You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow Kanavugal - 20

Quote

20

நாணம் பூசிய பெண்மை போல மழை மேகத்திற்குள் மறைந்தபடி தயங்கி தயங்கி மெல்ல தம் முகம் காட்டினாள் சூரியமகள்.

விடிந்த போதும் பூமி ஓர் ஆத்மார்த்த அமைதியை சுமந்திருந்தது. கூடவே மெல்லிசையின் சாரல் போல மிதமான அமைதியில் இதமாக ஒலித்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக மரக்கிளைகளிலும் இலைகளிலும் வடிந்த தூறல்களின் சத்தங்கள்!

கவிதையாக விடிந்த அந்தக் காலைப்பொழுதை மதுவின் மனம் கொஞ்சமும் ரசிக்கவில்லை. அந்த மழைக்காலத்தின் சிறு சிறு சத்தங்கள்கூட அவளுக்கு அபஸ்வரமாகவே ஒலித்தது.

இரவு தாமு சரவணனைப் பார்த்துவிட்டு வீடியோ காலில் அழைத்திருந்தார். அவர் வேண்டாமென்று சொல்லியும் இவள்தான் கட்டாயப்படுத்தி அவரை வீடியோ கால் போட சொல்லியிருந்தாள்.

ஆனால் சரவணன் அடிப்பட்ட கோலத்தைப் பார்த்த பின் ஏன் பார்த்தோம் என்றாகிவிட்டது. மோசமாக அடிவாங்கி முகமெல்லாம் வீங்கிய நிலையில் அவனைப் பார்த்த கணம் அவள் உள்ளம் துடித்துப் போனாள்.

அவனுக்குப் போய் இப்படியொரு நிலைமையா? அவளால் தாங்கவே முடியவில்லை. கண்ணீர் கரை புரண்டது. “சாரி டா சரோ… உன்னை நான் ஸ்டேஷன்ல தனியா விட்டுட்டு வந்திருக்கக் கூடாது... எல்லாம் என் தப்புதான்” என்று நண்பனிடம் மன்னிப்பு கோரிய அதேநேரம்,

“உன்னை இப்படி அடிச்சுக் காயப்படுத்தினவனை நான் என்ன பண்றேன்னு மட்டும் பாரு” என்றுக் கடுங்கோபத்தோடுப் பொங்கவும் செய்தாள்.

ஆனால் சரவணன் விழிகள் எந்த உணர்ச்சிகளையும் காட்டிக் கொள்ளவில்லை. அவனுடைய அப்போதைய தேவை, கவலை, வேண்டுதல், விருப்பம் எல்லாமே இந்துவை வெளியே கொண்டு வருவது மட்டும்தான்.

அந்த நொடி அவன் வலி கூட அவனுக்கு இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது.

அவன் நிலைமை புரிந்து மனமிறங்கியவள், தன் நண்பனுக்கு அவன் மனைவியை வெளியே கொண்டு வருவதாக வாக்குக் கொடுத்தாள்.

அப்போதைக்கு எப்படி என்ன செய்ய போகிறோம் என்பதெல்லாம் அவள் யோசிக்கவில்லை. தன் நண்பனுக்காக தான் இதை செய்தேயாக வேண்டுமேன்ற எண்ணம் மட்டுமே!

ஆனால் இந்துமதி இந்த கொலையை செய்யவில்லை என்று அவளால் உறுதியாக நம்பவும் முடியவில்லை. கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது.

இந்த யோசனையோடு காபியைப் பருகி முடித்து கப்பை எடுத்து வந்து சமையலறையில் வைத்தவள்… தன் அம்மாவிடம், “நந்து நான் கோர்டுக்குக் கிளம்பனும்… சீக்கிரம் டிபன் ரெடி பண்ணிடுறியா?” என்றுக் கேட்க,

அவளை ஆழந்துப் பார்த்த நந்தினி, “நீ தனியாவா போக போற?” என்றுக் கேட்க,

“இல்ல… உன் மாப்பிளை வராரு… என்னைக் கூட்டிட்டுப் போக” என்றாள்.

