You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 3

Quote

ஆரம்பத்தில் ஆண் என்கிற பாலினமே இல்லை!

பிழைப்புதிறனை அதிகரிக்க பெண்ணிலிருந்து ஆண் என்கிற ஒரு புது திரிபை உருவாக்கின மரபணுக்கள்!

இந்த 'பாலின மாற்றம்' ஒவ்வொரு முறை ஒரு புதிய உயிர் உருவாகும் போதும் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. மனிதர்களில் கூட எல்லாக் கருக்களுமே ஆரம்பத்தில் பெண்ணாகத்தான் உருவாகின்றன. 

ஆறு வாரம் பெண்ணாகக் கருவறை வாசம் புரிந்த பிறகே Y குரோமோசோம் கொண்ட கருக்கள் டெஸ்டோஸ்டிரோனைச் சுரந்து தம்மைத்தாமே ஆணாக மாற்றி கொள்கின்றன. 

ஆக ஆண் என்பது அடிப்படையில் ஒரு மாறுப்பட்ட பெண் என்பதால் 'ஏவா'ளிடமிருந்துதான் 'ஆதாம்' உருவானான். 

பெண்தான் மூலம்; ஆண் என்பவன் அவளுடைய இன்னொரு அவதாரம்!

*************************************************************

3

“கனி… கனி… அடியேய் கனி… எங்கடி ஒழிஞ்சு போன?” என்று கத்தி கொண்டே பின்கதவை படாரென்று திறந்து நுழைந்த அம்பிகா, முற்றத்திலிருந்து பூச்செடிகள் வாடியிருப்பதை பார்த்து அதிர்ச்சியுற்று, 

“செடிக்கு கூட தண்ணி ஊத்தல… எங்க போனா இவ” என்று புலம்பியபடியே நடந்து உள்ளே வந்தார்.

“பாரு… படத்துல போட்ட மாலை காய்ஞ்சி போயிருக்கு… அதை எடுத்துட்டு நல்ல மாலையா போட்டு விளக்கேத்தணும்னு அறிவு வேண்டாம்… அடியேய் சோம்பேறி மவளே… எங்கடி போன… ஒன்னுத்துக்கும் லாய்க்கில்ல… எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்குது பாரு” என்றபடி ஆவேசமாக திட்டி கொண்டே சமையலறைக்குள் சென்றார்.

“ஐயோ ஐயோ அடுப்பங்கறையா இது… எப்படி வைச்சு இருக்கா பாரு” என்றவர் மார்பிலடித்து கொண்டு அந்த வீடே அதிருமளவுக்கு கத்தி கூப்பாடு போடும் போது கன்னிகையின் கனவு களைந்துவிட்டது.

பதறி துடித்து கண்களை திறந்தாள்.

எங்கே இருக்கிறோம் என்ன ஏதென்று கூட புரியாதளவுக்கு அடித்து போட்டது போன்ற ஒரு உறக்கம். இதில் இப்படியொரு கனவு வேறு. அம்பிகாவின் பழைய அந்த கொடூரமான முகத்தை பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பார்த்த உணர்வு.

பிரபுவை திருமணம் செய்து கொண்டு வந்த போது அவர் அவளை நடத்திய விதத்தை இன்று யோசித்தாலும் அது ஒரு கெட்ட கனவுதான். சகிக்க முடியாத கெட்ட கனவு!

மெல்ல தன் படுக்கையிலிருந்து எழுந்து அருகிலிருந்த கைப்பேசியை எடுத்து பார்த்தாள். விடியற்காலை மணி ஐந்து பத்து என்று காட்டியது.

 முகத்தை அழுந்த துடைத்து கொண்டவள், ‘இன்னைக்கு அத்தைக்கு இலை போடணும் இல்ல… இப்போ எழுந்தாதான் சரியா இருக்கும்’ என்றபடி தன் கூந்தலை வாரி இழுத்து முடிந்து கொண்டு பின்வாயிலுக்கு வந்தாள்.

 பல் துலக்கி குளித்துவிட்டு துடைப்பத்தையும் வாலியையும் எடுத்து கொண்டு வெளிவாயிலுக்கு வந்து சுத்தமாக பெருக்கி தண்ணீர் தெளித்தாள்.

