "மல்லி எனக்கொரு சந்தேகம்?" என்று கேட்க,

"என்ன ஏதாச்சும் சடங்கு செய்ய மறந்துட்டோமா?" என்றவர் பரபரப்பாக கேட்க,

"அது இல்ல" என்றவர் மனைவியிடம் மெலிதாக, "அதெப்படி... நீ இப்பவும் நம்ம கல்யாணத்துல பார்த்த மாதிரி அப்படியே இருக்க" என்று கேட்டு வைக்க பதிலுக்கு மல்லி முறைத்து வைக்க,

"உன்னுடைய இந்த ரொமன்டிக் லுக்காகவே உன்னை எவ்வளவு வேணா வெறுப்பேத்தி பார்க்கலாம்டி" என்றார். மல்லியால் அதற்கு மேல் அந்த பொய் கோபத்தை காட்ட முடியவில்லை. வெட்கத்தில் அவர் கன்னங்கள் சிவந்து இதழோரம் புன்னகை எட்டி பார்த்துவிட, நந்தாவின் கண்கள் அதனை ரசனையுடன் பார்த்தது.

அவர் மீண்டும் "மல்லி" என்று தயக்கத்துடன் அழைக்க,

"கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டீங்களா?" என்றவர் செல்லமாக கோபித்து கொள்ள,

"அது இல்ல... நம்ம பசங்களையும் மருமகள்களையும் மேடைக்கு கூப்பிடலாமா?" என்று தயக்கத்துடன் இழுக்க,

"இதுக்குதான் ஐஸ் வைச்சீங்களா?" என்று மல்லி முகம் மாற,

"நீ அவங்கள கூப்பிடலன்னா விடு... அதுக்கு ஐஸ் வைச்சேன் அது இதுன்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்தாதே" என்றவர் முகத்தை தூக்கி வைத்து கொள்ளவும் மல்லிக்கு என்னவோ போலானது.

"தாலி கட்டிற சமயத்துல எதுக்கு இப்படி மூஞ்சை தூக்கி வைச்சிக்கிறீங்க... சரி சரி கூப்பிடுங்க" என்றவர் போனால் போகிறதென்று சம்மதம் சொல்லிவிட்டார்.

மனைவியை ஆச்சரியமாக பார்த்தவர் உற்சாகமாக மகன்களையும் மருமகள்களையும் மேடைக்கு அழைத்து வந்து நிறுத்தினார்.

அதன் பின் மளமளவென திருமண சடங்குகள் எல்லாம் நடந்தேறின.

அங்கிருந்த எல்லோர் முகத்தில் இருந்த சந்தோஷம் ஸ்ரீயிடம் மட்டும் இல்லை. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இந்த திருமணம் வேண்டாம் என்று எழுந்து விட வேண்டும் என்று அவள் உள்ளம் தவிப்புற்ற போதும் ஏனோ அவளால் அது முடியவில்லை.

மேளதாளங்கள் முழங்க வெங்கட் அவளுக்கு மாங்கல்யம் அணிவித்தான். அதன் பின் அவள் தோளை சுற்றி நெற்றியில் குங்குமிட்ட போது அவன் பார்வையில் தெரிந்த நெருக்கம் அவளை அச்சப்படுத்தியது.

அதன் பிறகு செய்த ஒவ்வொரு சடங்கிலும் அவன் பார்வை அவளை தீண்டி சென்ற விதமே புதுவிதமாக இருந்தது.

அவன் பார்வைதான் அப்படி இருக்கிறதா இல்லை தனக்குத்தான் அப்படி தோன்றுகிறதா என்று அவளுக்கு புரியவில்லை.

நேற்று இரவு அவனிடம் உண்மையை சொல்ல போய் தானே வம்பை இழுத்துவிட்டு கொண்டோமோ என்றவளுக்கு இப்போது கவலையாக இருந்தது.

நேற்று அவள் மேடையை விட்டு இறங்கி சென்ற பிறகு திலகா அவள் பின்னோடு சமாதானம் செய்ய வர, அவள் வேகமாக தன் அறைக்கதவை பூட்டி கொண்டாள்.

"சாரு... கதவை திற" என்றவர் எத்தனை தட்டியும் அவள் கதவை திறக்கவில்லை. ஆதலால் அவள் அலைபேசிக்கு அவர் விடாமல் தொடர்ந்து அடிக்க,

ஸ்ரீ கடுப்பில் தன் செல்பேசியை தூக்கி போட்டு உடைக்க எத்தனித்த போதுதான் வெங்கட்டின் அழைப்பு வந்தது. முதலில் அவளுக்கு பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது.

