You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 20

Quote

எல்லா புராதன சமுதாயங்களும் தங்கள் இனபெருக்க வயதுப் பிள்ளைகளுக்கு பாலியல் ஒழுக்கத்தையும் திருமணத்தையும் வற்புறுத்தி கற்பித்தன. மனித மனத்தை கட்டுபடுத்தக் காலம் காலமாக பயன்படுத்தப்பதட்ட சொர்க்கம் நரகமென்ற அதே யுக்திகளை வைத்து மிரட்டினர்.

எதற்கு வம்பு என்று பழி பாவத்துக்கு பயந்து எல்லோரும் திருமணத்தில் ஒழுக்கமாக இருக்க முயன்றார்கள். ஆனால் மரபணுக்களின் உந்துதல் விடவில்லை. அதனால் மரபணுக்களை வேகமாக பரப்பிவிட சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்கள் படி தாண்டினார்கள். அதிக வீரிய மரபணுக்களோடு கலக்கும் சந்தரப்பம் அமைந்த போதெல்லாம் பெண்களும் படிதாண்டினார்கள்.

ஆனால் பெண்கள் படிதாண்டியதை ஆண்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. காரணம் ஆண்கள் படிதாண்டினால் விளைவது வெறும் கண்ணீரின் வெள்ளம் மட்டும்தான். அதுவே ஒரு பெண் படிதாண்டினால் அங்கே பெருகி ஓடியது ரத்த வெள்ளமாயிற்றே!

ஆக பெண்ணின் பாலியல் ஒழுக்கம்தான் அமைதியான சமூக வாழ்க்கையின் முக்கியமான அஸ்திவாரம் என்றாகிவிட, பெண்களின் மூளையை பதப்படுத்தி ஆண்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதை கற்பித்தார்கள்.    

தொடரும்... 

20

வேலை எல்லாம் முடித்து கனி சசியின் வீட்டில் ஓய்வாக அமர்ந்து கொண்டு பேசி கொண்டிருக்கையில்,  “அக்கா நான்… பிளஸ் டூ முடிக்கணும்… இனிமே என்னால படிக்க முடியுமா?” என்று கேட்க,   

“ஏன் முடியுமா? பிரைவட்ல பண்ணலாம் கனி” என்றாள்.

“இப்ப கூட பண்ணலாமா”

“பண்ணலாம்… ஆமா திடீர்னு என்ன… உனக்கு படிக்கணும்னு ஆசை வந்திருச்சு”

“படிக்கணும் க்கா… எப்படியாச்சும் படிக்கணும்… இந்த நாசமா போன வாழ்க்கைல இருந்து தப்பிச்சுக்கவாவது படிக்கணும்… படிச்சு வேலைக்கு போகணும்… என் சொந்த காலில நிற்கணும்” என்று கனி விரக்தியுடன் பேச,

சசி அவளை அளவெடுத்தபடி பார்த்து, “நீ பேசுறதை பார்த்தா உன் புருஷனோட நீ சந்தோஷமா இல்ல போல” என்றாள்.

“புருஷனா?” கனியின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தன.

“என்னாச்சு? என்கிட்ட சொல்லு” சசி அவளை தூண்டி கேட்க கனி எதுவும் பேசவில்லை. கண்களில் மட்டும் கண்ணீர் திரண்டது.

“என்ன பிரச்சனை கனி… சொல்லு… நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்” கனிக்கும் யாரிடமாவது தன் மனதில் உள்ள வேதனையை கொட்டிவிட வேண்டுமென்று இருந்தது.

“அக்கா” என்று சசியை அணைத்து கொண்டு அனைத்தையும் ஒரு வேகத்தில் சொல்ல முடிக்க, அவள் அதிர்ந்து போனாள்.

“அடப்பாவமே… இதென்ன அநியாயம்… இப்படி கூட ஒரு மனுஷன் இருப்பானா?… சை… நான் எங்கேயுமே இந்த மாதிரி கேள்வி பட்டது இல்லபா” என்றவள் மேலும் கனியின் தோள்களிரண்டையும் பற்றி கொண்டு,

“ஆமா உனக்கு கல்யாணமாகி எத்தன மாசமாகுது” என்று விசாரிக்க,

“ஏழு மாசம் க்கா” என்றாள்.

“ஏழு மாசமா?” என்று யோசித்தவள் பின் கனியை பார்த்து, “உன் புருஷனுக்கு உடம்புல ஏதாவது பிரச்சனை இருக்கா?” என்று கேட்டாள்.

“அப்படி ஒன்னும் இல்லையே க்கா… நல்லா சாப்பிடுவாரு… உடம்பு சரியில்லன்னு படுத்து கூட பார்த்தது இல்ல… தினைக்கும் வேலைக்கு போவாரு” என்றவள் சொன்ன விளக்கத்தை கேட்டு சசி தலையிலடித்து கொண்டு,

“பைத்தியம்… அது இல்ல… உன் புருஷனுக்கு ஆண்மை குறைப்பாடு இருக்கோ என்னவோ?!” என்றதும் கனி புரியாமல் விழித்தாள்.

“அப்படினா?”