பின்னர் உள்ளே வந்து செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றிவிட்டு திரும்பிய போது அத்தை சொன்னது போல வீட்டில் உள்ள எல்லா பொருட்களும் தாறுமாறாக கலைந்திருந்தை உணர்ந்தாள்.

ஒவ்வொன்றாக அடுக்கி சரி செய்து அந்த வீடு முழுவதும் பெருக்கி துடைப்பதற்குள், இடுப்பு ஒடிந்து போனது.

‘எப்படிதான் அத்தை இந்த வீட்டை தனியா மெய்ன்டைன் பண்ணாங்களோ… வேலைக்கு ஆள் வைச்சுக்கோன்னு சொன்னா கூட வேண்டாம்ப்ங்க’ என்று எண்ணி கொண்டே அவள் நிமிர்ந்த போது பிரபுவின் படத்திலிருந்த மாலை காய்ந்திருந்ததை கவனித்தாள்.

மிகவும் இளமையான ஆண்மகனின் தோற்றம். அவன் இறக்கும் போது இருபத்து ஆறு வயதுதான்.

இத்தனை வருடத்தில் ஒரு முறை கூட அவன் படத்திலிருந்த மாலையை கழற்றியதோ துடைத்ததோ அல்லது விளக்கேற்றியதோ கிடையாது.

‘ஏன் நான் செய்யணும்… இவன் யாரு எனக்கு’ என்ற விட்டேற்றியான மனநிலைதான்.

‘இள வயசு… அச்சோ பாவம்! இப்படி அல்பாயுசுல போயிருக்க வேண்டாம்’ என்று வருவர்கள் போவோர்கள் எல்லாம் அவன் படத்தை பார்த்து உச்சு கொட்டிய போது அவளுக்கு மட்டும் இம்மியளவு கூட இரக்கமே வரவில்லை. ஏன் கண்ணீர் கூட வரவில்லை.

அதிர்ச்சியில் இருந்ததாக எல்லோரும் எண்ணி கொண்டார்கள். உண்மையில் அவள் மனம் அமைதியில் இருந்தது.

‘நீ உயிரோட இருந்து என்னத்த சாதிச்ச… செத்து போனதே மேல்’ என்ற ஒரு குரூர குரல் அவளுக்கு மட்டுமே கேட்டது. இதுவரையில் எவரிடமும் அவள் பகிர்ந்து கொள்ள முடியாத ரகசியம் குரல் அது. ஏமாற்றங்களின் வலியில் சிதைந்து உள்ளுரவே அழுகி நாற்றம் பிடித்து போயிருந்த அவளின் மனக்குரல் அது.

அவன் படத்தை ஒருவித அசூயை உணர்வுடன் பார்த்தாள். நேற்று திருநாவுக்கரசு அவன் படத்தை பார்த்துவிட்டு சொல்லாமல் சென்றது அவள் நினைவில் வந்து போயின.

‘நீ போட்டோவா இருந்தும் எனக்கு பிரச்சனையா இருக்க’ என்று எரிச்சலுடன் மொழிந்தவள் அவன் படத்தை அங்கிருந்து அகற்றிவிட்டு அத்தையின் படத்தை வைத்து மாலையிட்டு விளக்கேற்றி கும்பிட்டாள்.

‘சாரி அத்தை… உங்க பிள்ளையை தெய்வமா கும்பிடுறளவுக்கு எனக்கு பரந்த மனசெல்லாம் இல்ல’ என்று விட்டு கையோடு அவன் படத்தை எடுத்துச் சென்று அத்தையின் துணிகளிலிருந்த அலமாரிக்குள் வைத்து மூடினாள்.

பின் சமையலறைக்கு சென்றவள் அன்று இலையில் படைக்க கேசரி செய்துவிட்டு வடையை தட்டி எண்ணெயில் போடும் போது அவள் கைப்பேசி ஒலித்தது.

அவசரமாக அடுப்பை அணைத்துவிட்டு கையினை புடவை முந்தானையில் துடைத்தபடி வந்து அதனை எடுத்து பேசினாள்.

