You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 28

Quote

28

வீட்டை அடைந்ததும் ஸ்ரீயை உள்ளே போகச் சொல்லிவிட்டு வெங்கட் தோட்டத்தின் பக்கம் வந்தான். அங்கே யாரும் இல்லையென்பதை உறுதி செய்து கொண்ட பின் மனநல மருத்துவர் ரெட்டியின் கைப்பேசிக்கு அழைத்தான்.

அவர் தொடர்பில் வந்ததும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன், “நான் ஸ்ரீ லக்ஷ்மியோட ஹஸ்பென்ட்” என்பதையும் சொல்ல,

“சொல்லுங்க வெங்கடேஷ்… உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும்?” என்று கேட்டார் அவர்.

“இல்ல… நான் அவளோட ரிப்போர்ட்ஸ் படிச்சேன்… என்னால ஒரு முடிவுக்கு வர முடியல… அதுவுமில்லாம எங்க கல்யாணத்துக்கு முன்னாடி சில சம்பவங்கள் நடந்தது… அதுக்கு அவ கொடுத்த விளக்கமெல்லாம் என்னால ஏத்துக்கவே முடியல டாக்டர்… தலை சுத்துது… அவளுக்கு என்ன மாதிரி பிரச்சனைன்னு என்னால ஒரு தீர்மானத்துக்கு வர முடியல”

“அவங்க என்ன சொன்னாங்கன்னு எல்லாத்தையும் கொஞ்சம் விவரமா சொல்லுங்க” என்றவர் கேட்க அவன் ஸ்ரீ சொன்ன கதையில் தொடங்கி மாயா பற்றிச் சொன்னது வரை அனைத்தையும் சொல்லிவிட்டான்.

சில நொடிகள் மௌனமாக இருந்தவர், “ட்ரீட்மென்ட் டைம்ல ஸ்ரீலக்ஷ்மி என்கிட்ட மாயா பத்தியும் ஆத்மாக்களைப் பத்தியும் நிறைய பேசியிருக்காங்க… நிறைவேறாத ஆசைகள் இருக்கவங்க… திடீர்னு எதிர்பாராத கோரமான விபத்துல இறந்து போறவங்க எல்லாம் ஆத்மாவா சுத்திட்டு இருப்பாங்களாம்.

அதேபோல வாழ்க்கையில துரோகத்தாலயும் ஏமாற்றத்துலயும் இறந்து போறவங்க தீய ஆத்மாக்களா மாறி பழி வாங்குவாங்கன்னு எல்லாம் சொன்னாங்க”

“அதெல்லாம்  உண்மைன்னு நினைக்கிறீங்களா டாக்டர்”

“எனக்கு ஸ்ரீலக்ஷ்மி சொன்னதெல்லாம் முட்டாள்தனமாதான் தெரிஞ்சுது… ஆனா நடந்த சில இன்சிடென்ட்ஸ் எனக்கு அவங்க சொல்றது உண்மையாகவும் இருக்கலாம்னு தோன வைச்சுது”

“அப்படி என்ன இன்சிடென்ட்”

“என்னோட ஒரு கிளைன்ட்… அவர் மனைவி வேறொருத்தனோட ஓடிப் போனதால ரொம்ப ஸ்ட்ரெஸாகி மனசளவில பாதிக்கப்பட்டு என்கிட்ட ட்ரீட்மெண்டுக்கு வந்திட்டு இருந்தாரு.

அந்த டைம்ல ஸ்ரீலக்ஷ்மியும் என்கிட்ட ட்ரீட்மெண்ட் வந்திட்டு இருந்தாங்க… அவங்கதான் என்கிட்ட சொன்னாங்க… அவர் மனைவி ஓடிப் போகல… அவர்தான் அவர் மனைவியைக் கொன்னுட்டாரு.

கொன்னுட்டு உங்ககிட்ட நடிக்கிறாருன்னு… உனக்கு எப்படி தெரியும்னு கேட்டேன்… அவர் மனைவியோட ஆத்மா சொன்னதா சொன்னாங்க… நான் ஷாக்காகிட்டேன்” என்றவர் சொல்லி நிறுத்த,

“நீங்க ஸ்ரீ சொன்னதை நம்புனீங்களா?” என்று கேட்டான்.

