You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 29(Pre Final)

Quote

காலச்சக்கரம் வேகமாக சுழன்றது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்கள் தங்கள் சுதந்திரத்திற்காக போராடினாள். இப்படி போராடிய பெண்களை அகங்காரம் பிடித்த அடங்காபிடாரிகளாகத்தான் பாவித்தார்கள்.

அதனால் சமானிய ஆண்கள் பெண்களை அடக்கியாண்டு, தான் எத்தனை பெரிய ஆண்மகன் என்பதை நிரூபிக்க முயன்றார்கள். காரணம் பெண்களை ஆதிக்கம் செய்வது ஆணின் பிறப்புரிமை என்கிற நம்பிக்கைகள் இது போன்ற மனிதர்களிடம் மிக பரவலாக காணப்பட்டன.

இதற்கு பின்னால் இன்னொரு மரபணு ரீதியான காரணமும் இருந்தது. பெண்களுக்கு பெரும்பாலும் அவையத்தில் முந்தியிருக்கும் ஆல்பா ஆண்களைத்தான் எப்போதுமே பிடிக்கும். ஓர் ஆண் இயல்பிலேயே ஆல்பாத்தனம் மிக்கவனாக இருந்தால் அவன் எந்த முயற்சியும் செய்யாவிட்டாலும் அனிச்சை செயலாக எல்லா பெண்களும் அவனை விரும்பிவிடுவார்கள்.

அதுதான் இயற்கை! அதனால் ஓர் ஆல்பா ஆணுக்கு ஒரு பெண் தன்னை விட்டு போய்விடுவாளோ என்ற பயமே இருப்பதில்லை. ஆனால் ஆல்பா அல்லாத ஆண்களின் நிலை?

‘இவ என்னை விட்டு போய்விடுவாளோ?’ என்று ஆதங்கத்தில் தவிப்பர். அதன் தற்காப்பு நடவடிக்கையாக பெண்ணை ஆதிக்கம் செய்து அவள் சிறகுகளை வெட்டி, பல்லை பிடுங்கி, அவள் நடமாட்டதிற்கு தடை விதித்து, அவளை பத்திரமாக தன் கட்டுபாட்டிற்குள் வைத்து கொள்ள முயல்வான்.

பெண்களின் நிலையை குறித்து சில ஆல்பா ஆண்கள் யோசிக்க ஆரம்பித்ததுதான் உலக வரலாறே மாறியது.

அப்படியான நம் தேசத்தின் ஆல்பா ஆண்கள் – ராஜாராம் மோகன் ராய், மகாகவி பாரதியார், பெரியார் என்று சொல்லி கொண்டே போகலாம்.

29

கனி மாயனை சந்தித்த நாளிலிருந்து அவன் கொடுத்து கொண்டிருக்கும் ஆச்சரியங்களும் அதிசயங்களும் குறைவே இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரியாக அவளை பிரமிக்கச் செய்தான்.

அதுவும் அவன் அறையிலிருந்த ஆளுயர புத்தக அலமாரியை பார்த்த கனிக்கு அடங்கா வியப்பு ஏற்பட்டது. அங்கிருந்த புத்தகங்கள் ஒவ்வொன்றும் மாயனை சாமான்ய மனிதன் இல்லை என்று அழுத்தமாக பறைசாற்றின.

மேலும் அவன் எழுதிய சிறுகதை தொகுப்புகள் மற்றும் கவிதை நூல்கள் எல்லாம் பிரித்து படித்தவளுக்கு வரிக்கு வரி புல்லரிப்பு உண்டானது. ஒவ்வொரு வரிகளும் அவனுடைய வாழ்வின் வலிகளை சொன்னது. மிக முதிர்ச்சியான அழகான காதலை கவிதை மொழியில் விவரித்திருந்தான்.

அதனை படித்து பார்த்தவளுக்கு, ‘எப்படி எப்படி?’ என்று மூச்சு முட்டியது. மனம் அவன் புறம் சாய எத்தனித்தது.

