You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 12

Quote

ஆரம்பத்தில் அறிவு, ஆற்றல், செல்வம் என்பவை எல்லாமே பெண் கடவுளின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததாகத்தான் எல்லா புராணங்களுமே சொல்கின்றன. உதாரணதிற்கு அறிவுக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி, வீரத்திற்கு பார்வதி என்று முப்பெரும் தேவியர் இருந்ததைப் போலவே கிரேக்கத்தில் 'ஆத்தனா, ஆப்ரடைடி, ஹீரா' ஆகிய பெண்களும் , ரோமாபுரியில் மினர்வா, வீனஸ், ஜீனோ ஆகிய பெண்களும் தெய்வங்களாக துதிக்கப்பட்டனர்.

ஆனால் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திடீரென இந்த பெண் கடவுள்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, அதுவரை யார் என்ன என்று தெரியாத ஆண் கடவுள்கள் பீடத்தில் ஏறினார்கள். 

இந்த ஆட்சிமாற்றம் இந்திய புராணங்களில் மிக அப்பட்டமாக விவரிக்கப்பட்டுள்ளன. லட்சுமி, சரஸ்வதி, பார்வதி திடீரென்று அவர்களது கணவர்களாகிய விஷ்ணு, பிரம்மன், சிவன் ஆகியோரின் உடலோடு ஐக்கியமாகிவிடுகிறார்கள்.

இப்படியாக மனித பெண், அறிவு, படைப்பு என்ற தனது இருபெரும் ஆற்றல்களை இழந்து, தன் உயர் அந்தஸ்திலிருந்து வீழ்ச்சியுற்றாள். இதில் ஒரு விசித்திரம் என்ன தெரியுமா?

அவள் தன் அளவில்லா ஆற்றல்களை இழந்ததே மிக அதிக அறிவுள்ள ஆண்களை தேர்ந்தெடுத்து இனவிருத்தி செய்த அவளின் வேட்கையினால்தான். 

மனித ஆண் அறிவாளியானதும் மனித பெண் அடிமையாகி போனதற்கும் ஆண்கள் காரணம் அல்ல, பெண்களேதான் காரணம்!  

12

கன்னிகை அந்தப் பச்சை சுடிதாரை தன் மேலே வைத்து பார்த்தாள். எப்போதும் அவளின் ஒல்லியான தேகத்திற்கு தொலதொலவென்ற உடைதான் கிடைக்கும். அதுவும் பழையதாக கிழிந்ததாகதான் இருக்கும். ஆனால் அந்த சுடிதாரில் சின்ன கிழிசல் கூட இல்லை. அதுவும் அவள் உடலுடன் பொருத்தி பார்த்த போது அந்தளவு கச்சிதமாக இருந்தது.

 அங்கே வந்த சாந்தி பட்டென்று அந்த உடையை பிடுங்கி கொண்டு, “நல்லா இருக்க துணியெல்லாம் போட்டு நாசம் பண்ணாதே… கொடு… இப்படி” என்று எடுத்து அவசரமாக அதனை பழைய பெட்டி ஒன்றில் சுருட்டி வைக்க, 

“ம்மா ம்மா… நான் அதை ஒரே தடவையை போட்டு பார்க்கிறேனே” என்று கெஞ்சினாள் கனி.

“ஒன்னும் தேவையில்ல”

“ம்மா… ம்மா… ம்மா போட்டு பார்த்துட்டு உடனே நானே அதை தூக்கி உள்ளே வைச்சிடுறேன் ம்மா” என்று இறைஞ்சி பார்த்தாள். ஆனால் சாந்தியின் மனம் இறங்கவில்லை.

“யாரு… நீ போட்டு பார்த்துட்டு உடனே வைச்சுடுவியா… போடி அங்கிட்டு” என்று அந்த பெட்டியை மூடி அதன் மீது பழைய சமான்களை எல்லாம் போட்டு ஓரமாக வைத்துவிட்டார்.

