You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow kanavugal - 17

Quote

17

சரவணன் ஊருக்கு சென்று சேர்ந்ததும், மகனை தனியே அழைத்து சென்ற துர்கா தன் மதனி சொன்ன அனைத்தையும் விவரமாக எடுத்துரைத்தார். அவற்றையெல்லாம் பொறுமையாகக் கேட்டு முடித்தவன் தனக்கு இதில் உடன்பாடில்லை என்று இந்துமதியின் பெற்றோர்களிடமே சென்றுத் தெரிவித்துவிட்டான்.

மதியை அவன் சிறுவயதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான். அவள் அவனுக்கு முறை பெண்ணாகவே இருந்தாலும் அவள் மீது எவ்விதமான ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் அவன் உருவாக்கி கொண்டதேயில்லை. ஏன்? அப்படி அவளைப் பார்த்தது கூட இல்லை.

மதி அவள் தந்தைக்கு சிறுநீரகம் தந்த போது மருத்துவமனையில் அவன்தான் உடன் தங்கியிருந்து பல உதவிகளைச் செய்தான். இருப்பினும் இந்துமதியின் மீது மனதளவில் அப்படியான யோசனைகள் கூட எழும்பியதில்லை.

இந்துமதியின் இறுக்கமும் சரவணனின் மௌனமும்தான் அவர்கள் இருவரையும் தள்ளி நிறுத்தியிருந்தது. ஆனால் விதி அவர்களை இணைக்க நினைத்ததே!

அதன் விளைவாகத்தான் செல்வி ராசப்பன் மனதில் இந்த எண்ணம் உதித்ததும் அதனை துர்கா தன் மகனிடம் தெரிவித்து சம்மதம் கேட்டதும்.

ஆனால் சரவணன் மறுயோசனையே இல்லாமல் முடியாதென்று மறுத்துவிட்டான். துர்காவால் நம்ப முடியவில்லை.

எப்போதும் சரவணன் யார் மனமும் வருந்தும்படி எந்தக் காரியத்தையும் செய்யமாட்டான். அவன் இப்படி கேட்டதுமே யோசிக்காமல் இந்துவை நிராகரித்து விடுவான் என்று எதிர்பார்க்கவில்லை.

ராசப்பன் செல்வியின் எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில் முடிந்தது. அந்தக் கோபத்தை செல்வி இந்துவின் மீதுதான் கொட்டித்தீர்த்தார்.

“அந்த சரவணனே உன்னைக் கட்டிக்கமாட்டேன்னு சொல்லிட்டான்” என்று சொல்ல, அப்போதுதான் அவளுக்கு தன்னை திருமணம் செய்து கொள்ள சரவணனிடம் சம்மதம் கேட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்தது.

தன் தந்தை விஷயத்தில் உதவியதால் அவன் மீது மதிப்பு உண்டே ஒழிய அவனுக்கு கணவன் என்ற ஸ்தானத்தைத் தருவதையெல்லாம் இந்துமதியால் ஒருநாளும் யோசித்துக் கூடப் பார்க்க முடியாது.

அவளுக்கு என்னதான் தன் நிலைமை தெரிந்திருந்தாலும் அதற்கு ஈடாக சரவணனை ஏற்பதெல்லாம் அவளால் முடியாத விஷயம்.

அவளிடம் சம்மதம் கேட்டிருந்தால் அவளே அவனை நிராகரித்திருப்பாள். ஆனால் அவள் செய்த ஒரு தவறால் அவள் சொந்த வாழ்க்கையில் கூட முடிவெடுக்க முடியாத அவலநிலை அவளுக்கு. 

நியாயமாக அவனே முடியாது என்று சொல்லிவிட்டான் என்று அவள் சந்தோஷம்தான் பட வேண்டும். ஆனால் அவளுக்கு கோபமாக வந்தது.

அவன் வேண்டாம் என்று சொன்னதற்காக அல்ல. போயும் போயும் அவனே தன்னை வேண்டாம் என்று சொன்னதற்காக.

இதுவரைக்கும் தான் அனுபவித்த அவமானங்களில் இதுதான் உச்சபட்சம் என்றவள் மனம் வருந்தியதை என்னவென்று சொல்ல!

உண்மையில் சரவணன் மனதில் என்ன இருந்தது என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் துர்கா தனியாக அழைத்து தன் மகனிடம் கேட்டார்.

