You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Nilamangai - 3

Quote

நிலமங்கை-3

நிதரிசனத்தில்...

படபடவென்ற சத்தத்துடன் ஓட்டிவந்த தனது 'புல்லட்'டை தாமோதரனுக்கு அருகில் நிறுத்தி காலை ஊன்றியபடியே, "எப்ப வந்த தாமு? மங்க பொண்ண இட்டாந்துட்டதான? பிரச்சன ஒண்ணும் இல்லையே?" என இயல்பாக அவனிடம் விசாரித்தார் கிருஷ்ணமூர்த்தி, தாமுவின் தந்தை.

அவர் கேட்ட விதத்தில் சிரிப்புதான் வந்தது அவனுக்கு. "ஹா.. ஹா... அது என்ன மங்கையோட சேர்த்து எல்லாரும் ஏதோ பிரச்சனைய எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கற மாதிரியே கேள்வி கேக்கறீங்க?" என விளையாட்டாகத்தான் கேட்டான் அவன்.

ஆனால் அவனது கேள்வியில் அவருடைய முகம் இறுகிப்போக, "என்ன பண்ண சொல்ற தாமு... நம்ம குடும்பத்த பொறுத்தவரைக்கும் மங்கன்னாலே பிரச்சனைன்னு ஆயிடுச்சே! நீ இப்படி பட்ட மரமா நிக்கறத பார்த்தா எங்களுக்கு வேற என்ன நெனப்பு வரும்' என அவர் வருத்தத்துடன் சொல்ல, "இந்த ஏழெட்டு வருஷத்துல என்னோட வளர்ச்சியை பார்த்ததுக்கு பொறவும் நீங்க இப்படி சொல்ல கூடாதுப்பா. ஒரு விதத்துல இது நீங்க ஆசைப்பட்ட மாதிரி வளர்ச்சியுந்தான?" என அவன் பதில் கொடுக்க,

"நீ உன்னோட தொழில் வளர்ச்சிய பத்தி சொல்றன்னா, கொஞ்சம் பின்னால போய், நல்லா யோசிச்சு பாரு. உனக்கே பதில் கெடைக்கும். நான் ஆசை பட்டது இது இல்ல" என அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, 'கார்' சாவியை அவனிடம் நீட்டியவாறு, "ணா... வூட்டாண்ட போயிட்டு மதியம் வந்துர்றேண்ணா. ரவைக்கு ஏன் வூட்டுக்கு வரலன்னு இந்த தேவி போ...ன போட்டு சண்ட புடிக்குது. சின்ன பொண்ணு வேற அப்பா அப்பான்னுகினே கெடக்குதாம்" என்று சொல்லிவிட்டு தாமுவின் அனுமதிக்குக் கூட காத்திருக்காமல் அங்கிருந்து அகன்றான் செல்வம்.

உடனே, மகனை நோக்கி ஒரு குதர்க்கமான பார்வையை வீசிவிட்டு தனது வாகனத்தை 'ஷெட்'டை நோக்கி கிட்டி செலுத்த, 'உன்கிட்ட வேலை செய்யறவனெல்லாம் பொண்டாட்டி புள்ளகுட்டின்னு செட்டில் ஆயிட்டான். நீ என்னடான்னா இன்னும் புடிவாதம் புடிச்சிகினு இப்படி ஒண்டிக்கட்டையா நிக்கற' என்கிற குற்றச்சாட்டை அவரது அந்த பார்வை தாங்கியிருக்க, அதற்குப் பதில் கொடுக்க விரும்பாமல், வீட்டின் பக்கவாட்டில் அமைந்திருந்த மாடிப்படியை நோக்கிப் போனான் தாமு.

'நமக்கு இதெல்லாம் சாதாரணமப்பா' என்கிற ரீதியில் தந்தை மகனுடைய இந்த உரையாடலைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல், சத்தமான குரலில், "டிபன் எடுத்து வெக்கறேன். ரெண்டு பெரும் நேரத்தோட வந்து சேருங்க" எனக் கணவன் மகன் இருவருக்கும் பொதுவாகச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார் புஷ்பா.

நேராகத் தனது அறைக்கு வந்தவன் குளித்து 'லுங்கி-டிஷர்ட்' அணிந்து கீழே வந்தான் தாமு.

பழமை மாறாமல் பராமரிக்கப்படும், மூன்று நான்கு தலைமுறைகளைப் பார்த்த வீடு தாமோதரனுடையது.

நவீன முறைப்படி தன் விருப்பத்திற்கும் ரசனைக்கும் தகுந்தாற்போன்று தரைதளத்தில் வாகன நிறுத்தமும் முதல் தளத்தில் பளபளப்பான கிரானைட்டால் இழைக்கப்பட்ட பெரிய கூடம், அதனுடன் இணைந்த 'ஓப்பன் மாடுலர் கிட்சன்' வகை சமையலறை கூடவே சூரிய சக்தியில் இயங்கும் ‘கைஸர், பாத் டப்’ இத்தியாதிகளுடன் கூடிய குளியலறை, உடை மாற்றும் அறை, என சகல வசதிகளையும் உள்ளடக்கிய ஒற்றை படுக்கை அறை என அந்த பழைய வீட்டை ஒட்டி சற்று விரிவு படுத்தி சில வருடங்களுக்கு முன்பே கட்டியிருந்தான் தாமோதரன்.

