You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nijamo Nizhalo - Episode 32

Quote

32

பூஜை முடித்து வீட்டிலிருந்து கிளம்பிய மல்லி கொஞ்சம் தாமதமாகதான் பள்ளிக்கு வந்து சேர்ந்திருந்தார். மல்லியின் தலையைப் பார்த்ததுமே சோர்வாக இயங்கிக் கொண்டிருந்த அந்த ஒட்டுமொத்த பள்ளி வளாகமுமே சுறுசுறுப்பாகவும் பொறுப்பாகவும் இயங்க ஆரம்பித்துவிட்டது. அதுதான் மல்லி.

எல்லாவற்றையும் ஆட்டுவிக்கும் மல்லியே இன்று ஆடித்தான் போயிருந்தார். விவேகானந்தா ப்ளாக் பின்னிருந்த அந்தப் பேய் வீட்டை இடித்துத் தள்ளி இருப்பார்கள் என்று நினைத்தவருக்கு ஏமாற்றம்தான். இன்னும் அந்த வீடு ஒரு அபாய சின்னம் போல காட்சியளித்துக் கொண்டிருந்தது.

மீண்டும் அந்த வீட்டைப் பார்த்ததும் நடந்த சம்பவத்தின் நினைவுகள் அவரை வந்து தொந்தரவு செய்தன. எல்லாம் அந்த பாவனா செய்த முட்டாள்தனத்தால்தான். ஆனால் அவளைச் சொல்லியும் குற்றமில்லை. அந்த வீட்டை முன்னமே இடித்துவிட அவர் எத்தனையோ முறை சொல்லி இருக்கிறார். யார் கேட்டார்கள்.

அதற்கான வினையாகதான் அன்று அப்படியொரு அசம்பாவிதம் நடந்தேறியது. இதே கைகளால் ஒருவனைக் கொலை செய்யும்படி ஆகிவிட்டதே. அதனை விதி என்று சொல்வதா சதி என்று சொல்வதா?

ஸ்போர்ட்ஸ்டேவிற்காக அந்தப் பள்ளியே உற்சாகமாகத் தயாராகிக் கொண்டிருந்தது. கட்டிடங்கள் எல்லாம் காலியாக இருந்தன. அன்றும் மல்லி பந்தக்கால் முடித்துவிட்டு தாமதாமாகதான் பள்ளிக்கும் வந்து சேர்ந்தார்.

அலுவலகத்தில் அவர் மட்டுமே இருந்தார். சான்றிதழ்களை சரிபார்த்து அவர் கையெழுத்துப் போட்டு கொண்டிருக்கும்போது தணிகாச்சலம் விழா ஏற்பாட்டை மேற்பார்வையிட வருவதாக அலைபேசியில் கூறிவிட்டு வைத்திருந்தார்.

அவர் வருவதற்கு முன்னதாக ஒருமுறை ஏற்பாடு எந்தளவில் உள்ளது என்று சரிப்பார்க்க வேண்டுமென்று எண்ணி வெளியே வந்த போதுதான் தலைதெறிக்க பயந்து ஓடி வந்த அந்த மாணவிகளைப் பார்த்தார் மல்லி.

உடனடியாக அவர்களை நிறுத்தி யார் என்னவென்று விசாரிக்க, அவர்கள் தங்கள் தகவல்களைத் தெரிவித்தனர்.

“சரி… ஏன் டென்ஷனா இருக்கீங்க… என்ன பிரச்சனை?” என்று விசாரிக்க,

இருவரும் வெகுநேரம் சொல்வதா வேண்டாமா என்று யோசித்து பின் தயங்கித் தயங்கி, “மேடம்… எங்க க்ளாஸ் பாவனா அந்தப் பேய் வீட்டுக்குள்ள மாட்டிக்கிட்டா?” என்று சொல்ல,

“வாட்” என்று அதிர்ந்துவிட்டார் மல்லி.

“போய் ரொம்ப நேரமாச்சு மேடம்… அவ வரவே இல்ல” என்றவர்கள் மேலும் சொல்ல, மல்லிக்குத் தூக்கிவாரிப் போட்டது.

