You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 15

Quote

அந்தமானில் இன்று வரை ஆதிவாசிகளாக வாழும் ஜாராவா இனத்துப் பெண்கள் கணவர்களை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் தெரியுமா?

மாப்பிள்ளை தான் வேட்டையாடிய மிருக மாமிசத்தைப் பக்குவமாக சமைத்து, அதில் ஒரு சாம்பிளை பெண்ணுக்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும். பெண் சாப்பிட்டு பார்த்துவிட்டு அவள் தேறுவானா மாட்டானா? என்று கூறுவாள்.

அதைவிட ஒரு படி மேலே போகிறார்கள் ஆனைமலையில் வாழும் காடர் இனப்பெண்கள், மாப்பிள்ளை பையன் ஒரு மண்டல காலம் பெண் வீட்டிலேயே தங்கித் தன் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அவனுடைய வேட்டைத் திறன், சம்பாதிக்கும் திறன், பெண்ணை பாதுகாக்கும் திறன் முதலியவற்றை வைத்து மதிப்பிட்டு இவன் தேறுவானா மாட்டானா? என்று பெண் முடிவெடுப்பாள்!

ஆண்தான் விதை உற்பத்தி செய்யும் அதிமுக்கியமான பங்கினை வகிக்கிறான். பெண் வெறும் சுமக்கும் கலம் என்று நம்பிய காலத்திலேயே ஒன்று மட்டும் தெளிவாகப் புரிந்திருந்தது.

ஆண் எப்பேர்ப்பட்ட பராக்கிரமசாலியாக இருந்தாலும், அவன் விதைகள் எவ்வளவு வீரியம் உள்ளதாக இருந்தாலும், பெண்ணின் உடல் மட்டும் இல்லை என்றால் உயிர் தொடராதே!

ஆக பெண் அதிமுக்கியம்தான். ஆனால்  தேர்ந்தெடுக்கும் அவளது அறிவுத்திறன்…?

15

“கேர்ல்ஸ் ஹை ஸ்கூல் யாருமா இறங்குறது?” என்று கேட்டபடி நடத்துனர் விசலடிக்க, கனியின் விழிகள் ஆவலுடன் ஜன்னல் புறம் திரும்பின.

சுற்றவட்டாரத்தில் உள்ள பல கிராமங்களுக்கும் பொதுவான பெண்கள் மேல்நிலை பள்ளி. பள்ளி கட்டிடம் புதிதாக பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது. அங்குதான் அவள் படித்தாள். வளர்ந்தாள். வாழ்ந்தாள்.

அந்தச் சுதந்திர தின விழாவிற்கு பிறகு அவளுக்கும் அந்த பள்ளிக்குமான தொடர்பு முற்றிலுமாக அறுந்து போனது. வலுக்கட்டாயமாக அறுக்கப்பட்டது. பரந்த விரிந்த அந்த விளையாட்டு திடலை சுற்றிலும் முதிர்ந்திருக்கும் குல்மொஹர் மரங்களை ஏக்கத்துடன் பார்க்கவும் பேருந்து நகரவும் சரியாக இருந்தது. அவற்றில் பூ பூத்திருக்கவில்லை.

ஒவ்வொரு வருடத்தின் மே மற்றும் ஜூன் மாதங்களில் மட்டுமே பூக்ககூடிய இயல்பை கொண்ட அம்மரங்களை போலவே அவள் வாழ்வும் பூவாக பூத்திருந்த பருவக்காலம் ஒன்று உண்டு.

அந்தப் பள்ளியில் வந்து சேர்ந்ததிலிருந்து அருள்மொழியை சந்தித்து பழகிய வரை. அத்துடன் அவளின் மனப்பூக்கள் மொத்தமாக பூத்து அடங்கிவிட்டன. மீண்டும் அப்படியொரு பருவக்காலம் அவளுக்கு வாய்க்காமலே போனது.

அதன் பின் கனி என்பவள் பூக்கவும் இல்லை. காய்க்கவும் இல்லை. கனியவும் இல்லை.

