You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 8

Quote

அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய தெய்வச் சிலைகள் எல்லாம் அனேகமாக, கர்ப்பவதி கோலத்தை கொண்டிருக்கின்றன. அதிலும், அக்காலத்து கஷ்ட ஜீவனத்தில் சாத்தியமே இல்லாத உடல் பருமனோடு!

பரிணாம வளர்ச்சியின் அந்த காலகட்டத்தில் மனித மனம் எளிமையாகத்தான் இருந்தது., ஒரு குழந்தையைப் போல பார்க்கும் வஸ்துக்கெல்லாம் மனித குணம் இருப்பதாக நினைக்கும் தன்மை ஆதிமனிதர்களுக்கு இருந்தது. இன்றைய உளவியல் அகராதியில் இதை 'Animistic thinking' என்கிறோம்.

'சர்வம் மனித குணமயம்' என்ற அணுகுமுறையால், தன்னைச் சுற்றியிருந்த ஜீவாதாரமான வஸ்துக்கள் எல்லாம் பெண்ணாகத்தான் இருக்கும் என்று எண்ணினார்கள். செடி கொடிகளுக்கு உயிர் ஆதாரமான பூமி, மீன்களுக்கு உயிர் தந்த நதிகள், நெருப்புக்கு உயிர் தந்த கற்கள் என்று அவர்கள் பார்வையில் இந்த அஃறிணைகளும் பெண்ணாகின.

பெண் ஸ்தானம் என்றால் அவளுக்குள் ஆக்க சக்தி அடங்கி கிடப்பதாக நினைத்தார்கள். அதனால் அவளை வழிப்பட்டார்கள்.  

இப்படியாக வழிப்படப்பட்ட பெண் எங்கே எப்படி தரம் இறங்கி போனாள்?

தொடரும்... 

8

“அக்கா… பிளவுஸ் தச்சிட்டீங்களா?” என்று தன் வீட்டின் அருகிலிருந்த தையல் கடையில் இரண்டு நாளாக மல்லுக்கட்டி கொண்டிருந்தாள் கனி.

“இதோ முடிஞ்சிரும் மிஸ்… முடிஞ்சதும் பையன்கிட்ட கொடுத்தனுப்பி விடுறேன்”

“என்ன க்கா நீங்க… இன்னைக்கு காலையிலயே முடிச்சு வைக்கிறேன்தானே சொன்னீங்க”

“சாரி மிஸ்… கொடுத்திடுறேன் மிஸ்… இன்னும் கொஞ்சம் வேலைதான்” என்றவள் கெஞ்சலாக சொல்லவும் கனியின் மனம் இறங்கிவிட்டது.

அந்த பெண்ணை பார்க்கையில் தன்னுடைய பிரதிபிம்பத்தை பார்ப்பது போலவே தோன்றியது கனிக்கு. என்ன?அவளுக்கு கணவன் இருந்தும் பயனில்லை. குடும்ப செலவுக்கு காசு கொடுக்காமல் குடித்துவிட்டு ஊர் சுற்றுகிறான்.

அதற்கு மேல் அதிகாரமாகவும் கோபமாகவும் அவளால் கேட்க முடியவில்லை.

“சீக்கிரம் கொடுத்து விட்டிருங்க க்கா” என்று விட்டு பைக்கை வீட்டிற்கு திருப்ப, மனம் என்னவோ அந்த பெண்ணை பற்றியே யோசித்து கொண்டு வந்தது.  

ஒரே ஒரு தையல் இயந்திரத்தை வைத்து கொண்டு தனியாளாக சிரமப்படுகிறாள். ஒருமுறை அவள் மகனின் படிப்பை பற்றி பேசலாம் என்று வந்த போதுதான் தன்னுடைய சோக கதையெல்லாம் சொல்லி புலம்பி அழுதாள். பதினாறு வயதிலேயே திருமணமாகி மூன்று குழந்தைகளை பெற்றுவிட்டாள். பிள்ளைகள் வளர வளரத்தான் குடிகார கணவனை சார்ந்திருப்பதில் உபயோகமில்லை என்று புரிந்தது அவளுக்கு. பிழைப்புக்காக கிடைத்த வேலைகளை எல்லாம் செய்திருக்கிறாள். தையல் வேலையில் அதிக ஆர்வம் உண்டாக சிரமப்பட்டு ஒரு தையல் மிஷினை எப்படியோ மகளிர் குழுக்கள் மூலமாக கடன் பெற்று வாங்கி வைத்து தன் ஜீவனத்தை ஓட்டி கொண்டிருக்கிறாள்.