“என்ன படிச்சு இருக்க நீ” என்றவள் மீண்டும் ஒரு முறை அவனிடம் கேட்ட போது,

“நான் பிளஸ் டூ கூட முடிக்கல” என்றான் சாதாரணமாக.

“சும்மா பொய் சொல்லாதே”

“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு”

அவள் அதிசயித்து, “அப்புறம் எப்படி இந்த புக்ஸ் எல்லாம் எழுதின” என்று வினவ,

“புத்தகம் எழுத படிச்சிருக்கனுமா என்ன… எழுத்தறிவும் நல்ல சிந்தனையும் இருந்தா போதாதா?” என்று அவன் சொன்ன பதிலை கேட்டு அவள் வாயடைத்து போனாள். அவன் சிந்தனை துளிகள் அபாரமானதாக மட்டுமல்ல. அழகானதாகவும் இருந்தன.

வெறும் வெளிதோற்றத்தை மட்டும் பார்த்துவிட்டு மனிதர்களை கணிப்பது போன்றதொரு அபத்தம் வேறெதுவும் இருக்க முடியாது என்பதை அவள் அப்போது  உணர்ந்து கொண்டாள்.

எல்லாவற்றிற்கும் மேல் அவளுக்குள்ளும் சாதி வெறியும் நிற வெறியும் இருந்திருக்கிறது.

தன் சாதி மற்றும் பிறப்பின் மீது தான் கொண்ட தாழ்வான அபிப்பிராயங்கள்தான் மாயனின் மீது வெறுப்பாகவும் அருள்மொழியின் மீதான மதிப்பாகவும் மாறி இருக்கிறது. எல்லாமே நாம் பார்க்கும் கண்ணோட்டங்களில்தான் இருக்கின்றன.

மாயனை இதுவரையில் அவள் பார்த்த கண்ணோட்டம் முற்றிலும் தவறானது என்பதை தெள்ளத்தெளிவாக புரிந்து கொண்ட அதேநேரம் அவனை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.

“இந்த புக்கை எல்லாம் பார்த்தா மாயன் வெட்டியான் வேலைதான் பார்க்கிறான்னு நம்பவே முடியல அத்தை” என்று அவள் செவ்வந்தியிடம் பேச்சு கொடுத்த போது அவர் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டன்.

“அத்தை என்னாச்சு?” என்று தோளை தொட்டதும் தன் கண்ணீரை துடைத்து கொண்டபடி பேசினார்.

“மாயன் தான் வாழ்க்கையை பத்தி எப்படி எப்படியோ கனவு கண்டான்… ஆனா அவன் நினைச்ச எதுவுமே நடக்கல… கடைசில ஜெயிலுக்கு போய் திரும்பி வந்து வேறு வழி இல்லாம இந்த வெட்டியான் வேலை பார்க்க வேண்டியதா போச்சு”

“ஏன் அப்படி?”

“உங்க அப்பாவை அவங்க அண்ணனுக்கு மேல் சாதி பொண்ணை கட்டிக்கிட்டானு ஊரை விட்டு ஒதுக்கி வைச்சிருந்தாங்க… அந்த சமயம் பார்த்து என் புருஷனும் குடிச்சு குடிச்சு குடல் வெந்து செத்துட்டாரு… அது மட்டுமா? ஈஸ்வரன் அண்ண… குடும்பமும் விட்டு போயிட்டாங்க

ஊர்ல வெட்டியான் வேலை பார்க்க யாருமே இல்ல… அப்பத்தான் மாயன் ஜெயில இருந்து வந்தான்… அவனை ஊருக்குள்ள சேர்த்துக்கணும்னா… ஊர்காராங்க எல்லாம் சேர்ந்து அவன் வெட்டியான் வேலை பார்க்கணும்னு கண்டிஷனா சொல்லிட்டாங்க” என்றதும் கனி கோபத்துடன்,

