You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 14

Quote

நாய், மாடு, குதிரை, ஆடு என்று பலதரப்பட்ட பிராணிகளை பராமரித்த போதுதான் மனிதன் ஒரு முக்கியமான விஷயத்தை கவனித்தான். ஆண்- பெண் புணர்ச்சி என்ற ஒன்று நேர்ந்தால்தான் பெண் சினை கொண்டது. புணர்ச்சி நேராவிட்டால் பெண் கருத்தரிக்கவில்லை. இந்த புணர்ச்சியின் போது ஆண் மிருகம்தான் திரவத்தை பெண் மிருகத்தினுள் செலுத்துகிறது. பெண் ஆணுக்குள் எந்த திரவத்தையும் செலுத்தவில்லை. ஆக, பெண் உடல் ஆணின் திரவத்தை சுமக்கும் ஒரு பாண்டமாக மட்டுமே செயல்படுகிறது என்று முடிவு கட்டினான். 

இந்த நம்பிக்கையே ஆண்களுக்கு தங்கள் விந்தணுக்களின் மேல் உள்ள மதிப்பை அதிகரித்தது. 

'ஆஹா! அப்படியானால் எல்லா உயிரும் ஆணிடமிருந்துதான் உருவாகிறது. முன்பு நினைத்தது போல் பெண்ணிடமிருந்த அல்ல' என்ற இந்த அபிப்பிராய மாற்றம் ஏற்பட்டவுடனே பெண் தன் சிம்மாசனத்திலிருந்து தடாலென இறக்கப்பட்டாள்.

'இனி அவளை ஜனனி, ஜகத்காரணி, ஜகன்மாதா என்று கூப்பிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. அவள் வெறும் விந்துவை ஏந்தும் எந்திரம். அந்த விந்துவை உருவாக்கும் உறுப்புதான் வழிப்படத்தக்கது' என்ற புது கருத்துக்கள் புழங்க ஆரம்பித்ததுமே பெண் கடவுள் வழபாடு சரிந்து ஆண் கடவுள் வழிபாடு தலைதூக்கியது. 

தொடரும்...

14

“எனக்கு பொன்னியின் செல்வன் மாதிரி வேற ஏதாச்சும் புக்ஸ் எடுதுட்டு வந்து தர்றீங்களா?” என்று பேருந்து இருக்கையில் அமர்ந்ததும் கனி அருளிடம் கேட்டாள்.

“எடுத்து வந்து தரலாம்… ஆனா நீ இப்படி கதை புக் படிச்சா உன் படிப்பு கெட்டு போயிடுமே”

அவன் சொன்னதை கேட்டதும் அவள் முகம் துவண்டது. ஜன்னல் புறம் பார்வையை திருப்பி கொண்டு,

“ம்க்கும்… அப்படியே படிச்சு கிழிச்சிட்டாலும்” என்று முனக.

“இப்ப என்ன சொன்ன?” என்று கேட்டான். 

“பத்தாங்கிளாஸ் ஆச்சும் ஏதோ சுமாரா புரிஞ்சுது… ஆனா இந்த தடவை ஒண்ணுமே புரியல… ஸ்கூலில பாடமும் நடத்த மாட்டேங்குறாங்க… அப்புறம் என்னத்த படிக்க… நான் இந்த வருஷமே பெயிலானாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்ல” என்றவள் உதட்டை பிதுக்கி தன் நிலைமையை எடுத்துரைக்க,

“நீ பேசாம டியூஷன் ஏதாவது சேர்ந்து படி… நான் வேணா தாத்தாகிட்ட சொல்லி ஏதாச்சும் ஹெல்ப் பண்ண சொல்லட்டுமா?” என்று அக்கறையாக கேட்டான். அவள் கண்களில் கரித்து கொண்டு வந்தது.

