You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 30

Quote

30

வீட்டில் பூஜைக்கான ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தேறிக் கொண்டிருந்தன. அக்காவுக்கு உதவியாக இருக்க சித்ரா காலையிலேயே பாவனாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டாள்.

ஆனால் அங்கே பார்த்த காட்சியில் பாவனா திகைத்து விழித்து, “ம்மா இது பெரிம்மாதானா? இல்ல பெரிம்மாவோட க்ளோனிங் மாதிரி ஏதாவதா?” என்று சந்தேகமாகக் கேட்க, 

“இப்படி எங்க அக்கா முன்னாடி கேட்டு வைச்சு… வாங்கி கீங்கி கட்டிகாதேடி” என்று மகளை எச்சரித்தபடி சித்ரா உள்ளே சென்றார். பாவனா வியந்த விஷயம் அங்கே மல்லி அர்ச்சனாவிடமும் லலிதாவிடமும் மிக சகஜமாகப் பேசி வேலை வாங்கிக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்துதான்.

அதுவும் கோட்டைத் தாண்டினாலே கொந்தளிக்கும் மல்லி பூஜையை நடு வீட்டில்தான் வைத்திருந்தார்.

விடியற்காலையிலேயே மல்லி அர்ச்சனாவிடமும் லல்லியிடமும் பூஜைக்கு அனைத்து ஏற்பாடுகளையும் பார்த்துக் கொள்ள சொன்ன போது அவர்களுக்கே அது இன்ப அதிர்ச்சியாகதான் இருந்தது.

வெங்கட் கல்யாணத்தில் மல்லி பேசியது கூட சம்பந்தி வீட்டுகாரர்கள் முன்னிலையில் தங்கள் பிரிவினையைக் காட்டிக் கொள்ள கூடாது என்பதற்காகதான். ஆனால் இன்று பேசியது அப்படி இல்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. 

காலையிலேயே பூஜைக்கு எழுப்பிவிட்டதில் தூக்கக் கலக்கத்தில் நின்றிருந்த சர்வேஷும் கபிலேஷும் குழப்பத்துடன் பேசிக் கொண்டனர்.

“இது கனவா இருக்குமோ”

“உனக்கும் எனக்கும் எப்படிடா ஒரே கனவு வர முடியும்” என்று இருவரும் ஒன்றுக்கு இரண்டு முறை கண்களைக் கசக்கிப் பார்த்தோடு அல்லாமல் மாற்றி மாற்றி கிள்ளிக் கொண்டு ஆஅஊஉ என்று கத்திக் கொண்டிருந்தனர். அப்போதும் கூட நடப்பது நிஜமென்று அவர்களால் நம்ப முடியவில்லை.

“நம்ப அம்மாவாடா இது”

“அதே டவுட்தான்டா எனக்கும்” என்று அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டிருக்க,

“என்னடா பண்ணிட்டு இருக்கீங்க… பக்கத்துல வந்து நில்லுங்களேன்டா” என்று மல்லி அவர்களை அதட்ட, ஆனந்தக் கண்ணீர் பெருகிவிட்டது அந்த சகோதரர்களுக்கு.

“சத்தியமா இது கனவில்லை” என்று மாற்றி மாற்றி அவர்கள் கண்களைத் துடைத்துக் கொண்டனர்.

மறுபுறம் நந்தாவோ மனைவியின் தடலடியான மாற்றத்தில் பத்து வயது குறைந்துவிட்டது போல உற்சாகத்துடன் வீட்டை வளைய வந்து கொண்டிருந்தார்.

ஆனால் இந்த ஆச்சரியமும் சந்தோஷமும் தாக்காத இருவர் இருந்தனர் என்றால் அது ஸ்ரீயும் வெங்கட்டும்தான். அம்மா தன் தம்பிகளுடனும் தம்பி மனைவிகளுடனும் சமாதானமானது சந்தோஷம்தான் என்றாலும் அவன் அதனைக் கொண்டாடுமளவுக்கான மனநிலையில் இல்லை.

