You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow kanavugal - 13

Quote

13

மதுவின் அந்த ஒன்பது மாத திருமண வாழ்க்கையில் அவளின் உலகமாகவே அஜய் மாறியிருந்தான். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அப்படி மாற்றியிருந்தான்.

மதுவிற்குத் தன்னைத் தவிர்த்து வேறு யாருமே, அல்லது வேறு எதுவுமே முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை. அது அவன் நடந்து கொண்ட விதத்திலேயே அவளுக்குப் புரிந்திருந்தது.

ஆனால் தன் நிலைமையை அவனுக்கு எப்படி புரிய வைப்பதென்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. அந்தச் சூழ்நிலையில்தான் அவள் கருத்தரித்தாள்.

அதற்குப் பிறகு வேறுவழியின்றி அவள் உடல் உபாதைகள் அவனை சார்ந்திருக்கும்படியான நிலைக்குத் தள்ளியது. அவள் கருத்தரித்த விஷயம் தெரிந்த அதே நேரத்தில் சரவணனுக்கு அவன் ஊரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

“ப்ளீஸ் அஜய்… சரோ கல்யாணத்துக்கு போயிட்டு வந்திடலாம்… உனக்கு வேலையிருந்தா நான் அம்மா அப்பா கூட” என்று சொன்ன நொடி உஷ்ண பார்வைப் பார்த்தவன்,

அவள் முகத்தைப் பார்த்து தன் கோபத்தை மட்டுபடுத்திக் கொண்டு, “ப்ளீஸ் மது… பிவ்டீன் டேஸ்தான் ஆகியிருக்கு… இந்த மாதிரி நேரத்தில லாங் டிரைவ் எல்லாம் பண்ணவே கூடாது” என்றான்.

“வேணா நீ உன் அம்மா அப்பாகிட்ட கூடக் கேட்டுப்பாரேன்… அவங்களும் வேணாம்னுதான் சொல்லுவாங்க”

அதற்கு மேல் பிடிவாதம் பிடித்து வேறெதாவாது எடாகுடமாக ஆகி தொலைந்தால், பிறகு அது தன்னக்கே எதிராக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் அவள் அதுப்பற்றி எதுவும் பேசவில்லை. ஆனால் தன் நெருங்கிய நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று ஆதங்கம் இன்று வரை அவள் மனதில் தங்கியிருந்தது.

என்ன சொல்வது? அந்த விதிதான் அவளை சரவணின் திருமணத்திற்கு போக விடாமல் தடுத்துவிட்டதோ என்னவோ?

அப்படி போயிருந்தால் சரவணனின் மனைவிதான் இந்துமதி என்று அவளுக்கு தெரிந்திருக்க கூடும். ஒருவேளை அப்படி தெரிந்திருந்தால் சுரேஷின் இறப்பைக்கூட அவள் நடக்காமல் தடுத்திருக்க முடியுமோ என்னவோ? ஆனால் அதுவும் நிச்சயமாக சொல்லிவிட முடியாது.

யார் யார் வாழ்க்கையில் எது நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ அது நடந்தே தீரும். மதுவின் வாழ்க்கையில் அஜய் நுழைந்தது போல!

அஜயின் வெறித்தனமான காதல் ஒருவிதத்தில் அவளை மூச்சு முட்ட வைத்து அழுத்தம் கொடுத்தாலும் மற்றொரு விதத்தில் அதே காதல் அவளை ஆதரவாக தாங்கிக் கொண்டதையும் அவளால் மறுக்க முடியாது.

முதல் மூன்று மாதம் உணவு உட்கொள்ள முடியாமல் தூங்க முடியாமல் சோர்ந்து களைத்து போன நேரங்களில் ஒரு தாயிற்கு நிகராக அவளைக் கவனித்து கொண்டான்.

