You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow Kanavugal - 33

Quote

33

ஒருமுறை அனன்யா மும்பைக்கு சென்றிருந்த சமயத்தில் அருணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. சுரேஷ் அனுவிற்கு தகவல் சொல்லியும் அவள் இரண்டு நாட்கள் கழித்தே வீடு வந்து சேர்ந்தாள்.

வீட்டிலுள்ள எல்லோருமே அவள் மீது கோபத்தில் இருந்தனர். இருப்பினும் அவளிடம் கேட்டால் மட்டும் அவள் என்ன திருந்திவிடும் ரகமா? ஆதலால் அஜயும் மதுவும் அவளிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

பாஸ்கரன் மட்டும் மகளிடம், “என்ன அனு? குழந்தைக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில அப்படி என்ன வேலை உனக்கு?” என்று வினவினார்.

“இல்லப்பா… அவார்ட் ப்ரோக்ராம் தவிர்க்க முடியல” என்று தந்தையைச் சமாளித்துவிட்டு நேராக தன் அறைக்கு வந்தவள் அங்கே சுரேஷ் அருணுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து அவர்கள் அருகில் சென்று அமர்ந்தாள்.

சுரேஷின் கைகளில் துவண்டு படுத்து கிடந்த தன் மகனின் முகத்தை வாஞ்சையாக பார்த்தவள் உள்ளம் கலங்கி, “அருண் இப்ப எப்படி இருக்கான் சுரேஷ்?” என்றுக் கேட்க,

“அவன் எப்படி இருந்தால் உங்களுக்கு என்னங்க? உங்களுக்கு உங்க வேலை…உங்கப் பார்ட்டி… அதானே முக்கியம்” என்று முகத்திலறைந்தது போல் சுரேஷிடமிருந்து வந்த பதில் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இப்படியெல்லாம் சுரேஷ் ஒருநாளும் அவளிடம் பேசியதில்லை. ஏதும் புரியாமல் அவள் அவனைப் பார்க்க,

“அம்மாங்கிற உறவுக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? தான்தான் முக்கியம் தன்னோட சுயலம்தான் முக்கியம்னு யோசிக்க தெரியாத உறவுங்க அது” என்றான்.

“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்று சீற்றமாக எழ,

“ஒ! அப்போ அருண் உடம்பு முடியாம இருக்கிறது உங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்ல அப்படிதானே?” என்றவன் குத்தலாக கேட்க அவளால் பதிலுரைக்க முடியவில்லை.

அவனோ அவளை விடாமல், “நானும் உங்ககிட்ட எதுவும் கேட்க கூடாதுன்னுதான் நினைச்சேன்… ஆனா முடியலங்க… இந்த இரண்டு நாளில அருண் எப்படி கஷ்டபட்டுட்டான் தெரியுமாங்க?

ஆனா அதைப்பத்தியெல்லாம் உங்களுக்கென்ன கவலை… உங்களுக்கு உங்க வேலை… உங்க பார்ட்டிதானே முக்கியம்” என்றான்.

“சுரேஷ் போதும்… யு ஆர் கிராஸிங் யுவர் லிமிட்ஸ்” இம்முறை அவள் கோபமாக அவனிடம் விரலைக் காட்டி எச்சரித்தாள்.

தன் வீட்டிலுள்ளவர்களே யாரும் தன்னை எந்த கேள்வியும் கேட்காதபோது இவன் யார் தன்னைக் கேள்வி கேட்க என்ற பாவனையில் அவள் ஒரு பார்வைப் பார்க்க அவன் அப்போதும் தன் பேச்சை நிறுத்தவில்லை.