இந்த கதை எல்லாம் கேட்டு மனமிறங்கியதால் கனி அவள் மகன்ங்கள் மூவருக்கும் இலவசமாக டியூஷன் எடுக்கிறாள். அதேநேரம் துணி தைக்க வேண்டுமென்றால் அவளிடமே கொண்டு வந்து தருவாள்.

எப்போதும் நேரத்துடன் கொடுத்துவிடுவாள்தான். ஆனாலும் கடைசி நிமிஷத்தில் கொடுத்து தைத்து கொடு என்று கழுத்தை பிடித்தால் அவளும் என்ன செய்வாள். பாவம்!

தானும் ஒரு காலத்தில் இப்படிதானே கஷ்டப்பட்டோம் என்று அவளுக்குள் சுயபச்சாதாப உணர்வு எழுந்த அதேநேரம் தானும் பிரபுவை நம்பி குழந்தைகளை பெற்று கொள்ளாத்து நல்லதாக போயிற்று என்று தோன்றியது.

சட்டென்று அவள் எண்ணம் அவளுக்கே சிரிப்பை வரவழைத்துவிட்டது. பிரபுவுக்கும் அவளுக்கும் குழந்தையா?! என்ன ஒரு மூடத்தனமான கற்பனை?

  பொம்மைகள் இரண்டுக்கும் கல்யாணம் செய்து வைப்பது போல அவளுக்கும் பிரபுவுக்கும் ஒரு கல்யாணம் நடந்தது. அதில் மணமகனாக அவள் பக்கத்தில் அவன் அமர்ந்திருந்தான். அவ்வளவுதான்.   

பைக் வீட்டு வாசலில் வந்து நிற்கவும் தலையை உலுக்கி கொண்டாள். இந்த சமயத்தில் இந்த ப்ளாஷ் பேக் ரொம்ப தேவையா?

பூட்டை திறந்ததும் புடவையை இடுப்பில் தூக்கி சொருகி கொண்டு வீட்டை சுத்தம் செய்யும் வேலையில் இறங்கினாள்.

இன்று மாலைதான் திருநா தன் தாயை வீட்டிற்கு அழைத்து வருவதாக சொல்லி இருந்தான். பள்ளிக்கு விடுப்பு எடுத்து விடலாம் என்றுதான் இருந்தாள். ஆனால் அன்று பார்த்து தலைமை ஆசிரியர் முக்கியமான மீட்டிங் இருப்பதாக சொல்லி வர சொன்னவர் மதியம் வரை ஜவ்வாக இழு இழு என்று இழுத்துவிட்டார்.

 தன்னால் எத்தனை வேகமாக செய்ய முடியுமோ அத்தனை வேகமாக வீடு முழுக்கவும் சுத்தம் செய்துவிட்டு சமையல் வேலையில் இறங்கினாள். அவ்வப்போது அத்தை உடன் இருந்தால் எத்தனை உபகாரமாக இருந்திருக்கும் என்ற யோசனை வந்தது.

திருநா தனக்கு மைசூர் பார்க் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்லி இருந்தான். இட்லியும் கொஞ்சமாக சாம்பாரும் சட்னியும் அரைத்து வைத்தவள் கடைசியாக மைசூர் பாக் செய்யும் வேலையில் இறங்கினாள். ஏற்கனவே சலித்து எடுத்து வைத்திருந்த கடலை மாவுடன் நெய்யை ஊற்றி நன்கு கலந்து எடுத்து அதனை பதமாக காய்ச்சி வைத்திருந்த சக்கரை பாகில் ஊற்றி கிளறி கொண்டிருந்தாள்.

இறுதியாக சூடான எண்ணெய்யை ஊற்றி கலந்து முடிக்கும் போது,

“மிஸ்” என்று வாயிலிருந்து குரல் கேட்டது.

