You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Paruvameithi - 6

Quote

இரண்டாவது வழி ; மற்ற மிருகங்கள் எல்லாம் முழு வளர்ச்சி அடைந்த பிறகு முழு மண்டை ஓட்டுடன் பிறக்கும். ஆனால் மானிட சிசு, முழுதாக வளராத பாதி அளவு மூளையும் இன்னும் எலும்பாகாத மெல்லிய மண்டை ஓடுமாக இருந்தால் பிரசவத்தின் போது அம்மாவின் கொஞ்சம் அகன்ற இடுப்பு எலும்பு மேல் சறுக்கி கொண்டு 'ஸ்வைங்' என்று பிதுங்கி வெளியே வர சுலபமாக இருக்குமே. 

என்ன மற்ற மிருகங்கள் கருவறையிலேயே முழு வளர்ச்சியையும் முடித்து கொள்ளும். ஆனால் மனிதக் குழந்தை அரைகுறையாக வெளியே வந்து, மிச்ச வளர்ச்சியை முடித்து கொள்ளும். 

நிறுத்தி நிதானமாக, பிள்ளை பிராயத்தில் பெரிய டேரா போட்டு வளரும் மானுடத்தின் இந்த தன்மையைத்தான் 'நியோடெனி' NEOTENY என்கிறார்கள். லத்தின் மொழியில் 'நியோ' என்றால் இளமை. 'டெனி' என்றால் கெட்டியாக பிடிப்பது. 

ஆனால், இவ்வளவு கெட்டியாக இளமையைப் பிடித்து கொள்வதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது. இந்த பிள்ளை வளரும் வரை தாயை சார்ந்திருக்க, தாய் பிறரை சார்ந்திருக்க வேண்டி இருந்தது.... 

தொடரும்... 

6

கன்னிகைக்கு அன்றைய காலை பொழுது மிகவும் பரபரப்புடன் விடிந்தது. கால்களில் சக்கரம் கட்டாத குறையாக நிற்கவும் நேரமின்றி ஓடி கொண்டிருந்தாள். சமையல் வேலைக்கு ஆட்கள் வந்திருந்த போதும் அவர்களுக்கு தேவையானவற்றை எடுத்து கொடுப்பது படையலுக்கு ஏற்பாடு செய்வது என்று பெண்டு நிமிர்ந்தது.

காய்திரியாலும் உதவியாக இருக்க முடியவில்லை. நொடிக்கு ஒரு தடவை அவள் பிள்ளைகள் பின்னே ஓடுவதற்கும் கணவனுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பதற்குமே அவளுக்கு சரியாக இருந்தது.

மதியம் படையல் வைத்து எல்லோருக்கும் உணவு பரிமாறுவது தொடங்கி அனைத்திலும் கன்னிகைதான் முன்னே நின்றாள். இந்த களேபரத்திலும் அங்கே வந்திருந்த திருநாவின் காதல் பார்வை அவளை விடாமல் தொடர்ந்த வண்ணம் இருந்ததில் அவளுக்கு ரொம்பவும் சங்கடமாகி போனது. இதில் அரசல் புரசலாக அவளுடன் பணிபுரியும் பள்ளி ஆசரியர்களுக்கு விஷயம் பரவயிருந்தது.

ஆசிரியர்கள் கூட்டத்துடன் திருநாவும் சாப்பிட அமர அவனுக்கு அவள் உணவு பரிமாறும் போது பேச்சுகள் எல்லாம் ஏதோ ஜாடை மாடையாக எழுந்தன. இருப்பினும் அவள் ஏதுமறியாதது போல காட்டி கொண்டாள். ஆனால் காயத்ரியின் மூளை அவர்கள் பேச்சின் சாரத்தை இன்னதென்று கணித்துவிட்டன.

திருநா வேறு புறப்படும் போது கன்னிகையை பார்த்து கொண்டே கிளம்பி செல்ல காயத்ரி அருகே வந்து, “உயரமா போறாரே… அவர் பேர் என்ன அண்ணி?” என்று ரகசியமாக கேட்டு வைத்தாள்.

