You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow kanavugal - 28

Quote

28

ஒரு வழியாக வீட்டிற்கு திரும்பிய பிறகுதான் இந்துமதிக்கு மூச்சே வந்தது. சுரேஷைப் பார்த்தப் பிறகு அவளுக்குள் ஏற்பட்ட நடுக்கம் குறையவே பல மணிநேரம் பிடித்தது. ஏமாற்றத்தின் வெளிபாடா? இல்லை கோபத்தின் வெளிபாடா? இல்லை தன்னுடைய இயலாமையின் வெளிபாடா? எது என்று அவளுக்கே தெரியவில்லை.

சிவந்திருந்த அவள் விழிகளையும் துவண்டிருந்த அவள் முகத்தையும் பார்த்த சரவணனுக்கு அவளுக்கு ஏதோ பிரச்சனை என்றளவுக்கு புரிந்தது. ஆனால் அது என்ன என்றுதான் யூகிக்க முடியவில்லை.

அப்படியும் அவன் கேட்டுப் பார்த்தான். ஆனால் அவளோ அவன் முகம் பார்த்து கூட பதில் சொல்லவில்லை.

இந்து மேலும் நடந்தவற்றைச் சொல்லத் தொடங்கினாள்.

“நான் திரும்பி அந்த வீட்டுக்கே போக கூடாதுன்னுதான் நினைச்சேன்… ஆனா ரேவதி அம்மா பத்தி யோசிக்கும்போது… எனக்கு கஷ்டமா இருந்துச்சு… அதுவுமில்லாம எப்படி சொல்லாம கொள்ளாம செஞ்சிட்டிருக்க வேலையை பாதிலவிடுறது…

அதான் நான் முன்னாடி வேலை செஞ்சிட்டு இருந்த ஹாஸ்பெட்டில டாக்டர் கிட்ட போய் பேசுனேன்…. இனிமே நான் அங்க போகலன்னு சொன்னேன்…

முதல என்ன ஏதுன்னு விசாரிச்சாரு… அப்புறமா அவரே பாஸ்கரன் சார் கிட்ட பேசுறேன் சொன்னாரு…

ஆனா அதுவரைக்கும் ரேவதிம்மாவைப் பார்த்துக்கணும்னு” என்றுத் தயங்கி இழுத்தவள்,

“அதான் திரும்பவும் நான் அங்கே போக வேண்டியதா போச்சு” என்று கணவனின் முகத்தைப் பார்க்கத் துணிவில்லாமல் குற்றவுணர்வோடு தலை கவிழ்ந்தபடி மேலே சொல்ல தொடங்கினாள்.

மீண்டும் அவள் அந்த வேலையில் தொடர்ந்தாலும் முன்பு போல அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை. ஒருவிதமான இறுக்கமும் பயமும் அவளை ஆட்கொண்டிருந்தது.

அருணைத் தூக்கி கொஞ்சுவதைக்கூட அவள் தவிர்த்திருந்தாள். அவன் குழந்தைதானே என்ற போதும் அது சீதாவின் குழந்தை என்ற நினைவு அவனை கையிலேந்தும் போதெல்லாம் வந்து தொலைக்கிறதே?

அந்த நொடி பழைய நினைவுகள் யாவும் அவள் மூளைக்குள் சம்மட்டையால் அடிப்பது போன்ற உணர்வு வேறு.

அதனால் அருணிடம் பழகுவதையும் குறைத்திருந்தாள். அதுமட்டுமில்லை. முடிந்தளவு ரேவதியின் அறையை விட்டு அவள் வெளியே வருவதே இல்லை.

தப்பித்தவறி சுரேஷை பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமைந்துவிட்டாலோ அவள் தன் கோபத்தையும் எரிச்சலையும் கட்டுபடுத்திக் கொள்ள பெரும்பாடுபட வேண்டியதாகப் போயிற்று.

அந்த ஒவ்வொரு நொடிகளும் நெருப்பின் மீது நிற்பது போன்ற அவஸ்தை அவளை விடாமல் தொடர்ந்தது.

அவள் மனம் புரிந்ததினாலோ என்னவோ அதிகமாக சுரேஷ் அவள் பார்வையில் படாமலே இருந்தான். அந்த வகையில் அவளுக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

ஆனால் நிலைமை அப்படியே நீடித்திருக்கவில்லை. ஒரு வாரம் கழிந்திருந்த நிலையில் சுரேஷ் ஒருநாள் அவளைத் தேடி வந்திருந்தான்.