“இரு இரு ஒரே நிமிஷம்… தோ வரேன்” என்றவள் கிளறிய மைசூர் பாக்கை நெய் தடவிய தட்டில் ஊற்றி வைத்துவிட்டு வெளியே ஓடி  சென்று கதவை திறக்க,

“மிஸ்… அம்மா கொடுத்துட்டு வர சொன்னாங்க” என்று ஒரு சிறுவன் கவரை நீட்டினான். அதனை வாங்கி உள்ளே திறந்து பார்த்தவள், “இரு வேணு… காசு எடுத்துட்டு வரேன்” என்று செல்ல,

“காசெல்லாம் வேணாம் மிஸ்… அம்மா உங்கிட்ட காசு வாங்க கூடாதுன்னு சொல்லித்தான் அனுப்பினாங்க” என்றவன் தன் சைக்கிளை திருப்பி கொண்டு சென்றுவிட்டான்.

“டேய் வேணு… இரு” என்றவன் கத்த கத்த அவன் போயேவிட்டான்.

உள்ளே சென்று அந்த ஜாக்கெட்டைத் பிரித்து பார்த்தாள். அவள் மிக சாதாரணமாக தைத்தால் போதுமென்றுதான் சொல்லி இருந்தாள். ஆனால் அவள் கேட்காமலே அதில் அத்தனை வேலைப்பாடுகளும் டிசைன்களும் இருந்தன. இதற்காகதான் இத்தனை தாமதமா? இவ்வளவு எல்லாம் செய்து விட்டு காசு வாங்க மாட்டேன் என்று சொன்னவளை எண்ணி ஆச்சரியமாக இருந்தது.

நாளை முதல் வேலையாக அவளிடம் பணம் கொடுத்துவிட வேண்டுமென்று எண்ணி கொண்டே பீரோவில் வைத்திருந்த பட்டுபுடவையை எடுத்து பார்த்தாள். ஒரு புது மாதிரியான குதுகல உணர்வு மனதை பரவசப்படுத்தியது.

குளித்துவிட்டு வந்து உடை மாற்றி கொள்ளலாம் என்று அவள் பினாவாயிலுக்கு செல்லவிருந்த போது வாயில் கதவு தட்டப்பட்டது. பக்ககென்றானது அவளுக்கு.

‘இதுக்குள்ள வந்துட்டாங்களா… ஆறு மணிக்கு மேலதானே திருநா சொன்னாரு’ என்று யோசித்து கொண்டே கதவை திறக்க, காயத்ரி நின்றிருந்தாள். 

“அண்ணி” என்று கம்மிய குரலில் அவள் அழைக்க, கனிக்கு கடுப்பானது. அவளை உள்ளே அழைப்பதா என்று ஒரு நொடி யோசித்த பின்,

“உள்ளே வா” என்றுவிட்டு முன்னே செல்ல அவள் பின்னோடு அமைதியாக நடந்து வந்து முகப்பறையில் நின்று கொண்டாள்.

தூணில் சாய்ந்தபடிக்கு கனி அவள் முகத்தை பார்க்க, வெகுநேரம் அவள் அழுத தடத்திற்கு சாட்சியாக கண்கள் இரண்டும் சிவந்து வீங்கியிருந்தன.  

“என்னாச்சு காயு… ஏன் முகமெல்லாம் வீங்கி இருக்கு”

“அண்ணி” என்றவள் பட்டென்று கனியின் கழுத்தை கட்டி கொண்டு தேம்பி தேம்பி அழ தொடங்கிவிட,

“காயு… ஏய் காயு… ஏன் அழுற… என்னாச்சு… ஏய் சீ சொல்லு” என்று அவளை நிமிர்த்தவும்,

“அம்மா காரியம் முடிஞ்சு… வீட்டுக்கு போனதிலிருந்து ஒரே சண்டை பிரச்சனைதான் அண்ணி” என்று சொல்லிவிட்டு மீண்டும் அழுதாள்.

“என்ன? அந்த பத்திரத்தை வாங்கிட்டு வர சொல்லி பிரச்சனை பண்றானாக்கும்… உன்னோட உத்தம புருஷன்” என்று கனி எகத்தாள பார்வையுடன் கேட்க, காயுவின் முகம் சுருங்கி போனது.