“சாதாரணமா சொல்லி இருந்தா நம்பி இருக்க மாட்டேன்… ஆனா ஆதாரத்தோட சொன்ன போது நம்பாம இருக்க முடியல” என்றார்.

“ஆதாரமா? அப்படி என்ன ஆதாரம்”

“அவன் மனைவியோட உடம்பு புதைச்ச இடத்தைக் காண்பிச்சாங்க… அவங்க சொன்ன இடத்துல தோண்டினபோது அந்தப் பொண்ணோட உடம்பு கிடைச்சுது… அப்புறம் அவனை போலிஸ் மிரட்டிக் கேட்ட பிறகு அவனே உண்மையை ஒத்துக்கிட்டான்…ஆனா ரொம்ப புத்திசாலித்தனமா நடிச்சு எல்லாரையும் ஏமாத்தி இருக்கான்… நான் உட்பட.

கல்ப்ரிட்… ஒரு வேளை ஸ்ரீ இல்லன்னா அவன் மனைவியைக் கொன்ன விஷயம் யாருக்குமே தெரிஞ்சிருக்காது… அந்தளவு தத்ரூபமான நடிப்பு” என்றவர் முடிக்கும் போதே வெங்கட் அதிர்ச்சியானான்.

அவனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

“ஸ்ரீலக்ஷ்மி சொன்னதெல்லாம் உண்மையாக இருக்கவும் வாய்ப்பு இருக்கு… நீங்க உங்க மனைவி சொல்ற பாயின்ட் ஆஃப் வியுல இருந்தும் யோசிச்சு பார்த்து முடிவு பண்ணுங்க” என்றவர் சொல்லி அவனை இன்னும் குழப்பிவிட்டார்.

“அப்போ ஆத்மான்னு ஒன்னு இருக்குன்னு சொல்றீங்களா?”

“அன்னைக்கு நடந்த விஷயத்தை எல்லாம் பார்த்த போது ஸ்ரீ சொல்ற மாதிரி இருக்கலாமோன்னு தோனுச்சு”

வெங்கட்டிற்குத் தலைச் சுற்றியது. எந்தத் தீர்மானத்திற்கும் அவனால் வர முடியவில்லை. மருத்துவர் சொன்ன கதையை வைத்து மட்டும் ஆத்மா என்பது உண்மையாக இருக்கும் என்றவன் நம்ப தயாராக இல்லை.

தோட்டத்தில் கல்மேடையில் அமைதியாக அவன் யோசித்துக் கொண்டிருக்கும்போது வீட்டிலிருந்த அவன் அம்மாவின் குரல் சற்றே கோபமான தொனியில் ஒலிப்பது கேட்டது.

அவன் என்னவென்று வந்து பார்ப்பதற்குள் அங்கே ஒரு கலவரமே நிகழ்ந்து முடிந்துவிட்டது.

“யாரைக் கேட்டு நீங்க ரெண்டு பேரும் வெளியே போனீங்க… என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போவோம்னு தோனல இல்ல?” என்று ஸ்ரீ உள்ளே வந்ததுமே மல்லி சரமாரியாக அவளைத் திட்ட தொடங்கிவிட்டார்.

“இப்ப எதுக்கு கத்தற நீ… நான்தான் அவங்களைப் போகச் சொல்லி அனுப்பி வைச்சேன்” என்று நந்தா இடையில் வர,

“நீங்க சொன்னா… அவங்க போயிடுவாங்களா… எனக்கு அவ்வளவுதான் இந்த வீட்டுல மரியாதையா?” என்று மல்லி கடுப்பில் பேச நந்தா எரிச்சலுடன்,

“ஏன் இப்படி சீரியல் மாமியார் மாதிரி சீன் க்ரியேட் பண்ணிட்டு இருக்க மல்லி… புதுசா கல்யாணம் பண்ணவங்க வெளியே போயிட்டு வர்றது எல்லாம் ரொம்ப சகஜமான விஷயம்… ஏன்? நாம போனது இல்லயா… இதெல்லாம் போய் பெரிய விஷயம்னு அந்தப் பொண்ணை நிற்க வைச்சு கேள்வி கேட்டுட்டு இருக்க” என்று சொல்ல,

