You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow Kanavugal - 32

Quote

32

நடுத்தர வாழ்க்கை வாழும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஆடம்பர வாழ்க்கை மீது ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு இருக்கும். கார், பங்களா, நகை, உயர்ரக ஆடையென்று மேல்மட்ட வாழ்க்கையின் மீதான அலாதியான காதல் ஒளிந்திருக்கும்.

அனு என்கிற அனன்யா மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? பாஸ்கரன் நடுத்தர வாழ்க்கை நிலையிலிருந்து முன்னேறி மேலே வர அவர் மகள் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்ல வேண்டும்.

“அப்பா நம்ம இந்த மாதிரி கார் வாங்கணும்… இந்த மாதிரி பங்களால இருக்கணும்” இப்படியான மகளின் ஆசைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வைத்தார் பாஸ்கரன்!

மகளுக்காகவே பொருளாதாரம் அந்தஸ்து என்று தன் நிலைமையை படிப்படியாக உயர்த்திக் கொண்டார். அந்தளவுக்காய் மகளின் மீது கண் மூடித்தனமான பாசம் அவருக்கு!

எந்தக் கஷ்டமும் உடல் உழைப்புமின்றி பெறுகின்ற பொருளுக்கு மதிப்பு இருக்காது என்று சொல்வார்கள்!

அனன்யா விஷயத்திலும் அதுதான் அரங்கேறியது.

அவள் ஆசைப்பட்டதெல்லாம் நினைத்த மாத்திரத்தில் கிடைக்க ஆரம்பித்ததில் அவள் தனக்கு கிடைத்தவற்றின் மதிப்பை அறியவில்லை. இன்னும் கேட்டால் அவற்றை எல்லாம் தவறாகப் பயன்படுத்தினாள்.

ஊர் சுற்றுவதில் தொடங்கி தன் ஒருத்தியின் தனிப்பட்ட ஆசைகளுக்காக கண்மூடித்தனமாக செலவு செய்தாள்.

பாஸ்கரன் கணக்கு பார்க்காவிட்டாலும் ரேவதி மகளை விடமாட்டார். குடைந்து குடைந்து ‘இது என்ன? அது என்ன? எங்கே போகிறாய்?’ என்றுக் கெடுபிடி செய்வார்.

ஆனாலும் பாஸ்கரன் மகளை இம்மியளவுக்கு கூட விட்டுக்கொடுக்கமாட்டார். அஜய் முழுக்க முழுக்க ரேவதியின் வளர்ப்பு. அனன்யா பாஸ்கரனின் செல்லம்.

அனுவும் அஜயும் இரட்டையர்கள் என்பதால் பள்ளி காலங்கள் வரை ஒரே வகுப்பு! அனு செய்யும் தவறுகள் அனைத்தும் அஜய் மூலமாக ரேவதியின் காதுக்கு எப்படியாவது எட்டிவிடும். இதனால் மகளை அவ்வப்போது கண்டித்து தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்தார்.

ஆனால் கல்லூரிக்கு போன பிறகுதான் அனுவுக்கு அதிகபட்ச சுதந்திரம் கிடைத்தென்று சொல்ல வேண்டும். அந்தச் சமயத்தில் அவர்கள் அந்தஸ்து நிலையும் உயர தொடங்கியிருந்தது. கட்டுபாடின்றி திரிந்தவள் கைகளில் பணமும் புரள அந்தச் சுதந்திரத்தை இன்னும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டாள்.

எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போல சினிமாத்துறை அவளை மேலும் தவறான வழிகளுக்கு இழுத்து சென்றதில்லாமல் நிறைய தவறான நண்பர்களை அவளுக்கு அறிமுகப்படுத்தியது. அந்த தவறான நண்பர்கள் அவளுக்கு நிறைய தவறான பழக்கங்களை அறிமுகப்படுத்தினர்.

இப்படியாக தடம் மாறி சென்றுக் கொண்டிருந்த அவள் வாழ்வில் அவளுக்குக் கிடைத்த நல்ல நட்புதான் சீதாராமன். அனு சில விளம்பரங்களுக்கு மாடல்களாக நடித்துக் கொண்டிருந்த சமயம் அது. அப்படி ஒரு விளம்பரஷூட் போகும் போதுதான் சீதா அவளுக்கு அறிமுகமானான்.