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக நிற்க, “கணவனே கண்கண்ட தெய்வம்னு போன… இப்போ எதுக்கு என் முன்னாடி வந்து அழுதிட்டு நிற்குற” என்று சுருக்கென்று கேட்க,

“அம்மா இருந்தா அவங்ககிட்ட சொல்லி அழுதிருப்பேன்… ஆனா இப்போ எனக்கு நீங்க மட்டும்தானே அண்ணி இருக்கீங்க” என்றாள்.

“நானா?” என்று கேட்ட கனியின் இதழ்கள் இகழ்ச்சியாக வளைந்தன.

காயத்ரி உடனடியாக கனியின் கைகளை சேர்த்து பிடித்து கொண்டு, “என்னை மன்னிச்சிருங்க அண்ணி… நான் அன்னைக்கு அப்படி நடந்திட்டு இருக்க கூடாது… ஆனா என் சூழ்நிலை… என்னால ஒன்னும் பேச முடியல… இப்போ கூட உங்களை தேடி நான் வந்திருக்கேன்னா என் நிலைமையை உங்களால புரிஞ்சிக்க முடியும்னுதான்” என்றபடி கண்ணீர் வடித்தாள்.

“என்ன உன் நிலைமை… புரியிற மாதிரி சொல்லு”

“நான் வீட்டுல இருந்து எதுவும் எடுத்துட்டு வரலன்னு குத்தி குத்தி காட்டி பேசுறாரு அண்ணி… நேத்து லிமிட்டைதாண்டி பேசிட்டாரு… நானும் பதிலுக்கு பதில் பேசிட்டேன்… உடனே கழுத்தை பிடிச்சு வெளியே தள்ள போயிட்டாரு” என்றவள் மேலே பேச முடியாமல் மீண்டும் அழுதாள்.

 கனி எரிச்சலுடன், “கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுனா… நீ நேரா போலிஸ் ஸ்டேஷன் போய் உன் புருஷன் பேர்ல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டியதுதானே” என்றாள்.

“என்ன அண்ணி பேசுறீங்க… அதுக்கு அப்புறம் நான் அந்த வீட்டு வாசப்படியை மிதிக்க முடியுமா? நானும் என் பசங்களும் எங்கே போவோம்” என்றவள் தேம்ப,

“நான் இருக்கேன் இல்ல… இங்கே வர வேண்டியதுதானே” என்றாள்.  

“எத்தனை நாளைக்கு அண்ணி நான் உங்களை சார்ந்திருக்க முடியும்”

“நீ ஏன் என்னை சார்ந்திருக்க… சுயமா இரு… அதுக்குதானே உங்க அம்மா அவ்வளவு செலவு பண்ணி உன்னை எஞ்சினியரிங் படிக்க வைச்சாங்க”

“சொல்றதெல்லாம் ஈஸிதான்… ஆனா சின்ன பசங்க இரண்டு பேரை வைச்சுக்கிட்டு வேலைக்கு போறதெல்லாம் கஷ்டம்”  

“என்ன பேசுற நீ… இந்த தெருவுல தையல் கடை வைச்சு இருக்காங்க… சுத்தமா படிப்பு வாசனையே இல்ல அவங்களுக்கு… தன்னோட மூணு பசங்களையும் தனியாளா தையல் வேலை பார்த்துதான் காப்பாத்துறாங்க தெரியுமா?”

“அண்ணி… உங்களுக்கு என் நிலைமை புரிய மாட்டேங்குது”

“இப்போ என்ன? நான் அந்த பத்திரத்தை தூக்கி கொடுத்துட்டா உன் நிலைமை சரியாயிடுமா?” கனி கடுப்புடன் கேட்க,

“அந்த பத்திரத்துனாலதான் இவ்வளவு பிரச்சனையும்” காயத்ரி தவிப்புடன் கூறினாள்.

கனி அமைதியாக யோசிக்க துவங்கினாள். அவளின் சொந்த வாழ்க்கையிலும் இது போன்று அனுபவங்கள் இருக்கிறது.

