You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 22

Quote

இயற்கை என்னதான் மனிதர்களுக்கு சில அடிப்படை குணாதிசயங்களை கொடுத்திருந்தாலும், பயிற்சி மூலமும் தொடர்ந்த பழக்கம் மூலமும் இயல்புகளை மாற்றி புதிய வழக்கங்களை பயில முடியும்தானே!

இப்படி ஒட்டுமொத்த சமூகமும் புது பழக்கவழக்கத்துக்கு மாறுவதைத்தான் நாம் சமூகமயமாக்கல் என்கிறோம்.

பருவ வயதை அடைவதற்குள் சிறுவர்களும் சிறுமியரும் எத்தனையோ வருட சமூகமயமாக்கலைத் தாண்டியிருப்பார்கள். அத்தனை ஆண்டுகளும் ஆண்தான் உசத்தி, அவன்தான் குலக்கொழுந்து, குடும்பப் பெயர், குலத்தொழில், ஈமக்கிரியை, பித்ரு கடன், குடும்பச் சொத்து என்ற முக்கியமான எல்லாவற்றிலும் பங்குபெறுவது அவன்தான். அதனால் அவனே முக்கியமானவன், மேலானவன், பெண் வெறும் பண்டம், ஆணின் வாரிசுகளை சுமப்பதற்கென்று ஜென்மமெடுத்த நடமாடும் கர்பப்பை என்று தொடர்ந்து போதிக்கப்பட்டது.

ஆக மனித ஆண் – இருந்த எல்லா ஆண்களையும் சமூகமயமாக்கி, பெண்ணை தாழ்வான்வளாக கருதும் மனப்பான்மையை ஏற்படுத்தினான். அவன் மனைவியாக இருக்கலாம், தாயாக இருக்கலாம், தன் பிள்ளைகளை பெற்ற சகியாக இருக்கலாம். ஆனாலும் அவள் மனித வர்க்கத்தை சேர்ந்தவளாக கருதப்படவில்லை.      

தொடரும்...

22

பள்ளியிலிருந்து வந்ததும் கனி குளியலறைக்குள் சென்று முகம் கழுவி கொண்டிருக்கவும், வெளியே யாரோ சிலர் சத்தமிடுவது போன்று கேட்டது.

துண்டை எடுத்து முகத்தை துடைத்துவிட்டு கொண்டே பால்கனி வழியாக எட்டி பார்த்தாள். வீட்டு வாயிலின் முன்னே கூட்டமாகச் சிலர் நிம்மியுடன் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுப்பட்டிருந்தனர்.  

அதனை பார்த்த கனி பரபரப்புடன் படிக்கட்டில் இறங்கி செல்லவும் வாசு அவள் வெளியே போகாமல் தடுத்து உள்ளே இழுத்து வந்துவிட்டார்.

“என்னபா ஆச்சு… வாசலில யாரோ நிம்மி ம்மா கிட்ட பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்க”

“ஆமா பிரச்சனைதான்” என்றவர் நெற்றியை தேய்த்து கொண்டே, “நான் சொல்றேன்… நீ கொஞ்ச நேரம்.. உள்ளேயே இருமா வெளியே வராதே” என்று தவிப்புடன் சொல்லவும் கனி புரியாமல்,

“என்னாச்சு பா… என்ன பிரச்சனை? நான் ஏன் வெளியே வர கூடாது” என்று வினவினாள்.  

“பிரச்சனையே உனக்குதான்… புரிஞ்சிக்கோ… கொஞ்ச நேரம் அமைதியா உள்ளேயே இரு… நிம்மி எல்லாத்தையும் சமாளிச்சுப்பா” என்றவர் வெளியே எட்டி பார்க்க செல்ல, கனிக்கு ஒன்றும் விளங்கவில்லை.

வாசுப்பா சொன்னதால் அமைதியாக சோபாவில் அமர்ந்து கொண்டாள். ஆனால் வெளியே பேசியவர்களின் குரல் அவளுக்கு ஒரளவு கேட்டதே ஒழிய ஒன்றுமே புரியவில்லை.

