You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 29

Quote

29

வெங்கட் ஐந்து மெழுகுவர்த்திகளைக் கொடுக்க அதனைப் பெற்று கொண்ட ஸ்ரீ, “வெறும் கேண்டில் மட்டும் இருந்தா போதாது வெங்கட்… அந்த ஆத்மா சம்பந்தப்பட்ட பொருள் ஏதாவது இருக்கணும்… அதாவது மாயா சம்பந்தப்பட்ட பொருள்” என்றாள்.

 “இதெல்லாம் நீ முன்னாடியே என்கிட்ட சொல்லலயே?”

“அப்போ நான் நடந்ததைச் சுருக்கமா சொன்னேன்” என்றவள் மேலும்,

“மாயா சம்பந்தப்பட்ட பொருள் இல்லாம ஒன்னும் பண்ண முடியாது” என்றவளுக்கு இந்த விஷப்பரீட்சையைச் செய்யாமல் இப்போதைக்குத் தப்பித்தால் போதுமென்று இருந்தது.

நிச்சயம் மாயா சம்பந்தப்பட்ட பொருள் இருக்காது என்றவள் நிம்மதி பெருமூச்சுவிட அவனோ யோசித்துவிட்டு,

“என்கிட்ட மாயா சம்பந்தப்பட்ட ஒன்னு இருக்கு” என்று அலாமாரிக்குள் குடைந்து அவள் பரிசளித்த அந்த ஓவியத்தை எடுத்துக் கொடுத்தான்.

வித் லவ் மாயா என்று இருந்த வார்த்தையை உற்றுப் பார்த்த ஸ்ரீ, “இதெல்லாம் இன்னுமும் பத்திரமா வைச்சு இருக்கீங்களா? அப்போ நீங்களும் மாயாவை லவ் பண்ணீங்களா?” என்று ஒரு மாதிரியான குரலில் கேட்க,

“ஒருத்தர் கொடுத்த கிஃப்ட்டை பத்திரமா வைச்சிருக்க…அவங்களை நம்ம லவ் பண்ணி இருக்கணும்னு அவசியமில்லை ஸ்ரீ” என்றான்.

அவளுக்கு இப்போது வேறு வழியே இல்லை. தான் வரைந்த நட்சத்திர கோடுகளில் மெழுவர்த்திகளை நிற்க வைத்து கொண்டே, “கண்டிப்பா இதை நாம செஞ்சே ஆகணுமா?” என்று தயக்கமாகக் கேட்க,

“செய்ய வேண்டாம்… ஆனா நீ மாயா பொய்ன்னு ஒத்துக்கோ” என்றான்.

“மாயா ஒன்னும் பொய் இல்ல… நானும் பொய் சொல்லல” என்றவள் ரோஷமாக அவனை நிமிர்ந்து பார்க்க,

“அப்போ நீ மாயாவை எனக்கு காட்டு” என்றவன் ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றான்.

“பிரச்சனை மாயாவைக் கூப்பிடுறதுல இல்ல… மாயாவைக் கூப்பிட போய் வேறேதாவது ஆத்மா வந்திருச்சுனா” என்றவள் அச்சத்துடன் சொல்ல,

“நான் மாயான்னு ஒருத்தி இருக்கிறதையே நம்பல… இதுல வேறொரு ஆத்மா வருமா… எனக்கு இப்போ நீ செய்றது எல்லாம் பார்த்தா சிரிப்புதான் வருது… இப்படியெல்லாம் கூப்பிட்டா ஆத்மா வந்துடுமா?” என்றான் கேலியாக.

“யார் இப்படி கூப்பிட்டாலும் வராது… அந்த ஆத்மாவுக்கும் கூப்பிடுறவங்களுக்கும் சம்பந்தம் இருக்கணும்… அந்த ஆத்மா வர விருப்பப்படணும்… எல்லாத்துக்கும் மேல நாம கான்ஸ்ட்ரென்ட் பண்ணணும்… வரும்னு நம்பணும்” என்றவள் தந்த விளக்கத்தில் அவனுக்குச் சுத்தமாக நம்பிக்கை இல்லை.