“முடியாதுங்க” என்று அழுத்தமாக சொல்லியவன்,

“அம்மாவோட அரவணைப்புக்காக குழந்தை எப்படி ஏங்கி போனான்னு பக்கத்தில இருந்து பார்த்த எனக்குதான் தெரியும்… என்னைப் போல அவனுக்கும் அம்மா இல்லன்னா பரவாயில்லை… ஆனா இருந்தும் இல்லாம இருக்கிறது ரொம்ப கொடுமைங்க…

புள்ளைய பெத்துட்டா மட்டும் தாய்மைங்கிற உணர்வு வந்திராது… அதை உள்ளே இருந்து உணரனும்… அந்தக் குழந்தையை கண்ணும் கருத்துமா கவனிச்சிக்கணும்…” என்ற போது அவள் முகம் கடுகடுத்தது.

இறுதியாக ஒரு அலட்சிய பார்வையோடு அவளைப் பார்த்தவன், “ஹ்ம்ம்… உங்ககிட்ட போய் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன் பாருங்க… நீங்கதான் பெத்த அம்மாவோட வலியையே புரிஞ்சிக்காத ஆளாச்சே… நல்லா நடமாடிட்டு இருந்தவங்களை இப்படி படுத்தப் படுக்கையா ஆக்கிட்டீங்ளே!”

அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவள் மனதை சுக்குநூறாக கிழிக்க,

“என்ன சுரேஷ் பேசுறீங்க? அம்மா படிக்கட்டுல இருந்த விழுந்ததுக்கு நான் என்ன பண்ணுவான்…. அதுல என் தப்பு என்ன?”

“நீங்க அன்னைக்கு பேசுன பேச்சுலதான் அவங்களுக்கு அப்படி ஆச்சு… நீங்க ஏற்கனவே அவங்களை மனசால கொன்னுட்டீங்க… அப்புறம் அவங்க விழுந்து அடிப்பட்ட தெல்லாம் உடம்புக்குதான்… மனசு செத்து போன பிறகு அந்த உடம்பு மட்டும் தனிச்சு என்ன பண்ணும்… அதான் அவங்க இப்படி படுத்த படுக்கையாகிடக்குறாங்க”

அவன் பேசிய ஒவ்வொரு சொல்லிலும் அவள் உள்ளத்தில் ஆழமாக அடிவாங்கினாள்.

“உங்களை நான் இப்படியெல்லாம் பேச எனக்கு எந்த உரிமையும் இல்லைன்னு எனக்கு தெரியும்… ஆனாலும் மனசு கேட்கல… பொய்தானாலும் அருண் என்னை அப்பா அப்பான்னு கூப்பிடுறாங்க… நமக்குள்ள இருக்கிறது வெறும் கமிட்மெண்ட்தானாலும் அவன் என்னை அப்படி கூப்பிடும் போது என்னால பொய்யா நடிக்க முடியல

அவனை வேறயாரோட புள்ளையாவோ பார்க்க முடியல… இப்ப வரைக்கும் அவனை நான் என் பையனாதான் பார்க்கிறான்… அவனுக்கு உடம்பு முடியாம போனதுல நான் ரொம்ப அப்செட் ஆகிட்டேன்… அதான் உங்ககிட்ட இப்படியெல்லாம்… என்னை மன்னிச்சிடுங்க” என்றுச் சொல்லிவிட்டு அவன் விறுவிறுவென வெளியேறிவிட,

இப்படியும் ஒருவனா? என்று அனு வியந்து போனாள். அவன் மீதான மரியாதை அபிரிமிதமாகப் பெருகியது. வேறு யார் இப்படி பேசியிருந்தாலும் அந்த வார்த்தைகள் இந்தளவு அவளை தாக்கியிருக்குமா என்று அவளுக்கு தெரியாது.

ஆனால் சுரேஷின் பேச்சிலிருந்த நியாயம் அவள் மூளைக்குள் தெறித்தது.

இத்தனை நாட்களாக தன் சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்றிருந்தவளுக்கு மற்றவர்களின் உணர்வுகளும் கொஞ்சம் புரிய ஆரம்பித்திருந்தது.