‘நீ உன் வீட்டுல இருந்து என்ன எடுத்துட்டு வந்த’ என்று கேட்டு அம்பிகா அவளை கரித்து கொட்டி ஒரு வழி செய்திருக்கிறார். இன்று அதுவே அவர் மகளுக்கும் நடக்கிறது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள். இது அதுதான் போல. ஆனால் அதனை சந்தோஷமாக கொண்டாடும் மனநிலையில் அவள் இல்லை. அத்தை அவளுக்கு எவ்வளவு கெடுதல்கள் செய்திருக்கிறாரோ அதே அளவுக்கு அவளுக்கு நல்லதும் செய்திருக்கிறார். ஒரு நல்ல துணையாக தோழியாக அவருடைய கடைசி காலம் வரை உடன் இருந்திருக்கிறார்.

இன்று அவர் மகள் அழுது கொண்டு அவள் முன்னே நிற்கும் போது அந்த சொத்து பத்திரம் அத்தனை முக்கியமானதா என்ன?

கனி அதற்கு மேல் ஒரு நொடி கூட யோசிக்கவில்லை.  விறுவிறுவென அறைக்குள் சென்று அந்த பத்திரத்தை எடுத்து வந்து,

“இந்தா… எடுத்துட்டு போ” என்றாள்.

“அண்ணி” அவள் நெகிழ்வுடன் நோக்க,

“அன்னைக்கு அத்தை பேர்ல இந்த இடத்தை வாங்க ஒரு காரணம் இருந்துது… ஆனா அப்போ நான்… இப்படி எல்லாம் பிரச்சனை வரும்னு கொஞ்சம் கூட  யோசிக்கல… இன்னும் கேட்டா உன் புருஷன் அன்னைக்கு அவ்ளோ அடாவடியா இந்த பத்திரத்தை கேட்காம இருந்திருந்தா நானே இதை உனக்கு கொடுத்து கூட இருப்பேன்” என்றாள்.

கனி பேசியதை கேட்டு காயத்ரி குற்றவுணர்வுடன், “சாரி அண்ணி” என்று தலையை தாழ்த்தி கொண்டு நிற்க,

“இந்தா… வாங்கிக்கோ காயு… இந்த பத்திரத்தை உனக்கு நான் கொடுக்கிறதுல எனக்கு எந்தவித மனவருத்தமும் இல்ல… ஆனா ஒன்னு… நீ அப்படியே இதை உன் புருஷனை நம்பி கொடுத்திராத? உன் பேர்ல மாத்தி வைச்சுக்கோ” என்றாள்.

“அண்ணி” என்று காயத்ரி மீண்டும் அவள் கழுத்தை கட்டி கொண்டு அழுதாள்.

“ப்ச்… ஏன் இப்படி அழுதிட்டு இருக்க… கண்ணை தொட… நான் மைசூர் பாக் செஞ்சேன்… இரு உனக்கு சாப்பிட எடுத்துட்டு வரேன்” என்றுவிட்டு கனி சமையலறை நோக்கி செல்ல,

“அண்ணி… இல்ல அண்ணி… வேண்டாம்… போகணும்… வீட்டுல யார்கிட்டயும் சொல்லாம கிளம்பி வந்துட்டேன் தேடுவாங்க” என்றவள் பதட்டத்துடன் பேச,

“சொல்லாம வந்துட்டியா… பைத்தியமா நீ” என்று கனி அதிர்ச்சியுடன் திரும்பி நிற்க,

“அப்ப இருந்த மனநிலைல எங்கயாவது போய் செத்துராலாம்னு தோணுச்சு… குழந்தைங்க முகத்தை பத்தி யோசிச்சதும் சாக தைரியம் வரல… அதான் நேரா உங்களை பார்க்கக் பஸ் பிடிச்சு வந்துட்டேன்” என்றதும் கனி அதிர்வுற்றாள்.  

