You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 10

Quote

பெண்ணின் ஈஸ்டிரோஜன் ஹார்மோன்தான் அவளை உணர்வு கூர்மை மிக்கவளாக, மக்கள் தொடர்பில் மும்முரம் காட்டுபவளாக, உளவியல் வித்தகியாக மாற்றியது. இதற்காகவே அவள் மூளையின் மொழிவளப் பகுதியைப் பெரிதாக்கி, பெண்களை பிறவி வாயாடிகளாக மாற்றியது. இது போதாதென்று முகஜாடைகளை புரிந்து கொள்வது, சிறு சிறு அசைவுகளின் உள்ளர்த்தங்களை கூட உணர்வது மாதிரியான பல புதிய திறமைகளை அவளுக்குள் ஏற்படுத்தி, அவளை ஒரு சிறந்த தாயாக தேர்ச்சி பெற செய்தது.

கூடவே அவள் தோலடியில் நிறைய கொழுப்பை சேகரிக்க வைத்து அவளை கொழுக் மொழுக் உடம்புக்காரியாக மாற்றியது. காரணம் ஒரு வேளை பஞ்சம் வந்தால், உணவு பற்றாக்குறையால் அவள் கருப்பலவீனமடைந்து விடாமல் அதை தவிர்க்கவே, உணவு அதிகமாக இருக்கும் போது அதனை அவள் தோலுக்கு அடியில் பதுக்கி வைத்தது.  பஞ்சம் வந்தாலும் கொழுப்பை பாலாக்கி பாப்பாவை பிழைக்க வைத்துவிடலாமே!

ஆனால், இந்த நடமாடும் பஞ்சநிவாரண உடலமைப்பெல்லாம் அவளை அசௌகரியப்படுத்தாமல் இல்லை

தொடரும்... 

10

மனிதத்தை மிச்சம் மீதி இல்லாமல் காவு வாங்கும் சாதியம் என்ற சர்பம் கன்னிகையின் வாழ்க்கை எனும் பரமபத கட்டங்களில் நெளிந்தபடி ஒவ்வொரு முறையும் அவளை கொத்தி கொத்தி கீழே இறக்கிவிட்டிருக்கிறது.

மீண்டும் மீண்டும் ஏணிகளிலும் பாம்புகளிலும் மாறி மாறி ஏறி  இறங்கினாள். விட்டு கொடுக்காமல் முன்னேறினாள். ரொம்பவும் போராடிதான் மேலே ஏறி வந்தாள். இன்று தன்னுடைய சாதிய முத்திரையை அழித்துவிட்டு தனக்கான தனிப்பட்ட அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் உருவாக்கி கொண்ட போதும் அதே சாதிய வெறி பிடித்த பாம்பு கடைசி கட்டத்திலும் வந்து அவளை காவு வாங்கி ஆரம்பித்த இடத்திற்கே கொண்டு தள்ளிவிடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

கன்னிகை தன் பிறந்த ஊர் நோக்கி பயணிக்க தயாராக, அவளுடன் பணிபுரிந்த ஆசிரியர்கள் பலருக்கும் அவள் அங்கிருந்து செல்வதில் பெரிதாக வருத்தம் ஒன்றுமில்லை என்று அவர்கள் பார்வையே சொன்னது.

என்ன காரணத்தினாலோ அவர்கள் யாரிடமும் அவளால் நெருங்க முடிந்ததே இல்லை. ஸ்டாப் ரூமில் அமர்ந்து கொண்டு சீரியல்களை பற்றியும் சமைப்பதை பற்றியும் குழந்தைகளை பற்றியும் பேசும் அவர்களுடன் அவளுக்கு கலந்துரையாட எந்த விஷயமும் இல்லை.

 அவர்களும் அவளை அவர்கள் கூட்டத்தில் சேர்த்து கொண்டதில்லை. அப்படியே இத்தனை வருடத்தை ஓட்டிவிட்டிருந்தாள். ஆனால் அவளுக்கு மாணவர்களுடன் அதிக நெருக்கம் இருந்தது. ஆரம்பத்தில் அவர்களின் நடத்தை அலட்சிய போக்கை எல்லாம் பார்த்து பயந்திருக்கிறாள். ஆனால் மெல்ல மெல்ல அவளின் அக்கறையிலும் கவனிப்பிலும் கல்வி கற்று கொடுக்கும் முறையிலும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவந்தனர். கற்றலில் தொடங்கிய உறவு அன்பாகவும் நேசமாகவும் பரிணமித்தது.

