You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Forum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: OodalOodal-1

Oodal-1

Quote

ஊடல்

1

‘குறையொன்றும் இல்லை

மறைமூர்த்தி கண்ணா

குறையொன்றும் இல்லை கண்ணா… ஆஆ

குறையொன்றும் இல்லை கோவிந்தா...’

சென்னை மாநகர சாலைகளின் பரபரப்பைக் கொஞ்சமும் பிரதிபலிக்காத அந்த சிறியளவிலான சந்து. அதற்குள் வசிக்கும் பெருமாள் சன்னதியில் அந்த புரட்டாசி மாத சனிக்கிழமை காரணமாகப் பக்தி கமழ கமழ, அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. சிறியதாக இருப்பினும் நேர்த்தியாகவும் அழகாகவும் கட்டமைக்கப்பட்டிருந்தது அந்தக் கோயில்!

பக்தியின் சாரம் அந்த தீட்சண்யமான குரலிலா அல்லது அவற்றின் வரிகளிலா என்று பிரித்தறிய முடியா வண்ணம் தெய்வீக மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது.

பக்தி என்பது இறைவனைத் தரிசிப்பதில் மட்டுமா இருக்கிறது. மனதார அந்த உணர்வை உள்வாங்கி அனுபவிப்பதிலும் அல்லவா இருக்கிறது.

அந்த உணர்வுபூர்வமான நிலையை அங்கே வந்து போகும் யாரிடமுமே காண முடியவில்லை. பாதுகையைக் கழற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தவர்கள் அவசர அவசரமாக கருவறைக்குள் பெருமாளைத் தரிசித்து தீபாரதனை முடித்துவிட்டு, அதே அவசரத்தோடு கோயிலைச் சுற்றி வந்துவிட்டு, பின் தயிர் சாதமோ புளி சாதமோ அன்றைய பிரசாதத்தை முந்திக் கொண்டு வாங்கி உண்டுவிட்டு, அரைகுறையாக விழுந்து கும்பிட்டு தங்கள் கடமை முடிந்த திருப்தியோடு வெளியே சென்று பாதுகையை அணிந்துக்கொண்டு புறப்பட்டுவிட்டனர்.

‘நானும் புரட்டாசி சனிக்கிழமைக் கோயிலுக்கு வந்துவிட்டேன்!’ என்று பெருமாளுக்கு அட்டென்டன்ஸ் போட்டுவிட்டு சென்ற யாரிடமுமே எம். எஸ். சுப்புலட்சுமியின் அந்த பக்தி நயம் கமழந்த ‘குறையொன்றும் இல்லை’ பாடல் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஏனெனில் அவர்கள் யார் வாழ்கையிலும் நிறைவு என்பதே இல்லை. திருப்தியின்மையோடு வாழும் வாழ்கையில் ரசனை என்பது ஒருநாளும் இருக்காது. நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்திற்கு இவற்றையெல்லாம் விளக்கவும் முடியாது.

கொஞ்சமும் மாறாமல் அந்தக் கூட்டத்தில் ஒருத்திதான் நானுமே!

என் பெயர் காயத்ரி. என் வயது…

முந்தைய வருடம் கேட்டிருந்தால் நிச்சயம் உரக்க சொல்லியிருப்பேன். ஆனால் இப்போது கேட்டால் இருப்பத்தி ஒன்பது முடிந்து முப்பது என்று சொல்வதற்கு கொஞ்சமே கொஞ்சம் சங்கடமாக இருந்தது.

முப்பது என்றாலே இயல்பாகவே பெண்களுக்கு இளமை காலம் முடிந்து முதுமைத் தொடங்கிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். எனக்காக என்ற வாழ்க்கை முடிந்து பிறருக்காக என்று வாழத் துவங்கிவிடுவார்கள்.