இந்து செய்த தவறுதான் அவன் அவளை நிராகரிக்க காரணமா என்று அவர் கேட்க, அப்போது அவன் வெளிபடுத்திய காரணம் அவரை வியப்பில் ஆழ்த்தியது.

இந்துமதிக்கு தான் தகுதியானவன் இல்லை. அவள் என்னைவிட நன்றாகப் படித்திருக்கிறாள். அழகாக இருக்கிறாள். அவளுக்கு நல்ல படித்த நல்ல வேலையில் இருக்கும் மாப்பிளையாகப் பார்க்க சொல்லுங்கள்’ என்றவன் தன் எண்ணத்தைத் தெரிவித்தான்.

துர்காவின் மனம் நெகிழ்ந்து போனது. தன் மகனின் பெருந்தன்மையான குணத்தை எண்ணி கண்ணீர் பெருகியது. தான் எந்த ஜென்மத்திலோ செய்த புண்ணியம்தான் இப்படி ஒருவனை மகனாகப் பெற்றிருக்கிறோம் என்றவர் மனதளவில் பூரித்துப் போனார்.

அதேநேரம் மகனின் முடிவை அவர் ஏற்று கொள்ள தயாராக இல்லை. இந்துமதி செய்த தவறுகள் மற்ற ஏனைய சில விஷயங்களைத் தாண்டி தன் மகனுக்கு இருக்கும் குறை அவரை அழுத்தியது.

இந்துவை சரவணனுக்குக் கட்டி வைக்க அதுவாக அமைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பைத் தவறவிட அவர் தயாராக இல்லை. அவர் மகனிடம் எப்படியாவது பேசி அவனை சம்மதிக்க தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்து பார்த்தார்.

ஆனால் சரவணன் அசைந்து கொடுக்கவே இல்லை. தன் முடிவில் தெளிவாக இருந்தான். இந்துமதிக்குப் பொருத்தமானவன் தானில்லை என்ற அழுத்தாமான எண்ணம் அவன் மனதில் பதிவாகியிருந்தது.

அன்றே தன் அம்மாவிடம் சென்னைக்குப் புறப்பட ஆயத்தமாக சொன்னான். மகனைத் திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க முடியாத அதிருப்தியோடு அவர் தயாராகிக் கொண்டிருக்க, அவனும் கொல்லை புற வாசலுக்கு வந்து குளியலறையில் கை கால்களெல்லாம் அலம்பி அங்கிருந்த துண்டில் முகத்தைத் துடைத்துக் கொண்டிருந்தபோது இந்துமதியின் விசும்பல் சத்தம் கேட்டது.

அவன் எட்டிப் பார்த்தபோது அவள் மரத்தில் சாய்ந்துக் கொண்டு எதையோ தீவிரமாக எழுதிக்கொண்டிருந்தாள். கூடவே அவள் கண்களில் கண்ணீர் பிரவாகமாக வழிந்தோடிக் கொண்டிருந்தது.

ஊரில் நடந்த பிரச்சனைகளுக்கு பிறகு பேசாமல் சிரிக்காமல் முகத்தைத் தூக்கி வைத்து கொண்டிருக்கும் இந்துமதியைதான் அவனுக்கு தெரியும்.

எந்த உணர்வுகளையும் காட்டிக்கொள்ளாத அவளின் அந்த இறுக்கத்தில் தெரிந்த முதிர்ச்சிக்கு நேர்மாறாக இப்படி குழந்தை போல தேம்பி தேம்பி அழும் இந்துமதி அவனுக்கு ரொம்பவும் புதிது.

அவளை இந்தளவு அழ வைத்தது எது என்ற கேள்விதான் அவனை அங்கிருந்து நகரவிடாமல் செய்தது. சற்றுமுன்பாக அவளை நிராகரித்தது மனதைப் போட்டுப் பிசைந்தது, ஒருவேளை அதுதான் காரணமா என்றவன் மனம் திண்டாடியது.

யாரையும் மனதளவில் கூட புண்படுத்திவிடக் கூடாது என்று யோசிக்கும் அவனால் அவள் அழுகையை சாதாரணமாக ஒதுக்கித் தள்ளிவிட்டு போக முடியவில்லை. அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டுமென்று அவன் நினைத்திருக்க அப்போது, “இந்து” என்று உள்ளே இருந்து மகளை அழைத்தார் செல்வி.