“இப்போ… அந்த மிஸ்ஸை கூப்பிட போறீங்களா இல்லயா?”  

“எதுவா இருந்தாலும் நாளைக்கு ஸ்கூல பேசிக்கலாம்… இப்போ கிளம்புங்க… பிரச்சனை பண்ணாதீங்க”

“என்ன தைரியம் இருந்தா என் பையன் மேலயே கையை வைப்பா… என்ன உள்ள ஒளிஞ்சிட்டு இருக்காளா… தேவுடியா முண்ட… அவளை வெளியே வர சொல்லுங்க” என்று நாகராஜின் தாய் எகிற,

“ம்மா… இப்படி எல்லாம் பேசாதீங்க… கொஞ்சம் டீஸன்டா பிகேவ் பண்ணுங்க… நீங்களே இப்படி பேசுனா… உங்க பையன் எப்படி பேசி இருப்பான்” என்று நிம்மி திருப்பி கொடுக்க, 

“அவன் என்ன வேணா பேசி இருக்கட்டும்… அதுக்கு கையை நீட்டிடுவாளா… சாதி கெட்ட நாய்” என்ற நாகராஜின் தந்தை ஆவேசமாக கத்தியதை கேட்ட நிம்மியும் பதிலுக்கு கோபத்துடன் கத்தினார்.

“என்ன சார்… ஜாதி அது இதுன்னு பேசுறீங்க… முதல இங்கிருந்து எல்லோரும் கிளம்புங்க… இல்ல போலிஸ்க்கு போன் பண்ணிடுவேன்”  என்று மிரட்டவும் அங்கிருந்த ஒரு பெரியவர்,

“இவங்க வீட்டு முன்னாடி பிரச்சனை பண்றது சரி இல்ல… அவங்க போலிஸ் போன் பண்ணா நம்மதான் உள்ளே போகணும்” என்று தெளிவாக எடுத்து சொல்லவும் அந்த கூட்டத்தினர் ஏதோ தங்களுக்குள்ளாக பேசிவிட்டு,

“எங்க போயிடுவா… நாளைக்கு ஸ்கூல் பக்கம் வருவா இல்ல… அப்போ பார்த்துக்கலாம்” என்றபடி களைந்து சென்றுவிட்டனர்.

அவர்கள் செல்வதை பார்த்து பெருமூச்செறிந்த நிம்மி கதவை மூடி தாழிட்டுவிட்டு உள்ளே வரவும், “பிரச்சனை முடிஞ்சுதா?” என்று  கேட்டார் வாசு.

“முடியல… இப்போதான் ஆரம்பிச்சிருக்கு”

நிம்மியை பார்த்ததும் சோபாவிலிருந்த எழுந்து நின்ற கனி, “என்ன மேடம்… என்ன பிரச்சனை?” என்று விசாரிக்க,  

“நீ உட்காரு… பேசுவோம்” என்று அமர்ந்துவிட்டு அவளையும் அமர்த்தினார்.

“யாருமா அவங்க?”

“அவங்க எல்லாம் நாகராஜ் சொந்தக்காரங்க கனி”

“நாகராஜ்னா… என் க்ளேஸ்ல இருக்க நாகராஜை சொல்றீங்களா?” என்று அவளுக்கு இப்போதுதான் பிரச்சனை இன்னதென்றே விளங்க ஆரம்பித்தது.

“நீ அந்தப் பையனை அடிச்சிட்டெனு… கலாட்டா பண்ணிட்டு போறாங்க” என, கனி உடனே அவள் அந்த பையனை அடித்ததற்கான காரணத்தை விளக்கினாள்.

