You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 25

Quote

25

விடிந்த சில நிமிடங்களிலேயே ஸ்ரீயின் உறக்கம் களைந்துவிட்டது. தன் கரங்களால் முகத்தைத் துடைத்துக் கொண்டபடி படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தவள் எதிரே நாற்காலியில் சாய்ந்தமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த வெங்கட்டைப் பார்த்தாள்.

உறக்கத்திலும் கூட ஒரு வித நிமிர்வான தோரணையில் இருந்தவனை அவளால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

இரவு நடந்தது எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வர, எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் தவறாத அவன் குணமும் அவனுடைய பொறுமையான பேச்சும் அவளை இப்போதும் ஆச்சரியப்படுத்தியது.

எப்படி அவனால் முடிகிறது? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்தப் பிரச்சனையில் அவன் வாழ்க்கைதான் பெரிதாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அவனுக்கும் தன்னுடைய திருமண வாழ்க்கைக் குறித்து நிறைய நிறைய ஆசைகளும் கனவுகளும் இருந்திருக்கும்தானே. ஆனால் அதையெல்லாம் தான் ஒரு நொடியில் சுக்குநூறாக்கிவிட்டோம்.

அப்படி இருந்தும் கூட அவன் தன்னிடம் கோபப்படவில்லை. குறைந்தப்பட்சம் ஏமாற்றத்தையோ அல்லது வருத்தத்தையோ கூட அவன் முகபாவத்தில் காட்டவில்லை என்பதை நினைக்கையில் அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் உறங்குவதை கண் கொட்டாமல் பார்த்திருந்தவள் சட்டென்று தலையை உலுக்கிக்கொண்டாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க சாரு நீ… மாயாவுக்கு மட்டும் தெரிஞ்சுதோ… கொன்னே போட்டுட்டுவா?” என்று உடனடியாகச் சுதாரித்துக் கொண்டவள் அவசரமாகப் படுக்கையிலிருந்து எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

அவள் முகம் கழுவி வெளியே வரும் போது வெங்கட்டும் எழுந்து விட்டிருந்தான்.

அவன் தன் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டிருக்க, “எழுந்துட்டீங்களா? சாரி…. சேர்லயே நீங்கத் தூங்கிட்டு இருந்தீங்க… கொஞ்ச நேரம் வேணா பெட்ல படுத்துக்கோங்களேன்” என்றவள் கூற,

“வேண்டாம் வேண்டாம்… நான் எழுந்துட்டேன்… இதுக்கப்புறம் எனக்கு தூக்கம் வராது” என்றவன் எழுந்து நின்று அவள் கண்களைப் பார்த்து,

“இப்போ ஓகேவா” என்று கேட்க அவளுக்குத் தடுமாற்றமாக இருந்தது. அவன் விழிகளை நேர்கொண்டு பார்க்கும் போது அவள் மனம் அனிச்சையாக அவனிடம் சரிவதை அவளால் தடுக்க முடியவில்லை.

அவன் கேள்விக்கு அவள் மௌனமாக தலையசைக்க அவன் மிதமாகப் புன்னகைத்துவிட்டு குளியலறைக்குச் செல்ல இருந்தவன்,“இஃப் யு டோன்ட் மைன்ட்… கொஞ்சம் டவல் மட்டும் கொடுக்க முடியுமா?” என்று கேட்க,

“இதோ” என்றவள் அவசரமாக தன் வாட்ரோபை திறந்து அவனுக்கு துண்டை எடுத்து தர அதனைப் பெற்று கொண்டவன், “தேங்க்ஸ்” என்று அதற்கும் பதிலாக ஒரு மெல்லிய இதழ் விரிப்பைத் தந்துவிட்டுச் செல்ல, அவள் உள்ளம் தவிப்புற்றது.

ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு அவள் மனதை வாட்டி வதைத்தது. தாறுமாறாகப் புரட்டிப் போட்டது.

“உஹும்… வெங்கட் கிட்ட பேசி முதல்ல இங்கிருந்து எப்படியாவது அனுப்பி வைச்சுடணும்” என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே வெங்கட் துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டே குளியலறைவிட்டு வெளியே வந்தான்.

அவனைப் பார்த்ததும் தன் தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டவள், “நீங்க டீ குடிப்பீங்களா இல்ல காபியா?” என்று கேட்கவும்,

“எல்லாமே குடிப்பேன்… பட் மார்னிங் மோஸ்டிலி கிரீன் டீதான்” என்றான்.