“என்னடி சொல்ற? அஜய் வந்து உன்னைக் கூட்டிட்டு போவாரா?” நந்தினி அதிர்ச்சியாக வினவும்,

“கூட்டிட்டுப் போக வைக்கிறேன்” என்றுத் திடமாகச் சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைந்துவிட்டாள். அவள் குளித்து முடித்து புடவைக் கட்டித் தயாராகிக் கொண்டிருந்த போது அஜய் வீட்டிற்குள் நுழைந்தான். அவனைப் பார்த்த நொடி நந்தினிக்கு திகிலாக இருந்தது. ஏதேனும் பிரச்சனை நடக்குமோ என்று!

என்னதான் மகளுக்கு தைரியம் சொல்லிவிட்டாலும் ஒரு தாயாக அவர் மனம் தவிக்கத்தான் செய்தது. மகளின் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்றெண்ணியபடி!

அதேநேரம் அஜய் வந்ததும் அவனுக்கான உபசரிப்புகளைச் செய்து கொண்டிருக்கும் போதே மது தன் அறையைவிட்டு வெளியே வந்திருந்தாள்.

“வந்துட்டியா அஜய்?” என்றுக் கேட்டுக் கொண்டே அவள் அவனருகில் வந்து சோபாவில் அமர்ந்து, “சாப்பிட்டியாடா” என்றுக் கேட்டாள்.

“சாப்பிட்டேன்… நீ” என்றுக் கேட்கும் போதே, “இனிமேதான்” என்று மது நந்தினியைப் பார்க்க,

“ரெடியாயிடுச்சு எடுத்துட்டு வரேன்… மாப்பிளை நீங்களும்” என்றவர் வினவும் போதே,

“எனக்குக் காபி மட்டும் போதும் மாமி” என்றான் அவன்.

நந்தினி உள்ளே சென்று காலை உணவைத் தட்டில் எடுத்து வந்தார். அதோடு அவனுக்கு கப்பில் காபியையும் கொண்டு வந்து வைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டார்.

அஜயின் பார்வை தன் மனைவியின் மீதே இருந்தது. பெரும்பாலும் அவள் மார்டன் டிரஸ் அணிவதுதான் வழக்கம். கர்ப்பமான பிறகு அதிகபட்சம் சுடிதார். ஆனால் இன்று அவள் உடுத்தியிருந்த காட்டன் புடவை அவன் விழிகளை உறுத்த, “என்னடி? புதுசா புடவையெல்லாம் கட்டி இருக்க... நானே கட்ட சொன்னாலும் எனக்கு கம்படர்பிளா இருக்காதுன்னு சொல்லுவ” என்று காபியைப் பருகியபடி வினவினான்.

“ஏன் எதுக்குன்னு எல்லாம் அப்புறம் சொல்றேன்… பார்க்க எப்படி இருக்கேன்?”

“என் மதுக்குட்டி எந்த டிரஸ் போட்டாலும் அழகுதான்” என்றவன் பூரிப்பாகச் சொல்ல, “அதானே… நீ வேற என்ன சொல்லுவ” என்றபடி உணவை முடித்து எழுந்து கை அலம்பிவிட்டு வந்தவள்,

“ம்ம்ம்… வா அஜய் கிளம்பலாம்…அம்மா போயிட்டு வரேன்” என்று நந்தினியிடம் உரைத்தாள்.

அஜய் புருவங்கள் சுருக்கி, “எங்கடி போறோம்?” என்று வினவ,

“போற வழில சொல்றேன்… நீ போய் காரை எடு” என்று அவனை முன்னே அனுப்பிவிட்டு அவள் தன் கருப்பு கோட்டையும் சிலக் கோப்புகளையும் கையில் எடுத்துக்கொண்டாள்.

“பார்த்துப் பத்திரமா போயிட்டு வா… எதை செய்றதா இருந்தாலும் ஒன்னுக்கு நாலு தடவை யோசிச்சு பண்ணு” என்று அக்கறையாக சொன்ன தன் தாயிடம் திடமாகப் புன்னகைத்து,

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் நந்து… நீ ஒன்னும் கவலைபடாதே” என்றுச் சொல்லி அவரை அணைத்துக் கொண்டாள்.

