You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow kanavugal - 3

Quote

3

மழை மீண்டும் வலுக்கத் தொடங்கியது. தடதடவென மழையடிக்கும் ஓசையோடு அந்தக் காவல் நிலையத்தின் சலசலப்புகளும் ஒன்றென கலந்துவிட்டிருந்தன.

அந்தச் சமயம் பார்த்து உள்ளே நுழைந்த ஒரு பெண் அங்கே இருந்த காவலர்களையெல்லாம் உலுக்கி எடுத்துக்கொண்டிருந்தாள்.

ஆறடிக்கும் குறையாத அவளின் உயரத்தில் பிரமிப்பாகத் தெரிந்தாள்! பெரும்பாலான தமிழ் பெண்களின் உயரம் ஐந்தரை அடிதான் என்பதால் மற்றப் பெண்களிலிருந்து அவளின் உயரம் அவளைத் தனித்துக் காட்டியது.

‘இந்தப் பொண்ணு என்ன உயரம் பாரேன்?’ இரண்டு பெண் கான்ஸ்டபிள்கள் அவளைப் பார்த்து ஆச்சரயபட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் அவற்றையெல்லாம்விட அவளிடமிருக்கும் வேறொரு விஷயம் எல்லோர் பார்வையையும் ஈர்த்தது. அதுதான் அவளின் தாய்மை நிலை. அவள் வயிற்றின் அளவை பார்த்தால் நிச்சயம் அவள் நிறை மாத கர்ப்பிணி என்றுத் தோன்றியது.

“என்ன இந்தப் பொண்ணு… நிறை மாசமா இருந்துக்கிட்டு இந்த மழையில இங்க வந்து இப்படிக் கத்திகிட்டு இருக்கு… இவ குதிக்கிற குதியைப் பார்த்தா இங்கேயே பிரசவம் ஆகிடும் போலவே” தன் கோழியைக் களவு கொடுத்தக் கவலையை மறந்து அந்த வயதான பெண்மணி பக்கத்தில் நின்ற பெண் கான்ஸ்டபிளிடம் சொல்ல,

“நானும் அதேதான் யோசிக்கிறேன்” என்றாள் அவளும் பதிலுக்கு!

ஆனால் அதுப்பற்றியெல்லாம் அந்தப் பெண் கடுகளவும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவள் இயல்பாகவே அநியாயங்களைப் பார்த்துப்பொங்கும் ரகம் போல.

‘வழக்கறிஞர் மதுபாலா’ என்றுத் தன்னை அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டாள். அந்தப் பெயரும் அவளும் சென்னை வாசிகள் எல்லோருக்கும் நன்குப் பரிட்சயம். 

ஒரு வருடத்திற்கு முன்பு சமூகவலைத் தளங்களில் அவள் மிகப் பிரசித்தமாகப் பேசப்பட்டாள். பிரச்சனைகளைப் பார்த்து ஒதுங்கி போகும் இந்தக் காலக் கட்டத்தில் தைரியமாக களத்திலிறங்கி அதனைத்தட்டிக் கேட்கும் இளம் பெண் போராளி!

மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியரை அந்தப் பள்ளி வளாகத்திற்குள்ளேயே வைத்து பளாரென்று அவள் அறைந்த வீடியோதான் முதலில் பிரபலமானது.

அதற்குப் பிறகு மக்களுக்கு இடையூறாக இருந்த முப்பது டாஸ்மாக் கடைகளைக் குறித்தக் காணொளியைப் பதிவிட்டு அவள் தொடுத்தப் பொதுநலவழக்கில் அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் அவற்றையெல்லாம் அதிரடியாக மூட உத்தரவிட்டதில் அவள் இன்னும் மக்களிடத்தில் பிரபலமானாள்.

தைரிய நாயகி, வீர தமிழச்சி என்று பல பல பட்டப்பெயர்கள் அவளுக்கு வலம் வந்தன. திரை மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கு நிகராக அவளுக்கென்று ட்விட்டர் பேஸ்புக்கில் ஃபாலோயார்ஸ் குவிந்தனர்.