இனி அதை எடுக்க முடியாது. ஏக்கத்துடன் அந்த பெட்டி இருந்த திசையை பார்த்தபடி அவள் அமர்ந்து கொள்ள,

“அடுப்பு மேல கஞ்சி வைச்சிருக்கேன்… உங்க அப்பன் வேலை எல்லாம் முடிச்சிட்டு வந்ததும் ஊத்தி கொடு… நான் போய் சுள்ளி பொறுக்கியாந்திடுறேன்” என்று சாந்தி வெளியேறினாள்.

கனி அமைதியாக வந்து வாசலில் அமர்ந்து கொண்டாள். சுடுகாட்டு மேடையில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது அந்த பதினாறு வயது பெண்ணின் இளம் தேகம். பிணத்தை தூக்கி வரும் போது தூரத்திலிருந்து எட்டி பார்த்தாள்.

முகம் தெரியவில்லை. ஆனால் முகம் தெரியாத அந்த பெண்ணின் உடை அவளுக்கு கச்சிதமாக பொருந்துகிறது எனில் தேகவடிவில் அவளும் தன்னை போன்றுதான் இருப்பாள் என்றுதான் தோன்றியது.

  ஏதோ பெரிய குடும்பத்து பெண்ணாம். தனியார் பள்ளியில் படித்து கொண்டிருந்தாளாம். தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துவிட்டதால் விரும்பிய படிப்பை படிக்க முடியாது என்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.

கேள்விப்பட்டதும் விசித்திரமாக இருந்தது கனிக்கு. விரும்பியது கிடைக்காமல் போவதற்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்றால் தன் வாழ்வில் தினம் தினம் தான் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும்.

எல்லா வசதிகளும் இருந்தும் வாழ்க்கையை புறக்கணித்துவிட்டு… அவள் கண் முன்பாகவே எரிந்து சம்பலாகி கொண்டிருக்கும் அந்த பெண்ணும், எந்த வசதிகளும் இன்றி வெறும் கனவுகளை மட்டும் சுமந்து கொண்டிருக்கும் அவளும் விதி படைத்திருக்கும் வெவ்வேறு வகையான துருவங்கள்.

மீண்டும் பள்ளிகூடம் தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தது. அதுவரையில் இந்தச் சுடுகாட்டு வாழ்க்கைதான் என எண்ணும்  போதே கனிக்கு விரக்தியும் எரிச்சலுமாக இருந்தது.

அங்கே ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகத்தை கடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

ஆமை வேகத்தில் நகர்ந்தாலும் எப்படியோ நாட்களை இழுத்து பிடித்து நகர்த்தி கொண்டு பள்ளிக்கு வந்து சேர்ந்துவிட்டாள். குல்மொஹர் மரங்கள் பூத்து குலுங்கி கொண்டிருந்தன. மைதானம் எங்கும் சிவப்பு கம்பளமாக சிதறி கிடக்கும் பூக்களின் பாதையில் கால் பதித்து நடக்கும் போது கனியின் மனவுணர்கள் சிலிர்த்து எழுந்தன. 

உற்சாகமாக அவள் தன் வகுப்பிற்குள் நுழைந்த போது அதிகபட்சம் பத்து பேர்தான் இருந்தனர். அவர்களுள் மூன்று பேரை தவிர வேறு யாரையும் அவளுக்கு தெரியவில்லை. நல்ல வேளையாக அவள் தோழி கயல் இருந்தாள்.

“கயலு… சீக்கிரமா வந்துட்டியா?” என்று கேட்டு கொண்டே அருகே அமர,

“காலையிலயே அப்பா கொண்டு வந்து விட்டுட்டு போயிட்டாரு? இனிமே பஸ்ல போக வேணான்னு சொல்லிட்டாரு… அவரே தினைக்கும் கூட்டிட்டு வந்துட்டு கூட்டிட்டு போறன்னுட்டாரு” என்றாள்.

“அப்போ இனிமே நான் தனியாதான் பஸ்ல போகணுமா?” என்று கனி ஏக்கத்துடன் கேட்க, “ம்ம்ம்ம்” என்று கயல் சோகமாக தலையசைத்தாள்.