“எனக்கு புரியுது கனி… ஆனாலும்” என்றவர் தயக்கத்துடன் இழுக்க,  

“எனக்கு தெரியும்மா… நான் செஞ்சது தப்புதான்… அதனாலதான் உடனே அந்த பையனை தூக்கி விட்டு நான் அடிச்சதுக்கும் மன்னிப்பு கேட்டு அவன் பேசுனதை தப்புன்னு சொல்லி புரிய வைச்சு அந்த சின்ன பொண்ணுகிட்டயும் அவனை மன்னிப்பும் கேட்க வைச்சேன்… அது அப்பவே முடிஞ்சு போச்சு” என்றாள்.

“இப்போ நீ அந்த பையனை அடிச்சது இல்ல பிரச்சனை… உன் சாதிதான் பிரச்சனை” என, கனி பேச்சற்று போனாள்.

“உனக்கு தெரியாது இவங்களை பத்தி… இதையே காரணம் காட்டி உன்னை ஸ்கூலுக்குள்ள நுழைய விடாம கூட பண்ணிடுவாங்க” என்று நிம்மி சொல்ல, கனியின் முகம் வெளிறியது.

 “என்ன நிம்மி சொல்ற?” என்று வாசுவும் அதிர்ச்சியாக,

“எல்லாம் சாதி வெறி பிடிச்சவனுங்க… பண்ணுவாங்க… அவங்க இந்த பிரச்சனையை பெருசாக்கிறதுக்கு முன்னாடி நாம ஏதாச்சும் பண்ணனும்” என, கனி ஒன்றும் பேசவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தாள்.

நிம்மி அவள் தோளை தொட்டு, “நீ ஒன்னும் டென்ஷன் ஆகாதே… பார்த்துக்கலாம்” என்றதும் கனி மெல்லிய புன்னகையுடன் அவரை நிமிர்ந்து நோக்கி, “நான் இந்த மாதிரி நிறைய கடந்து வந்துட்டேன் மா… என்னுடைய டென்ஷன் எல்லாம்… என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வந்திர கூடாதுங்குறதுதான்” என்றாள்.

“என்ன கனி பேசுற நீ? உன்னை எங்க மகளாதான் பார்க்கிறோம்… உனக்கு ஒன்னுனா அது எங்களுக்கும்தான்… உனக்கு இந்த விஷயத்துல எந்த பிரச்சனையும் வராம சரி பண்ண வேண்டியது எங்களோட பொறுப்பு” என்று நிம்மி தெரிவிக்க,

“கரெக்டா சொன்ன நிம்மி” என்றார் வாசுவும்!

கனி நெகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரின் கைகளை பற்றி கொண்டாள்.

தன் பெற்றோர்களும் கூட தன்னை பற்றி யோசிக்காத போது இந்த தம்பதிகள் யோசிப்பதும், துணையாக நிற்பேன் என்பதும் கனியை வியப்பில் ஆழ்த்தியது.

பெரும்பாலான உறவுகள் நாம் விழும் போது தாங்கி பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை. ஏறி மிதிக்காமல் இருந்தாலே பெரிய விஷயம்.

ஆனால் இவர்கள் எந்த உறவுமே இல்லாத போதும் அன்பை வாரி வாரி வழங்குகிறார்கள். உண்மையிலேயே கனிக்கு அந்த நொடி வருத்தமோ வேதனையோ இல்லை. சந்தோஷமாக உணர்ந்தாள்.

கனி நடந்த எதையும் கருத்தில் கொள்ளாமல் அடுத்த நாள் காலை எப்போதும் போல பள்ளிக்கு தயாராகி கொண்டிருக்கும் போது மாடியேறி வந்த நிம்மி, “கனி கொஞ்சம் சீக்கிரம் கிளம்பு” என்று துரிதப்படுத்த,

“ஸ்கூல ஏதாவது முக்கியமான வேலையா ம்மா?” என்று கேட்க,

“ஸ்கூலுக்கு இல்ல… முக்கியமான ஒருத்தரை பார்க்க போறோம்… அப்பதான் நேத்து நடந்த பிரச்சனையை சால்வ் பண்ண முடியும்” என்றவர் மேலும்,

“சீக்கிரம் ரெடியாகிட்டு கீழே வா… ஆ… வரும் போது பைக் சாவி எடுத்துட்டு வா” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றுவிட,

‘யாரை பார்க்கணும்னு சொல்லாமலே போறாங்க?!’ என்று தனக்குத்தானே கேட்டு கொண்டவள், ‘சரி போய் கேட்டுக்கலாம்’ என்று அவள் கிளம்பி தயாராகி கீழே வந்தாள்.