“அப்படி என்ன இந்த ஊர்ல இருக்கணும்… பேசாம ஊரை விட்டு போயிடலாம் இல்ல” என்று கேட்க,

“போயிருக்கலாம்… படுத்த படுக்கையா உடம்பு சரியில்லாம கிடந்த என்னை எங்க தூக்கிட்டு போவான்… என்ன புழைப்ப பார்ப்பான்… அதுவும் ஜெயில இருந்து வந்தவனுக்கு எவன் வேலை கொடுப்பான்

அதான் வெட்டியானா இருக்க ஒத்துக்கிட்டான்… ஆனா எனக்குதான் மனசு தாங்கல…  வேண்டாம்டா என்னை விட்டுடு போயிடுடான்னு எவ்வளவோ சொன்னேன்… பிடிவாதமா கேட்க மாட்டனுட்டான்… ஒரு அம்மா புள்ளைக்கு செய்றதை எல்லாம் என் புள்ள எனக்கு செஞ்சான்… அந்த நிமிசம் நான் செத்து ஒழிஞ்சு போயிருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு

ஆனா எனக்காக… என் ஒருத்திக்காக தான் வாழ்க்கையை விட்டுட்டு எதிர்கால கனவை எல்லாம் தொலைச்சிட்டு போராடிட்டு இருக்க புள்ளைய தனியா விட்டுட்டு போக எனக்கு மனசு வரல…

மொள்ள மொள்ள நான் எழுந்து நடமாடினேன்… இன்னைக்கு நான் நல்லபடியா இருக்கேனா அது எந்த சாமி புண்ணியத்தாலயும் இல்ல… அது என் சாமியால… என் மவன்தான் எனக்கு உயிர் கொடுத்திருக்க சாமி” என்று தன் ஈரகண்களை துடைத்தபடி செவ்வந்தி பேசியது எல்லாம் கேட்ட போது கனி கண்களிலும் நீரூற்று உண்டானது. அந்த நொடி மாயன் அவள் மனதில் வானாளாவு உயர்ந்து நின்றான்.

மேலும் அவன் ஊருக்காக வெட்டியான் வேலை பார்த்தாலும் பணத்திற்காக மெக்கானிக் வேலையும் சேர்த்து செய்தான். அவனுடன் மெக்கானிக் ஷெட்டில் வேலை செய்த நண்பன் குமரனுடன் சேர்ந்து பழைய கார்களை வாங்கி அதனை பழுது பார்த்து நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்து அதை இருவருமாக பகிர்ந்து கொண்டனர்.  

அப்படி வந்த பணத்தில் நாற்காலிகள், பந்தல், பிணத்தை பதப்படுத்தும் குளிர்சாதனப்பெட்டி போன்றவற்றை வாங்கி தன் ஊரில் நடக்கும் இறப்பு சடங்குகளுக்கு வாடகைக்கு கொடுத்தான்.

பெரும்பாலும் இதற்காக டவுனிற்கு அழைத்து வரவழைக்க சொல்பவர்கள் ஊரிலேயே மலிவாக கிடைப்பதால் மாயனிடமே வாடகைக்கு பெற்று கொண்டனர்.

இவற்றில் வரும் வருமானங்களில் அவன் செலவுக்கு போக ஒடுக்கப்பட்ட சமுதாய குழந்தைகளின் படிப்பிற்காக செலவு செய்தான். ஜெயிலில் இருக்கும் போதே கட்சி நபர் ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் அவனுடைய நற்குணத்தால் இன்னும் மேம்பட தொடங்கியிருந்தது. உயர் நிலையில் இருப்பவர்களுக்கு அவனை அறிமுகம் செய்து வைத்தது.  

இதை எல்லாம் செவ்வந்தி மற்றும் சாந்தி மூலமாக கேட்டறிந்து கொண்டாள் கனி.

நாட்கள் அதன் போக்கிற்கு வேகமாக நகர, மாயன் கனியின் மனதை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து கொண்டிருந்தான். 