கனி யோசனையுடன், “திவ்யாவாச்ச்சும் வருவாளா?” என்று கேட்க,

“அவ நம்ம ஸ்கூலே இல்ல… அவங்க அப்பா பிரைவட் ஸ்கூல சேர்த்துட்டாரு” என்றாள்.

“ஏனாம்… இங்கேயே படிச்சிருக்கலாம் இல்ல”

“இங்க படிச்சு ஒன்னும் தேறாதுன்னு தெரிஞ்சுக்கிட்டுதான் அங்கே சேர்த்திருக்காரு… எங்க அப்பாவுக்கு நான் எங்க சேர்த்தாலும் தேற மாட்டேன்னு தெரியும்… அதான் இங்கேயே கொண்டு வந்து தள்ளிட்டாரு” என்று கயல் சொன்ன விதத்தில் கனியின் கவலை எல்லாம் மறந்து சிரிப்பு வந்துவிட்டது. 

பின் தோழிகள் இருவரும் நெருங்கி அமர்ந்து ஊர் கதையடித்து கொண்டிருந்தனர்.

“உனக்கு தெரியுமா… எங்க பக்கத்து வீட்டுல இருந்துச்சே கீர்த்தனா… அது ஓடி போயிடுச்சு” என்றாள்.

“இது எப்போ…?”

“இரண்டு வாரம் முன்னாடிதான்… அதுவும் யார் கூட ஓடி போச்சுங்குற… நம்ம ஜெயா அண்ணானோட” என்றதும் கனி வாயில் கை வைத்து கொண்டு,

“அய்யய்யோ… எதுவும் பிரச்சனை ஆகலயா?” என்று கேட்டாள்.

“ஆகாம… வெட்டி கூறு போட்டிரலாம்னு இரண்டு பேரையும் தேடிட்டு இருக்காங்க… எங்க தெரு முழுக்க ஒரே கலவரம் சண்டை… மாட்டினாங்க செத்தாங்க”

“இது தப்பு… இப்படி ஓடி போயிற கூடாது” என்று கனி சொல்லவும்,

“ஓடி போகலன்னா கூப்பிட்டு வைச்சு கல்யாணம் பண்ணி வைச்சுடுவாங்களா… நீ வேற… சாதி வெறி பிடிச்சவனுங்க… பிடிச்ச மாதிரி எல்லாம் நம்மள வாழவே விடமாட்டாங்க… பிடிச்ச பையனா பார்த்தோமா… பேசி பழகணுமோ… நல்லவனா தெரியிறான்… நம்மள வைச்சு காப்பாத்துவான்னு நம்பிக்கை வந்துச்சா… அப்புறம் யோசிக்கவே கூடாது… கீர்த்தனா மாதிரி கூட்டிட்டு ஓடிடணும்”

“அடிப்பாவி… என்னடி இப்படி பேசுற… நீயும் எவனயாச்சும் கூட்டினு ஓட போறியா என்ன?” என்று கேட்டு கனி அதிர்ச்சியாக,

“நான் ஏன் ஓடி போறேன்… எங்க சாதில கொஞ்சம் படிச்ச நல்ல பசங்க எல்லாம் இருக்காங்க… என் மாமன் பசங்களே இரண்டு பேர் இருக்கான்… அவனுங்கள எவனாயச்ச்சும் ஒருத்தன கட்டிகிட்டா என் லைப் செட்டில்ட்… ஆனா உன் நிலைமையை யோசிச்சு பார்த்தியா?” என்று கேள்வியுடன் நிறுத்தினாள் கயல்.

கனி அவளை குழப்பமாக ஏறிட, “உங்க சாதிலயே எவானாச்சும் பிணம் எரிக்கிறவனா பார்த்து உனக்கு கட்டி வைச்சிருவாங்க… அப்புறம் காலம் பூரா உனக்கு இதே வாழ்க்கைதான்” என்றதும் கப்பென்று ஒரு பயம் நெஞ்சை அழுத்தியது.