“உங்களுக்கு எதுதான் பெரிய விஷயம்… உங்களுக்கு எதுவுமே பெரிய விஷயம் இல்ல” என்று கணவனை முறைத்தவர் ஸ்ரீயின் புறம் திரும்பி,

“அப்படியே பேசவே தெரியாத மாதிரி நிற்குறா… எல்லாம் நடிப்பு… இந்த நடிப்பைப் பார்த்துதான் நான் ஏமாந்துட்டேன்” என்றார்.

“என்ன ஏமாந்துட்ட… எனக்கு ஒன்னும் புரியல?” என்று நந்தா வினவ, “நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருங்க… இன்னைக்கே இதை பேசி முடிச்சுட்டா நல்லது” என்றார்.

‘என்ன பேசி முடிக்கப் போறா’ என்று நந்தா குழம்பி நிற்க மல்லி ஸ்ரீயிடம்,

“அன்னைக்கு என்கிட்ட அவ்வளவு பேச்சு பேசுன… இன்னைக்கு அப்படியே ஊமைக்கொட்டான் மாதிரி நிற்குற… ஆமா வெங்கட் எங்கடி?” என்று கேட்க தன்னோடுதானே வந்தான், எங்கே போனான் என்றவள் திரும்பி பார்த்தாள். அவன் வரும் அறிகுறியே இல்லை.

 “இரண்டு பேரும் ஒன்னாதானே போனீங்க” என்று கேட்க அதற்கு அவள் ஆமோதிப்பாகத் தலையை மட்டும் அசைத்தாள்.

நந்தா மனைவியிடம் ஏதேதோ சமாதானங்கள் கூறி அமைதிப்படுத்த முயன்றார்.

“உங்களுக்கு அவளைப் பத்தி தெரியாதுங்க… நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க… வந்த அன்னைக்கு என்கிட்ட எவ்வளவு திமிரா பேசுனா தெரியுமா?” என்று மல்லி கொதிக்க,

“அப்படி என்ன பேசுனா?” என்று கேட்டார் நந்தா.

“அவளையே கேளுங்க… என்ன பேசுனான்னு”

“ஏன் நீ சொல்ல மாட்டியா?” என்றவர் மல்லியை முறைக்கவும் நந்தாவிடம் அவர் ஸ்ரீ அன்று பேசியதைத் தெரிவிக்க, அவரால் நம்பவே முடியவில்லை.

இன்னொரு புறம் லல்லியும் அர்ச்சனாவும் நடப்பதை எல்லாம் ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“எம்எல் கோபத்தைப் பார்த்தா இவளை இன்னைக்கே வீட்டை விட்டுத் துரத்திடுவாங்க போல” என்று லல்லி சொல்ல, “தப்பு லல்லி… அப்படியெல்லாம் சொல்லாதே” என்று அர்ச்சனா அவளைக் கண்டித்தாள்.

அதேநேரம் நந்தா ஸ்ரீயிடம், “நீ இப்படி எல்லாம் பேசுனியாமா” என்று விசாரிக்க, அவள் ஆமென்று ஆமோதித்தாள்.

நந்தாவிற்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று புரியவில்லை. அவர் மல்லியிடம், “எதுவா இருந்தாலும் வெங்கட் வந்தப் பிறகு பேசிக்கலாம்… அந்தப் பொண்ணை மேலே அனுப்பி விடு” என்றார்.

“யார்கிட்டயும் எனக்கு எதுவும் பேச வேண்டாம்… எனக்கு இனிமே எந்த டென்ஷனும் வேண்டாம்… அவன் வந்தா அவங்க இஷ்டம் போல தனிக்குடித்தனம் போகச் சொல்லிடுங்க” என்று மல்லி முடிக்கும் போதுதான் வெங்கட் உள்ளே வந்தான். 