நிம்மி உடனடியாக அவளை பைக்கை எடுக்க சொல்லவும் வாசு, “பார்த்து போங்கமா” என்று வாயிலை தாண்டி சுற்றிலும் பார்த்து விட்டு பதட்டத்துடன் வழியனுப்ப, கனி பைக்கை கிளப்ப நிம்மி அவள் பின்னே அமர்ந்து கொண்டார்.  

“யார் கண்ணுலயும் படாம போயிட்டு வரணும்… சீக்கிரம் போ… லெப்ட் சைட்ல உள்ளே போ” என்றவர் படபடப்புடன் வழியை சொல்லி கொண்டே வர,

“யார் வீட்டுக்கு ம்மா? யாரை பார்க்க போறோம்” என்று கேட்க,

“எம். எல். ஏ அமுதவாணன்… ரொம்ப நல்ல மனுஷன்… நான் கேட்டதும் நம்ம ஸ்கூலுக்கு நிறைய பெஸிலிட்டீஸ் செஞ்சி தந்தது அவர்தான்”

“ஓ!” என்று ஆச்சரியத்துடன் கேட்டபடி பைக்கை இயக்கி கொண்டு வந்தாள்.

“கனி… இங்கேதான்… இங்கேதான் நிறுத்து” என்று நிம்மி நிறுத்த சொல்லிய இடத்தை பார்த்து கனியின் விழிகள் அகன்றன. அதே இடம். ஆனால் வீட்டின் தோற்றம் நவீனமாக மாறியிருந்தது. அந்த பிரமாண்டமான கேட்டிற்குள் ஒரு பெரிய வெள்ளை நிற காரும் ஒரு சிவப்பு நிற காரும் ஒன்றன் பின் ஒன்றாக நின்றன. 

“உள்ளே வண்டியை கொண்டு போக முடியாது… நீ இங்கேயே நிறுத்திடு” என்று நிம்மி சொல்ல அவள் பைக்கை நிறுத்திவிட்டு,

“சேதுராமன் ஐயா வீடு இல்ல இது?” என்று கேட்டாள்.  

“ஆமா… அந்த சேதுராமன் மகன்தான் அமுதவாணன்… உனக்கு தெரியுமா? ரொம்ப நாள் படுத்த படுக்கையா இருந்து போன வருஷம்தான் அவர் செத்து போனாரு” என்றவர் சொன்னதும் சேதுராமன் முன்பாக தன் தந்தை முதுகெலும்புகள் வளைந்து குறுக்கி நின்ற காட்சியும் அவள் மடியேந்தி நின்ற காட்சியும்தான் கண் முன்னே தோன்றின.

காலங்கள் மாறிவிட்டது. தோற்றங்கள் கூட மாறிவிட்டது. ஆனால் காட்சிகள்தான் மாறவில்லை. மீண்டும் அதே இடத்திற்கு வந்து தான் இவர்களிடம் உதவி கேட்டு கையேந்தி நிற்க போகிறோமா?

“வண்டியை நிறுத்திட்டு உள்ளே வா” என்றபடி நிம்மி விறுவிறுவென உள்ளே செல்ல,

“மா ஒரு நிமிஷம்” என்று அவள் குரல் கொடுத்ததை அவர் கவனிக்கவில்லை. அவர் பாட்டுக்கு அந்த பெரிய கேட்டை தாண்டி உள்ளே சென்றுவிட கனி அங்கேயே தேங்கி நின்றுவிட்டாள்.