அந்தக் குறுகிய காலத்தில் அவள் மக்கள் மனதில் இடம் பிடித்தாள். அதனைக் குறி வைத்து அவளிடம் பல டிவிசேனல்கள் படையெடுக்க, அவர்களின் டி.ஆர்.பி. பசிக்குதான் விருந்தாக முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள். தனக்குச் சரியென்றுத் தோன்றுவதைத் தடாலடியாக செய்யும் ரகம் அவள்!

 ஆனால் கடந்த ஒரு வருடமாக அவள் பெயர் எங்கும் ஒலிக்கப்படவில்லை. திடீரென்று பிரபலமாகி காணாமல் போனவர்கள் பட்டியலில் அவள் பெயரும் சேர்ந்துக் கொண்டது.

அவளைப் பற்றி விவாதித்து கொண்டிருந்த காவலாளிகள் அப்போது, “குடும்ப இஸ்திரி ஆகிட்டா சமூக அக்கறையாவது சக்கரையாவது” என்று அவளைப் பற்றிக் கேலியாகப் பேசிக் கொள்ள, அந்த வார்த்தை மிகவும் தெளிவாக அவள் செவிகளில் விழுந்து அவள் மனதைத் துளைத்தது.

ஆனால் அவள் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் வந்த வேலைகளில் கவனமாக இருந்தாள்.

“கொஞ்ச நேரம் இருங்க மேடம்… எஸ்.ஐ. மேடமே கூப்பிடுவாங்க” என்று ரொம்பவும் பவ்யமாக அங்கிருந்த காவலாளிகள் அவளுக்குப் பதிலளித்தனர்.

வேறு யாராவதாக இருந்தால் அவர்கள் பேசும் தொனியே வேறு விதமாக இருந்திருக்கும். ஆனால் எதிரே நின்றிருப்பது மதுபாலாவாயிற்றே! அவளைப் பற்றிதான் அந்த ஊருக்கே தெரியுமே. அவள் பாட்டுக்கு முகநூலில் காவலர்களின் அலட்சியம் அவமதிப்பு என்று ஏதாவது காணொளி போட்டுவிட்டால், அவர்கள் நிலைமை அதோ கெதிதான். அந்தப் பயமிருந்தது அவர்களுக்கு!

“விசாரிக்கிறேன்னு கூட்டிட்டு வந்து அஞ்சு மணிநேரம் மேலாகுது… அதுவும் அவங்க வீட்டில யாரும் இல்லாத சமயத்தில அழைச்சிட்டு வந்திருக்கீங்க… என்ன விசாரணை? எதுக்குக் கூட்டிட்டு வந்தீங்க?” அவள் நிறுத்தாமல் கேள்விகளை அடுக்க,

“இல்ல மேடம்… எல்லாம் எஸ்.ஐ.  மேடமுக்குதான் தெரியும்” என்றனர்.

“அப்புறம் நீங்கெல்லாம் எதுக்கு இருக்கீங்க?”

“உஹும் இதெல்லாம் சரி வராது… நான் உடனே இந்துவைப் பார்க்கணும்… இல்ல நான் கமிஷனர் ஆஃபீஸ் போவேன்” என்றவள் பிடிவாதமாக சொல்ல,

“நீங்க முதல உட்காருங்க  மேடம்… டென்ஷனாகாதீங்க” என்றனர்.

அப்போது அவள் உடன் வந்திருந்த இளைஞன் அவளிடம் கொஞ்சம் பொறுமையாக பேசச் சொல்லி சைகைச் செய்தான். உண்மையில் அவளை விடவும் அதிகமாக அவன் முகத்தில்தான் தவிப்பும் கவலையும் இருந்தது.