அவள் தன்னையும் மீறி வாந்தி எடுத்த சமயங்களில் அருவருப்பு உணர்வின்றி கைகளில் ஏந்திக் கொண்டான். அவள் சாப்பிட முடியாமல் அவஸ்த்தையுறும் நேரங்களில் அவனுமே உணவு உண்ணாமல் அவளுக்காக பட்டினி கிடந்தான். அவள் எந்தளவு வாடினாலோ அதைவிட இரு மடங்கு அதிகமாக அவன் அவளுக்காக உருகி மருகினான்.

அடுத்தடுத்த மாதங்களில் அவள் உடல் உபாதைகள் குறையுமென்று பார்த்தால் அது இன்னும் இன்னும் அதிகரித்து கொண்டே போனது. அந்தச் சமயத்தில்தான் மருத்துவர் அவள் கருவிலிருப்பது இரட்டை சிசு என்றுக் கண்டறிந்து சொல்ல அஜயின் காதலும் கவனிப்பும் இன்னும் பன்மடங்காகப் பெருகியிருந்தது.

நடக்க முடியாமல், ஓரிடத்தில் நிற்க முடியாமல் என்று அவள் நிலைகொள்ளாமல் தவிக்கும் போதெல்லாம் ஒரு குழந்தையைத் தாங்குவது போல அவளை தன் கரத்தில் தாங்கிக் கொண்டான்.

தூங்க முடியாமல் அவள் புரளும்போது அவனும் அவளுக்காக உறக்கம் தொலைத்து தன் மடியைத் தலையணையாகக் கொடுத்து அவளுக்காக விடிய விடிய உட்காரந்த படியே உறங்கியிருக்கிறான். கால் வீங்கி வலியில் அவள் அவதியுறும் போது கால்களைப் பிடித்தவன் அவள் உறக்கம் கலைந்துவிடாமலிருக்க இரவு முழுக்கவும் பிடித்துவிட்டபடியே கூட இருந்திருக்கிறான்.

உறக்கம் களைந்து எழுந்து பார்த்தவள் நெகிழ்ந்து கண்கள் கலங்கி போவாள். அவனின் இந்த எல்லையில்லா அன்பும் காதலுமே அவனை மீறி எதுவும் செய்ய முடியாமல் அவளை அவனிடம் கட்டுண்டுவிட செய்தது. 

இப்போது கூட சரவணனைத் தவிர வேறு யார் அந்த இடத்திலிருந்தாலும் அவள் சென்றிருக்கமாட்டாள். ஆனால் அது சரவணன் என்ற போது அவளால் மறுக்க முடியவில்லை.

அஜய் பெரிதாக இந்த விஷயத்தில் தன் கோபத்தை அவளிடம் காட்டிக்கொள்ளாத போதும் அவன் உள்ளம் அதை எண்ணி எந்தளவு கொந்தளித்து கொண்டிருக்கும் என்று அறியாதவள் அல்ல அவள்.

அதுவே அவளைப் பதட்டத்தில் ஆழ்த்தியது. இந்தக் கோபத்தை அஜய் வேறு ஏதாவது ஒரு விதத்தில் சரவணன் மீது காட்டிவிடுவனோ என்று பயந்தாள்.

இவ்வாறு யோசித்தபடி உறங்காமல் தவித்தவளுக்கு சரவணன் இந்துமதியைப் பார்த்திருப்பானா என்றக் கேள்வி எழுந்தது. அவள் உள்ளுணர்வு வேறு அவனுக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்குமோ என்று அடித்துக் கொண்டது.

வேகமாக தன் பேசியை எடுத்தவள் அவன் பேசிக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டாள்.

“மதுவைப் பார்த்திட்டியா? இப்போ எங்க இருக்க”

சில நொடிகள் காத்திருந்து பதிலேதும் வராமல் போக,

“நீ எங்க இருக்க சரோ… எனக்கு ரிப்ளை பண்ணு” என்று அனுப்பினாள். அதற்கும் பதில் வரவில்லை.

“ஏதாச்சும் பிரச்சனையா? ரிப்ளை பண்ணு” என்றவள் தொடர்ச்சியாக நிறைய குறுஞ்செய்திகளை அனுப்பி பார்த்தாள். ஒன்றும் பயனில்லை.