ஏதோ ஒரு புத்தகத்தில் அவள் ஆழ்ந்திருக்க, அந்தச் சமயம் அவன் அறைக்குள் நுழைந்ததைக் கூட அவள் கவனிக்கவில்லை.

“இந்து” என்ற அவன் அழைத்த நொடி அவள் பதறி எழுந்திருக்க,

அவள் கையிலிருந்த புத்தகம் நழுவி கீழே விழுந்தது.

அச்சத்தில் அவள் சுவரோரம் சென்று ஒண்டிக்கொண்டாள். கோபத்தில் உதடுகள் துடித்த போதும் அவனைத் திட்டக் கூட அவளுக்கு குரல் எழவில்லை.

கண்ணீர் ஊற்றாக அவள் விழிகளில் பெருக,நடுக்கத்தோடும் அதேநேரம் ஒருவிதமான அருவருப்பு உணர்வோடும் அவனை எதிர்கொள்ள அவள் பார்வையைப் பார்த்தவன்,

“அப்படி என்னைப் பார்க்காதே இந்து… என்னால தாங்க முடியல” என்று வேதனையோடுச் சொல்லி கண்ணீர் வடிக்கலானான்.

அவன் முகத்தை பார்க்கக்கூட விரும்பாமல் திருப்பிக்கொண்டவள், “ஒழுங்கா இங்கிருந்து போயிடு… எனக்கு உன் மூஞ்சைப் பார்க்க கூட பிடிக்கல” என்று அழுகையினூடே திக்கிதிணறிப் பேசினாள்.

“என்னால உன் கோபத்தை புரிஞ்சுக்க முடியுது இந்து… ஆனா அதேபோல என் நிலைமையையும் நீ” என்று அவன் பேசிக் கொண்டிருந்த போதே,

“வேண்டாம்… உன்கிட்ட இருந்து எனக்கு எந்த விளக்கமும் வேண்டாம்… இங்கிருந்து ஒழுங்காபோயிடு… சொல்லிட்டேன்” என்று மிகுந்தக் கோபத்தோடு அவள் குரல் உயர்ந்தது.

“ப்ளீஸ் இந்து… நான் சொல்றதைக் கொஞ்சம் கேளேன்”

“நான் எதுவும் கேட்கமாட்டேன்… இப்ப நீ வெளியே போறியா… இல்ல நான் கத்தி கூப்பாடு போடவா?” என்று இம்முறை மிகத்தெளிவாக சொல்லி அவனை அவள் முறைப்பாக நோக்க,

“இப்ப நீ கத்தினாலும் ஒன்னும் உபயோகம் இல்ல… வீட்டுல யாரும் இல்ல…  ராஜிமா கூட என்கிட்ட இப்பதான் சொல்லிட்டு வெளியே போனாங்க… மது அவரூம்ல தூங்கிட்டு இருக்கா” என்ற நொடி அவள் அதிர்ந்துப் போனாள்.

இப்படியொரு சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று அவள் யோசித்து கூடப் பார்க்கவில்லை.அவள் இதயம் படபடக்க, அப்போது அவளை மெதுவாக நெருங்கிய சுரேஷ்,

“பயப்படாதே இந்து… உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்… அவ்வளவுதான்” என்றான்.

விழிகளில் நீர் திரள, “என்ன பேச போற? இல்ல இனிமே நாம பேசிக்க என்ன இருக்கு… உன்னை நம்பி வந்த என்னைக் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நடுரோட்ல விட்டுட்டு போயிட்டு… இப்ப உனக்கு என்ன பேசணும் என்கிட்ட” என்று சொல்லியவள் அப்போது அவன் கண்களை நேராகப் பார்த்து,

“நீ விட்டுட்டு போன பிறகு நான் எவ்வளவு எல்லாம் என் ஊர்ல அசிங்கபட்டேன் அவமானப்பட்டேன்னு தெரியுமா உனக்கு?