“அடிப்பாவி… இது கூட தெரியாதா? அதான் உன் தலையில அவன் நல்லா மிளகா அரைக்கிறான்… நான் மட்டும் அவன் பொண்டாட்டியா இருக்கணும்… சட்டையை பிடிச்சு நாலு அப்பு அப்பி இருப்பேன்” என்று சொல்ல, கனிக்கு சிரிப்பு வந்துவிட்டது,

“இப்படி ஒரு சூழ்நிலைல கூட உனக்கு எப்படிறி சிரிப்பு வருது”

“பழகிடுச்சு க்கா”

“பழகிடுச்சா? என்னடி பேசுற… ஏழு மாசமா இப்படி ஒரு வாழ்க்கையைவா வாழ்ந்துட்டு இருக்க… இதுல உன் மாமியாரு என்னடானா உன்னை  வேலைக்காரியை விட மோசமா நடத்திட்டு இருக்கு… ஆமா உன் வீட்டுல இதை பத்தி நீ சொல்லலயா?”

“எங்க வீட்டுல இருந்து யாரும் இங்க வர்றது இல்ல… நானும் அங்க போக முடியல… அப்புறம் எப்படி க்கா”

“ஃபோன்… லெட்டர் இப்படி ஏதாச்சும் வழில”

“ப்ச்… அந்த வசதி எல்லாம் எங்க வீட்டுக்கு கிடையாது” என்று கனி சலித்து கொள்ள சசி எரிச்சலுடன், “கிடையாதுன்னா… இப்படியே இன்னும் எத்தன நாளைக்குடி இருக்க போற… இதை பத்தி உன் மாமியார்கிட்டயாச்சும் சொல்லி இருக்கலாமே” என,

“அவங்கள பார்த்தாலே எனக்கு பயமா இருக்கும் க்கா” என்றாள்.

“பயமா இருக்கா… அந்த அம்மா என்ன பேயா பூதமா நீ பயப்பட”

“ஏதோ உங்க கிட்ட என் மனசுல இருக்கிற வேதனையை கொட்டணும்னு தோணுச்சு… கொட்டிட்டேன்… நீங்க இந்த விஷயத்தை இதோட விட்டுடுங்க” என,

“விட்டுடுவா… என்ன கனி பேசுற” என்று அவள் தோளை ஆதரவாக பற்றியவள், “நான் ஒன்னு பண்றேன்… என் வீட்டுகார்கிட்ட சொல்லி பிரபுவை பத்தி விசாரிக்க சொல்றேன்” என்றதும் கனி பதறி கொண்டு,

“வேண்டாம் க்கா… ஏதாச்சும் பிரச்சனை வந்திட போகுது” என்றாள்.

“அப்படினா நீயே உன் புருஷன்கிட்ட அவனுக்கு என்னதான் பிரச்சனைன்னு… கட் அன் ரைட்டா கேளு” என்றதும் கனி மறுப்பாக தலையசைத்து,

“எது கேட்டாலும் பதில் சொல்ல மாட்டாரு… என்னை ஒரு மனுஷியாவே மதிக்க மாட்டாரு” என்றாள்.

“நீயும் கேட்க மாட்ட… விசாரிச்சாவது என்ன விஷயம்னு தெரிஞ்சிக்கலாம்னா… அதுவும் கூடாதுங்குற”

“இல்ல க்கா… எதுவும் பிரச்சனை வந்துட்டா?” என்று கனி தயக்கத்துடன் இழுக்க,

“இதை விட ஒரு பெரிய பிரச்சனை வேற என்னடி இருக்க முடியும்” என்று சசி முறைக்க,

“நான் அனுபவிச்சிருக்கேன் க்கா… இதை விட மோசமான பிரச்சனைல இருந்து எல்லாம் நான் மீண்டு வந்திருக்கேன்… அதுக்கு இதுவே பரவாயில்ல… இப்போதைக்கு எனக்கு இருக்கிறது ஒரே விருப்பம்தான்… படிக்கணும்… படிச்சு நல்ல மதிப்பான வேலைக்கு போகணும்… இப்போ நீங்க எனக்கு அதை மட்டும் விசாரிச்சு சொன்னா போதும்

மத்தபடி இந்த விஷயத்தை இப்படியே விட்டுடுங்க க்கா… ஏதோ மனசு தாங்காம உங்கிட்ட கொட்டிட்டேன்” என்று விட்டு வெளியேறிவிட்டாள். ஆனால் சசிக்கு தாங்கவில்லை. கனி வேண்டாமென்று கணவனிடம் சொல்லி பிரபுவை பற்றி விசாரிக்கச் சொன்னாள்.

அப்படி விசாரித்துப் பார்த்ததில் அவளுக்கு கிடைத்த தகவல்கள் சசியை அதிரச் செய்தது.

அன்று கனி ஊற வைத்த துணிகளை துவைத்து கொண்டிருக்க, “கனி உள்ள வா… உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று அவசரமாக அழைத்தாள்.

“இருங்க க்கா… துணிங்களை துவைச்சு காய போட்டு வந்துடுறேன்”

“ஆமான்டி இப்ப அதான் ரொம்ப முக்கியம்… உன் வாழ்க்கையை நாசமா போயிட்டு இருக்கு… இதுல துவைச்சு காய போடுறாலாம்” என்ற சசி வலுக்கட்டாயமாக அவள் கையை பற்றி இழுத்து கொண்டு வீட்டிற்குள் சென்று கதவை அடைத்தாள்.