கண்ணீருடன் வழியனுப்பிய அந்த மாணவச் செல்வங்களை விட்டு பிரியும் போது மனம் எந்தளவு வேதனையில் திளைத்ததோ அதே அளவு பூர்ப்பும் அடைந்தது. பெருமிதப்பட்டது. தான் அறியாமலே இத்தனை அன்பு உள்ளங்களை உறவுகளை சம்பாத்திருக்கிறோம் என்று எண்ணுகையில் அவளுக்கு தனி கர்வம் உண்டானது.

இதற்கு மேல் வேறு என்ன வேண்டும். இத்தனை வருட ஏற்ற இறக்கமான அவளின் வாழ்க்கை அனுபவங்களில் இதுதான் ஆகசிறந்த அனுபவம் என்று அந்த நிமிடத்தை தம் நினைவு பெட்டகத்தில் பத்திரப்படுத்தி கொண்டாள்.

அதுமட்டுமல்லாது அவள் இடம்பெயர்வதற்கு தலைமை ஆசிரியர் மிகவும் உதவியாக இருந்தது

“நான் அங்கே இருக்க ஹெச் எம் கிட்ட பேசிட்டேன் கனி… நீ தங்கிறதுக்கு வேண்டிய ஏற்பாட்டையும் செஞ்சிட்டேன்”

“என்னை பத்தி எல்லாம் சொல்லிட்டீங்களா சார்” அவள் தயக்கமாக கேட்க,

“எல்லாமே சொல்லிட்டேன் மா… நீ ஒன்னும் கவலைப்பட வேண்டாம்… நீ வண்டில சாமானை ஏத்தி அனுப்பிட்டு… நீ நம்ம கார்லயே போயிடு” என்று மிகுந்த அக்கறையுடன் சொன்னவரை நன்றியுடன் பார்த்தாள்.

அது தன்னுடைய பிறந்த ஊராக இருந்தாலும் அங்கே தனக்கென்று ஒன்றுமே இல்லை என்று அவள் வருத்தப்பட்டு சொன்னதால் அவளை கேட்காமலே அவரே அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டார். 

“ரொம்ப தேங்க்ஸ் சார்… ஆனா நான் கார்ல போகல… பஸ்ல போயிக்கிறேன்” என்றாள்.

“அதெல்லாம் வேண்டாம் மா”

“ப்ளீஸ் சார்… எனக்கு பஸ்ல போகணும்” என்றவள் இறைஞ்சுதலாக கேட்கவும்,

“என்னவோ போ… நீ சொல்ற பேச்சை கேட்கவே மாட்ட” என்று நொடித்து கொண்டவர்,

“பார்த்து பத்திரமா போம்மா… உனக்கு எப்ப என்ன தேவைன்னாலும் என்னை தயங்காம கூப்பிடு” என்று ஒரு தந்தைக்கு நிகராக தலைமை ஆசரியர் பரிவுடன் பேசிய போது இன்னும் மனிதம் இவர்களை போன்ற மனிதர்களால்தான் மிச்சம் இருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு.

நெகிழ்ச்சியுடன் அவர்களிடமிருந்து விடைபெற்றவள் எந்த நிலையிலும் திருநாவை மட்டும் திரும்பியும் பார்க்கவில்லை. சந்தோஷமும் நெகிழ்ச்சியுமான அந்த தருணத்தில் ஏதோ ஒரு சின்ன புள்ளியாக கூட அவனுடைய ஞாபகங்கள் பதிவாவதை அவள் விரும்பவில்லை.

அதன் பின் வீட்டிலுள்ள சமான்களை எல்லாம் வண்டியில் ஏற்றிய பின் வெறுமையாகி போன அவ்விடத்தை சுற்றி பார்த்துவிட்டு முற்றத்தில் வந்தமர்ந்து கொண்டாள்.

வெகுநாட்களுக்கு பிறகு, ‘பார்த்து பத்திரமா போயிட்டு வா கனி’ என்று அத்தையின் குரலோசை கேட்டு அந்த வீட்டின் மூலைகளில் எல்லாம் எதிரொலித்த மறுகணமே கரைந்து காணமல் போனது.

 இது உண்மையிலேயே தன்னுடைய கற்பனைதானா என்ற கேள்விக்கான பதிலை யார் சொல்ல கூடும்?

மிதமான புன்னகையுடன் வீட்டை பூட்டுவிட்டு கிளம்பினாள்.