 இப்போது இந்த பேச்சை எடுக்க கன்னிகை விரும்பவில்லை. பொறுமையாக பேசலாம் என்று இருந்தாள். அதற்குள் காயத்ரி இப்படி கேட்கவும் அவள் யோசனையாக நிற்க, “அண்ணி என்னாச்சு?” என்று தோளை அழுத்த,

“திருநாவுக்கரசு… ஸ்கூலுக்கு புதுசா வந்திருக்க பிடி சார்” என்றாள்.

“நீங்களும் அவரும் ரொம்ப நெருக்கமோ?” என்றவள் சட்டென்று அடுத்த கேள்விக்கு தாவ,

“அப்படி எல்லாம் இல்ல… சும்மா சாதாரணமா எல்லார்க்கிட்டயும் பேசுற மாதிரி பேசுவோம்” என்று சமாளித்த கனிக்கு அவளிடம் மனம் திறந்த தன் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஏதோ ஒன்று தடுத்தது. 

“அவ்வளவுதானா? அப்போ அம்மா உங்க கல்யாணத்துக்காக ஸ்கூல வேலை பார்க்கிற சார் யாரையோ... பார்த்து இருக்கிறதா சொன்னாங்க” என்றவள் விசாரிக்க, இவள் தெரிந்து கொண்டேதான் தன்னிடம் போட்டு வாங்குகிறாள் என்பது புரிந்தது கனிக்கு.   

“இப்போ அது ரொம்ப தேவையா…  சாப்பிட்ட இடம் எப்படி இருக்கு பாரு…  கூட்டி பெருக்க வேணான்” என்றவள் பிடி கொடுக்காமல் நழுவிவிட, காயத்ரி விடுவதாக இல்லை.

அவள் சமையலறைக்கு வந்து மிச்சம் மீதி உணவுகளை எல்லாம் எடுத்து வைத்து கொண்டிருக்க, “அண்ணி… என்கிட்ட சொல்ல உங்களுக்கு என்ன தயக்கம்?” என்று ஒரு மாதிரி குழைந்தபடி கேட்க,

“என்னடி சொல்லணும் உன்கிட்ட” என்று கனி கடுகடுக்க,

“அதான் உங்களுக்கு பார்த்திருக்க அந்த சார் யாருன்னு… உங்களுக்கும் கூட அவர் மேல விருப்பம்னு” என்று இழுத்தாள். அத்தையிடம் திருநா விஷயமாக காயத்ரியிடம் சொல்ல வேண்டாமென்று கனி எச்சிரிக்கை செய்திருந்தாள். ஆனால் மகளாயிற்றே. மறைக்க முடியாமல் மேலோட்டமாக விஷயத்தை போட்டு வைத்திருக்கிறார் என்று புரிய கன்னிகை அவளை நேராக பார்த்து,

“ஆமா… காயு… நான் திருநாவை விரும்புறேன்… கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம்” என்று போட்டு உடைக்க,

“எனக்கு தெரியும்… நான் அப்பவே கெஸ் பண்ணிட்டேன்… கங்கிராட்ஸ் அண்ணி” என்று வாழ்த்தினாள்.

“ப்ளீஸ் காயு… இப்போ இதை பத்தி பேச வேண்டாம்… நாம அப்புறமா இதை பத்தி பேசிக்கலாம்” என,

“புரியுது அண்ணி” என்றவள் ஒப்புக்கு சொன்னாலும் அவள் அந்த பேச்சை விடுவதாக இல்லை.

“அந்த திருநாவுக்கரசு பார்க்க நல்லாத்தான் இருக்காரு… அவருக்கு என்ன இது   ஃபர்ஸ்ட் மேரஜா அண்ணி?”

“ஆமா”  

“ஓ… அப்படியும் ஓ கே சொல்லிட்டாங்களா… பரவாயில்ல அண்ணி… ரொம்ப நல்ல டைப்” என்ற காயத்ரியின் பேச்சி கனிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

அவள் மேலும், “அதனாலதான் அண்ணன் போட்டோவை கப்போர்ட்ல வைச்சுட்டீங்களா?” என்று கேட்டு வைக்க, கனிக்கு சுருக்கென்றது.