உனக்கு உன் லட்சியம்தான் முக்கியம்னு என்னைத் தூக்கிப்போட்டுட்டு போயிட்ட”

“இல்ல இந்து…”

“பேசாதே…உனக்கு உன் லட்சியம்தான் முக்கியம்… ஆனா என் ஆசை என் கனவு… அதெல்லாம் பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா?” என்று அவள் உணர்வுபூர்வமாக… பெரும் வலியோடு கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவன் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தது.

அவனும் கண்ணீரோடு, “உனக்கு நான் செஞ்சபாவம்தான் இந்து என்னை இப்போ சுத்திச் சுத்தி அடிக்குது… சினிமால நடிக்கிற என் லட்சியதோட என் நிம்மதி சந்தோஷம் எல்லாம் மண்ணோட மண்ணா போயிடுச்சு” என்றான்.

அந்தக் கணமே அவனை இளக்காரமாக ஒரு பார்வைப் பார்த்தவள், “பணக்கார வீட்டு பொண்ணா பார்த்து வளைச்சு போட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டதும் இல்லாம ஒரு புள்ளையும் பெத்துக்கிட்டு ராஜ வாழ்க்கை வாழுற… நீ உன் நிம்மதியை சந்தோஷத்தை தொலைச்சிட்ட… இதை நான் நம்பணுமாக்கும்” என்றாள்.

“என்னை பார்த்தா ராஜ வாழ்க்கை மாதிரி தெரியுதா உனக்கு” என்று நிறுத்தியவன் வேதனையோடு,

“என் மனசாட்சிக்கு விரோதமா ஒரு போலியான வாழ்க்கையை நான் வாழ்ந்த்திட்டு இருக்கேன்… தெரியுமா? இதுல எனக்கு எந்த சந்தோஷமும் நிம்மதியும் இல்லை” என்று தவிப்போடு சொல்ல,

“சரி நீ சொல்றதை எல்லாம் நான் நம்பிட்டேன்… போதுமா? வெளியே போ” என்று அலட்சியமாக உரைத்துவிட்டு அவனை வெளியே போகும் படியும் கைக்காண்பித்தாள்.

“ப்ளீஸ் இந்து… என்னைப் புரிஞ்சிக்கோ… நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு” என்று அவளிடம் அவன் கெஞ்சி நின்றான்.

“இப்போ நீ இங்க இருந்து போகல… நான் பாட்டுக்கு கிளம்பி என் வீட்டுக்கு போயிட்டே இருப்பேன்” என்றவள் தன் கைப்பையை எடுக்கவும் அதற்கு மேலாக அவளிடம் பேச முடியாமல் தோற்று போன பார்வையோடு அங்கிருந்து அகன்றான்.

அதேசமயம் அங்கே வந்த மது ரேவதியின் அறைக்குள்ளிருந்து சுரேஷ் செல்வதைப் பார்த்து துணுக்குற்றாள். அவள் உறக்கம் களைந்து எழுந்த நொடி பசி தாங்காமல் உணவு உண்பதற்காக கீழே வந்திருந்தவள்,

‘இந்த நேரத்துல அத்தையோட அறைக்கு சுரேஷ் ஏன் வந்தாரு?’ என்று அவள் அந்த அறைக்குள் எட்டி பார்க்க, இந்துவோ அப்போது தன் விழிகளின் கண்ணீர் சுவடை அழுந்த துடைத்துக் கொண்டிருந்தாள்.

மதுவிற்கு ஒன்றும் புரியவில்லை. ‘இவ எதுக்கு அழுதுட்டு இருக்கா… என்னனு கேட்கலாமா?’ என்று யோசித்தவள் பின் வேண்டாமென திரும்பிய சமயம் ராஜிம்மா வந்துவிட்டிருந்தார்.

“என்னம்மா ஏதாச்சும் சாப்பிடுறீங்களா?” என்று அவர் மதுவிடம் வினவும்,

“நீங்க இவ்வளவு நேரம் எங்க போனீங்க ராஜி மா?” என்றதும் அவர் தயங்கி தயங்கி, “தம்பி ஊர்ல இருந்து வந்திருக்கான்… அதான் வீட்டு சாவி கொடுக்க… ஆனா சுரேஷ் தம்பிகிட்ட சொல்லிட்டுதான் போனேன்” என்றார்.