பழையபடி கனி பள்ளிக்கு செல்ல துவங்கினாள். பள்ளி முடிந்ததும் மாயன் வீட்டிற்கு சென்று தன் பெற்றோர்களை பார்த்து பேசிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

அப்படி ஒரு முறை செல்லும் போது மாயன் வீட்டை சுற்றி ஒரு இளைஞர்கள் பட்டாளமே நின்றிருந்தது. ஆண் பெண் என்று கலவையாக இருந்தனர்.

கனி சாந்தியிடம் விசாரிக்க, “நம்ம மாயன் கிட்ட பறை அடிக்க கத்துக்க வந்திருக்காங்க” என,

“பறை அடிக்கவா?” என்றவள் ஒரு மாதிரி இளக்கார தொனியில்தான் கேட்டாள். ஆனால் அந்த இளைஞர்களிடம் பேசிய பின்புதான் தெரிந்தது.

அவர்கள் எல்லோரும் பாரம்பரியமான கலைகள் மீது ஆர்வம் கொண்டவர்கள். அவற்றில் மிகவும் பழமையான இசைக்கருவிதான் பறை என்று அவர்கள் தந்த விளக்கத்தை கேட்ட போது அவளுக்கு சிலிர்த்து போனது.

நம்முடைய கலாச்சாரங்கள் தொடங்கி கிராமிய தெய்வங்கள் வரை அனைத்தையும் கீழாக கேவலமாக நினைப்பதற்கு பின்னணியில் நம்மை ஆட்டிவிக்கும் அடிமை மனப்பான்மை ஒளிந்திருக்கிறது என்பதை அவர்கள் ஆணிஅடித்தது போல புரிய வைத்தனர்.

அவர்களுக்கு மாயன் பறையடிக்கும் வித்தையை போதித்த போதுதான் இதற்கு பின்னணியிலும் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா என்பதை அறிந்து கொண்டாள்.

அத்துடன் மாயனின் ஆச்சரியங்கள் முடியவில்லை. எதேச்சையாக அவனின் புத்தக அலமாரியை துழாவிய போது அவன் கைப்பட எழுதிய டைரி ஒன்று கிடைத்தது. அதனை எடுத்து படிக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவள் அவனுக்கே தெரியாமல் அதனை படிக்க எடுத்து கொண்டு வந்துவிட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் சுடச்சுட காபியை அருந்தி கொண்டே அதன் பக்கங்களை புரட்ட, அதில் நிறைய சோகங்களும் தாள முடியாத அதிர்ச்சிகளும் அவளுக்காக காத்திருந்தன.

இரவெல்லாம் விழித்திருந்து அதனை முழுவதுமாக படித்து முடித்தவள் அப்படியே தன் தலையணையில் முகம் புதைத்து வெகுநேரம் விம்மி அழுதாள்.

வாழ்க்கை நமக்கு மிக சுலபமாக தேர்ந்தெடுத்து கொடுக்கும் வழிமுறைகளை உதாசீனப்படுத்திவிட்டு பெரும்பாலும் மிக சிரமமான பாதைகளை தேர்ந்தெடுத்து கொள்கிறோம். அது எந்த வகையிலும் விதியின் தவறு ஆகாது. முழுக்க முழுக்க தன்னுடைய தவறுதான் என்று மனதிற்குள் மருகினாள்.

 அடுத்த நாள் காலை உடல் சோர்வாக களைத்திருந்த போதும் மனம் உத்வேகத்துடன் விழித்து கொண்டது. பள்ளி முடித்த கையோடு மாயனை சந்தித்து பேச வேண்டும் என்று எண்ணினாள். அதற்கு முன்பாக தன் மனதில் உள்ளவற்றை வாசுப்பாவிற்கும் நிம்மியிடமும் பகிர்ந்து கொள்ள எண்ணி தன் கையால் கேசரி செய்து எடுத்து சென்று கொடுக்க, “என்ன கனி விசேஷம் இன்னைக்கு… உன் பிறந்த நாளா?” என்று விசாரித்தனர்.

“புதுசா பிறந்த மாதிரிதான் நான் பீல் பண்றேன்… ஆனா எனக்கு பிறந்த நாள் எல்லாம் இல்ல” என்றாள்.