அவன் உள்ளே வந்ததும் தனிக்குடித்தனம் என்ற வார்த்தைதான் அவன் காதில் முதலில் விழுந்தது.

“என்னாயிடுச்சு… ஏன் தனிக்குடித்தனம் அது இதுன்னு பேசிட்டு இருக்கீங்க” என்று அவன் ஒன்றும் புரியாமல் கேட்க,

“உனக்கு எதுவுமே தெரியாது இல்ல?” என்று மல்லி அவனைக் குதர்க்கமான பார்வையுடன் கேட்டார்.

“மல்லி நீ கொஞ்சம் பொறுமையா இருக்கியா?” என்ற நந்தா, “இவ்வளவு நேரம் எங்கடா போயிருந்த” என்று மகனிடம் விசாரிக்க,

“தோட்டத்துல நின்னு ஃபோன் பேசிட்டு இருந்தேன் ப்பா” என்றவன் பார்வை ஸ்ரீயைப் பார்த்தது. அவள் தலையைக் குனிந்து கண்ணீருடன் நின்றிருக்க, “என்னாச்சு ஸ்ரீ… என்ன பிரச்சனை?” என்று கேட்டான் அவன்.

“அவதான் பிரச்சனையே… வந்த முதல் நாளிலேயே பிரச்சனையை ஆரம்பிச்சது அவதான்” என்று மல்லி பேச,

“உனக்கு எதையுமே பொறுமையா ஹாண்டில் பண்ணத் தெரியாதா? ஏன் இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு பேசிட்டு இருக்க” என்று நந்தா மனைவியை அடக்க முற்பட.

“என்னால தாங்க முடியலங்க… இந்தப் பிரச்சனையை இப்பவே முடிச்சிட்டா நல்லது” என்று மல்லியின் குரல் தழுதழுத்தது.

“என்ன ம்மா பிரச்சனை… எனக்கு ஒன்னுமே புரியல” என்று வெங்கட் அம்மாவிடம் வந்தான்.

“உன் பொண்டாட்டிக்கு தனிக்குடித்தனம் போகணுமாடா… நான் ரொம்ப டாமினேட் பண்ணுவேணா… அதனால அவளால இங்கே இருக்க முடியாதாம்… இதெல்லாம்… அவ கல்யாணமாகி வந்த அன்னைக்கே என்கிட்ட பேசுனா” என்று மல்லி சொல்லி முடிக்க வெங்கட் அதிர்ந்துவிட்டான்.

சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய மல்லி தன் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொள்ள போக வெங்கட் அவரைத் தடுத்து உள்ளே நுழைந்து,

“ம்மா சாரி மா… எனக்கு அவ பேசுன விஷயம் தெரியாதும்மா…  நான் ஸ்ரீகிட்ட பேசுறேன்மா” என்றான்.

“நான் என்ன தப்பு செஞ்சேன்… எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குது” என்று மல்லி மனம் தளர்ந்து முகத்தை மூடி அழத் தொடங்கிவிட்டார். 

அவரை சமாதானம் செய்வதற்குள்அவனுக்குப் போதும் போதுமென்றாகிவிட்டது. 

“ம்மா உங்களை விட்டு நான் எங்கேயும் போகமாட்டேன்… எதுக்காகவும் யார் சொன்னாலும் போகமாட்டேன்… பிராமிஸ் ம்மா… ப்ளீஸ்… அழாதீங்கம்மா” என்றவன் அவர் கைகளைப் பிடித்துக் கெஞ்ச, மல்லி மனம் ஒருவாறு சமாதானமடைந்தது.

வெங்கட்டை அவரால் விட்டுக் கொடுக்கவே முடியாது. அதேபோல வெங்கட்டின் பொறுமை அமைதியெல்லாம் மற்ற விஷயங்களில் மட்டும்தான். அம்மா என்று வந்துவிட்டால் அவன் முற்றிலும் மாறுப்பட்டவன்.

