You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Forum breadcrumbs - You are here:ForumMonisha Completed novels: OodalOodal-8

Oodal-8

Quote

8

வளர்மதியை பின்தொடர்ந்து நான் படிக்கட்டில் ஏறும் சமயம் என்னை முந்திக் கொண்டு ஓடிய ஒரு சின்ன பெண்,

“மதி அக்கா… நான் வரைஞ்சது பார்க்கிறீங்களா?” என்று கேட்கவும்,

“ஓ பார்க்கலாமே!” என்று முறுவலோடு அவள் சொன்ன நொடி அந்த சிறுமி தன் கரத்திலிருந்த காகிதத்தை விரித்தாள்.

மலை மீது சூரியன் உதிக்க கீழே சிறிய வீடு அழகாய் காட்சியளித்தது. அந்த சிறுமியின் மழலை ஓவியம்.

“வாவ்! சூப்பரா இருக்கு” என்று வளர் பாராட்டி அவளுக்குக் கைத் தட்டினாள்.

அந்தச் சிறுமியின் முகத்தில் அத்தனை சந்தோஷம்., “தேங்க்ஸ்க்கா” என்றுச் சொல்லிவிட்டுப் புன்னகையோடு அவள் சென்றுவிடவும்,

நான் குழப்பத்தோடு, “யாரு வளர் இவங்க எல்லாம்? உன் பேஷன்ட்ஸா?” என்று கேட்டேன்.

“ஹ்ம்ம் அப்படிதான்… இவங்க எல்லோருக்கும் ஒரு பெரிய நோய் இருக்கு தெரியுமா?” என்று அவள் பீடிகை போட்டுக் கொண்டே முன்னேறி செல்லவும்,

“என்ன வளர் சொல்ற?” என்று அதிர்ந்து நின்றேன் நான்.

“ஹ்ம்ம்… நோய்தான்… வயசானவங்களுக்கு அந்த சின்ன பசங்களுக்கு எல்லோருக்கும் ஒரே மாதிரி நோய்”

“அதென்ன நோய்?” நான் அரண்டு போய் கேள்வி எழுப்ப,

“தனிமை” என்றாள் அவள் சாதாரணமாக!

“தனிமையா?” என்று நான் வியப்போடு கேட்கும்போது இருவரும் மாடியேறி வந்திருந்தோம்.

வளர்மதி வீட்டு கதவைத் திறந்துவிட்டு என்னை உள்ளே அழைத்தாள். நானும் உள்ளே நுழைந்தேன்.

ரொம்பவும் சிறிய வரவேற்பறைதான். எனினும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. மூவர் மட்டும் அமருமளவுக்கு ஒரு சோபா. மேஜை. பூந்தொட்டி. தொலைக்காட்சிப் பெட்டி. அவற்றோடு அருவி, மழைசாரல், சூரியோதயம், கடலலை என்று இயற்கையின் சௌந்தரியங்கள் அவள் சுவர்களை ஓவியங்களாக அலங்கரித்து அந்த இடத்தையே வண்ணமயமாக மாற்றிக் கொண்டிருந்தன.

அந்த அறையின் வடிவமைப்பே மனதில் ஒருவித அமைதி நிலையை உருவாக்க, அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் கைகளைப் பிடித்து சோபாவில் அமர வைத்தாள் வளர்!

“உட்காரு காயு… ம்ம்ம் என்ன சாப்பிடுற” என்றாள்.

“எனக்கு எதுவும் வேண்டாம்?”

“அதெல்லாம் முடியாது… நான் உன் வீட்டுக்கு வரும் போது நீ காபி போட்டு தந்த இல்ல” என்று அவள் சமையலறை நோக்கி செல்லவும்,

“ப்ளீஸ்டி… அதெல்லாம் வேண்டாம்… நீ உட்காரு” என்று அவளைக் கட்டாயப்படுத்தி அமரவைத்தேன்.

“நீ ஏன் ஒரு மாதிரி பதட்டமா இருக்கு” என்று வளர் சரியாக என் நாடியைப் பிடிக்க நான் சிரித்து மழுப்பிவிட்டு, “அதெல்லாம் இல்ல… நீ மாடியேறி வரும்போது ஏதோ  தனிமை… நோய்னு சொன்னியே அதைப் பத்தி  சொல்லு” என்றேன்.