மாடியிலிருந்து இறங்கி வந்தவன் வீட்டிற்குள் நுழைய, சந்தானத்தின்... அதாவது நிலமங்கையுடைய தாத்தாவின் உற்சாகக் குரல் கணீரென்று வாயில் வரையிலும் கேட்டது. அவருடன் பேசிக்கொண்டிருப்பது வரலட்சுமி... அதாவது தாமோதரனின் பாட்டி வேறு என்பதாலும் இருவருக்குமே காது சரியாகக் கேட்காது என்பதாலும் அவர்களுடைய குரல்கள் அந்த வீட்டையே கிடுகிடுக்கச் செய்துகொண்டிருந்தது.

"என்ன பெரியப்பா... பேத்திய பார்த்ததும் பத்து வயசு கொறஞ்சு போச்சாங்காட்டியும்" என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தவன், தரையில் உட்கார்ந்திருந்த அவனுடைய பாட்டிக்கு அருகில் போய், கால்களை நீட்டி வசதியாக சுவற்றில் சாய்ந்தவாறு உட்கார்ந்துகொண்டான்.

"வா மாப்ள" என்றவர், "இருக்காதா பின்ன" என தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் வீட்டுத் தாழ்வாரத்தில் இருக்கும் திண்ணையில் உட்கார்ந்திருந்த தாத்தா.

அது போன்ற திண்ணைகள் வீட்டில் ஆங்கங்கே இருக்கும். மற்றபடி சொகுசான இருக்கைகளையெல்லாம் இதுவரையிலும் கூட இந்த வீட்டிற்குள் புழக்கத்தில் கொண்டுவர விடவில்லை தாமுவின் பாட்டி.

அதற்குள் வீட்டில் துணை வேலை செய்யும் பெண்மணி இரண்டு தட்டுகளில் காலை சிற்றுண்டியைக் கொண்டுவந்து தாமுவுக்கு ஒன்றும் தாத்தாவுக்கு ஒன்றுமாகக் கொடுத்துவிட்டுச் செல்லவும், "ஆயா... நீ சாப்பிட்டியா" என தாமு கேட்க, "உங்கப்பனோடவே ஒக்காந்து சாப்டுட்டேன்" என்றவர், "சந்தானம் உன்கிட்ட என்னவோ முக்கியமா பேசணும்னு வந்திருக்கு... முறுக்கிக்காம கொஞ்சம் நிதானமா கேட்டுக்கோ கண்ணு" எனப் பாட்டி பதமாக எடுத்துக்கொடுக்கவும், அவருடைய முகத்தைக் கூர்மையாகப் பார்த்தவன், "என்ன கிழவி... ரெண்டுபேரும் சேர்ந்து வில்லங்கமா எதாவது பிளான் பண்றீங்களா" என்றான் கடுப்புடன்.

"இதுக்குதான் சொன்னேன்" என அவர் அவனை முறைக்க, உடனே தாத்தாவைப் பார்த்தவன், "வந்ததும் வராததுமா என்ன சொல்லிச்சு உங்க மகாராணி" என அவன் நேரடியாகக் கேட்க, "அது என்ன சொல்ல போகுது... உள்ள நொழஞ்ச உடனே எப்படி இருக்க தாத்தான்னு கேட்டுச்சு... அம்புட்டுதான்... மொத்த குடும்பமும் அவளை சுத்திக்கிச்சுங்க. பொறவு நேரா அவங்கப்பன பார்க்க போயிடுச்சு. சரி குளிச்சி சோறு துன்னு முடிக்கட்டும் பொறவு பேசிக்கலாம்னு இங்க வந்தேன்' என விளக்கியவர், "அது இருக்கட்டும் தாமு... வனா கல்யாணம் முடியரவரைக்கும் மங்க எங்கூட்டுலயே இருக்கட்டுமே. அதுக்கு பொறவு நாம ஒரு முடிவு செஞ்சுக்கலாம்" என அவர் இறைஞ்சுதலாகச் சொல்ல, "இப்ப அவ இங்க எங்கூட எங்கூட்டுல இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சன" என அவன் கூர்மையாகக் கேட்க, சற்று தயங்கியவர், "மொறபடி கல்யாணம்னு ஒண்ணு" எனத் தொடங்க, "எங்க கல்யாணம் மொறபடி நடந்த கல்யாணம்தான்" என அவன் அழுத்தமாகச் சொல்லவும், "என்ன மொறபடி நடந்தது. நீ என்ன மொறையோட நடத்துகிட்ட. மங்க பொண்ண பொறுத்தவரைக்கும் நீ செஞ்ச எதுவுமே மொறகெட்ட வேலதான்" என்று பாட்டி இடைபுகவும், கோபத்திலும் இயலாமையில் அவனுடைய முகம் கன்றியது. அதை உணர்ந்து, "பழசெல்லாம் பேசி முடிஞ்சுபோன கல்யாணத்துக்கு மோளம் கொட்ட வேணாம் சித்தி" என்ற சந்தானம், "அதில்ல தாமு. மங்கையாண்ட பேசிட்டு நானே ஒரு நல்ல சேதியா சொல்றேன். அதுவரைக்கும் கொஞ்சம் பொறுத்துக்கோ. இப்போதைக்கு அவள எதுக்கும் நிர்பந்த படுத்தாத" என்று சொல்ல, மறுக்க இயலாமல் உணவுடன் சேர்த்து தன் ஆதங்கத்தையும் அப்படியே விழுங்கினான் தாமு.

