You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 27

Quote

27

ஸ்ரீயும் மாயாவும் வேறு வேறு அல்ல. ஸ்ரீ தன்னுடன் மாயா இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறாள். சில நேரங்களில் மாயாவாகவே தன்னை கற்பனை செய்து கொள்கிறாள். ஆனால் மாயாவின் வரையும் திறன்… அவளது கையெழுத்து… இதெல்லாம் கூடவா?

ஒரு வேளை ஸ்ரீக்கும் வரையும் திறன் இருக்கலாம். மாயாவின் கையெழுத்தைப் பழகியிருக்கலாம். இவ்வாறாக வெங்கட் நிறைய யோசித்தான். குழம்பினான். எந்தவொரு முடிவுக்கும் வர முடியாமல் திணறினான்.

இந்தக் குழப்பத்தில் அவன் மல்லியைக் கொஞ்சம் மறந்துவிட்டான். வந்ததும் பேச வேண்டுமென்றுதான் நினைத்தான். டைகரின் இறப்பு… அங்கே கிடைத்த வாழ்த்தட்டை என்று அவன் சிந்தனை அப்படியே திசைமாறிவிட்டது.

ஆனால் மல்லிக்கு இதெல்லாம் தெரியாதே. மகன் தன்னிடம் பேசவில்லை என்று உள்ளுர குமைந்து கொண்டிருந்தார்.

‘இரண்டு நாளில எப்படியெல்லாம் மாறிப் போயிட்டான்… இல்ல மாத்திட்டா… எங்கே போய்ட்டு வந்தாலும் நேரா அம்மான்னு என்னைத்தான் தேடி வருவேன்… ஆனா இன்னைக்கு…

ஒரு வேளை அவன்கிட்டயும் தனிக்குடித்தனம் பத்திப் பேசி இருப்பாளோ? வந்ததும் குடும்பத்தைப் பிரிக்கிற இவ எல்லாம் என்ன மாதிரி பொண்ணு’

மல்லிக்கு ஒரு பக்கம் ஸ்ரீயின் மீது எரிச்சல் என்றால் மகன் மீது அளவில்லா கோபம். அவனாக வந்து பேசுவான் என்று காத்திருந்து காத்திருந்து அவருக்கு ஏமாற்றமே மிச்சமானது.

வீம்பாக அறைக்குள் அடைந்து கிடந்தவர் மெல்ல வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அவன் இல்லை.

முகப்பறையில் ஸ்ரீ மட்டும் இருந்தாள். குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தாள்.

டைகரைக் காணோம் என்று அழுது கொண்டிருந்த அமிர்தாவைக் கூட ஸ்ரீ சரி செய்துவிட்டாள். அமிர்தா, சவீ, நகுல், சகா எல்லோரும் அவளுடன் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்க, அவருக்குக் கடுப்பாக இருந்தது. எல்லோரையும் வசியம் செய்து விடுகிறாள். திமிர் பிடித்தவள் என்று எண்ணியவர் சுற்றும் முற்றும் மகனைத் தேடினார்.

வெங்கட் அவர் பார்வைக்குத் தென்படவில்லை. அவன் அறையில் இருக்கலாம்.

‘உஹும்… நானா எதுக்குப் போய் பேசணும்… அவனா வரட்டும்’ என்று எண்ணிக் கொண்டு மீண்டும் தன்னறைக்குள் சென்று படுத்துக் கொண்டார்.

சமையலறையில் இருந்தபடியே அர்ச்சனாவும் லலிதாவும் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

“எம்எல் உர்ர்ர்ர்னு போறாங்க… காலையில இருந்து சிரிச்ச முகமாதானே இருந்தாங்க” என்று லல்லி அர்ச்சுவிடம் ரகசியமாக கிசுகிசுக்க,

“வெங்கட் மாமா எங்கேன்னு பார்த்துட்டுப் போறாங்க… அவர் வந்ததுல இருந்து எம்எல் கிட்ட பேசல இல்ல” என்றாள் அர்ச்சனா.