சீறலாக தொண்டை வரை எழுந்த வார்த்தைகளை அடக்கி கொண்டாள். அத்தையின் காரியம் முடியும் வரை தேவையில்லாத பிரச்சனைகள் எதுவும் வேண்டாம் என்று அமைதி காத்தாள். ஆனால் கருநாகமாக அவளுக்குள் சுருண்டிருக்கும் வலிகளும் கோபங்களும் எப்போது வேண்டுமானாலும் படமெடுத்து ஆடலாம்.

யாராவது அதனை சீண்டாத வரைக்கும் பிரச்சனை இல்லை.

ஒரு வழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்து உறவினர்கள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டு விட்டனர். இறுதியாக காயத்ரியின் கணவனும் மாமனாரும் சோபாவில் அமர்ந்து தீவிரமாக எதையோ விவாதித்து கொண்டிருந்தனர்.

ஏதோ சொத்து பத்திரம் என்றெல்லாம் அவள் காதில் விழுந்தது.

அத்தையின் இறப்புக்கு வந்துவிட்டு அடித்து பிடித்து மனைவியை இழுத்து கொண்டு ஓடியவன் இன்று மாலையாகியும் கிளம்பாமல் இருப்பது ஏனென்று கனிக்கு புரியவில்லை. 

 யோகியின் மனதில் என்னவோ இருக்கிறது என்று சந்தேகம் எழும் போது காயத்ரி வந்து நின்று, “அண்ணி கிளம்பறோம்” என்றாள்.

 “இருந்து நாளைக்கு போகலாமே” என்று கனி ஒரு பேச்சுக்கு சொன்னாலும் அவர்கள் இருப்பதை அவள் விரும்பவில்லை.

“இல்ல அண்ணி கிளம்பணும் அவருக்கு ஆபிஸ் இருக்கு” என்று விட்டு தன் பைகளை எல்லாம் எடுத்து வைக்க, யோகி சோபாவிலிருந்து நகர்வதாக இல்லை.

என்னவோ சரியில்லை என்று கனியின் மூளை எச்சரிக்கும் போது அவன் தொண்டையை செருமி கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தான். ஏதோ பேச போகிறான் என்றவள் கணிக்கும் போது அவன் மனைவியை அழைத்து அவளிடம் ஏதோ சொல்லி கேட்க சொன்னான்.

“இல்ல அது வந்து… இப்பவே கேட்கணுமா?” என்று காயு தயங்கி கொண்டு நிற்க,

“என்ன விஷயம் காயு… சொல்லு” என்றாள் கனி முன்னே வந்து நின்று. 

“இல்ல அண்ணி… அம்மா பேர்ல திருவள்ளூர்ல ஒரு இடம் இருக்கு இல்ல… அதோட பத்திரம்” என்றவள் நிறுத்தவும் கனிக்கு புரிந்துவிட்டது.

“எதுக்கு அந்த பத்திரம்?”

“அது வந்து அண்ணி… அவர்தான்?” என்றவள் பேசம் போதே இடையில் எழுந்து நின்ற யோகி,

“என்ன அவர்தான் இவர்தான்னு இழுக்குற… அது உங்க அம்மா பேர்ல இருக்க சொத்து… சட்டப்படி உங்க அம்மாவுக்கு பிறகு அது உனக்குதான் உரிமையாகணும்” என்று மனைவியை ஏற்றிவிட்டான்.

ஆனால் கனி கொஞ்சமும் தயங்காமல், “நான் அவங்க மருமக… இத்தனை வருஷமா அவங்க கூட இருந்து பார்த்துக்கிட்டுது நானு… சட்டப்படி அவங்க பேர்ல இருக்க சொத்துக்காக சொந்த கொண்டாட எல்லாம் லீகல் ரைட்ஸ் எனக்கும் இருக்கு… இது எல்லாத்துக்கும் மேல அந்த இடம் முழுக்க முழுக்க என்னோட சுயசம்பாத்தியம்” என்று தீர்க்கமாக முடிக்க, யோகியின் முகம் சுணங்கி போனது.   