இந்தப் புரிதலின் வழியே அவளுக்குள் நிறைய மாற்றங்களும் நிகழ்ந்தது. அருணுக்காக நேரம் ஒதுக்க ஆரம்பித்தாள். அவனிடம் அன்பாக இருந்தாள்.

ஆனால் அப்போதும் ‘ப்பா அப்பா’ என்று சுரேஷிடம் மட்டுமே அருண் ஒட்டுதலாக இருந்தான். எல்லோரைவிடவும் சுரேஷ்தான் அவனுக்கு முதன்மையாகவும் இருந்தான்.

ஒரு அப்பாவாக அவன் அருணை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டதில் அனுவின் மனம் மொத்தமாக அவன் புறம் சாய்ந்திருந்தது. அப்போதுதான் கமிட்மென்ட் எனும் நிலையை கடந்து காதல் நிலையை தொட்டது அவள் உள்ளம்

சுரேஷ் இது ஏதும் அறியாமல் அவளிடம் எப்போதும் போல நட்பாகத்தான் பழகினான். இந்தச் சூழ்நிலையில் அருணின் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாட பாஸ்கரன் ஏற்பாடு செய்தார்.

எல்லோர் மனதையும் அந்த சந்தோஷம் நிறைத்திருந்தது. அனன்யாவை தவிர! அவர்கள் ஒப்பந்தபடி இருவரும் சேர்ந்திருக்க போகும் கடைசி நாள் அதுதானே!

அவள் மனம் அன்று போல் என்றுமே தவித்ததில்லை. இந்த உறவு அப்படியே நிலைத்துவிட கூடாதா என்று உள்ளுரமருகினாள்.

அவனிடமே தன் எண்ணத்தை சொல்லிவிடலாம் என்று கூட முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லையே.

இத்தனை நாட்களாக அவள் செய்த எதுவும் அவளைப் பெரிதாக பாதித்ததில்லை. ஆனால் இன்று தன் மனதிலுள்ள காதலைச் சொல்ல எண்ணியபோது அவள் செய்த தவறுகள் யாவும் விஸ்வரூபம் எடுத்து அவள் முன்னமே வந்து நின்றன

அவளின் மனப்போரட்டங்களோடு அருண் பிறந்த நாளும் ஒருவாறு முடிந்திருந்தது. ஆனால் உடனடியாக சுரேஷ் கிளம்ப முடியாத சூழ்நிலை என்பதால் அவன் அங்கேயே தங்கியிருந்தான்.

அனு அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அவனிடம்,

“உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயம் சொல்லட்டுமா?” என்று ஆரம்பித்தவள்,

“டைரக்டர் கண்ணன் எடுக்க போற அடுத்த படத்துல நீங்க செகண்ட் ஹீரோ ரோல் பண்ண போறீங்க…” என்றாள்.

“நிஜமாவா அனு?” என்றவன் நம்ப முடியாமல் கேட்க, “ம்ம்ம்” என்றாள்.

அவர்கள் ஒப்பந்தபடி இது அவர்கள் முன்னமே பேசி வைத்ததுதான் என்றாலும் இத்தனை சீக்கிரத்தில் தனக்கு இந்தளவுக்குப் பெரிய வாய்ப்பு அமையும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை

“தேங்க்ஸ் அனு… தேங்க யு ஸோமச்”. என்றவன் மகிழ்ச்சி பொங்க கூற,

“இன்னும் ரெண்டு நாளில நீங்க ஷூட்டிங்காக பெங்களூர் போகணும்” என்றவள் மேலும் சொல்ல அவனுக்கு தலை கால் புரியவில்லை. 

“இப்ப கூட நீங்க சொல்றதை என்னால நம்பவே முடியலங்க… என் கால் தரையில நிற்கல” என்றவன் சந்தோஷத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருக்க, அதுதான் சரியான சமயம் என்று எண்ணி அவனிடம் பேச எத்தனித்தாள்.