ஆனால் ஆண்களுக்கு முப்பதுதான் இளமை துள்ளி விளையாடும். அப்போதுதான் திருமண வயதே அவர்களுக்குத் தொடங்கும். இந்த மாதிரியான வித்தியாசங்களுக்கு யார் காரணம் என்று ஆராயும் மனநிலையில் நான் இல்லை.

வயது முப்பதைத் தொட்டுவிட்டது. ஆனால் இதுநாள் வரை அப்படியென்ன வாழ்க்கையை நான் வாழ்ந்துவிட்டேன். இனிமேல் என்ன வாழ்ந்து எதை ஆண்டு அனுபவிக்கப் போகிறேன். இதற்குள்ளாகவே என்னை விரக்தி நிலை ஆட்கொண்டுவிட்டது.

கோயில் மணியோசை நில்லாமல் சுழலும் என் எண்ணங்களை தற்காலிகமாக நிறுத்திவிட, அர்ச்சகர் பெருமாளுக்கு தீபாரதனையைக் காட்டியதைக் கவனிக்கலானேன்.

கண்களை மூடி மனமுருகி வேண்டிக்கொண்டேன். அந்த பெருமாளாவது என் வேண்டுதலுக்கு செவி  சாய்ப்பார் என்ற நம்பிக்கையோடு! என்னுடைய கடைசி நம்பிக்கை இப்போது கடவுள் மட்டும்தான்.

இறைவனை மட்டுமே கோவிலில் நினைக்க வேண்டும் என்ற தெய்வ சித்தாந்தங்கள் எல்லாம் என் மூளைக்கு எட்டுவதில்லை. நிற்காமல் இந்த மூளை எதையாவது யோசித்துக் கொண்டே இருக்கிறது.

என் சிந்தனைகளை எங்கோ சிதறவிட்டுக் கொண்டே இறை வழிப்பாட்டை முடித்து பிரசாதம் தந்துக் கொண்டிருந்த வரிசையில் நின்றேன்.

பிரசாதம் தீர்ந்துவிடும் அறிகுறிகள் அந்தப் பாத்திரத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கும் சத்தத்தின் மூலம் புரிந்தது.

‘கோயில் பிரசாதம் வாங்க கூட நமக்குக் கொடுப்பனையில்லை’ என்ற சலிப்போடு அந்த சிறு கோயில் மண்டபத்தில் வந்தமர்ந்தேன். மனம் லேசாக ஒருநிலைப்பட்டது.

இந்தளவு சாமி கும்பிடுபவள் இல்லை நான். ஆனால் சமீப காலமாகவே அடிக்கடி கோவிலுக்கு வர வேண்டுமென்று தோன்றுகிறது. அதுவும் கொஞ்ச நாட்களாகவே பக்தி முற்றிப்போய்விட்டது. எல்லாம் வாழ்க்கை எனக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம்தான், இப்படித் தலைகீழாக என்னைப் புரட்டிபோட்டது.

உஷ்ணமாக ஒரு நீண்டப் பெருமூச்சை வெளியேற்றி, நான் எழுந்து கொள்ள எத்தனித்த போது, “இந்தா ம்மா வாங்கிக்கோ” என்று ஒரு பெரியவர் என் முன்னே வந்து பேசினார்.

அவர் வேறு யாருமில்லை. பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்த நபர்தான். அவர் கைகளில் ஒரு தொண்ணைப் பிரசாதம். அந்தக் கடைசி சுரண்டலை எனக்காக வேண்டி எடுத்து வந்துக் கொடுத்தார் போலும்.

மனதிற்கு சந்தோஷமாக இருந்தது. அதனைப் பெற்று கொண்டு, “தேங்க்ஸ்” என்று முக மலர்ந்தேன். அவரும் தீட்சண்யமாகப் புன்னகைத்தார்.

வியப்பாக இருந்தது. எனக்கு கூட இப்படியெல்லாம் நல்லது நடக்குமா என்ன?

என் வாழ்க்கையின் மீது உண்டான ஒருவித சலிப்பின் எதிரொலிதான் என் எதிர்மறையான எண்ணங்கள்!