“என்னைய எல்லாம் பள்ளி கூடம் அனுப்புறதே பெரிய விஷயம்… இதுல டியூஷன் வேறயா… அதெல்லாம் அனுப்ப மாட்டாங்க… எங்க அம்மா எனக்கு எப்படா கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு காத்திட்டு கிடக்கு… நான் டியூஷன் சேரணும்னு ஏதாவது சொன்னேன்… அவ்வளவுதான்… என் கதை முடிஞ்சுது” என்றவள் கவலையுடன் பேச அவளை பரிதாபமாக பார்த்தவன்,

“எனக்கு உன்  நிலைமை புரியுது… ஆனா நான் சொல்றதை கேளு… பிளஸ் டூ வரைக்குமாவது படிச்சுமுடிச்சிட்டு… கவர்மெண்ட் வேலைக்கு எக்ஸாம் எழுது…. உங்களுக்கு எல்லாம் கோட்டா இருக்கு கனி… ட்ரை பண்ணா கண்டிப்பா கிடைக்கும்” என்று விட்டு தன் நிறுத்தம் வந்ததை கவனித்து,

“சரி ஸ்டாப் வந்துடுச்சு… அப்புறமா பேசலாம்” என்று இறங்கிவிட்டான்.

அவன் சொன்னதை பற்றி கனி தீவிரமாக யோசித்து பார்த்தாள். ஒரு பக்கம் பள்ளி படிப்பு என்பதே அவளுக்கு தரிகிட தோமாக இருக்கும் போது அரசாங்க வேலை எல்லாம் எப்படி?

அவளுக்கு உண்மையிலேயே புரியவில்லை. ஆனால் அருள்மொழி அடுத்த நாள் வரும் போது அரசாங்க வேலைகளில் சேர்வது குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை அவளுக்கு எடுத்து வந்து கொடுத்தான்.

“இந்தா… இந்த புக்கை படி… இதுல கவர்மன்ட் ஜாப் பத்தி நிறைய இன்பர்மஷன் இருக்கு… எனக்கெல்லாம் இது எந்தளவுக்கு பயன்படும்னு தெரியல… ஆனா உனக்கு நிச்சயம் பயன்படும்… நீ அன்னைக்கு சொன்ன மாதிரிதான்… நம்ம ஊரூங்கல சாதிதான் எல்லாம்… ஆனா அதே சாதி அடையாளமே… நீ மேலே வர உனக்கு உதவியாவும் இருக்கும்” என்றவன் மேலும் அவளை அக்கறையுடன் பார்த்து,

“கொஞ்சம் கஷ்டப்பட்டு படி… படிச்சா மட்டும்தான் நீங்க மேல வர முடியும்” என்று விட்டு செல்ல, கனி வியப்புற்றாள்.

அவளை பொறுத்தவரை பள்ளிகூடம் என்பது சுடுகாட்டு வாழ்க்கையிலிருந்து தப்பிக்கும் ஒரு தற்காப்பு கருவி மட்டும்தான். ஆனால் அதே படிப்பு தன் வாழ்க்கையின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும் என்று அருள்மொழியின் வார்த்தைகள் அவளுக்கு வியப்பையே ஏற்படுத்தின.

அதுமட்டுமல்லாது அவளாலும் படித்து முன்னேற முடியுமென்று நம்பிக்கையாகவும் வழிகாட்டுதலாகவும் பேசியவர்கள் என்று இதுவரையில் யாருமே இல்லை.

‘நீ எல்லாம் படிச்சு என்ன கிழிக்க போற’ என்று அவமானப்படுத்தியவர்களும்,

‘உங்களுக்கு எல்லாம் படிப்பு வராது’ என்று அவள் சாதியை குத்தி காட்டி அசிங்கப்படுத்தியவர்களும்தான் அதிகம். அதில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள்தான்.

அந்த நொடி கனிக்கு அருள்மொழி மீதான ஈர்ப்பு பூரணமான நன்மதிப்பாக உயர்ந்திருந்தது. காதல் என்ற உணர்வை எல்லாம் தாண்டி அவன் அவள் மனதில் அசைத்திர முடியாத ஒரு இடத்தை அன்று பிடித்துக் கொண்டான்.

அவன் கொடுத்த புத்தகத்தை புரட்டி பார்த்த போது அவளுக்கு பாதி விஷயம் புரிந்தும் புரியாமலும்தான் இருந்தது. இதை எப்படி செய்வது என்ற யோசனையிலேயே இரண்டு நாள் விடுமுறை கடந்துவிட்டது.