பரபரப்பாக தன் கண்ணீரை தாவாணியில் துடைத்து கொண்டவள் அந்த நோட்டு புத்தகத்தை அவசரமாக அருகே இருந்த கொட்டகைக்குள் உரமூட்டைகளுக்கு இடையில் சொருகிவிட்டு ஓடிவிட்டாள்.

அவள் என்ன எழுதுகிறாள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அவள் ஏன் அழுதாள் என்று தெரிந்து கொள்ளும் எண்ணமே அவனுக்கு அதிகமாக இருந்தது.

அதனால் ஆபத்திற்கு பாவமில்லை என்று அந்த நோட்டு புத்தகத்தை அவன் கையிலெடுக்க பேனாவோடு அவள் மூடி வைத்த பக்கம்தான் அவன் கண்ணில் முதலில் பட்டது.

‘எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் தப்பு தப்பாவே நடக்குது.

மாமாகிட்ட என்னைக்கட்டிக்க சொல்லிக் கேட்டிருக்காங்க. அவர் முடியாதுன்னு சொன்னதுக்கு நான் என்ன பண்ணுவேன். அதுக்கும் என்னையே திட்டுறாங்க.

நான் ஒரு பெரிய தப்பு செஞ்சுட்டேன்தான்… ஆனா அதுக்காக நான் இப்போ உண்மையிலேயே வருத்தப்படுறேன்… அப்பக்கூட என்னைக் குற்றவாளி மாதிரியா பார்த்த நான் என்னதான் செய்ய.

செத்து போயிடலாம் போல இருக்கு. நான் அன்னைக்கே செத்து போயிருந்தா இந்த மாதிரி எல்லாம் நான் அசிங்கப்பட வேண்டியதில்லை. இப்ப மட்டும் என்னபேசாம நான் செத்து போயிட்டா இந்த பிரச்சனையெல்லாம் முடிஞ்சிரும் இல்ல. அதான் சரி. இனிமே இவங்க யாருக்கும் பாரமா இருக்க கூடாது. நாம செத்துடனும். எப்படியாச்சும் ஏதாச்சும் பண்ணி….

பாதியிலேயே அந்த வரிகள் முடிக்கப்படாமல் நின்று போயிருந்தன. அவள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவன் இதயத்தில் ஈட்டியாக பாய்ந்து குத்தி கிழித்தது போன்றிருந்தது. விழிகளில் நீர் கோர்த்து நிற்க அந்த புத்தகத்தின் வேறு சில பக்கங்களைப் படித்து பார்த்தவனுக்கு கண்ணீர் கரை புரண்டது,

அவள் நிலைமை அவனுக்கு தெரியாதது அல்ல. ஆனால் அதை வெளியில் நின்று வேற்று மனதினாகப் பார்ப்பது வேறு. ஆனால் அதை அவளுக்குள்ளாகவே சென்று உணர வைத்தது அந்தப் புத்தகம்.

அந்த மூன்று வருடமாக ஒரு ஊமை போல அவள் தனக்குள்ளாகவே வடித்த கண்ணீரின் தடயங்கள் அதில் நிரம்பியிருந்தன. அவள் எழுதி வைத்திருந்த நிறைய வரிகள் அவள் கண்ணீரில் நனைந்து அழிந்து போயிருந்தன. 

 வலி மிகுந்த அந்த ஒவ்வொரு வரிகளும் அவனை சொல்லவொண்ணா துயரத்தில் ஆழ்த்தியது. அந்தப் புத்தகத்தை மீண்டும் அதே இடத்தில் திருப்பி வைத்தவன் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பின்கட்டில் அப்படியே அமர்ந்துக் கொண்டான்.

யாரிடமும் சொல்லாமல் தன் மனபாரங்களையும் வேதனைகளையும் கனவுகளையும் தனக்குள்ளாகவே அழுத்தி கொண்ட அவள் நிலைமையில் தன்னை நிறுத்தி பார்த்தான். உண்மையில் அவள் வலியை தன்னைவிட வேறு யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்ற எண்ணம் உதித்த மறுகணம் அவன் அவளுக்காக அவளிடத்திலிருந்து யோசிக்க ஆரம்பித்தான்.

ஒரு பெண்ணின் அழகு, அறிவு, குணம் என்று எதன் மீது வேண்டுமானாலும் காதல் உதிக்கலாம். ஆனால் அவனுக்கோ அவள் வலிகளின்மீதும் கண்ணீரின்மீதும் காதல் பிறந்தது.