அவன் மனைவியிடம் திரும்பி, “கேட்டுக்கோ காயு… நல்லா கேட்டுக்கோ… அண்ணி அண்ணின்னு தலையில தூக்கி வைச்சு கொண்டாடின இல்ல… பாரு உங்க அண்….ண்ணி எப்படி பேசறான்னு” என்று ‘அண்ணி' என்ற வார்த்தையை கடித்து கொதற, கனிக்கு சுர்ரென்று கோபமேறியது.

“இதை பாருங்க யோகி… எது பேசறதா இருந்தாலும் நேரடியா என்கிட்ட பேசுங்க… சும்மா காயத்ரியை தூண்டிவிடாதீங்க… அவளுக்கு அண்ணியா நான் என்ன செய்யணுமோ… இதுக்கு அப்புறமும் நான் அதெல்லாம் செய்வேன்” என்றவள் நேரடியாக யோகியை பார்த்து பேச,

அவன் சீறலுடன் எழுந்து நின்று எகிற ஆரம்பித்தான். “என்ன? என் பொண்டாட்டிக்கு நீ பிச்சை போடுறியா… நீ செய்றதுக்காக நாங்க நாக்கை தொங்க போட்டு உட்காந்திருக்கணுமா… இதுவரைக்கும் வரதட்சணைன்னு ஒத்த பைசா கேட்டிருப்பேனா இல்ல வாங்கி இருப்பானா… நீ என்ன... என் பொண்டாட்டிக்கு செய்றது… அவளுக்கு தேவையானதை எல்லாம் எனக்கு செய்ய தெரியும்… நான் கேட்குறது அவளுக்கு உரிமையான இடத்தை” என்றவன் சுற்றி வளைத்து ஆரம்பித்த இடத்திலேயே வந்து நின்றான்.

“உரிமையானதா? பெத்த அம்மாவே வேண்டாம்னு ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட பிறகு அப்புறம் என்ன உரிமை” என்று கனி கேட்டதும் காயத்ரி பதட்டத்துடன்,

“அண்ணி என்ன பேசுறீங்க?” என்று அதிர,

“சாரி காயு… நானா இதெல்லாம் பேசணும்னு நினைக்கல… உன் புருஷன்தான் பேச வைக்கிறாரு” என்றாள் அமைதியாக. 

“நான் அப்பவே சொன்னேன்… இவளை பத்தி… நீ கேட்டியா… இப்போ எப்படி எல்லாம் பேசுறா பாரு” என்று யோகி இடையில் புகுந்து சிண்டு முடிந்துவிட,

“அவ இவன்னு பேசுற வேலையெல்லாம் வேண்டாம் யோகி” என்று கன்னிகை கை நீட்டி எச்சரித்தாள்.

“அப்படிதான்டி பேசுவேன்… என்னடி பண்ணுவ… என்னவோ சுயமா சம்பாதிச்சாலாம்… ஒழுக்கமா இருக்க எவளும் இவ்வளவு பணத்தை நாலு அஞ்சு வருஷத்துல சம்பாதிக்க முடியாது… நீ சுயமா சம்பாதிச்சனா எப்படி சம்பாதிச்ச” என்றவன் கேட்ட போது யோகியின் மொத்த குடும்பமும் அங்கே நின்றிருந்தது. அவன் அப்பா, ‘பின்ன வேற எப்படி சம்பாதிச்சிருப்பா’ என்று ஒத்து ஊத, அவன் அம்மாவோ, ‘அதானே’ என்று ஜால்ரா அடித்தார்.

காயத்ரி தன் கணவனின் பேச்சை ஆமோதிப்பது போல மௌனமாக நின்றுவிட கனியின் உதடுகள் அவமானத்தில் துடித்தன. கண்களில் நீர் பொங்கிவிட்டது.