“நான் சொல்றதை கேளு… எவனாச்சும் நல்லா படிச்ச பையனா பார்த்து காதலிச்சு… கூட்டிட்டு ஓடி போயிடு” என்று கயல் சொன்னதை கேட்டு பெருமூச்செறிந்த கனி,  

“விளையாடதே கயல்… அப்படி எல்லாம் பண்ண முடியாது… பெரிய வம்புல முடிஞ்சிடும்… நான் எப்படியாவது பிளஸ் டூ முடிச்சு… நல்ல வேலைல சேர்ந்துட்டேனா?” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே கயல் இடையிட்டு,   

“கனவுல மிதக்காதே… உங்க வூட்டுல உன்னை படிக்க அனுப்பிரதே நீ இன்னும் வயசுக்கு வரலன்னுட்டுதான்… இல்லாட்டி எப்பவோ உனக்கு கல்யாணத்தை முடிச்சிருப்பாங்க” என்றவள் கடைசி வார்த்தையை ரகசியமாக அவள் காதோடு சொல்லவும் கனிக்கு சுருக்கென்று தைத்தது.

அவள் சீற்றமாக விழிகளை உருட்ட, “கோபப்படாதே கனி… உன் நல்லதுக்காண்டிதான் சொல்றேன்” என்று கயல் ஆதுரமாக பேசி அவள் கையை அழுத்தி பற்றினாள்.

கயல் சொல்லும் விஷயத்தின் ஆழம் கனிக்கு புரியாமல் இல்லை.  

ஒரு வேளை அவள் பூப்படைந்திருந்தால் அவள் அம்மா அவர்கள் வீட்டருகில் வசிக்கும் மாயனை அவளுக்கு பேசி, கல்யாணத்தை கூட இந்நேரம் முடித்திருப்பார்கள்தான்.

அப்படியொரு விருப்பம் அம்மாவின் மனதிலிருக்கிறது என்பது அரசல் புரசலாக அவர்கள் பேச்சின் மூலம் கனிக்கும் தெரியும். அந்த பேச்சு வளராத வரையில் அது பற்றி யோசிக்க ஒன்றுமில்லை என்று எண்ணியிருந்தாள்.

ஆனால் இப்போது யோசித்து பார்த்தால் மாயனை கணவனாக கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அவளை விட ஒரு வயதோ இரண்டு வயதோ மூத்தவன். பள்ளிக்கு அவனும் அவ்வப்போது வந்து போவான்.

மற்றபடி அவன் அதிகமாக பறையடிக்கும் போதுதான் பார்த்திருக்கிறாள். தோள்வரை நீண்டு முகத்தில் தொங்கும் அடர்த்தியான தலை முடியும் கருத்த தேகமும், அவன் பார்க்க முரடனை போன்றே இருப்பான். அதனாலயே அவனை அவளுக்கு சுத்தமாக பிடிக்காது. பக்கத்தில் போகவோ அல்லது பேச்சு கொடுக்கவோ மாட்டாள்.

அவனை திருமணம் செய்வதும் தான் மலையிலிருந்து குதித்து சாவதும் ஒன்று. விருப்பங்கள் நிறைவேறாமல் தற்கொலை செய்து கொண்ட அந்த பதினாறு வயது பெண் நினைவுக்கு வந்தாள். தன் கெதியும் நாளை அதுவாகிவிடலாம்.

கயல் பேசியதெல்லாம் வைத்து கனியின் மூளை யோசித்து யோசித்து சூடேறி போனது. நன்றாக குழப்பிவிட்டு அவள் பாட்டுக்கு பள்ளி முடிந்து தன் தந்தையுடன் சென்றுவிட்டாள்.

அடுத்து வந்த நாட்களில் அடிக்கடி திரும்பும் இடங்களில் எல்லாம் மாயனை பார்க்க நேர்ந்ததில் அவளுக்கு பீதியை கிளப்பியது. பயத்தில் குளிர் காய்ச்சல் வந்து படுத்தவள்தான். அடுத்த நாள் பூப்பெய்திவிட்டாள்.