மனம் என்னவோ ஏதோ என்று பதற அவன் செல்பேசிக்கு அழைத்தாள். ரொம்பவும் முக்கியமாக ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் மட்டுமே அவனுக்கு அவள் அழைத்து பேசுவாள். அதுவும் அவனிடம் நவீன ரக அண்ட்ராய்ட் மொபைல் கிடையாது.

அவனுக்கு அதை உபயோகிப்பது அவ்வளவு சௌகரியமாக இல்லாததால் அந்த மாதிரி பேசிகளை அவன் வாங்குவதில்லை.

அவனால் பேச முடியாமல் போனாலும் தான்தான் பேசுகிறேன் என்பதைத் தெரிவிக்கும் விதமாக அருகிலிருக்கு ஏதேனும் பொருள் வைத்து மும்முறை அடித்து சத்தம் எழுப்புவான். அது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த மொழி!

இம்முறையும் அப்படி எதிர்பார்த்துதான் அவனுக்கு அழைத்திருந்தாள். அவன் தன் அழைப்பை ஏற்றாலே போதும் என்று அவள் அவன் எண்ணிற்கு அழைத்தாள்.

அந்த பேசி ரீங்காரமிட்டது. தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த அந்த செல்பேசியின் அழைப்பு சத்தத்தில் ஜெயாவிடம் பேசிக் கொண்டிருந்த சாரங்கபாணி, “யாரோட போன் அடிக்குது?” என்று எரிச்சலில் கத்த,

அங்கிருந்த இரண்டு கான்ஸ்டபிள்களும் அது தங்ளுடையது இல்லையென்று மறுத்துவிட்டனர். ஜெயாவும் குழப்பமாக சுற்றும் முற்றும் பார்த்திருக்க,

தரையில் ஒரு பேசி தனந்தனியாக அடித்து கொண்டிருப்பது அவள் கண்ணில் பட்டது. அதனைக் கைக் காண்பித்து எடுக்க சொன்னவள் அந்தப் பேசியில் மதுபாலா என்று ஒளிர்ந்த பெயரைப் பார்த்து, அது யாருடையது என்றும் கணித்துவிட்டாள்.

சாரங்கபாணி அவள் முகத்தை பார்த்து, “யாரோட போன் இது? ஸ்டேஷன் வந்தவங்க யாரச்சும் விட்டுட்டு போயிட்டாங்களா?” என்றுக் கேட்கவும்,

“இது அந்த இந்துமதியோட புருஷன் ஃபோன்” என்றாள் ஜெயா.

“அதெப்படி நீ அவ்வளவு கரெக்ட்டா சொல்ற?” சாரங்கபாணி சந்தேகமாக புருவத்தை நெரிக்க, அவள் அந்த செல்பசியில் ஒளிர்ந்த பெயரை அவரிடமும் காண்பித்தாள்.

சாரங்கபாணியின் முகம் படு உக்கிரமாக மாறியிருந்தது. எரிமலையே வெடித்து சிதறியது போல தீயாகப் பார்த்தவரின் முன்னிலையில் அப்போது மட்டும் மது இருந்தால் பார்வையாலேயே எரித்து சாம்பலாக்கி இருப்பார்.

‘இந்த ஆள் ஏன் இவ்வளவு காண்டாகுறான்… அந்தப் பொண்ணு மேல அப்படியென்ன கோபம்?’ என்று ஜெயா யோசித்திருக்க சாரங்கபாணி அவளிடம்,

“அந்தப் பொண்ணோட புருஷன் ஊமைன்னுதானே நீ சொன்ன… அப்புறம் இவ அவனுக்கு ஃபோன் பண்ணியிருக்கா?” என்றவளை ஏற இறங்க முறைத்துக் கொண்டே கேட்டார்.