தன் நேர்மையையும் உழைப்பையும் மனசாட்சியே இல்லாமல் ஒட்டுமொத்தமாக அசிங்கப்படுத்தி பேசுவதை அவளால் தாங்க முடியவில்லை. தனியாக இருக்கும் பெண் என்றாலே இது போன்ற வசைகளை அவர்கள் மீது வீச வேண்டுமா என்ன?

உள்ளுர கொதித்தது. பல வருடங்களாக அவள் தேக்கி வைத்திருந்த வலிகள் எல்லாம் கோபமாக பீறிட்டு கொண்டு எழ யோகியை எரிப்பது போன்று பார்த்தவள்,  

 “தங்கச்சி உறவு முறைன்னு கூட பார்க்காம இருட்டுல என் மேல கை வைச்ச புறம்போக்குதானே டா நீ… தூ நீயெல்லாம் என் ஒழுக்கத்தை பத்தி பேசுறியா?” என்று கேட்டுவிட  அவன் விக்கித்து போனான்.

“அண்ணி என்ன பேசுறீங்க” என்று காயத்ரி இடையில் வந்து வக்காலத்து வாங்க,

“உண்மையைதான் சொன்னேன்… திரும்பி உன் புருஷனையே கேளு நான் சொன்னது உண்மையா இல்லையான்னு” என்றதும் யோகியின் முகம் வெளிறி போனது.

அவன் முகபாவத்தை உற்று கவனித்த கனிக்கு நடந்தது கனவா நினைவா என்ற குழப்பம் இன்று தெளிவானது. நிச்சயம் இவன்தான் அத்தகைய ஈனத்தனமான செயலை செய்திருக்கிறான்.

ஆனால் காயு அவள் சொல்வதை நம்பவில்லை.

“அந்த பத்திரத்தை உங்களுக்கு கொடுக்க விருப்பமில்லையா… அதை நீங்களே வைசுச்சுக்கோங்க… அதுக்காக இப்படியொரு அசிங்கமான பழியை வாய் கூசாம என் புருஷன் மேல போடாதீங்க” என்றவள் திட்டவட்டமாக சொல்ல, 

“உன் புருஷன் வாய் கூசாம என் ஒழுக்கத்தை பத்தி பேசும் போது மட்டும் அது அசிங்கமான பழின்னு உனக்கு தோணலையாடி… அதையே உன் புருஷனோட ஒழுக்கத்தை பத்தி பேசுனா மட்டும் அசிங்கமா இருக்கோ” என்று கனி பதில் கேள்வி கேட்க காயு ஒரு மாதிரி தடுமாறினாள்.

யோகி எரிச்சலுடன், “உங்க அண்ணியோட நிஜ முகம் இதுதான் காயு… பார்த்துக்கோ” என,

“ஆமா இதுதான் என் நிஜ முகம்… பார்த்துக்கோ… ஆனா உனக்கு தைரியம் இருக்கா உன் நிஜ முகத்தை காட்ட… நீ போட்டிருக்கிற அந்த முகமுடியை கழட்டி உன் அசிங்கமான அருவருப்பான முகத்தை காட்டேன் பாப்போம்” என்றதும் யோகி முன்னே வந்து,

“நீ ரொம்ப ஓவரா பேசுற” என்று எகிறினான்.

“ஆமா அப்படிதான் பேசுவேன்… இது என் வீடு… என் சம்பாத்யத்துல தான் இந்த வீட்டுக்கு நான் அட்வான்ஸ் வாடகை எல்லாம் கொடுத்திட்டு இருக்கேன்… இங்கே நின்னு நான் என்ன வேணா பேசுவேன்… அதை கேட்க உனக்கு எந்த உரிமையும் இல்ல” என்றவள் சொல்லி முடிக்க,

 “இதுக்கு மேல இந்த வீட்டுல நின்னா எனக்கு அசிங்கம்… வா போலாம்” என்றவன் மனைவியிடம் சீற காயத்ரி அமைதியாக திரும்பி நடந்தாள். வாயில் வரை சென்றவன் மீண்டும் கனியிடம் திரும்பி,

“சட்டப்படி அந்த இடத்தை உன்கிட்ட இருந்து வாங்காம விடமாட்டேனடி” என்று சவால் விட,

“உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ… போடா” என்றாள்.  