“இன்னைக்கு பலரையும் பாதிச்சிருக்க பெரிய நோய் இந்தத் தனிமைதான்… வேலைக்கு போற அம்மா அப்பா… அமெரிக்காவுக்கு போயிட்ட ஒரே மகன்… கல்யணமாகி போயிட்ட மகள்கள்… இப்படி எல்லோருக்கும் தனிமையாக்கப்பட்டதற்கான வெவ்வேறு காரணங்கள் இருக்கலாம்… ஆனா அவங்களோட கஷ்டங்களும் தவிப்புகளும் ஒன்னுதான்

நாம வரைஞ்ச ஓவியத்தை அம்மாகிட்ட காண்பிக்கணும்னு ஆசையா இருக்க அந்த குழந்தையோட அம்மா வேலை முடிச்சு வரவே ஒன்பது மணியாகிடும்… அப்பாவுக்கு நைட் ஷிப்ட்… அவர் வீட்டுல இருந்தாலும் தூங்கிட்டு இருப்பாரு… இல்லை டிவி பார்த்துட்டு இருப்பாரு…

வயசான அம்மா அப்பாவை விட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போயிடுறாங்க… கடமைக்கேன்னு ஒரு வீடியோ கால் பண்ணி பேசுவாங்க… அந்த வயசான தாத்தாவுக்கு பெரிய எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது… கை கால் வலிச்சா அக்கறையா ‘என்னாச்சுன்னு’ கேட்க ஒரே ஒருத்தர்

நமக்கு எவ்வளவு பெரிய நோயிருந்தாலும் நம்ம மேல அக்கறையா கூட இருந்துப் பார்த்துக்க ஒருத்தர் இருந்துட்டா அதுவே அவங்களுக்கு பெரிய பலம்… ஆனா அதுவும் இல்லாம போகும் போது… இட்ஸ் ஹாரிபிள்

அதனால்தான் இப்படி ஒரு செட்அப்… ரொம்ப தனிமையில யார் துணையும் இல்லாம தவிக்கிறவங்க டேயிலி ஈவனிங் இங்க வந்து டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்க… பிடிச்ச விளையாட்டை விளையாடு வாங்க… அவங்க மனசுல இருக்க கவலை சந்தோஷம் எல்லாத்தையும் பகிர்ந்துப்பாங்க… சம்டைமஸ் சமைச்சு எடுத்துட்டு வந்து எல்லோருக்கும் கொடுப்பாங்க… ஹாப்பியா இருந்துட்டு கிளம்பி போயிடுவாங்க… ஒரு க்ளப் மாதிரி வைச்சுக்கோயேன்”

“அப்போ இது உன் கிளினிக் இல்லையா?”

“ஹ்ம்ம் கிளினிக்கும்தான்… உள்ளே ஒரு ரூம் இருக்கு… அங்கே நான் என் பேஷன்ட்சைப் பார்ப்பேன்… பெரும்பாலும் பலருக்கு இருக்கப் பிரச்சனை இந்தத் தனிமை… ஆனா இந்தத் தனிமையில இரண்டு வகை இருக்கு… முதல் ரகம் குடும்பத்தால் தனிமைப்படுத்தப்பட்டவங்க…

இரண்டாவது தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கிட்டவங்க… இந்த இரண்டாவது ரகம்தான் ரொம்பவே காம்ப்ளிகேட்டட்… வேலை வேலைன்னு எந்நேரமும் லேப்டாப் கையுமா இருக்கிறது… யார்கிட்டயும் பேசாம வீடியோகேம்ஸ் விளையாடுறது… வாட்ஸப் பேஸ்புக்னு சோஸியல் மீடியாவுக்குள்ள வாழுறது…

டிவி சீரியல்னு தன்னைச் சுற்றி இருக்க ஒரு உலகத்தையே மறந்து போறது… இவங்களை மாதிரி ஆட்களை அவ்வளவு சீக்கிரம் வெளியே கொண்டு வரவே முடியாது… பலரும் இப்படி ஒரு விஷயத்துக்கு நாம அடிக்ட் ஆகியிருக்கோம்னு தெரியாமலே இருக்காங்க

சமீபமா ஒரு சர்வே சொல்லுது… நகரத்தில வாழற பத்துல ஒன்பது பேருக்கு ஸ்ட்ரெஸ் இருக்காம்”

நான் உடனே, “எல்லாத்துக்கும் காரணம் இன்னைக்கு இருக்க இந்த டெக்னாலஜிதான்… இல்ல” என்றதும் அவள்

“நிச்சயமா இல்லை” என்று மறுத்தாள்.