 அடுத்த வாரம் முழுக்க பள்ளியில் சுதந்திர தினத்திற்கான ஆயத்தங்கள் நடந்தன. விழா அன்று நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கயல் கலந்து கொள்ள விரும்பியதால் கனியையும் சேர்த்து இழுத்துவிட்டிருந்தாள்.

நடன நிகழ்ச்சிக்காக அவர்களிடம் இருக்கும் நல்ல உடை ஒன்றை அணிந்து கொள்ள சொல்லிவிட்டிருந்தனர். கனி தன் அம்மாவிடம் கெஞ்சி கேட்டு அந்தப் பச்சை சுடிதாரை அணிந்து கொண்டு வந்தாள்.

சுதந்திர தின விழாவிற்கு தலைமை ஏற்ற மாவட்ட ஆட்சியர் நடன நிகழச்சி சிறப்பாக இருந்தது என்று தனிப்பட்ட முறையில் அவர்கள் குழுவை அழைத்து பாராட்டினார். மற்றொரு புறம் அவள் அணிந்திருந்த சுடிதார் மிகவும் கச்சிதமாகவும் அழகாகவும் பொருந்தியது என்று கயல் உட்பட அவள் உடன் பயிலும் மாணவிகள் எல்லாம் புகழ, அன்று கனி எல்லையில்லா சந்தோஷத்தில் மிதந்தாள்.

அவள் வயதிற்குணடான உற்சாக மனநிலையில் திளைத்தவளுக்கு அருள்மொழியை அன்று பார்க்க முடியாத போனது மட்டும்தான் ஒரே ஒரு குறை. விழா முடிந்து பள்ளியிலிருந்து புறப்பட்டு பேருந்தில் ஏறியதும் மழை தூற தொடங்கியிருந்தது. அவள் இறங்கி சாலையில் கொஞ்ச தூரம் நடந்ததும் இடியும் மின்னலுமாக மழை அடித்து ஊற்ற, அவசர அவசரமாக ஓடிச்சென்று அவர்கள் ஊர் ஸ்ரீ கன்னிகை தேவி கோவில் மண்டபத்தில் சென்று ஒதுங்கினாள்.

 மழை மேலும் வலுத்ததில் அவளால் அங்கிருந்து நகர முடியவில்லை. அதற்குள் அங்கே ஒதுங்குவதற்கு அவசரமாக ஓடி வந்த நால்வர் அவள் மண்டபத்தில் நிற்பதை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டனர்.

“கன்னியப்பன் பொண்ணு” என்று அவர்களில் ஒருவன் தெரிவிக்க ,

“யாரு… வெட்டியான் மவளா” என்று மற்றவன் உக்கிரத்துடன் கேட்க,

“ஆமா ண்ணா” என்றான்.

“என்ன திமிரு?” என்று அவர்கள் பேசி கொண்டே சீற்றத்துடன் கோவில் மண்டபத்தை நெருங்கவும் கனி அவர்களை பார்த்து அச்சமுற்றாள்.

  எதிரே நின்றவன் விழிகளில் உஷ்ணம் ஏறியது. உடனடியாக அங்கிருந்து சென்றுவிட வேண்டுமென்று அவள் முன்னே காலெடுத்து வைக்கவும்,

“ஒத்த… ஊர் கோவிலுக்குள்ள ஏன் டி வந்த” என்றபடி அவன் அவள் எதிர்பாராமல் பளாரென்று அறைந்துவிட, அவள் தரையில் விழுந்துவிட்டாள்.

அதிர்ச்சியில் சில நொடிகள் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. கன்னத்தில் ஜிவ்வென்று வலித்தது.

அவர்கள் நால்வரும் அவளை சுற்றி நிற்கவும் பதறி கொண்டு எழுந்தவள்,  “மழை அதிகமா இருந்துச்சு ண்ணா… அதான்” என்று கூறி கொண்டே அவள் செல்ல பார்க்க,

“அடிங்க… தாயோளி… உனக்கு நான் அண்ணனா” என்று சீறலாக கேட்டு மற்றோரு கன்னத்திலும் அறைந்துவிட்டான். அவள் கண்களில் கண்ணீர் பெருகியது.