யார்தான் இருப்பார்கள். பேயை அத்தனை நெருக்கத்தில் பார்த்தால்… பேய்கள் எல்லாம் புரளிகள் என்று நம்பிக் கொண்டிருந்தவனுக்குப் பேய் முன்னே வந்து நின்றால்… இன்னும் அவன் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

‘அது நான்தான்’ என்று அந்த அமானுஷ்ய உருவம் சொன்னதும்  ‘ஆஆஆஆஆஆஆஆஆஆஅ’ என்று இருவரும் அலறிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே ஓடி வந்துவிட்டனர்.

நல்ல வேளையாக பேய் அவர்களைப் பின்தொடராத காரணத்தால் இருவரும் பால்கனியில் அப்படியே அதிர்ச்சியுடனும் பயத்துடனும் அமர்ந்துவிட்டனர்.

விடிந்து வானில் வெளிச்சம் வரும் வரை அவர்கள் அவ்விடத்தை விட்டு அசையவில்லை. வாயைத் திறந்து பேசிக் கொள்ளவுமில்லை. நடப்பதெல்லாம் ஏதோ கனவுலகில் பார்ப்பது போலதான் இருந்தது.

பூஜைக்காக வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே விடியற்காலையிலேயே எழுந்து தயாராக,

“இன்னும் கொஞ்ச நேரத்துல பூஜைக்கு ரெடியாகி கீழே போகணும்” என்றான் வெங்கட்.

“ரூமுக்குள்ள அந்த இருட்டு உருவம் இருக்கான்னு போய் பாருங்களேன்” என்றாள் ஸ்ரீ.

“பேயைக் கூப்பிட்டது நீதானே… நீயே போய் பாரு”

“கூப்பிட சொன்னது நீங்கதானே… அப்போ நீங்கதான் போய் பார்க்கணும்”

“பேய் சகவாசம் எல்லாம் உனக்குதான்… எனக்கு இதுதான் ஃபர்ஸ்ட் டைம்… அதனால நீ போய் பாரு… நான் வரமாட்டேன்”

“எனக்கு பயமா இருக்கு வெங்கட்… நீங்களும் வாங்க… இரண்டு பேரும் சேர்ந்தே போவோம்” என்றவள் அவன் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கெஞ்ச,

“சரி வந்து தொலை” என்று இருவரும் தங்கள் அறையை மெதுவாக திறந்து அந்த அமானுஷ்ய உருவம் இருக்கிறதா என்று எட்டிப் பார்த்தனர். நல்ல வேளையாக அங்கே அது இல்லை.

“எங்கே போயிருக்கும்?” என்று ஸ்ரீ தேட,

“ஏன் திரும்பவும் கூப்பிட போறியா?” என்றான் வெங்கட் கடுப்புடன்.

“இல்ல இல்ல”என்றவள் பயத்துடன் தலையசைத்தாள். அதன் பிறகு இருவரும் அவசரம் அவசரமாக குளித்து முடித்து தயாராகினர். ஆனால் தயாராவதற்குள் நொடிக்கு ஒருமுறை அந்த அமானுஷ்ய உருவம் அவர்கள் பின்னே நிற்கிறதா என்று திரும்பி பார்த்து பயந்து கொண்டிருந்தனர்.

அப்போதுதான் ஸ்ரீ தங்கள் அறையில் கிடந்த கைக் குட்டையைக் காண்பித்து, “இதை நான் இப்பதான் நம்ம ரூம்குள்ள பார்க்கிறேன்… ஒரு வேளை இது அந்த இருட்டு உருவத்தோடதா இருக்கும்… இது மூலமாதான் அது வந்திருக்குமோன்னு எனக்கு தோனுது” என்று தள்ளி இருந்தபடி அதனைச் சுட்டிக் காண்பித்து சொல்ல,

“நீ வேற… இது எங்கம்மாவோட கர்சீஃப்” என்றவன் அதனைக் கையிலெடுத்தான்.