கண்ணீர் நிரம்பிய அவன் விழிகளைப் பார்த்த மதுபாலா,

“கவலை படாதே சரோ! நான் பார்த்துக்கிறேன்… இவங்க கிட்ட எல்லாம் இப்படிதான் பேசணும்… இல்லாட்டி நம்மல ஏறி மேய்ச்சிடுவாங்க” என்றுக் கூற, அவன் மனமோ அமைதியடையவில்லை. அவன் சிந்தனை முழுக்க அவள்தான். வந்த நொடியிலிருந்து அவன் பார்வை உள்ளேயே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தது.

எங்கேயாவது தன் ஆருயிர் மனைவி தெரிகிறாளா என்று! ஆனால் ஒன்றும் பயனில்லை. அவனால் அவள் எங்கே இருக்கிறாள் என்றுக் கூடத் தெரிந்துக் கொள்ள முடியவில்லை. ஏமாற்றமாக இருந்தது.

இருப்பினும் அவன் மதுபாலாவிடம் பொறுமையாகவே பேசச் சொன்னான். 

அதுதான் அவனுடைய குணமே. எந்த மாதிரி சூழ்நிலையிலும் யாரிடமும் அவன் கோபப்படமாட்டான். அப்படிக் கோபப்பட்டு அவனுக்கு பழக்கமுமில்லை. தவறு அவர்கள் மீதே இருந்தாலும் அவன் அமைதியாக போய் விடுவான். இயல்பில் அவன் ரொம்பவும் மென்மையானவன். ஈ, எறும்பிற்குக் கூட தீங்கு நினைக்காதவன்.

ஆனால் வேலையென்று வந்துவிட்டால் கடுமையான உழைப்பாளி! உடல் உழைப்பினால் உண்டான திடகாத்திரமான புஜங்களும் உடற்கட்டுக்களும் அவனை ஆண்மையாக காட்டிய அதேநேரம் அவன் அணிந்திருந்த வேட்டியும் சட்டையும் அவன் கம்பீரத்தைத் தூக்கிக்காட்டியது.

ஆனால் அவனிடம் பார்வைகள் அறியாத ஒரே ஒரு குறையிருந்ததது. வார்த்தைகளால் பேச முடியாதவன்.

சிறு வயதில் ஒரு விபத்தினால் உண்டான அதிர்ச்சியில் அவனுக்கு ஏற்பட்ட குறைப்பாடு அது. அவன் வாய் பேச முடியாமல் போனாலும் அவன் விழிகள் வார்த்தைகளை விடவும் மிக கூர்மையாகவும் தெளிவாகவும் பேசக் கூடியன. அன்பிற்கு வார்த்தைகளும் மொழிகளும் தேவையில்லை என்பதற்கான ஆணித்தரமான எடுத்துக்காட்டு அவன்.

ஆனால் இன்று வரை ஒரு ஜோடி விழிகளை மட்டும் நேர்கொண்டுப் பார்க்க முடியவில்லை அவனால். அந்த விழிகள் காட்டும் நிராகரிப்பா அல்லது அந்த விழிகளின் மீது தான் கொண்டிருக்கும் அதீதமான காதலா? என்று அவனுக்கே தெரியவில்லை.

தன் மனதின் உணர்வுகளை அவளிடம் மட்டும் சொல்ல முடியாமல் இன்று வரை மருகிக் கொண்டிருக்கிறான். தன்னால் ஏன் பேச முடியாமல் போனது என்று அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் நித்தம் நித்தம் வருந்திக் கொண்டிருக்கிறான். அவன்தான் சரவணகுமார்.

உழைத்த களைப்போடு மனைவியைப் பற்றிய கவலையையும் சேர்ந்ததில் அவன் முகம் மிகவும் சோர்வாகவும் களையிழந்தும் காணப்பட்டது.

மதுபாலாவின் படபடப்பான பேச்சிற்கு நேர்மாறாக அவன் மிகவும் அமைதியாக நின்றிருப்பது போல் தெரிந்தாலும் அவன் உள்ளுர தன் மனைவியின் நிலைமையை எண்ணி நிலைக்கொள்ளாமல் அல்லாடிக் கொண்டிருந்தான்.