அதற்குள் கிருஷ்ணமூர்த்தியும் அங்கே வந்துவிட மங்கையின் தங்கை வனமலருடைய திருமண ஏற்பாடுகளை பற்றி பொதுப்படையாக பேசிவிட்டு, எழுந்துபோய் முற்றத்தில் போடப்பட்டிருந்த குழாயில் கை அலம்பி வந்தவர், அங்கே சொம்பிலிருந்த தண்ணீரை பருகிவிட்டு, "வந்து ரொம்ப நேரமாச்சு... போயிட்டு அப்பறமா வரேன்" என்று மூவருக்கும் பொதுவாக சொல்லிவிட்டு, "யம்மா... புஸ்பா... கிளம்பறேன் மா' என்றார் சத்தமாக.

"சரிங்க அத்தான்' என்றவாறு உள்ளே இருந்து வந்த புஷ்பா, கிட்டியின் வாய்க்கு பயந்து, 'மங்கை இங்க வருவாளா' என்பதுபோல் ஜாடையிலேயே கேட்க, எல்லோர் பார்வையும் அவர்மீதே இருக்கவும் அவருக்கு எப்படி பதில் கொடுப்பது என ஒரு நொடி தயங்கி நின்றவர், "கொஞ்சம் சாப்டு ஓய்வெடுத்துட்டு மங்க இங்க வரும்" என பொதுவாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் சந்தானம்.

*

தாமுவின் வீட்டிற்கு எதிர் வரிசையில் இரண்டு வீடுகள் தள்ளி இருக்கும் மகளுடைய வீட்டிற்கு வந்தார் சந்தானம்.

இன்னும் மூன்று தினங்களில் வனமலருடைய திருமணம் என்பதினால் சில நெருங்கிய உறவினர்களுடன் பரபரப்பாகக் காட்சி அளித்தது அந்த வீடு.

ஒருவர் மாற்றி ஒருவர் சந்தானத்திடம் பேசியவாறு இருக்க, அவரை பார்த்தவுடன் வேகமாக அவரருகில் வந்த அவருடைய பேரன் ஆதிகேசவன், "தாத்தா முகூர்த்த புடவை ரெடி ஆயிடுச்சாம். போன் பண்ணி சொன்னாங்க. வாங்கியார சின்ன காஞ்சிவரம் வரைக்கும் போவ போறேன். நீயும் வரியா?" என்று கேட்க, அந்த பிள்ளையைப் பார்க்கவும் அவருக்குப் பாவமாகத்தான் இருந்தது.

மருமகன் வேலு படுக்கையில் விழுந்த பிறகு, என்னதான் தாமு துணை நின்றான் என்றாலும், கேசவனின் பொறுப்புகள் கூடித்தான் போனது.

அதுவும் தமக்கையின் திருமண வேலைகளில் யாரையும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் அனைத்தையும் தானே செய்துகொண்டிருக்கிறான்.

இப்படி எப்பொழுதாவது பேச்சு துணைக்கு மட்டும் அவரை அழைப்பான் அவ்வளவுதான்.

"கொஞ்சம் இரு கண்ணு. தோ பொறப்பட்டு வந்துடறேன்" என்றவர், "மங்க எங்க போச்சு" என்றார் அவளைக் கண்களால் தேடியவாறு.

"அக்கா... அப்பவாண்ட பேசிக்கினு இருக்குது தாத்தா. குளிச்சு சாப்டு போய் அவருக்கு பக்கத்துல உக்காந்ததுதான்... அங்க இங்க நவுரல" என்றான் அவன் வருத்தத்துடன்.

உடனே அவளைப் பார்க்கப் பின்கட்டில் இருக்கும் அறை நோக்கிப் போனார் தாத்தா.

அங்கே கட்டிலில் படுத்திருந்தார் வேலுமணி. அவருடன் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தாள் மங்கை.

அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவள், "அப்பா இப்ப எவ்வளவோ பெட்டெர் இல்ல தாத்தா. பேச்சு கூட நல்லாவே புரியுது" என்றாள் அவள் மகிழ்ச்சி பூரிக்க.