“ஓ அப்படி போகுதா கதை…

ஒரு வேளை அவ வெங்கட் மாமாவைப் பிரிச்சுக் கூட்டிட்டுப் போயிடுவாளோ?”

“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல… வெங்கட் மாமா நிச்சயம் அவங்க அம்மாவை விட்டுப் போக மாட்டாரு” உறுதியாகச் சொன்னாள் அர்ச்சனா. ஆனால் மல்லியின் மனதில் அந்த உறுதி இல்லை. அதிகப்படியான பாசத்தில் சில நேரங்களில் மூளை மழுங்கிவிடுகிறது.

விரைவில் தன் மகன் தன்னை விட்டுப் பிரிந்து போய்விடுவானோ என்ற பயம் அவரை ஆட்டி வைத்தது. அவருக்கு வீட்டிலிருக்கவே பிடிக்கவில்லை. அங்கே இருந்தால் ஏதோ விபரீதமாகப் பேசிவிடுவோமா? அல்லது கோபமாக நடந்து கொண்டு விடுவோமோ? என்று பயமாக இருந்தது.

“நான் சித்ரா வீட்டுக்குப் போயிட்டு வரேன்… அவளைப் போய் பார்த்து பூஜைக்கு வரச் சொல்லிட்டு வரேன்” என்றவர் கணவனிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப எத்தனிக்க,

“அதுக்கென்ன அவசரம்… இன்னைக்குதான் மருமக முதல் முதலா வீட்டுக்கு வந்திருக்கா” என்று நந்தா சொல்ல,

“இருக்கட்டுமே… நான் என் தங்கச்சியைப் பார்த்துச் சொல்லிட்டு உடனே வந்துட போறேன்” என்றார். மல்லிக்கு அங்கே இன்னும் சில நிமிடங்கள் நின்றால் கூட அழுதுவிடுவோம் போலிருந்தது. ரொம்பவும் சிரமப்பட்டு தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்.

“ஃபோன்ல சொல்லிக்கலாம் இல்ல… இதுக்கு நீ மாங்குமாங்குன்னு நேர்ல போகணுமா?” என்று நந்தா அவரைப் போகவிடாமல் நிறுத்த,

“என் தங்கச்சி வீட்டுக்குப் போக கூட எனக்கு உரிமை இல்லயா… நான் போகக் கூடாதா?” என்று மல்லி எகிற ஆரம்பித்துவிட, அதற்கு மேல் பேசினால் வம்பு என்று,

“நான் ஒன்னும் சொல்லல… நீ போயிட்டுவாம்மா” என்று அனுப்பி வைத்துவிட்டார்.

அதேசமயத்தில் வெங்கட் தன் அறையிலிருந்தபடி நண்பன் ஹமீதிற்கு அழைத்துப் பேசிக்கொண்டிருந்தான்.

“நான் உங்க சீஃப் டாக்டர்கிட்ட பேச முடியுமா ஹமீத்?”

“டாக்டர் ரெட்டிகிட்டயா?”

“ம்ம்ம்”

“என்ன விஷயமா?”

“சில டவுட்ஸ் கேட்கணும்”

“உன் வொய்ஃப் விஷயமாவா… நான் அப்பவே சொன்னேன் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு… நீ கேட்டியா?” என்று அவன் பாட்டுக்கு ஆரம்பித்துவிட,

“நிறுத்து ஹமீத்… என் வொய்ஃப்க்கு எந்தப் பிரச்சனையும் இல்லை… நான் அவர்கிட்ட ஃபோன்ல பேசணும்… சில விஷயங்கள் கேட்கணும்… முடியுமா முடியாதா?” என்று வினவ அவன் சில நிமிடங்கள் யோசித்துவிட்டு,

“ஹாஸ்பிட்டலதான் இருக்கேன்… அவர் ஃபீரியானதும் கேட்டுட்டுச் சொல்றேன்” என்றான்.