“அப்புறம் என்ன?” என்று வாசுப்பா கேட்டு கொண்டே கேசரியை உள்ளே தள்ளி கொண்டிருக்க,

“போதும் போதும்” என்று நிம்மி அதனை பிடுங்கி கொண்டு,

“நீ சொல்லு கனி… என்ன விஷயம்?” என்று வினவ,

“நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன்… ஆனா இது நான் ரொம்ப வருஷம் முன்னாடியே எடுத்திருக்க வேண்டிய முடிவு” என்று அவள் பீடிகை போடுவதை கேட்ட வாசு,

“என்ன விஷயம் கனி… தெளிவா சொல்லு” என்றார்.

“மாயனை கல்யாணம் பண்ணிக்கலாம்னு” என்றவள் சொன்னதுதான் தாமதம்.

“வாவ் கிரேட் டெசிஷன்” என்று வாசு பாராட்ட,

“ரொம்ப ரொம்ப நல்ல முடிவு… ஆமா எப்போ சொல்ல போற” என்று நிம்மி ஆர்வமாக கேட்க,

“ஸ்கூல் முடிஞ்சதும் நேர்ல போய் வீட்டுல பேசலாம்னு இருக்கேன்” என்றாள்.  

“ஆல் தி பெஸ்ட் கனி” என்று இருவரும் மனமார வாழ்த்தினர். அதன் பின் கனி பள்ளிக்கு சென்று தன் வகுப்பில் பாடங்களை நடத்தி கொண்டிருந்த போது அலைபேசியில் மாயன் அழைத்தான்.

அவன் பெயரை பார்த்ததும் வெட்க புன்னகை பூத்தவள் அவன் சொன்ன தகவலை கேட்டு அதிர்ச்சியானாள்.

“எப்போ நடந்துச்சு?”

“இப்பதான மூச்சு திணறல் அதிகமாகி… நீ உடனே புறப்பட்டு வா” என்றவன் சொல்ல, கனி நிம்மியிடம் விஷயத்தை தெரிவித்துவிட்டு விரைவாக சென்றாள்.

எத்தனையோ மரணங்களை பார்த்த கன்னியப்பனை மரணம் தழுவியிருந்தது. அழுது அரற்றி கொண்டிருந்த சாந்தி மகளை பார்த்ததும் ஓ வென்று கதறினார். அவரை கனி ஒருவாறு சமாதானப்படுத்திய போதும் அவளாலேயே அந்த இழப்பை தாங்க முடியவில்லை.

காசி பெரிதாக ஒட்டுதல் இல்லாமல் நின்றிருக்க, அவனுடைய மகள் மகன்கள் இருவரையும் அருகே கூட வரவிடவில்லை ஜெயந்தி. இறுதி சடங்கில் கொல்லி பானை தூக்க வந்த மகனை தள்ளிவிட்டார் சாந்தி.

“நீ ஒன்னும் என் புருஷனுக்கு கொல்லி வைக்க வேணாம்… போடா” என்றவர் மேலும்,

“அவரோட கடைசி காலத்துல புள்ளயா நின்னு எல்லாம் செஞ்சது மாயன்தான்… அவன் கொல்லி வைக்கட்டும்” என்றவர் உறுதியாக சொல்ல, அங்கு பெரிய ஆர்பாட்டமே நிகழ்ந்தது. அதன் பிறகு காசியும் ஜெயந்தியும் அவமதிப்பு செய்துவிட்டதாக குதித்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டனர்.

அப்போது மாயன் அத்தையிடம், “நான் கொல்லி வைக்குறதைவிட கனி வைச்சாதான் சரியா இருக்கும்… மாமாவுக்கு கனி மேலதான் பாசம்… அவளுக்காகதான்… அவர் தான் உயிரை பிடிச்சு வைச்சு இருந்தாரு” என, கனி அது எப்படி முடியும் என்பது போல அவனை பார்த்தாள்.