பரிதாபம் என்ற உணர்வின் பால் அந்த உணர்வு எழுந்திருந்தாலும் அது அதோடு நிற்காமல் அவளைத் தன் வாழ்க்கையோடு இணைத்துக் கொண்டு அவள் விரும்பியதை எல்லாம் செய்ய வேண்டுமென்ற வேட்கை உண்டானது.

ஒருவகையில் அவள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தி அவள் விரும்பியதெல்லாம் செய்து அவளை சந்தோஷமாக வைத்து கொள்வதன் மூலமாக இதுநாள் வரை தான் இழந்த சந்தோஷங்களையெல்லாம் மீட்டுவிட முடியும் என்று விசித்திரமான எண்ணம் தோன்றியது.

சிறகு விரித்து வானில் பறக்கும் பறவைகளைக் கூண்டிலடைத்து அற்பமாக சந்தோஷப்படும் சில மனித மனங்களுக்கு இடையில் கூட்டிலிருக்கும் அந்த பறவைக்கு சுதந்திரத்தை வழங்கிப் பார்க்க ஆசைக் கொண்டது அவனின் மனம்.

அதற்காகவே அவளை அவன் உரிமையாக்கிக் கொண்டான். திருமணத்திற்கு சம்மதம் சொன்னான். ஆனால் இந்துமதிக்கு மீண்டும் சரவணன் திருமணத்திற்கு சம்மதம் சொன்னதை நம்பவும் முடியவில்லை.நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

முதலில் முடியாது என்று சொன்னவன் பின் தன் அம்மா அப்பாவின் வற்புறுத்தலுக்கு சம்மதம் சொல்லியிருப்பானோ என்ற கேள்வி எழுந்தது.

அவளுக்கு விருப்பமே இல்லை என்ற போதும் அந்த திருமணத்தை அவளால் நிறுத்த முடியவில்லை. அவள் விருப்பத்திற்கு அங்கே எவ்வித மதிப்புமில்லை.

பேசாமல் உயிரை துறந்துவிடலாம் என்றவள் யோசித்தாலும் அதற்கும் அவளுக்கு வழி தெரியவில்லை. உண்மையில் மரணத்தை எதிர்கொள்ள அவளுக்கு பயமில்லை. அதற்காக முயற்சிக்கத்தான் அவளுக்கு பயமாக இருந்தது.

தூக்குப் போட்டு கொள்ளவும் அல்லது மாடியிலிருந்து குதிக்கவும் கூட கொஞ்சம் தைரியம் வேண்டுமில்லையா? அது அவளுக்கில்லை. நாடகங்களிலும் படங்களிலும் காட்டுவது போல விஷம் என்ற ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டில்கள் எல்லாம் எங்கேயும் விற்கப்படுவதில்லை.

அதேநேரம் ஆபத்துக்குரிய சில மருந்து மாத்திரைகளை கேட்ட உடனே மருந்து கடைகளில் சாதாரணமாக தூக்கிக் கொடுத்துவிடுவதுமில்லை. இதெல்லாம் தாண்டி செவிலியருக்கு படித்த அவளுக்கு உயிரின் மதிப்பும் இந்த உடலின் மதிப்பும் தெரியும்? அதானாலேயே இத்தனை பிரச்சனைகளிலும் அவளால் தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடியவில்லை

இறுதியில் அவளுக்கு சரவணனுடனான திருமணம் முடிந்தது. மரணத்திற்கும் அந்தத் திருமணத்திற்கும் பெரிய வேறுபாடுகள் அவளுக்குத் தெரியவில்லை. தன் வாழ்க்கைக்கு அதோடு முற்றும் போட்டாகிவிட்டது என்று அவநம்பிக்கை நிலையை எய்தியிருந்தாள்.

சரவணனுடன் சேர்ந்து திருமண மேடையில் செய்த எந்தவொரு சடங்கிலும் அவள் விழிகள் அவனை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை.

பேச முடியாமல் போனவனுக்கு பார்வைகள் பேசுவதுதான் மொழி! ஆனால் அந்த விழிகளிரண்டும் அவனைப் பார்க்க கூட விழையவில்லை.

அவள் விரும்பியும் விரும்பாமலும் அந்த திருமண சடங்குகள் ஒருவாறு முடிந்திருந்தது. அந்த ஊர் மக்களின் நிறைய வதந்தி பேச்சுகளோடு!