“சரி ஓகே” என்றவன் இணைப்பைத் துண்டித்தான். அதன் பின் அவன் தன் கையிலிருந்த வாழ்த்தட்டையை உற்றுப் பார்த்தான்.

இப்போதைக்கு அதனை ஸ்ரீயிடம் காண்பிக்க வேண்டாமென்று தன் அலமாரிக்குள் சொருகிவிட்டுக் கீழே வந்தவன் முகப்பறையில் ஸ்ரீ குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

அந்தக் காட்சியைக் கண்ட மாத்திரத்தில்அவன் முகத்தில் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. என்னவோ அன்று அவன் கண்களுக்கு அவள் ரொம்பவும் அழகாகத் தெரிவது போல புத்தம் புது பொலிவுடன் இருந்தாள். அவள் பேசுவது சிரிப்பது சரியும் கூந்தலைச் சரி செய்வது என்று எல்லாமே அழகாக இருந்தது.

அந்தக் கருநீலநிற சரிகைப் புடவை அவளது சந்தனம் குழைத்தார் போன்ற தேகத்திற்குத் தனியொரு மினுமினுப்பைத் தந்திருந்ததோ?

அவன் கண்களை அவள் மீதிருந்து அவனால் அகற்றிக்கொள்ளவே முடியவில்லை. 

அப்போது நந்தா அவன் தோளைத் தொட சிரமப்பட்டு தன் பார்வையை அவளிடமிருந்து திருப்பிக் கொண்டான்.

“என்னடா திடீர்னு காணாம போயிட்ட” என்று நந்தா கேட்க,

“மாடிலதான் இருந்தேன்… ஃப்ரெண்டோட பேசிட்டு இருந்தேன்பா” என்றான்.

“ஓ…” என்றவர் தன் பார்வையை ஸ்ரீயின் புறம் திருப்பி, “ஸ்ரீலக்ஷ்மி ரொம்ப நல்லப் பொண்ணா தெரியுறா… அமிர்தாவைக் கூட சமாதானப்படுத்திட்டானா பாரேன்… நான்தான் அவங்க வீட்டுல இருக்கிறவங்ளைப் பத்தி எல்லாம் யோசிச்சு உன்னைக் குழப்பிட்டேன்… உங்க அம்மாவோட செலக்ஷன் எப்பவுமே கரெக்டாதான் இருக்கும்” என்று அவளைப் பாராட்ட, வெங்கட் புன்னகையுடன் ஆமோதித்தான்.

ஆனால் மனதினோரத்தில் ஸ்ரீயின் நடவடிக்கைகளை எண்ணிக் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. அவள் இந்த மாயா கதையைச் சொல்லி எதையாவது சொதப்பி விடுவாளோ என்று.

அவரிடம் பேசிக் கொண்டிருந்தவனுக்குச் சட்டென்று அம்மாவின் நினைப்பு வர, “சரிப்பா… நான் வந்ததுல இருந்து அம்மாகிட்ட பேசவே இல்ல… நான் போய் பேசிட்டு வரேன்” என்று அவர் அறைக்குள் செல்ல,

“உங்க அம்மா எங்க ரூம்ல இருக்கா… அவ தங்கச்சி வீட்டுக்குப் போயிருக்கா… நாளைக்கு வீட்டுல ஒரு ஹோமம் மாதிரி வைக்கலாம்னு… அதுக்காக அவங்களை வரச் சொல்ல” என்றார்.

“ஓ அப்படியா?” என்றவன் யோசனையாகப் பார்க்க,

“ஏன் வெங்கட்… ஸ்ரீயைக் கூட்டிக்கிட்டு வெளியே எங்கேயாவது போயிட்டு வாயேன்” என்றார் நந்தா.

தன் எண்ணத்தை அவர் படித்து விட்டாரோ என்று தயக்கத்துடன் அவன் தந்தையைப் பார்க்க, “கூட்டிட்டுப் போயிட்டு வா… உங்க அம்மா வந்ததும் நான் சொல்லிக்கிறேன்” என்றான்.