பின்னர் கொஞ்சம் தெளிவுபெற்றவள் தன் அலைபேசியை திறக்க எத்தனித்த போது அது திறக்கவில்லை.

"பிசாசு... லாக் பேட்டனை கூட மாத்தி வைச்சு இருக்கு" என்று எரிச்சலடைந்தாள். பின் 'எம்' என்று முயற்சி செய்து பார்த்தாள். திறந்து கொண்டது.

முதலில் அவளுடைய குறுந்தகவல்கள் செயலியை திறந்தவளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

சாட் பாக்ஸ் முழுவதும் வெங்கட்டுடன் பேசிய குறுந்தகவல்கள் நிரம்பி இருந்தன. அழைப்புகளிலும் அவனுடைய பெயர் மட்டுமே இருந்தது. அவனை தவிர வேறு இந்த ஒரு மாதத்தில் அவள் யாருக்கும் பேசி இருக்கவில்லை.

இவ்வளவு தூரம் பேசி கொண்டவர்கள் நேரில் சந்திக்காமலும் இருந்திருக்க மாட்டார்கள். அந்த சந்திப்பு எந்தளவில் இருந்திருக்கும் என்று யோசிக்கும் போதே அவளுக்கு பயமாக இருந்தது.

அவள் தோற்றத்தில் அவள் தேகத்திலிருந்து செய்யப்பட்ட செயலுக்கு அவள் பொறுப்பாளி அல்ல என்று சொன்னால் யாராவது நம்புவார்களா என்ன?

ஆனால் சொல்லாமல் இந்த திருமணத்தை செய்து கொள்வது அதை விடவும் ஆபத்தானது. அவளுக்கு தலையை பியித்து கொள்ளலாம் போலிருந்தது.

நிறைய யோசித்து குழம்பி இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.

வெங்கட் தன்னை நம்பாவிட்டாலும் அல்லது பைத்தியம் என்று நினைத்து கொண்டால் கூட பரவாயில்லை. அவனிடம் நடந்த உண்மைகளை கூறிவிடுவது என்று.

ஆதலால் மண்டபத்தில் சத்தங்கள் ஒடுங்கிய பின்னர் அவன் கைப்பேசிக்கு மாடிக்கு வரும்படியும் தான் அங்கே காத்திருப்பதாகவும் குறுந்தகவலை அனுப்பிவைத்தாள்.

அவன் அதனை பார்த்துவிட வேண்டுமென்று அவள் காத்திருக்க, அவனுமே ஏதோ குழப்பத்தில் தூங்காமல் இருந்த காரணத்தால் தன் கைப்பேசியில் ஒளிர்ந்த வெளிச்சத்தை பார்த்து அந்த தகவலை பார்த்தான்.

ஏன் இப்படி ஏடாகுடமாக எதையாவது செய்கிறாள் என்று அவனுக்கு கோபமாக வந்தது.

 'என்ன ஸ்ரீ... இந்த நேரத்துல எப்படி வர முடியும்?' என்றவன் பதில் எழுதி அனுப்ப அடுத்த கணம், 'நான் மேலே வெயிட் பண்ணிட்டு இருக்கேன்' என்றவள் பதில் அனுப்பி இருந்தாள்.

சில நிமிடங்கள் யோசித்தவன் அருகே படுத்து உறங்கும் நண்பனை தொந்தரவு செய்யாமல் மெதுவாக அறையை விட்டு வெளியேறி மாடிக்கு வந்திருந்தான்.

அவள் சுவற்றில் சாய்ந்து கொண்டு அவன் வரும் வழியை எதிர்பார்த்து நின்றிருந்தாள். அங்கிருந்த மெல்லிய வெளிச்சத்திலும் அவளும் அவள் அணிந்திருந்த மஞ்சள் நிற புடவையும் பளிச்சென்று தெரிந்தது.

கோபத்துடன் வந்த போதும் அவனால் இப்போது அந்த கோபத்தை இழுத்து பிடித்து கொண்டிருக்க முடியவில்லை. கண்களில் முழுவதுமாக அவளை நிரப்பி கொண்டபடியே எதிரே வந்து நிற்க, அத்தனை நேரம் அவளுக்குள் இருந்து தைரியம் லேசாக தளர துவங்கியது.

மாயா விஷயத்தை எப்படி சொல்வது எங்கே ஆரம்பிப்பது என்றவள் தவிப்பில் நிற்க,

"மேடமுக்கு எது செய்றதா இருந்தாலும் இந்த நட்டு நடுராத்திரிதான் கிடைக்குமா? பகல எதுவும் செய்ய மாட்டீங்களோ?" என்றவன் நக்கலடிக்க, அவள் அவனை புரியாமல் பார்த்தாள்.