“அடிப்பாவி… சாக போனியா… அறிவிருக்கா உனக்கு…” 

“எனக்கு வேற வழி தெரியல… என்ன வாழ்க்கை இதுன்னு”

“ஏன் காயு இப்படி இருக்க… ப்ச்… இனிமே இப்படி எல்லாம் யோசிக்க கூட யோசிக்காதே…. என்ன பிரச்சனைனாலும் எனக்கு ஃபோன் பண்ணு… எல்லாத்துக்கும் மேல நீ இப்படி பயந்துட்டு இருந்தா ஒன்னும் வேலைக்கு ஆகாது… தைரியமா இரு” என்று கண்டிப்புடன் அறிவுரை கூறியவள்,

“சரி இரு… நான் மைசூர் பாக்கை ஒரு டிபன் பாக்ஸ்ல போட்டு எடுத்துட்டு வரேன்… குழந்தைகளுக்கு எடுத்துட்டு போய் கொடு” என்று வேகமாக உள்ளே சென்று தட்டிலிருந்த மைசூர் பாக்கை கட்டம் கட்டமாக  வெட்டி டிபன் பாக்சை தேடி எடுத்து அதில் போட்டு காயுவிடம் கொடுத்தாள்.

“எனக்கு என்ன சொல்றதுனே தெரியல அண்ணி… நான் ரொம்ப சுயநலமா நடந்துக்கிறேன்”

“சும்மா உளறிட்டு இருக்காதே… சொல்லாம கொள்ளாம குழந்தைகளை வேற விட்டிட்டு வந்திருக்க… முதல கிளம்பு நீ… உன்னை கொண்டு போய் பஸ் ஸ்டான்ட்ல விடுறேன்… நேரத்தோட வீடு போய் சேரு”

“இல்ல அண்ணி நானே”

“ஒன்னும் தேவை இல்லை… வா” என்று அவளை பைக்கில் ஏற்றி கொண்டு சென்று பேருந்து நிறுத்தத்தில் இறக்கியவள்,

“பார்த்து பத்திரமா போ காயு… இனிமே இந்த மாதிரி முட்டாள்தனமா யோசிக்காதே” என்றவள் மேலும் தன் பர்ஸிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய் தாளை கொடுக்க,

“இல்ல அண்ணி… வேண்டாம் இருக்கட்டும்” என்றவள் தயங்க,

“பிடி… அதோ பஸ் வந்துடுச்சு பாரு… கிளம்பு… போயிட்டு மறக்காம கால் பண்ணு… சரியா” என்றவள் சொல்லி அனுப்ப, காயு அந்த பேருந்தில் ஏறிவிட்டு அவளை கண்ணீருடன் பார்த்தாள்.

ஒவ்வொரு பெண்ணின் கஷ்டத்திலும் கனி தன்னுடைய பிம்பத்தை பார்த்தாள்.

அந்த பேருந்து கிளம்பி சென்றதும் பைக்கை திருப்பி கொண்டு சென்ற கனியின் மனம் குற்றவுணர்வில் ஆழ்ந்தது. தேவையில்லாமல் அன்று யோகியிடம் வார்த்தையை விட்டிருக்க வேண்டாம். அவன் கேட்ட போதே இந்த பத்திரத்தை தூக்கி வீசியிருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது.

காயத்ரி ஒரு வேளை தற்கொலை செய்து கொண்டிருந்தால் தன்னை ஒரு நாளும் மன்னித்து கொள்ளவே முடியாது.    

அவள் இந்த யோசனையுடன் வீட்டு வாயிலை அடைந்த போது அங்கே ஒரு பிரமாண்டமான வெள்ளை நிற கார் நின்றிருந்தது.

திருநா அந்த காரின் அருகே நிற்பதை பார்த்த நொடிதான் அவளுக்கு நேரம் கடந்துவிட்டது விளங்கியது.

பதட்டமாக பைக்கை நிறுத்திவிட்டு இறங்கியவள், “சாரி… என் நாத்தனார் வந்திருந்தா… அவளை பஸ் ஸ்டான்ட்ல டிராப் பண்ணலாம்னு போயிட்டேன்” என்றபடி பூட்டை திறந்துவிட்டு

 “வாங்க வாங்க… உள்ளே வாங்க” என்று படபடப்புடன் அழைத்தாள்.

திருநாவின் அம்மா காரிலிருந்த இறங்கிவர, அவருடன் இன்னும் இருவர் தம்பதிகளாக இறங்கி நடந்து வந்தனர்.

திருநா ஏற்கனவே தன் அப்பா இறந்துவிட்டதாக சொல்லி இருக்கிறான். இவர்கள் யார் என்ற குழப்பத்துடன் அவள் பார்க்கவும்,

“எங்க அம்மா… அப்புறம் இவங்க என் மாமா மாமி” என்று அறிமுகம் செய்வித்தான்.