“ஊமைன்னுதான் சொன்னேன்… ஆனா காது கேட்காதுன்னு நான் சொல்லவே இல்லையே… அவனால் பதில் சொல்ல முடியாட்டியும் அந்தப் பொண்ணு பேசறது அவனுக்கு கேட்கும்தானே” என்றாள் ஜெயா!

அவள் சொல்வதை ஏற்றுக் கொண்ட சாரங்கபாணி மீண்டும் அவளிடமிருந்து அழைப்பு வரவும் சுற்றியிருப்பவர்களை அமைதியாக இருக்க சொல்லி கைக் காண்பித்துவிட்டு அழைப்பை ஏற்றார்.  

மறுகணமே மது அருவி போல தன் நண்பனுக்கான தவிப்பையும் படபடப்பையும் கொட்டத் தொடங்கியிருந்தாள்.

“சரோ… ஏன்டா காலை அட்டென்ட் பண்ண இவ்வளவு நேரம்… நீ சேஃபா இருக்கியா… உனக்கு ஒன்னும் இல்லையே… என் மெசேஜ்க்கு ஏன் ரிப்ளை போடல… நான் எவ்வளவு டென்ஷனாகிட்டேன் தெரியுமா?” என்று மூச்சைப் பிடித்துக் கொண்டு மது பேசுவதைக் கேட்டு சாரங்கபாணியின் வஞ்சக புத்தி தப்பும் தவறுமாக யோசித்தது.

‘அவளுக்கென்ன இவன் மீது இவ்வளவு கரிசனம்? இரண்டு பேருக்கும் அப்படியென்ன தொடர்பு இருக்கும்?’ என்றக் கேள்வியும் கூடவே நிறைய அருவருப்பான பதில்களும் அந்த மனிதனின் வக்கிரமான மூளைக்குள் உதித்தது.

ஆனால் இந்த எண்ணங்களை எல்லாம் பற்றித் துளியும் யோசித்திராத மது தன் நண்பனின் நிலைமையைக் குறித்து அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தாள்.

அவள் பயத்தைத் தாண்டி இப்போது சந்தேகம் உதிக்க, “சரோ” என்று சில முறைகள் அழைத்துவிட்டு,

“யார் காலை அட்டென்ட் பண்ணது?” என்றுக் கேட்டாள்.

‘எப்படி அவள் கண்டு கொண்டாள்?’ என்று சாரங்கபாணி யோசிக்க,

“ஹெலோ யாரு?” என்று மீண்டும் கேட்டாள் மது.

சாரங்கபாணி அப்போது சத்தமாக சிரிக்க, மது குழப்பி போனாள்.

“பரவாயில்லையே நீ புத்திசாலிதான்… ஆனா எப்படி அந்த மளிகை கடைக்காரன் இல்லன்னு கண்டுபுடிச்ச” என்றவர் எகத்தாளமாக கேட்க,

“நீங்க யார் பேசறது… சரோ எங்க?” என்று கண்டிப்பான குரலில் கேட்டாள் மது.

“நான் யாருன்னு உனக்கு தெரியல?” என்று கேட்ட நொடி அவள் குழம்பிய நிலையில், “யாருன்னு சொன்னாதானே தெரியும்” என்று வினவினாள்.

“நீ புத்திசாலியாச்சே… சொல்லாமலே கண்டுபிடி” என்று சாரங்கபாணி ஒரு கேலி சிரிப்போடு உரைக்க,

“நீ யாரா வேணா இருந்துட்டு போ… அதைப் பத்தி எனக்கு கவலை இல்ல… சரோ எங்க? அதை முதல சொல்லு” என்றாள் திட்டவட்டமாக!

“ஆமா… சரோ சரோன்னு செல்லமா கூப்பிடுற.. அப்படி என்னடி கனெக்ஷன் உனக்கும் அவனுக்கும்?”

அந்த கேள்வியில் மிகுந்த எரிச்சல் அடைந்தவள்,

“சீ வாயை கழுவு… அவன் என் ஃப்ரெண்டு” என்றாள் அதட்டலோடு!