சரியென்பது போல் தலையசைத்தவனுக்கு என்னவோ அவளுடன் தனியாக நேரம் செலவழிக்க வேண்டுமென்று தோன்றியது.

“பசங்களுக்குத் தெரியாம கூட்டிட்டுப் போடா… அப்புறம் கூட வரேன்னு நாலும் அடம் பிடிக்கும்… அப்புறம் உன் பாடு… அவங்க பாடு” என்று விட்டுச் செல்ல, வெங்கட் ஸ்ரீயைத் தனியாக அறைக்கு அழைத்து,

“எங்கேயாச்சும் வெளியே போயிட்டு வரலாமா ஸ்ரீ” என்பது போல கேட்க,

“நான் எங்கேயும் வரல… நீங்கப் போங்க” என்று அவள் பட்டேன்று மறுத்துவிட்டாள்.

“நான் மட்டும் தனியாவா?” என்று அவளை ஏறஇறங்க முறைப்பாகப் பார்க்க,

“எனக்கு எங்கேயும் வர மூட் இல்ல” என்றவள் அறையை விட்டுச் செல்ல பார்க்க,

“ஏன்?” என்றவன் கதவை அடைத்துக் கொண்டு முன்னே நின்றான்.

“ஏன்னு கேட்டா… அதான் சொன்னனே எனக்கு வெளியே வர மூட் இல்லனு… வழியை விடுங்க”

“ஏன்னு கேட்டது நீ என் கூட வெளியே வரமாட்டேன்னு சொன்னதுக்கு இல்ல… ஏன் என்னை விட்டு விலகிப் போறங்குறதை பத்தி… என்கிட்ட என்ன பிரச்சனை… என்னை உனக்கு பிடிக்கலயா?” என்றவன் நேரடியாகக் கேட்ட கேள்வியில் அவள் தடுமாறினாள்.

“பேசு ஸ்ரீ” அவளால் பதில் பேசவே முடியவில்லை. அவன் முகத்திற்கு நேராகப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிடதான் நினைக்கிறாள். ஆனால் அது அவளால் முடியவில்லை.

அவள் மௌனமாக தலையைக் குனிந்து கொண்டிருக்கும் விதத்திலேயே அவள் மனம் புரிந்துவிட்டது அவனுக்கு. எப்போது அவன் நெருங்கி வந்தான். எப்போது அவளை அணைத்துக் கொண்டான் என்று அவளுக்குத் தெரியவில்லை.

“வெங்கட் விடுங்க” என்றவள் தவிப்புற்று அவனை விலக்கித் தள்ள முயன்றதில் அவன் கைகள் இன்னும் இறுக்கமாக அவள் இடையை வளைத்துப் பிடித்துக் கொண்டன.

“இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க ஸ்ரீ… ஐம் நாட் ஏபிள் டூ கண்ட்ரோல் மை செல்ஃப்… இப்படியெல்லாம் நான் எந்தப் பொண்ணுகிட்டயும் ஃபீல் பண்ணதே இல்ல” என்றவன் தாபத்துடன் பார்த்த பார்வையில் அவள் தேகம் சிலிர்க்க, நினைப்பு முழுக்க அவன் மட்டுமே இருந்தான். மற்றதெல்லாம் அவளுக்கு மறந்துவிட்டது.

அவள் முகம் முழுக்க மென்மையாக தம் இதழ்களைப் பதிக்க அவளுக்கு மறுக்கவே தோன்றவில்லை. மெல்ல அவள் இதழ்களில் அவன் முத்தமிடவும் அவள் இமைகளை மூடி அந்த முத்தத்தில் அவள் லயித்திருந்தாள்.

“உனக்கு என்னைப் பிடிக்கும் ஸ்ரீ” என்று வெங்கட் அவள் காது மடலில் உரசியபடி சொல்ல, இப்போதும் அவளிடம் பதிலும் இல்லை. மறுப்பும் இல்லை. மௌனம் மட்டுமே. அதேநேரம் அவளின் உணர்வுகளை அவனிடமிருந்து அவளால் மறைக்க முடியவில்லை

“சரி… வெளியே போயிட்டு வரலாமா?” என்றவன் மீண்டும் கேட்க, அவளிடம் இதழ் பிரியாமல் ஒரு மெல்லிய புன்னகை. 