"செய்றதெல்லாம் செஞ்சுட்டு பார்க்கிற பார்வையை பாரு" என்றவன் கேட்க அவள் மீண்டும் அதே பார்வையை பார்த்து வைக்க,

"என்ன இது அதிசயம்... நான் பத்து வார்த்தை பேசுனா நீ நூறு வார்த்தை பேசுவ... இப்போ என்னடான்னு ஒன்னும் பேசாம நிற்குற" என்றவன் சொல்ல அவள் திருதிருவென்று விழித்தாள்.

அந்த சூழ்நிலை என்னவோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போலதான் இருந்தது அவளுக்கு.

எப்படியாவது உண்மையை சொல்லிவிட அவள் முயற்சித்து கொண்டிருக்க அவனோ அவள் அமைதியை பார்த்து, "எனக்கு புரிஞ்சிடுச்சு? நீ ஏன் பேசாம இருக்கன்னு எனக்கு நல்லா புரிஞ்சிடுச்சு" என்றான்.

அவளுக்கு அவன் என்ன சொல்கிறான் என்று கொஞ்சமும் புரியவில்லை.

அவனோ அவள் நிலைமை புரியாமல், "நீ கேட்டதை நான் செய்ய மாட்டேன்னு சொன்னேனு கோபத்துல எனக்கு ரிப்ளையும் பண்ணல காலும் எடுக்கல இல்ல" என்றான்.

"என்ன கேட்ட? என்ன மெசேஜ்?" அப்போதும் அவளிடம் அதே புரியாத பார்வைதான்.

"நடிக்காதே... அந்த கடுப்பிலதானே எல்லோர் முன்னாடியும் போட்டோகிராபர் கிட்ட எகுறன்ன... இப்ப நட்டுநடுராத்திரில மெசேஜ் பண்ணி வர சொல்லி இருக்க" என்றவன் வினவ அவள் மறுப்பாக தலையசைத்தாள்.

"பயப்படுற மாதிரி நடிக்காதே... அதெல்லாம் உனக்கு வராதுன்னு எனக்கு தெரியும்"

"பந்தகால் நட்ட பிறகு எப்படி நம்ம மீட் பண்ண முடியும்... உனக்கே தெரிய வேண்டாமா... வா வா ன்னு சொன்ன நான் எப்படி வர? இதுல நீ கேட்டதை வேற கொடுக்கலன்னு கோபம் வேற" என்றவன் எரிச்சலுடன் தொடர  அவளோ,  'என்ன கேட்டிருப்பாள்?' என்றவள் யோசித்து குழம்பினாள்.

"இப்ப தரட்டுமா நீ கேட்டதை?" என்று வில்லங்கமாக புருவத்தை உயர்த்தி கேட்டதோடு அல்லாமல் இரண்டு எட்டில் அவளை நெருங்கி நின்றுவிட, அவளுக்கு பதட்டமேறியது.

"நான் எதுவும் கேட்கல" என்றவள் சொல்ல,

"கேட்கலயா... அப்போ இதுக்கெல்லாம் நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு என்னை கிண்டல் பண்ணது யாரு... நீ இல்லையா?" என்று கேட்டவன் இன்னும் நெருங்கிவந்தான்.

அவன் மூச்சு காற்று உரசும் தூரத்தில் நின்றிருந்தவளுக்கு பேச்சு வராமல் தடுமாற, "உஹும்... இல்ல... அது நான் இல்ல... நான் அந்த மெசேஜ் பண்ணல" என்று அவசர அவசரமாக மறுத்தாள்.

"ம்ம்... அப்ப வேற யாருங்க மேடம்?" என்றவன் முறைப்பாக கேட்க,

"மாயா... அது மாயாதான்" என்றவள் சொல்லி முடிக்கும் போது அவன் பார்வை உச்சபட்ச எரிச்சலை காட்டியது.

"உனக்கு எல்லா டைம்லயும் விளையாட்டுதான்" என்று சொல்லி கடுப்பானவன் அடுத்த நொடியே அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டுவிட்டான்.

அவள் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. அவனை விலக்கி தள்ள முயற்சிப்பதற்குள் அவனே விலகி நின்றிருந்தான்.

"சாரி ஸ்ரீ... உன்கிட்ட சும்மா விளையாடலாம்னுதான் பார்த்தேன்... நீ மாயா பேரை சொல்லி என்னை வெறுபேத்தவும்தான்" என, அவள் மிரள மிரள விழித்தாள்.

'மாயா பேரை சொன்னதுக்கே இப்படியா?'

அதற்கு பிறகு எங்கிருந்து அவள் அவனிடம் உண்மையை சொல்ல!

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Super ma 

You cannot copy content