“அண்ணி பஸ் ஏறிட்டேன்… வந்திட்டு இருக்கேன்”

“நீ இறங்குனதும் எனக்கு போன் பண்ணு காயு… நான் பைக் எடுத்துட்டு வரேன்”

“இருக்கட்டும் அண்ணி நான் மெதுவா நடந்து வந்துடுறேன்”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… ஒழுங்கா போன் பண்ணு நான் வரேன்”

“சரிங்க அண்ணி” என்றபடி காயத்ரி அழைப்பை துண்டித்துவிட அவள் மீண்டும் சமையலறையில் தம் வேலைகளை தொடர்ந்தாள். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் காய்திரி கைபேசியில் அழைக்க, “இறங்கிட்டியா? தோ வந்துட்டேன்” என்று உடனடியாக இடுப்பில் சொருகியிருந்த புடவையை சரி செய்து கொண்டு கதவை பூட்டிவிட்டு பைக்கை எடுத்தாள்.

அந்த ஊரின் எல்லையில் இருக்கும் பேருந்து நிறுத்தம் போகிற வழியில் எதேச்சையாக திருநாவுக்கரசின் புல்லட் அவளை கடந்து சென்றது. எப்போது அவள் பைக்கை கடந்து சென்றாலும் அவன் மெதுவாக அவளை பார்த்தபடியேதான் கடப்பான். ஆனால் இன்று பார்க்க கூடாது என்பதற்காகவே பிடிவாதமாக தலையை வேறு புறம் திருப்பி கொண்டான் என்று தோன்றியது.

அவனுடைய இந்த மாற்றம் பெரிதாக அவளை பாதிக்காத போதும் கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

பேருந்து நிறுத்தத்தின் அருகில் காயத்ரி நின்றிருந்தாள். கன்னிகையை பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தது.

அவள் கையிலிருந்த பையினை வாங்கி முன்னே வைத்து கொண்டு, “பழமெல்லாம் வாங்கிட்டியா… ஏதாச்சும் வாங்க வேண்டி இருக்கா” என்று கேட்க,

“இல்ல அண்ணி… எல்லாம் வாங்கிட்டேன்… எதுவும் மிஸ் பண்ணல” என்றவள் பின்னே அமர்ந்து கொள்ள இருவரும் பைக்கில் வீடு வந்து சேர்ந்தனர்.

“எல்லா வேலையும் நீங்களே முடிச்சிட்டடீங்க போல”

“ஆமா காயு… சீக்கிரம் எழுந்திட்டேன்… அதான் எல்லாத்தையும் முடிச்சிட்டேன்… சமையல் கூட முடிஞ்சிடுச்சு… இலை போடணும் அவ்வளவுதான்” என்று பேசி கொண்டே பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

கற்பூரம் ஏற்றி தீபாரதனை காட்டும் போது காயத்ரி, “அம்ம்ம்ம்ம்மா” என்று பொங்கி அழுதுவிட, கன்னிகை அவளை தேற்ற பெரும்பாடுப்பட வேண்டியதாகி போனது.

அதன் பின் இருவரும் முற்றத்தில் வந்து அமர்ந்து கொள்ள, காயத்ரி தன் கண்ணீரை துடைத்தபடி, “என்ன பெருசா வயசாச்சி அவங்களுக்கு… ஏன் இப்படி அவசர அவசரமா நம்மல எல்லாம் விட்டு போகணும்” என்று ஆற்றாமையுடனும் வருத்தத்துடனும் பேச,

“அவங்க என்ன? நம்மல விட்டுட்டு போகணும்னு நினைச்சாங்களா? யாரும் எக்ஸ்பெக்ட் பண்ணாம எல்லாம் ஒரு மாதிரி திடுதிடுன்னு நடந்து முடிஞ்சு போச்சு” என்றாள் கன்னிகை.

 “ஆமா அண்ணி…  எல்லாம் கண்ணை மூடி திறக்கிறதுக்குள்ள நடந்து முடிஞ்சு போச்சு” என்று காயத்ரி பேசும் போதே அவள் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தன.  