நான் ஒரு துரதிஷ்டசாலி. ஒரு நாளில் ஒரு முறையாவது நான் இவ்வாறு யோசிக்காவிடில் அது ஆச்சரியம்தான். இப்படி யோசித்து யோசித்தே அது எனக்கு வழமையாகிவிட்டது.

நான் பிரசாதத்தை உண்டு முடித்துவிட்டு அப்படியே சில நொடிகள் கண்கள் மூடி அமர்ந்துக் கொண்டேன். கொஞ்சமே கொஞ்சம் மனம் நிம்மதியுற்றால் போதுமென்று தோன்றியது.

அப்போது அந்த கோயில் ஸ்பீகரில் வேறு ஒரு பாடல் ஒலிக்கத் துவங்கியது.

அந்தப் பாடலைக் கேட்ட நொடிக்கு கத்தியின்றி ரத்தமின்றி யாரோ என் இதயத்தைத் துண்டுத் துண்டாகக் கூறுப் போட்டதுப் போன்று வலித்தது.

“என்ன தவம் செய்தனை யசோதா

எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க…”

அமைதியை தேடி கோயிலுக்கு வந்தேன். ஆனால் இந்தப் பாடலைக் கேட்ட பின் என் மிச்சம் மீதி நிம்மதியும் அமைதியும் வடிந்து போனது. அந்தப் பாடலைக் கேட்கக் கேட்க தலையில் யாரோ பாறாங்கல் வைத்தது போன்ற அழுத்தமான உணர்வு.

‘அம்மா’ இந்த வார்த்தையில் அப்படியென்னதான் சக்தி!

எல்லோருக்கும் இன்பத்தை நல்கும் அந்த வார்த்தை என்னை மட்டும் அணு அணுவாக கூறுப் போட்டுக் கொண்டிருந்தது.

வேகமாக கோயிலிலிருந்து வெளியேறி என் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினேன். அங்கிருந்து சிறிது தொலைவில்தான் என் வீடு!

அந்தப் பாடல் வரிகள் என் செவிகளை விட்டு நீங்கும் வரை வேகமெடுத்து நடந்தேன். என்னவோ அந்தப் பாடலும் அந்த வார்த்தையும் என்னைத் துரத்திக் கொண்டே வந்தது போன்ற ஒரு உணர்வு!

வேகமாக என் வீட்டு வாசலை அடைந்தபோது அந்தப் பாடல் கேட்பது நின்றிருந்தது. ஆனால் அதற்குள்ளாக வேறொரு பிரச்சனை எனக்காக வாசலிலேயே காத்திருந்தது.

ஐயோ! கிரிஜா மாமி. அவரிடம் நான் சிக்கிவிடக் கூடாதே என்று நான் யோசித்து உள்ளே செல்ல எத்தனிக்க,

“ஏ! காயு” என்று அவர் அழைத்தார்.

‘போச்சு! செத்தேன்’ கடுப்போடு திரும்பினாலும் முகத்தைச் சிரித்த மாதிரி முயன்று மாற்றிக் கொண்டு அவர் புறம் திரும்பி, “சொல்லுங்க ஆன்டி” என்க,

“காலையில ஆகாரம் சாப்பிடாம கோயிலுக்கு போயிட்டு வான்னுதானே நான் உன்னாண்ட சொன்னேன்” என்றுக் கேட்டார்.

‘ரொம்ப முக்கியம்’ என் முகம் அஷ்டகோணலாக மாறியது.

இருந்தும் என் எண்ணத்தைக் காட்டி கொள்ளாமல், “இல்ல ஆன்டி, காலையில கொஞ்சம் வேலை இருந்துச்சு… அதான்” என்று சமாளித்தேன்.

ஆனால் அவர் மனம் அதை ஏற்கவில்லை.