அவன் அம்மாவின் அறையிலிருந்து விறுவிறுவெனச் செல்வதை பார்த்த லல்லி, “மாமாவை நல்லா ஏத்தி விட்டுட்டாங்க… ஏதோ பெருசா நடக்கப் போகுது” என்று சொல்ல,

“சீரியல் மாமியார்… நிஜ மாமியார் எல்லா மாமியாரும் ஒரே கேட்டகிரிதான்” என்றாள் அர்ச்சனா.

நந்தா மட்டும் மகனைத் தடுத்து, “எதுவும் கோபமா எல்லாம் பேசி வைக்காதே வெங்கட்” என, அவன் பதிலேதும் சொல்லவில்லை. அம்மா விஷயத்தில் யார் என்ன சொன்னாலும் அவன் கேட்கமாட்டான்.

நேராக அவன் அறைக்குச் செல்ல ஸ்ரீ படுக்கையில் ஒருவித நிராதரவான நிலையில் அமர்ந்திருந்தாள். திருமணம் முடிந்ததும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி இந்த உறவைப் புறக்கணித்துவிட்டு ஓடிவிட வேண்டும் என்றுதான் நினைத்தாள். அதற்காகதான் மல்லியிடம் அவள் அவ்விதம் பேசியதும்.

ஆனால் இந்த நொடி… அவள் மனநிலையே வேறு. வெங்கட்டுடன் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் அவள் மனதார விரும்பினாள். ஏன் இந்த உறவை தான் ஏற்கக் கூடாது என்ற அவள் எண்ணத் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே இந்தப் பிரச்சனைத் தலைத்தூக்கிவிட்டது.

எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று அவள் யோசித்து கொண்டிருக்கும்போது வெங்கட் உள்ளே வரும் அரவம் கேட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் பார்வையே சொன்னது. அவன் அவள் மீது கோபத்தில் இருக்கிறான் என்று.

“யாரைக் கேட்டு நீ எங்க அம்மாகிட்ட தனிக்குடித்தனம் பத்திப் பேசுன” என்றவன் அவள் முன்னே வந்து எகிற, அவள் பயத்துடன் எழுந்து நின்றாள். எத்தகைய சூழ்நிலையிலும் கோபம் கொள்ளாமல் நிதானமாகப் பேசும் வெங்கட்டைப் பார்த்தவளுக்கு அவனின் இந்தப் பரிணாமம் பயத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேரக் கொடுத்தது.

“என்னவோ எங்க அம்மாவை டாமினேட்டிங் அது இதுன்னு பேசுனியாம்… ஆமா உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க… எதுக்கு அவங்ககிட்ட அப்படி எல்லாம் பேசுன” என்றவன் கேள்விக்கு அவள் பதில் பேசாமல் நிற்க,

“வாயை திறந்து பேசு ஸ்ரீ… ஏன் எங்க அம்மாகிட்ட தனிக்குடித்தனத்தைப் பத்தி பேசுன” என்றவன் அழுத்தமாகக் கேட்கவும்,

“சாரி வெங்கட்… நான் அப்படி பேசி இருக்கக் கூடாதுதான்… ஆனா அப்போ நான் இருந்த மனநிலை வேற” என்றாள்.

“என்ன மனநிலை… என்கிட்ட இந்த ரிலேஷன்ஷிப் வேண்டாம்னு பிரிஞ்சுடலாம்னு சொன்னே… ஆனா எங்க அம்மாகிட்ட தனிக்குடித்தனம் போகணும்னு சொல்லி இருக்க… உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்க… எதுக்கு இப்படி மாத்தி மாத்திப் பேசுற” என்றவன் காட்டமாகக் கத்தியதில் ஸ்ரீயின் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது.

“எனக்கு பதில் சொல்லு… ஏன் இப்படி மாத்தி மாத்திப் பேசுற” என்றவன் அவள் கைகளைப் பற்றி உலுக்கவும்,

“மாத்தி மாத்தி எல்லாம் பேசல… உங்களை விட்டுப் பிரியணும்னு முடிவு பண்ணிதான் பேசுனேன்… இப்படி பேசுனா மல்லி மேடமுக்கு  கோபம் வரும் ஏதாவது பிரச்சனை வரும்னு நினைச்சேன்”

“எங்க அம்மாவை வைச்சு ஒரு சீப் ட்ரிக் ப்ளே பண்ணி இருக்க இல்ல நீ” என்றவன் கேட்டு உஷ்ணமாகப் பார்த்ததில் அவள் வெலவெலத்துப் போனாள்.