“தெரியாம கூப்பிட்டேன்” என்றவள் நடுக்கத்துடன், “நான் வீட்டுக்கு போகணும்” என்று நகர பார்க்க அவள் தலை முடியை கொத்தாக ஒருவன் பிடித்து கொண்டான்.

“ஊருக்குள்ள…  அதுவும் கோவிலுக்குள்ள வர அளவுக்கு தைரியம் வந்துடுச்சாடி உங்களுக்கு எல்லாம்… இதான் இடத்தை கொடுத்தா மடத்தை பிடிக்கிறதுன்னு சொல்வாங்க” என்று குரூரத்துடன் அந்த நால்வரும் அவளை சூழ்ந்து கொண்டனர். எந்த பக்கமும் அவளால் நகர முடியவில்லை.

“தெரி… தெரியாம வந்துட்டேன்… என்னை விட்டுடுங்க… நான் போயிடுறேன்” என்று அவள் குரல் நடுங்கியது. அழுகையில் பயத்திலும் வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்தது.

“அதெப்படி டி தெரியாம வருவ” என்று அவர்களில் ஒருவன்  கேட்டு மீண்டும் அவளை அறையவும் கனி தடுமாறி கோவில் வாயிலிலிருந்த சகதியில் விழுந்தாள். அந்த நொடி அவளின் சுயமரியாதை விழித்து கொள்ளவும்,  

“இப்ப என்ன பண்ணிட்டேன்… மழை வந்துதுன்னுதான் இங்கே வந்து நின்னேன்… அதுக்கு எதுக்கு அடிக்குறீங்க” என்று அழுகையும் கோபமுமாக கேட்க,

“ஒத்த… என்னடி குரல் உயருது…” என்று அவன் மீண்டும் கை ஓங்கவும் அவள் பின்வாங்கி கொண்டபடி,

“அடிச்சீங்க… அவ்வளவுதான்” என்று உள்ளுர எழுந்த கோபத்தில் விரல் நீட்டி எச்சரித்துவிடவும் எதிரே நின்றவன் அவள் கரத்தை நொறுக்குவது போல பிடித்து, “என்னடி கை நீளுது… ஓடச்சி போட்டுடுவேன்” என்றான்.

“வலிக்குது வலிக்குது அண்ணா… விட்டுடுங்க… தெரியாம சொல்லிட்டேன்… என்னை விட்டுடுங்க… நான் வீட்டுக்கு போனோம்” என்றவள் கெஞ்சுவதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

“சேதுராமன் ஐயா பேரனோட ஊர் மேய்ஞ்சிட்டிருக்குது கழுதை” என்று அவர்களில் ஒருவன் குறிப்பிடவும், “உடம்புல அவ்வளவு திமிரு” என்றவர்கள் அடுத்தடுத்து அவளை பற்றி சொன்ன வார்த்தைகள் அனைத்தும் காதில் கேட்க முடியாதளவுக்கு நாராசமாக வந்தன.

கனி அழுது கொண்டே, “என்னை விட்டுடுங்க” என்று கதற, “தே*** ஆம்பிளை வேணுமா உனக்கு… நாங்க ஒன்னுக்கு நாலு பேர் இருக்கும்… வர்றியா?” என்றவர்கள் நால்வருமே அவளை வக்கிர பார்வை பார்த்தனர்.

 கனி அவர்களை தள்ளிவிட்டு ஓட பார்க்க, “புடுறா அவளை” என்று ஒருவன் அவளை இழுத்து பிடித்து கொண்டான்.

“என்னை விட்டுடுங்க” என்று அவள் அழுவதை பொருட்படுத்தாமல், கோவிலுக்கு பின்னிருந்து மண்டபத்திற்கு குண்டுகட்டாக தூக்கி சென்றனர்.

சற்று முன்பு அதே கோவிலுக்குள் அவள் வந்தது தீட்டு என்று அடித்தவர்கள் இப்போது அதே கோவிலுக்குள் அவளை பலாத்காரம் செய்ய தூக்கிச் சென்றனர்.