 கண்ணீருடன் தூரமாக நகர்ந்து சென்ற கொண்டிருந்த அந்த பள்ளி கட்டிடத்தையும் குல்மொஹர் மரங்களை பார்த்து ஏக்க பெருமூச்செறிந்தாள்.

அவளுக்கு என்று இருந்த சந்தோஷமான நினைவுகள் என்பது அது மட்டும்தான். அதை கூட அவள் நினைத்து பார்த்திட முடியாதளவுக்கு அடுக்கடுக்காக அவள் வாழ்வில் நடந்த மோசமான சம்பவங்கள் அந்த பொக்கிஷமான ஞாபகங்களை எல்லாம் அழுத்தி அகலபாதளத்திற்குள் தள்ளிவிட்டன.  

எத்தனை எத்தனையோ இரவுகளில் அவள் தன் மானத்தை காத்து கொள்ள நிர்வாண கோலத்தில் ஓடியிருக்கிறாள். கனவா நிஜமா என்று உணர முடியாதளவுக்கு விழித்தெழுந்த மறுகணம் அவள் மீதான ஆடைகளை தொட்டு பார்த்து ஆசுவாசப்பட்டிருக்கிறாள்.

எத்தனை பெண்களுக்கு இப்படியான அனுபவங்கள் இருந்திருக்குமோ என்னவோ? ஆனால் ஒரு பெண்ணாக இது போன்ற அனுபவங்களை வாழ்நாள் முழுக்கவும் சுமந்திருப்பதின் வலி என்பது தினம் தினம் பாலியல் வன்முறைக்கு அவளை உட்படுத்துவதற்கு நிகரானது.

ஒருமுறை அம்பிகாவிடம் மனம் விட்டு தனக்கு நடந்த இந்த கொடுமையை பகிர்ந்தவள் வேதனையுடன் அவர் மடியில் படுத்து அழுதாள்.

அப்போது அவள் முகத்தை நிமிர்த்தி பிடித்தவர், “சீ… நீ ஏன் டி அழுற… தப்பு செஞ்சவன் இல்ல அழுவணும்… அவன் இதை பத்தி எல்லாம் கவலை இல்லாம எங்கேயோ சிரிச்சு சந்தோஷமா வாழ்ந்திட்டு இருக்கானா… நீ மட்டும் ஏன் டி மனசுல இந்த் நினைப்பை எல்லாம் போட்டு புழுங்கிட்டு கிடக்க… தூக்கி தூர போடு… சந்தோஷமா இரு…

உன்னை அப்படி பண்ண நினைச்சவங்கதான் கூனி குறுகி போகணும்… அசிங்கமா நினைக்கணும்… சாகணும்… நீ அழ கூடாது கனி… ஒரு நாளும் நீ இதுக்காக அழ கூடாது… உனக்கு இதுல எந்த அசிங்கமும் இல்ல… அவமானமும் இல்ல… நீ தப்பு செய்யல… உனக்கு ஒரு வேளை தப்பா நடந்திருந்தா கூட நீ அழ கூடாதுன்னுதான் நான்  சொல்லுவேன்” என்று பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இப்போதும் அவள் செவிகளில் கணீரென்று ஒலித்து கொண்டிருந்தன.

அப்போதுதான் அவளுக்கு புரிந்தது. “ஆமா நான் எதுக்கு அழணும்… நான் ஏன் அசிங்கப்படணும்”  

அன்றே அந்த நினைப்பை துச்சமாக தூக்கி போட்டுவிட்டு கடந்துவந்தாள். வார்த்தைகளுக்கு அத்தனை வலிமை உண்டு என்று அன்றுதான் அவள் அறிந்து கொண்டாள். அதற்கு பிறகு அது போன்றதொரு கனவு அவளுக்கு வரவே இல்லை என்பதுதான் ஆச்சரியம்.

இத்தனை வருட கால அவள் வாழ்வில் எத்தனையோ மனிதர்களை கடந்து வந்திருக்கிறாள். எல்லோரும் நல்லதும் கெட்டதுமாக நிறைய அனுபவங்களை தந்திருக்கிறார்கள். அவர்களுள் அருள்மொழியும் அத்தையும்தான் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியவர்கள்.