“அப்படியெல்லாம் சொல்ல கூடாது… பூஜைன்னா நேரங்காலம் பார்த்துதான் செய்யணும்… அப்பத்தான் நம்ம நினைச்சது நடக்கும்” என்று அவர் பாட்டுக்கு உபதேச மழையை பொழிய ஆரம்பிக்க,

‘இப்போ நான் இவங்களை அட்வைஸ் கேட்டேனா?!’ எனக்கு எரிச்சல் மூண்டது. அந்த நேரம் பார்த்து, “கிரிஜா” என்ற அழைப்பு குரல்.

நல்ல வேளையாக மாமா உள்ளே இருந்து அழைத்துவிட்டார்.

இல்லையென்றால் மாமி இங்கேயே நின்று என்னிடம் இப்போது ஒரு கதாகாலட்சேபமே நடத்தியிருப்பார். அவர் தன் உபதேசத்தை அவசரமாக முடித்துவிட, என் மனதிற்கு அந்தளவில் நிம்மதியாக இருந்தது.

“மிச்சத்தை நாளைக்கு வந்து சொல்றேன்டி ம்மா” என்று சொல்லி கொண்டே அவர் உள்ளே செல்ல, நாளை இவர் கண்களில் நான் சிக்கினால்தானே!

தப்பிப் பிழைத்தால் போதுமென வேகமாக என் குடியிருப்பிற்குள் நுழைந்தேன் .

மாடி வீடு. நான் மாடியில்தான் வசிக்கிறேன். தரை தளத்தில் இரண்டு போர்ஷன்களும் சற்றே விசாலமாக இருக்கும். கீழே இருக்கும் ஒரு போர்ஷனில் வீட்டின் உரிமையாளர் வசிக்கிறார்.

மாடியிலிருந்த இரண்டு போர்ஷன்கள். சிறியதாக இருந்தாலும் முன்புறம் பெரிய பால்கனி இருந்தது. அங்கே அமர்ந்துக் கொண்டு வானத்தைப் பார்ப்பதே தனிசுகம்தான். வசதியாக அதேநேரம் காற்றோட்டமாக!

அதுவும் என் வீட்டுப் பக்கத்திலிருந்த போர்ஷன் ஆறு மாதமாக காலியாக இருந்ததால் நான் தனிக்காட்டு ராஜாவாக… இல்லை ராணியாக அந்த முழு பால்கனியையும் எனக்கே எனக்கு என்று அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் இப்போது அந்த சந்தோஷத்திலும் யாரோ கல்லைப் போட வந்துவிட்டார்கள் போலும்.

நான் கோயில் போய்விட்டு திரும்பவதற்குள் பக்கத்து போர்ஷன் கதவு திறந்திருந்தது. யாராக இருக்கும்?

இந்தக் கேள்வியோடுப் படிக்கட்டு ஏறி லேசாக அந்த வீட்டிற்குள் எட்டிப் பார்க்க ஆள் நடமாட்டம் வேறு தெரிந்தது. யாரோ சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்கள்.

அதற்கு மேல் அங்கே நிற்க கூடாது என்று என் வீட்டின் பூட்டைத் திறந்து உள்ளே வந்து கதவை அடைத்துக் கொண்டேன்.

என்னவோ மனம் சஞ்சலப்பட்டது.

நான் அந்த வீட்டிற்குக் குடிவந்து இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. ஆனால் யாருமே நிரந்தரமாகப் பக்கத்து போர்ஷனில் வந்து தங்கியது இல்லை. அப்படி தங்கினாலும் எனக்குப் பிடிப்பதேயில்லை.

காரணம் அப்படி யாருமே இல்லாமல் இருந்தால்தானே நிம்மதியாக பால்கனியில் அமர்ந்திருக்க முடியும். மனவேதனை தீர அழ முடியும். ஆனால் இனி அதெல்லாம் முடியாதே. உள்ளத்தில் வெறுப்பும் ஆற்றாமையும் மண்டியது.

இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு பிரச்சனையாகப் புதிதாக குடிவருபவர்கள் என்னிடம் அறிமுகம் செய்துக் கொள்ள வருவார்கள்.

பேச்சு வாக்கில் என்னைப் பற்றிக் கேட்பார்கள். திருமணமாகி ஐந்து வருடம் என்று தெரிந்தால் நிச்சயம் எத்தனை குழந்தைகள் என்று அடுத்தக் கேள்வி அம்பாக பாயும். அதற்கு நான் என்ன பதில் சொல்வேன்.

நான்  சொல்லும் பதிலைக் கேட்டு அவர்கள் முகத்தில் வரும் அந்த பரிதாப உணர்வை எண்ணும் போதே என் உள்ளமும் உடலும் நெருப்பிலிட்டது போல் தகிக்குமே!

திருமணமாகாமல் இருப்பதையும் குழந்தைப் பேறு இல்லாமல் இருப்பதையும் இந்த சமூகம் ஒரு பெரிய குற்றம் குறையாகவே பார்க்கிறது. அதை அப்படியே பார்த்துப் பழகிவிட்டது.

அது அவரவர்களின் தனிப்பட்ட விஷயம் என்ற நாகரிகத்தோடு மேலே எதுவும் கேட்காமல் விட்டுவிடும் மனிதர்கள் இங்கே மிக மிக குறைவு. நல்லது செய்வதாக எண்ணி அறிவுரைகள் என்ற பெயரில் கிரிஜா மாமி போல் எதிரே நிற்பவரின் வேதனையையும் வலியையும் குத்திக் கிழித்து ரணமாக்கி பார்க்கும் கூட்டமே இங்கு பெரும்பாலானோர்.

அப்படி அதிகமாக ரணப்பட்டவள் நான்.

தூரத்தில் ஏதோ பாட்டு சத்தம். அது என் அலைபேசியின் ரிங்க்டோன்தான். கோயிலுக்கு போகும் போது மறந்து வீட்டிலேயே வைத்துவிட்டேன் போலும். ஒரு வேளை அவர்தான் அழைத்திருப்பாரோ?

எத்தனை முறை அழைத்தாரோ?

இந்த எண்ணங்களோடு வீட்டைச் சுற்றி என் கைபேசியை அலசி ஆராய்ந்துக் கொண்டிருந்தேன். அழைப்பு மணியின் சத்தமே இப்போது கேட்கவில்லை.

‘ப்ச்! இப்போ எங்கேன்னு தேடுவேன்… இருக்கிற பிரச்சனையெல்லாம் போதாதுன்னு இது வேற… வர கோபத்துக்கு போனும் வேண்டாம் ஒன்னும் வேண்டாமுன்னு தலையைச் சுத்தித் தூக்கிப் போட்டிருலாமான்னு இருக்கேன்’

பத்து நிமிட தேடலுக்கு பின்…

‘அப்பாடா கிடைச்சுடுச்சு… மதியம் கேம் விளையாடிட்டு அப்படியே சோபாவிலேயே வைச்சுட்டேன் போல… சார்ஜ் வேற கம்மியா இருக்கு… யார் கால் பண்ணி இருப்பா’

நான் எடுக்கப்படாத அழைப்புகளின் பட்டியலை ஆராய்ந்தேன். இரண்டு முறை அம்மாவின் அழைப்பு. கடைசியாக மூன்று முறை கௌதமின் அழைப்பு இருந்தது.

‘எதுக்கு இத்தனைத் தடவை கால் பண்ணி இருப்பாரு’ யோசித்துக் கொண்டே அனிச்சைச் செயலாக என் கை விரல்கள் கெளதமிற்கு அழைத்துவிட்டன.

‘ச்சே! நான் அவர்கிட்ட சண்டைப் போட்டிருக்கேன் இல்ல… பேசக் கூடாது’ அந்த எண்ணம் தோன்றிய மாத்திரத்தில் என் விரல்கள் அழைப்பைத் துண்டிக்கச் செல்ல எதிர்புறத்தில் கெளதம் அழைப்பை ஏற்றிருந்தார்.