“ஏன் காயு… உங்க மாமியார் வீட்டுல இருந்து யாருமே வரல… அட்லீஸ்ட் சசியையும் விஜி குட்டியையுமாவது கூட்டிட்டு வந்திருக்கலாமே” என்று கன்னிகை தயக்கத்துடன் கேட்க,

“அட நீங்க வேற அண்ணி… நான் கிளம்பி வர்றதுக்கே பெரிய பஞ்சாயத்து” என்று சலித்து கொண்டாள்.

“ஏன் என்னாச்சு?”

“ஒரு மனுஷி செத்து போன பிறகும் அவ மேல பகையை வைச்சிட்டு இருக்காங்கன்னா அவங்க எல்லாம் என்ன மாதிரி மனுஷங்களா இருப்பாங்க… சை! எனக்கு அசிங்கமா இருக்கு… இப்படி ஒருத்தனையா உருகி உருகி காதலிச்சு ஓடி வேற போனோம்னு”

கன்னிகை மௌனமாக அமர்ந்திருந்தாள். அத்தையின் சிதைக்கு மூட்டிய தீ அடங்குவதற்கு முன்னதாகவே பரபரவென்று காய்திரியின் கணவன் யோகி ‘அதான் எல்லாம் முடிஞ்சிடுச்சு இல்ல கிளம்பு’ என்று மனைவியையும் குழந்தைகளையும் இழுத்து கொண்டு போய்விட்டான்.

‘மனுஷங்க இப்படியும் இருப்பாங்களா?’ என்று அப்போதே கனி மனதில் நினைத்து கொண்டாள்.

காயத்ரி தன் மாமியார் வீட்டை பற்றி சொல்வதை எல்லாம் கேட்டு கனிக்கு எரிச்சலாக இருந்தது.

“ஓடி போய் கல்யாணம் பண்ணும் போது அம்மா அவரை அவங்க குடும்பத்தையும் திட்டினதை மனசுல வைசுக்கிட்டு இப்போ சொல்லி காட்டிராங்க அண்ணி…

ஏதோ நல்ல காலம்… சாவுக்கு வந்துட்டாங்க… அவங்க பிள்ளையை கொல்லி போட வைச்சுட்டாங்க… அதுக்கு மேல அவங்ககிட்ட எல்லாம் எதிர்பார்க்கவும் முடியாது” என்று அவள் வருத்தப்பட,

“காயு விடு… எல்லாம் தெரிஞ்ச கதைதானே!” என்று கனி அவளை தேற்றினாள்.

“அநியாயம் அண்ணி… அவங்க வீட்டுல யாரோ மூஞ்சி முகரை தெரியாத பங்காளி எல்லாம் செத்தா கூட பதினாறு நாள் துக்கமாம்… இதுவே நம்ம சொந்த அம்மா செத்தா… மூணு நாள்தான் துக்கமா? என் வீட்டுல அது கூட இல்ல” என்றவள் நிறுத்தாமல் தன் ஆதங்கத்தை கொட்ட,  

“என்ன நீ? இதெல்லாம் ஏதோ புதுசா நடக்கிற மாதிரி பேசிட்டு இருக்க… காலங்காலமா இப்படிதானே நடக்குது… விட்டு தொலை… இதெல்லாம் பேச ஆரம்பிச்சா… நமக்குதான் பிபி எகிறோம்” என்ற கனி மேலும்,

“இரு… நான் கேசரி வடை எடுத்துட்டு வரேன்… சாப்பிடுவோம்” என்று அத்துடன் அவளின் புலம்பலுக்கு முற்று புள்ளி வைத்தாள்.

அதன் பின் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள். உண்டு முடித்ததும் நேரத்தை பார்த்த காயத்ரி, “ஐயோ! அண்ணி டைமாச்சு… இதுக்கு மேல லேட் பண்ணா ட்ராபிக்ல மாட்டி வீட்டுக்கு போய் சேர லேட்டாகிடும்” என்று பதைபதைத்து கொண்டே தன் கைப்பையை எடுக்க,

“இன்னைக்கு ஒரு நாள் இருந்துட்டு போயேன் காயு” என்று கனி ஏக்கத்துடன் பார்த்தாள். இன்று ஒரு நாளாவது இந்த கொடூர தனிமையிலிருந்து தப்பிக்க முடியாதா என்ற தவிப்புதான் அவளுக்கு. 