அந்த கேட்டை தாண்டி உள்ளே செல்ல அவளுக்கு மனம் வரவில்லை. அது கேட்டாக தெரியவில்லை. சக்தி வாய்ந்த லக்ஷ்மண கோடாகதான் தெரிந்தது. காலங்காலமாக பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையில் இருக்கும் பொருளாதார கோடு. மேல் சாதிக்கும் கீழ் சாதியையும் பிரித்து வைத்திருக்கும் தீண்டாமை கோடு.

இந்த கோட்டை தாண்டி செல்வதல்ல சமத்துவம். இந்த கோட்டை மொத்தமாக அழிப்பதுதான் சமத்துவம். அவள் அந்த கேட்டையும் கோட்டையும் தாண்ட விழையவில்லை. பைக்கில் சாய்ந்தபடி நின்றுவிட்டாள்.

 உள்ளே சென்ற நிம்மி திரும்பி வருவார் என்று காத்திருந்தாள்.

நேரம் கடந்து சென்றது.

அப்போது ஒரு குரல். “யா இங்கே சிக்னலே கிடைக்கல… இரு இரு வரேன்… இப்போ கேட்குதா”

கேட்டை தாண்டி வந்த நெடுநெடுவென உயரமும் கம்பீரமுமான ஆடவன் செல்பேசியுடன் கனியின் எதிர்திசையில் வந்து நடந்தபடி பேசி கொண்டிருந்தான்.  

அவன் அவளை பார்க்கவில்லை. ஆனால் அவள் பார்த்தாள்.

“அம்மாவுக்கு இப்போ பரவாயில்ல… பைன் பைன்… ஒகே டார்லிங்… யா ஸுவர்… நாளைக்கு மார்னிங் சென்னை போயிடுவேன்… அப்புறம் நைட் ப்ளைட்… லேட் பண்ண மாட்டேன்… ஸுர்… சமுத்திரா தூங்கிட்டாளா? ஒகே… குட் நைட் டார்லிங்… லவ் யூ” என்றவன் பேசி முடிக்க அவள் அவன் உடையாடலை கேட்க விரும்பாவிட்டாலும் அது அவள் காதில் விழுந்தது.

அவன் மீண்டும் கேட்டை தாண்டி செல்ல பார்க்கவும் முகத்தின் மீது கையை வைத்து கொண்டு அவள் வேறு புறமாக தன் பார்வையை திருப்பி கொண்டாள்.

உள்ளே செல்ல இருந்தவன் சட்டென்று அவள் புறம் வந்து, “எக்ஸ்க்யூஸ் மீ… நீங்க யாரு?” என்று கேட்க, கனியின் நெஞ்சம் படபடத்தது.

முன்பு அவனுக்கு தன்னை யாரென்றே தெரியாது என்று அவள் நினைத்திருந்த போது நேராக வந்து அவளை பெயரை சொல்லி அழைத்தான். இன்று யாரென்று கேட்கிறான். அன்றும் இப்படியே இருந்திருந்தால் அவள் மனதில் தேவையில்லாத ஆசைகள் உருவாகி இருக்காது என்றவள் எண்ணி கொண்டிருக்கும் போது,

“ஏய்… நீ கன்னிகை தானே!” என்று ஆச்சரியம் கலந்த பார்வையுடன் கேட்க, அவள் கண்களில் நீர் திரண்டுவிட்டது. அவன் முன்பாக தன் உணர்வுகளை காட்டிவிட கூடாது என்று பிராயத்தனப்பட்டு கண்ணீரை உள்ளிழுத்து கொண்டவள் அவனை வெறுமையான பார்வை பார்க்க,

“நான் அருள்மொழி… என்னை ஞாபகம் இல்லையா?” என்று உற்சாகமாக பேசினான்.  