யோகியின் உதடுகள் அவமானத்தில் துடிக்க, “வாங்க போலாம்” என்று காயு கை பிடித்து கணவனை அழைத்து சென்றுவிட்டாள். 

அவர்கள் கிளம்பி சென்ற பிறகு அந்த வீடு ஒருவித மயான அமைதியின் மூழ்கியது. 

கன்னிகையின் உள்ளமோ உலை கொதிப்பது போல அடங்காமல் கொதித்து கொண்டிருந்தது. யோகி பேசியதும் அவன் குடும்பம் சுற்றி நின்று அவளை வேடிக்கை பொருள் போல பார்த்ததை நினைக்க நினைக்க தேகம் முழுக்க தீயாக பற்றி எரிந்தது.

கடைசியில் காயத்ரியும் புருஷன்தான் முக்கியமென்று அவர்கள் பக்கம் நின்று விட்டாளே! அவளால் அதற்கு மேல் என்ன செய்ய முடியும். அவள் ஒரு முதுகெலும்பில்லாத பூச்சி!

கனியால் நடந்ததை ஜீரணித்து கொள்ளவே முடியவில்லை.

மாலையுடன் இருந்த தன் அத்தையின் படத்தை பார்த்து முறையிட்டாள்.

‘என்ன த்தை? அமைதியா நின்னு வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்களா… உங்க மாப்பிள்ளை பேசுனதை?

 பார்ப்பீங்க… ஏன் பார்க்க மாட்டீங்க… அந்த இடம் உங்க பொண்ணுக்கு உரிமையானதாம்… சொல்றான் உங்க பொண்ணை கட்டினவன்

அவனுக்கு என்ன தெரியும்… நான் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன்… இராத்திரி பகல் பார்க்காம எப்படி எல்லாம் உழைச்சேன்… என்ன எல்லாம் வேலை செஞ்சேன்னு

 ஈஸியா சொல்லிட்டு போறான்… பொறுக்கி…

எனக்கு வேணும்… உங்க குடும்பத்துல மருமகளா வந்து வாச்சத்துக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னுமும் வேணும்’ என்று புலம்பியபடி தலையிலடித்து கொண்டு அழுதாள்.

அவளின் அழுகை ஒலி அந்த வீடு முழுக்கவும் எதிரொலித்தது.

 

shanbagavalli, Chitrasaraswathi and 5 other users have reacted to this post.
shanbagavalliChitrasaraswathijamunaraniRathiThani Sivaindra.karthikeyanchitti.jayaraman
Quote

Yogi ah oru adi kydukama vittiye ma ivlo kevalamana jenmam ivan mattum illa kudumbame appadi dan iruku, kani inda madiri ini evlo problems varumo eppadi samalika poriyo ma, nice update dear thanks.

Thani Siva has reacted to this post.
Thani Siva
Quote

தன்னோட இன்னொரு முகம் வெளிபட்டவுடன் அவசரமாக ஓடுறான் யோகி....😡

காயுகூட பச்சோந்தி தான்

 

monisha has reacted to this post.
monisha
Quote
Quote from chitti.jayaraman on June 9, 2022, 7:45 PM

Yogi ah oru adi kydukama vittiye ma ivlo kevalamana jenmam ivan mattum illa kudumbame appadi dan iruku, kani inda madiri ini evlo problems varumo eppadi samalika poriyo ma, nice update dear thanks.

தொடர்ந்து நீங்க தளத்தில் கருத்து எழுதுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மா... நன்றி.

Quote
Quote from Thani Siva on June 9, 2022, 8:36 PM

தன்னோட இன்னொரு முகம் வெளிபட்டவுடன் அவசரமாக ஓடுறான் யோகி....😡

காயுகூட பச்சோந்தி தான்

 

பெரும்பாலும் உறவுகள் பச்சோந்திகளாகவே இருக்கிறார்கள்.

தங்கள் கருத்துகளுக்கு நன்றி.

Thani Siva has reacted to this post.
Thani Siva
Quote

Super ma 

You cannot copy content