கடைசியாக அவர் சொன்ன விஷயத்தில் மதுவின் சந்தேகம் இன்னும் அதிகமானது. ஆனால் அப்போதும் கூட அவளால் சுரேஷை தவறாக எண்ணமுடியவில்லை. அவன் மீது அவள் அதிக மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாள். ஆதலால் யாரிடமும் இதுப்பற்றி அவள் எதுவும் சொல்லி கொள்ளவில்லை.

ஆனால் அடுத்தடுத்து நடக்க போகும் சம்பவங்கள் அவளின் சந்தேகத்தை இன்னும் வலுபெறவே செய்ய போகிறது.

இந்துவிற்கோ எப்போது வேலையை விட்டு நிற்போம் என்ற தவிப்பு அதிகரித்திருந்த சமயத்தில்தான் அவளை வேறொரு பிரச்சனைச் சூழ்ந்து கொண்டது.

என்றுமில்லாத திருநாளாக அன்று ரொம்பவும் கனிவாக மகளிடம் செல்வி கைபேசியில் உரையாட, “என்ன மா ஏதாவது பிரச்சனையா?” என்று சரியாக அவர் நாடியைப் பிடித்தாள் இந்து.

“இல்ல இந்து அது… சரி வேண்டாம்… இதெல்லாம் சொல்லி என்ன ஆக போகுது… எல்லாம எங்க விதி” என்றவர் விரக்தியாக பேச, எப்போதும் இப்படியெல்லாம் பேசாத தன் தாயின் வார்த்தைகளைக் கேட்டுப் புரியாமல் குழம்பினாள் இந்து.

“ஐயோ! விதி சதியெல்லாம் அப்புறம் இருக்கட்டும்… என்னன்னு விஷயத்தைச் சொல்லு?”

“அது வந்து இந்து” என்றவர் தயங்க, “ம்மா” என்றவள் அழுத்தம் கொடுக்க,

“இந்த வருஷம் விளைச்சலே இல்ல… வர ஐப்பசிலயாச்சும் மழை வருமோ என்னவோ? உன் கல்யாண செலவோட அப்பா சிகிச்சைக்கு வாங்குன கடன்னு இப்போ எல்லாம் தலைக்கு மேலபோயிடுச்சு… நிலத்தை வித்தாதான் கடனை அடைக்க முடியும்… ஆனா அவ்வளவு எல்லாம் நம்ம ஊர்ல போகுமான்னு தெரியல” என்று அவர் சொல்வதைக் கேட்டு இந்து அதிர்ந்துப் போனாள்.

“என்ன ம்மா இப்படி சொல்ற? நிலத்தையும் வித்திட்டு… அப்புறம்” என்றவள் பதற,

“போகட்டும் விடு… இனிமே எங்களுக்கு என்ன இருக்கு… உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுத்திட்டேன்… அது போதும்” என்க, அந்த வார்த்தை அவள் நெஞ்சில் ஆழமாக பாய்ந்தது.

அவர்கள் அமைத்து கொடுத்த இந்த வாழ்க்கையை தான் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? இந்தக் கேள்வி மனதைக் கூறுபோட அவள் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.

“இந்து” என்று செல்வி அழைக்க, “சொல்லு ம்மா” என்றாள்.

“மாப்பிளை கிட்ட இதுப்பத்தி எல்லாம் எதுவும் சொல்லிக்காதே” என்க,

“நான் அதெல்லாம் சொல்லல” என்றவள்,

“இப்போ எவ்வளவு காசு வேணும் உனக்கு” என்றுக் கேட்டாள்.

“அதெல்லாம் எதுக்குடி?” என்றாள் செல்வி!

“ப்ச் சொல்லுமா?” என்றவள் அழுத்தம் கொடுக்க,

“என்ன? எல்லாம் வட்டியெல்லாம் சேர்த்து ஆறரை ஏழு லட்சம் வரும் போல” என்ற அவர் சொன்னதைக் கேட்ட நொடி விக்கித்து போனாள் இந்து.

இந்த பணம் அவர்களின் நிலைமைக்கு மீறியது. அவள் அமைதியாக இருக்க செல்வி, “உன் அண்ணன்… படுபாவி… அந்த இருபத்து அஞ்சு சவரன் நகையை எடுத்துட்டு போகாம இருந்திருந்தா நமக்கு இந்த நிலைமையே இல்ல… அந்த நகையை வைச்சு அப்பாவோட ஹாஸ்பெட்டில் செலவையாச்சும் சமாளிச்சு இருக்கலாம்” என்றார்.