வயதுக்கு வர வேண்டுமென்று அவள் ஆசைப்பட்ட போதெல்லாம் நடக்காத நிகழ்வு, அவள் நடக்கவே கூடாது என்று நினைக்கும் போது நடந்துவிட்டது.

பூவாக, காயாக, கனியாக செழிக்க காத்திருக்கும் அவள் பெண்மையின் வளர்ச்சியை கனியால் கொண்டாட்ட மனநிலையுடன் அனுபவிக்க முடியவில்லை. மனம் முழுவதும் பயம் அப்பி கொண்டது.

கன்னியப்பன் நேராக சேதுராமனுக்கு தகவல் சொல்லி அவர் வாழ்த்தி கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு வந்து அவர்கள் ஆட்களை மட்டும் அழைத்து வீட்டின் முன்பாகவே எளிதான முறையில் மகளுக்கு சடங்கு ஏற்பாடு செய்திருந்தான்.

அந்த ஏற்பாட்டை பார்த்து கனி மிரட்சியடைந்தாள். நடத்தப்படும் சடங்கு கூட அவள் திருமணத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சியாகவே தோன்றியது. அங்கே ஒரு ஓரமாக மாயனும் நின்றிருந்தான். அவர்கள் வீட்டிலிருந்துதான் அவளுக்கு புது புடவை ஒன்று வாங்கி வைக்கப்பட்டது. மிக சாதராண புடவைதான் என்றாலும் மஞ்சளும் சிவப்புமாக பார்க்க பளிச்சென்று மின்னியது.

“என்ன அண்ணி… நம்ம இருக்க இருப்புக்கு இது வேறயா”

“நம்ம புள்ளைக்கு செய்யாம வேற யாருக்கு?” என்று மாயனின் அம்மா செவ்வந்தி அன்பாக சொல்ல,

“புடவை ரொம்ப அழகா இருக்கு அண்ணி…” என்றாள் சாந்தி.

“நம்ம மாயன்தான் பார்த்து வாங்கியாந்தான்” என்றவர் சொன்னதும் கனியின் அடிவயிற்றில் ஏற்கனவே இருந்த வலியுடன் ஜிவ்வென்ற ஒரு  பயஉணர்வும் மேலேறி உடலெல்லாம் பரவியது. உள்ளம் படபடத்தது.

“கனிக்கு புது துணி போட்டுக்கணும்னு ரொம்ப ஆசை அண்ணி”

“கட்டிவிடு சாந்தி” என்று செவ்வந்தி சொல்ல, சாந்தியும் கனியின் மனநிலை புரியாமல், “வா இந்த புடவையை கட்டிக்கோ” என்று அழைத்தாள். அவளது கை கால்கள் எல்லாம் வெடவெடத்தன.

“இல்ல எனக்கு வேணாம்”  

“நீதான் புதுசு போட்டுக்கணும்னு ஆசைப்படுவ இல்ல”

“இல்ல வேண்டாம் எனக்கு பழையசே போதும்”

“அப்படி எல்லாம் சொல்ல கூடாது… அண்ணி ஆசையா உனக்காக கொண்டு வந்திருக்காங்க இல்ல”  

“எனக்கு வேணாம்மா” கனியின் குரல் நடுங்க,  

“கனி எழுந்து வா” என்று சாந்தியின் குரல் கோபமாக உயர்ந்தது.  

“மாட்டேன்… எனக்கு வேண்டாம்” அவளும் விட்டு கொடுக்காமல் உறுதியாக நின்றாள்.

“ஏய் சீ எழுந்து வா” என்று சாந்தி கட்டாயப்படுத்தி அவள் கையை பிடித்து தூக்கவும்,

“எனக்கு வேணாம்” என்று அந்த புடவையை தூக்கி எறிந்தவள்,

“எனக்கு சடங்கு இந்த மன்னாங்கட்டி எதுவும் வேணாம்” என்று வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.