“எஸ்.ஐ. மேடம் உங்களைக் கூப்பிடுறாங்க” என்ற அழைப்பு வரவும், அந்த ஒரு வாரத்தைக்காக காத்திருந்த சரவணனும் மதுவும் விரைந்து உள்ளே சென்றனர்.

அதேநேரம் சாரங்கபாணி தன் அறையைவிட்டு வெளியேறி வாகனத்தில் புறப்பட்டுவிட்டார்.

ஜெயா அவர்களை அமர சொல்லிவிட்டு, “என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்றுக் கேட்க, சரவணனோ அவள் சொன்னதைக் காதில் வாங்காமல் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். உள்ளே தன்னவள் இருப்பாள் என்ற அவனின் எதிர்ப்பார்ப்பும் நம்பிக்கையும் அந்நொடி தகர்ந்து போனது. அவன் ஏமாற்றமாக மதுவைப் பார்த்தான்.

அவன் மனவேதனை அவளுக்குப் புரிந்தது. உடனடியாக அவள் ஜெயாவைப் பார்த்து, “இந்துமதி எங்க?” என்று வினவ,

“உட்காருங்க பேசுவோம்” என்றாள்.

மது சரவணனைப் பார்த்து அமர சொல்லிவிட்டு தானும் அமர்ந்தாள். அவனோ மனைவியை காண முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

மது சொன்ன வார்த்தைக்காக அவன் அமர்ந்தாலும் அவன் பார்வை அந்தக் காவல் நிலையத்தின் இண்டு இடுக்குகளையும் விடாமல் ஆராய்ந்தது. எங்காவது அவள் தன் பார்வைக்குப் புலப்பட்டு விடமாட்டளா என்று?

மது அப்போது ஜெயாவிடம், “நீங்க இந்துவை விசாரிக்கிறேன் கூட்டிட்டு வந்து அஞ்சு மணி நேரத்துக்கு மேல ஆச்சு… அதுவும் அவங்க வீட்டில யாரும் இல்லாத சமயமா பார்த்து அழைச்சிட்டு வந்திருக்கீங்க” என்றுக் கேட்க,

“யார் இருக்காங்க இல்லன்னு எல்லாம் நாங்க பார்க்கல… அவங்களை விசாரிக்கணும்… அதான் கூட்டிட்டு வந்தோம்” என்று தீர்க்கமாக பதிலளித்தாள்.

“இன்னுமா உங்க விசாரணை முடியல”

“முடிஞ்சிருச்சு”

“அப்போ இந்துமதி எங்க?” மது ஆவலோடுக் கேட்க,

“அவங்க சுரேஷ்ங்கிறவர கொலை பண்ண குற்றத்துக்காக கேஸ் ஃபைல் பண்ணியிருக்கோம்… நாளைக்கு கோர்ட்ல ஆஜர் படுத்த போறோம்… நீங்க அங்க வந்து பேசிக்கோங்க” என்றாள்.

இதைக் கேட்ட சரவணனுக்குத் தலையிலிடியிறங்கிய உணர்வு. இத்தனை நேரம் சரவெடியாக வெடித்து கொண்டிருந்த மதுவோ அதிர்ச்சியில் பேச்சற்றுப் போனாள்.

அவளால் நம்பவே முடியவில்லை. சுரேஷைக் கொலைச் செய்தது இந்துமதியா? அவள் அந்தளவுக்கு செய்ய கூடியவளா? ஆனால் ஏன்? என்றுக் கேள்விகள் வரிசை கட்ட, சரவணனால் தன் மனைவியை அப்படி யோசித்துக் கூடப் பார்க்க முடியல்லை.

அவனால் பேச முடியாவிட்டாலும் ஜெயாவிடம் தன் சைகைகளால் திட்டவட்டமாக அப்படி இருக்கவே இருக்காது என்று மறுத்தான்.