கனி குழப்பத்துடன், “என்ன க்கா விஷயம்?” என்று கேட்க மௌனமாக மூச்சை இழுத்துவிட்டு கொண்ட சசி பின்னர் மெல்ல அவளிடம்,

“உன் புருஷனை பத்தி என் வீட்டுகார்கிட்ட விசாரிக்க சொல்லி இருந்தேன்” என்றதும் “ப்ச்… ஏன்க்கா… இப்போ இது ரொம்ப தேவையா”  என்பது போல கனி முகத்தை சுருக்கினாள்.

“தேவையாவா… உன் புருஷன் என்ன பண்றான்னு தெரியுமா? கர்மம் சொல்லவே எனக்கு வாய் கூசுது… என்னத்த பண்ணி தொலைய” என்றவள் உதட்டை சுழித்து கொண்டு,

“உன் புருஷன் வேலை பார்க்கிற பங்களால வேலை செய்ற தோட்டக்காரன் என் வீட்டுகாரருக்கு தெரிஞ்சவனா… அவன் பொண்டாட்டி அதே பங்களால சமையல்காரியா இருக்காளாம்… அவங்ககிட்ட விசாரிச்ச போது என்ன சொன்னாங்கன்னு தெரியுமா?” என்று விட்டு சசி தயக்கத்துடன் நிறுத்த,

“என்ன சொன்னாங்க க்கா?” என்ற கனியின் கண்களில் இப்போது ஆர்வம் எட்டி பார்த்தது.

“அந்த பங்களாவோட ஓனர் வெளிநாட்டுல இருக்கானாம்… அவன் பொண்டாட்டியும் வயசான மாமியாரும் மட்டும்தான் அந்த வீட்டுல இருக்காங்களாம்… உன் புருஷன் அங்கே வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாளில அந்த வீட்டு ஓனரம்மாவுக்கும் உன் புருஷனுக்கும் தொடர்பு ஏற்பட்டு போச்சாம்” என்றதும் கனி அதிர்ச்சியான அதேநேரம் சட்டென்று சுதாரித்தபடி,

“சும்மா ஏதாச்சும் உளறி இருப்பாங்க… அப்படி எல்லாம் இருக்காதுக்கா” என்று மறுத்தாள்.

“உண்மைதான் கனி… இராத்திரி நேரத்துல உன் புருஷனை தேடிக்கிட்டு அந்த வீட்டுக்கார பொம்பள போகுமா… அவங்க இரண்டு பேரும் சேர்ந்து இருக்கிறதை அந்த சமையல்காரி பலதடவை பார்த்திருக்காளாம்” என்று சொல்ல, கனி ஊமையாகி போனாள்.

“இதுல கேவலமே…  அந்த பொம்பளைக்கு முப்பத்து அஞ்சு வயசு மேல இருக்குமா” கனி அதிர்ச்ச்யுடன் வாயில் கை வைத்து கொண்டாள்.

சசி அவள் தோள்களை பற்றி, “இப்போ கூட உன் புருசனை நீ கேட்கலனா” என்று நிறுத்த கனியின் கண்களில் கோபம் தெறித்தது. உடனடியாக சென்று தன் வீட்டிற்கு நுழைந்தாள்.

எப்போதும் போல அவன் போர்வைக்குள் சுருண்டிருந்தான். அவளுக்குள் ஒரு எரிமலையே குமுறி கொண்டிருந்தது. அவன் என்னவென்றால் நிம்மதியாக உறங்கி கொண்டிருக்கிறான். கதவை மூடி தாழ்ப்பாள் போட்டவள் குடத்திலிருந்த தண்ணீரை எடுத்து அவன் மீது கொட்டினாள்.

பிரபு அடித்து பிடித்து எழுந்து கொண்டான். குடத்துடன் அவன் முன்னே நின்றிருப்பவளை பார்த்து, “ஏன் இப்படி பண்ண… பைத்தியமா உனக்கு” என்று முகத்தை துடைத்தபடி கேட்க,

“பைத்தியம்தான்… ஏழு மாசத்துக்கு மேல நீ இப்படி மரக்கட்டை மாதிரி தூங்குறதை பார்த்துட்டு சும்மாவே இருந்திருக்கேன் இல்ல… நான் பைத்தியம்தான்” என்றவள் குடத்தை தூக்கி தூரமாக போட்டாள்.

 அனல் தெறிக்கும் அவள் விழிகளை கண்டவன் அமைதியாக எழுந்து ஹாங்கரில் தொங்கி கொண்டிருந்த சட்டையை எடுத்து கொண்டு கதவருகே போக, கனி வழிமறித்து நின்று கொண்டாள்.

“இன்னைக்கு நீ என் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லாம எங்கேயும் தப்பிச்சு போக முடியாது”

 அவனோ அப்போதும் அவளை பொருட்படுத்தாமல் தாண்டி செல்ல பார்க்க, “எங்க போற நீ… பேசிட்டு இருக்கேன் இல்ல” என்று ஆக்ரோஷமாக அவனை பிடித்து தள்ள அவள் ஓரடி பின்னே நகர்ந்தான்.

 சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். கனியின் இந்த அவதாரத்தை பார்த்து பிரபு அதிர்ந்து போதும் அவளை மிரட்டுவது போல முறைத்து,

“என்னடி திமிரா? அம்மா வரட்டும்… உனக்கு இருக்கு” என்று எகிற,  

“வரட்டும்… உனக்கும் இருக்கு… நீ செய்ற அசிங்கத்தை அவங்ககிட்ட நான் இன்னைக்கு சொல்லாம விட போறதில்லை” என்றவள் பதிலுக்கு ஆவேசமாக திருப்பி கொடுக்க, பிரபு மிரண்டு விழித்தான்.  