“பைத்தியம் புடிச்சிருக்கா உங்க பொண்ணுக்கு” என்று சாந்தி சீற்றமாக கணவனிடம் கத்த,

“நீ சும்மா கத்தாதே… ஏதோ புள்ள பயந்திருக்கு… நான் என்னன்னு கேட்டுட்டு வரேன்” என்று உள்ளே வந்து கன்னியப்பன் மகளின் அருகில் அமர்ந்து, “கனி என்னம்மா” என்று நிமிர்ந்து வினவ, பொங்கி வந்த அழுகையுடன் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு,

“எனக்கு வேணாம் பா… என்னை வுட்டுருங்க பா” என்று அழுதாள்.

கன்னியப்பனுக்கு மகளின் அழுகைக்கான காரணம் புரியவில்லை. சடங்கு நிகழ்ச்சி சங்கடத்துடன் முடிய, “நீங்க ஒன்னும் மனசுல வைச்சுக்காதீங்க அண்ணி” என்று சாந்தி செவ்வந்தியை சமாதானம் செய்தாள்.

“பரவாயில்ல… ஏதோ பயந்திருக்கா… புள்ளைய மிரட்டாம பொறுமையா பேசு”

“என்னத்த அவகிட்ட பொறுமையா பேச… கொழுப்பெடுத்து போய் சுத்துறா… எல்லாம் பள்ளிகூடம் போயிட்டு வர எழவாலதான்” என்று நொடித்து கொண்டு உள்ளே வந்த சாந்தி மகளை வார்த்தைகளால் வறுத்தெடுத்துவிட்டார்.

நல்ல நிகழ்ச்சி நடந்த தடம் கூட இல்லாமல் கனி ஏதோ இழவு விழுந்த வீட்டில் படுத்து கிடப்பது போல மூலையில் முடங்கி கிடந்தாள்.

அதனை பார்த்த சாந்தி கடுப்புடன், “என்னதான் பிரச்சனை உங்க பொண்ணுக்கு” என்று கேட்க,

“பள்ளி கூடத்துக்கு போனாஆஆ…” என்றவர் இழுவையாக இழுத்தபடி மனைவியை பயத்துடன் பார்க்க,

“எது?” என்று சாந்தி சீறி எழுந்தாள். அதற்கு பின் வீட்டில் பெரிய கலவரமெல்லாம் வெடித்து அடங்க,

“சரி… அனுப்பி தொலைங்க” என்று சாந்தி ஒரு வழியாக வழிக்கு வந்துவிட அடுத்த நாளே நடந்த பிரச்சனை எல்லாம் தூக்கி தூர எறிந்துவிட்டு கனி ஒரே ஓட்டமாக பள்ளிகூடம் கிளம்பிவிட்டாள்.

சிறகை விரித்ததும் பரந்த விரிந்த அந்த வானமே தனக்கு சொந்தமாகிவிடும் என்ற சிட்டுகுருவியின் மனநிலையில்தான் கனி குதித்து ஓடி தங்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தை அடைந்தாள். புதிதாக அவளுக்குள் பூத்திருக்கும் பெண்மையும் அந்த சந்தோஷத்திற்கு ஒரு வகையில் காரணம்.

தோழியிடம் தான் வயதுக்கு வந்துவிட்டதை சொல்ல வேண்டுமென்ற உத்வேகத்துடன் அவள் முன்னே வந்து நின்ற பேருந்தில் ஏற, எப்போதும் போல அவளுடைய இருக்கை அவளுக்காக காலியாக காத்திருந்தது. 

அவள் உட்கார்ந்த மறுகணம் அதே பேருந்தில் அந்த புன்னகை மன்னனும் எதிர்புறமாக ஏறினான். நடத்துனர் விசலடிக்க அவன் அவளை பார்த்து புன்னகைத்து கையசைத்தான். அதே முத்து பற்கள் பளிச்சிடும் காந்த புன்னகையுடன்!