ஆனால் அவனுடன் பேசுவதற்கு முன்னதாகவே சில விளம்பரங்களில் அவனைக் கூட்டத்தோடுக் கூட்டமாகப் பார்த்திருக்கிறாள்.

‘இவன் பார்க்க நல்லா இருக்கான் இல்ல’ என்று அவள் உடனிருந்த தோழிகளோடு அவனைப் பற்றிப் பேசியிருக்கிறாள். அவனுக்கே தெரியாமல். அவ்வளவுதான். மற்றபடி நேரடியாக அப்போது அறிமுகமில்லை.

ஆனால் அதேபோல ஒருமுறை முக்கிய கதாபாத்திரமாக அவள் நடித்து கொண்டிருந்த ஒரு விளம்பரத்தில் ஒரு காட்சிக்காக வேண்டி துணை நடிகர்கள் கூட்டத்தில் அவனும் ஒருவனாக நின்றிருந்தான்.

காட்சித் தொடங்கியபோது அவன் மயங்கி விழுந்துவிட, “யாருடா இவன்… சீன் நல்லா வரும் போது இப்படி சொதப்பி வைச்சுட்டான்” என்று இயக்குனர் மற்றும் உடனிருந்த அனைவரும் கடுப்பாகினர்.

மனிதாபிமானமின்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது அனு அவனுக்காகப் பேசினாள்.

“முதல அவரைத் தூக்குங்க… டாக்டரை வர சொல்லுங்க” என்று அக்கறைப்பட்டவள், அவன் சாப்பிடாமல் மயங்கி விழுந்தது தெரிந்து உடனடியாக யூனிட்டிலிருந்து உணவு வரவழைத்து அவனைச் சாப்பிடவும் வைத்தாள்.

அவள் உதவியில் மனம் இளகியவன், தான் சினிமா வாய்ப்புக்காக ஊரிலிருந்து வந்தது முதற்கொண்டு அனைத்து கதையையும் சொல்லி முடிக்க, அவளுக்கு அவன் மீது பரிதாபம் உண்டானது.

“சினிமால சான்ஸ் கிடைக்குறது என்ன அவ்வளவு சாதாரணமான விஷயம்னு நினைசீங்களா… இங்க அதிகாரம் பணம் அதுக்கப்புறம்தான் திறமை… வெறும் திறமையை மட்டும் வைச்சுக்கிட்டு ஜெய்க்கிறது எல்லாம் ரொம்ப கஷ்டம்… அப்படி ஜெய்ச்சவங்க லட்சத்துல ஒருத்தங்களா மட்டும்தான் இருப்பாங்க”

அவள் சொன்ன நிதர்சனம் அவன் மூளைக்கு உரைத்தாலும் அவன் மனதிற்குப் புரியவில்லையே.

“இல்ல மேடம்… இதான் என் லட்சியம்… என்ன நடந்தாலும் சரி… என்னால என் இலட்சியத்தை விட்டுக்கொடுக்க முடியாது… அதுல ஜெயிக்க என்னால முடிஞ்சு வரை போராடுவேன்… எதை வேணா விட்டுக்கொடுப்பேன்… என் லட்சியத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன்” என்று அவன் தீர்மானமாக சொன்ன போது அவன் கண்களில் தெரிந்த வெறி அவன் உறுதியை அவளுக்கு பறைசாற்றியதில் மேலும் அவன் நம்பிக்கையை அவள் குலைக்கவில்லை.

“அப்புறம் உங்க இஷ்டம்” என்றவள் பின்னர் அவனிடம்,

“உங்க பேர் என்ன?” என்று கேட்டாள்.

அவன், “சீதாராமன்” என்று சொல்ல,

“ப்ச்… இந்த நேம் எல்லாம் ரொம்ப ஓல்ட் மாடல்… பேசாம சுரேஷ்னு வைச்சுக்கோங்க… இப்போதைக்கு பிரபலமா இண்டஸ்ட்ரில இருக்கிற யாருக்கும் இந்தப் பேர் இல்ல”

அவள் சொன்னதைப் பற்றி அவன் தீவிரமாக யோசிக்க,

“இங்க சீதாராமன் முருகன் இப்படியெல்லாம் சொன்னா யாரும் மதிக்கவே மாட்டாங்க” அவனும் அவள் சொன்னதை அனுபவபூர்வமாக உணர்ந்த காரணத்தால் ஆமோதிப்பாகத் தலையசைத்தான்.