அன்று அருள்மொழி சொன்னதை வைத்துதான் அவள் தன் இலக்கு இதுதான் என்பதை நிர்ணயித்து கொண்டாள். அவளின் அந்த இலக்கிற்கு உறுதுணையாக அத்தை உடன் இருந்தார்.

ஒரு கொடுந்தவம் போல அவளுடைய பதினேழு வருட வாழ்க்கை கடந்து போனது.

கனி ஆசுவாசமாக மூச்சை இழுத்துவிட்டு கொண்டு இருக்கையில் சாயவும் பேருந்து அவர்கள் ஊரில் நிற்கவும் சரியாக இருந்தது.

“கன்னிப்பத்தூர் யாருமா… சீட்லயே உட்கார்ந்துட்டு இருப்பீங்க… எழுந்து வாங்கமா” என்று நடுத்துனர் கடுகடுக்க கனி தன் பையை எடுத்து கொண்டு இருக்கையிலிருந்து எழுந்து நின்று கொன்டாள்.

 அப்போது வாட்டசாட்டமாக ஒரு பெண்மணி அவளை முந்தியடித்து கொண்டு முன்னே சென்று,

“அமுதா… பையை மறந்துடாம எடுத்துக்குன்னு இறங்குடா…” என்று குரல் கொடுத்தபடி இறங்கிவிட்டு,

“நின்னுட்டு இருக்கா பாரு… கனி இறங்குடி” என்று அதட்டினாள்.

 கனி அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள். அவளை சொல்வது போலவே இருந்தது. ஆனால் அந்த பெண் அவள் மகளை அதட்டியிருக்கிறாள்.

ஆர்பாட்டத்துடன் அவர்கள் இறங்கிய பின் கனி கீழே இறங்கவும் பேருந்து நகர்ந்து தூரமாக சென்றது. அவள் முன்னே இறங்கிய மூவரும் ஊருக்குள் செல்லும் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்களை பின்தொடர்ந்தபடி சென்ற கனி ஒரு நொடி நின்று, “கயல்” என்று அழைக்கவும் அந்த பெண்மணி திரும்பி, “யாரு” என்றாள்.

ஒல்லியான தேகத்துடன் மைத்தீட்டிய விழிகளும்  பவுடர் பூசிய முகமுமாக எப்போதும் பளிச்சென்று இருக்கும் தன் தோழி கயலுக்கும் பெருத்த இடையும் ஏற்றி கட்டிய வெளிர் நிற புடவையும் வியர்வையில் நனைந்து சிவந்திருந்த முகமுமாக இருந்த பெண்ணுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் கண்டுபிடிக்கலாம்.   

இருப்பினும் அவள் முக ஜாடையை பார்த்து தன் தோழியோ என்று சந்தேகத்துடன்தான் கனி அழைத்து பார்த்தாள். ஆனால் அவள் கயலாகவே இருப்பாள் என்று நினைக்கவில்லை.

சட்டென்று விழிகள் நனைந்துவிட கயல் திரும்பி பார்த்த கணத்திலேயே கனியை அடையாளம் கண்டு கொண்டாள்.

“அட… கனி… நீயா” என்று விரைந்து வந்து அவள் தோழியை அணைத்து கொள்ள, கனியும் தோழியும் ஆரத்தீர அணைத்து கொண்டாள். பாலைவனம் போல வறண்டு யாருமற்று தனித்து கிடந்தவளுக்கு கயலின் சந்திப்பில் சந்தோஷ ஊற்று பெருக்கெடுத்தது.

