You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Forum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: OodalOodal-4

Oodal-4

Quote

4

நரகமாக கழிந்தது அந்த இரவு.

நிற்காமல் சுழன்றுக் கொண்டிருக்கும் கடிகார முள் போல என் மன எண்ணங்களும் நில்லாமல் சுழன்றுக் கொண்டேயிருந்தன.

இத்தனை மணி நேரமாக நான் முகப்பறையில்தான்  அமர்ந்திருந்தேன். அவராக என்னைத் தேடிவந்து பேசுவார் என்று.

மணி மூன்றாகிவிட்டது. கெளதம் எப்போதோ உறங்கிவிட்டார். ஆனால் எனக்கோ ஒரு பொட்டுத் தூக்கம் கூட வரவில்லை.

ஆண்களால் மட்டும் எப்படி முடிகிறது. எத்தகைய பிரச்சனை இருந்தாலும் படுத்தவுடனே உறங்கிவிட!

பெரும்பாலும் எந்த ஒரு விஷயமும் அவர்களின்  தூக்கத்தைப் பாதிப்பதே இல்லை. பெண்கள் மட்டும்தான் ஏதாவது ஒன்றைப் பற்றி யோசித்து தூக்கத்தைக் கெடுத்து கொள்வது!

நூல் கண்டுகளில் ஏற்படும் சிக்கல் போல பெண்கள் தங்கள் உறவுகளையும் உணர்வுகளையும் சிக்கலாக்கிக் கொள்கின்றனர். ஆனால் ஆண்கள் அப்படி இல்லை. எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும் அதைப்பற்றி யோசிக்கிறார்களே ஒழிய அதனை அவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளோடுத் தொடர்புப்படுத்தி சதாசர்வ காலம் எங்களைப் போல் கவலையுறுவதில்லை.

அது அப்படிதான் என்று தெரிந்தும் கெளதமாக எழுந்து வந்து என்னை சமாதானம் செய்ய வேண்டுமென்று எதிர்பார்த்த காத்திருக்கும் என் அறிவீனத்தை எண்ணி எனக்கே சிரிப்பு வந்தது.

இருப்பினும் நானாக அவரிடம் இறங்கி போக முடியாது. அவர் பேசியதுதான் தவறு என்று நான் உறுதியாக நம்பினேன்.

அந்த வார்த்தை என்னைப் பெரிதாகக் காயப்படுத்தும் என்று தெரிந்தும் கூட இரண்டாவது முறையாக அவர் அப்படி சொல்லியிருக்கிறார் எனில் அதற்கு காரணம் ஆணென்ற கர்வம்தானே. எனக்கு உள்ளுர பற்றிக் கொண்டு எரிந்தது.

அன்று நடந்த பிரச்சனையில் கூட நான் என்ன அப்படித் தவறாக சொல்லிவிட்டேன்.

என் உடல் சார்ந்த விஷயங்களுக்கான முடிவை கூட  எனக்கு எடுக்கும் சுதந்திரமில்லையா?

“என்னால முடியாது… நான் இனிமே எந்த டாக்டர்கிட்டையும் போகறதா இல்ல… ட்ரீட்மண்டும் பண்ணிக்கிறதா இல்ல?” என்று சொன்னது என்ன, அத்தனை பெரிய குற்றமா? அதற்குபோய் என் மாமியார் வானத்திற்கும் பூமிக்கும் குதிப்பானேன்.

எல்லோரும் என்னை இந்த விஷயத்தில் காட்டாயபடுத்தும் போது, எனக்கு அதை செய்யவே கூடாது என்ற பிடிவாதமே அதிகரித்தது.

“அப்படி என்ன பத்து பன்னிரெண்டு வருஷமா உன் பொண்டாட்டி ட்ரீட்மன்ட் பார்த்துட்டா… அதுக்குள்ள இப்படி சலிச்சுக்கிறா” என்று குத்தலாக தன் மகனிடம் தெரிவித்தார். அதோடு நிறுத்தினாரா?