அதற்கு பின் அவர்கள் உரையாடல் முடிந்துவிட அவன் வேண்டாமென்று மறுத்தும் கேட்காமல் ஒரு ஆயிரம் ரூபாயை அவனிடம் தந்தாள். கூடவே அவனுடைய கைப்பேசி எண்ணையும் வாங்கிகொண்டாள்.

அதன் பிரதிபலிப்பாக அடுத்து வந்த சில நாட்களில் ஆச்சர்யப்படும் விதமாக சில ஆடிஷன்களுக்கு அவனுக்கு அழைப்பு வந்தது. எல்லாம் அவளின் செயல்தான் என்று அறிந்த போது அவள் மீது அதீத மதிப்பு உருவாகியிருந்தது. அதேநேரம் அவள் நடிக்கும் விளம்பரங்களில் அவனுக்கு முக்கிய வேடங்கள் அளிக்கப்பட்டதில் அவளை மிகவும் உயர்வான இடத்தில் வைத்திருந்தான்.

அந்தச் சமயத்தில்தான் அனன்யாவிற்கு ஹிந்தி படங்களில் உடை வடிவமைப்பளாராக வாய்ப்பு கிடைத்தது. அங்கே அவள் வேலை செய்து கொண்டிருந்தப்போது நடந்த சில பார்ட்டிகள்தான் அவளுக்கு குடிக்கும் கலாச்சாரத்தை அறிமுகப்படுதின. கூடவே டேடிங் போன்ற விஷயங்களும்!

சில மாதங்கள் வேலை வேலையென்று மும்பையில் தங்கி இருந்தவள், தேவையில்லாத சில சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்தாள். அங்கே இருந்த ஒரு ஹிந்தி நடிகருடன் அவள் ஒன்றாக சுற்றுவதாகப் பேச்சு!

சினிமா துறையில் இப்படியான சர்ச்சைகளில் சிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்! ஆனால் வெறும் பேச்சுக்களோடு அந்தச் சர்ச்சை முடியவில்லை.

அவள் கர்ப்பமாக இருந்தாள். அதுவும் இரண்டு மாதங்கள் கழித்துதான் அவளுக்கு தெரிய வந்திருந்தது. உடனடியாக அந்தக் கருவை கலைத்துவிடும் முயற்சியில் அவள் இறங்கிய போதும் அவள் நினைத்தது நடக்கவில்லை.

“டாக்டர் அபார்ஷன் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்க”

“எப்படி பண்ணுவாங்க… ஜஸ்ட் இப்பதான் நாலு மாசம் முன்னாடி நீ அபார்ஷன் பண்ணிட்டு எவ்வளவு கம்ப்ளிகேஷன் ஃபேஸ் பண்ணின மறந்துட்டியா? பயங்கரமா ப்ளீடிங் ஆகி… இதுல காலேஜ் டேஸ் ல தேவையில்லாம அந்த டேப்லெட் யூஸ் பண்ணி” அனுவின் மொத்த ரகசியமும் தெரிந்த தோழி சாயா அவளைக் கடிந்துக்கொண்டிருக்க,

“ஐயோ ப்ளீஸ்… பழசை எல்லாம் பேசாதே சாயா” என்று அவள் கெஞ்சினாள்.

“சரி பேசல… இப்போ இந்த விஷயத்துக்கு என்ன பண்றது” என்று நிறுத்தியவள் மேலும், “ஆமா அந்த ஆக்டருக்கு இது தெரியுமா? சொன்னியா?” என்று வினவ,

“அவன்கிட்ட சொல்லி… அவனுக்குத்தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சே… அதுவுமில்லாம நாங்க எந்த கமிட்மென்ட்க்காகவும் பழகல… ஜஸ்ட் பிடிச்சிருந்தது… ஒண்ணா இருந்தோம்” என்றாள் சாதாரணமாக!

“அது சரி… இப்போ பிரச்சனை யாருக்கு?”