ஜெயா அப்போது, “ஆமா நீங்க யாரு?” என்று அவனைப் பார்த்து வினவ,

“அவர் இந்துவோட ஹஸ்பெண்ட்” என்றாள் மது.

“அவரால பேச முடியாதோ?” ஜெயா கேட்க,

“உஹும்” என்றாள். ஜெயாவிற்கு அவன் மீது பரிதாப உணர்வு தோன்றியது. ஆனால் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை.

மதுவின் மூளை தீவிரமாக சுரேஷின் கொலைப் பற்றி யோசிக்க தொடங்கியது.

இந்துமதிதான் குற்றவாளி என்பது எந்தளவுக்கு உண்மை. ஒருவேளை இவர்கள் அப்படி ஜோடிக்கிறார்களோ? என்ற எண்ணம் தோன்ற,

“எந்த அடிப்படையில நீங்க இந்துவைக் குற்றவாளின்னு சந்தேகப்படுறீங்க?” என்றுக் கேட்டாள் மது.

“சந்தேக எல்லாம் படல… உறுதியாவே சொல்றோம்… இந்துமதிதான் இந்தக் கொலையைப் பண்ணி இருக்காங்க”

“இருக்கவே இருக்காது… இந்துமதி அப்படியெல்லாம் பண்ண வாய்ப்பில்லை” மது மறுக்க,

“எங்ககிட்ட ஆதாரம் இருக்கு” என்று ஜெயா அழுத்தமாக சொன்னாள்.

“என்ன ஆதாரம் இருக்கு உங்ககிட்ட?”

“அதெல்லாம் உங்ககிட்ட இப்போ சொல்ல முடியாது”

“என்ன விளையாடுறீங்களா? நீங்கப் பாட்டுக்கு ஒரு பொண்ணை விசாரிக்கிறேன்னு கூட்டிட்டு வந்துட்டு இப்போ குற்றவாளின்னு சொல்றீங்க… திஸ் இஸ் அட்ராஸியஸ்… இதுல ஏதோ சூழ்ச்சி இருக்கு” என்று மது உணர்ச்சிவசப்பட,

“வக்கீல் மேடம்… நீங்க வாதம் செய்ய இது ஒன்னும் கோர்ட் இல்ல… போலிஸ் ஸ்டேஷன்… கொலைக் குற்றவாளின்னு தெரிஞ்ச பிறகு நாங்க அவங்களை கைது பண்றதுதான் ரூல்ஸ்… அவங்க பொண்ணா பையனா அப்படியெல்லாம் எங்களால பிரிச்சு பார்க்க முடியாது… அதுவுமில்லாம இன்னைக்கு பொம்பளைங்க கொலை பண்றதுதான் பேஷன் ஆகிடுச்சு

கேரளால பார்த்தீங்களா… ஒரு பொண்ணு அசால்ட்டா எத்தனை கொலை பண்ணியிருக்கான்னு” என்று ஜெயா பேசிக் கொண்டே போக, மதுவிற்கு தலைச் சுற்றியது.

அந்த டென்ஷனில் மயக்கம் வருவது போல் தோன்றவும் அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,

“சரி… இந்துவைப் பார்க்கவாச்சும் அலோ பண்ணுங்க” என்றுப் பொறுமையாகக் கேட்டாள்.

“சாரி முடியாது” என்று ஜெயா பட்டென்று மறுக்க, மது சீற்றமாக எழுந்து நின்றாள்.

“பார்க்க கூட அலோ பண்ண முடியாதுன்னு சொல்றதெல்லாம் டூ மச்” என்றுக் கத்தியபடி அவள் எழ, நிற்க முடியாமல் அவள் கால்கள் தடுமாறின. சட்டென்று சரவணன் அவள் கரத்தைப் பற்றி நிலை நிறுத்தினான்.