அஜய் வெளியே காரை இயக்கிவிட்டு காத்திருந்தவன் அவள் வந்து கதவைத் திறந்து உள்ளே அமரவும், “போலாமா மது?” என்றுக் கேட்ட போது அவள் கரத்திலிருந்த கருப்பு கோட்டைப் பார்த்த நொடி, “எங்க மது போறோம்? கோர்ட்டுக்கா?” என்று அழுத்தமான பார்வையோடு வினவினான்.

“ம்ம்ம் ஆமா… நீ வண்டியை எடு… டைம் ஆகுது” என்றுச் சொல்லி கொண்டே தன் கைக்கடிகாரத்தைப் பார்க்க,

“இப்ப எதுக்கு நீ கோர்ட்டுக்குப் போகணும்? அதுவும் இந்த மாதிரி நிலைமையில” என்றுக் கண்டிப்போடு கேட்க,

“எந்த மாதிரி நிலைமை?” என்றவள் புரியாதது போல் கேட்டு, “நான் நல்லாத்தான் இருக்கேன்… கூட நீ வேற வர போற… அப்புறம் எனக்கு என்ன பிரச்சனை வர போகுது” என்றவளை அதிர்ச்சியாகப் பார்த்து, “நான் உன் கூட வர போறேன்னு எப்போ சொன்னேன்?” என்றுக் கேட்டான்.

“அப்போ நீ என்னைக் கூட்டிட்டுப் போகமாட்டியா அஜய்?” என்றவள் சாதுவாக கேட்கவும், அவனால் ஒன்றும் பேச முடியவில்லை.

 அவன் அதேநேரம் காரை இயக்காமல் அழுத்தமாக அமர்ந்திருக்க, “என்ன அஜய் யோசிக்குற… டைம் ஆகுது… காரை எடு” என்றாள்.

“எதுக்கு இப்போ உனக்கு கோர்ட்டுக்குப் போகணும்?” என்று வினவிக் கொண்டே அவன் காரை இயக்கினான்.

“சொல்லுவேன்… ஆனா நீ கோபப்படக் கூடாது” என்றவள் இறங்கிய குரலில் சொல்ல, அவன் புருவங்கள் நெறிந்தன.

அவள் மெல்ல அவனிடம் காரணத்தை உரைத்தாள்.

“அது… வந்து… இந்துவை ஜாமீன்ல எடுக்க” என்றவள் சொன்னதுதான் தாமதம். பிரேக்கை அழுத்திக் காரை நிறுத்தியவன், “வாட் நான்சென்ஸ்? அவளை எதுக்கு நீ ஜாமீன்ல எடுக்கணும்… உனக்கென்ன பைத்தியமா?” என்றுக் காரமாகக் கேட்டான்.

“இதைக் காரை நிறுத்திட்டுதான் கேட்கணுமா? டிரைவ் பண்ணிட்டே கூடக் கேட்கலாம்ல… நடுரோட்ல நிறுத்தி வைச்சுருக்க… ட்ராபிக் ஜாம் ஆக போகுது… காரை எடு அஜய்” என்றவள் அழுத்தி சொல்ல அவன் மீண்டும் வேறு வழியில்லாமல் காரை இயக்கினான்.

அதேநேரம் அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவளை அவன் முறைத்து கொண்டிருக்க,

“டென்ஷனாகாம நான் சொல்றதை கேளு” என்று நிதானமாக ஆரம்பித்தவள், “அந்த இந்துமதி சுரேஷ் மார்டர்ல இன்வால்வ் ஆகியிருக்காளாங்கிறது எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்… ஆனா இப்போதைக்கு இந்துவை ஜாமீன்ல எடுத்தே ஆகணும்… ஏன்னா சரோ அடிப்பட்டு ஹாஸ்பெட்டில அடிமிட் ஆகியிருக்கான்” என்றாள்.