ஆனால் காயத்ரி நிற்கவில்லை. “சசி வீட்டை ஒரு வழி பண்ணிடுவான்… என் மாமியார் இருந்த இடத்தை விட்டு அசையாது… நான்தான் போய் எல்லாம் சரி பண்ணனும்… அதுவும் யோகி ஆபிஸ்ல இருந்து வந்துட்டான்னா அவ்வளவுதான்… ஏன் நான் இன்னும் வரலன்னு கத்துவான்… அப்புறம் எதுக்கும் அனுப்ப மாட்டான்” என்றாள்.

அவள் நிலைமையை புரிந்து கொண்ட கனி, “சரி டீயாச்ச்சும் போட்டு தரேன் குடிச்சிட்டு போ” என,

“ஐயோ! வேண்டாம் அண்ணி… இப்போதானே சாப்பிடோம்” என்றவள் கிளம்புவதில் மும்முரமாக இருந்தாள்.

“சரி வா… நான் பைக்ல டிராப் பண்றேன்” இருவருமாக வீட்டை பூட்டி கொண்டு கிளம்ப பேருந்து நிறுத்தம் அருகில் வந்த போது காய்திரி யோசனையுடன்,

“ஏன் அண்ணி… அம்மா போட்டோ இருந்த இடத்துல அண்ணாவோட போட்டோ இருந்துச்சே எங்கே?” என்று கேட்டாள்.

இந்த கேள்வியை கனி முன்னமே எதிர்பார்த்ததால் அவள் யோசித்து வைத்திருந்த பதிலை கூறினாள். “அங்கே உங்க அண்ணா போட்டோ வைக்க இடம் இல்ல… அதான் உள்ளே வைச்சிருக்கேன்” என,

“ஐய்யயோ… அப்படி எல்லாம் செய்ய கூடாது அண்ணி… நீங்க எப்படியாவது அம்மா போட்டோ பக்கத்துல அண்ணா போட்டோவையும்  வைச்சுடுங்க” என்று படபடப்புடன் கூற, கனிக்கு எரிச்சிலானது.

இருந்தும் தன் மனநிலையை மறைத்து கொண்டு “சரி” என்று தலையசைக்கவும் முன்னே ஒரு பேருந்து கடந்து செல்வதை பார்த்த காயத்ரி, “பஸ் வந்துடுச்சு அண்ணி… சீக்கிரம் போங்க” என்று அரக்க பறக்க தன் பையை எடுத்து கொண்டு இறங்கி ஓடிவிட்டாள்.

“காயு பார்த்து போ” என்றவள் வழியனுப்பி விட்டு திரும்பும் போது காய்திரி கடைசியாக தன் தமையனின் படத்தை மாட்ட சொன்னதை நினைக்கையில் கோபம் கோபமாக வந்தது.

அத்தையின் முகத்திற்காக அவன் படம் இருந்துவிட்டு போகட்டும் என்று இத்தனை நாள் விட்டுவிட்டாள். ஆனால் இதற்கு பிறகும் தான் அவன் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டுமென்று என்ன தேவை இருக்கிறது. அவன் அபப்டி என்ன தனக்கு செய்து கிழித்தான்.

‘அவன் என்ன பெரிய தெய்வ புருஷனா?’ இந்த எண்ணம் எழும் போதே வயிற்றில் ஒரு கோபத்தீ குபுகுபுவென்று பற்றி கொண்டு எரிந்தது. பழைய எண்ணங்களை எல்லாம் கிளறிவிட்டது.

இவளுக்கு வேண்டுமென்றால் தமையன் படத்தை வைத்து பூஜை செய்து கொள்ள வேண்டியதுதானே.

ஹும்… இவள் கணவன் அனுமதிக்க மாட்டானே!

கணவன்மார்கள் இருந்தாலும் இறந்தாலும் அவர்கள் வீட்டினரின் அதிகாரங்கள்தான் தூள் பறக்கின்றன. 

இன்னுமும் கூட அவளால் மறக்க முடியாது. காயத்ரியை பொறியியல் சேர்க்கதான் அவள் தந்தை அவளுக்கு திருமணத்திற்காக அணிவித்த தோடையும் சையினையும் அம்பிகா கழற்றி அடகு வைத்துவிட்டார்.