“ஏன் முடியாது… பையனுக்கு இருக்குற உரிமை பொண்ணுக்கு இல்லாம போயிடுமா என்ன… நீ மாமாவுக்கு கொல்லி வைச்சா அவரோட ஆத்மாவுக்கு நிச்சயம் அமைதி கிடைக்கும்… நீ வை” என்றவன் திடமாக சொல்ல, அதன் பிறகு அவன் வார்த்தையை யாரும் மறுத்து பேசவில்லை.

கனி தன் தந்தையின் சிதைக்கு தீ மூட்டினாள். தீ நாக்குகள் அவரின் தேகத்தை முழுவதுமாக விழுங்கும் வரை அவ்விடத்தை விட்டு அசையாமல் அங்கேயே நின்றிருந்தாள்.

ஆக்ரோஷமாக கொழுந்து விட்டு எரியும் அந்த நெருப்பில் அவருக்கு நிகழ்த்தப்பட்ட அவமானங்களும் சேர்த்து பற்றி கொண்டிருக்க வேண்டும்.

இன்னும் இன்னும் தீ சீற்றமாக வான் நோக்கி விஸ்பரூபம் எடுக்க, அந்த உஷ்ண காற்றில் பறந்த தீ ஜ்வாலைகள் அவள் புறம் வீசியது. எதையும் உணராத மனநிலையுடன் அவள் அப்படியே நிற்க,

“கனி… தள்ளி வா” என்று அவள் கரங்களை பற்றி தள்ளி நிறுத்திவிட்டு, 

“முதல நீ வீட்டுக்கு போ” என்றான்.

அவள் இல்லை என்பது போல தலையசைத்துவிட்டு அங்கேயே ஓரமாக இருந்த பிணம் எரிக்கும் மேடையில் அமர்ந்து கொண்டாள்.

“கனி எங்க உட்கார்ந்திருக்க எழுந்து வா” என்று அவன் எவ்வளவோ சொல்லியும் அவள் அங்கிருந்து நகர்வதாக இல்லை.

தன் தந்தையின் சிதை எரிவதை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து வளர்ந்து தன்னுடைய கடைசி காலம் வரை சுடுகாட்டில் வெட்டியானாக அடிமை வாழ்க்கை வாழ்ந்து அவ்விடத்திலேயே சாம்பலாகி போன கன்னியப்பன்களின் கதைகளை இந்த சமுதாயம் ஒரு நாளும் நினைவுக்கூற போவதில்லை. அவ்வளவுதான். அவ்வுடல் மொத்தமாக எரிந்தடங்கி புகை வெளியேறி கொண்டிருக்க,

“கனி எழுந்திரு… வீட்டுக்கு போகலாம்” என்று மாயன் அழைக்க,

“எரிஞ்சு முடிஞ்சு போச்சு… அவ்வளவுதான் இல்ல” என்று உணர்வற்ற பார்வையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“இந்த மனுஷன் என்ன வாழக்கையை வாழ்ந்தாரு… என்ன சந்தோஷத்தை கண்டாரு… இன்னைக்கு செத்தும் போயிட்டாரு… அவ்வளவுதானா மாயா நம்ம வாழ்க்கை எல்லாம்” என்று கேட்டாள்.

அவள் அருகில் அமர்ந்தவன், “மாமா அவர் வாழ்ந்த வாழ்க்கைல எவ்வளவு தூரம்  திருப்தியா இருந்தாருன்னு எல்லாம் எனக்கு தெரியல கனி… ஆனா அவரோட சாவு எல்லா விதத்தலயும் நல்ல சாவுதான்

படுத்த படுக்கையா நொந்து போய் கிடந்த மனுஷன் உன்னை இந்த நிலைமைல பார்த்த பிறகு மனசால எவ்வளவு சந்தோஷப்பட்டாரு தெரியுமா… உங்க அப்பாவுக்காகதான் இந்த விதியே உன்னை திரும்பியும் இந்த ஊருக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கு