அதற்குள் அவன் முந்தி கொண்டு, “நான் உங்ககிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன்… அதை இப்போ உங்ககிட்ட சொல்லணும்னு தோணுது” என்றவன் இழுக்க அவள் புரியாமல் அவனைப் பார்த்தாள்.

சுரேஷ் அவளிடம் அப்போதே இந்துமதி அவர்கள் வீட்டில் செவிலயராக வேலைப் பார்த்த கதையெல்லாம் சொல்லி முடிக்க, அனு பேச்சற்றுப் போனாள். இப்படி ஒரு திருப்பத்தை அவள் எதிர்ப்பார்க்கவே இல்லை.

அவள் அதிர்ச்சியில் உறைந்து நிற்க அவனோ உதட்டெல்லாம் புன்னகையாக, “எப்படியாச்சும் இந்துக்கிட்டப் பேசி அவளையும் பெங்களூர் அழைச்சிட்டு போயிடலாம்னு இருக்கேன்” என்ற போது அவள் தலையில் இடியே இறங்கியது.

அதற்குப் பின்பு அவள் சொல்ல நினைத்ததை எங்கே சொல்வது? அப்படியே ஊமையாக நின்றுவிட்டாள். அவள் விழிகளில் கசிந்த நீரை அவனுக்கு தெரியா வண்ணம் துடைத்து கொண்டவள் அந்த உரையாடலை அதோடு முடித்தாள்.

பெங்களூர் பயணத்திற்கு ஒரு நாள் முன்னதாக அவன் கிளம்புவதாக சொன்ன போது அவள் மனம் படபடத்தது. அவனை எப்படியாவது தடுத்துவிட வேண்டுமென்று அவள் உள்ளம் தவிக்க, அவனோ அருணைப் பிரிய போகிறோம் என்ற கவலையில் இருந்தான்.

அருணுக்கு புதிது புதிதாக விளையாட்டு பொருட்கள் வாங்கி குவித்து தானுமே ஒரு குழந்தையாக மாறி அன்று முழுக்கவும் அவனுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.

அனு மனமோ அவனிடம் பேச அல்லாடியது. அவன் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் தன் மனதிலுள்ள எண்ணத்தை அவனிடம் சொல்லிவிட வேண்டுமென்று அவள் உள்ளம் துடித்தது.

இருப்பினும் அவன் முகத்திற்கு நேராக சொல்லும் தைரியம் இல்லாதவளாக தான் சொல்ல நினைத்த அனைத்தையும் ஆடியோவாகப் பதிவிட்டு அவன் கைப்பேசிக்கு குறுந்தகவலாக அனுப்பிவைத்தாள்.

அவன் புறப்படுவதற்கு முன்னதாக எப்படியாவது அதனைக் கேட்டுவிடுவான் என்று நினைத்திருந்தாள். ஆனால் அவன் கடைசி வரை அந்த ஆடியோவை கேட்காமலே போனது அவன் விதியா இல்லை அனுவின் விதியோ?

அருணை அணைத்து முத்தமிட்டுவிட்டு அனுவிடம், “வரேன்ங்க” என்று கிளம்பியவன் இறுதியாக ஒரே ஒரு விஷயத்தை அவளிடம் வேண்டுதலாக வைத்துவிட்டுப் போனான்.

 “இதுவரைக்கும் எது நடந்திருந்தாலும் அதை எல்லாம் மறந்திடுங்கஅனு… இனிமேயாச்சும் எந்த முடிவு எடுக்குறதா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு எடுங்க… அப்புறம்” என்று அவன் தயங்கிவிட்டு, “நான் ஒரு விஷயம் கேட்டா கோபப்பட கூடாது” என்றான்.

“இல்ல சொல்லுங்க” என்றாள்.

“ஏங்க நீங்க உங்க அம்மா ரூமுக்கு போக மாட்டேன்னு பிடிவாதமா இருக்கீங்க?”அந்தச் சமயத்தில் இந்தக் கேள்வியை அவனிடமிருந்து அவள் எதிர்பார்க்கவில்லை.