“ஐயோ… அதை கீழே போடுங்க வெங்கட்… அதுல ஏதோ இரத்தக்கரையா இருக்கு” என்றாள்.

வெங்கட் அதனை உற்றுப் பார்த்துவிட்டு, “எனக்கு நல்லா தெரியும்… இது எங்க அம்மாவோடதுதான்… ஆனா இதுல எப்படி இரத்தக் கரை” என்று யோசிக்க,

“அதை கீழே போட்டிருங்க வெங்கட்… எனக்கு என்னவோ அதை பார்த்தா சரியா படல” என, ஸ்ரீயின் எச்சரிக்கையை அவன் கேட்கவே இல்லை. 

“இருக்கட்டும்… அம்மாகிட்ட இது பத்தி என்னன்னு கேட்போம்” என்றவன் அதனை தன் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

பூஜை முடியும் வரை இந்தப் பதட்டத்தில் நின்றிருந்தவர்களை பார்த்த நந்தா அவர்களை தனியே அழைத்து, “இரண்டு பேரும் நைட் சண்டைப் போட்டுகிட்டீங்களா? அதான் இப்படி மூஞ்சியைத் தூக்கி வைச்சுட்டு இருக்கீங்களா” என்று கேட்டார்.

“அதெல்லாம் இல்லையே” என்று வெங்கட் சொல்ல,

“நீ சொல்லு ஸ்ரீ… இவன் உன்கிட்ட கோபமா பேசுனானா?” என்றவர் மருமகளிடம் கேட்க,

“சேச்சே… அப்படி எல்லாம் இல்ல மாமா” என்றாள் அவளும்.

 “அப்புறம் ஏன் இரண்டு பேரும் முகமும் இப்படி பேயறைந்த மாதிரி இருக்கு” என்று நந்தா கேட்க, இருவரும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியாகக் பார்த்துக் கொண்டனர்.

“இத பாருங்க… என்ன பிரச்சனை இருந்தாலும் பேசி சரி செஞ்சுக்கலாம்… தேவையில்லாம இரண்டு பேரும் சண்டை எல்லாம் போட்டுக்காதீங்க” என்றவர்,

“இப்பதான் அம்மா கொஞ்சம் சமாதானமாயிட்டு வரா… நீ ஏதாவது பண்ணிப் புதுசா கிளறி விட்டுடாதே வெங்கட்” என்று மகனுக்கு அறிவுரை வழங்கிவிட்டுச் சென்றுவிட்டார்.

அதற்கு பிறகு பூஜை முடியும் வரை இருவரும் இயல்பாக இருக்க முயன்றனர். இரவு கிடைத்த அந்த பயங்கர அனுபவம் அவர்களை இயல்பாக இருக்கவிடவில்லை. மல்லியும் அவர்களின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டுதான் இருந்தார். ஆனால் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.

எல்லோரும் காலை உணவு உண்ட பிறகு வெங்கட், “ஸ்ரீ உன்கிட்ட தனியா பேசணும் மாடிக்கு வா” என்றான். மேலே வந்த இருவரும் அவர்களின் அறையின் கதவைப் பார்த்து மிரட்சியில் விழித்தனர்.

“என் ரூமுக்குள்ள போகவே எனக்கு பயமா இருக்கு” என்றவன் ரொம்பவும் யோசித்தே அந்தக் கைப்பிடியைப் பிடித்துத் திறந்தான்.

வெங்கட் உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு நுழைய ஸ்ரீ அவனைப் பின்தொடர்ந்து வந்து, “நானும் உங்ககிட்ட பேசணும்னு நினைச்சிட்டு இருந்தேன்” என,

“ப்ளீஸ் நீ எதுவும் பேச வேண்டாம்… நீ இங்கிருந்து போயிடு… அதுதான் எனக்கும்… என் குடும்பத்துக்கும் நல்லது” என்றவன் அவள் முகத்தைத் திரும்பி பாராமலே சொல்லிவிட,

“வெங்கட்” என்றவள் அதிர்வுடன் பார்த்தாள்.