“உன்னைய பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல கனி”

“நான் நினைச்சேன்… உன்னை பார்க்கணும்னு… ஆனா இப்படி ஊர் எல்லையிலயே பார்ப்பேன்னு நினைக்கவே இல்ல”

“நீயும் அதே பஸ்லதான் வந்தியா… நான் உன்னை பார்க்கவே இல்ல”

“நானும்தான் பார்க்கவே இல்ல… ஆனா கனி இறங்குடின்னு மிரட்டின பார்த்தியா… சட்டுன்னு எனக்கு அந்த குரலை கேட்டதும் உன் ஞாபகம் வந்துடுச்சு… நீயா இருப்பியோன்னு ஒரு மாதிரி சந்தேகத்துலதான் கூப்பிட்டு பார்த்தேன்… ஆனா நீ… என்னை பார்த்ததுமே கண்டுபிடிச்சிட்ட”

“பின்ன… நீதான் அப்படியே இருக்கியே… என்ன? முன்ன விட சிவப்பா அழகா இருக்க”

“என்ன குசும்பா?”

“சத்தியமாடி” என்று கயல் சொல்லி சிரிக்க சாலையில் நின்றபடி அவளின் பிள்ளைகள் இருவரும் இவர்கள் இருவரையும் வேடிக்கை பொருள் போல பார்த்து கொண்டிருந்தனர்.

“ஆமா அவங்க இரண்டு பேரும் உன் பசங்களா? நல்ல உயரமா இருக்காங்க”

“ம்ம்ம்… அவன் அமுதன் பத்தாவது படிக்கிறான்… இவ கனிமொழி எட்டாவது” என்று கயல் தன் மகன் மகள்களை அறிமுகம் செய்விக்கவும், கனி அவர்களை பார்த்து புன்னகைத்தாள். அவர்களும் ஏதோ பெயருக்கென்று இவளை பார்த்து புன்னகைக்க,

“சொல்லி இருக்கேன் இல்லடா… என் ஸ்கூல் பிரண்டு கனின்னு” என்று பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினாள் கயல். அவர்களும் தெரிந்தது போல தலையசைக்க கனி தோழியை வாஞ்சையாக பார்த்து,

“உன் பொண்ணையும்… என்னை கூப்பிடுற மாதிரி கனி கனின்னுதான் கூப்பிடுவியா?” என்று கேட்டாள்.

“பின்ன… உன் ஞாபகார்த்தமாதானே அந்த பேரையே வைச்சேன்” என்று கயல் சொன்ன நொடி கனியின் கண்கள் பனித்துவிட்டன.

“சரி… எதுக்கு இங்கயே நின்னுக்கிட்டு… ஊருக்குதானே வர… வா பேசிக்கிட்டே போவோம்” என்றபடி தோழிகள் இருவரும் நடக்க,

கயல் அவளிடம், “நீ சொல்லாம கொள்ளாம கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்டியா… நான் நொந்துட்டேன்” என,

“நான் சொல்லிட்டு போற நிலைமைல எல்லாம் இல்ல” என்றாள் கனி.

“ப்ச்… நீ இல்லாம எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துது தெரியுமா? அப்புறம் ஒழுங்கா படிக்கல…  டுவல்த் பெயிலாயிட்டு” என்று கயல் சொல்லவும் இடைமறித்த கனி,

“நான் இருந்திருந்தா மட்டும் மேடம் பாஸாகி இருப்பீங்களோ?” என்று கிண்டலாக கேட்டு சிரித்தாள்.

“கொஞ்சமாவது முயற்சி செஞ்சிருப்பேன்… இப்படி மொத்தமா கோட்ட விட்டிருக்க மாட்டேன்”  

சில நிமிட அமைதிக்கு பின், “ஏன் கனி? நீ மட்டும்தான் வந்திருக்கியா… உன் பசங்க… வீட்டுகாரர் எல்லாம் வரல” என்று கேட்க,

“பசங்க வீட்டுக்காரர் எல்லாம் இருந்தா வந்திருப்பாங்க… ஆனா அப்படி யாரும் எனக்கு இல்லயே மா?” என்று கனி சொன்னதும் கயல் அதிர்வுடன்,  

“என்ன சொல்ற கனி?” என்றாள்.  

“உனக்கு தெரியாதா? என் புருஷன் செத்து பதினாறு வருஷமாகுது”

“அட கடவுளே!” கயல் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றுவிட்டாள்.