“நான் என்ன சொல்றேனே உனக்கு புரியல இல்ல” அவன் புருவங்கள் சுருங்க அவளை பார்க்க,

“நீ வேலை செய்ற பங்களாவோட வீட்டு ஒனரம்மாவை கேட்டா எல்லாம் புரியும்” என்றதும் அவன் பேயரைந்தது போல நின்றுவிட்டான். கனியின் கண்கள் அவனை ஆழமாக துளையிட்டது. அவனால் ஒன்றுமே பேச முடியவில்லை. கொஞ்சம் நஞ்சம் அவன் செய்திருக்க மாட்டான் என்ற நம்பிக்கையும் அவளுக்கு நொறுங்கி போனது.

“சை! எவ கூடயோ படுக்கிறதுக்கு எதுக்குடா என் கழுத்துல இத்தை கட்டுன” என்றவள் தன் கழுத்திலிருந்த தாலியை உயர்த்தி காட்ட, அவன் முகம் வெளிறி போனது.

கனி அப்படியே கதவின் மீது சாய்ந்தபடி முகத்தை மூடி அழ பிரபு தன் மௌனத்தை கலைத்தான்.

“நானா இந்த தப்பை செய்யல… அவங்கதான் அப்படி எல்லாம் நடந்துக்கிட்டாங்க… என்னை கட்டாயப்படுத்துனாங்க… எனக்கு எனன் பன்றதுன்னு தெரியல… இதுக்கு இடையில திடீர்னு நமக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க… என்னால ஒன்னும் பண்ண முடியல… எதிர்பாராம நடந்து போச்சு

என்னால நிமிர்ந்து உன் முகத்தை பார்க்க கூட முடியல… குற்றவுணர்வா இருந்துச்சு… அதான் நான் உன் பக்கத்துல கூட வரல

உண்மையை சொல்லணும்னா எனக்கும் உன்கிட்ட சகஜமா பேசணும் பழகணும்னு ஆசை எல்லாம் உள்ளுக்குள்ள இருக்கு… ஆனா ராத்திரி அங்கே நான் வேலைக்கு போகும் போதெல்லாம்… அந்தம்மா என்னை விடாம தொல்லை பண்ணிட்டே இருக்கும்…

 உன்னை கல்யாணம் பண்ணதும் நான் வேலையை விட்டிரலாம்னு நினைச்சேன்… ஆனா வாங்கின கடனுக்கு வட்டி கட்டணும்… தங்கச்சி இஞ்சனியரிங் காலேஜ் சேர்த்திருக்கும் போது என் சம்பளம் இல்லாட்டி போன அவ படிப்பு வேற நின்னுடும்… அதான் எனக்கு வேற வழி தெரியல” என்று  சொல்லி அவன் தலையை குனிந்து கொள்ள விழிகள் சிவக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“சை! நீயும் உன் காரணமும்… கேட்க சகிக்கல” என்றாள்.  

“நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சிக்க முயற்சி பண்ணு” என்று அவன் கண்ணீருடன் கெஞ்சினான். ஆனால் அவள் மனமிறங்கவில்லை.

“நீ என்கிட்ட ஒரு மண்ணும் சொல்ல வேண்டாம்… உங்க அம்மா வரட்டும்… நான் அவங்ககிட்ட பேசிக்குறேன்… உன்னை மாதிரி கேவலமான புள்ளைய பெத்துட்டு மூச்சுக்கு முந்நூறு தடவை எங்க அம்மா அப்பாவை பத்தியும் என் வளர்ப்பு பத்தியும் குறை பேசுறாங்க… அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு… எங்க அம்மா அப்பா பத்தி பேச… இன்னைக்கு வரட்டும்”  என்றவள் கோபவேசமாக பேசுவதை கேட்டவன்,

“நான் சொல்றதை கொஞ்சம் கேளேன்” என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினான். அழுதான்.

அவள் அலட்சியமாக அவனை பார்த்து, “எதுக்கு? நீ சொல்றதை நான் கேட்கணும்… என்னைக்காவது நான் சொல்றதை நீ கேட்டிருக்கியா… குறைஞ்ச பட்சம் என்னை பேசவாச்சும் விட்டிருக்கியா?” என்று கேட்க, பிரபு அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் சாஷ்டாங்கமாக அவள் காலில் விழுந்துவிட்டான்.

“ஏய் சை! என்ன பண்ற நீ” என்றவள் அதிர்ந்து பின்னே நகர,

“என்னை மன்னிச்சிடு… ப்ளீஸ்… நான் செஞ்சது பெரிய தப்புதான்… தப்புதான்… ஆனா அம்மாகிட்ட சொல்லிடாதே… அவங்க தாங்க மாட்டாங்க… செத்துடுவாங்க… பிளீஸ் கனி… சொல்லிடாதே கனி” அவள் கால்களை கெட்டியாக பிடித்து கொண்டு அழுதான்.  

 “என் காலை விடு… ஐயோ காலை விடுன்னு சொன்னேன்” அவன் அவள் கால்களை விடாமல் பிடித்து கொண்டு,

“நீ அம்மாகிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லு” என்றான். அவன் கெஞ்சுவதை பார்க்க அவளுக்கு துளியும் இரக்கம் வரவில்லை. அசூயை உணர்வுதான் ஏற்பட்டது. அவள் இறங்குவதாக இல்லை என்று அறிந்ததும் எழுந்து நின்று அவளை தீர்க்கமாக பார்த்தவன்,

“நீ எங்க அம்மாகிட்ட சொன்ன நான் இங்கேயே தூக்குல தொங்கிருவேன்” என்று மிரட்டினான்.