“சும்மா அளந்து விடாத ஸ்ரீ” என்றவன் கூற.

 “நான் அளந்து விடுறேனா?” என்று சொல்லிக் கொண்டே நான்கு மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்துவிட்டு, “ஏதாச்சும் எடாகுடமா நடந்தா நான் பொறுப்பில்ல சொல்லிட்டேன்” என்றாள்.

“என்ன நடக்கும்?”

“என்ன வேணா நடக்கும்” என்றவள் அதன் பின் மாயா வரைந்த ஓவியத்தை மைய பகுதியில் வைத்திருந்த மெழுவர்த்தியின் அருகே வைத்துவிட்டு, “இந்த கேண்டிலுக்கு எதிரா உட்கார்ந்து மாயாவை மனசுல நினைச்சு கூப்பிடுங்க” என்றாள்.

“கூப்பிட்டா வந்திருவாளா?”

“வருவான்னு நம்புனா வருவா”

“ஏன் நான் கூப்பிடணும்? நீ கூப்பிடு”

“உங்களுக்குதானே மாயாவைப் பார்க்கணும்… அப்போ நீங்கதான் கூப்பிடணும்… அப்பதான் அவ உங்க கண்ணுக்குத் தெரிவா”

“இந்தக் கதையே வேண்டாம்… அப்புறம் நான் சரியா கூப்பிடல… அதனாலதான் அவ வரலன்னு ஏதாச்சும் சொல்லி மழுப்பிடுவ… அதனால நாம சேர்ந்தே கூப்பிடுவோம்” என்றவன் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான். அவள் இருந்த கடுப்பிற்கு அவனை முறைக்க மட்டும்தான் முடிந்தது.

‘எப்படியோ மாயா வந்தால் சரி… இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைத்துவிடும்’ என்று எண்ணிக் கொண்டு மனதிற்குள் மாயாவை நினைத்து அவளை அழைத்தாள். 

வெங்கட்டிற்கு அவள் செய்வதில் நம்பிக்கையே இல்லை எனினும் இதையும் முயற்சி செய்யும் நோக்குடன் அவனும் மாயாவை மனதில் எண்ணிக் கொண்டான்.

இங்கே இவர்கள் இத்தகைய விபரீதத்தை செய்து கொண்டிருக்கும்போது நந்தா மல்லியிடம் பேசி அவர் தவறைப் புரிய வைக்க முயன்று கொண்டிருந்தார்.

“நீ செஞ்சது கொஞ்சம் கூட நியாயமே இல்ல மல்லி… அவங்க இரண்டு பேரும் சாப்பிட கூட வரல” என்று கவலையுடன் சொல்ல,

“பசிச்சா சாப்பிட வருவாங்க… உங்களுக்குப் பசிச்சதுனா போட்டு சாப்பிடுங்க” என்று மல்லி அலட்சியமாகப் பதிலளித்தார்.

“உனக்கு உன் பையனோட வாழ்க்கை முக்கியமே இல்ல… உனக்கு உன் ஈகோதான் முக்கியம்” என்றார் நந்தா.

“யாருக்கு… எனக்கு ஈகோவா?” என்ற மல்லி சீறலானப் பார்வையுடன் கேட்க,

“ஆமா உனக்குதான் ஈகோ… அடக்க ஒடுக்கமா உனக்கு அடங்கி இருக்க மருமகளா தேடுன… அந்த நினைப்புலதான் நீ ஸ்ரீலக்ஷ்மியை வெங்கட்டுக்கு கல்யாணம் பண்ணி வைச்ச… கடைசில நீ நினைச்சது நடந்துச்சா… எல்லாம் உனக்கு எதிராவே முடிஞ்சுடுச்சு”

“தெரியும்… நீங்க என்னை இப்படி குத்திக் காட்டிப் பேசுவீங்கன்னு எனக்கு தெரியும்… ஒரு வகையில எனக்கு இது தேவைதான்… திலகாவோட பொண்ணுன்னு சரியா கூட விசாரிக்காம… எனக்கு இது தேவைதான்”