சாதி வெறி பிடித்தவர்களுக்கு பெண்களின் உடம்பு மட்டும் எந்த வகையிலும் தீட்டு இல்லை. தடிமாடுகள் போல வளர்ந்திருக்கும் அந்த நால்வரும் அவளை இழுத்து கொண்டு சென்ற போது கனியால் எதுவுமே செய்ய முடியவில்லை.

இரும்பாக கனத்த அவர்கள் பிடிக்குள் இருந்து அவள் தன்னை மீட்டு கொள்ள நிகழ்த்திய போராட்டம் கொஞ்சமும் பலனளிக்கவில்லை.

இயற்கை கூட அன்று அவளுக்கு சதி செய்தது. அவள் அழுகையும் கதறலும் வெளியே கேட்க முடியாதளவுக்கு பேய் மழை பெய்தது.

அவர்கள் நால்வரும் அவள் ஆசை ஆசையாக அணிந்திருந்த அந்த  உடையை கிழித்து நிர்வாணப்படுத்திய போது கனி தனக்கு என்ன நிகழ போகிறது என்பதை உணர்ந்து கொண்டாள். அதற்கு மேல் அவர்களை சமாளிக்க முடியுமென்று நம்பிக்கையும் சுத்தமாக வடிந்து போனது.

 அவளால் அப்போது செய்ய முடிந்தது ஒன்றே ஒன்றுதான். தன் உடலுக்கு நடக்க போகும் வன்முறையை பார்க்காமல் இருப்பதுதான் அவளால் அப்போது செய்ய முடிந்த ஒரே காரியம். அவள் தம் விழிகளை அழுந்த மூடி கொள்ள, அதிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்ததோடியது.

அப்போது ஏதோவொரு பயங்கர சத்தம் கேட்டது. சட்டென்று அவர்களில் ஒருவன், “டே பாம்பு டா” என்று அலறவும் அவர்கள் நால்வரும் அவளை விட்டு விலகி ஓடினர். சின்ன பெண்ணிடம் காட்டிய அவர்களின் ஆம்பிளைத்தனங்களும் சேர்ந்து அப்போது ஒளிந்து கொண்டன.

கனி விழித்து பார்த்த போது அவள் அருகே ஒரு ஆறடி நீள நல்ல பாம்பு கம்பீரமாக படமெடுத்து சீறியதில், அவள் விதிர்விதிர்த்து போனாள்.

ஏற்கனவே வெடவெடத்து கொண்டிருந்த கை கால்கள் எல்லாம் இன்னும் நடுக்கமுற்றன. ஆனாலும் அவளை சீரழிக்க பார்த்த சாதி விஷமேறி போன மனித சர்பங்களை விட அந்த பாம்பின் விஷம் ஒன்றும் பெரிதாக அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று தோன்றவில்லை.

இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்ட கனி ஆடைகளை பற்றி எல்லாம் யோசிக்காமல் அதே நிர்வாண கோலத்தில் அங்கிருந்து ஓடிவிட்டாள்.

 வீட்டிற்கு சென்று சேரும் வரை அவள் கால்கள் எங்கேயும் நிற்கவில்லை. மகள் வந்து நின்ற கோலத்தை பார்த்து சாந்தி நடுங்கிவிட்டாள்.

“ஐயோ! கடவுளே… என்னடி இப்படி வந்து நிற்குற” என்று விரைவாக தன் புடவையை எடுத்து மகளின் மீது சுற்றிவிட உடலை குறுக்கி கொண்டு தரையில் சரிந்தவள் முகத்தை மூடி கொண்டு அழுது தீர்த்தாள்.

“அடியேய்… என்னடி ஆச்சு? பாவி… வாயை திறந்து சொல்லேன்டி” என்று சாந்தி அவளை உலுக்கி எடுக்க, தேம்பி கொண்டே தட்டுத்தடுமாறி நடந்த விவரங்களை எல்லாம் விவரித்தாள்.