மகளை பார்த்த பெருமையோடதான் அவர் தான் வாழ்க்கையை முடிச்சிக்கிட்டாரு… நீ உங்க அப்பாவுக்கு பெருமையை கொடுத்திருக்க… சந்தோஷத்தை கொடுத்திருக்க… கடைசியா ஒரு மகளா அவருக்கு கொல்லி வைச்சு… அவர் ஆத்மாவுக்கு அமைதியும் கொடுத்திருக்க… நீ வருத்தப்பட கூடாது” என்று ஆறுதலாக பேச,

“என் வருத்தமெல்லாம் நான் அவர்கிட்ட கடைசியா சொல்லணும்னு நினைச்சது அவர் கேட்காமலே போனதுதான்… ஒரு வேளை அவர் அதை கேட்டிருந்தா இன்னும் சந்தோஷப்பட்டிருப்பாரு” என்று சொல்லி அவள் கண்ணீர் உதிர்க்க,

“இப்போ கூட என்ன… அவரோட ஆத்மா இங்க நின்னு உன்னை பார்த்திட்டு இருக்கலாம்… நீ இங்கேயே அவர்கிட்ட சொல்ல நினைச்சதை சொல்லு… அது அவரை போய் சேரும்” என்றான்.

“அப்படியா சொல்ற”

“ஆமா சொல்லு”

காற்றோடு கலந்து கொண்டிருந்த புகையின் மீது பார்வையை  பதித்தவள், “அப்பா… நான்” என்று நிறுத்திவிட்டு தொண்டைக்குள் எழுந்த விம்மலை சிரமப்பட்டு அடக்கி கொண்டு வார்த்தைகளை  கொணர்ந்து,  

“நான் மாயனை கல்யாணம் செஞ்சுக்க விருப்பப்படுறேன் பா” என, மாயன் அதிர்ந்துவிட்டான்,

அவன் மௌனியாக அமர்ந்திருப்பதை பார்த்தவள், “அப்பா நான் சொன்னதை கேட்டிருப்பாரு இல்ல மாயா… அவர் ஆத்மா சந்தோஷப்பட்டிருக்கும் இல்ல” என்றாள்.

சில நிமிடங்களுக்கு பிறகு அந்த திடீர் அதிர்ச்சியிலிருந்து சுதாரித்து எழுந்து நின்றவன், “இல்ல சந்தோஷப்பட்டிருக்காது… இப்போ இருக்க நிலைமைல என்னை நீ கட்டிகிறத மாமா நிச்சயம் விரும்ப மாட்டாரு… நான் எந்த வகையிலும் உனக்கு தகுதியானவன் இல்ல கனி… உன் படிப்பு வேலை இப்படி எதுக்கும் நான் தகுதியானவன் இல்ல… உனக்கு இந்த சுடுகாட்டு வாழ்க்கை வேணாம்… நீ எழுந்து வீட்டுக்கு போ” என்று தீர்மானமாக சொல்ல,

“முடியாது உன்கிட்ட பேசணும்” என்றாள்.

“கனி” என்றவள் அவன் புறம் திரும்ப அவனை பேசவிடாமல் அவள் தொடர்ந்தாள்.

“இந்த சுடுகாட்டு வாழ்க்கை எனக்கு வேணாம்னு…  நானும் என் சின்ன வயசுலயே முடிவு பண்ணதுதான்… உன்னை வேணாம்னு சொன்னதுக்கும் அதுதான் காரணம்…  அதான் சந்தர்ப்பம் கிடைச்சதும் இங்க இருந்து ஓடி போயிட்டான்… ஒரு நாள் கூட எனக்கு இங்க திரும்பி வரணும்னு தோணினதே இல்ல… ஆனா இந்த நிமிஷம் சொல்றேன்

நீ எங்கே இருக்கியோ அங்கேதான் என் வாழ்க்கை உலகம் எல்லாம்… உன்னை விட்டுட்டு இனி நான் எங்கயும் போறதா இல்ல” என்றவள் தீர்க்கமாக உரைத்தாள்.