“குழந்தை வேணும்னு அவளுக்கு எண்ணமே இல்லடா… அதனாலதான் உன் பொண்டாட்டி வயிறு இன்னும் விளங்கவே இல்ல” என்றார்.

என்ன மாதிரியான வார்த்தைகள் அவை. விஷம் தடவிய அம்பு போல என் உயரின் அடி ஆழம் வரை சென்று தாக்கின அந்த வார்த்தைகள்.

அங்கே கெளதம் உட்பட எனக்காக பேசவும் என்னை புரிந்துக் கொள்ளவும் யாருமே இல்லை.

அதெப்படி? ஆசா பாசம் வலி கோபம் போன்ற உணர்வுகளுக்கு அவர்கள் மட்டுமே உரிமை பத்திரம் வாங்கியவர்கள் போல பேசுகிறார்கள். எனக்கு அதெல்லாம் இல்லையா என்ன?

குழந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையும் கனவும் எனக்குள்ளும் அபிரிமிதமாக இருந்தது.

என் அடிவயிற்றில் ஒவ்வொரு முறையும் ஹார்மோன் ஊசிகள் போட்டு கொள்ளும் போது உண்டாகும் உயிர் போகும் வலியை நான் தாங்கி கொண்டதற்குப் பின்னணியில் எனக்குள் ஓர் உயிர் ஜனிக்காதா என்ற ஆசையும் தவிப்பும் இருந்தது யாருக்கு தெரியும்?

இல்லைத் தொடர்ந்து ஊசிகள் போட்டு போட்டு என் உணர்வுகள் மறுத்து போனதையாவது அவர்கள் அறிவார்களா?

இல்லை மறுத்து போன அந்த வலிகளுக்கெல்லாம் சேர்த்து பெரிய வலியாக ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் என் எதிர்ப்பார்ப்பை கூறு போடுமே! அந்த சமயங்களில் எனக்குள்ளாகவே நான் கதறி கதறி அழுதிருக்கிறேனே. அதாவது அவர்களுக்கு தெரியுமா?

ரொம்பவும் சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். எனக்கு குழந்தைப் பெற்றுக்கொள்ள ஆசையே இல்லையென்று!

என்னால் அவர்கள் பேசுவதைத் தாங்கி கொள்ளவே முடியவில்லை. என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்று விரக்திதான் உண்டானது.

ஆனால் அப்போதுகூட கெளதம் தன் அம்மாவை எதிர்த்து ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. என் மாமியாரின் வார்த்தைத் தாக்குதலை விட அவரின் மௌனமே என்னை ஆழமாகக் காயப்படுத்தியது.

அது மட்டுமல்லாது அவரின் அம்மாவிற்கு ஆதரவாக என்னிடமே பரிந்து பேசினார்.

“அம்மா சொல்ற டாக்டரை ஒரே ஒரு தடவை பார்த்துட்டு வந்தாதான் என்ன காயு?”

என் மாமியார் வேகமாகப் பாய்ச்சிய அம்பை இவர் கொஞ்சம் மெதுவாகப் பாய்ச்சினார். வார்த்தையில்தான் வித்தியாசமே ஒழிய வலியில் இல்லை.

“முடியாது… முடியவே முடியாது… நான் முதல சொன்னதுதான்… இனிமே நான் எந்த ட்ரீட்மண்டும் பண்ணிக்கமாட்டேன்” என்று என் தீர்க்கமான பதிலிற்கு கெளதமால் எதுவும் பேச முடியவில்லை.

ஆனால் என் மாமியார் வெகுசாமர்த்தியமாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். மகனிடம் அழுது தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ள பார்த்தார்.