‘செத்து போ… எனக்கென்ன?’ என்று தொண்டை வரை வந்த வார்த்தையை விழுங்கி கொண்டாள். அவளுக்கு இந்த உலகமே சூனியமாகி போனது போன்றிருந்தது. தலையை பிடித்து கொண்டு தரையில் அமர்ந்துவிட்டாள்.

என்ன யோசித்தும் இந்த பிரச்சனைக்கான தீர்வு புலப்படவில்லை. யோசித்து யோசித்து மூளை குழம்பியதுதான் மிச்சம். பிரபு வேலைக்கு போக வேண்டிய நேரம் கடந்துவிட்டது.

இருவரும் ஆளுக்கொரு மூலையில் அமர்ந்திருந்தனர். உண்ணாமல் சமைத்து வைத்த உணவு அப்படியே கிடந்தது.

ஒரு வேளை அந்த உணவுகள் கெட்டு போய்விட்டால் மாமியாரிடம் தான்தான் வாங்கி கட்டி கொள்ள வேண்டுமென்று எழுந்து குழம்பு பொரியல் எல்லாம் சூடு பண்ணி வைத்தாள்.     

பின்னர் வெளியே ஊற வைத்திருந்த துணியை மொத்தமாக துவைத்து காய போட்டுவிட்டு திரும்ப, அதற்குள் கல்லூரிலிருந்து காயத்ரி வந்திருந்தாள்.

“என்ன அண்ணா… வேலைக்கு போகல” என்றவள் தமையனை விசாரிக்க,

“அது… கொஞ்சம் தலைவலியா இருந்துச்சு… அதான் போகல” என்றான்.

“அதிசயமா இருக்குதான் போ… இப்படி எல்லாம் ஒரு நாளும் காரணம் சொல்லிட்டு வேலைக்கு லீவே போட மாட்ட” என்றவள் தன் பேகை கழற்றி ஓரமாக வைத்துவிட்டு கனியிடம்,

“அண்ணி கொஞ்சம் டீ போட்டு தாங்களேன்” என்றாள்.

பிரபுவுக்கும் சேர்த்து தேநீர் தயாரித்து எடுத்து வந்து வைக்க, அவள் மனதில் என்னதான் நினைத்து கொண்டிருக்கிறாள் என்று அவனால் கணிக்கவே முடியவில்லை. சற்று முன்பான அவளின் சீற்றத்திற்கும் தற்போதைய அவளின் நடவிடிக்கைகளுக்கும் கொஞ்சமும் பொருந்தவில்லை. விசித்திரமாக இருந்தது.

காயத்ரி தன் புத்தகங்களை திறந்து படித்து கொண்டிருக்கும் போதே சேகர் நிறை குடியில் வந்து வாயிற்படியில் தவறி விழ போக, பிரபு சென்று தாங்கி பிடித்தான்.

மகனை ஏறிட்டு பார்த்தவர், “என்ன நைனா… வூட்டுல கீற… வேலைக்கு போலயா?” என்று குழறியபடி கேட்க, “போகல பா… கொஞ்சம் தலைவலி” என்றபடி அவரை தாங்கி பிடித்து உள்ளே அழைத்து வந்து அமர வைத்தான்.

“தலவலியா… கொஞ்சமா கோட்டர் குடிச்சா… எல்லாம் பறந்து போயிடும்… இரு” என்றவர் தன் பேன்ட் பாக்கெட்டில் துழாவி ஒரு குவாட்டர் பாட்டிலை எடுத்து தர,

“ஐயோ! அதெல்லாம் வேண்டாம் பா” என்றான்.

“வேணாமா… சரி” என்றவர் அதனை திறந்து தன் வாயில் சரித்து கொள்ள,

“ஐயோ அதை இப்படி கொடு” என்று அதனை பிடுங்கி கொண்டு சென்றுவிட,

“டே டே” என்று சேகர் கூப்பாடு போட்டார். அவன் அதனை வெளியே தூக்கி போட்டுவிட்டு வர, “என்ன நைனா… இப்படி பண்ணிட்ட” என்று மகனை வாஞ்சையாக பார்த்தார்.

“குடிச்ச வரைக்கும் போதும்… நீ எழுந்திரு… கை கழுவினு வா… சாப்பிடலாம்” என்றவன் அவரை இழுத்து கொண்டு சென்று கைகளை கழுவி உடைகளை மாற்றிவிட்டு, “காயு… கொஞ்சம் அப்பாவுக்கு சாப்பாடு போட்டு எடுத்துட்டு வாயேன்” என்று வினவ,

“நான் படிச்சிட்டு இருக்கேன்… நாளைக்கு டெஸ்ட் இருக்கு… நீ அண்ணிகிட்ட சொல்லு” என்றதும் அவளை ஏறிட்டு பார்க்க முடியாமல் அவன் அமர்ந்திருக்கவும் கனியே தட்டில் உணவு எடுத்து வந்து மாமனாருக்கு வைத்தாள்.