“அப்புறம்”

“கூட்டு குடும்பங்கிற கட்டமைப்புல இருந்து நாம வெளிய வந்ததுதான் காரணம்… யோசிச்சு பாரு… வீட்டை சுத்தி ஆட்கள் இருக்கும் போது எவனுக்காச்சும் வீடியோகேம் விளையாடணும்னு தோணுமா… ஒரே டிவில அந்த வீட்டு உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்னா உட்காரந்து டிவி பார்க்கும் போது… ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ப்ரோக்ராம்தான் பார்க்க முடியும்… அப்பாவுக்கு நியுஸ்… தங்கைக்கு சன்முயூசிக்… அம்மாவுக்கு சீரியல்…

ஸோ எல்லோரும் கொஞ்ச கொஞ்ச நேரம்தான் டிவி முன்னாடி உட்காருவாங்க”

அவள் சொல்வதைக் கேட்டு நான் தலையசைத்து ஆமோதித்துக் கொண்டிருந்தேன். அவள் சொல்வது அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மைதான். தனியாக வந்த பிறகுதான் கெளதம் வேலை வேலை என்று லேப்டாப் கையுமாகவே இருக்க ஆர்மபித்தார்.

என் மாமியார் மாமனாருடன் ஒன்றாக இருந்த சமயங்களில் வேலை செய்யும் சூழ்நிலையெல்லாம் அவருக்கு அமையாது. நானும் என் மாமியாரும் சண்டைப் போட்டு அதற்கு இவர் சமாதானம் செய்யவே சரியாக இருக்கும்.

நான் அழுதுக் கொண்டிருக்கும் போதெல்லாம் அவர் அருகில் அமர்ந்து சமாதானம் செய்வார். இப்போதெல்லாம் அவர் என்னை சமாதானம் செய்ய எந்த காரணமும் இல்லாமல் போனது. அவர் பாட்டுக்கு லேப்டாப்பில் வேலையில் மூழ்கிவிட நான் பாட்டுக்கு என் நாவல்களோடு ஐக்கியமாகிவிடுவேன்.

ஒருவேளை இந்த தனிக்குடித்தனம்தான் எங்கள் விலகலுக்கு காரணமோ என்ற எண்ணம் தோன்றிய போதும் அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள எனக்கு மனம் வரவில்லை.

‘நான் ஒன்னும் வேணும்ட்டே தனிகுடித்தனம் வரல… எல்லாம் என் மாமியாராலதான்’ என்று எனக்காக குரல் கொடுத்தது என் மனசாட்சி. நான் உடனே வளரிடம்,

“இந்த மாமியாருங்க பண்ற டார்ச்சர்ல யார்தான் கூட்டுக் குடும்பத்துல வாழ்வா… அதனாலதான் எல்லோரும் தனியா போயிடுறாங்க” என்றேன்.

வளர்மதி நான் சொன்னதைக் கேட்டுச் சத்தமாகச் சிரித்துவிட்டாள்.

“இப்ப எதுக்குடி சிரிக்கிற? நான் சொன்னது உண்மையில்லைனு சொல்லு”

“உண்மைதான்… மாமியாருக்கு மருமக வில்லி… மருமகளுக்கு மாமியார் வில்லி… இன்னும் டிவி சீரியல்ஸ் எல்லாம்  இந்த பழைய ரெகார்டைதானே போட்டுத் தேய்ச்சிக்கிட்டு இருக்கு… அதுவும் மாமியார்னாலே கெட்டவங்கன்னு உருவாகிடுச்சு… கல்யாணம் ஆகாத பெண்கள் எல்லாம் கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடியே தனிக்குடித்தனம் போயிடணும்னு முடிவு பண்ணிடுறாங்க”

“அப்பதான் பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருக்கலாம்” நான் அப்படி சொல்லவும் வளர் பதறிக் கொண்டு,

“அது தப்பு காயு” என்றாள்.