பெருமூச்செறிந்தவள் பின் நிதானமாக அவனுக்கு பதிலளித்தாள்.

“நீங்க நினைக்கிற மாதிரி அது பிடிவாதம் இல்ல சுரேஷ்… பயம்… அம்மா இப்போ கான்ஸியஸ்ல இல்லன்னாலும் அவங்க பக்கத்துல போய் நிற்கவே எனக்கு ரொம்ப பயமாவும் கில்டியாவும் இருக்கு”

“அப்படியெல்லாம் யோசிக்காதீங்க அனு… இந்த உலகத்திலேயே நம்ம என்ன செஞ்சாலும் நம்மல மன்னிக்கிற ஒரு ஆத்மா இருக்குன்னா அது அம்மா மட்டும்தான்… நீங்க அவங்க கிட்ட பேசுங்களேன்… அவங்க சீக்கிரம் எழுந்து நடமாடுறாங்களா இல்லையான்னு மட்டும் பாருங்க” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு அவள் சம்மதமாக தலையசைக்க, அவனும் மிதமாக ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அவளிடமிருந்து விடைபெற்றான்.

இனிதான் தன் வாழ்க்கையின் வெற்றி பயணமே தொடங்க போகிறது என்று எண்ணிய சுரேஷிற்கு அதுதான் தன்னுடைய இறுதியான பயணமாக அமைய போகிறதென்று அவன் நினைத்திருப்பானா?

இல்லை அவன் சென்ற வழிதடம் பார்த்து காதலை கண்ணீராக உகுத்த பெண்ணவளுக்கு மீண்டும் அவனை உயிரற்ற உடலாகத்தான் பார்க்கும் போகிறோம் என்று நினைத்திருப்பாளா?

எல்லாமே விதியின் வசம் நடந்து முடிந்து போனது. ஆனால் அந்த விதியின் முடிவை ஏற்கத்தான் அனுவால் முடியவில்லை.

அழுது அழுது ஓய்ந்து போனவள் தாள முடியாத துயரோடு தன் தாயின் கரத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டு, “எல்லாத்துக்கும் நான்தான் காரணம்… சுரேஷ் செத்து போனதுக்கும் நான்தான் காரணம்… நீங்க இப்படி இருக்கிறதுக்கும் நான்தான் காரணம்… சுரேஷோட ஆசை கனவு எல்லாமே அழிஞ்சு போனதுக்கும் நான்தான் காரணம்… எல்லாமே என்னோட தப்பு… எல்லாமே நான் ஒருத்தி செஞ்ச தப்புனாலதான்” என்றுக் கதறினாள்.

சரி செய்யவே முடியாத பல தவறுகளை அனு செய்திருந்த போதும் இன்று அதற்காக அவள் மனம் வருந்தி அழுவதைப் பார்த்து மதுவின் மனமும் இறங்கியது. அதேநேரம் அனு சொன்ன முழுவதையும் கேட்டப் பின் அவளுக்கு ரொம்பவும் குழப்பமாகவும் இருந்தது.

இந்துவும் சுரேஷும் முன்னாள் காதலர்கள் என்றால் சரவணன் இதற்குள் எப்படி வந்தான். இந்துவிற்கும் சரவணனுக்குமான திருமண வாழ்க்கை…

யோசிக்க யோசிக்க ஏதோ சுழலில் சிக்கியது போல அவள் மாட்டித் தவித்தாள். இப்போதும் அவளுக்கு சுரேஷின் கொலை விஷயத்தில் எந்தத் தெளிவும் கிடைக்கவில்லை.

அதேநேரம் இனிமேயும் அங்கே நிற்பது சரிவராது என்று எண்ணி அவள் மெல்லமாக வெளியே வரும்போதே அஜய் எதிர்ப்பட்டு நின்றான்.