அவளை பார்த்ததும் சேகர் முகம் மலர்ந்து, “இதோ சோறு கொண்டாந்து வைச்சிடுச்சு… என் வூட்டு அன்னலச்சுமி” என்று கனியை பார்த்து புன்னகைக்க, அவள் அமைதியாக திரும்பி நடந்தாள். தட்டிலிருந்த உணவை அரையும் குறையுமாக சாப்பிட்டுவிட்டு போதை மயக்கத்தில் அப்படியே சாய்ந்துவிட்டார்.

காயு முன்பு தங்களுடைய பிரச்சனைகளை காட்டி கொள்ளாமல் மூவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டு முடித்தனர். கனி மாமியாருக்காக தட்டில் உணவினை எடுத்து வைத்தவள் சாப்பிட்ட சாமான்களை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

 இயந்திரம் போல அவள் உடல் வேலை செய்து பழகிவிட்டிருந்தது. கண்களில் அவ்வப்போது  கண்ணீர் முட்டி கொண்டு வந்தது.

அம்பிகா வர தாமதமாகும் என்பதால் கனி வேலைகளை முடித்து கொண்டு பாயை விரித்து படுத்து கொண்டாள். பிரபு மட்டும் வாயிலிலேயே அமர்ந்திருந்தான். எங்கே அவள் தன் அம்மா வந்ததும் உண்மையை சொல்லிவிட போகிறாளோ என்று பயந்து கொண்டிருந்தான்.

குடித்தன வாசல்களில் எப்போதும் நடுநிசி வரை ஏதாவது பேச்சு குரல்கள் கேட்டு கொண்டே இருக்கும். அம்பிகா வீட்டை அடைந்ததும் வாயிலில் அமர்ந்திருந்த மகனை பார்த்து வியப்புற்றார்.

“பிரபு… வேலைக்கு போகலையா நீ… என்ன உடம்புக்கு ஏதாச்சுமா?”

“இல்ல மா… மதியத்துல இருந்து ஒரே தலைவலி” என்று அவன் சொன்ன நொடி,

“என்னபா ஆச்சு… மாத்திரை ஏதாச்சும் போட்டியா” என்று விசாரிக்க,

“இல்லமா… இப்போ பரவாயில்ல… நீங்க உள்ளே வாங்க” என்று அவரை உள்ளே அழைத்து வர,

“உடம்பு சரி இல்லாத நீ பனில வெளியே காத்திட்டு இருக்க… மகாராணி அம்மா போர்வையை போர்த்திகிட்டு படுத்து தூங்கிட்டு இருக்காளா… அதுக்குள்ள என்ன தூக்கமாம் அவளுக்கு” என்று இரைந்தபடி அம்பிகா உள்ளே வர, கனியின் செவிகளில் அவர் சொல்வதெல்லாம் விழுந்த போதும் அவள் அமைதியாக கண்களை மூடி படுத்திருந்தாள்.

“இல்ல மா… இப்பதான் வேலையை முடிச்சிட்டு படுத்தா” என்று பிரபு சமாளித்தான்.

“வீட்டுல சும்மா கிடக்குறளவுக்கு இவ்வளவு சீக்கிரம் தூக்கம் என்ன வேண்டி கிடக்கு… சரியான தத்தி… உனக்குன்னு இப்படி ஒருத்தியாடா வந்து வாய்க்கணும்”

“ப்ச்… ம்மா நீங்க வந்து சாப்பிடுங்க”

“அதெல்லாம் இருக்கட்டும்… உனக்கு தைலமாவது தேய்ச்சு விட்டாளா இல்லையா”

“இப்போ வலி இல்ல மா”

“சும்மா எனக்காக சொல்லாதே… வா தைலம் தேய்ச்சு தலையை பிடிச்சு விடுறேன்… அதுக்கு கூட லாய்க்கி இல்லை உன் பொண்டாட்டிக்கு”

“ம்மா முதல நீங்க சாப்பிடுங்க” என்று அம்மா மகன் இருவரும் பொழிந்து கொள்ளும் பாச மழையை கேட்க கனிக்கு சகிக்கவில்லை. தலையணையை கைகளில் இறுக்க பற்றி கொண்டு தனக்குள் எழுந்து கோபத்தை அடக்கி கொள்ள முயன்றும் உள்ளம் உலைகலனாக கொதித்தது.

உண்மையை சொல்லிவிட்டு இப்போதே இவர்கள் முகத்தில் எல்லாம் காரி உமிழ்ந்துவிட்டு போய்விட வேண்டுமென்று மனதில் நினைத்தாலும் அதை செய்யமுடியவில்லை. ஏதோ ஒன்று தடையாக இருந்தது.

போவது என்றால் மீண்டும் பிறந்த ஊருக்குதான் திரும்ப வேண்டும். தவறு செய்தது கணவனாக இருந்தாலும் பிரிந்து வந்த மனைவிக்கு வாழவெட்டி என்ற பட்டம்தான். எல்லாவற்றிற்கும் மேல் மீண்டும் அதே சுடுகாட்டு வாழ்க்கை.

அந்த கணமே தனக்குள் எழுந்த கசப்புணர்வை எல்லாம் விழுங்கி கொண்டு அந்த வீட்டில் இயல்பாக இருக்க பழகி கொண்டாள். பிரபுவை மட்டும் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை.

அவன் இரண்டு நாட்களாக வேலைக்கு போகவில்லை. ஏதேதோ காரணம் சொல்லி அம்மாவை சமாளித்தவன் அதற்கு மேல் அவரை சமாளிக்க திராணி இல்லாமல் வேலைக்கு சென்றுவிட்டான்.