"ஆமாங்கண்ணு... எல்லாமே நம்ம தாமுவாலதான். அதுதான் பெரிய பெரிய டாக்டர் கிட்டலாம் இட்னு போய் காமிச்சு... அது என்னவோ சொல்லுவாங்களே... பேசறதுக்கு பயிற்சி... அதெல்லாம் வூட்டுக்கே இட்டாந்து செஞ்சுதாங்கட்டியும்" என்றாரவர் மனதிலிருந்து.

அவர் எதையும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்பது புரிய, வியப்புடன் அவள் அவரை பார்க்கவும், "நெசந்தான் கண்ணு... உனக்கு சொல்லி விளங்க வெக்க முடியாது. நீயே பார்த்து தெரிஞ்சிக்க" என்றவர், "பாவம் கண்ணு நம்ம புஸ்பா. உன்னை ரொம்ப எதிர்பார்த்துட்டு உக்காந்து இருக்குது. ஒரு எட்டு போய் பார்த்து விசாரிச்சிட்டு வந்துரு கண்ணு" என்று சொல்லவிட்டு, "என்ன வேலு, பொண்ண பார்த்த சந்தோசத்துல எழுந்து ஓட ஆரமிச்சுடுவ காட்டியும்" என்று மருமகனை நோக்கி புன்னகையுடன் சந்தானம் கேட்கவும், முகம் மலர பதிலுக்கு நகைத்தார் வேலு.

அதில் மனம் நிறைந்தவராக, "கண்ணு நான் தம்பியோட கூட சின்ன காஞ்சீவரம் வரைக்கும் போவ போறேன். உனக்கு எதானா வாங்கியாரணுமா?' என அவர் கேட்க, "எதுவும் வேணாம் தாத்தா" என்றவள், "சித்தி எதோ பலகாரம் செஞ்சுட்டு இருக்கு. முடிஞ்சதும் சாப்டுட்டு அவங்க வூட்டுக்கு போறேன்" என மங்கை சொல்ல, ஒரு தலை அசைப்புடன் அங்கிருந்து சென்றார் தாத்தா.

மகேஸ்வரி அங்கேயே சுடச்சுடக் கொண்டுவந்து வைத்த சிமிளியைத் தந்தைக்கும் ஊட்டிவிட்டு தானும் சாப்பிட்டு முடித்து, "நான் புஷ்பாத்த வூட்டுக்கு போய் வந்துறேன் பா' என்று வேலுவிடம் சொல்லிவிட்டு, அருகில் நின்ற மகேஸ்வரியிடமும் "கொஞ்ச நேரத்துல வந்துர்றேன் சித்தி" என்று சொல்லிக்கொண்டு அவள் வீட்டின் நடைக்கு வரவும் அவளுடைய தோழி தேவி அங்கே வந்துசேரவும் சரியாக இருந்தது.

மங்கையை பார்த்தவுடன் இத்தனை வருடப் பிரிவுத் துயர் தீரும் வரை கண்களில் கண்ணீர் பெருகும்படி முதலில் ஒரு பாட்டம் அழுது முடித்தாள் அவள். கொஞ்சி கெஞ்சி மங்கை அவளைச் சமாதானம் செய்து பின்புதான், "எப்படி இருக்க மங்க. ஒழுங்கா சோறு துன்றதே இல்லையா. இப்படி மெலிஞ்சி போயிருக்க. முடிய வேற இப்படி கிராப்பு வெட்டி வெச்சிருக்க. இல்ல சாமிக்கு நேந்துகினு மொட்டை போட்டுக்கினியா? இப்ப கூட சுடிதார் போட்ருக்க... சேலயெல்லாம் கட்ட மாட்டியா?" என சரமாரியாக அவள் கேள்விக் கணைகளைத் தொடுக்க, "கொஞ்சம் மூச்சு வுட்டுக்க தேவி" என்று அவள் கேள்விகளுக்கு அணையிட்டு அதன் பிறகுதான், "நான் நல்லாத்தான் இருக்கேன். நீ உன் வூட்டுக்காரு புள்ள எல்லாரும் எப்படி இருக்கீங்க" என்ற பரஸ்பர நல விசாரிப்புகளே தொடங்கியது.

அதன் பிறகு, அந்த நடையிலேயே இருக்கும் திண்ணையில் உட்கார்ந்திருந்த இரண்டு பெண்களுக்கும் நடுவில், வனமலர் கொண்டுவந்து வைத்த சிமிளியில் சிலவற்றை காலி செய்தவாறே, ஏழு வருடமாகத் தோழியிடம் பேசி தீர்க்க வைத்திருந்த கதைகளைச் சொல்ல தொடங்கினாள் தேவி.

அவளைச் சமாளிக்க முடியாமல் மங்கை விழி பிதுங்கி நிற்க, "மங்க இனி இங்கதான் இருக்க போகுது தேவி! பைய பேசி முடிக்கலாம். நீ வந்து கல்யாணத்து வாங்கியாந்த ஜவுளி நகையெலாம் பாரு" என்ற மகேஸ்வரி மங்கையிடம் தாமுவின் வீட்டிற்குச் செல்லும்படி ஜாடை காண்பித்துவிட்டு தேவியை அங்கிருந்து தள்ளிக்கொண்டு போக, இப்படியே சில மணிநேரங்கள் கடந்திருந்தன.