“கோபமா இருந்தா… போனைக் கூட எடுக்க மாட்டீயா? அப்படி என்னடி வீம்பு உனக்கு”

‘உஹும்… பேசக் கூடாது… பேசக் கூடாது… ஒரு வார்த்தை கூடப் பேசக் கூடாது’ பற்களைக் கடித்துக் கொண்டு மௌனம் காத்தேன்.

“காயு… லைனில இருக்கியா”

‘நான் லைனில இருந்தா என்ன… இல்லன்னா என்னவாம் இவருக்கு… நான் பேச மாட்டேன்’

“ஏன் காயு? இப்படி பண்ற… உன்னால எனக்கு ஆபீஸ்லயும் வேலை செய்ய முடியல… டென்ஷனாகுது”

‘ஆகட்டும்’

“ஏ பேசுடி” கொஞ்சமாக இறங்கி வந்தார்.

‘மாட்டேன்’

‘காயு ப்ளீஸ்… பேசு’ தணிந்துக் கேட்டாலும் அவர் பற்களைக் கடித்துக் கொண்டுக் கடுப்பாகக் கேட்பது எனக்குப் புரியாதா என்ன?

அப்போதும் நான் இறங்கிவர விரும்பவில்லை.

“அப்போ பேச மாட்ட… அப்புறம் என்ன இதுக்குடி எனக்கு கால் பண்ண” என்று சீற்றத்தோடு மேலே எழும்பியது அவர் குரல். அந்த கோபம் எனக்குள் நடுக்கத்தை உருவாக்க, அப்போதும் நான் என் பிடிவாதத்தை விட்டு இறங்கிவர விழையவில்லை.

‘நானா கால் பண்ணேன்… இவர்தானே கால் பண்ணாரு… நான் எதுக்குப் பேசணும்’ ஒரு வார்த்தைக் கூடப் பேசவே கூடாது என்று வைராக்கியமாக இருந்தேன்.

சில நொடிகள் மௌனத்திற்கு பின்…

“சரிடி… நீ பேசாதே… நான் சொல்ல வர விஷயத்தையாவது கேளு… இன்னைக்கு நிறைய வேலை இருக்கு… முடிஞ்சு வீட்டுக்கு வர காலையில ஆகிடும்… எனக்காக வெய்ட் பண்ணாதே… படுத்துக்கோ”

‘ஆமா இதைத் தவிர புதுசா எண்ணத்தை சொல்லிட போறாரு… டைலியும் பதினோரு மணிக்கு வர போறவரு இன்னைக்கு காலையில வருவாரு… பெருசா என்ன வித்தியாசம்’

எனக்கு சலிப்புத் தட்டியது. என்னவோ இதுதான் முதல் முறை அவர் தாமதமாக வருவது போல பேசியது எனக்கு ஒரு அலட்சிய சிரிப்பை வரவழைத்தது.

“ஏன் டி நான் சொன்னதெல்லாம் கேட்டு ஒரு ‘உம்’ கூட சொல்ல மாட்டியா”

‘மாட்டேன்’

“இருந்தாலும் உனக்கு இவ்வளவு நெஞ்சழுத்தம் ஆகாதுடி” அவர் கோபமாகச் சொல்கிறார் என்பது புரிந்தது. இருந்தும் நான் பேச போவதில்லை.

அப்படி எங்கள் இருவருக்கும் பேச புதிதாக என்ன இருக்கிறது.

“சரி… நான் ஃபோனை வைச்சிடுறேன்”

இருபக்கமும் மௌனம் மட்டுமே. சில நொடிகள் கழித்து கெளதம் அழைப்பைத் துண்டித்துவிட்ட சத்தம் கேட்கவும் நானும் என் பேசியை எடுத்து ஓரமாக வைத்துவிட்டேன்.