சசிதான் கோபமாக கனியிடம் புலம்பி தீர்க்க, அவள் சுரணையற்ற ஜென்மமாக வாழ பழகி கொண்டிருந்தாள். அடுத்த மாதம் முதல் நாளே பிரபு தன் வேலையை விட்டுவிட்டான். இந்த தகவல் அம்பிகாவிற்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. நிறைய விவாதங்கள் நடந்தது.

“நான் வேற நல்ல வேலையா தேடிக்கிறேன் மா… இந்த வேலை எனக்கு செட்டாகல” என்று எப்படி எப்படியோ அம்மாவை சமாளித்தவன் இரண்டு வாரம் அலைந்து திரிந்து ஒரு வேலையை தேடி கொண்டான். ஆனால் பாதிக்கு பாதி சம்பளம்தான் கிடைத்தது.

அம்பிகாதான், “எப்படிடா அடுத்த மாசம் பீஸ் கட்டுறது” என்று புலம்பி கொண்டிருந்தார்.

இது எல்லாம் தாண்டி இத்தனை மாதங்கள் கழித்து அம்பிகா தன் கணவனிடம், “இந்தாயா… இன்னொரு ரூம் இருக்க மாதிரி ஒரு சின்ன வீடா பாரு…” என,

“யாருக்கு அம்பு” என்றவர் கேட்க,

“வேற யாருக்கும் நம்ம புள்ளயங்களுக்குதான்… இந்த ஒத்த ரூம்ல எத்தன நாளைக்கு எல்லோரும் ஒண்ணா இருக்கிறது… முன்னயாவது பிரபு நைட் ஷிப்ட் போயிட்டு இருந்தான்… இப்போ அப்படி இல்லையே” என்றதும் சேகருக்கு புரிந்துவிட்டது.

“ஆகட்டும் பார்க்கிறேன்”

“நான் கொஞ்சம் பணம் சேர்த்து வைச்சிருக்கேன்… இந்த மாசமாச்சும் முழுசா உன் சம்பளத்தை கொண்டாந்து கொடுத்தனா… வீடு பார்த்திரலாம் யா” அம்பிகா கெஞ்சலாக கேட்க, சேகர் தலை தலையை அசைத்துவிட்டு அன்று மாலையே குடித்துவிட்டு விழுந்து கிடந்தார்.

வேறு வழியின்றி அம்பிகா தான் வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து முன்பணம் பெற்று அருகிலேயே சிறிய சமையலறையும் சின்னதாக அதனை ஒட்டிய படுக்கையறையும் கொண்ட வீடாக பார்த்திருந்தார். கனிக்கு இது எதிலும் உடன்பாடில்லை. ஆனால் அவள் கருத்தை யார் கேட்க போகிறார்கள்.

வீடு பார்த்து பால் காய்ச்சிவிட, கனியின் மனம்தான் தவியாய் தவித்தது. இருந்த ஒரே ஆறுதலான சசியை பிரிவது அவளுக்கு பெருத்த வேதனையாக  இருந்தது. நிறைய உறவுகள் ரயில் பயணிகளை போல.  ஆங்காங்கே அவர்களை விட்டு நம் பயணங்களை நாம் தொடர்ந்தாக வேண்டிய கட்டாயம்.

இதற்கிடையில் சமீப நாட்களாக பிரபுவின் நடவடிக்கை மாறியிருந்தது. அவளிடம் இணக்கமாக இருக்க அவன் முயன்று கொண்டிருந்தான். ஆனால் அவளால் அது முடியுமென்று தோன்றவில்லை.

 அவளுக்குள் இருந்த ஆசைகள் எல்லாம் சிதைந்துவிட்டன. இப்போது அவளுக்கு அவனிடம் இருப்பதெல்லாம் வெறுப்பு மட்டும்தான்.  

 அதுவும் தனி அறையில் அவனுடன் இருப்பதை யோசித்தாலே முள் மேல் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

அன்று புது வீட்டில் தனி அறையில் அவள் அவனை கண்டும் காணாமல் திரும்பி படுத்து கொள்ளவும் பிரபு அவளை நெருங்கி அணைத்தான்.

அந்த நொடியே, “சீ… என்னை தொடாதே” என்று விட்டு விலகி வந்தாள்.

“கனி… நான் இப்போ மாறிட்டேன்… நான் என் தப்பை உணர்ந்து திருந்திட்டேன்” என்றவன் மீண்டும் அவள் அருகில் வரவும்,

“நீ திருந்து… திருந்தாம போ… ஆனா என்னை தொடாதே… எனக்கு பிடிக்கல” என்று விலகிச் சென்றாள்.

“கனி… நான் சொல்றதை கேளேன்” என்றவன் மீண்டும் அவளை நெருங்கவும்,

“என் பக்கத்துல வந்த… இப்பவே உன் அம்மாகிட்ட போய் நீ செஞ்ச எல்லா அசிங்கத்தையும் சொல்லி விட்டிருவேன்… சொல்லட்டுமா?” என்றவள் மிரட்டவும்,

“அப்படி எல்லாம் பண்ணிடாதே கனி” என்றவன் பதறினான்.

“அப்போ நீ என்னை தொடாதே” என்றவள் தன் பாயையும் தலையணையையும் தள்ளி போட்டு படுத்து கொண்டாள். அதன் பின் வந்த எந்த இரவுகளிலும் அவனை அவள் நெருங்கவிடவே இல்லை.  