‘இவளைப் போய் எவன் டா அவன் கல்யாணம் பண்ணிக்கிறான்’ என்று இந்துவைத் தரைக்குறைவாகப் பேசியது ஒரு புறமென்றால், ‘இவளுக்கு இவன்தான் அமைவான்’ என்று சரவணனையும் சேர்த்து தரைக்குறைவாகப் பேசினர்.

திருமணம் முடிந்த கையோடு இந்த மாதிரி பேச்சுக்களும் ஓய்ந்து போயின.

இந்த ஊர் மக்கள் மற்றும் தன் பெற்றோர்களின் வசவுகள் எல்லாமே இந்துமதிக்கு இந்த மூன்றாண்டுகளில் ஓரளவு பழகிபோயிருந்தது. இப்போது புதிதாக ஓரிடத்திற்கு போக போகிறோம் என்பதுதான் வயற்றில் புளியைக் கரைத்தது.

‘தெரியாத பூதத்திற்குத் தெரிந்த பேயே பரவாயில்லை’ என்ற எண்ணம்தான் அவளுக்கு. அந்த மனகலக்கத்தோடு தன் துணிமணிகளை எடுத்துப்பெட்டிக்குள் திணித்துக் கொண்டிருந்தாள்.

உள்ளே வந்த செல்வி அவளுக்கு துணையாக எல்லாவற்றையும் எடுத்து கொடுத்து கொண்டே, “போற இடத்திலையாச்சும்… ஒழுக்கமா இருந்து பிழைச்சுக்க பாரு… உன்னால இந்த ஊர்ல நாங்க போதும் போதுங்கிற அளவுக்கு அவமானம் பட்டுட்டோம்… இதுக்கு மேல எங்களால முடியாது

கல்யாணம் பண்ணிட்டு போற இடத்திலயும் எங்களுக்கு அந்த மாதிரி அவமானத்தைத் தேடித் தந்திராத இந்து” என்று மகளிடம் அழுத்தி சொன்னவர்,

“அப்பா உயிரை நீ காப்பாத்தியிருக்க… அந்த நன்றி எனக்கு எப்பவும் உண்டு… அதுக்காகதான் உனக்கு இந்த வாழ்க்கையை அமைச்சுக் கொடுத்திருக்கேன்… அதை இனி காப்பாத்திக்க வேண்டியது உன் பொறுப்புதான்” என்றார்.

இந்து மௌனமாக அவர் சொன்னதைக் கேட்டிருக்க மகளின் பெட்டியை மூடி அவள் கையில் தந்தவர்,

“சரவணன் ரொம்ப நல்லவன்… இந்த நிமிஷத்தல இருந்து அவன்தான் உனக்கு எல்லாம் அம்மா அப்பா ஆட்டுக் குட்டின்னு நீ இனிமே இந்த ஊருப்பக்கமும் இந்த வீட்டு பக்கமும் காலடி எடுத்து வைக்க கூடாது சொல்லிட்டேன்…” என்று சொன்ன நொடி அதிர்ந்துப் பார்த்தாள்!

அவள் விழிகளில் கண்ணீர் வழிந்தோடியது,

“நான் சொன்னது உனக்கு புரிஞ்சுது இல்ல… கிளம்பு” என்றார்.

“அப்போ இனிமே நான் உங்களை எல்லாம் பார்க்கவே வர கூடாதா?” என்று அவள் தன் தாயை வாஞ்சையாகப் பார்த்து கேட்கவும்,

“வர கூடாது… உனக்கு சீமந்தம் சீர்வரிசை எதுன்னாலும் நானும் உங்க அப்பாவும் அங்க வந்து அழறோம்” என்றப் போது அவள் கண்ணீர் மடை திறந்த வெள்ளமாக மாறியது.

விசும்பிக் கொண்டே திரும்பி நடந்த மகளிடம், “இந்து” என்று அழைத்தவர், “அப்படியே நீ இங்க வரணும்னு ஆசைப்பட்டன்னா உன் புருஷனோட எந்த சண்டை சச்சரவு இல்லாம நல்லபடியா வாழ்ந்து குழந்தை குட்டியோட வா” என்ற போது அவள் கண்ணீர் படாரென்று நின்று போனது.

கடுகடுத்த முகத்தோடு, ‘அதுக்கு நான் வராமலே இருப்பேன்’ வாயிற்குள் முனகியவள் தன் பெட்டியைக் கையில் பிடித்தபடி விறுவிறுவென வெளியேறிவிட்டாள்.

Quote

Super ma 

You cannot copy content