*

நிலமங்கை வீட்டை விட்டு வெளியில் வரவும், நண்பகல் நேரம் என்பதால் அந்த வீதியே வெறிச்சோடி கிடந்தது.

'அனைவரையும் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம், முக்கியமாக அத்தையை?' என்ற கேள்வியுடன் தாமுவின் வீட்டை அடைந்தவள், வாயிற் திண்ணைக்கு அருகில் நின்று கொண்டு "அத்தை" என்று குரல் கொடுத்தவாறே வீட்டிற்குள் எட்டிப்பார்க்க, நடையைத் தாண்டி தாழ்வாரம் முற்றம் எனக் கண்ணனுக்கு எட்டியவரை யாருடைய நடமாட்டமும் தென்படவில்லை அங்கே.

ஏதோ ஒரு தொலைக்காட்சி தொடரின் ஓலம் அவள் நின்றிருந்த இடம்வரை கேட்க, அழைத்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தவள் தயங்கியவாறே வீட்டிற்குள் செல்ல, கூடத்தில் உட்கார்ந்து மதிய உணவை உண்டவாறே தொலைக்காட்சியுடன் ஒன்றிப்போயிருந்தனர் புஷ்பாவும் வரலட்சுமியும்.

"அத்தை!" என்றவாறு அவள் அவர்களுக்கு அருகில் வந்து நிற்க, அவளைப் பார்த்ததும் மகிழ்ச்சி ததும்ப, "கண்ணு... மங்க" என்று தன்னை மறந்து கத்தியேவிட்டார் புஷ்பா.

நொடியும் தாமதிக்காமல் தட்டிலேயே கையை அலம்பியவர் பாய்ந்துவந்து அவளை அணைத்துக்கொண்டு சில நொடிகள் அவளை அசையக்கூட விடவில்லை அவர்.

"ஏ... புஸ்பா... எதுக்கு இந்த பதட்ட படற. கொஞ்சம் நிதானமா இரு" என மருமகளை அதட்டியவர், "காலைல நீ வந்த நேரத்துக்கு... இப்பதான் இங்க வரணும்னு தோணிச்சா. பாவம் இந்த லூசு... உனக்காக வூட்டுக்கும் தெருவுக்குமா அல்லாடிக்கினு கிடந்தது" எனப் பாட்டி மங்கையை கடிந்துகொள்ள, புஷ்பாவிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டவள், "எப்படி இருக்க ஆயா!" என்று இயல்பாக விசாரிக்கவும், "எனக்கென்ன கேடு... நல்லா மூணு வேளையும் கொட்டிக்கினு கல்லாட்டம் இருக்கேன்... நீ என்ன இப்படி தேஞ்சிப்போய் வந்திருக்க" என நக்கலாக அவர் கேட்கவும், அப்பொழுதுதான் அவளது தோற்றத்தை உணர்ந்தவர், முந்தானையால் தன் முகத்தை துடைத்துக்கொண்டு, சாமியாடி தீர்த்துவிட்டார் புஷ்பா.

'காலைல புள்ள செய்யாம வுட்டத இப்ப ஆத்தா செய்யுது' என மனதிற்குள் நகைத்துக்கொண்டவள், இதையெல்லாம் எதிர்பார்த்தே வந்திருக்க, "அத்த... என்ன வுடு... நான் நல்லபடியாதான் திரும்ப வந்திருக்கேன். நீ எப்படி இருக்க. மாமா எப்படி இருக்கு... அத சொல்லு மொதல்ல" என நிலைமையைச் சுமுகமாக மாற்ற முயல, "எங்களுக்கென்ன கொற... எங்க புள்ள எங்கள நல்லா பார்த்துக்குது... நாங்க ரொம்ப நல்லாவே இருக்கோம்" என நொடித்துக்கொண்டவர், அவளை இழுத்து அமரவைத்து, பின்பு ஒரு தட்டில் சாதத்தைப் போட்டு குழம்பை ஊற்றி, "உனக்கு புடிக்குமேன்னு மீன் குழம்பு வெச்சேன். சாப்பிடு" என்றவாறு அவளிடம் நீட்ட, உண்மையிலேயே அவளுக்குப் பசியில்லைதான். ஆனாலும் மறுக்க இயலாமல் அதை அவள் நிதானமாக உண்ணத் தொடங்க, அப்பொழுது உள்ளே நுழைந்த கிட்டு, யாரோ புதிய பெண் என்ற எண்ணத்தில், அங்கே வர தயங்கி தாழ்வாரத்திலேயே நின்றுவிட்டார். அது மங்கை என்பது புரியவே சில நிமிடங்கள் பிடித்தது அவருக்கு.