“விடு சாயா! சமாளிச்சுக்கலாம்”

“என்ன சமாளிப்ப? இந்த அபார்ஷனை பண்ணா உன் உயிருக்கு ஆபத்தா முடியலம்னு டாக்டர் சொல்லி இருக்காங்க அனு”

“அதான் என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்”

“இப்ப யோசிச்சதுக்கு கொஞ்சம் முன்னாடியே யோசிச்சிருந்தா இவ்வளவு பெரிய பிரச்சனையே இல்ல”

“சாயா” என்று சலித்து கொள்ள,

“இல்ல அணு… இப்பதான் இண்டஸ்டரில நீ நல்லா வளர்ந்துட்டு வர… இந்த நேரத்தில உனக்கு இதெல்லாம் தேவையா? சொல்லு… உங்க வீட்டுக்கு மட்டும் விஷயம் தெரிஞ்சா”

“ஐயோ! ப்ளீஸ் சாயா… என்னைப் படுத்தாதே கொஞ்சம் யோசிக்க விடு”

அந்தச் சமயத்தில் அவர்கள் என்ன யோசித்தும் அவர்கள் பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கவில்லை. அப்போதுதான் அவள் சென்னைக்கு ஒரு விளம்பரத்திற்காக நடிக்க வரும் போது சுரேஷை மீண்டும் சந்திக்க நேர்ந்தது.

அவள் சோர்வாக இருப்பதைப் பார்த்து அவன் அக்கறையாக விசாரிக்க அவளுக்கு அந்த நொடியே ஒரு யோசனை உதித்தது.

அவனிடம் ரொம்பவும் தயங்கி தயங்கியே தன் எண்ணத்தை தெரியப்படுத்தினாள். கூடவே அவனுக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகளை பெற்று தருவதாகவும் டீல் பேசினாள்.

அதிர்ச்சியாக அவளை பார்த்தவன், “இல்ல மேடம்… இதெல்லாம் சரியா வராது… அதுவுமில்லாம என்னை நம்பி ஊர்ல ஒரு பொண்ணு இருக்கா” என்ற போது,

“இது கல்யாணம் எல்லாம் இல்ல… ஜஸ்ட் கமிட்மென்ட்தான்… இதுல உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது” என்று நிறைய நிறைய பேசி அவனை அவள் சொன்னதற்கு சம்மதிக்கவும் வைத்தாள்.

குழந்தை பிறந்து அவனின் முதல் வயது வரை அவன் உடன் இருப்பதாகத்தான் அவர்களின் ஒப்பந்தம்.

தன் லட்சியத்திற்காக அப்படி ஒரு ஒப்பந்ததிற்கு அவன் சம்மதித்த பிறகு அவர்கள் நாடகங்கள் அரங்கேறியது. சினிமா திரையில் நடிப்பதற்காக வந்தவனுக்கு தன் சொந்த வாழ்க்கையிலேயே நடிப்பது போன்ற நிலை.

அனுவும் சுரேஷும் திருமண கோலத்தில் சென்று அவர்கள் வீட்டில் நின்றபோது எல்லோருக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. நிறைய கோபங்கள் அழுகைகள் என்ற போதும் மகளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காத பாஸ்கரன் அப்போதும் அவள் விருப்பத்திற்கு எதிராக நிற்கவில்லை.

ஆனால் ரேவதிக்கு இதில் சுத்தமாக உடன்பாடில்லை எனினும் கணவர் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து மௌனமாக இருந்தார்.

நாட்கள் நகர்ந்து செல்ல ஒரு மாதம் கழித்து அனு கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிப்பட்டுவிட்டது. இந்த விஷயம் தெரிந்த ரேவதி அதனை சாதாரணமாக விடவில்லை.

மகளைத் தோண்டித் துருவிக் கேள்விகள் கேட்டார்.

“கரெக்ட்டா சொல்லு எத்தனை மாசம் ஆகுது?” என்று ரேவதி கேட்க,

“அது வந்து” என்றவள் தயங்கும்போது அவர் சுரேஷின் புறம் திரும்பி, “நீங்க சொல்லுங்க தம்பி” என்று அவனிடம் கேட்டார்.

அவன் அரண்டு போக அனு ரகசியமாக அவனிடம் எதுவும் சொல்ல வேண்டாமென கண் காட்ட ரேவதி உடனே, “எத்தனை மாசம்னு உனக்கே தெரியாதா? இல்ல சொன்னா உன் குட்டு வெளிப்பட்டுடுமோன்னு பயப்படுறியா?” என்று எரிச்சலாகக் கேட்டார்.

“அதெல்லாம் எனக்கு எந்தப் பயமும் இல்ல… இப்ப என்ன உனக்கு எத்தனை மாசம்னு தெரியனும் அவ்வள்வுதானே?” என்றவள் அலட்சியமாக, “நாலு மாசம் ஆகுது… போதுமா?” என்றாள்.