“இப்போ எதுக்கு இவ்வளவு லேட்டா ஷாக் ரியாக்ஷன் கொடுக்கிற”

“இல்லடி… எனக்கு விஷயமே தெரியாது”

“தெரிஞ்சு மட்டும் என்ன பண்ண போற… விடு… எப்பவோ முடிஞ்சு போன கதை” என்றவள் சொன்ன பிறகு கயல் எதுவும் பேசாமல் மௌனமாகிவிட்டாள்.

“கயலு” என்று கனி தோளை தொடவும் தோழியை நிமிர்ந்து பார்த்தவள்,

“நீ சொல்றதை பார்த்து ஒரு வருஷம் கூட முழுசா நீ உன் புருஷன் கூட வாழ்ந்திருக்க மாட்ட இல்ல” என்று கேட்க, ‘வாழவே இல்லயே’ என்று முனகினாள்.

“என்ன கனி?”

“ப்ச் ஒன்னும் இல்ல… அந்த விஷயத்தை விடு… வேற ஏதாச்சும் பேசுவோம்”

“என்னத்த விட சொல்ற… நீ சொன்னதை கேட்டதும் ஏதோ பாறாங்கல்ல எடுத்து நெஞ்சுல வைச்சு மாதிரி இருக்கு எனக்கு… இதெல்லாம் அநியாயம்… உன் வீட்டுல உனக்கு இரண்டாவது கல்யாணமாச்சும் பண்ணி வைச்சிருக்கலாம் இல்ல?” என்று கயல் ஆதங்கத்துடன் கேட்க,

கனி மிதமாக புன்னகைத்து, “வீட்டுல என்னவோ எனக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கத்தான் பார்த்தாங்க… நான்தான் அந்த கல்யாணம் வேண்டாம்னு ஓடி போயிட்டேன்… அதுக்கு அப்புறம் இப்பதான் ஊர் பக்கமே வரேன்” என்றாள்.

“ஓ!” என்று ஆச்சரியமாக தோழியை பார்வையால் அளந்தவள் அவளின் உடை நடை எல்லாம் பார்த்து, “அப்படினா இத்தனை நாள் நீ எங்க இருந்த… இப்போ என்ன பண்ற” என்று விசாரித்தாள்.

“என் மாமியார் கூட சென்னைல இருந்தேன்… கஷ்டப்பட்டு படிச்சு எக்ஸாம் எல்லாம் எழுதி… இப்போ கவர்மெண்ட் ஸ்கூல டீச்சரா வேலை பார்க்கிறேன்… நம்மூருக்கு மாத்தலாகவும்தான் இங்க வந்தேன்” என்றவள் சொன்னதை கேட்டதும் கயலின் விழிகள் பெரிதாக விரிந்தன.

“நம்பவே முடியல… நிசமாவா கனி?” என்றவள் ஆச்சரியம் மேலிட கேட்க,

“நம்புடி… சத்தியமா?” என்றாள் கனி புன்னகையுடன்!

“இந்த விஷயத்தை கேட்டதும்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கனி” என்று தோழியின் முன்னேற்றத்தை கேட்டு மனதார மகிழ்ந்தவள், “எப்படிறி” என்று வியப்புடன் வினவ,

“எப்படினா… என்ன சொல்றது… என் விதி… கடலோட அடி ஆழத்துல மூச்சு திணற திணற என்னை இழுத்துக்கிட்டு போற மாதிரி என் விதி என்னை கீழே இழுத்துக்கிட்டு போயிட்டே இருந்துச்சு… எனக்கு இரண்டே வழிதான் இருந்துச்சு… ஒன்னு சாகணும்… இல்ல போராடி நீச்சலடிச்சிட்டு மேலே ஏறி வரணும்… நான் போராடினேன்… இப்போ நல்ல வேலைல இருக்கேன்” என்ற கனியின் பதில் கேட்டு,

“உன்னை நினைச்சு பெருமையா இருக்கு கனி” என்று கயல் நெகிந்து தோழியின் கரத்தை அழுந்த பற்றி கொண்டாள்.