ஜெயாவோ அலட்டி கொள்ளாமல், “இந்த மாதிரி நேரத்தில் இப்படியெல்லாம் டென்ஷன் ஆக கூடாது வக்கீல் மேடம்… பொறுமையா பேசுங்க” என்று அறிவுரை வழங்க,

“எனக்கு ஒன்னும் உங்க அட்வைஸ் தேவையில்லை… இப்போ இந்துவை பார்க்க அலோ பண்ணுவீங்களா மாட்டீங்களா? அட்லீஸ்ட் சரவணனை மட்டுமாச்சும் பார்க்க அலோ பண்ணுங்க” என்றுக் கோபமாக ஆரம்பித்தவள் இறுதியாக மிகவும் தாழ்ந்த குரலில் கிட்டத்தட்டக் கெஞ்சினாள்.

சில நொடிகள் மௌனமாக யோசித்த ஜெயா, “என்னால இதுல ஒன்னும் பண்ண முடியாது… வேணா  இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்டு பாருங்க” என்றாள்.

“எப்ப வருவாரு உங்க இன்ஸ்பெக்டர்?”

“ரௌன்ட்ஸ் போயிருக்காரு… வந்தப் பிறகு பார்த்துட்டு போங்க” என்றாள். அதற்கு மேல் மதுவால் ஒன்றுமே பேச முடியவில்லை.

சரவணனை இயலாமையோடு பார்க்க அவன் ஏமாற்றத்தோடு அமர்ந்திருந்தான். அவன் விழிகளில் நீர் கோர்த்திருந்தது.

ஜெயா அவர்கள் இருவரையும் கவனிக்காமல் மும்முரமாக ஏதோ ஒரு கோப்பினை எடுத்து ஆராயத் தொடங்கினாள். இனிமேல் என்னிடம் பேசி ஒன்றும் பயனில்லை என்று சொல்லாமல் சொன்னது அவள் செயல்!

மது என்ன செய்வதென்று புரியாமல், “நைட் பூரா இந்துவை ஸ்டேஷன்லதான் வைச்சிருக்கப் போறீங்களா?” என்றுக் கேட்க,

“கூட ரெண்டு லேடி கான்ஸ்டபிள்ஸ் ஸ்டேஷன்ல இருப்பாங்க?” என்றவள் சொன்ன போது அவள் தன் மனசாட்சியைக் கொன்றுவிட்டுதான் அப்படி சொன்னாள்.

 “இருப்பாங்க… ஆனா பாதுகாப்பா இருப்பாங்களா?” என்று மதுபாலா எள்ளலாக கேட்க, ஜெயாவின் பார்வையில் கோபம் தெறித்தது.

“முறைக்காதீங்க எஸ் ஐ மேடம்… நடக்காததை எதுவும் நான் சொல்லலையே… உங்க போலிஸ் ஸ்டேஷன் எல்லாம் எந்தளவு பாதுகாப்பானதுன்னு எங்களுக்கு தெரியாதா என்ன?”

“உங்களோட கற்பனைக்கு எல்லாம் என்னால பதில் சொல்லிட்டு இருக்க முடியாது… ப்ளீஸ் கிளம்புறீங்களா” என்று ஜெயா எரிச்சலாக சொன்னாள் .

“கிளம்புறோம்… ஆனா இந்துவுக்கு எதாச்சும் பிரச்சனை வந்துச்சு இந்த ஸ்டேஷன்ல இருக்க ஒருத்தரையும்நான் சும்மா விடமாட்டேன்” என்று அழுத்தமாக எச்சரித்தவள், “வா சரோ போலாம்” என்றாள்.

இந்துவைப் பார்க்க முடியாதா என்றவன் ஏக்கத்தோடு நோக்க,

“எனக்கு உன் நிலைமை புரியுது… ஆனா இவங்க கிட்ட நமக்கு நியாயம் கிடைக்காது” என்று ஜெயா முன்னிலையிலேயே குத்தலாக சொல்லிவிட்டுஅவனை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அவனோ மனமே இல்லாமல் அவளுடன் நடந்தான்.