ஒரு வகையில் அவளுக்கும் காயத்ரிக்கும் ஒரே வயதுதான். அவளுக்கும் படிக்க வேண்டுமென்ற ஆசையும் கனவுகளும் இருந்தன. ஆனால் அன்று அவள் அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால் அவள் அந்த வீட்டின் மருமகள்.

அம்பிகா மீது அவளுக்கு ஆயிரம் கோபம் இருந்தாலும் மகளை படிக்க வைக்க வேண்டுமென்று அவர் மாடாக உழைத்து தேய்ந்ததெல்லாம் அவளால் மறக்கவே முடியாது.

ஆனால் இன்று அம்மா அம்மா என்று உருகி உருகி அழுத காயத்ரி இதே அம்மாவின் உழைப்பை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் படித்து முடித்த கையோடு உடன் படித்த ஒருவனை திருமணம் செய்து கொண்டு வந்து நின்றாள்.

யாரால்தான் இப்படியொரு துரோகத்தை தாங்க முடியும். அம்பிகா அந்த கோபத்தில் கொஞ்சம் பேச கூடாத வார்த்தைகள எல்லாம் பேசிவிட்டார்தான். ஏன் இறக்கும் கடைசி நொடி வரை அவர் மனதில் அந்த வடு ஆழமாக இருந்தது.

இருப்பினும் பேரன் பிறந்திருக்கிறான் என்றதும் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டார். அவர்கள் குடும்பத்தை விளங்க வைக்க வந்த வாரிசு. வேறு வழியில் வாரிசு பெற மகனும் இல்லை. போய் சேர்ந்துவிட்டான்.

ஆனால் காயத்ரியின் கணவன் யோகி அவர் கோபத்தில் பேசியதை எல்லாம் மனதில் கொண்டு இறுதி வரை அவரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

பிணத்தின் மீது கூட பகையை  காட்டும் இந்த மனிதர்களுக்கு பணத்தின் மீது மட்டும் எந்த பகையும் இருப்பதில்லை. காயுவின் முதல் குழந்தை பிரசவ செலவு, மகனுக்கு மொட்டை அடிக்க, காது குத்த என்று அனைத்திற்கும் அவள் அனுப்பிய பணத்தை வேண்டாமென்று அவன் மறுக்கவே இல்லை.

இதுதான் ஒரு வேளை காதல் என்றால் நல்ல வேளையாக அப்படியொரு காதலும் காதலனும் தன் வாழ்வில் இல்லாமல் இருந்ததே நல்லது. அதுவும் காயத்ரி பொறியியல் படித்துவிட்டு குழந்தையை பார்த்து கொள்வதற்காக வீட்டில் அடைந்து கிடப்பதை யோசிக்கையில் தான் ஒரு வகையில் அதிக சுதந்திரத்துடன் நிம்மதியாக இருக்கிறோம் என்று நினைத்து கொண்டாள்.

இந்த கல்யாண கொடுமையை விட தனக்கு வாய்த்திருக்கும் தனிமை ஒன்றும் அத்தனை மோசமானதில்லை என்ற யோசனைகளுடன் பைக்கை வீட்டு வாயிலில் நிறுத்தியவள் அங்கே திருநாவுக்கரசின் புல்லட் நிற்பதை பார்த்து திகைப்படைந்தாள்.

அவனோ பூட்டிய கதவை பார்த்தபடி சிகரெட்டை புகைத்து கொண்டு நிற்க, ‘அன்னைக்கு சொல்லாம கொள்ளாம போயிட்டு… இப்போ ஏன் இங்க வந்து நிற்குறான்’ என்று கனி குழம்பி நின்றாள். 

shanbagavalli, Chitrasaraswathi and 4 other users have reacted to this post.
shanbagavalliChitrasaraswathijamunaraniRathiThani Sivaindra.karthikeyan
Quote

கன்னிகை பெயர் காரணம் உண்டா மோனிஷாம்மா

monisha has reacted to this post.
monisha
Quote

ஏனாம் ...திருநாவு காத்திருக்கான்.....

கனிக்கு பிடிக்காத கணவன் ஒருவேள ...கட்டாய திருமணம் நடந்தா ....🤔

Quote

Super ma 

You cannot copy content