“க்ரீன்டீயே எடுத்துட்டு வர சொல்றேன்” என்று தன்னறையிலிருந்து இன்டர்காம் மூலம் சொல்ல,

“உனக்கு என்ன எடுத்துட்டு வரச் சொன்ன” என்று அவன் கேட்க,

“காபி” என்றாள்.

வேலையாள் எடுத்து வந்த கிரீன் டீயை அவனுக்குக் கொடுத்தவள் காபியை எடுத்துக் கொண்டு அவன் எதிரே அமர்ந்தாள். அவனிடம் பேச வேண்டுமென்ற தவிப்பு இருந்த போதும் பார்வை என்னவோ அவனைத் தவிர்த்து எல்லா பக்கமுமாக அலைபாய்ந்தது.

அவன் டீயைப் பருகிக் கொண்டே, “என்னவோ சொல்லணும்னு ட்ரை பண்ற போல” என்று கேட்க,

“ம்ம்ம்” என்றவள் தலையை அசைக்க,

“சொல்லு ஸ்ரீ” என்றான்.

“அது… நேத்தே உங்ககிட்ட சொல்லணும்னு” என்றவள் தயங்கித் தயங்கிப் பேச அவன் குறுக்கிடாமல் அமைதியாகப் பார்த்திருந்தான். 

“அது என்னன்னா… நம்ம கல்யாணம்” என்றவள் ஆரம்பித்து அப்படியே நிறுத்திவிட, “ம்ம்ம் சொல்லு… நம்ம கல்யாணம்” என்றவன் கேட்க,

“இல்ல… அது… நம்ம கல்யாணம் ஒரு மாதிரி குழப்பத்துல நடந்து முடிஞ்சுடுச்சு… நீங்களும் என்னை பத்தி முழுசா தெரியாம… ப்ச்… எல்லாமே அந்த மாயா பண்ண குழப்பம்தான்” என்றவள் ஒருவாறு தயக்கத்திலிருந்து விடுப்பட்டு,

“வேண்டாம் வெங்கட்… இவ்வளவு குழப்பத்துல ஆரம்பிச்ச இந்த ரிலேஷன்ஷிப்பே வேண்டாம்… அதுவும் இல்லாம நமக்குள்ள சரிப்பட்டு வராதுன்னுதான் தோனுது… நாம மேலும் இதை சிக்கலாக்காம நாம இங்கேயே இதை முடிச்சுக்கலாம்” என்று பேசி முடித்துவிட்டு அவனை நிமிர்ந்து பார்க்க, அவன் தன் தேநீரைப் பருகிக் கொண்டே அவளைக் கூர்மையாகப் பார்த்திருந்தான்.

அந்தப் பார்வையைத் தாங்க முடியாமல், “ஐம் சாரி வெங்கட்… நான் தேவையில்லாம உங்க வாழ்க்கையில வந்து இவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்திட்டேன்… எனக்கு உங்க நிலைமை புரியுது… பட் ப்ளீஸ் என் நிலைமையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க” என்று அவள் மன்றாடும் வகையில் சொல்லி முடித்தாள்.

அவனோ குடித்து முடித்த தேநீர் கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டு அவள் முகம் பார்த்தவன்,

“நான் உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?” என்றான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவும், “ரிஸப்ஷன்ல என் பக்கத்துல நின்னது நீதானே” என்று வினவ, அவள் கொஞ்சம் தயங்கிவிட்டு பின் ஆமென்று தலையசைத்தாள்.

“கல்யாணத்துல என் பக்கத்துல உட்கார்ந்து தாலிக் கட்டிக்கிட்டது நீதானே”

“அது… வெங்கட்” அவள் தடுமாற,

“நீதானே” என்றவன் அழுத்தமாகக் கேட்க, அவள் பெருமூச்செறிந்து ஆமென்று தலையசைத்தாள்.