அவள் புன்னகைத்துவிட்டு, “உட்காருங்க… நான் தண்ணி எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே செல்லும் போது திருநாவின் விழிகள் அவளை கேள்வியாய் நோக்கின.

அப்போதுதான் தான் புடவையை மாற்றவில்லை என்று உரைத்தது. வியர்த்து வடிய முகத்தை கூட கழுவாமல் இருக்கிறோம். இப்படியா அவர்கள் தன்னை முதல் முறையாக பார்த்து தொலைக்க வேண்டும்.

சமைலறைக்குள் சென்று அவசரமாக புடவையை சரி செய்து கொண்டே,

‘சை! எப்படி எல்லாம் டிரஸ் பண்ணனும்னு யோசிச்சு… பார்த்து பார்த்து நகை எல்லாம் எடுத்து வைச்சு… கடைசில இப்படி ஆகிடுச்சே… என் நேரம்… எனக்குன்னு இப்படி எல்லாம் நடக்கும் போல’ என்று  புலம்பியபடி முகத்தை தேய்த்து அலம்பிய போது நெற்றியிலிருந்த பொட்டு தவறிவிட்டது.

‘இது வேறயா?’ பொட்டை எங்கே தேடியும் கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் முந்தானையில் முகத்தை துடைத்துவிட்டு தண்ணீரை குவளையில் எடுத்து கொண்டு அவள் வெளியே வர, அங்கிருந்த எல்லோரும் அவளை ஒவ்வொரு விதமாக பார்த்தனர்.

அவளுக்கு ஏனோ இதயம் படபடவென அடித்து கொண்டது. கை கால்கள் எல்லாம் வெலவெலத்தன. அவர்களை எப்படி எதிர்கொள்வதென்று புரியாத தவிப்புடன் தண்ணீர் டம்ளர்களை நீட்டினாள். அவர்கள் எடுத்து கொள்ள அவள் அவஸ்த்தையுடன் நின்றாள்.

தைரியம் தன்னம்பிக்கை என்று வார்த்தைக்கு வார்த்தை அளந்துவிட்டாலும் இது போன்ற சமயங்களில் அவையெல்லாம் கை கொடுப்பதில்லை.

ஓரப்பார்வையில் திருநாவை நோக்கினாள். அவன் விழிகள் ஏமாற்றத்துடன் அவளை பதில் பார்வை பார்த்தன. அவனிடம் தன் நிலைமையை எப்படி புரிய வைப்பது என்று அவளுக்கு தெரியவில்லை. 

மற்றொரு புறம் திருநாவின் அம்மா தண்ணீரை குடித்து கொண்டே அவளை குறுகுறுவென்று குடைந்து எடுத்தபடி பார்க்க அந்த பார்வைகளிலிருந்த தப்பிக்க வேண்டி,  

“கா… காபியும் பலகாரமும் எடுத்துட்டு வறேன்” என்றவள் உள்ளே சென்றுவிட பார்த்தாள்.

“இருக்கட்டுமா… பேசிட்டு அப்புறமா சாப்பிடலாம்” என்று திருநாவின் மீசைக்கார மாமா தன் கர்ஜனை குரலில் சொல்லவும் அவளுக்குள் பயபந்து உருண்டது.

திருநாவின் மாமி, “என்ன பேசுறதுகு இருக்கு… அதான் தம்பி… இந்த பொண்ணதான் கட்டுவேன்னு சொல்லிட்டாப்லயே” என்றார். அவரின் உடல் மொழி குத்தலாக அவளை அளந்தது.

ஆனால் திருநாவின் அம்மா கனிவுடன், “இத்தனை வருஷமா கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லி போக்கு காட்டிட்டி இருந்தான்… உன்னை பார்த்தும்தான் ஏதோ மனசு வந்து கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்கான்

என்னவோ… அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்த்துட்டா சரி” என்று அந்த கிரமாத்து மனுஷி மனதிலிருந்து பேசினார். அத்தனை நேரத்தில் அவரின் வார்த்தை கனிக்கு கொஞ்சம் இதமாக இருந்தது.