“உனக்கு இன்னும் கல்யாணம் ஆகல இல்ல… அதான் நீ இப்படி பேசுற… இந்த மாமியாருங்க டார்ச்சரை அனுபவிக்கிறவனுக்குதான் அந்தக் கஷ்டம் புரியும்”

“மாமியாரால் பாதிக்கபட்டோர் சங்கமா நீ” இம்முறை அவள் கேலியாக சிரித்துக் கொண்டே கேட்க நான் முகம் சுருங்கி,

“ரொம்ப” என்றேன்.

“அப்படி என்ன பண்ணாங்க உன் மாமியார்… அடிச்சு கொடுமை படுத்துனாங்களா… நிறைய வேலைக் கொடுத்து உன்னை பெண்டு நிமிர்த்துன்னாங்களோ?”

“உடலால் வருத்துறதுதான் கொடுமையா… மனசால ஒவ்வோரு நிமிஷமும் கொலைப் பண்றாங்களே… குழந்தை இல்லை குழந்தை இல்லன்னு சொல்லிக் காட்டி என்னை சாகடிக்கிறாங்க” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே என் விழிகளில் பொங்கிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.

வளர்மதி என் தோளில் ஆதரவாக கரம் பதித்து, “உன் வலியை என்னால புரிஞ்சிக்க முடியுது காயு… ஒரு பொண்ணுக்கு குழந்தை இல்லன்னு சொல்லி குத்தி காட்டிறது அவ மனசை எந்தளவுக்கு காயப்படுத்தனும்னு ஏன் இந்த சமூதயாத்துல இருக்க யாருமே புரிஞ்சிக்கிறது இல்ல” என்றாள்.

இந்த மாதிரியான ஆறுதலான வார்த்தைகள் கேட்டு எத்தனை நாளானது. நான் மௌனமாக அமர்ந்திருக்க,

“குழந்தை இல்லங்கிறதுதான் உனக்கு இப்போ பிரச்சனையா?” என்று கேட்டாள் வளர்.

“எனக்கு அது பிரச்சனைங்கிறதுவிட என்னை சுத்தி இருக்கவங்களுக்குதான் அது பெரிய பிரச்சனையா இருக்கு… பேசி பேசி டார்ச்சர் பண்றாங்க… நான் என்னதான் பண்றது? ஒரு வருஷம் முழுக்க கோயில் கோயில்ன்னு சுத்த வைச்சாங்க

அப்புறம் ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட் ட்ரீட்மென்ட் மூணு வருஷம் ஓடிடுச்சு… ஒரு யூஸும் இல்லை… மனசால உடம்பால நான் காயப்பட்டதுதான் மிச்சம்… என்னால ஒரு லெவெலுக்கு மேல தாங்க முடியல… நான் ட்ரீட்மென்ட் ஸ்டாப் பண்ணிட்டேன்…

ஆனா என் மாமியார் நான் ட்ரீட்மென்ட் பண்ணிகிட்டே ஆகணும்னு என்னை டார்ச்சர் பண்றாங்க… நானும் மனுஷிதானே எனக்கும் வலி வேதனையெல்லாம் இருக்கும் இல்ல” என்று சொல்லி கொண்டிருக்கும்போதே என் விழிகளில் மீண்டும் நீர் கோர்த்து நின்றது.

அழுதுவிட கூடாதே என்று என்னை மிகவும் கட்டுபடுத்திக் கொண்டுப் பேசினேன். வளர்மதி இடையே குறுக்கிட்டு பேசாமல் என் கைகளைப் பிடித்து கொண்டாள்.