அத்தனை நேரம் அமைதியாக அவள் சொல்வதைக் கேட்டவன், “அதுக்கு… அவளை வேற யாரையாவது லாயரை வைச்சு ஜாமீன்ல எடுக்கட்டும்… அதை ஏன் நீ செய்யணும்? ஏன் நீதான் இந்த ஊர்ல ஒரே வக்கீலா?” என்றவன் எரிமலையாக வெடித்தான்.

“வேற யார் வேணா எடுத்திருக்கலாம்… ஆனா சரோ என்கிட்ட என்னை நம்பிக் கேட்டுட்டான்… என்னால அவன்கிட்ட முடியாதுன்னு சொல்ல முடியல”

“உன் ப்ரெண்டு என்ன லூசா? இந்த விஷயத்துல அவன் எப்படி உன்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்… அவன்தான் கேட்டானா உனக்கு எங்கடிப் போச்சு அறிவு… நீயும் கோட்டைத் தூக்கிட்டுக் கோர்ட்டுக்குக் கிளம்பிட்ட”

“நான் சொல்றேனேன்னு தப்பா எடுத்துக்காதே… உனக்கு அனன்யா வைசுத்தமா பிடிக்காது… ஆனா இன்னைக்கு ஒரு பிரச்சனைன்னதும் நீ அனன்யாக்காக நிற்குற இல்ல … அப்படிதான் எனக்கு சரோ… அவனுக்கு ஒரு பிரச்சனைன்னா என்னால சும்மா இருக்க முடியாது” என்றவள் தீவிரமாக சொல்ல, அஜய் முகம் இருளடர்ந்து போனது.

“அனன்யாவும் அந்த சரவணனும் ஒண்ணாடி”

“இல்ல… கண்டிப்பா இல்ல… சரோ எனக்கு அதுக்கும்மேல”

“ஒ! அப்போ அவன் எனக்கும் மேலன்னு சொல்ற?” என்றவன் அவளிடம் குதர்க்கமாகக் கேட்க,

 “இப்படியெல்லாம் நீ கேட்டானா என்கிட்ட பதில் இல்லை அஜய்” என்று அவள் வெடுக்கென சொல்லிவிட, அஜய் முகத்தில் அத்தனை எரிச்சல். காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டான்.

“அஜய் காரை எடு” என்றவள் டென்ஷனாக சொல்லவும்,

“முடியாது… நான் வண்டியைத் திருப்புறேன்… நம்ம வீட்டுக்குப் போறோம்” என்றான். அவனை முறைப்பாகப் பார்த்தவள்,

“சரி திருப்பு… ஆனா அப்புறம்… நான் சாப்பிடமாட்டேன்… மாத்திரை போடமாட்டேன்… முக்கியமா உன் கூட பேசவே மாட்டேன்” என்றாள்.

“மது” என்றவன் அவளை அதட்ட, அதன்பின் அவள் எதுவும் பேசவில்லை. அப்படியே கைக்கட்டி அமர்ந்துக் கொண்டாள். அவள் விழிகளில் நீர் வழிந்தது.

“எவனோ ஒருத்தனுக்காக நம்ம குழந்தையை நீ கஷ்டப்படுத்துவியா மது?” என்றவன் குரல் இறங்க, வலியோடு கேட்டான்.

“நான் என்ன பண்ணட்டும் அஜய்… நான் எதை செய்யணும்னு நினைச்சாலும் நீ அதுக்கு முட்டுக்கட்டைப் போடுற…

ஒரு வகையில எனக்கு எந்தப் பிரச்சனையும் வர கூடாதுன்னு நீ நினைக்கிற… அதனாலதான் என்னைக் கோர்ட்டுக்குக் கூட்டிட்டு போக உன்னை வர சொன்னேன்… இப்ப கூட உன்னை எதிர்த்துகிட்டு என்னால் போகமுடியும்… ஆனா நான் போக மாட்டேன்… உன்னை நான் அந்தளவு நேசிக்கிறேன்… உன் காதலை உன் வார்த்தையை நான் மதிக்கிறேன்… ஆனா நீ” என்று நிறுத்தி அவன் முகம் பார்த்தவள்,

“என் விருப்பத்துக்கு உணர்வுக்கும் நீ கொஞ்சமாச்சும் மதிப்பு கொடுக்குறியா?”  என்றவளிடம் அவன் அடுத்த வார்த்தைப் பேசவில்லை. அதன் பின் நேராக கார் நீதிமன்ற வாசலில் வந்து நின்றது.