அங்கிருந்து பேருந்தில் ஏறி கோயம்பேடு பேருந்து நிலையத்தை வந்தடைந்தவள், அங்கிருந்து அவள் செல்ல வேண்டிய பேருந்தையும் கண்டடைந்தாள்.

பிறந்த ஊரின் பெயரை பார்த்ததுமே அவள் நாசிக்குள் சுடுகாட்டு புகைநெடியும் பிணநாற்றமும் வீசியது. அந்தளவு ஆழமாக பதிந்த போன நினைவுகள் அவை.

பேருந்திற்குள் ஏறினாள். ஆள் அரவமே இல்லை. நேராக நடத்துனரின் முன்னே உள்ள ஜன்னலோர இருக்கையில் சென்றமர்ந்து கொண்டாள்.

பள்ளியில் படித்த காலத்திலிருந்தே அந்த இருக்கையில் அமர்ந்து பயணிக்க அவளுக்கு அப்படியொரு பிடித்தம். ஆனால் எந்தளவு அவள் அந்த பேருந்து பயணங்களை நேசித்தாலோ பிற்காலத்தில் அந்தளவு அதனை வெறுக்கவும் செய்தாள்.

நம் வாழ்வில் நாம் நேசித்து விரும்பிய விஷயங்கள் எல்லாம் நாம் விரும்பியபடியே இருப்பதுமில்லை. அமைவதுமில்லை. அவள் வாழ்க்கையின் அனுபவங்களும் அப்படித்தான்.

பலரின் மரண வாசல்தான் அவளின் ஜனன வாசல். சுடுகாட்டில் கால்இடறி விழுந்து அங்கேயே அவள் ஜனித்த கதையை சலிக்க சலிக்க அவள் அம்மா சொல்லி கேட்டிருக்கிறாள்.

கன்னியப்பனுக்கும் சாந்திக்கும் பிறந்தது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். அந்த ஒற்றை மகள்தான் அவள். கன்னிகை!

மூவரில் அவள்தான் கடைசி. ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்த புளிய மரமும் அவர்களும் ஒரு ஜாதி. ஓங்கி உயர்ந்து படர்ந்திருந்த அந்த மரத்தை சுற்றிலும் இருந்த கூரைவேய்ந்த வீடுகளில் அவர்களுடையதும் ஒன்று.

 அப்போதோ இப்பொதோ என சரிய காத்திருந்த மண் சுவர்களும் ஓட்டை ஓடசலாக மேலே பெயருக்கென்று கிடந்த கூரையும்தான் அவர்கள் வீடு.

ஓரமாக கிட்டத்தப்ட்ட மண்வெட்டிகள் இரண்டும், கிடப்பாறை ஒன்றும் அப்பாவின் சொத்து என்றால்…. அம்மாவின் பொக்கிஷம் பழைய மண் சட்டிகளும் வளைந்து நெளிந்திருந்த நான்கைந்து அலுமினிய சமான்களுடன் கூடிய சிறிய விறகடுப்பும்தான். மற்றபடி சமையல் சாமான்கள் எல்லாம் ஊருக்குள் இழவு விழுந்து வாங்கிபோட்டால்தான் உண்டு. அதுவும் ஒன்றிரண்டு நாளைக்கு மேல் தாங்காது.

இதுதான் அங்கு வசிக்கும் மூன்று குடும்பங்களின் அதிகபட்ச சொத்துக்கள். ஒன்றோடு ஒன்று எல்லோரும் உறவக்காரர்கள். மாமா, மச்சான், அண்ணன், அத்தை என்று அவர்கள் உலகமும் உறவும் அந்த எல்லைக்குள்ளாகவே முடிந்து போனது. 

அந்த எல்லைகளை தாண்டி அவர்கள் வர அனுமதி இல்லை. 

ஒவ்வொரு சாவுக்கும் எவ்வளவு வருமானம் வருகிறதோ அதை அவர்களுக்குள்ளாக சரி பங்காக பிரித்து கொள்வார்கள்.

ஊருக்குள் மரண ஓலம் கேட்டால்தான் அவர்கள் வீட்டில் உலை கொதிக்கும். பல மனிதர்கள் கண்டிராத தனி உலகமது.

‘கடைசியா முகம் பார்க்கிறவங்க பார்த்துக்கோங்க’ என்பது அடிக்கடி அவர்கள் கேட்கும் வசனம்.