“அப்போ நம்ம ரிலேஷன்ஷிப்ல எந்த மாற்றமும் இல்ல” என்று முடிவாகச் சொல்லிவிட்டு எழுந்து நின்றவன், “குழப்பம் இருந்தால்… பேசித் தெளிவுப்படுத்திக்கலாம்… முடிச்சுக்கணும்னு எல்லாம் அவசியமில்லை” என்று சொல்ல,

“வெங்கட் நான் என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க” என்று அவளும் எழுந்து நிற்க,

“நேத்து நீ சொன்னதை எல்லாம் நான் பொறுமையா கேட்டேன் இல்ல… உன்னை நான் புரிஞ்சுக்கிட்டேனில்ல… அதை போல என்னையும் நீ கொஞ்சம் புரிஞ்சிக்கோ” என்று நிறுத்தி அவள் முகம் பார்த்து,

“நீ என் மனைவியா  வரணும்கிறது எங்க அம்மாவோட டெஸிஷன்… அது மட்டும்தான் நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க காரணம்… இதற்கிடையில மாயா வந்து போனதெல்லாம் தெரிஞ்சோ தெரியாமலோ நடந்த குழப்பங்கள்… அதுக்கு நான் பொறுப்பாக முடியாது.

எங்க அம்மாவோட டெஸிஷன் தப்பாகாது… தப்பாயிடுச்சுன்னு யாரும் சொல்லவும் கூடாது” என்று தன் எண்ணத்தைத் தெளிவாகச் சொல்லி முடித்தவன் தன் கைப்பேசியை எடுத்து கொண்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.

ஸ்ரீ சிலையாக சமைந்துவிட்டாள்.

அவன் குரலிலிருந்து பொறுமையும் கனிவும் மாறி அப்படியொரு அதிகார தொனி வெளிப்பட்டது. அவன் மல்லியின் மகனாயிற்றே. அவரின் குணம் அவனுக்கு இல்லாமலா இருக்கும்.

மல்லியிடம் இருக்கும் அதே பிடிவாதமும் உறுதியும் அவனிடமும் தென்பட்டதில் இப்போது அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

‘என்னை இப்படியொரு சிக்கலில் மாட்டிவிட்டுட்டு எங்கடி போன நீ?’ ஸ்ரீ தலையைப் பிடித்துக் கொண்டு புலம்பிக் கொண்டிருந்த சமயத்தில் வெங்கட் திலகாவைத் தேடிச் சென்றிருந்தான்.

அவரிடம் தனியாகப் பேச வேண்டுமென்று அவன் அழைக்க அவருக்கு உள்ளுர பதட்டம் கூடியது. மகள் என்ன செய்து வைத்தாளோ? இவன் என்ன சொல்ல போகிறானோ? என்ற கவலையுடன் அவனைத் தன்னறைக்கு அழைத்து வந்தவர்,

“சொல்லு வெங்கட்… என்ன விஷயம்?” என்று எதுவும் தெரியாதது போலவே கேட்டார். தாமாகவே ஸ்ரீயைப் பற்றி எதுவும் உளறிவிட கூடாது என்றவர் எண்ணியிருக்க அவரை ஆழமாகப் பார்த்தவன்,

“எனக்கு ஸ்ரீயோட மெடிக்கல் ரிபோர்ட்ஸ் வேணும் அத்தை” என்று நேரடியாக அவன் விஷயத்திற்கு வர திலகாவின் முகம் வெளிறிவிட்டது.

“என்ன மெடிக்கல் ரிப்போர்ட்… அவளுக்கு ஒன்னும் இல்லையே… நீங்க என்ன கேட்குறீங்கன்னு புரியல… அப்படி எந்த ரிப்போர்ட்டும் இல்ல” என்றவர் பல மாதிரியாகச் சொல்லி சமாளிக்க,

“இப்ப நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க… ஸ்ரீ என்னோட வொய்ஃப்… அவளை நான் எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டேன்… நான் ஜஸ்ட் அவ ரிபோர்ட்ஸ் பார்க்கணும்னுதான் கேட்குறேன்” என்றவன் தெளிவாக விளக்கியபோதும் அவர் பயம் விலகவில்லை.

“இல்ல வெங்கட்… நீ என்ன ரிப்போர்ட் கேட்கிறேன்னு புரியல” என்றவர் மீண்டும் சொல்ல,

“ஸ்ரீ சைக்காட்ரிக் ட்ரீட்மெண்ட்ல இருந்தது எனக்கு எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே தெரியும்…  கல்யாணத்துல என் கூடவே இருந்தானே… என் ஃப்ரெண்ட் ஹமீத்… அவன் பெங்களூர்லதான் வேலைப் பார்க்கிறான்” என்றவன் அந்த மருத்துவமனை பெயரும் சொல்லிவிட அவர் அதிர்ந்து நின்றுவிட்டார்.