மேலும் அவர், “உனக்கு சொந்த பந்தம் யாரும் இல்லன்னு திரு சொன்னான்… கவலைப்படாதே மா… உனக்கு தாய் தகப்பனா இருந்து எல்லா சடங்கு சம்பிராதாயத்தையும் என் தம்பியும் தம்பி பொண்டாட்டியும் செய்வாங்க… நீ இனிமே நம்ம குடும்பம்தான்” என,

உடனே திருநாவின் மாமாவும், “ஆமா நீ இனிமே நம்ம குடும்பம்” என்றார். ஆனால் அவர் வார்த்தையில் ஒட்டுதல் இல்லை.

அவள் பதிலுக்கு என்ன பேசுவதென்று வார்த்தைகளை தேடும் போது திருநாவின் மாமா அவளிடம், “ஆமா நீங்க என்ன ஆளுங்க” என்று கேட்டுவிட அவளுக்கு திக்கென்றது. அவளின் உதடுகள் இறுக பூட்டி கொண்டன.

“உன்னைதான் மா என்ன சாதி நீங்க?” என்றவர் மீண்டும் கேட்க,

“சாதி எல்லாம் எதுக்கு மாமா?” என்று திருநா மெதுவாக அவரிடம் சொன்னான்.

“சும்மா தெரிஞ்சுக்கலாம்னுட்டுதான் மருமவனே… நம்ம சாதியா இல்லனா கூட பரவாயில்ல… குலம் கோத்திரம் தெரியணுமா இல்லையா?” என்று கேட்டுவிட்டு அவர் மீண்டும் கனியை பார்க்க,

“மாமா சொல்றது என்னவோ சரிதான்” என்று திருநாவின் அம்மாவும் ஒத்து ஊதினார்.  

அவள் தன் மௌனத்தை கலைக்கவில்லை.

“என்னமா…. பேசாம இருக்க? பதில் சொல்லு” அவர் மீண்டும் அழுத்தி கேட்க, அவள் முகம் இருண்டு போனது.

உலக மொழிகளில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தைகளை விடவும் மிக மோசமான வன்மமான வார்த்தை, ‘நீ என்ன சாதி?’ என்பதுதான்.

தான் ஆண்டான் சாதி என்று எண்ணி கொள்பவனுக்கு அந்த வார்த்தைகளின் உச்சபட்ச வன்முறை புரியாது. புரியவே புரியாது.

 அரிவாள்களும் துப்பாக்கிகளும் கூட கக்க முடியாத வன்முறைகளை அந்த ஒரு வார்த்தை செய்துவிடும். கூறு போட்டு ஒரு மனிதனை துண்டு துண்டாக அறுத்துவிடும்.  

அவர்கள் எல்லோரும் அவள் பதிலுக்காக ஆவலாக காத்திருந்தனர். அவள் தம் கரங்களை இறுக கட்டி கொண்டு, “என் சாதி என்னன்னு கண்டிப்பா தெரிஞ்சே ஆகணுமா?” என்று கேட்க,

“மாமா சும்மா பார்மலிட்டிக்குதான் கேட்குறாரு?” என்று திருநா அவசரமாக பதிலளித்தான். அவனை ஆழமாக பார்த்தவள்,

“சரி சொல்றேன்” என்று விட்டு எல்லோரையும் பொதுவாக பார்த்து, “நான் பட்டியல் சாதி… கரெக்டா சொல்லணும்னு… எங்க அப்பா சுடுகாட்டில பிணம் எரிக்கிற வெட்டியான்” என்று முடித்தாள்.

எல்லோரின் விழிகளும் அதிர்ச்சியுடன் கனியின் மீது நிலைகுத்தி நின்றுவிட்டன.

shanbagavalli, Chitrasaraswathi and 4 other users have reacted to this post.
shanbagavalliChitrasaraswathijamunaraniRathiThani Sivaindra.karthikeyan
Quote

அடுத்த எபி விரைவாக கொடுங்க

monisha has reacted to this post.
monisha
Quote

இந்த  சாதி எப்போ தான் ஒழியுமோ ச்சை 😡

monisha has reacted to this post.
monisha
Quote

Super ma 

You cannot copy content