“எனக்கு என் மாமியார் பேசனதைக் கூட பொறுத்துக்க முடிஞ்சுது… ஆனா என் வேதனையை நல்லா புரிஞ்ச என்  வீட்டுகாரர் அவங்களுக்கு சாதகமா பேசனதுதான் என்னால தாங்கிக்கவே முடியல…. நான் ட்ரீட்மென்ட் பண்ணலன்னா என்னை டிவோர்ஸ் பண்ணிடுவேன்னு சொல்றாரு வளர்” என்றேன்.

அந்த நொடி தன் மௌனத்தைக் கலைத்த வளர், “உன்னோடது லவ் மேரேஜ்தானே காயு” என்றுக் கேட்டாள். நான் அதிர்ச்சியோடு அவள் முகம் பார்க்க

“அன்னைக்கு நம்ம பீச்ல பார்த்த” என்று அவள் தொடர்ந்து பேசவும் நான் குறுக்கிட்டு அவளைப் பேசவிடாமல் நிறுத்தினேன்.

“இல்ல… அவனுக்கும் எனக்கும் மனஸ்தாபம் வந்து நாங்க இரண்டு பேரும் பிரிஞ்சிட்டோம்… அப்புறம் நான் என் வீட்டில வேணான்னு சொல்லியும் இவரை எனக்கு கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க”

“ஒ! அப்போ பிடிக்காமதான் கல்யாணம் பண்ணிக்கிட்டியா?”

“பிடிச்சுது பிடிக்கலங்கிறதைத் தாண்டிப் பண்ணிக்க வேண்டிய நிர்பந்தம்… பண்ணிகிட்டேன்… ஆனா” என்று நிறுத்தி நான் வளர் முகம் பார்க்கவும், “ஆனா என்ன” என்று அழுத்தமாகக் கேட்டாள் வளர்!

“எங்க கல்யாணம் முடிஞ்ச பிறகு அவரை நான் உண்மையா நேசிச்சேன்… அவரும் என் மேல அவ்வளவு அன்பு காட்டினாரு… ரொம்ப சந்தோஷமா இருந்தோம்… எங்களுக்குள்ள தனிப்பட்ட முறையில எந்தப் பிரச்சனையுமே கிடையாது… குழந்தை இல்லங்கிறகுறைதான் எங்க உறவில இப்போ விரிசல் விழ காரணமே”

“ம்ம்ம்… அதனால்தான் உங்க அவரு உன்னை டிவோர்ஸ் பண்ணிடுவேன்னு சொன்னாரா?”

“ஹம்ம்” என்று நான் தலையை மட்டும் அசைத்தேன்.

“இதெல்லாம் ரொம்ப டூ மச்… உன் மேல உண்மையான அன்பு இருந்தா நிச்சயம் அவர் அப்படி சொல்லியிருக்கமாட்டார்”

அந்த வார்த்தை என் மனதில் சுருக்கென்றுத் தைக்கவும்

“இல்ல வளர்… அவர் மனசார அப்படி சொல்லல… என் மாமியாரோட இமோஷனல் டார்ச்சர் தாங்க முடியாமதான் அவர் அப்படி சொன்னாரு” என்று அவசரமாக.

“அவர் என்ன சூழ்நிலையில அப்படிச் சொல்லி இருந்தாலும் தப்பு தப்புதான்… நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் அவரை மன்னிக்கவே கூடாது”

“என்ன நீ இப்படி சொல்ற?”

“வேறென்ன சொல்லணும்னு நீ எதிர்பார்க்கிற… உன் கணவர் உனக்கு குழந்தை இல்லன்னு உன்னைக் கழிச்சிகட்டிட்டு வேறொரு கல்யாணம் பண்ணிக்க ப்ளேன் பண்றாரு”

“சேச்சே! அவர் அப்படியெல்லாம் யோசிக்க மாட்டாரு… அன்னைக்கு அப்படி பேசனதுக்காக என்கிட்ட மன்னிப்பு கூட கேட்டாரு”

“மன்னிப்பு கேட்டாலும் தப்பு தப்புத்தான்… எப்படி அவங்க அம்மா முன்னாடி உன்னை விட்டுக் கொடுத்து பேசலாம் காயு” என்று வளர்மதி சொல்ல, என்னால் பதில் பேசவே முடியவில்லை.