அந்த சமயத்தில் பள்ளியைச் சுற்றிலும் ஆசரியர்களே இல்லை. உடற்கல்வி ஆசிரியர் கூட அங்கிருந்து வெகுதொலைவில் இருந்தார். அந்த வளாகத்தில் நின்றிருக்கும் செக்யுரிட்டியை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை காணவில்லை. அப்படியே இவர்களில் யாராவது ஒருவர் இருந்தாலும் அந்தப் பேய் வீட்டுக்குப் போகச் சொன்னால் தயங்குவார்கள்.

இதெல்லாம் ஒரு சில வினாடிகளில் யோசித்து ஒரு முடிவுக்கு வந்த மல்லி, “நீங்க சொல்றது உண்மையா… உங்களுக்கு நிச்சயமா தெரியுமா?” என்று அவர்களிடம் ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் அவரே அந்த வீட்டுப் பக்கம் நடந்தார்.

அவருக்குப் பேய் பயமெல்லாம் இல்லை. எங்கே பாவனா உள்ளே போய் எதையாவது பார்த்து மயங்கி விழுந்துவிட்டாளோ என்ற கவலைதான். ஏற்கனவே பள்ளிக்கு வந்த முதல் நாளே அவள் மயங்கி விழுந்ததெல்லாம் நினைவுக்கு வந்து அவரைக் கவலை கொள்ள செய்தது.

அந்த வீட்டிற்குள் அவர் காலடி எடுத்து வைக்கும் போது உள்ளிருந்து கேட்ட பேச்சு குரல் அவரைத் துணுக்குற செய்தது. அதன் பிறகு மல்லி கொஞ்சம் அதீத ஜாக்கிரதையுடன் சத்தம் வராமல் உள்ளே எட்டிப் பார்த்தார்.

காக்கி உடையணிந்த காவலாளி இரத்தம் சிதறிய நிலையில் தரையில் கிடக்க, அருகே வாட்டச்சாட்டமாக ஒரு மனிதன் பாவனாவின் வாயை அழுத்தி மூடியபடி பிடித்திருந்தான்.

மல்லி அதிர்ந்துவிட்டார். மல்லி தன் கைப்பேசி மூலமாக தணிகாச்சலத்திற்கு தகவல் அனுப்பிவிட்டார். அவர் இன்னும் சில நிமிடங்களில் பள்ளிக்கு வருவதாகச் சொல்லி இருந்ததால் அவரிடம் சொன்னால் சரியாக இருக்குமென்று எண்ணினார்.

யாரையாவது உடனடியாக அவர் உதவிக்கு அனுப்பகூடும். ஆனால் உதவி வரும் வரை காத்திருக்க முடியாது என்று தோன்றியது.

அதேநேரம் பள்ளியிலிருந்து யாரையாவது அழைத்து வருவதற்குள் பாவனாவிற்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால்… அவரால் அப்படி யோசித்து கூட பார்க்க முடியவில்லை. இதயம் படபடத்தது.

பள்ளியிலிருக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் தான் மட்டுமே பொறுப்பு என்பதில் மல்லி எப்போதும் உறுதியாக இருப்பார். இதெல்லாம் தாண்டி அவன் பிடியிலிருப்பவள் அவரின் தங்கையின் ஒரே மகள்…

ஏதாவது செய்ய வேண்டுமென்று அவர் மூளை தீவிரமாக யோசித்தது. பதட்டத்தில் அவருக்கு ஒன்றும் தோன்றவில்லை.

உடலெல்லாம் வியர்த்து வடிந்திருந்தது. அதுவும் அவன் பாவனாவின் மூக்கை அழுத்திப் பிடித்திருந்த விதத்தில் அவள் மூச்சு முட்டித் தவித்துக் கொண்டிருந்தாள். யாரும் உதவிக்கு வருவதற்கு முன்னதாக பாவனாவின் உயிருக்கு ஆபத்து வந்துவிட்டால்…

அவனை அடிப்பதற்கு ஏதேனும் கிடைக்கிறதா என்று மும்முரமாக வெளியே வந்து தேடிய போது அங்கிருந்த இரும்பு கம்பி ஒன்று கண்களில் பட்டது. தன் அலைபேசியை ஓரமாக வைத்துவிட்டு அந்தக் கம்பியைக் கையிலெடுத்து கொண்டு வாய்ப்பு கிடைக்கும் போது அவனை அடித்துவிட எண்ணினார்.