“பாவி பசங்க… நாசமா போக” என்று அழுதபடி புலம்பி தீர்த்த சாந்தி,

“நாம கும்பிடுற சாமிதான்டி உன்னை காப்பாத்துச்சு” என்று சென்று தன் வீட்டிற்கு வெளியே இருந்த கல் தெய்வத்தின் முன்னே விழுந்து கும்பிட்டாள்.

பின் அழுது கொண்டே கணவனிடம் நடந்ததை விவரிக்க, கன்னியப்பனால் தாளமுடியவில்லை.

காலம் காலமாக அவர்கள் சந்ததிகளுக்கு அவமானங்களும் அசிங்கங்களும் பழகி போன விஷயம்தான்.

அவனுக்கு திருமணமான புதிதில், “உன்  பொண்டாட்டியை ஒரு நாள் அனுப்பி வைக்குறியா?” என்று அவனிடமே கேட்டவர்கள் உண்டு. கூனி குறுகி உள்ளுர புழுங்கினானே ஒழிய அவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களை எதிர்த்து கொண்டு அவனால் எதுவும் செய்யவும் முடியாது. ஆதிக்க சாதிகளுக்குதான் மானம் ரோஷம் எல்லாம். அடிமைகளுக்கு கிடையாது.

ஆனால் இன்று மகளுக்கு நிகழ்ந்த கொடூரத்தை கன்னியப்பனால் சகித்து கொள்ள முடியவில்லை.

கால்களை மடக்கி அழுத மேனிக்கு கிடந்த மகளை கண்டவனுக்கு ஒரு தந்தையாக இரத்தம் கொதித்தது.

அவனுக்கு அந்த ஊரில் ஒரே நீதிமான். தெய்வம் எல்லாம் சேதுராமன்தான். நேராக அவர் வீட்டிற்கு சென்று நிற்க,

“வா கன்னியப்பா” என்று சேதுராமன் அழைக்க,

“ஐயா!” என்று துண்டை கக்கத்தில் அடக்கி கொண்டு மகளுக்கு நடந்த கொடுமையை சொல்லி முறையிட்டு அழுதான் அந்த எளியவன்.

கைகளை கட்டி கொண்டு நிதானமாக அனைத்தையும் கேட்டு முடித்தவர், “எதுக்கு உன் பொண்ணு… கோவிலுக்கு போகணும்” குற்றம் சாட்டும் பார்வையுடன் கேட்க, அந்த கேள்வியில் கன்னியப்பன் அதிர்ச்சியடைந்தான்.

தன் மகளுக்கு நடந்த அநியாயத்தை விட இது பெரிய குற்றமா?  

கண்களில் நீர் நிரம்ப, “ஐயா… ஏதோ புள்ள மழைக்கு ஒதுங்க போயிடுச்சுங்க… தப்புதானுங்க… ஆனா அதுக்காக போய் புள்ளைய அடிச்சு” அதற்கு மேல் நடந்ததை சொல்ல முடியாமல் அவர் துண்டை வாயில் வைத்து அடக்கி கொண்டு மீண்டும் அழ தொடங்கிவிட்டான்.

சேதுராமன் இறுகிய பார்வையுடன், “சும்மா அழாதே… வயசுக்கு வந்த புள்ளய வீட்டுல வைச்சு இருந்ததாலதான் இவ்வளவு வினையும்… ஒழுங்கா கட்டி கொடுத்திருந்தா இந்த அசிங்கமெல்லாம் நடந்திருக்காது இல்ல” என்று சொன்னதை கேட்டு கன்னியப்பன் நம்ப முடியாமல் பார்த்தான்.

“தலையெழுத்து… இந்த கர்மத்தை எல்லாம் சொன்னா ஊருக்குதான் அசிங்கம்… சை” என்று அசூயை உணர்வுடன் சொன்னவர் மேலும்,

 “பேசாம காதோடு காது வைச்ச மாதிரி ஒழுங்கா புள்ளைய கட்டி கொடுத்திடு… மாப்பிளைய வெளியூர்ல பாரு… ஆகிற செலவை நான் கொடுத்திடுறேன்” என, கன்னியப்பனுக்கு தாங்கவில்லை.