அவர் சொன்னதைக் கேட்டு இந்துவின் கைகள் நடுங்கி கண்ணீர் பெருகியது. தன் அழுகையைக் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க, “அம்மா நான் அப்புறம் பேசுறேன்” என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு,

 “எல்லாம் என் தப்பு… என் தப்பு” என்று தலையிலடித்துக் கொண்டு அழ தொடங்கினாள்.

அப்போதிருந்த கலக்கமும் அழுகையும் இப்போதும் இந்துவை வெகுவாக பாதிக்க, “அன்னைக்கு மட்டும் நான் அந்த நகையை எடுக்காம இருந்திருந்தா” என்று சொன்னவளை சரவணன் அதிர்ச்சியோடுப் பார்த்தான்.

நகையை எடுத்தது அவள் தமையன் இசக்கியப்பன் என்றுதான் இதுநாள்வரை அவன் உட்பட எல்லோரும் நினைத்திருந்தனர். ஆனால் இப்போது அவள் சொன்னதைக் கேட்டு அவனுக்கு குழப்பமானது.

தரையைப் பார்த்தபடி அழுதிருந்த அவள் முகத்தை நிமிர்த்தி பிடித்து அவன் என்னவென்று சொல்லும்படி வினவவும் அவன் கேள்வி புரிந்தவளாக,

“அந்த நகையை அண்ணன் எடுக்கல… நான்தான் அன்னைக்கு சீதா கூட ஓடிப்போக எடுத்துட்டு போனேன்” என்று அவள் சொன்னது முதல் அதிர்ச்சி!

ஆனால் அடுத்தடுத்து அவள் சொன்னதெல்லாம் அதற்கு மேலான அதிர்ச்சியைத் தந்தது.

“ஆனா அன்னைக்கு நடந்த குழப்பத்துலயும் பிரச்சனையிலயும் சீதா அந்தப் பேகை மாத்தி எடுத்துட்டு போயிட்டான்” என்றாள்.

சரவணன் அதிர்ந்த நிலையில் அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்க,

“இது எதுவும் அப்போ அம்மாவுக்கு தெரியாது… அதுவுமில்லாம இதை வேறசொன்னா என்ன ஆகுமோன்னு பயந்துட்டு நானும் எதுவும் சொல்லல… ஆனா அப்பாவுக்கு கிட்னி ஃபெயிலியர் ஆன போது அம்மா ஹாஸ்பெட்டில் செலவுக்காக அந்த நகையைத் தேடுனாங்க…. கிடைக்கலன்னதும் அண்ணன்தான் எடுத்திருச்சுன்னு நினைச்சுட்டாங்க… நானும் அந்தச் சூழ்நிலையில உண்மையை சொல்லல… அதுக்கான தைரியம் அப்போ எனக்கு இல்ல” என்றுச் சொல்லியவளின் கண்ணீர் தம் கரைகளை உடைத்திருந்தது. ஆனால் சரவணன் இம்முறை அவளை சமாதானம் செய்ய முயலவில்லை.

அவன் இறுக்காமாக அமர்ந்திருக்க அவள் மேலும்,

“அம்மா அந்த நகையைப் பத்தி சொன்னதும் தான் அதைப்பத்தி எனக்கு ஞாபகம் வந்துது… அப்பத்தான் எனக்கு ஒரு யோசனை வந்துச்சு… சீதாகிட்ட அந்த நகைக்கான பணத்தைக் கேட்டு வாங்கிட்டா அப்புறம் வீட்டோட பண பிரச்சனை தீர்ந்துடும்னு நினைச்சேன்” என்ற நொடி விருட்டென எழுந்து நின்றுக் கொண்டான்.

 “என்னாச்சு மாமா?” என்று அவள் அச்சத்தோடு வினவ, அவன் அவள் புறம் தன் பார்வையைத் திருப்பவே இல்லை. 

“நான் செஞ்சது எதையும் நியாயபடுத்த முடியாது… எனக்கு தெரியும்” என்றவள் சொல்லி முடிப்பதற்குள்ளாக அவன் தன் கரத்தில் ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து அவளிடம் எதையோ எழுதிக் கொடுத்தான்.

Quote

Super ma 

You cannot copy content