“சாரி ஸ்ரீ… எனக்கு வேற வழித் தெரியல… உனக்கு ஒரு வேளை… மனரீதியான பிரச்சனை இருந்தா அதை நான் ஹாண்டில் பண்ண முடியும்… குணப்படுத்தகூட முடியும்

ஆனா பேய் பிசாசு… இதெல்லாம் ஹாண்டில் பண்றளவுக்கு எனக்கு திறமையும் இல்ல… தைரியமும் இல்ல… நான் ரொம்ப நார்மல்மேன்… எனக்கு என் குடும்பம் ரொம்ப முக்கியம் ஸ்ரீ.

நேத்து வந்த நின்ன அந்த உருவத்தை நினைச்சாலே எனக்கு பகீர்ங்குது… அந்த உருவத்தால என் குடும்பத்துக்கு ஏதாச்சும் நடந்துட்டா… உஹும்…. என்னால அப்படி யோசிச்சு கூட பார்க்க முடியல…

வீட்டுல சின்ன சின்ன குழந்தைங்களா இருக்காங்க… வேண்டாம்… நீ இங்கிருந்து போயிடு… நான் அம்மா அப்பாகிட்ட ஏதாவது காரணம் சொல்லி சமாளிச்சுக்கிறேன்… ப்ளீஸ் போயிடு” என்றவன் படபடப்புடன் பேச அவள் இதை எதிர்பார்க்கவே இல்லை.

“என்ன வெங்கட்? என்னவோ நான்தான் அந்த உருவம் வரதுக்கு காரணமுங்குற மாதிரி பேசிட்டு இருக்கீங்க”

“வேற யார் காரணம்… நீதான் காரணம்” என்று அழுத்தமாக அவளைப் பார்த்து கூறியவன், “பேய் பிசாசு பத்தி எல்லாம் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கிறது நீதானே… உன்னாலதான் இது நடந்தது… அந்த உருவம் எங்க வீட்டுக்கு வந்துச்சு” என்று உறுதியாகக் கூற, அவள் முகம் வேதனையில் கசங்கியது.

“இல்ல… என்னால அது வரல… நான் கூப்பிட்டது மாயாவைதான்… மாயா ஏன் வரலன்னு எனக்கு தெரியல… ஆனா அந்தக் கருப்பு உருவம் வரக் காரணம் நான் கிடையாது… அதுவே வரணும்னு நினைச்சிருக்கு… வந்திருக்கு” என்றாள்.

“இதுநாள் வரைக்கும் வராதது…நேத்து மட்டும் எப்படி வரும்?”

“அது ஏற்கனவே வந்திருக்கலாம்… ஆனா உங்க கண்ணுக்குத் தெரியாம இருந்திருக்கலாம்… ஆத்மாக்கள் சாதாரணமா யார் கண்ணுக்கும் தெரியாது… அப்படி அது தெரியுதுனா அது அவங்களுக்கு நெருக்கமா இருக்கணும்… இல்ல அவங்களைப் பழித் தீர்த்துக்க இருக்கணும்.

நடந்தது எல்லாம் வைச்சு யோசிச்சு பார்த்தா டைகர் இறந்தது கூட இதுனாலதான் நினைக்கிறேன்… திடீர்னு நாய்கள் இறந்து போறதுகூட கெட்ட ஆத்மாக்கள் அந்த வீட்டுக்கு வந்ததுக்கான அறிகுறிதான்… எனக்கு தெரிஞ்சு அந்த உருவம் ஏற்கனவே இங்கே வந்திருக்கணும்…

புரிஞ்சுக்கோங்க வெங்கட்…. நான் எதையும் வர வைக்கல” என்றவள் சொன்னதைக் கேட்டு அவன் முகம் இறுக்கமாக மாறியது. 