இந்நிலையில்தான் கனிக்கு தன் வீட்டில் உள்ளவர்களை பார்த்துவிட்டு வர வேண்டுமென்ற எண்ணம் வலுக்க, அம்பிகாவிடம் தைரியத்தை வரவழைத்து கொண்டு கேட்டும் விட்டாள்.

“அவங்களுக்குதான் உன்னை வந்து பார்க்கணும்னு எண்ணமே இல்ல… நீங்களாவது போய் பார்த்துட்டு வாங்க… இந்த வாரம் ஞாயிற்று கிழமை நீயும் பிரபுவும் போய்ட்டு வாங்க” என்றவர் அனுமதி தந்தது கனிக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்த நாள் ஊருக்கு போக போகிறோம் என்று அவள் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.  

ஆனால் அவள் விரும்பியதற்கு ஏறுக்கு மாறாக நடந்தது. அவளால் ஊருக்கு போக முடியவில்லை. பிரபுவின் மரண செய்தி அறிந்து அவர்கள்தான் இங்கே வந்து சேர்ந்தார்கள்.

காலையில் சைக்கிளில் வேலைக்கு சென்ற பிரபு அடுத்த சில நிமிடங்களில் சாலை விபத்தில் உயிரிழந்த செய்திதான் வந்தது. கனியை தவிர அந்த ஒட்டுமொத்த குடும்பமே நிலைகுலைந்து போனது.

எத்தனையோ நாட்கள் அவனை மானசீகமாக மனதில் கொன்றிருக்கிறாள். ஆனால் ஒரு நாள் இப்படி உயிரற்ற பிணமாக வருவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

அவளுக்கு துளியளவும் வருத்தமே இல்லை எனினும் சேகர், “நைனா… என்ன இப்படி அநாதையா வுட்டு போயிட்டியே… நான் செத்து நீ கொல்லி வைப்பேன்னு பார்த்தா இப்படி நீ செத்து நான் கொல்லி வைக்கிற மாதிரி பண்ணிட்டு போயிட்டியே” என்று அழுது புலம்பியதையும்,

அம்பிகா தாங்காமல் தலையிலடித்து கொண்டு, “பிரபு பிரபு” என்று கதறி அழுது மயங்கி விழுந்ததையும் பார்த்த போது அவளுக்கு மனதை பிசைந்தது. அவன் மீது அளவுகடந்த பாசமும் நம்பிக்கையும் அவர்கள்  வைத்திருந்தார்கள். அதே போல அவனுமே அவர்கள் மீது அளவில்லாத பாசம் வைத்திருந்தான்.

நிதானமாக யோசித்து பார்த்த போது அவனுமே பாதிக்கப்பட்ட அப்பாவி ஜீவன் என்றுதான் தோன்றியது. ஒரு வேளை அவன் வக்கிர புத்தி கொண்டவனாக இருந்திருந்தால் வெகுசுலபமாக அவளையும் தன் இச்சைக்கு பயன்ப்படுத்தி இருக்க முடியும். ஆனால் அவன் அதை செய்யவில்லை. அவளை போல அவனுமே ஒரு வாயில்லாத பூச்சிதான்.

பெண்களுக்கு நிகழும் பாலியில் கொடுமைகள் போல சில நேரங்களில் ஆண்களுக்கும் நிகழ்கிறது. அவர்களின் இயலாமையையும் பொருளாதார சூழ்நிலைகளையும் சில பெண்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.

முதுகெலும்பற்ற கோழைகள் மிக சுலபமாக இந்த வலைக்குள் மாட்டி கொண்டு எந்த பக்கமும் போக முடியாமல் திணறுகிறார்கள். பிரபு அவர்களில் சேர்த்தி.

இதனை ஒருவாறு உணர்ந்த கனி கடைசி வரை பிரபுவின் மீது அம்பிகா கொண்ட நம்பிக்கையை உடைக்கவில்லை. இறந்து போன அவன் ஆன்மாவையும் அவள் கலங்கப்படுத்த விரும்பவில்லை. ஆதலால் அவள் அறிந்த உண்மைகளை எல்லாம் தன் மனதிலேயே போட்டு புதைத்து கொண்டாள்.

shanbagavalli, Chitrasaraswathi and 3 other users have reacted to this post.
shanbagavalliChitrasaraswathiRathiThani Sivasembaruthi.p
Quote

Pavam ava vazhkai la nimmadike idam idam illa pola, prabhu enna velai da parthu iruka kekave karumam ah iruku nalla velai poi serndutan,

Quote

என்ன சொல்ல... ஆணுக்கு ஒரு நியாயம்பெண்ணுக்கு ஒன்னு அப்டிங்கிறது இங்க ஒன்னும் புதுசு இல்லையே... இதனால தான் அவ பிரபுவை வெறுத்தாளா.. நீங்க சொல்ற காரணத்தை படிச்சுட்டு யாரையுமே தவறாக நினைக்க முடியவில்லை

Quote

ஆண் ,பெண் இருவரும் ஏதேனும் ஒருவிதத்தில சூழ்நிலை கைதிதான் போல் ....

கனி கணவனின் செயலை மாமியாரிடம் கூட கூறவில்லை ஆனால் அவங்களுக்கு பிரபுவின் நிலை தெரியமா ??? தெரியும்  போல் இருக்கே???

சூப்பர் சிஸ்❤️

monisha has reacted to this post.
monisha
Quote

Super ma 

You cannot copy content