பின்பு கூடத்திற்கு வந்தவர், "என்னம்மா பொண்ணு... நல்லா இருக்கியா" என்று பெயருக்காக விசாரிக்க, "நல்லா இருக்கேங்க மாமா. நீங்க எப்படி இருக்கீங்க' என்று கேட்டள் மங்கை. "நல்லா இருக்கேன்' என்று சொல்லிவிட்டு கிட்டி அந்த கூடத்தை ஒட்டி இருக்கும் அறைக்கு சென்றுவிட, அதில் அவருடைய கோபமும் பாராமுகமும்தான் தெரிந்தது. அவள் வேதனையுடன் அவர் சென்ற திசையையே பார்த்திருக்க, "ஏய் புஸ்பா... நீ கிட்டிக்கு சோறு எடுத்து வையி" என்று மருமகளைப் பணித்தவர், "மங்க நீ மேல போயி தாமுவ பாரு” எனக் கட்டளையாகச் சொல்ல, "இல்ல ஆயா... நான் வூட்டுக்கு போவணும்" என அவள் அவனைத் தனியே சந்திக்கத் தயங்கி மறுக்க, "என்னவோ அவனோட ரூம்புக்கு போகாதவ மாதிரியே புதுசா சீன போடற... பைத்தியக்காரன் மாதிரி அவன் உனக்காக என்னென்னவோ செஞ்சிட்டு இருக்கான். போ... போய் அவன பார்த்துட்டு பொறவு உங்கூட்டுக்கு போய் சேரு" என்று பாட்டி பிடிவாதமாக அவளை விரட்ட, வேறு வழி இல்லாமல் வீட்டை விட்டு வெளியில் வந்தவள் பூத்துக் குலுங்கும் அந்த ரங்கூன் மல்லிகை கொடியையே அப்பொழுதுதான் கவனித்தாள். அடுத்த வினாடி... மனதின் மூலையில் சில்லென்ற ஒரு இதம் பரவ அவளுடைய கண்கள் பனித்தது.

அங்கிருந்து நகரவே மனமின்றி, அதில் தொங்கிக்கொண்டிருந்த மலர்களை கைகளால் வருடியவாறு சில நிமிடங்கள் அப்படியே தேங்கி நின்றவள், பின்பு நேரம் செல்வதை உணர்ந்து மாடிப்படிகளில் ஏற தொடங்கினாள்.

மேலே வந்து வரவேற்பறைக்குள் நுழையவும், அந்த பகுதியையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுபோல் ஒரு பக்கச் சுவர் முழுவதையும் நிறைத்திருந்த மிகப்பெரிய புகைப்படம் அவளது பார்வையில் படவும் அப்படியே மூச்சடைத்துப் போனது நிலமங்கைக்கு.

காரணம் அதில் முழுவதுமாக நிறைந்திருந்தது அவள்தான். நிலமங்கையேதான்.

சித்திரை மாத தொடக்கத்தில் ஒரு நல்ல நாளாகப் பார்த்து பூஜை போட்டு பொன்னேர் பூட்டுவார்கள்.

அந்த வருடம் முழுவதற்கும் பயிரிட்டு விவசாயம் செழிக்க நிலத்தை உழுது பக்குவப்படுத்தும் நடைமுறை அது.

மங்கைக்கு நினைவுதெரிந்த நாளாக அவர்களது நிலத்தில் அவள்தான் பூஜை போடுவது வழக்கம். அப்படி பூஜை போட்ட ஒரு தருணம்தான் அது.

தேன் நிறத்தில் அடர் நீல சரிகை போட்ட பாவாடை, அடர் நீல ரவிக்கை அதே நிறத்தில் தாவணி அணிந்து அதன் முந்தானையை இழுத்து சொருகியிருந்தாள் அவள்..

மஞ்சள் குங்குமம் வைத்து அருகம்புல்லால் அலங்கரிக்கப்பட்டு சாணியில் பிடிக்கப்பட்ட பிள்ளையாருக்கு தேங்காய் பழங்கள் வைத்து நைவேத்தியம் செய்யப்பட்டிருக்க, அவளுடைய நீண்ட கூந்தல் மண்ணை தொட குனிந்து அவள் கற்பூர ஆரத்தி செய்வதுபோன்ற கண்களுக்குக் கவிதையாகக் காட்சியளிக்கும் அந்த படத்தை தாமு எடுத்தது கூட தெரியாது மங்கைக்கு.

அதற்கும் சிகரம் வைத்ததுபோல, அந்த படத்தில் அவளுடைய கனவுகளும் நிறைந்திருந்தது எழுத்து வடிவில்.

கனவுகள்...

யார் சொன்னார்கள்...

நிமிர்ந்து விண்ணைத் தொட்டால்தான் கனவுகளுக்குப் பெருமையென்று?

என் கனவுகள் வானம் பார்க்காது...

மழையாக மாறி மண்ணை முத்தமிடும் கனவுகள் எனது!

என் கனவின் விதைகள் இந்த மண்ணை பிளந்து முளைத்து வரும்...