இறுதி சடங்கில் வாய்க்கரிசிக்காக வந்த அரிசியில் பாதியை தனியாக எடுத்து வைத்ததிலிருந்துதான் அவர்கள் பசியாறும். அப்போதும் வாயிற்கும் வயிற்றுக்கும் போதாத நிலைதான்.  

பிணத்தின் மீது போர்த்தப்படும் கோடி துணிதான் அவர்களுக்கு புதுத்துணி.

ஊருக்குள் யாராவது பெரிய வீட்டில் சாவு மணியடித்தால் அவர்கள் வீட்டில் சோறு பொங்கும். வாய்க்கர்சி போடும் போது நிறைய சில்லறைகள் விழும். வயிறார இரண்டு வேளை உணவு உண்ண முடியும். சுடுகாட்டில் பிணமெறிவதை பார்ப்பதெல்லாம் அவர்களுக்கு வாடிக்கை.

அங்கேயே பிறந்த வளர்ந்த அவர்களுக்கு சுடுகாடுதான்  விளையாட்டுகளம். ஆனால் அம்மாவிற்கு இந்த சுடுகாட்டு வாழ்க்கையின் மீது வெறுப்பு ஏற்பட்டது. அடிமை வாழ்க்கை. என்ன உழைத்தாலும் அந்த உழைப்பிறகு மதிப்பு கிடையாது. அடிமட்ட கூலி என்றால் அடி மாட்டை விட மோசமாக மதிக்கப்படும் கொடுமை.

ஒரு நிலைக்கு மேல் பிள்ளைகளின் எதிர்காலமாவது மாற வேண்டுமென்று தன் கணவனை வற்புறத்தி நகரத்திற்கு செல்ல சம்மதம் வாங்கினாள்.

கனிக்கு நான்கு வயதிருக்கும் போது நகரத்திற்கு குடி போனார்கள். அங்கே சாந்தியின் உறவுமுறை தமையன் சேகர் தன் குடும்பத்துடன் வசித்து வந்தான். சேகரின் உதவியால் கன்னியப்பனுக்கும் ஒரு சில சில்லறை வேலைகள் கிடைத்தன.

ஒண்டு குடித்தனத்தில் இவர்கள் குடும்பமும் சேகர் குடும்பமும் அருகருகே வசித்தனர். அதுவே கனிக்கு ஒரு ஆடம்பர உலகமாக தோன்றியது. அடர்ந்த இருட்டுக்குள் இருந்துவிட்டு வெளியே வந்து சிறு வெளிச்சத்தை பார்த்தாலும் கண்கள் கூசிபோகும். அவள் உணர்வுகளும் அப்படித்தான் இருந்தன.

சுடுகாட்டிற்கு வெளியே ஒரு பரந்த உலகம் இருக்கிறது என்று அவள் அப்போதுதான் அறிந்து கொண்டாள். அவள் பார்வையும் ஆசைகளும் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைய துவங்கின.

பார்க்கும் விஷயங்கள் அனைத்தும் ஆச்சரியங்களும் அதிசயங்களுமாக இருந்தன. பெண்கள் அலங்கரித்து கொள்வதை பார்க்கையில் விசித்திரமாக இருந்தது. அதுவரையில் அம்மாவும் அவளை சுற்றியுள்ள பெண்கள் யாரும் தங்களை இப்படி எல்லாம் அலங்கரித்து கொண்டதில்லை. வண்ணமயமாக உடை அணிந்து கொண்டதில்லை. எப்போது அழுக்கு படிந்த புடவைகளையே அம்மா உடுத்துவாள். ஜாக்கெட் எதுவும் இல்லாமல் உடம்போடு அதனையே சுற்றி கொண்டிருப்பாள்.

ஊருக்குள் சிலர் அவர்கள் உடுத்திய பழைய புடவைகளை கொடுத்தால் கூட அம்மா அதனை கட்டமாட்டாள். பத்திரமாக எடுத்து என்றாவது விசேஷ நாட்களில் கட்டுவாள்.

நகரத்து பெண்களை எல்லாம் பார்க்கும் போது கனிக்கு ரசனையாக இருந்தது. அவளுக்குள் இருக்கும் பெண்மை மெல்ல மெல்ல விழித்து கொள்ள ஆரம்பித்தது. அங்கிருந்ததுதான் பேதையவளுக்கு புதிது புதிதாக கனவுகளும் ஆசைகளும் மலர்ந்தன.