“ஃப்ரெண்டா?” என்று ஏளன தொனியில் சொல்லி சிரித்தவர், “இப்பதான் ஒரு எட்டு ஒன்பது மாசம் முன்னாடி உனக்கு கல்யாணம் ஆச்சு இல்ல… அதுகுள்ள என்னடி உனக்கு வயிறு இவ்வளவு பெருசா இருக்கு?” என்று கேட்டு வைக்க அவளின் கோபம் கட்டுங்கடங்காமல் போனது.

“யாருடா நீ… உன்கிட்ட பேச கூட எனக்கு அசிங்கமா இருக்கு” என்றவள் மேலும் அடங்கா சீற்றத்தோடு, “சரோ எங்கன்னு மட்டும் இப்போ நீ சொல்லல… நீ இருக்கிற இடம் தேடி வந்து உன்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவேன்… பார்த்துக்கோ” என்றவள் எச்சரிக்கை விடுத்தாள்.

“என்னை நீ… உண்டு இல்லன்னு பண்ணிடுவியா? ஹா ஹா” என்றவர் எக்காளமாக சிரித்து,

 “அவன் எங்கன்னு உனக்கு இப்போ தெரிஞ்சிக்கணும்… அப்படிதானே?” என்றுக் கேட்டார்.

 “ஆமா தெரிஞ்சிக்கணும்” என்று மது பரபரப்போடு சொல்லவும்,

“அந்த மளிகை கடைக்காரனை நார்நாரா உரிச்சு அவன் கடையில பொட்டலம் கட்டுற மாதிரி அவனையே பொட்டலம் கட்டி அனுப்பிட்டேன்… பிழைப்பானாங்கிறதே சந்தேகம்தான்” என்று சொன்ன மறுநொடி பேச்சு மூச்சின்றி அதிர்ச்சியில் உறைந்து போனாள் மது.

“என்ன சத்தத்தையே காணோம்… ஏன் அடிச்சன்னு கேட்க மாட்டியா?” என்று சாரங்கபாணி கேட்க அவள் உள்ளம் துடித்தது. பேச முடியாமல் வேதனையில் தொண்டை அடைத்தது.

“நீ கேட்கலனாலும் நான் சொல்லுவேன்” என்ற சாரங்கபாணி நிறுத்தி நிதானமாக, “போலிஸ்காரன் மேல கையை வைச்சா என்ன ஆகும்னு அவனுக்கு காட்ட வேண்டாம்” என்றார் அழுத்தமாக!

மதுவிற்கு அதிர்ச்சி தங்கவில்லை. சரவணன் அடித்தானா? அதுவும் ஒரு போலிஸ்காரனை?!! நம்ப முடியாமல்,

“இல்ல அப்படியெல்லாம் இருக்காது…. சரோ அப்படியெல்லாம் பண்ண மாட்டான்” என்றாள்.

“அவ்வளவு நல்லவனா உன் ஃப்ரெண்டு?” என்று சாரங்கபாணி கிண்டல் தொனியில் கேட்க அவளுக்கு பேச முடியாமல் அழுகைதான் வந்தது.

“இதுக்கெல்லாம் நீ கண்டிப்பா பதில் சொல்லணும்” என்றவள் கடுங்கோபத்தோடு கண்ணீர் பெருக சொல்ல,

“சொல்லிட்டா போச்சு… நீ நேர்ல வா… உனக்கு தனியா ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் வைச்சிருக்கேன்” என்று சொன்ன சாரங்கபாணி இணைப்பைத் துண்டித்துவிட மது அதிர்ந்து போனாள்.

‘ஐயோ! இப்போ சரோக்கு என்னாச்சுன்னு தெரியலயே’ என்றவள் உள்ளமும் உடலும் நடுங்க, படபடப்பில் தலையெல்லாம் சுழன்றது அவளுக்கு. மயக்கம் வரும் போல தடுமாறியவள் அருகே இருந்த ஜன்னல் கம்பிகளைத் திடமாகப் பற்றிக் கொண்டாள்.

Quote

Super ma

You cannot copy content