‘என்னால உன்னை எந்த ஜென்மத்திலயும் மறக்க முடியாது’ என்ற வார்த்தைகளை தொண்டை குழியிலேயே நிறுத்தி கொண்டு,

“இருக்கு” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

“ஆமா எப்படி இருக்க… இப்போ என்ன பண்ற?”

அவனை ஆழ்ந்து பார்த்தவள் மெல்ல பேசினாள்.

“நான்… நம்ம கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சரா இருக்கேன்”

 அவளை வியப்புடன் ஏறிட்டவன், “சீரியஸ்லி… சூப்பர்ப் யா” என்று பாராட்டிவிட்டு, “பரவாயில்ல… உங்க கம்யூனிட்டில இருந்து நீ படிச்சி… கவர்மெண்ட் ஜாப்ல சேர்ந்து… பெரிய விஷயம்தான்” என்று சொல்லவும் அவள் முகம் கோபமாக மாறியது.

“உங்க கம்யூனிட்டி ஆளுங்க எல்லாம் படிச்சிட்டு வெளிநாட்டுல போய் உத்தியோகம் பார்த்து லட்சம் லட்சமா சம்பாதிக்கும் போது ஆப்டிரால் நாங்கெல்லாம் படிச்சு ஒரு கவர்மெண்ட் டீச்சரா கூட ஆக மாட்டோமா என்ன?” என்றவள் கேள்வியில் அவன் முகம் சுருங்கி போனது.

“ஏய்… நான் அப்படி மீன் பண்ணல… உன்னுடைய கம்யூனியுட்டில இருந்து படிச்சு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறதை நான் பெருமையாதான் சொன்னேன்”

“இதுல பெருமைப்பட என்ன இருக்கு… உங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் குறுக்கிடலனா… எங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் எப்பவோ படிச்சு மேலே வந்திருப்போம்” என்றவள் குத்தல் பார்வையுடன் சொல்லிவிட்டு, “அப்படியே கஷ்டப்ப்பட்டு மேலே வந்தாலும் உங்களை மாதிரி ஆளுங்க விட மாட்டீங்க” என்று முனகினாள்.

 அருள்மொழியின் முகம் சிறுத்து போனது.

“என்னாச்சு? என்ன கோபம் உனக்கு? நான் உன்கிட்ட பிரண்டிலியாதானே பேசுறேன்”

“நீங்க என்கிட்ட பிரண்டிலியா பேசலாம்… ஆனா நான் அபப்டி பேச கூடாது… அப்படி பேசுனா அவமானப்படுத்துவாங்க… அசிங்கப்படுத்துவாங்க… ஊரை விட்டு துரத்துவாங்க” என்றவள் கண்களில் தெரிந்த கோபத்தின் மூலத்தை அருள்மொழியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

“யார் துரத்துனாங்க உன்னை… நீ என்ன சொல்ற”

“உங்களுக்கு எதுவும் தெரியாது… நீங்க எல்லாம் தெரிஞ்சிக்கவும் விருப்பப்பட மாட்டீங்க… உங்க காலுக்கடில இருக்க பூமி சரியா சுத்துது இல்ல… அது போதும் உங்களுக்கு”

“சாரி… நீ ஏன் இப்படி எல்லாம் பேசறன்னே எனக்கு புரியவே இல்ல”

“இன்னுமா புரியல… என்கிட்ட நீங்க பேசாம இருக்கிறது நல்லதுன்னு சொல்றேன்… ஆக்சுவலி எனக்கு நல்லது” என்றவள் அலட்சியமாக தன் பார்வையை திருப்பி கொண்டு பைக்கில் சாய்ந்தபடி நின்றாள்.

 அருள்மொழிக்கு அவளிடம் ஏன் பேச்சு கொடுத்தோம் என்றாகிவிட்டது.

அவன் கேட்டை தாண்டி உள்ளே சென்ற சில நிமிடங்களில் நிம்மி திரும்பி வந்தார்.