தானியங்களான மாறி உலகுக்கே உணவளிக்கும்!

விருட்சங்களாக மாறி விண்ணை முட்டும்...

அதன் ஆணி வேர்கள் மட்டும் அடி ஆழம் சென்று இப்பூமியை இறுக்கிப் பிடிக்கும்!

என் கனவுகள் வானம் சென்று நிலவைத் தொடாது!

நிலத்தடி நீரில் நீந்திக் களிக்கும் எனது கனவுகள்...

என் மண்ணை மாசுபடுத்தாத மகத்துவம் மிக்கவை!

அந்தப் புகைப்படத்தை நெருங்கி அதிலிருந்த அவளது கனவு வரிகளை விரல்களால் வருடியவளின் மனதில் 'தனது கனவுகளுக்கு இத்தனை பெரிய அங்கீகாரமா? அதுவும் தாமோதரனிடமிருந்து!' என்ற கேள்வி எழ அவர்களுடைய கழனியில் இருக்கும் கிணற்றில் நீண்ட நேரம் நீந்திக் களித்து வெளியில் வரும்பொழுது உண்டாவதுபோல் உடல் சில்லிட்டு நடுங்கத் தொடங்கியது நிலமங்கைக்கு.

அந்த நடுக்கத்தைக் குறைக்கவா அல்லது மிகைப்படுத்தவா என்று உணரமுடியாத வண்ணம் பின்னாலிருந்து மென்மையாக அவளை அணைத்தான் தாமோதரன்.

"வெல்கம் பேக் டு அவர் ஸ்வீட் ஹோம்... மிஸஸ் நிலமங்கை தாமோதரன்!" என அவளது செவிக்கு அருகில் கிறக்கமாக ஒலித்த அவனது குரலில் அவளது உடல் இறுக தன்னை விடுவித்துக்கொள்ள அவள் முயலவும், அதில் 'நீண்ட நாட்கள் உன்னை விட்டுப் பிரிந்து துயரப்பட்டுவிட்டேன். இனியும் அது நடக்காது' என ஏற்கனவே மனதுக்குள் வேரூன்றியிருந்த அவனது பிடிவாதம் மேலும் இறுகக் கொஞ்சம் கூட தளராமல் அவனுடைய அணைப்பு மேலும் மேலும் இறுகியது.

*

நினைவுகளில்...

நிலமங்கை கோபத்துடன் சென்றதும், அவளே தன்னை தேடி வருவாள் எனக் காத்திருந்தான் தாமோதரன்.

அது நடக்காமல் போக, இரண்டு நாட்கள் விடுமுறையில் வந்திருந்தவன், அன்று இரவு பெங்களூரு திரும்பவேண்டியிருந்ததால் சிறு ஏமாற்றமும் கோபமும்தான் உண்டானது அவனுக்கு.

'அவ முன்ன மாதிரி இன்னும் சின்ன பொண்ணு இல்ல தாமு! வயசுக்கு தகுந்த மெச்யூரிட்டி அவளுக்கு வந்துடுச்சு போல. அதனாலதான் அவ உன்னை தேடி வரல. நீ இப்படியே ஈகோ பார்த்துட்டு நிக்காம, நேரா போய் அந்த புக்க கொடுத்துட்டு வா. அதுதான் உன் எதிர்காலத்துக்கு நல்லது" என அவனது மனசாட்சி இடித்துரைக்க, மேற்கொண்டு யோசிக்காமல் அவளுடைய வீட்டிற்குச் சென்றான் அவன்.

இரண்டு பெரிய வேப்பமரங்கள், கிணற்றுடன் கூடிய சிறு தோட்டம், இருபது மாடுகளுக்கு மேல் வைத்துப் பராமரிக்கப்படும் தொழுவம், இவற்றுக்கு நடுவில் அமைந்திருக்கும், பூசனி கொடிகளால் மூடிய, கூரை வேய்ந்த வீடுதான் மங்கையும் அவளுடைய தாத்தாவும் இருப்பது.

ஒரு கூடம் அதை ஒட்டிய ஒரு சிறிய அறை மற்றும் சமையலறை மட்டும்தான் அங்கே.

தாமுவின் அம்மா புஷ்பாவுடைய பெரியப்பாவின் மக்கள்தான் வேலுமணி, பூங்கொடி இருவரும். அதனால் சந்தானம் அவனுக்குப் பெரியப்பா முறை என்பதால், வாயிலிலிருந்தே "பெரியப்பா" என தாமு குரல் கொடுக்க, "வா தாமு! எப்படி இருக்க" எனக் கேட்டுக்கொண்டே வெளியில் வந்த சந்தனம், "உட்காருப்பா" எனத் திண்ணையை கான்பிக்க, அவர் உள்ளே அழைக்க மாட்டார் என்பது நன்றாகவே தெரியும் என்பதால், அவர் சுட்டி காண்பித்த இடத்தில் அமர்ந்து, "நல்லா இருக்கேன் பெரியப்பா... மங்க வூட்ல இல்ல" என்று கேட்டான் அவன்.