“நீதானே டா எனக்கு ஒரே ஆம்பள புள்ளை… உன் மூலமா ஒரு பேரனோ பேத்தியோ பார்க்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா?” என்றுத் தொடங்கியவர்,

“நான் அப்பவே இந்தப் பொண்ணு ஜாதகத்துல பிரச்சனை இருக்கு… வேண்டாம்னு சொன்னேன்… நீதான் கேட்கல” என்று பலவிதமாக தன் கோபத்தைக் கொட்டித் தீர்த்தார்.

என்றோ நடந்த ஒரு விஷயத்தை தங்கள் சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் மாற்றிக் கொள்ளும் வல்லமை மாமியார்களுக்கே உரித்தான தனித்திறமை போலும். எனக்கு இதையெல்லாம் பல முறைக் கேட்டுக் கேட்டு அலுத்துப் போனது.

அதற்கு மேல் என் வார்த்தைகள் அங்கே எடுப்படாது என்று புரிந்துப் போனது.

கெளதம் முழுக்க முழுக்க தன் அம்மாவின் வாரத்தைகள் சரியென்று வாதாடத் தொடங்கினார். நானும் விட்டுக் கொடுக்காமல் எதிர்வாதம் புரிந்தேன்.

“நாளைக்கோ இன்னைக்கோ சாக போற என்னால உங்க ரெண்டு பேருக்கும் சண்டை வேண்டாம் கெளதம்” என்று மிக சாமர்த்தியமாக ஒரு பலமான காயை எனக்கு எதிராக நகர்த்தி வைத்தார்.

என் மாமியார் தான் நினைத்ததைக் கிட்டத்தட்ட சாதித்துவிட்டாகிவிட்டது. ஆனால் அதோடு அவர் நாடகத்தை நிறுத்திக் கொள்ளவில்லை.

“நான் செத்தா இதுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கும்” இது எல்லா மாமியார்களும் கையாளும் கடைசி பிரமாஸ்த்திரம். அதுவும் வெற்றிகரமாக தன் இலக்கைத் தாக்கியது.

“அப்படியெல்லாம் பேசாதீங்க ம்மா” என்று கெளதம் உருகி மருகி கண்ணீர் வடிக்க, என்னுடைய வாதங்கள் யாவும் அங்கே அடிப்பட்டுப் போயின.

“நீ அம்மா சொன்ன டாக்டரைப் பார்க்கப் போறியா இல்லையா?” என்று கெளதம் ஒரு முடிவோடு கேட்க நான் அப்போதும் முடியாது என்று மறுத்தான்.

பிரச்சனை உச்ச நிலையை எட்டியது.

“அப்படின்னா நான் டிவோர்ஸ் நோட்டிஸ் அனுப்புறேன்… அதுல கையெழுத்து போடு” என்று கெளதம் சொன்ன நொடி என் இதயம் சுக்குநூறாக உடைந்து போனது.

ஆனால் அது அப்போது வெறும் எமோஷனல் ப்ளேக்மெயில் என்றுதான் எண்ணியிருந்தேன். அவரால் மனதார அப்படியெல்லாம் என்னிடம் சொல்ல முடியாது என்று நினைத்தேன். அதெல்லாம் இந்த நிமிடம் பொய்யாகிப் போனது.

அவர் மனதில் என்னை விவாகரத்து செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருப்பதால்தான் அப்படித் திரும்பத் திரும்பச் சொல்கிறார். இவ்வளவுக்கானப் பிறகும் எங்களின் இந்த உறவைக் கட்டிக் காப்பாற்றத்தான் வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

அவருக்கு அதுதான் விருப்பமென்றால் அப்படியே செய்யட்டும். நான் இனி இங்கே இருக்கமாட்டேன்.

அதுவுமில்லாது பக்கத்து வீட்டிலேயே அவனை வேறு வைத்துக் கொண்டு இந்த வீட்டில் என்னால் நிம்மதியாக இருக்கவும் முடியாது. எங்கே சொல்வது?

கழுதைக் கெட்டால் குட்டி சுவரு. கணவன் வீட்டை விட்டால் அம்மா வீடு. அதைத் தவிர பெண்களுக்கு வேறு போக்கிடம் ஏது.