சுரீலென்று ஒரு அறை அவள் கன்னத்தில் விழ அதிர்ந்தவள், “ம்ம்ம்ம்மா” என்றுக் கத்த,

“என்ன காரியம்டி பண்ணி வைச்சுருக்க?” என்று ரேவதியும் மகளுக்கு எதிராக குரலை உயர்த்தினார்.

“என்ன பண்ணிட்டாங்க… அதான் எனக்கும் சுரேஷுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல” என்று மிக சாதாரணமாக அவள் சொன்ன நொடி ரேவதியின் முகம் உக்கிரமாக மாறியது. 

சற்று நிதானித்தவர், “உன் வயத்துல வளர குழந்ததைக்கு அப்பா சுரேஷா?” என்று தடாலடியாக கேட்க அனு மிரண்டு போனாள். உடனடியாக அவள் பார்வை சுரேஷை சந்திக்க அவன் தான் எதுவும் சொல்லவில்லை என்பது போல் மறுப்பாகத் தலையசைத்தான்.

“அங்கே என்ன பார்க்குற… இங்க என்னைப் பார்த்து பதில் சொல்லு” ரேவதி அதிகாரமாக கேட்க,

“ஆ… ஆமா…. இதுல என்ன உனக்கு சந்தேகம்” என்று சொன்ன அனுவின் மற்றொரு கன்னத்திலும் அறை விழுந்தது. அதுவும் இம்முறை சற்று பலமாக!

அவள் அப்படியே வாயடைத்து போய் நின்றுவிட்டாள்.

“பாவி! எது எதுல பொய் சொல்றதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாம்… உன்னை மாதிரி ஒரு பொண்ணைப் பெத்து வளர்த்தை நினைச்சா என் உடம்பெல்லாம் பத்திக்கிட்டு எரியுதுடி” என்றவர் ஆக்ரோஷமாகப் பேசிக் கொண்டே போக அனுவுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘எப்படி அம்மாவுக்கு விஷயம் தெரியும்’ என்ற குழப்பத்தில் அவள் மௌனமாக, சுரேஷோ அம்மா மகள் சண்டையில்தான் இடையில் சிக்கி கொண்டதில் அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருந்தான். 

ரேவதி மேலும் மகளைப் பார்த்து, “என் குடும்ப மானத்தையே வாங்கிட்டியேடி… பொண்ணு பொண்ணுன்னு உங்க அப்பா உன்னைத் தலையில தூக்கி வைச்சிட்டு ஆடினாரு இல்ல… இதெல்லாம் அவருக்கு வேணும்” என்று கடுங்கோபத்தோடு பேசியவர்,

“எந்த ஜென்மத்தில செஞ்ச பாவமோ… நீ எனக்கு மகளா வந்து பொறந்து தொலைச்சிருக்க” என்ற போது அனு அதிர்ச்சியிலிருந்து மீண்டு,

“போதும் நிறுத்து மா… இப்ப என்ன பண்ணிட்டாங்கன்னு சும்மா ஓவரா குதிக்கிற… இங்க யார் குடும்ப மானமும் போகல… நீயே தேவையில்லாம ஓவரா சீனைப் போட்டுட்டு இருக்காதே” என்றாள். 

 “என்னடி சொன்ன?” கடுங்காகோபத்தோடு அவர் கத்தியதில் உடலெல்லாம் நடுங்க,

“சும்மா கத்தாதே… இந்த விஷயத்தை இதோட விடு” என்று மிக சாதாரணமாக சொல்லிவிட்டு அனு அவரை கண்டும் காணாமல் விறுவிறுவென அங்கிருந்து செல்ல,

“ஏ அனு… நீ இப்போசெய்றது பெரிய பாவம்… உன்னை அந்தப் பாவம் சும்மா விடாது சொல்லிட்டேன்” என்ற அவள் அம்மாவின் கதறலுக்கு அவள் திரும்பி கூடப் பார்க்கவில்லை.

ரேவதி உள்ளம் கொந்தளிக்க அந்தச் சூழ்நிலை உண்டாக்கிய பேரதிர்ச்சி தாங்க இயலாமல் அவர் நிற்க முடியாமல் தடுமாற, சுரேஷ் அவருக்கு உதவ வந்தான்.