அவர் மெல்ல பின்புறமாக அவனை நெருங்கும் போது பாவனா மல்லியைப் பார்த்துவிட, அவள் விழியின் அசைவை வைத்து பின்னே யாரோ வருகிறார்கள் என்பதை அவன் கணித்துவிட்டான்.

அந்தக் கணமே மல்லி அவனை அடிக்க ஓங்கிய கம்பியைக் கெட்டியாகத் தன் கரத்தால் பிடித்துக் கொண்டான். அவரால் அவன் பிடியிலிருந்த அந்தக் கம்பியை அசைக்க கூட முடியவில்லை. அவன் பிடி அத்தனை உறுதியாக இருந்த போதும் மல்லி தன் பிடியை விடுவதாக இல்லை.

அவனுடைய சிவந்த விழிகளை நேருக்கு நேராகப் பார்க்கவே அவருக்குப் பயமாக இருந்தது. முகத்தில் ஏதோ கரிய நிறத்தைப் பூசிக் கொண்டிருந்ததால் அவன் பார்க்கவும் பயங்கரமாகதான் இருந்தான்.

கம்பியை விடாமல் அவன் பிடித்திருந்ததில் பாவனாவின் பிடி நழுவ அவள் விலகிச் சென்றுவிட்டாள். அவன் மல்லியிடமிருந்து கம்பியை மூர்க்கமாகப் பிடுங்க முற்பட்டு அது ஏடாகுடமாகப் போய் அவன் கழுத்தில் சொருகிக் கொண்டதில் இரத்தம் பீறிட்டது.

அதிர்ச்சியில் சில நொடிகள் அவர் அப்படியே பார்த்திருந்ததில் அவர் கைகளெல்லாம் கம்பியின் வழியாக இரத்தம் படிந்துவிட்டது.

அவன் தரையில் சரியவும் சுயநினைவுக்கு வந்த மல்லி, “பாவனா வா சீக்கிரம்” என்று அவளை இழுத்துக் கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டார்.

தணிகாச்சலம் ஏற்கனவே பள்ளி வளாகத்திற்கு வந்து விட்டதால் அவரும் உடனடியாக அங்கே வந்துவிட்டார். நடந்த அனைத்தையும் மல்லி அவருக்கு விவரிக்க,

“சரி ஒன்னும் பிரச்சனை இல்ல… நீங்க பாப்பாவைக் கூட்டிட்டு போய் ரூம்ல இருங்க… ஸ்கூல யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவர் விரைவாக அந்த வீட்டிற்குள் நடந்தார்.

மல்லி நடுக்கத்துடன் பாவனாவை தன்னுடைய அறைக்கு அழைத்து வந்துவிட்டார்.

பயத்துடன் முகம் வெளிறிக் கிடந்த பாவனாவை அணைத்து சமாதானப்படுத்திக் கொண்டிருந்த போதுதான் தன் கையிலிருந்த இரத்தக்கரையைப் பார்த்து அவசர அவசரமாகத் தண்ணீர் ஊற்றிக் கழுவி விட்டு, தன் பையிலிருந்த கைக் குட்டையை எடுத்து துடைத்துக் கொண்டார்.

அவர் கைகளிலிருந்த சில துளி இரத்தம் அதில் ஒட்டிக் கொண்டது.

இப்போது பார்த்தாலும் தன் கைகளில் அந்த இரத்தக்கரை ஒட்டிக் கொண்டிருப்பது போன்ற பிரமைத் தோன்றியது அவருக்கு. ஏனோ அந்த விஷயத்திலிருந்து அவரால் சுலபமாக வெளி வரவே முடியவில்லை.

நல்ல வேளை அன்று நேரத்திற்கு தணிகாச்சலம் வந்துவிட்டார்.

அவர் சாமர்த்தியமாக அங்கே ஒரு கொலை நடந்தது கூட வெளியில் தெரியாதது போல அதனை மூடியும் மறைத்துவிட்டார். ஆனால் அந்த சமயத்தில் மல்லியை சமாதானம் செய்வதற்காக அவன் உயிருடன் இருப்பதாகவும் அவனை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் சொல்லிவிட்டார்.