“நீ சொல்றதை எல்லாம் வைச்சு பார்த்தா… எங்க வீட்டுல இருக்க யாரையோ பழித் தீர்க்க அந்தக் கெட்ட ஆத்மா வந்திருக்குன்னு சொல்றியா”

“எனக்கு தெரியல… வந்திருக்கலாம்”

“இல்ல… அப்படி இருக்காது… எங்க வீட்டுல யாரும் யாருக்கும் எந்தக் கெடுதலும் பண்ண மாட்டாங்க… பண்ணதும் இல்ல… அது எனக்கு நல்லா தெரியும்… நீ சொன்ன மாதிரி எங்க வீட்டுக்குக் கெட்ட ஆத்மாக்கள் வர வேண்டிய அவசியமும் இல்ல”

“அப்போ என்னாலதான் வந்திருக்குன்னு சொல்றீங்களா?”

“ஆமா… உன்னாலதான் வந்திருக்கு.

நீ சொன்ன மாயா கதை எல்லாம் உண்மைன்னு நான் இப்போ நம்புறேன்…அதேபோல நீ சொன்னதுபடியே உன் மூலமா மாயா எங்க வீட்டுக்கு வந்தது…இப்போ ஏதோ ஒரு கருப்பு உருவம் வந்திருக்கிறது… எல்லாமே நீ ஆத்மா பேய்னு பண்ற ஆராய்ச்சியாலதான்னு எனக்கு தோனுது…

ஐம் சாரி ஸ்ரீ… உன்னை இங்கே வீட்டுல வைச்சுக்கணும்னு நினைச்சாலே எனக்கு இப்போ பயமா இருக்கு” என்றவன் தன் எண்ணத்தை நேரடியாகச் சொல்லிவிட அவள் உடைந்துவிட்டாள். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

அவள் அழுகையைப் பார்த்ததும் அவன் மனமும் கலங்கியது. இருப்பினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “இப்ப எதுக்கு நீ அழுற… நீதானே இந்த ரிலேஷன்ஷிப் வேண்டாம்… என்னை விட்டு பிரிஞ்சு போகணும்னு நினைச்ச… இப்போ நானே போகச் சொல்றேன்… போக வேண்டியதுதானே” என்று சொல்லிவிட சில நிமிடங்கள் யோசித்தவள் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்து,

“சாரி வெங்கட்… என்னால இப்போ போக முடியாது…  இங்கே யாருக்கோ ஏதோ ஆபத்து இருக்குன்னு என் மனசுக்குத் தோணுது…  அந்தக் கருப்பு உருவம் கண்டிப்பா திரும்ப வரும்… அது ஏன் வந்திருக்கு எதுக்கு வந்திருக்குன்னு தெரிஞ்சிகிட்டே ஆகணும்… அதுக்கு நான் இங்கே இருக்கணும்” என்றவள் தீர்க்கமாகச் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

அவள் சொன்னதைக் கேட்டு அவன் முகம் வெளிறிப் போனது.

‘திரும்பி வருமா… என்ன சொல்லிட்டுப் போறா இவ’ அவன் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.  என்ன மாதிரி ஆபத்து வரும் என்று அவனால் யூகித்து கூட பார்க்க முடியவில்லை.

ஸ்ரீயோ தான் மனதில் நினைத்ததை அவனிடம் தைரியமாகப் பேசிவிட்ட போதும் அவள் மனம் தாங்கவில்லை. இதற்கு மேலும் இந்த வீட்டில் இருக்க வேண்டுமா என்றவள் சுயமரியாதை இடித்துரைத்தது.  வெங்கட் பேசிய வாரத்தைகள் எல்லாம் அவள் உள்ளத்தைச் சுக்குநூறாக உடைத்துவிட்டது.

தோட்டத்திற்குள் புகுந்து சென்று யாரும் பார்க்காத வண்ணம் அழத் தொடங்கிவிட்டாள். அவளுக்கு மாயாவின் நினைப்பு அதிகமாக வந்தது.  