அவனை அருவருக்கத்தக்க பார்வைப் பார்த்தவர் படிக்கட்டில் தானே இறங்க போகும் போதுதான் அந்த விபத்து நிகழ்ந்தது.

ரேவதி கோமாவில் வீழ்ந்துவிட அனுவை அந்த விஷயம் இம்மியளவு கூட பாதிக்கவில்லை என்பதுதான் சுரேஷிற்கு மிகப் பெரிய அதிர்ச்சி.

ஆனால் அவனின் மனமோ அவனைக் குத்திக்கிழித்தது. அந்த வீட்டிலிருக்கும் ஒவ்வொரு நாளும் அவனுக்கு நரகமாக இருந்தது. இதனால் அனுவிடம் ஒருமுறை, “அம்மாவுக்கு இப்படி நடந்ததுக்கு ஒருவகையில நாம தான் காரணம்… இனிமேயும் இப்படி ஒரு நடிப்பு தேவையா? பேசாம நாம உண்மையை சொல்லிட்டா என்ன” என்றவன் கேட்ட நொடி,

“ஷட்அப் சுரேஷ்… அந்த மாதிரி ஏதாவது பண்ணீங்க அப்புறம் நடக்கிறதே வேற… இந்த கமிட்மென்டுக்கு நீங்க முழு மனசோட ஒத்துக்கிட்டுதான் வந்திருக்கீங்க… தேவையில்லாம நடுவுல எந்த குழப்பத்தையும் பண்ணி வைக்காதீங்க” என்றுத் திட்டவட்டமாக சொல்லிவிட்டாள். அதன் பிறகு அவன் அவளிடம் அதுப்பற்றி பேசவே இல்லை.

ஆனால் அவனுக்கு மனம் பாரமாகவே இருந்தது.

ஆதலால் அவன் ரேவதியின் அறையை கடக்கும் போதெல்லாம் அவரிடம் மனம் வருந்தி மானசீகமாக மன்னிப்பு வேண்டுவான்.

இப்படியாக நாட்கள் மாதங்களாக உருண்டோடிவிட அருண் பிறந்தான். தனக்கு எந்த உறவுமே இல்லாத அந்த குழந்தையிடம் அன்போடும் அக்கறையோடும் அவனை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டான். அதுதான் தான் செய்த பாவத்திற்கெல்லாம் பரிகாரம் என்று நம்பினான்.

சுரேஷை மெல்ல மெல்ல குற்றவுணர்விலிருந்து மீட்டது அருணின் கள்ளங்கபடமில்லா புன்னகை.

தான் வெறும் ஒப்பந்தத்திற்காக அங்கே இருக்கிறோம் என்பதை எல்லாம் மறந்து அருணை தன் சொந்த மகனாகவே பாவிக்க ஆரம்பித்தான்.

ஆனால் அனுவிடம் அத்தகைய பொறுப்புணர்வு இல்லை. அருண் பிறந்த இரண்டாம் மாதத்திலிருந்து மீண்டும் அவள் பழையபடி பார்ட்டிகள் செல்ல ஆரம்பித்தாள்.

அனன்யாவின் செயல்கள் சுரேஷிற்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. அவளிடம் எப்போதும் அவனுக்கு மரியாதை உண்டு. அந்த மதிப்பின் காரணத்தால் அவளிடம் அதிகம் எதுவும் பேசவோ அல்லது கேட்கவோமாட்டான்.

ஆனாலும் அவள் வரம்பு மீறும் சமயங்களில் அவனால் அமைதி காக்க முடியவில்லை.

“என்ன அனு நீங்க குழந்தைக்கு ஃபீட்பண்ணிட்டு இருக்க சமயத்தில இப்படி ட்ரிங்க் பண்ணலாமா?” என்று வினவ,

“நான் என்ன பண்ணட்டும் சுரேஷ்… நான் வேண்டாம் வேண்டாம்னு சொல்லியும் ப்ரெண்ட்ஸ் எல்லாம் கம்பெல்பண்ணாங்க” என்று பதிலளிப்பாள் அவள்.

எந்தச் சூழ்நிலையிலும் சுரேஷ் தன் எல்லைகளை மீறாமல் பேசுவான். அவள் பதில் சொன்ன பிறகு அது சரியோ தவறோ? அவன் அது குறித்து மேலே எந்த விவாதமும் செய்ய மாட்டான்.