இறங்கி வந்து அவள் அவன் முகம் பார்க்க அவன் அவளைப் பாராமல், “நான் வெய்ட் பண்றேன்… நீ முடிச்சிட்டு வா” என்றான். அவன் விழிகளோரம் நீர் கசிந்திருந்தது.

அவன் மௌனமாக அவள் முகம் பார்த்தான். அவளுக்கு குற்றவுணர்வாக இருந்தது.

 ‘ஐம் சாரி அஜய்… எனக்கு உன்கிட்ட இப்படியெல்லாம் பேச கொஞ்சம் கூட விருப்பமில்ல… ஆனா நான் எது கேட்டாலும் நீ நம்ம காதலை ஆயுதமாக எடுத்துக்கிட்டு என்னை மிரட்டுற… இந்த முறை உனக்கு முன்னாடி நான் அதே ஆயுதத்தைக் கையில எடுத்துக்கிட்டேன்’ என்றவள் அவனிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டிவிட்டு அவள் நீதமன்றம் நோக்கி விரைந்தாள்.

அவளுக்காக காத்திருந்த தன் தோழி ரேகாவிடம்,

“நான் சொன்ன மாதிரியே ஜாமீன் பேப்ரஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டியா?” என்றுக் கேட்டபடி உள்ளே சென்றவள் ஒரு மணிநேரத்தில் திரும்பியிருந்தாள்.

காரிலேயே காத்திருந்தவன் அவள் வந்து நிற்கவும் தான் முக்கியமாக பேசிக் கொண்டிருந்தக் கைப்பேசி இணைப்பைத் துண்டித்துவிட்டு, “போலாமா” என்றுக் கேட்டான்.

“ம்ம்ம்” என்று காரில் ஏறி அமர்ந்தவள், “சாரி ரொம்ப நேரம் வைட் பண்ண வைச்சுட்டேன்” என்று இறங்கிய குரலில் கூறவும், முறைப்பு மட்டுமே பதிலாக வந்தது அவனிடமிருந்து!

“இப்ப ஏன் முறைகுறீங்க?” என்றவள் குழைவாகக் கேட்க, “வீட்டுக்குப் போலாமா?” என்று அவன் குரல் கடினமாக வந்தது. அப்போதும் திரும்பி அவள் முகம் பார்க்கவில்லை.

“அதெப்படி? ஸ்டேஷன் போய் இந்த ஜாமீன் பேபர்ஸ் கொடுக்க வேணாமா?” என்றவள் சொன்ன நொடி அவன் அதிர்ச்சியாக திரும்பினான். 

 “இல்ல அஜய்… உனக்கு வொர்க் இருந்தா கிளம்பு… நான் பார்த்துக்கிறேன்” என்றாள். அவன் உதட்டைச் சுளித்துக் கொண்டு எரிச்சலாக காரை இயக்க ஆரம்பித்தான்.

கார் நேராக காவல் நிலைய வாசலில் நின்றது.

“சீக்கிரம் போய்ட்டு வா” என்றவன் சொல்லவும் அவள், “ஓகே ஓகே” என்று நேராக அந்தக் காவல் நிலையத்திற்குள் நுழைந்தாள். அவள் வந்த நேரத்தில்தான் சரியாக ஜெயாவும் அங்கே வந்திருக்க, மது அவள் எடுத்து வந்த ஜாமீன் பேப்பர்களை வழங்கினாள்.

அதனை வாங்கிப் பார்த்த ஜெயாவின் மனதில் நிம்மதி படர்ந்தது. எப்படியோ சாரங்கபாணியிடமிருந்து இந்து தப்பித்தால் போதுமென்று நினைத்தாள்.

அவள் அவற்றை சரி பார்த்து முடித்ததும் மதுவிடம், “இப்போ இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன்ல இல்ல” என்க,

“அதனால என்ன? பேப்பர்ல எல்லாம் கிளியரா இருக்குதானே… இந்துவை அனுப்பிவிடுங்க” என்றாள்.