"அது கழனி வரைக்கும் போயிருக்கு! வர கொஞ்ச நேரம் ஆவும்" என்றவர், "டீ கொதிக்கவெக்கறேன் குடிக்கறியா?" என்று அவனை உபசரிக்கும்வண்ணம் கேட்க, கையில் வைத்திருந்த புத்தகத்தை அவரிடம் நீட்டியவாறு, "பரவாயில்ல பெரியப்பா. இந்த புக்க மங்க கேட்டுதுன்னு வாங்கியாந்தேன். அதாண்ட கொடுத்துருங்க" என்று சொல்லிவிட்டு, "இன்னைக்கு ரவைக்கு ஊருக்கு கிளம்பறேன். அதான் நானே கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன்" என விளக்கம் வேறு கொடுத்தான். 'இந்த பொண்ணு ஏன் இப்படி செய்யுது?' என்கிற எண்ணத்தில் அவருடைய முகம் கடுகடுப்பாக மாறிப்போக, அதை மறைக்க முயன்று, "ரொம்ப சந்தோசம் தாமு!" என்றவர் அதைப் புரட்டி அதன் விலையைப் பார்த்துவிட்டு, வேட்டியில் சுருட்டி வைத்திருந்த பணத்தை எடுத்து எண்ணி அவனிடம் நீட்டினார்.

கொஞ்சம் கடுப்பானாலும் மறுக்க வழியின்றி அதை வாங்கிக்கொண்டவன், "நேரம் ஆச்சு. நான் கிளம்பறேன்" என்று சொல்லிவிட்டு தாமு அங்கிருந்து செல்ல அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் சந்தானம்.

பேத்தி விஷயத்தில் கொஞ்சம் அதிக எச்சரிக்கையாக இருப்பார் அவர். அவளுடைய விருப்பத்திற்கு மாறாகச் சிறு துரும்பு கூட அசையாது அங்கே என்ற நிலையில் அவர் அவளைப் போற்றி பாதுகாக்க, அவளை நன்றாகவே அறிந்துவைத்திருந்தார் அவர். தாமோதரனைப் பற்றியும் அவருக்கு நன்றாகவே தெரியும் என்பதால், இருவரும் இரு வேறு துருவங்கள் என்பதையும் உணர்ந்தவர் ஆதலால் எப்பொழுதுமே நிலமங்கையிடமிருந்து அவனைச் சற்று தள்ளியே நிறுத்துவார் சந்தானம்.

ஆனால் தாமுவின் வீட்டில் நிலையே வேறு.

அந்த ஊரிலேயே அதிக வசதி படைத்த குடும்பம் தாமோதரனுடையது.

சொந்தம் என்று பார்த்தால் ஒன்றுக்குள் ஒன்று என இருந்தாலும், என்னதான் எல்லோருடனும் இயல்பாகப் பழகுவதுபோல தோன்றினாலும் வரலட்சுமிக்கும் சரி அவருடைய மகன் பேரன் இருவருக்கும் சரி 'தான்' என்ற எண்ணம் கொஞ்சம் அதிகமாகவே உண்டுதான்.

இதில் புஷ்பா மட்டுமே விதிவிலக்கு. சூதுவாது தெரியாத வெள்ளந்தி குணம் படைத்தவர் அவர் என்றுதான் சொல்லவேண்டும்.

ராஜேஸ்வரி இறந்த சமயம் மங்கையை முழுவதுமாக தன கைக்குள் வைத்து கவனித்துக்கொண்டவர் அவர்.

அன்று முதல் அவள் அவர்களுக்குள் ஒருத்திதான்.

அவளை தன் மருமகளாக்கிக்கொள்ளும் ஆசை அவர் மனதிலிருக்க, எந்தவித கட்டுப்படும் இல்லாமல் அவர்களுடைய வீட்டில் மங்கை வளையவரும் அளவுக்கு இடங்கொடுத்து மறைமுகமாக அதற்குத் தூபம் போட்டார் அவர் என்றுதான் சொல்லவேண்டும்.

அத்தகைய இடத்தை தாமோதரனுக்கு கொடுக்க சந்தானம் விரும்பவில்லை. சமயத்தில் மங்கையை கண்டிக்கவும் செய்வார் அவர். அதையும் மீறி சில சமயம் இப்படி நடப்பதும் உண்டு.

என்னதான் அணை போட்டுத் தடுத்தாலும் அதை உடைத்துக் கரை மீறத்துடிக்கும் வேகமும் பிடிவாதமும் கொண்டவன் தாமோதரன் என்பதை அந்த நேரத்தில் உணரவில்லை அவர் பாவம்.

எதுவாக இருந்தாலும் முடிவெடுக்க வேண்டிய இடத்திலிருப்பவள் நிலமங்கைதான் என்ற உண்மையை இருவருமே உணராமல் போனதுதான் பிரச்சனை அங்கே.

You cannot copy content