நீதி கேட்டு வந்த இடத்தில் அவன் மகளையே குற்றவாளியாக மாற்றிவிட பார்ப்பது எந்தவிதத்தில் சரி என்று அவனுக்கு புரியவில்லை.

மௌனமாக நின்றவனை பார்த்து, “என்னடா பேசாம இருக்க? சொன்னது விளங்குச்சா” என்று சேதுராமன் அதட்ட,

“இல்லங்க ஐயா… புள்ள படிக்கணும்னு ஆசைப்படுதுங்க” என்று தயக்கத்துடன் நிறுத்தினார்.

“என்னடா எதிர்த்து பேசுற… என்ன… உன் பொண்ணு படிச்சு கலெக்டராவ போறாளாக்கும்… ஒழுங்கங்கெட்டு திரியிறதாலதான் இவ்வளவும்…

இதை பாரு… உன் புள்ளைய கட்டி கொடுத்து அனுப்புறியா… இல்ல கொல்லி வைக்க போறியான்னு நீயே முடிவு பண்ணிக்கோ” என்ற வார்த்தையை கேட்டதும் கன்னியப்பனுக்கு குலை நடுங்கிவிட்டது.

“இல்லங்கயா… கட்டி கொடுத்திருங்க யா” என்று பொங்கிய அழுகையுடன் கன்னியப்பன் தரையில் விழுந்து கும்பிட்டான்.

உடனடியாக சேதுராமன் மனைவியை அழைத்து பணம் எடுத்து வர சொல்லி அதை அவனிடம் கொடுத்தார்.

இல்லை, பிச்சையிட்டார்!

பயபக்தியுடன் அதனை தன் துண்டில் வாங்கி கொண்டவன் வழியேற தன்னுடைய இயலாமையை எண்ணி புழுங்கி கொண்டே வீடு சென்று சேர்ந்தான்.

சேதுராமன் போன்றவர்களுக்கு எப்போதும் அவர்கள் மேலே ஆண்டான் வம்சமாகவே இருக்க வேண்டும். அதற்கு கீழே அடிமையாக ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

கை நீட்டி உதவுவார்கள். ஒரு நாளும் சரிக்கு நிகராக கை தூக்கிவிட மாட்டார்கள். அவர்கள் பேசும் சமத்துவம் எல்லாம் அரசியல் மேடைக்காக மட்டும்தான்.

கன்னியப்பன் நடந்ததை எல்லாம் மனைவியிடம் விவரித்து கண்ணீர் விட்டு கதறிய காட்சியை பார்த்த கனியின் நெஞ்சு கூடு உலர்ந்து போனது.

“படிப்பு வேணாம் ஒன்னும் வேணாம்னு அப்பவே சொன்னே கேட்டியா யா” என்று கதறி அழுத சாந்தியின் குரல் கனியின் மூளையில் விண்ணென்று தெறித்தது.

யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொண்ட கதையாகி போனது அவள் நிலைமை.

அதற்கு பிறகு அவளுக்கு அவசர அவசரமாக கல்யாண ஏற்பாடு நடந்தது. நகரத்தில் வசிக்கும் சாந்தியின் உறவினர் சேகரின் மகன் பிரபுவை பேசி முடித்தார்கள். அவன் பத்தாவது வரை படித்திருந்தான். மிக எளிமையாக அவர்கள் வீட்டின் முன்பாகவே திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கனி விருப்பமோ ஆசையோ கனவோ இப்படி எதுவுமே இல்லாமல் அந்த திருமணத்தை செய்து கொண்டாள். மஞ்சள் கயிற்றை அவள் கழுத்தில் கட்டிய போதுதான் பிரபுவை அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

அருள்மொழி அளவுக்கு வசீகரிக்கும் தோற்றம் இல்லாவிடிலும் சராசரி உயரத்தில் பார்க்கும்படியாக இருந்தான். இனி இவன்தான் தன் வாழ்க்கை என்று ஒரு மாதிரி மனதை தேற்றி கொண்டாள்.

 

 

shanbagavalli, Rathi and 2 other users have reacted to this post.
shanbagavalliRathiThani Sivaindra.karthikeyan
Quote

Kani Remba paavam

Super sis

Quote

Super ma 

You cannot copy content