இருவரும் அதன் பின் கோவில் கடற்கரை என்று சந்தோஷமாக வெளியே சுற்றினர்.

இருப்பினும் மாயாவின் நினைப்பு அவளின் மனதினோரத்தில் அரித்துக் கொண்டிருந்தது. இதெல்லாம் சரியில்லை என்ற ஒரு தவிப்பு உள்ளுர இருந்தது. எனினும் வெங்கட்டின் நெருக்கம் அவளைப் பெரிதாக யோசிக்கவிடவில்லை. அவன் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடப்பது ஒரு புதுவித உணர்வைக் கொடுத்தது அவளுக்கு.

அந்தத் தருணத்தை அவள் ரசித்தாள். வாழ்ந்தாள். வேறு எது பற்றியும் அவள் பொருட்படுத்தவில்லை. இறுதியாக இருவரும் ஒரு உணவகத்திற்கு வந்திருந்தனர்.

“என்ன சாப்பிடுற ஸ்ரீ?”

“ஏதாச்சும்”

“ம்ச் உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு”

அவள் அவனிடம் தனக்குப் பிடித்த உணவு வகைகளைச் சொல்ல, அதனையே இருவருக்குமாக ஆர்டர் செய்து பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர். 

“ஏன் ஸ்ரீ… உனக்கு ஐஸ் க்ரீம் ரொம்ப பிடிக்கும் இல்ல… ஆர்டர் பண்ணவா?”

“யார் சொன்னா எனக்கு ஐஸ் க்ரீம் பிடிக்கும்னு… நான் ஐஸ்க்ரீம் சாப்பிடவே மாட்டேன்”

“சும்மா சொல்லாதே… நான் ஐஸ் க்ரீம் ஆர்டர் பண்றேன்… நீதான் எல்லா ஃப்ளேவரும் சாப்பிடுவ இல்ல” என்றவன் சொல்லிவிட்டு சிப்பந்தியை அழைத்து ஐஸ்க்ரீம் எடுத்து வரச் சொல்ல,

“எனக்கு சத்தியமா பிடிக்காது… நான் சாப்பிட மாட்டேன்… நீங்க வேணா சாப்பிடுங்க” என்றாள்.

“பிடிக்காதா… சீரியஸாவா சொல்ற”

“ஐயோ! எனக்கு சுத்தமா பிடிக்காது… அந்த மாயாதான் சரியான ஐஸ்க்ரீம் பைத்தியம்… ஆத்மாவான பிறகு கூட ஐஸ்க்ரீம் சாப்பிட முடியலன்னு சொல்லி ஃபீல் பண்ண ஒரே பேய் அவளாதான் இருப்பா” என்றவள் இயல்பாகச் சொல்லி சிரிக்க, அவன் திகைக்கலானான். அதன் பின் உணவகத்திலிருந்து புறப்பட்டு வீடு வந்து சேரும் வரை அவன் மூளை ஸ்ரீயின் நடவடிக்கைகள் மற்றும் அவள் மாயாவைப் பற்றிச் சொன்ன விஷயங்களையும் மனதிற்குள் ஒத்துப் பார்த்து கொண்டே வந்தன.

எந்தவித தெளிவான முடிவுக்கும் அவனால் வர முடியவில்லை. அப்போதுதான் அவன் நண்பன் ஹமீதிடமிருந்து குறுந்தகவல் வந்தது.

மனநல மருத்துவர் மோகன் ரெட்டி அவனிடம் பேச சம்மதம் சொன்னதாகவும் அவர் தன் கைப்பேசி எண்ணிற்கு அவனை அழைக்க சொல்லி இருப்பதாகவும் வந்த தகவலில் அவரின் அலைபேசி எண்ணும் இருந்தது. 

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Super ma 

You cannot copy content