“என்ன கனி? நீ வெளியவே நின்னுட்ட”

“சாரிம்மா தப்பா எடுத்துக்காதீங்க… எனக்கு இந்த வீட்டுக்குள்ள வர விருப்பமில்ல… நானும் அப்பாவும் இதே வாசலில வந்து நிறைய தடவை நின்னு இருக்கோம்… எங்களுக்கு உதவி கிடைச்சுதே தவிர மரியாதை கிடைக்கல… அப்போ எனக்கு விவரம் தெரியாத வயசு… ஆனா இப்போ என்னால அந்த மாதிரி நிற்க முடியாது” என்று கனி சொன்னதை கேட்ட நிம்மி அவளை ஆழமாக பார்த்துவிட்டு,

“சரி கிளம்புவோம்” என்றார். அவர் முகம் வாட்டமுற்றிருந்ததை பார்த்தவள் பைக்கை கிளப்பிய போது மாடியில் அருள்மொழி நின்று அவளை பார்த்திருப்பதையும் கவனித்தாள்.

சட்டென்று முகத்தை திருப்பி கொண்டு வண்டியை இயக்கியவள், நிம்மியிடம் என்ன நடந்தது என்று எதுவும் கேட்கவில்லை. அவரும் எதுவும் பேசாமல் அழுத்தமான மௌனத்துடன் வந்தார்.

வீட்டிற்கு வந்து சேர்ந்ததும் வாசுதான் ஆர்வமாக என்னவென்று விசாரித்தார்.  

“என்னாச்சு நிம்மி… பேசிட்டியா?” 

“பேசிட்டேன்… அமுதவாணன் என்ன சொன்னாருனா?” என்று தயக்கத்துடன் நிறுத்தி,

“கனிக்கு வேற ஊருக்கு மாத்தல் வாங்கி தர்றேன்னு சொல்றாரு… இப்போதைக்கு ஸ்கூல் பக்கம் போக வேண்டாம்னும் சொல்ல சொன்னாரு” என, கனியின் உதடுகள் அலட்சியமாக வளைந்தன.

“அவர் இந்த பிரச்சனையை சால்வ் பண்ணுவாருன்னு பார்த்தா… அவருமே சாதி அது இதுன்னுதான் பேசுறாரு… எல்லா மனுஷக்குள்ளும் ஒரு சாதி வெறி இருக்கு… எல்லாம் நல்லவன் போர்வைல சுத்துறாங்க… நான் உன்னை உள்ளே கூட்டிட்டு வரன்னு சொன்னதுக்கு கூட அவர்தான் வேண்டாம்னுட்டாரு… அவர் இப்படி பேசுவாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல” என்று நிம்மி ஏமாற்றத்துடன் பேசியதை பார்த்த கனிக்கு தன்னுடைய கணிப்பு சரியென்று பட்டது.   

“அவங்க எல்லாம் அப்படிதான் மா… அவங்க உதவி செய்றதெல்லாம் நல்லது செய்யணும்கிற எண்ணத்துல இல்ல… அவங்கள நல்லவனா காட்டிக்கதான்… மத்தபடி இவங்க எல்லாம் ஒரே குட்டைல ஊறுன மட்டைங்கதான்” என்றவள் மேலும்,

“விடுங்க மா… வாங்க நம்ம டிபன் சாப்பிட்டு ஸ்கூலுக்கு கிளம்புவோம் டைமாச்சு” என்று கூற நிம்மி அவளை அதிர்வுடன் பார்த்து,

“நீ இன்னைக்கு ஸ்கூலுக்கு வர வேண்டாம்… வீட்டுலயே இரு… இந்த பிரச்சனை கொஞ்சம் சால்வ் ஆகட்டும்” என்றார்.

“இல்லமா நான்” என்று அவள் மறுக்க எத்தனிக்க,

“நீ எதுவும் பேச வேண்டாம்… என் மேல உனக்கு மதிப்பு இருந்தா நான் சொல்றதை கேளு… இன்னைக்கு நீ ஸ்கூலுக்கு வர வேண்டாம்… நான் மட்டும் போறேன்” என்று நிம்மி திட்டவட்டமாக சொல்ல, அவள் முகம் சோர்ந்து போனது.