“இல்ல வெங்கட் நான்”

“பேசாதே ஸ்ரீ… இந்த மாதிரி ட்ரிக் எல்லாம் ப்ளே பண்றதுக்கு பதிலா நீ இந்தக் கல்யாணத்தை நடக்க விடாம நிறுத்தி இருக்கலாம்… நான் தாலிக் கட்ட வந்த போது என்னைத் தாலி கட்ட விடாம தடுத்திருக்கலாம்… அதுக்கு நீ என்ன மாதிரி கேவலமான காரணம் சொல்லி இருந்தாலும் நான் ஏத்துக்கிட்டு இருந்திருப்பேன்… அதெல்லாம் விட்டுட்டு எங்க அம்மாவோட ஃபீலிங்க்ஸோட விளையாடி இருக்க… உனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்” என்றவன் குரலையுயர்த்த,

“மாயா மட்டும்  இடையில வரலன்னா நான் சத்தியமா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கவே மாட்டேன் வெங்கட்… உங்களை கல்யாணம் பண்ணி இருக்கவும் மாட்டேன்” என்று பதிலுரைக்க, அந்தப் பதிலில் அவன் சீற்றம் இன்னும் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை.

“மாயா மாயா மாயா… எங்கடி இருக்கா அந்த மாயா… எனக்கு இப்போவே அந்த மாயாவைக் காண்பிக்கிற” என்றவன் ஆக்ரோஷமாகக் கத்தினான். அவளின் அழுகை எல்லாம் அவனுக்கு அப்போது ஒரு பொருட்டாகவே இல்லை. 

“மாயா இப்போ என் கண்ணுக்கே தெரியிறது இல்ல வெங்கட்”

“எனக்கு அந்தக் கதையெல்லாம் வேண்டாம்… எனக்கு நீ இப்போ மாயாவைக் காட்டிதான் ஆகணும்… இல்லாட்டி நீ சொல்றதெல்லாம் பொய்யினு ஒத்துக்கோ”

“நான் சத்தியமா பொய் சொல்லல வெங்கட்”

“அப்படினா மாயாவை எனக்கு காண்பி… நான் அவளைப் பார்க்கணும்”

“எப்படி வெங்கட்?”

“எப்படி நீ பார்த்தியோ அப்படி… ஏதோ கேண்டில் எல்லாம் ஏத்தி வைச்சுக் கூப்பிடுவேன்னு சொன்னே இல்ல… அப்படி கூப்பிடு”

“வேண்டாம் வெங்கட்… அது ரொம்ப ரிஸ்க்… அப்படி பண்ணக் கூடாது”

“பண்ணக் கூடாதுன்னா எனக்கு புரியல… அப்போ நீ சொன்ன மாயா கதையெல்லாம் பொய்யா… என்னை ஏமாத்துறதுக்காக அப்படி எல்லாம் சொன்னியா?”

“இல்லவே இல்ல… நான் பொய்யும் சொல்லல… உங்களை ஏமாத்தவும் இல்ல”

“அப்போ ப்ரூவ் பண்ணு… நீ சொன்னதெல்லாம் உண்மைன்னு எனக்கு இப்பவே ப்ரூவ் பண்ணு”

அவனிடம் என்ன காரணம் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. அவன் தான் பிடித்தப் பிடியில் பிடிவாதமாக நிற்க அவள் செய்வதறியாது தவித்தாள்.

‘மாயா ப்ளீஸ்… நீ எங்கே இருந்தாலும் என் கண் முன்னாடி வந்திருடி’ என்று அவள் மனதிற்குள் கெஞ்சினாள். அழுதாள். ஆனால் நடக்கப் போகும் விபரீதத்தை இனி யார் வந்தாலும் தடுக்க முடியாது.

vanitha16 has reacted to this post.
vanitha16
Quote

Super ma 

You cannot copy content