அந்த இருளில் திடீரென்று அவன் எதிரே வந்து நின்றதில் அவள் உள்ளம் படபடக்க, “இந்த நேரத்தில நீ அம்மா ரூம்ல என்ன பண்ணிட்டு இருந்த” என்று அவன் கேட்க, அதேசமயத்தில் உள்ளிருந்த அனு அவன் குரல் கேட்டுத் துணுக்குற்று முகத்தைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

மது அவர்கள் இருவருக்கிடையில் சிக்கிக் கொண்டு திருதிருவென விழிக்க, அப்போது அவன் கவனம் மதுவிடமிருந்து அனுவிடம் திரும்பியது.

“ஆமா நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்று தன் சகோதிரியைப் பார்த்துக் கேட்க,

“அது… நான் சும்மா அம்மா ரூம்ல இருக்கலாம்னு வந்தேன்” என்றாள்.

“நீ அம்மா கூட இருக்கலாம்னு வந்தியா? இந்தக் கதையை நீ என்னை நம்ப சொல்றியா?” என்றவன் எரிச்சலாக,

“நீ நம்பாட்டி போ” என்று அனுவெடுக்கென பதில் சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டாள்.

“என்ன திடீர்னு அவளுக்கு அம்மா பாசம் அப்படியே பொத்துகிட்டு வந்திருச்சு” என்றவன் கடுப்பாக, “ஐயோ! விடு அஜய்… இருந்துட்டு போகட்டும்.. நீ வா நாம போலாம்” என்றாள்.

“ஆமா நீ எதுக்கு இந்த நேரத்தில கீழே வந்த… அதுவும் தனியா?” என்றவன் அவள் புறம் தன் கேள்வியைத் திருப்பினான்.

“அது பசிச்சுதா?”

“அதுக்குதான் ரூம்ல ஆப்பிள் வைச்சிருந்தேனே”

“இல்ல ஆப்பிள் சாப்பிட பிடிக்கலை… அதான் கிச்சன்ல எதாச்சும் இருக்கானு பார்க்கலாம்னு வந்தபோதுதான்… அனுவை அத்தை ரூமல பார்த்துட்டு உள்ளே போனேன்” என்றவள் கோர்வையாகப் பொய் புனைந்துக் கொண்டிருந்தாள். அனுவைத் தேடி வந்ததாக சொன்னாள் அவன் நிச்சயம் கோபம் படுவான் என்றவள் மாற்றி சொல்லி சமாளிக்க,

“உனக்கு வேறெதாச்சும் சாப்பிடணும்னா என்னை எழுப்ப வேண்டியது தானே… உன்னை யார் தனியா கீழே வர சொன்னது” என்றுக் கண்டிப்போடு கேட்டவன், “சரி நீ ரூமுக்கு போ… நான் உனக்கு சாப்பிட எதாச்சும் எடுத்துட்டுவரேன்” என்றுச் சொல்லிவிட்டு திரும்பும் போது,

“அஜய்… அஜய்” என்று அழைத்து கொண்டே அனு வேகமாக ஓடி வந்தாள்.

அஜயும் மதுவும் என்னவென்று புரியாமல் அவளைப் பார்க்க, “அம்மா இல்ல அம்மா… கண்ணில” என்று எதையோ சொல்ல அவள் உதடுகள் துடிக்க, “அம்மாவுக்கு என்னடி ஆச்சு?” என்று பதறிய அஜய் உடனடியாக தன் அம்மாவின் அறைக்கு ஓடினான்.

“என்னாச்சு அஜய்?” என்றுக் கேட்டு கொண்டு மதுவும் பதட்டத்தோடு அவன் பின்னோடு வர,

எந்த உணர்வுமில்லாமல் ஜடமாக படுத்து கிடந்த ரேவதியின் மூடிய விழிகளில் கண்ணீர் தடத்தைப் பார்க்க நேர்ந்தது. எதிர்பாரா ஆச்சரியத்தில் அந்தக் காட்சியைப் பார்த்த மூவருமே இன்பமாய் நெகிழ்ந்தனர்.

Quote

Super ma 

You cannot copy content