இப்படியாக தொடர்ந்த அவர்களின் ஒப்பந்த உறவில் அனுவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக அவன் மீது அபிமானம் பிறந்திருந்தது. எத்தனையோ முறை அவள் குடித்துவிட்டு வந்தபோது அவன் அவளை தாங்கி பிடித்திருக்கிறான். ஆனால் அந்தத் தொடுகையிலும் கூட ஒருவிதமான கண்ணியம் இருக்கும்.

அவன் ஒருமுறை கூட அத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்தி கொள்ள நினைக்கவில்லை.

அனுவிற்கு அவனின் அந்த கண்ணியமான நடத்தைப் பெரும் வியப்பை உண்டாக்கியது. அவள் பழகிய ஆடவர்களிடமிருந்து அவன் முற்றிலும் மாறுப்பட்டு தெரிந்ததுதான் அதற்கு காரணம். அவனிடம் நேரடியாக அது குறித்து ஒருநாள் கேட்டும்விட்டாள்.

“ஏன் சுரேஷ்? நம்ம இரண்டு பேரும் இத்தனை நாளே ஒரே அறையில ஒண்ணா இருக்கோமே… உனக்கு எப்பயாச்சும் வேற மாதிரி எதாச்சும் ஃபீல் வந்திருக்கா… சீன் எல்லாம் போடாம வெளிபடையா சொல்லு… நான் தப்பால்லாம் நினைச்சுக்க மாட்டேன்”

முதலில் அவள் கேள்வி புரியாமல் குழம்பியவன் புரிந்து கொண்ட பிறகு மிக தெளிவாக பதிலும் தந்தான்.

“இல்ல அனு… எனக்கு அப்படியெல்லாம் தோணினது இல்ல”

“சும்மா சமாளிக்காதே… நான்தான் ஒன்னும் நினைச்சிக்கமாட்டேன்னு சொன்னேன் இல்ல”

“இல்ல அனு… உண்மையிலேயே அப்படியெல்லாம் எனக்கு தோணினது இல்ல… அதுவுமில்லாம என் மனசுல ஒரு பொண்ணு இருக்கா…

அதைப்பத்தி நான்தான் உங்ககிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்ல… என்னால அவளை தவிர வேற யாரையும் அந்த இடத்தில வைச்சு யோசிக்கவே முடியாது… அந்தளவுக்கு அவ என்னை காதலிச்சா… என்னை நம்பி என் கூடவே வரன்னு சொன்னவளை நான்தான்” என்றவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் விழிகளில் நீர் நிறைந்துவிட, அவன் மேலே பேச முடியாமல் அமைதியானான்.

அவன் வார்த்தைகள் அனுவை ஏதோ செய்தது. எந்தச் சூழ்நிலையிலும் தான் காதலித்த பெண்ணை மனதில் சுமந்து கொண்டிருக்கும் அவனின் தூய்மையான உள்ளமும் கண்ணியமும் அவளை வியப்பின் விளம்பில் நிறுத்தியது.

அதேநேரம் திருமணமான ஒரு ஆண்மகன் தன் மனைவியைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் தன்னோடு உறவு வைத்து கொண்டதையும் அதற்கு தானும் உடந்தையாக இருந்ததையும் எண்ணும் போது அந்த நொடி அவள் உடல் கூசிப் போனது.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையைக் குறித்து தனிப்பட்ட கண்ணோட்டங்களும் கருத்துக்களும் உண்டு.

அனுவும் வாழ்க்கையை தன் பார்வையிலிருந்து மட்டுமே பார்த்தாள். தனக்கு எது விருப்பமோ அதுதான் சரியென்று நினைத்து செய்தாள்.

ஆனால் சுரேஷின் கண்ணோட்டமும் அணுகுமுறைகளும் வாழ்க்கை மீதான அவளின் கண்ணோட்டத்தையும் மனிதர்கள் மீதான பார்வையையும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியிருந்தது.

வேறு யார் சொல்லியும் கேட்காத அனு அவள் அறியாமலே சுரேஷின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட ஆரம்பித்திருந்தாள். அவனிடம் அவளுக்கு தனிப்பட்ட மரியாதை உண்டாகியிருந்தது.

ஆனால் அந்த மரியாதை அவள் அறியாமலே ஒருநாள் காதலாகவும் மாறியிருந்தது.

Quote

Super ma 

You cannot copy content