அண்ணன்கள் உலகம் வேறு. தன்னுடைய உலகம் வேறு என்று மெல்ல மெல்ல தமையன்களிடமிருந்து அவள் கழன்று கொண்டாள். ஆனால் அதிகபட்சம் அந்த நகரத்து வாழ்க்கை இரண்டு வருடம் கூட முழுதாக நீடிக்கவில்லை.

  அடித்தட்டு மனிதர்களின் வாழ்க்கையில் இந்த ஏற்றத்தாழ்வு மிக்க சமூகம் மட்டும் சதி செய்வதில்லை. பச்சாதாபம் பார்க்காமல் விதியும் கூட சதி செய்துவிடுகிறது.

மூத்த அண்ணனுக்கு மஞ்சள் காமாலை முற்றி குணப்படுத்த முடியாமல் இறந்து போய்விட முதல் முறையாக மரணம் எத்தனை வலி நிறைந்தது என்று கனி உணர்ந்த தருணம் அதுதான்.

கன்னியப்பன் மனம் நொந்து போனான். பிறந்த ஊரையும் குலத்தொழிலையும் விட்டு வந்ததால்தான் அவர்களின் குலதெய்வம் தன் மகனை காவு வாங்கிவிட்டதாக நம்பினார்.

கடவுளர்கள் காவு வாங்குவார்களா என்ன?

அடுத்த மாதமே மீண்டும் சுவற்றில் அடித்த பந்து போல குடும்பத்துடன் ஊர் திரும்பியவன் தன் வீட்டு வாசலில் கல்லாக நட்டு வைத்திருந்த கன்னி தெய்வத்தை வழிப்பட்டு தன் பாவத்தை தீர்த்து கொள்ள சொல்லி விழுந்து சரணடைந்தவன்தான். அதற்கு பின்பு அந்த ஊர் எல்லையை தாண்டவே இல்லை.

மீண்டும் அதே வெட்டியான் வாழ்க்கை. சுடுகாட்டு உலகம். அதன் பின்பாக கேட்கும் ஒவ்வொரு மரண ஓலமும் கனிக்கு தனது மூத்த தமையனை நினைவுப்படுத்தியதில் அவள் அந்த சுடுகாட்டு வாழ்க்கையை அடிஆழத்திலிருந்து வெறுக்க துவங்கினாள்.

வளர வளர அவளுக்குள் இருந்த வெறுப்பும் வளர்ந்து கொண்டே போனது.

ஆனால் அவர்கள் வாழ்க்கையிலும் சிற்சில மாற்றங்களும் நிகழ்ந்தன. ஊருக்குள் வரவே அனுமதிக்கப்படாத போதும் சில பெரிய மனிதர்களின் பெரிய மனங்களால் அவர்கள் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் படிக்க அனுமதிக்கப்பட்டார்கள். 

பள்ளியில் படித்து கொண்டிருந்த காலத்தில்தான் மற்ற பெண்கள் நடை உடை பாவனைகளை எல்லாம் பார்த்து பார்த்து ஏக்கப்பட்டாள் கனி. ஊர் மனிதர்கள் கொடுத்த பழைய துணிகளைதான் அவள் எப்போதும் உடுத்தி கொள்வாள். அதில் ஒன்றிரண்டுதான் கிழியாமல் நல்ல நிலையில் இருக்கும்.

மெல்ல மெல்ல அவளுக்கும் ஊருக்குமாக தொடர்பு ஏற்பட்டது. ஆனால் சிலர் நடந்து கொண்ட முறைகளிலும் பேசிய வார்த்தைகளிலும் அவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகம் என்பதை தெள்ளதெளிவாக விளங்கி கொண்டாள் கனி.

அப்பா மண்டியிட்டு முதுகெலும்பொடிய நின்று கூனி குறுகி பெரிய மனிதர்கள் முன்னே நிற்கும் போதெல்லாம் அவளுக்குள் ஏதோ ஒன்று நொறுங்கி போகும்.

 எல்லாவற்றிக்கும் மேல் அவளுடன் பயின்ற பள்ளி மாணவிகள் சிலர் அவளிடம் தோழமையாக பழகியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது அவளுக்கு.

அவர்களுள் கயல் அவளுக்கு நெருங்கிய தோழியானாள். அவள்  அழைத்ததன் பேரில் ஒரு முறை கனி அவள் வீட்டிற்கு சென்றாள்.