பாவனா சொன்னவற்றை எல்லாம் கேட்டிருந்த ஸ்ரீக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. இத்தனை பெரிய விஷயமாக இருக்கும் என்று ஸ்ரீ எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் அவள் சொன்ன இந்த சம்பவத்தின் மூலம் நடப்பவற்றின் பிண்ணனி ஓரளவு புரிந்துவிட்டது.

அவள் உடனடியாக தணிகாச்சலத்திடம் இது குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ள எண்ணினாள். அவருடன் அவள் அதிகமாக பேசியதே இல்லையென்பதால் அவள் அவரின் தொடர்பு எண்ணை வைத்துக் கொள்ளவில்லை. ஆதலால் அவள் தன் அம்மா திலகாவிற்கு அழைத்தாள்.

எடுத்ததும் அவள், “தணிகா மாமா வீட்டில இருக்காராம்மா… அவர்கிட்ட பேச முடியுமா?” என்றுதான் ஆரம்பித்தாள்.

 “மாமா படிகட்டுல இருந்து உருண்டு விழுந்துட்டாரு சாரு… நாங்க இப்போ ஹாஸ்பிட்டல இருக்கோம்” என்று கூற, ஸ்ரீக்குப் பதட்டமேறியது.

“என்னம்மா சொல்றீங்க? எப்போ?”

“இராத்திரி ஒரு மூணு மணி இருக்கும்” என்றவர் மேலும்,

“ஏன் சாரு… திடீர்னு மாமாகிட்ட பேசணும்னு சொல்ற… உனக்கு விஷயம் முன்னமே தெரியுமா?” என்று கேட்க, அவளுக்கு என்ன பேசுவதென்று புரியவில்லை. மல்லியின் நினைவு வந்தது. அவருக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற பயமும் கூடவே வந்தது.

“சாரு” என்றவள் அழைக்கவும் அவருக்கு பதில் சொன்னாள்.

“எனக்கு நீங்க சொல்லிதான் விஷயமே தெரியும்… ஆமா மாமா எப்படி இருக்காரு… அவருக்கு ஒன்னும் இல்லையே?” என்று கேட்க,

“தலையில அடிபட்டு இருக்கு… கொஞ்சம் சீரியஸாதான் இருக்காருன்னு டாக்டர் சொல்றாங்க” என,

“சரிம்மா பார்த்துக்கோங்க… நான் வீட்டுல சொல்லிட்டுக் கிளம்பி வரேன்” என்றாள்.

“நீ அவசரப்பட்டு வர வேண்டாம்… நானே ஏதாவதுன்னா ஃபோன் பண்றேன்… நீ வீட்டுல யார்கிட்டயும் சொல்லி டென்ஷன் படுத்தாதே” என்றவர் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.

உடனடியாக அவளுக்கு வெங்கட்டிடம் பேசி அவனை எச்சரிக்க வேண்டுமென்று தோன்றவே அவள் அவனுக்கு அழைத்துப் பேசினாள். ஆனால் அதுவே விபரீதத்தில் முடிந்தது.

அலைப்பேசியில் அந்த அமானுஷ்ய குரல் வெங்கட்டிடம் பேசியதை அவளுமே கேட்டிருந்தாள். அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே அவளுக்கு விளங்கவில்லை.

“எனக்கு உன் உடல் வேணும்” என்று அந்த அமானுஷ்யம் வெங்கட்டிடம் சொன்னதைக் கேட்டதில் அவளுக்கு ஒரு நொடி மூச்சே நின்றுவிட்டது.

அதன் பிறகு வெங்கட்டின் குரல் கேட்காது போக, “வெங்கட் வெங்கட் என்னாச்சு?” என்று அவள் பதறித் துடிக்க,

“இன்னும் சாகல” என்றது அந்த அமானுஷ்யம். ஆனால் அந்தக் குரல் அலைபேசியிலிருந்து கேட்கவில்லை. அவளுக்கு மிக அருகில் நின்று.

அந்த நொடியே அவள் தடுமாறித் தரையில் விழுந்துவிட்டாள்.

vanitha16 has reacted to this post.
vanitha16
Quote

Malli edho villathanam panni iruppaaronnu ninaichaa, adhu verum vibathu thaan. Appadi irukka andha pei ean Malliyai pazhi vaanga ninaikkudhu. Andha Pei yaar.

Quote

Super ma 

You cannot copy content