“நீ இவ்வளவு எல்லாம் ஃபீல் பண்ற அளவு ஸ்ரீலக்ஷ்மி ஒன்னும் திமிர் பிடிச்சப் பொண்ணு மாதிரி தெரியல… அவ மனசுல பட்டதை உன்கிட்ட தைரியமா சொன்னா அவ்வளவுதான்”

“அப்போ அவ பேசுனது தப்பில்லைன்னு சொல்றீங்களா?” என்று அவர் முறைப்புடன் கேட்க,

“என்ன தப்பு? தனிக்குடித்தனம் போகணும்னு சொன்னா அனுப்பி விட வேண்டியதுதானே… நீயும் நானும் என்ன கூட்டுக் குடும்பத்துலயா வாழ்ந்தோம்… அப்புறம் ஏன் அவங்க மட்டும்”

“உங்க அம்மா எனக்கு குழந்தை பிறக்கலன்னு சும்மா சும்மா சொல்லி சண்டைப் போட்டதாலதான் நாம பிரிஞ்சு வந்தோம்”

“நாம அப்படி பிரிஞ்சு வந்தோம்… அதுக்காக அவங்களும் அப்படி இருக்கணும்னு அவசியமில்லை இல்ல… இன்னும் கேட்டா அவங்க சண்டை இல்லாம பிரிஞ்சு போறதும் நல்லதுதானே”

“இதையேதான்… உங்கச் சின்ன பிள்ளைங்க விஷயத்துல நான் சொன்னேன்… தனியா போகச் சொல்லுங்கன்னு… ஆனா அப்ப மட்டும் அவங்களை இங்க இருக்க வைக்க என்ன பேச்சு பேசுனீங்க”

“புரியாம பேசாதே… அவங்க இரண்டு பேரும் ஒரு வேளை தனியா போகணும்னு விருப்பப்பட்டிருந்தா நான் அனுப்பி விட்டிருப்பேன்… ஆனா அவங்கப் போக விருப்பப்படலையே…

நீ கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுனாலும் அர்ச்சனாவும் லலிதாவும் போக மாட்டேன்னு இருக்காளுங்க… அதுக்கு நான் என்ன பண்ண முடியும்” என்றதும் மல்லி மௌனமாகிவிட்டார்.

உண்மையிலேயே தான் அர்ச்சனாவையும் லலிதாவையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல்அவமானப்படுத்திவிட்டோம் என்று குற்றவுணர்வாக இருந்தது.

மனைவியின் முகத்தை உற்றுக் கவனித்தார்.  ‘ஃபீல் பண்றாளோ… பண்ணட்டும் பண்ணட்டும்… இதான் நல்லா சான்ஸ்… இப்படியே பேசிப் பேசி அர்ச்சனா லல்லி பத்தி நல்ல அபிப்ராயாத்தை உருவக்கிட வேண்டியதுதான்’ என்று அவர் அந்தச் சூழ்நிலையைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.

“அர்ச்சனாவும் லலிதாவும் ரொம்ப நல்லப் பொண்ணுங்க மல்லி… நீ உன் கோபத்தால அவங்களை சரியா புரிஞ்சுக்கல” என்ற போது மல்லி தலையசைத்து, “இருக்கலாம்… என்ன பண்றது… என் ஈகோ என்னை இறங்கிப் போகவே விடல” என, நந்தாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.

‘மல்லியா இப்படி பேசுவது’ என்று மனதில் வியந்து கொண்டவர் மெல்ல, “ஸ்ரீயைக் கூட இதே கோபத்தோட பார்க்கிறன்னு எனக்கு தோணுது” என்று சொல்ல, மல்லியின் கோபம் மீண்டும் தலையெடுத்தது.

“அவளைப் பத்தி பேசாதீங்க… அன்னைக்கு என் முன்னாடி எவ்வளவு திமிரா பேசுனா தெரியுமா?”