இந்த முடிவிற்கு நான் வரும் போது விடியற்காலை மணி ஐந்து.

ஆறு மணிக்குக் குளித்து தயாரானேன். இப்போதைக்கு எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொள்ள முடியாது என்பதால் கொஞ்சம் தேவையான துணிமணிகள் பொருட்கள் போன்றவற்றை எடுத்து வைத்துக்கொண்டேன்.

கௌதமிற்கு இன்னும் உறக்கம் களையவில்லை. அவரை எழுப்பி சொல்லிவிட்டு போகும் மனநிலையிலும் நான் இல்லை.

அவர் கைபேசிக்குக் கீழே ஒரு கடிதத்தை வைத்துவிட்டுப் புறப்பட்டேன். பெரிதாக எதுவும் எழுதவில்லை. சொல்லவும் கேட்கவும் நிறைய இருந்தாலும் அதையெல்லாம் எழுதிக் கொண்டிருக்க  எனக்கு பொறுமையில்லை.

‘நான் அம்மா வீட்டுக்கு போறேன். டிவோர்ஸ் பேப்பர்ஸ் ரெடி பண்ணி எனக்கு அங்கேயே அனுப்பி வைச்சுடுங்க. உங்களுக்கு எந்தவித கஷ்டமும் இல்லாம நானே அதைக் கையெழுத்துப் போட்டு அனுப்பிடுறேன் - காயத்ரி’

எனக்குள் இருந்த ஆதங்கம் கோபம் சொல்ல முடியாத அனைத்து உணர்ச்சிகளையும் அந்த மூன்று வரிகளில் நிரப்பி வைத்துவிட்டேன்.

இங்கே வந்த பின்னும் நினைப்பெல்லாம் அங்கேதான். கௌதமைப் பற்றி என்னால் யோசிக்காமல் இருக்க முடியுமா? இல்லை கெளதமை நினைக்காமல்தான் இருக்க முடியுமா?

இந்த ஐந்து வருடமாக கெளதம் மட்டுமே என்னுடைய நினைவுகள் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருந்தார். எத்தனையோ கோபங்கள் வருத்தங்கள் சண்டைகள் இருந்தாலும் கெளதமை பிரிய வேண்டுமென்று ஒருநாளும் எண்ணியதே கிடையாது. இம்முறை அவர் டிவோர்ஸ் என்றுப் பேசியதை என்னால் ஏற்கவே முடியாவிட்டாலும் அந்த வார்த்தை கெளதமின் மனதிலிருந்து வந்ததில்லை என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இருப்பினும் நான் விவாகரத்துக்கு சம்மதிக்கிறேன் என்று சொன்னது கூட ஒரு வகையில் கெளதமை மிரட்டி பார்க்கத்தான். ஆனால் இப்போது யோசித்து பார்த்தால் நான் எனக்கு ஒரு பெரிய குழியாக வெட்டி வைத்துவிட்டு வந்துவிட்டேனோ என்று தோன்றியது.

அந்த வீட்டிலிருக்கக் கூடாது என்று யோசித்தேனே ஒழிய அவரும் அவனும் சந்தித்துப் பேசிக் கொண்டுவிட்டால் என் நிலைமை. நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.

Uploaded files:
  • an.jpg
srinavee, Shakthi and 2 other users have reacted to this post.
srinaveeShakthiMarli malkhanRathi
Quote

காயத்ரி kku போராட தெம்பில்லையா அல்லது பயமா வீட்டை விட்டு வெளியேறியது தவறு

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from srinavee on January 23, 2020, 11:06 PM

காயத்ரி kku போராட தெம்பில்லையா அல்லது பயமா வீட்டை விட்டு வெளியேறியது தவறு

அவளுக்கு அந்தளவு பக்குவம் இல்லை

 

Quote

Super ma

You cannot copy content