“வா கனி… வா… உனக்கு ஒன்னு காட்டுறேன்”

“இல்ல இருக்கட்டும் கயல்… நான் உள்ளே வரல”

“நீ வா” என்று அவள் கை பிடித்து உள்ளே அழைத்து சென்று அவள் அலமாரியில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்த கொத்தான மயிலிறகுகளை காட்டிய போது கனி அதிசயித்தாள்.

“இவ்வளவா… ஏதுடி உனக்கு”

“எங்க மாமா எடுத்துட்டு வந்து கொடுத்தாரு” என்று பேசி கொண்டிருக்கும் போதே அங்கே வந்த கயலின் அம்மா கனியை பார்த்த கணம் ஏதோ அசிங்கத்தை மிதித்துவிட்டது போல,

 “ஏய்… சீ சீ… நீ எப்படி உள்ளே வந்த… போ போ போ” என்று ஏதோ ஆடு மாடை துரத்துவது அவளை வெளியே துரத்திய சம்பவம் இத்தனை வருடத்திற்கு பிறகும் கூட அவள் மனதில் ரணமாய் கிடக்கிறது.

எப்போது யோசித்து பார்த்தாலும் மூளைக்குள் சுர்ரென்ற ஒரு கோபம் ஏறும். 

அந்த சமயத்தில் அவளுக்கு எட்டு ஒன்பது வயது இருக்கும். அப்போதே தன் பிறப்பும் வாழ்க்கையும் சாபக்கேடானது என்று முடிவு செய்து கொண்டாள்.

“ஏம்மா… கூடையை ஓரமா வை மா… நடுப்புற வைச்சிட்டா… நான் எப்படி மா போய் டிக்கெட் போடுறது” என்று நடத்துனர் காட்டு கத்தலாக கத்தவும் அந்த பேருந்து முழுக்கவும் ஆட்கள் நிரம்பி வழிவதை கவனித்த கனி தன் நினைவுகளிலிருந்து மீண்டு வந்தாள்.

கூடையை வைத்து கொண்டு அந்த பெண்மணி அப்படியும் இப்படியுமாக அவஸ்த்தைப்பட, “நமக்குன்னு வந்து சேருதுங்க பாரு” என்று தலையிலடித்து கொண்டு அந்த நடத்துனர் தாண்டி சென்றார்.

அடித்தட்ட சமான்ய மனிதனை சகமனிதனாக அல்லாது அது இதுவாக பாவிக்கும் இந்த உணர்வுதான் ஏற்ற தாழ்வின் அடிப்படை. ஒரு மனிதன் செய்யும் தொழிலையும் தோற்றத்தையும் வைத்துதான் இவன் மேலே அவன் கீழே என்று முடிவு செய்கிறான். மதிப்பு தருகிறான்.

 அந்த கூடைப் பெண்மணி சிரமப்பட்டு ஒதுங்கி நின்று கடைசியாக தன் கூடைக்கு பக்கத்திலேயே குத்த வைத்து கீழே அமர்ந்து கொண்டாள். பாவம்! அரசு பேருந்தை விட்டால் அவளுக்கு வேறு வழியும் இல்லை. அன்றாட ஜீவனத்திற்காக இப்படி எல்லாம் பேச்சு வாங்க வேண்டும் என்பது அவர்கள் விதி.

 அவர்களுக்கு மானம் ரோஷம் போன்ற உணர்வுகள் எல்லாம் இருக்க கூடாது. ஆனால் அது அதிகப்படியாக இருந்ததுதான் கனியின் ஆகபெரிய பிரச்சனை. அதற்கு அவள் தேடிய வழிமுறை அதை விடவும் மிக பெரிய பிரச்சனையில் முடிந்தது.    

பேருந்து மெல்ல நகர துவங்கவும் சில்லென்று முகத்தில் மோதிய காற்றை அனுபவித்தபடி இருந்தவளின் நினைவுகள் பல வருடங்கள் பின்னோக்கி நகர்ந்தன.

  

shanbagavalli, Chitrasaraswathi and 5 other users have reacted to this post.
shanbagavalliChitrasaraswathijamunaraniRathiThani Sivaindra.karthikeyanchitti.jayaraman
Quote

கனிக்கு எவ்ளோ பிரச்சனை எல்லாத்தையும் தாண்டி முட்டி மோதி வந்தால் ... திரும்பவும் முதலில் இருந்தா ....அக்கிராம மக்கள் இவளை ஏற்று கொள்வார்களா இல்லை ??????யோசிக்க முடியல ..  கஸ்ட்மா இருக்கு 😥

Quote

Super ma 

You cannot copy content