அதன் பின் நிம்மி புறப்பட்ட செல்ல கதவை மூடிவிட்டு வந்த வாசு கவலையுடன் அமர்ந்திருந்த கனியிடம், “எல்லாமே சீக்கிரம் சரியாயிடும்… நீ எதையும் மனசுல போட்டு குழப்பிக்காதே… போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு” என,

“சரி பா” என்றவள் மாடியேறி தன் வீட்டிற்குள் வந்து தரையில் அமர்ந்து கொண்டாள். அருள்மொழியின் நினைவு வந்தது. அவனிடம் தான் அப்படி பேசி இருக்க கூடாது என்று உள்ளம் வேதனையுற்றாலும் மூளை அவள் செய்தது சரியென்று ஆதரித்தது.

அவளை அன்று பலவந்தப்படுத்திய நால்வரும் பேசியது இப்போதும் அவள் காதில் நாரசாமாக ஒலித்தன.

‘சேதுராமன் ஐயா பேரனோட ஊர் மேய்ஞ்சிட்டிருக்குது கழுதை’

சுவற்றில் சாய்ந்தபடி இமைகளை மூடி கொண்டாள். அவன் தன்னிடம் பேசியது குற்றம் இல்லை. தான் அவனிடம் பேசியதுதான் குற்றம் என்றார்கள். இதுதான் இந்த சமூகத்தினர் நியதிகள்.

கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. அதில் அவளின் ஆசைகள் யாவும் கரைந்து போயின. 

shanbagavalli, Rathi and 4 other users have reacted to this post.
shanbagavalliRathiThani Sivachitti.jayaramansembaruthi.pnoor.sulaiman
Quote

உன்னோட கோவம் சரி கனி.. ஆனாலும் நீ காட்டினா ஆள் தப்பில்லையா.... எனக்கென்னவோ இந்த அருள் இந்த குட்டையில ஊராத மட்டை மாதிரி தோணுது..

நிம்மிம்மா எத்தனை நாளைக்கு கனியை உள்ளேயே வச்சுக்குவீங்க

Rathi has reacted to this post.
Rathi
Quote

Enna nu solrathu inda jaadi veri pudichi irukura varai eduvum marathu pa, kani ku innum evlo dan problem varumo eppadi samalika poralo

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from sembaruthi.p on July 10, 2022, 7:18 PM

உன்னோட கோவம் சரி கனி.. ஆனாலும் நீ காட்டினா ஆள் தப்பில்லையா.... எனக்கென்னவோ இந்த அருள் இந்த குட்டையில ஊராத மட்டை மாதிரி தோணுது..

நிம்மிம்மா எத்தனை நாளைக்கு கனியை உள்ளேயே வச்சுக்குவீங்க

அருள் மேல அவள் காட்டினது அவளோட இயலாமையினால் வந்த கோபம். எல்லாத்துக்கும் மேல ஒரு சராசரி பெண்ணின் ஏமாற்றத்தின் வெளிப்பாடு

 

sembaruthi.p has reacted to this post.
sembaruthi.p
Quote
Quote from chitti.jayaraman on July 11, 2022, 12:28 AM

Enna nu solrathu inda jaadi veri pudichi irukura varai eduvum marathu pa, kani ku innum evlo dan problem varumo eppadi samalika poralo

சமாளிக்க ஒரு துணை இருந்தால் சமாளிச்சுடலாம். அப்படி ஒருத்தர் வரணும்

 

Quote

கனியின் கணிப்பு சரிதான் ...அவள்  அந்த வீட்டுக்குள்ள போகாதது நல்லது தான் .....

சூப்பர் சூப்பர் சிஸ்😀😀

Quote

Super ma 

You cannot copy content