‘இந்த உலகத்துல உன்னைத் தவிர வேற யாருக்கும் என்னைப் பிடிக்கலடி… நான் ஏன் வாழுறன்னு எனக்கு தெரியல… ஏன்டி என்னை தனியா விட்டுட்டுப் போன… இப்போ எங்கடி இருக்க நீ’ அவள் தனக்குள்ளாகவே அழுது கரைந்து கொண்டிருந்தாள்.

மாயாவைத் தவிர வேறு யாருமே அவளுக்குத் தோழியாக இருந்ததும் இல்லை. அவளைப் புரிந்து கொண்டதும் இல்லை. மாயாவிற்குப் பிறகு அவள் நேசத்திற்குரிய மனிதராக அவள் வெங்கட்டைதான் நினைத்தாள். அவனிடம் தன் மனதில் உள்ள அனைத்தையும் சொன்னாள். அவனை தன் நெருக்கமானவனாக உணர்ந்தாள். ஆனால் ஒரே நொடியில் அவன் தன்னைத் தூக்கி வீசிவிட்டான் என்பதை எண்ணும் போதே அவளுக்கு வலித்தது.

அவளுக்கு இப்போது மாயாவின் துணைத் தேவையாக இருந்தது. திடீரென்று மாயா தன் கண்ணெதிரே தோன்றிவிடமாட்டாளா என்றவள் எதிர்பார்த்து ஏங்கினாள்.

‘நீ எங்கேயாவது இருக்கியா மாயா… நான் அழுதிட்டிருக்கிறதைப் பார்த்திட்டு இருக்கியா’ என்றவள் தோழியை எண்ணி வேதனையுற்றுக் கொண்டிருக்கும்போது கபில் குரல் கேட்டது.

அவள் தன் கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டு எட்டிப் பார்த்தாள். அவன் தோட்டத்தில் நடந்து கொண்டே ஏதோ அலுவலக விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

“இதுக்காக எல்லாம் நீ நேர்ல வர வேண்டாம்… நீ எனக்கு அந்த டெண்டரோட டீடையில்ஸ் மெயில் அனுப்பு… நான் பார்த்துக்கிறேன்” என்றவன் தன் கைப்பேசி உரையாடலில் ஆழ்ந்திருக்க, அவன் கண்களில் படாமல் அவள் வேறு பக்கமாக இருந்து வெளியே வந்துவிட்டாள்.

சட்டென்று கபில் பேசிக் கொண்டிருந்த வார்த்தை அவள் மூளையில் தட்டியது. மாயா ஏதாவது கடிதம் எழுதி வைத்திருக்கிறாளா என்றவள் அறை முழுக்க தேடிப் பார்த்துவிட்டாள். ஆனால் அவள் மெயிலை அவள் பார்க்கவே இல்லையே.

அவள் அவசரமாக தன்னறைக்குத் திரும்ப, வெங்கட் அங்கே இல்லை. ஆனால் அது பற்றி அவள் பொருட்படுத்தாமல் அவசர அவசரமாக தன் கைப்பேசியைத் தேடி எடுத்தாள்.

அவளுடைய மெயிலை திறந்து அதில் குவிந்திருந்த தகவலைத் திருப்பினாள். திருமணத்திற்கு முன்பான தேதிகளில் ஏதேனும் மெயில் வந்திருக்கிறதா என்று பார்த்த போதுதான் அது அவள் கண்ணில் பட்டது.

அவளுடைய மெயிலிலிருந்து அவளுக்கே ஒரு மெயில் வந்திருந்தது. அதுவும் மாயா என்ற பெயரிடப்பட்டு… அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.

இத்தனை நாட்களாக தனக்கு இது தோன்றவே இல்லையே என்று எண்ணியவள் அதனைத் திறந்து தன் தோழி எழுதியிருந்த கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள்.

vanitha16 and Rathi have reacted to this post.
vanitha16Rathi
Quote

Yaar andha karuppu uruvam. Mallikkum adhukkum enna sambandham. Suspense thaanga mudiyala.

Quote

Super ma 

You cannot copy content