என்னவோ இவ்வளவு நிமிடங்கள் எனக்குள் இருந்த பிடிவாதம் தளர்ந்து போனது.

‘பேசியிருக்கலாமோ… நாம செஞ்சது தப்போ… எதுக்கு எனக்கு இவ்வளவு பிடிவாதம்’

என் மனம் அல்லாடியது.

“சை! ஒரு உம்னு மட்டுமாச்சும் சொல்லி இருக்கலாம்… அப்படி என்ன பெரிய கோபம்?”

என்னை நானே கடிந்துக் கொண்டேன்.

“இப்போ பேசுனா மட்டும் என்ன மாறிட போகுது”

எனக்குள் இருந்த குற்றவுணர்வை ஓரமாக வீசினேன். எனக்கான நியாயம் அது எனக்கு மட்டுமே புரியும்.

ஆனால் நான் செய்ததில் ஒரு விஷயம் நிச்சயம் தவறுதான். அவரிடம் பேசக் கூடாது என்று எண்ணியிருந்தால், அவர் குரலை கேட்டதுமே நான் அழைப்பைத் துண்டித்திருக்க வேண்டுமில்லையா? ஆனால் நான் செய்தது என்ன? அவரைத் தனியாகக் கெஞ்சவிட்டு அதனை உள்ளுர ரசித்துக் கொண்டேன்.

நான் இப்போது கௌதமிடம் நடந்துக் கொண்டது பக்கா சாடிஸம்!

என்ன நியாயம் கற்பித்தாலும் அதைச் சரியென்று ஏற்க முடியாது. என்ன செய்வது? என் மூளை இந்த மாதிரியான அற்பமான சந்தோஷங்களுக்குப் பழகி போய்விட்டது.

இந்த வீட்டின் சுவருகளையே பார்த்துக் கொண்டிருக்கும் எனக்கு என்ன மாதிரியான புதுமையான புரட்சியான சிந்தனைகள் வந்துவிட போகிறது. இந்த இரண்டு வருடமாக கெளதம் மட்டுமே என் உலகம். ஆனால் அவருக்கு அப்படியில்லை. அவர் வேலை, அலுவலுக நண்பர்கள் என்று நிறைய இருக்கிறது.

அவர் வேதனைகளுக்கான வடிகால் அங்கே கிடைத்துவிடும். ஆனால் எனக்கு… என்னுடைய எல்லா உணர்வுகளுமே அவரை சார்ந்து மட்டுமே இருக்கிறது. அப்படி இருக்கும் போது கௌதமிடம் இப்படிச் சண்டை போடுவது கூட ஒரு பொழுதுபோக்காக மாறிபோனது. ஆனால் இம்முறை எங்கள் இருவருக்கும் வந்த சண்டை தம் எல்லைகளைக் கடந்துவிட்டது.

share your comments by clicking on reply button

Uploaded files:
  • an.jpg
bhagyasivakumar, srinavee and 4 other users have reacted to this post.
bhagyasivakumarsrinaveepooShakthiMarli malkhanRathi
Quote

Nice update next ud eppo Varum

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from srinavee on January 18, 2020, 11:45 PM

Nice update next ud eppo Varum

thanks sri... சீக்கிரமே அடுத்த பதிவு வரும்

srinavee has reacted to this post.
srinavee
Quote

விரக்தியில் இருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையும் அவளின் உள்ளும் மிக சரியாய் வந்து இருக்கு தொடர வாழ்த்துக்கள் உங்கள் தளத்திற்கும்

monisha and Rathi have reacted to this post.
monishaRathi
Quote
Quote from poo on January 19, 2020, 11:51 PM

விரக்தியில் இருக்கும் ஒரு பெண்ணின் மனநிலையும் அவளின் உள்ளும் மிக சரியாய் வந்து இருக்கு தொடர வாழ்த்துக்கள் உங்கள் தளத்திற்கும்

Thanks malar

Quote

Super ma

You cannot copy content