“அன்னைக்கு அவ்வளவு திமிரா பேசுனவ… இன்னைக்கு நீ இந்தளவு பேசியும் ஒரு வார்த்தை கூட பேசல”

“அவ்வளவும் நடிப்பு” என்று மல்லி சொல்ல,

“தெரியல… இருக்கலாம்… ஆனா வந்த முதல் நாளிலேயே அவ இப்படிதானேன்னு நாம அவசரமான தீர்மானத்துக்கு வர வேண்டாமே… கொஞ்சம் நாள் பொறுமையா வெயிட் பண்ணிப் பார்ப்போம்… ஸ்ரீயோட நடவடிக்கை எப்படிதான் இருக்குன்னு”.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள். மல்லியின் கோபமெல்லாம் நந்தாவின் வார்த்தைகளில் கரைந்து போயிருந்தது.

தான் கொஞ்சம் அவசரப்பட்டுதான் பேசிவிட்டோமோ என்று எண்ணத் தோன்றியது மல்லிக்கு. சில நொடிகள் மௌனமாக யோசித்தவர் பின் என்ன நினைத்தாரோ?

எழுந்து தன் கைப்பையிலிருந்த பொருட்களைச் சரி செய்து எடுத்து வைத்துக் கொண்டார்.

“என்ன பண்ணிட்டு இருக்க மல்லி?”

“நாளைக்கு ஸ்கூலுக்குப் போக திங்க்ஸ் எடுத்து வைச்சிட்டு இருக்கேன்”

“இந்த வாரம் முடிஞ்சு நீ திங்கட்கிழமைதானே போறதா இருந்தது”

“இல்லங்க… ஸ்கூல் போயிட்டா… எனக்கு அந்த வேலை டென்ஷன்ல இதெல்லாம் மறந்து போயிடும்… வீட்டுலயே இருந்தா இப்படிதான் எதையாவது பார்த்து நான் டென்ஷனாவேன் சண்டை போடுவேன்… அதான் நாளைக்கே கிளம்பிடலாம்னு” 

“நாளைக்குப் பூஜை வைச்சு இருக்கோம் இல்ல”

“பூஜையை முடிச்சிட்டுப் போனா போச்சு” என்றவர் சொன்னதற்கு நந்தா மறுப்பு தெரிவிக்கவில்லை. எப்படியோ மனைவி சமாதானமாகிவிட்டார் என்று அவருக்கு நிம்மதியாக இருந்தது.

மல்லியோ தன் கைப்பையில் சில பொருட்களைத் திணித்து மூட எத்தனித்த நொடி ஜிப்பில் ஏதோ ஒரு துணி மாட்டிக் கொண்டதில் மூட முடியவில்லை. அதனை லாவகமாக வெளியே எடுத்துவிட்டு மூடினார்.

அப்போதுதான் அந்தக் கைகுட்டையைக் கவனித்தார். அதில் இரத்தக் கரை படிந்திருந்ததைப் பார்த்த கணம் அவர் முகம் வெளிறிபோய்விட்டது. அவசர அவசரமாக வெளியே சென்று அந்தக் கைக்குட்டையை வீசிவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்துவிட்டார்.

உள்ளே வந்து அவர் ஆசுவாசமாக மூச்சுவிட, அந்த இரத்தக்கரை படிந்த கைக் குட்டைக் காற்றின் வேகத்தில் வெங்கட் அறை வாசலில் சென்று விழுந்தது.

அந்த நட்சத்திர கோடுகளின் மையமாக நின்றிருந்த அந்த மெழுகுவர்த்தி பக்கென்று பற்றிக் கொண்டதில் வெங்கட் ஸ்ரீ இருவருமே அதிர்ச்சியில் ஓரடி பின்வாங்கி விட்டனர்.

ஒரு பயங்கர கரிய உருவம் காற்றைப் போல அவர்கள் அறையை ஆக்கிரமித்துக் கொண்டதில் ஸ்ரீக்கும் வெங்கட்டிற்கும் என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

மற்ற மெழுகுவர்த்திகள் அனைத்தும் அணைந்துவிட, அந்த மைய பகுதிலிருந்த மெழுகுவர்த்தி மட்டும் பிரகாசமாக எரிந்தது. ஆனாலும் அவர்கள் அறையை ஓர் கரிய இருள் சூழ்ந்திருந்தது. ஸ்ரீயாலும் வெங்கட்டாலும் சுற்றிலும் எதையும் பார்க்க முடியவில்லை.