“நீங்க ஷாக்குகிற அளவுக்கு எல்லாம் எதுவும் இல்ல அத்தை… இன்னைக்கு சைக்காட்டிரிக் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிறது… கவுன்சிலிங் போறது எல்லாம் ரொம்ப சாதாரணமான விஷயம்… உடம்புக்கு நோய் வந்து போற மாதிரிதான் மனசுக்கும்… அதெல்லாம் தப்பும் இல்ல… அந்த விஷயத்தை என்கிட்ட நீங்க மறைச்சத்து அவ்வளவு பெரிய குத்தமும் இல்ல” என்று சகஜமாகப் பேசி அவர் பயத்தைப் போக்க, அவர் கண்கள் கலங்கி நின்றார்.

அவன் கேட்ட ரிப்போர்ட்டை எடுத்து அவன் கையில் தந்தவர், “மல்லிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிய வேண்டாம்” என்று தயக்கத்துடன் சொல்ல புரிதலாகத் தலையசைத்தவன்,

கண்களில் நீர் வழிய அவர் நின்றிருந்ததைப் பார்த்து அவர் கரத்தைப் பற்றி, “ஸ்ரீ என்னோட வொய்ஃப் அவளைப் பத்தி உங்களுக்கு எந்த பயமும் கவலையும் வேண்டாம்” என்று நம்பிக்கைக் கொடுக்க, அவர் நெகிழ்ந்து போனார். 

அத்தனை வருடங்கள் மகளைப் பற்றியிருந்த அவரின் கவலையும் பயமும் ஒரே நொடியில் காணாமல் போயிருந்தது.

ஆனால் மல்லியின் வீட்டில் புதிதாக ஒரு பிரச்சனை முளைத்திருந்தது.

இரவு பார்த்த அந்த உருவத்தை மல்லி தன் பிரமை என்று எண்ணி சமாதனடைந்திருந்த நிலையில் காலை விடிந்தும் விடியாமலும் டைகர் இறந்தச் செய்திக் கேட்டு மொத்தமாக நிலைகுலைந்து போய்விட்டார்.

டைகருடன் நடைப்பயிற்சிக்கு செல்லும் நந்தாதான் முதலில் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டுச் சொன்னது.

அந்தச் செய்தியைக் கேட்டதிலிருந்து அவர் நடுநடுங்கிப் போய் அமர்ந்திருந்தார்.

இப்படியெல்லாம் அவர் வாழ்நாளில் எப்போதுமே பயந்ததும் கிடையாது. அவர் கண்கள் முன்னே அந்த சிவந்த விழிகளின் வஞ்சப் பார்வை வந்து நின்றது.

உடனடியாக தன் அலைபேசியை எடுத்து தணிகாச்சலத்திற்கு அழைத்தார்.

அவரோ அழைப்பை ஏற்றதும் வழக்கமான வகையில் நல விசாரிப்புகள் செய்ய மல்லி அதற்கெல்லாம் பதில் சொல்லும் மனநிலையில் இல்லை.

“சார்… உண்மையைச் சொல்லுங்க… அந்த ஆள் உயிரோட இருக்கானா செத்துட்டானா?” என்று நேரடியாகக் கேட்க,

“இப்போ எதுக்கு அதெல்லாம்… நான்தான் உங்களை அப்பவே அதெல்லாம் மறந்துட சொன்னேன் இல்ல” என்றவர் சாதாரணமாகச் சொல்ல,

“நான் கேட்ட கேள்விக்கு முதல் பதில் சொல்லுங்க… அவன் உயிரோட இருக்கானா செத்துட்டானா?” என்று மீண்டும் அதே கேள்வியைக் கேட்க அவர் சில நிமிட மௌனத்திற்குப் பின்,

“அவன் அப்பவே செத்துட்டான் மேடம்” என்றார்.

நழுவிவிட இருந்த தன் செல்பேசியை அவர் அழுத்திப் பற்றிக் கொள்ள,

“உங்களுக்கு இதுல எந்தப் பிரச்சனையும் வராது… நீங்க பயப்படவே தேவை இல்ல… அவன் ஒரு கொலைகாரன்… ஜெயில இருந்து தப்பிச்சு வந்த கைதி” என்றவர் சமாதானத்திற்காகப் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் மல்லிக்கு கிணற்றுக்குள்ளிருந்து கேட்பது போல கேட்டது.

மல்லி பதில் எதுவும் பேசவில்லை. அப்படியே தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.  

ஏதோ பெரிதாக நடக்க போகிறது என்று அவர் உள்ளுணர்வு அச்சுறுத்தியது.

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Super ma 

You cannot copy content