“சரி சரி என் வாழ்க்கையை பத்தியே கேட்டுட்டு இருக்க… உன்னை பத்தி சொல்லு” என்று கனி வினவ கயல் உதட்டை பிதுக்கி கொண்டு,

“அதான் சொன்னேனே… எக்ஸாம்ல பெயிலாயிட்டேன்னு… அதோட வீட்டுல கல்யாணம் பண்ணி வைச்சுட்டாங்க… அப்புறம் இதுங்க இரண்டும் பிறந்துச்சு… அவ்வளவுதான்… அத்தோடு என் வாழ்க்கை முடிஞ்சு போச்சு” என்றாள்.

“உன் வீட்டுகாரர் எப்படி? அவரை பத்தி எதுவும் சொல்ல மாட்டிற”

“நல்லவர்தான்” என்று இழுத்தவள், “ஆனா கோபம் வந்துச்சுனா… பேய் மாதிரி கத்துவாரு… சில நேரங்களில அடிக்க கூட அடிச்சிடுவாரு… மலை இறங்குனதும்… கயலு என்னை மன்னிச்சிடுறின்னு குழைவாரு… ஹ்ம்ம்… இப்படியே பத்து பதினைஞ்சு வருஷ வாழ்க்கையை ஓட்டிட்டேன்” என்று கயல் சொன்னதை கேட்டு புன்னகைத்தபடி வந்து கொண்டிருந்த கனி தூரத்தில் தெரிந்த ஸ்ரீ தேவி கன்னிகை கோவிலை பார்த்து அப்படியே சிலையாக நின்றுவிட்டாள்.

“என்ன கனி?”

“அது… நம்மூர் கோவில்” என்று யோசித்தபடி நிற்க,

“கோவிலுக்கு போக போறியா… சரி… நீ போயிட்டு வா” என்றாள் கயல். அத்தனை நேரம் கோவிலுக்கு போக வேண்டுமென்ற எண்ணம் இல்லை. ஆனால் இப்போது போக வேண்டுமென்று தோன்றியது.

கயலை பார்த்து, “நீயும் வாடி… நம்ம ஒண்ணா போலாம்” என்று கனி அழைக்க,

“இல்லடி… நான் சாவுக்கு வந்தேன்… என் பாட்டி செத்து போச்சு… இப்பதான் தகவல் சொன்னாங்க… அதான் அடிச்சு பிடிச்சு ஓடியாறேன்” என்றாள்.

“ஓ… அப்போ நீ போ… நாம அப்புறம் பார்ப்போம்” என்று சொன்ன கனி மேலும்,

“உன் போன் நம்பர் கொடு… நான் கூப்பிடுறேன்” என்றாள்.

“டே அமுதா… போனை கொண்டா?” என்று கயல் தன் மகனிடமிருந்து கைப்பேசியை வாங்கி தன்னுடைய கைப்பேசி எண்ணை கொடுத்துவிட்டு அவளுடையதையும் பெற்று கொண்டாள்.

அதன் பின் தோழிகள் இருவரும் தங்கள் வழிகளில் செல்ல, கனி கோவில் வாயிலில் வந்து நின்றாள். அடையாளம் தெரியாதளவுக்கு கோவிலின் கோபுரம் வளர்ந்து கம்பீரமாக நின்றது. உள் மண்டபத்தின் கட்டமைப்பும் விசாலமாகி இருந்தது.

செருப்பை கழற்றிவிட்டு எந்த வித தயக்கமும் பயமுமின்றி கோபுரத்திற்குள்ளே வந்தாள். இதோ இதே இடத்தில் வைத்துதான் துடிக்க துடிக்க அவளை அடித்து அவமானப்படுத்தினார்கள். நிர்வாணப்படுத்தினார்கள். பலாத்காரம் செய்ய முயன்றார்கள்.

அந்த சம்பவத்தை அவள் கடந்து விட்ட போதும் அவளால் அதனை ஒருநாளும் மறந்து விட முடியாது… நினைக்கும் போதெல்லாம் உடல் முழுவதும் ஊசியாக குத்தும். இதயத்தை இறுக்கி பிடிக்கும்.  