அவர்களால் ஒருவரை ஒருவர் கூட பார்க்க முடியவில்லை. இருந்த இடத்தை விட்டு அசையவும் முடியவில்லை. ஒரு அமானுஷ்ய உருவம் அவர்களைச் சுற்றி வருவதைக் கண்ட இருவருமே மரண பீதியில் உறைந்தனர்.

மெல்ல ஏதோ ஒன்று அவர்களை சுயநினைவு இழக்க வைத்துவிட்டது.

முதலில் மயக்கம் தெளிந்து விழித்தது ஸ்ரீதான். மெழுகுவர்த்திகள் அனைத்தும் அணைந்திருந்தன. ஆனால் அவையெல்லாம் வைக்கப்பட்ட இடத்தில் அப்படியே இருந்தன. அருகே இருந்த கைக்குட்டை மட்டும் புதிதாக இருந்தது.

“இது என்ன?” என்று கையிலெடுத்தவள் அதிலிருந்த இரத்தக் கரைகளைப் பார்த்து பயந்து தூக்கி வீசவிட்டு தன் அருகில் சாய்ந்திருந்த வெங்கட்டின் தோள்களை உலுக்கி எழுப்பிவிட்டாள்.

“வெங்கட் வெங்கட் எழுந்திருங்க”

அவன் மெல்ல மயக்கம் தெளிய எழுந்தமர்ந்தான். சற்று நேரத்திற்கு முன்பு நடந்த எதுவும் அவனுக்குச் சரியாக நினைவிலில்லை.

“என்னாச்சு ஸ்ரீ” என்று தலையை உலுக்கியபடி கேட்க,

“பெரிய தப்பு செஞ்சுட்டோம் வெங்கட்… வந்தது மாயா இல்ல” என்றாள் அவள் அதிர்ச்சியுடன்.

வெங்கட்டிற்கு அப்போதுதான் அவர்களை பயங்கர இருள் சூழ்ந்து கொண்டதும் அதில் ஒரு அமானுஷ்ய உருவம் போல தெரிந்ததும் நினைவுக்கு வந்தது.

சாத்தியமே இல்லை என்று நினைத்த ஒன்றை கண்ணெதிரே பார்த்த அதிர்ச்சியில் கிடந்தவனுக்கு நடந்த சம்பவம் அனைத்தும் கனவு போலதான் தோன்றியது. ஆனால் அவை கனவல்ல நிஜமென்று அவன் மூளைக்கு நன்றாகத் தெரிந்தது.

ஸ்ரீயை அதே அதிர்ச்சியுடன் பார்த்தவன், “மாயா இல்லையா… அப்போ உண்மையிலேயே மாயா இருக்காளா?” என்று கேட்க, வந்த கோபத்திற்கு அவளுக்கு அவனை அறையலாம் போலிருந்தது.

தன் கோபத்தை அடக்கிக் கொண்டவள், “அதைதான் நான் உங்ககிட்ட சொல்லிட்டு இருக்கேன்… நீங்கதான் நம்பல… ஆனா இப்போ வந்தது சத்தியமா மாயா இல்ல” என்றாள்.

“எனக்கு நீ சொல்றது புரியல… மாயா இல்லனா அப்போ நம்ம சுத்தி வந்த அந்த இருட்டு உருவம்… அது யாரு?”

“அது நான்தான்” என்று அதிர்ச்சிக் கொடுத்தது அவர்கள் இருவருக்கும் இடையில் அமர்ந்திருந்த அந்த அமானுஷ்ய உருவம்!

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Semma thigilaa irukku. Suspensa superaa maintain panni aduthu ennannu yosikka vaikkiringa.

👌

 

Quote

Semma intresting

 

 

You cannot copy content