“போய் அந்தப் பொண்ணைக் கூட்டிட்டு வாங்க” என்று ஜெயா அங்கிருந்த பெண் கான்ஸ்டபிளை ஏவினாள்.

இந்துவை அழைக்க அவர் சென்றதும் மது ஜெயாவை யோசனையோடு பார்த்து, “நேத்து என்கிட்ட ஃபோன்ல பேசனது நீங்க தானே?” என்று சந்தேகமாக கேட்க,

“எந்த ஃபோன்? நான் எப்போ பேசுனேன்… நான் இல்ல” என்றுத் தடுமாறினாள் ஜெயா!

“அது நீங்க இல்லையா எஸ்.ஐ. மேடம்” என்று மது அழுத்தி கேட்கவும், “அதெல்லாம் நான் இல்லை” என்று மறுத்துவிட,

“அப்போ சரோவை ஹாஸ்பெட்டில் சேர்க்க சொன்னது யாரு?” என்றுக் கேட்ட நொடி ஜெயா பதிலேதும் பேச முடியாமல் மௌனம் காத்தாள்.

அதற்குள் இந்துவை அழைத்துக் கொண்டு அந்தப் பெண் கான்ஸ்டபிள் வந்து நிற்க, மது தன் பேச்சை நிறுத்தினாள்.

அதன் பின் சில விதிமுறைகளை முடித்து இந்துவிடம் கையெழுத்து வாங்கினர். இந்துவிற்கு ஒன்றும் புரியவில்லை. அவள் மதுவை வித்தியாசமாக பார்த்துக் கொண்டே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள்.

மது புறப்படுவதற்கு முன்னதாக அவள் ஜெயாவிடம் எள்ளல் பார்வையோடு,

 “அப்புறம் நான் கிளம்புறேன் மேடம்… உங்க இன்ஸ்பெக்டர் வந்தா அவர் கிட்ட நான் சொன்னேன்னு சொல்லி ஒரு விஷயத்தை சொல்லிடுறீங்களா?” என்று நிறுத்த,

“என்னது?” என்றுக் கேட்டாள் ஜெயா!

மது அவளை ஏளனமாகப் பார்த்து,

“இந்தக் காக்கி யுனிபார்ம்ல இருக்கிற மிதப்பில தானே என் ப்ரெண்டு மேல அவர் கையை வைச்சிட்டாரு… இனிமே ஜென்மத்துக்கும் அந்தக் காக்கி யுனிபார்மை அவரை போட விடாம பண்ணலன்னா என் பேர் மதுபாலா இல்ல" என்றவள் சவாலாக சொல்ல,

‘அப்படி மட்டும் நடந்துட்டா… முதல சந்தோஷ படுற ஆள் நான்தான்’ என்று மனதில் நினைத்துக் கொண்டாள் ஜெயா. ஆனால் முகத்தில் எந்த உண்ரவையும் காட்டிக் கொள்ளவில்லை,  

அதன் பின் மது முன்னே செல்ல இந்துமதி அவளைப் பின் தொடர்ந்தாள்.

காவல் நிலையம் வெளியே வந்ததும் இந்து அவளிடம், “தேங்க்ஸ்… நீங்க எனக்காக” என்றவள் பேச எத்தனிக்க.

மது அந்த நொடி அவள் புறம் சீற்றமாகத் திரும்பி, “உனக்காகவா? நான்சென்ஸ்… உனக்காக நான் எதுக்கு செய்யணும்? உனக்கும் எனக்கும் என்ன இருக்கு? இன்னும் கேட்டா உனக்கு ஜாமீன் வாங்க எனக்கு கொஞ்சமும் விருப்பமில்ல… ஆனா நான் இங்க வந்திருக்கேனா… அது என் ஃப்ரெண்டு சரோக்காக” என்று அழுத்தமாக சொல்ல இந்து வியப்பாக பார்த்தாள்.