இருப்பினும் அவன் விழிகள் அவளைத் தேடிக் கொண்டே வந்தது.

வெளியே வந்த மதுவின் மனதில் ஆயிரமாயிரம் கேள்விகள். உண்மையிலேயே இந்துமதி சுரேஷின் கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கிறாளா?

சுரேஷ் இந்துமதிக்கு இடையிலான உறவைப் பற்றிய நினைவு வந்தது. ஒருமுறை அவர்கள் இருவரையும் சேர்த்துப் பார்த்த அந்தக் காட்சி வேறு மனதிற்குள் உறுத்த, அது உண்மைதானா என்று ஊர்ஜிதமாக தெரியாமல் அவளால் எந்த முடிவுக்கும் வர முடியவில்லை.

ஆனால் அது மட்டும் உண்மையென்றால் அதனால் ஏற்பட போகும் விளைவுகளை அவளால் யோசித்து கூடப் பார்க்க முடியவில்லை.

‘சரோதான் பாவம்!’ எந்தத் தவறும் செய்யாமல் இந்தப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டு அவதியுறப் போகிறான்.

இருப்பினும் இந்துமதிதான் கொலையாளி என்று அவளால் உறுதியாக நம்ப முடியவில்லை. இதில் ஏதோ குழப்பம் நடந்திருக்கிறது.

இந்த யோசனையில் அவள் இருக்க, சரவணன் கையசைத்து அவளைப் புறப்பட சொல்லி சொன்னான்.

“சாரி சரோ… எனக்கு என்ன பண்றதுன்னே புரியல… ரொம்ப குழப்பமா இருக்கு… கேஸ் ஃபைல் பண்ணிட்டாங்கன்னா இப்போ நாம ஒன்னும் பண்ண முடியாது… அதுவும் இந்த மாதிரி நேரத்தில யாரையும் ஹெல்புக்கு கூட கூப்பிட முடியாது” என்றவள் ஆதங்கத்தோடு உரைக்க,

அவளிடம் புரிதலாக தலையசைத்தவன் அங்கிருந்து அவளை உடனடியாக புறப்படச் சொன்னான்.

“இல்ல சரோ… இன்ஸ்பெக்டர் வரட்டும்… பார்த்துட்டுக் கிளம்புறேன்” என்றவள் சொல்ல, அவன் வேண்டாவே வேண்டாம். நீ கிளம்பு என்று அவளை வலுக்கட்டாயமாகப் போக சொன்னான். அதுவும் மழை அதிகமாகி கொண்டிருக்கும் அந்தச் சூழலில் அவனுக்கு அவளை அங்கே தாமதிக்க வைப்பது சரியில்லை என்றுத் தோன்றியது.

“சரி சரோ… நான் காலையில வரேன்” என்று அவனைத் தயக்கமாக பார்த்துக் கொண்டே தன் காரில் ஏறி புறப்பட, அவளை அனுப்பிவிட்டு அவன் காவல் நிலைய வாசலில் தேங்கி நின்றான். அவன் மனமெல்லாம் உள்ளேயே இருந்தது.

அந்தப் புயல், மழையால் கூட அவன் காதலை இம்மியும் அசைக்க முடியவில்லை. ஆனால் தனியாக வேதனையில் அமர்ந்திருந்த இந்துமதிக்கு அவன் வரவில்லை என்பது மிகுந்த வேதனையை அளித்தது. மனதளவில் ரொம்பவும் உடைந்து போயிருந்தாள்.

‘உஹும்… மாமா எனக்காக வரமாட்டாரு… அவ்வளவுதான் இத்தோடு என் வாழ்க்கையே முடிஞ்சு போச்சு’ என்று அந்த நொடி அவள் அவநம்பிக்கையில் மூழ்கிக் கொண்டிருந்தாள்.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content