கெளதம் மீது என்னதான் கோபம் இருந்தாலும் அவரை நான் இப்படி வளரிடம் விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது என்றுத் தோன்றியது. பல நேரங்களில் கெளதம் என் சார்பாக தன் அம்மாவிடம் பேசியிருக்கிறார். அவற்றையெல்லாம் நான் எப்படி மறந்தேன்.

என் மௌனத்தை உற்றுக் கவனித்த வளர்,

“அப்போ உனக்கு அவர் மேல எந்த கோபமும் இல்ல… கோபமா இருக்க மாதிரி உன்னை நீயே ஏமாத்திக்கிற” என்றதும் என்னால் மறுத்து பேச முடியவில்லை.

ஆம். அதுதான் உண்மை. நான் அப்படிதான் என்னையும் சேர்த்து எல்லோரையும் ஏமாற்றுகிறேன்.

“பேசு காயு! நீ நடந்ததை விவரமா சொன்னாதான் நான் உன் பிரச்சனைக்கு ஏதாச்சும் சொல்யுஷன் சொல்ல முடியும்” என்றாள் வளர்.

வெகுநேர யோசனைக்கு பிறகு நடந்த முழு நிகழ்வையும் அவளிடம் விளக்கிவிட்டேன். பக்கத்து வீட்டில் குடிவந்த அவனையும் சேர்த்து.

“அப்போ நீ உன் பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்துப் பயந்து ஓடி வந்திருக்க… நீ செஞ்ச காரியம் எப்படி இருக்கு தெரியுமா? எவனோ மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தினானாம்… அப்படி இருக்கு” என்றுக் காட்டமாகச் சொன்னாள்.

“இல்ல அது மட்டுமே காரணம் இல்லை… நானே கெளதமை விட்டு விலகி வரணும்னு நினைச்சேன்… அதான்”

“பட் ஒய்… கெளதம்தான் உன்னை நல்லாப் பார்த்துக்கிறாரே காயு”

“ஆனா அவரை நான் நல்லாப் பார்த்துக்கலையே வளர்” என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லிவிட்டு அழ

வளர் என் முகத்தை நிமிர்த்தி, “நீ ஏதோ டென்ஷன்ல இப்படி எல்லாம் யோசிக்கிறன்னு நினைக்கிறேன்” என்றாள்.

“இல்ல… இப்பதான் நான் தெளிவா யோசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு

“இதுவரைக்கும் யார்கிட்டயும் நான் இந்த விஷயத்தை சொன்னதே இல்லை” என்று ஆரம்பிக்க வளர் என்னையே ஆழ்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் நான் அவள் கண்களை எதிர்கொள்ள முடியாமல் தலையைக் கவிழ்ந்துக் கொண்டேன்.

முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு என் மனதில் வெகுகாலமாகப் பூட்டி வைத்திருந்த அந்த விஷயத்தை அவளிடம் சொல்லத் தொடங்கினேன்.

“நீ அன்னைக்கு பீச்ல பார்த்த இல்ல… அவன் என் பக்கத்து காலேஜ்… ரெண்டு பேரும் ஒரே பஸ்ல ட்ரேவல் பண்ணுவோம்… அப்படிதான் ரெண்டு பேருக்கும் பழக்கம்…

என்னைப் பார்க்கும் போதெல்லாம் புதுசாபுதுசா கவிதை ஏதாச்சும் சொல்லுவான்… க்ரீடிங் கார்ட்ஸ் கிப்ட் கொடுப்பான்… அந்த பஸ்ல ஹீரோ மாதிரி பயங்கரமா கெத்துக் காட்டுவான்… அவன் என்னை லவ் பண்றான்னு என் பின்னாடி சுத்திறது எனக்கு ஒரு மாதிரி கர்வமா இருந்துச்சு

அதுக்கப்புறம் நானும் அவனை லவ் பண்ணேன்… அப்போ ஒருமுறை என் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் பண்றேன்னு என்னை கோவளம் கூட்டிட்டுப் போனான்… அன்னைக்கு”

சில நொடிகள் தாமதித்துப் பின் தொடர்ந்தான்.