அவள் மேலும், “அவனுக்காகதான் வந்தேன்… எங்களோட இத்தனை வருஷ நட்புல அவன் என்கிட்ட முதல் முறையா ஒரு விஷயம் கேட்டிருக்கான்… அதை நான் எப்படி செய்ய முடியாதுன்னு சொல்லுவேன்… அதான் உன்னை நான் ஜாமீன்ல எடுத்தேன்…

அதேநேரம் நீ சுரேஷைக் கொலை பண்ணியிருக்க மாட்டேன்னு என்னால நிச்சயமா நம்ப முடியல” என்றதும் இந்து இடையில் பேச வாயெடுக்க மது அவளை பேச விடாமல்,

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்… எனக்கு உன் வார்த்தையில சுத்தமா நம்பிக்கை இல்லை” என்றாள்.

அதற்கு மேல் இந்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. ஆனால் மது தொடர்ந்தாள்.

 “எல்லா உறவையும் அனுசரிச்சு எல்லோருக்கும் நல்லவனா ஒருத்தனால இருக்க முடியும்னா அது சரோவால மட்டும்தான் முடியும்… நல்ல ஃப்ரெண்டா நல்ல தம்பியா நல்ல மகனான்னு எல்லா உறவையும் அவனால கரெக்டா பேலன்ஸ் பண்ண முடியும்… இப்பகூட உனக்கு ஒரு நல்ல கணவனா உன்னை இந்தப் பிரச்சனையில இருந்து காப்பாத்தனும்னு துடிக்கிறான்… ஆனா நீ” என்று நிறுத்திவிட்டு அவள் முகம் பாராமல் திரும்பிக் கொண்டு,

“சுரேஷ் கூட… சை” என்று முகம் சுளித்தாள்.

“இல்ல நீங்க நினைக்கிற மாதிரி இல்ல” என்று பதறித் துடித்து இந்து மறுக்கவும்,

 “அப்போ உனக்கும் சுரேஷ்க்கும் இருக்க உறவுக்கு பேர் என்ன? நட்பா? இல்ல புனிதமான அண்ணன் தங்கச்சி உறவன்னு சொல்ல போறியா?” என்று எள்ளல் தொனியில் கேட்டாள். இந்துவால் பதில் சொல்ல முடியவில்லை.

அவள் மௌனத்தைப் பார்த்த மது, “நீ எப்போ சரோவோட மனைவின்னு தெரிஞ்சுதோ அப்பவே சரோகிட்ட உன்னைப் பத்தி சொல்லணும்னு எனக்கு தோனுச்சு… இருந்தாலும் அவசரப்பட்டு நாமா எதுவும் தப்பா புரிஞ்சுகிட்டு எதுவும் சொல்லிட கூடாதுன்னு அமைதியா இருந்திட்டேன்… ஆனா இப்ப யோசிச்சா… நான் சரோகிட்ட சொல்லாதது பெரிய தப்புன்னு தோணுது” என்றவள் பேசிக் கொண்டிருக்க இந்து ஊமையாகவே நின்றாள்.

தான் சொன்ன சில பொய்கள் இன்று தனக்கு எதிராக திரும்பியிருக்கிறது என்று அவள் தன் தவறை எண்ணி மனம் வருந்தினாள்.

அவளை அந்தளவு பேசியும் மதுவின் மனம் அமைதியடையவில்லை.

“உன்னை போய் அந்த சரோ நம்பிட்டு இருக்கான் பாரு… அவனை என்ன சொல்றது” என்றவள் கடுப்பாகச் சொல்ல, இந்து தன் மௌனத்தைக் கலைத்தாள்.

“நீங்க பேச வேண்டியதெல்லாம் பேசி முடிசிட்டீங்கன்னா ப்ளீஸ் இப்போ என்னை என் மாமாகிட்ட கூட்டிட்டு போய் விட்டுடுங்க… அவரை நான் பார்க்கணும்” என்றவள் குரல் தழுதழுக்க சொன்ன விதத்தில் மதுவின் மனம் இறங்கியது. அந்த நொடி இந்துவின் மீதிருந்த கோபமெல்லாம் இறக்கமாக மாறியிருந்தது.

Quote

Super ma 

You cannot copy content