ஆனால் அந்த புன்னகையும் கையசைப்பும் தனக்கானதுதானா என்று அவள் சந்தேகத்துடன் பின்புறம் திரும்பி பார்க்க, “கன்னிகை” என்று அழைத்தான்.

தேன் வந்து பாயுது காதினிலே என்பது போல ஒரு மாதிரி சிலாகிப்பு உணர்வுடன் அவனை விழிகள் விரிக்க பார்த்து, “என்னையா கூப்பிட்டீங்க” என்று கேட்டாள்.

“உன் பேர்தானே கன்னிகை… அப்போ உன்னைதான் கூப்பிட்டேன்” அவள் ஒரு மாதிரி மிதக்கும் உணர்வில் கிடக்க அவனே மேலும்,

“ஆமா எங்க உன் ப்ரெண்டை காணோம்” என்று ரொம்பவும் தெரிந்தவன் போல விசாரித்தான்.

“யாரு… யாரை கேட்குறீங்க”

“அதான் உன் கூட பக்கத்துலயே உட்கார்ந்துட்டு வருவாளே”

“கயல சொல்றீங்களா… அவ இப்ப எல்லாம் அவங்க அப்பா கூட போயிடுறா” என்றவள் ஏதோ ஒரு குழப்ப மனநிலையுடனே அவனுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தாள்.

அதற்குள் நடத்துனர் டிக்கெட் போட்டு கொண்டே, “பின்னாடி சீட் காலியா இருக்கு இல்ல தம்பி” என்றார்.

“உட்கார்ந்து எழுந்துக்கிறதுக்குள்ள ஸ்டாப் வந்துரும் ண்ணா” என்றவன் கம்பியை பிடித்து கொண்டு நிற்க,

கனி அவனை பார்த்து, “ஆமா என்னையும் கயலையும் எப்படி உங்களுக்கு தெரியும்?” என்று யோசனையாக கேட்க,

“அன்னைக்கு நீ உங்க அப்பா கூட வீட்டுக்கு வந்திருந்த இல்ல… அப்போ தாத்தா உன்னை பார்த்து பெருமையா பேசிட்டு இருந்தாரு” என்றான்.

“ஓ” அவள் வியப்புடன் அவனை நோக்க மேலும் அவன்,

“அதுவும் இல்லாம நானும் இதே பஸ்லதானே வருவேன்… அடிக்கடி உன்னையும் உன் ப்ரெண்டையும் பார்ப்பேன்… இந்த சீட்ல இரண்டு பேரும் ஒண்ணா உட்கார்ந்து அரட்டை அடிச்சிட்டு… பஸ்ல இருக்கவங்க காது ஜவ்வு எல்லாம் கிழியிற அளவுக்கு சிரிச்சிட்டு கதையடிச்சுட்டு வருவீங்களே” என, அவள் முகம் கூம்பி போனது.

“அப்படியா என்ன?” என்று கேட்டு அவள் விழிகளை சுருக்கவும் அவன் பக்கென்று சிரித்துவிட்டான்.

அவனின் அந்த பளிச்சிடும் சிரிப்பை பார்த்து கொண்டே இருக்கலாம் போல. சகஜமாக பேசி கொண்டிருந்துவிட்டு ஏதோ பொறியியல் கல்லூரியின் வளாக முன்பான பஸ் நிறுத்தத்தில்  இறங்கிவிட்டான்.

அவளோ போதையடித்தது போல கிறக்க நிலையில் கிடந்தாள். தான் இறங்க வேண்டிய நிறுத்தத்தை கூட மறந்து அமர்ந்திருந்தவள் நடத்துனர் அவளை தட்டி எழுப்பவும்தான் அடித்து பிடித்து இறங்கினாள்.

shanbagavalli, Rathi and 3 other users have reacted to this post.
shanbagavalliRathiThani Sivaindra.karthikeyanchitti.jayaraman
Quote

Mayan aththai paiyan ah ivaluku kayal nee nalla teliva iruka ma ivalai kulapi vittuta, nice update dear thanks.

Quote

Super Super

Quote

Super ma 

You cannot copy content