தன்னுடைய சாதி அடையாளம்தான் இந்த கோவிலுக்கு வர தடை என்றால் அதை உடைப்பது என்ற முடிவுடன் உள்ளே நுழைந்து கம்பி கேட்டுக்குள் பூட்டியிருந்த கருவறைக்குள் தெரிந்த கன்னிகையை தரிசித்தாள்.

தீட்சண்யமான விழிகளுடன் கைகளில் சூலாயுதத்தை ஏந்தியபடி அசுரனை வதம் செய்து தன் பாதத்திற்கு கீழே அழுத்தி கொண்டிருந்தாள் கன்னிகை தேவி. முதல் முறையாக தங்கள் குலசாமியை கண்ணார தரிசிக்கிறாள்.

அந்த நொடி அவள் மனதிற்குள் அடுக்கடுக்காக கேள்விகள் உதித்தன.

இந்த கன்னி தெய்வம் தங்கள் குலசாமி எனில் தனக்கும் இந்த கோவிலுக்கும் தொடர்ப்பில்லாமல் எப்படி இருக்கு முடியும்?

இந்த கோவில் மண்டபத்தை மிதித்தற்காக தான் எதற்காக தண்டிக்கப்பட்டோம், அவமானப்படுத்தப்பட்டோம்?

காலங்காலமாக தங்கள் குலமும் குலசாமியும் வசிக்கும் ஊரில் எங்கள் குலமும் குடும்பமும் எப்படி அடிமையாக முடியும்.  

ஏன் நாங்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாக வாழ வேண்டும்?   

இப்படி அவளுக்குள் எழுந்த கேள்விகளுக்கு எல்லாம் யாரிடமும் பதில் இருக்காது. ஆனால் சாதி மட்டும் இருக்கும். நான் மேலே நீ கீழே என்று சாங்கியம் பேசுவார்கள். மூடர்கள்!  

நேற்றுவரை இந்த ஊருக்கு வரும் தீர்மானம் என்பது எதேச்சையாக இருக்கலாம். ஆனால் இந்த நொடி… இங்கே வந்து நின்ற கணம்… இதுதான் என்னுடைய வேர் என்று கனியின் மனதில் ஒரு வைராக்கியம் புகுந்து கொண்டது.

நான் பிறந்த ஊர். சகல உரிமையுடன் இங்கு தான் வசிக்க வேண்டும். சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்று தீர்க்கமாக எண்ணி கொண்டு கோவிலிருந்து புறப்பட்டு ஊருக்குள் செல்லும் நேர் பாதையில் நடந்தாள்.   

இந்த எபிசோடுக்காக ஒரு பாடல் டெடிக்கேட் செய்திருக்கேன் மக்களே!

ப்ளே செய்து கேட்டு பாருங்க...

கதை இனிமே இந்த பாட்டு மாதிரியான பாஸிட்டிவ் மோட்லதான் போக போகுது 

shanbagavalli, jamunarani and 4 other users have reacted to this post.
shanbagavallijamunaraniRathiThani Sivaindra.karthikeyansembaruthi.p
Quote

👌👌👌👌 மோனிஷாவின் அதிரடிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்

monisha and Thani Siva have reacted to this post.
monishaThani Siva
Quote
Quote from jamunarani on June 23, 2022, 2:29 PM

👌👌👌👌 மோனிஷாவின் அதிரடிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்

அதிரடியாகதான் கதாநாயகனை களத்தில் இறக்க போகிறோம்.

jamunarani and Thani Siva have reacted to this post.
jamunaraniThani Siva
Quote

அதிரடியான கதாநாயகனா .....😀செம இல்ல நாங்க படிக்க ஆவலுடன் இருக்கிறோம் ❤️

அழகான பதிவு சிஸ்❤️❤️❤️❤️

chitti.jayaraman has reacted to this post.
chitti.jayaraman
Quote

Kani ini enda kashtam illama irukanum pavam rumba kashta pattuta, kani vandathu terimji amma appa vandu parpamgala illa sandai poda poramgalo, nice update dear thanks.

Thani Siva has reacted to this post.
Thani Siva
Quote

Super ma 

You cannot copy content