“என்கிட்ட எல்லையை மீறிட்டான்… நானும்”

“அவனை மட்டும் தப்பு சொல்ல முடியாது… அன்னைக்கு நடந்த சம்பவத்துல என்னோட தப்பும் இருக்கு… நான் அலோவ் பண்ணியிருக்கக் கூடாது… ஆனா என் வயசு… அவன் மேல எனக்கிருந்தப் பைத்தியக்காரத்தனமான காதலும் அதெல்லாம் பெரிய தப்பில்லைனு தோண வைச்சுடுச்சு…  அந்த மாசம் எனக்கு பீரியட்ஸ் வராம போன போதுதான் நான் எப்படியொரு மூட்டாள் தனத்தைப் பண்ணியிருக்கேன்னு எனக்குப் புரிஞ்சுது…

அப்போ நான் காலேஜ் பைனல் இயர் வேற படிச்சிட்டு இருந்தேன்… அம்மா அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை கொன்னே போட்டுடுவாங்க… என் குடும்பத்துக்கே ரொம்ப அசிங்கமாயிடும்…

அவன் கிட்ட போய் இந்த விஷயத்தை சொன்னேன்… சண்டைப் போட்டேன்… அழுதேன்… அவன் என்னை சமாதானப்படுத்திப் படிக்கிற நேரத்தில கல்யாணம் பண்றதெல்லாம் சரியா வராதுன்னு சொல்லி எனக்கு ஒரு டேப்லட் வாங்கி தந்தான்

அதைப் போட்டுகிட்டு மூணு நாள் நான் உயிரோடு செத்தேன்… அவ்வளவு வலி… அதுக்கப்புறம் நான் அப்படியொரு தப்பை செய்யவேயில்லை… ஆனா” நான் வளர் முகத்தை நிமிர்ந்து பாராமல் சொல்லிக் கொண்டிருந்த எனக்கு மேலே பேச முடியாமல் தொண்டை அடைத்தது. மனம் கனத்தது.

இருப்பினும் நான் சொல்ல நினைத்ததை முழுவதுமாக சொல்லிவிட எண்ணி, “இவ்வளவு நடந்த பிறகும் நானா அவனைப் பிரியணும்னுநினைக்கல… ஆனா அவன் போக்கே சரியில்ல… பிடிக்காம விலகி வந்துட்டேன்… அப்பக்கூட யாரையும் கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் நினைக்கவே இல்ல… அம்மா அப்பாத்தான் என்னைக் கட்டாயப்படுத்தி கெளதமை கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க

பயந்து பயந்துதான் நான் அவர் கூட வாழ்க்கையை ஆரம்பிச்சேன்… ஆனா அவரோட அன்பும் காதலும் என்னோட பழைய நினைவுகளை மறக்கடிச்சிடுச்சு… மனசார அவருக்கு உண்மையான மனைவியாதான் நான் வாழ்ந்தேன்…

இப்போ யோசிச்சு பார்த்தா நான் எவ்வளவு பெரிய தப்பை ரொம்ப சாதாரணமா செஞ்சிட்டேன்னு தோணுது… இத்தனை நாளா நான் அந்த விஷயத்தைப் பத்தி யோசிக்க கூட இல்ல… அவனைத் திரும்பவும் பார்த்தவுடனேதான் எனக்கு எல்லாம் ஞாபகம் வந்து தொலைச்சது

நான் அன்னைக்கு செஞ்சதப்புதான் இன்னைக்கு நான் அம்மாவாக முடியல… கெளதமுக்கு ஒரு குழந்தையை பெத்துக் கொடுக்க முடியல…

ரொம்ப பெரிய தப்பு செஞ்சிட்டேன்… கெளதமோட வாழ்க்கையே நான் நாசம் பண்ணிட்டேன்” என்று முகத்தை மூடி விசும்பி அழுதேன். என் விசும்பல் சத்தம் அந்த அறை முழுக்கவும் எதிரொலித்தது. எங்கள் இருவருக்கிடையில் ஒரு கனத்த மௌனம் ஆக்கிரமித்துக் கொண்டது.

வளர்மதி எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.

Uploaded files:
  • an.jpg
jamunarani, Priya and 3 other users have reacted to this post.
jamunaraniPriyaShakthiMarli malkhanRathi
Quote

Super ma

You cannot copy content