“புரியாம பேசாதே… என்னை நீ கட்டிக்கிட்டா… ஸ்கூல உன்னை வேலை செய்ய கூட விடமாட்டாங்க… நீ கஷ்டப்பட்டு படிச்சு இந்த இடத்துக்கு வந்திருக்க… அதை இல்லாம பண்ணிடுவாங்க” என்றவன் தெளிவாக யோசித்து பேச,

“அப்படி ஏதாவது பிரச்சனை வந்தா சமாளிக்கலாம்… நீதானே  சொன்ன… என்ன நடந்தாலும் போராடணும் பயப்பட கூடாதுன்னு” என்றாள்.

“இல்ல கனி… வேண்டாம்” என்றவன் மறுப்பாக சொல்லிவிட்டு திரும்பி நடக்க,

“என் கண்ணை பார்த்து என்னை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லன்னு சொல்லிட்டு போ பார்ப்போம்” என்றவள் அவனை வழிமறித்து கொண்டு வந்து நின்றாள். அவள் கண்களை பார்க்க முடியாமல் அவன் தலையை திருப்பி கொள்ள,

“உன்னால அப்படி சொல்ல முடியாது மாயா… நீ என்னை அந்தளவுக்கு நேசிக்கிற” என,

“ஆமான்டி நேசிக்கிறேன்… ஆனா நமக்குள்ள எந்த உறவும் வேண்டாம்… அது உன் வாழ்க்கைக்கு நல்லது இல்ல” என்றவன் ஆவேசமாக பேச, அவளும் அதே ஆவேசத்துடன் பதில் பேசினாள்.

“என் வாழ்க்கையை பத்தி என் வேலையை பத்தி இவ்வளவு வியாக்கியானம் பேசுற நீ… ஏன் உன்னை பத்தி யோசிக்கல… என்னை கோவில அடிச்சவன் கை வெட்டிட்டு நீ ஏன்டா ஜெயிலுக்கு போன… உன் வாழ்க்கையை ஏன் டா கெடுத்துக்கிட்ட” என்றதும் அவன் அதிர,

“அது மட்டுமா செஞ்சிருக்க… என் மானத்தை காப்பாத்த உன் உயிரையே பணயம் வைச்சு… அந்த பாம்பை பிடிச்சு தூக்கி போட்டிருக்க இல்ல?” என்றதும் அவன் விழிகள் ஸ்தம்பித்தன.

“கனி உனக்கு எப்படி”

“உன் டைரியை படிச்சேன்… படிச்சு முடிச்சதும் முடிவு பண்ணிட்டேன்… ஒன்னு உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் கூட வாழணும் இல்லயா… உன் காலடில விழுந்து அப்படியே உயிரை வுட்டுடணும்” என்றவள் அடுத்த கணம் அவன் பாதத்தில் சரிய போகவும், “கனி என்ன காரியம் பண்ற?” என்று அவள் தோளை பற்றி தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து கொண்டான்.

மரணங்களை மட்டுமே கண்ட அந்த மயான பூமி முதல் முறையாக இரு மனங்களின் இணைவை கண்டது.

shanbagavalli, Chitrasaraswathi and 2 other users have reacted to this post.
shanbagavalliChitrasaraswathiRathisembaruthi.p
Quote

இந்த மாதிரி இடத்தில் தன் ஆசையை யாருமே சொல்லிருக்க மாட்டாங்க.. மாயன் நிறைய விஷயங்கள் கத்து குடுத்த நீயே சில காரணங்களால் கனியை வேணாம்னு சொல்லலாமா..

அடுத்த எபி டும் டும் 😍😍

Quote

Sudukaattula love ah sollitale kani avanoda diary ah padichi dan unaku ellam teriuda orutharoda uruvathai parthu edai poda kudathu kani mayan ah nee mudallaye purimji irunda avanaiye kalyanam pannitu irupa, nice update dear thanks

Quote

இருவரின் வாழ்க்கையில வேதனையும் வலிகளும் நிறைந்ததுதான் இருக்கு ....

இனிமேல் ஆவது மகிழ்ச்சி அவர்களை ஆதரிக்கட்டும்....😀

Quote

Super ma 

You cannot copy content