You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Rainbow kanavugal - 4

Quote

4

மதுபாலாவின் எண்ணம் முழுக்கவும் சுரேஷின் கொலையைப் பற்றிதான். சுரேஷ் வேறு யாருமில்லை. அவள் கணவன் அஜயின் சகோதரி அனன்யாவின் கணவன்.

மதுவின் கணவன் அஜயும் அனன்யாவும் இரட்டையர்கள். அனன்யா ஒரு விளம்பர மாடல். அதேநேரம் பேஷன் டிசைனிங்தான் அவள் தொழில். தொழிலென்று சொல்வதை விட அதை அவள் உயிரென்று சொன்னால் சரியாக இருக்கும். அந்தளவு அவளுக்கு அந்த வேலையின் மீது காதல்!

தமிழ் சினிமாவின் தற்போதைய பிரபலங்கள் பலருக்கும் உடை வடிவமைத்து கொடுப்பவள் அவள்தான்.

அவளின் தனித்துவமான உடை வடிவமைப்புகளைக் கண்ட ஹிந்தி சினிமாத் துறையும் அவளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. இப்படியாக வளர்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த அனன்யாவிற்கு சாதாரண துணை நடிகன் சுரேஷின் மீது காதல் வந்தது என்றால் நம்ப முடியுமா? ஆனால் அது நடந்தது. எப்படி என்பதுதான் யாருக்கும் தெரியாத மிகப் பெரிய கேள்வி.

சுரேஷ் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்தவன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் அவன் பல மேடை நாடகங்களில் நடித்திருக்கிறான். பெரும்பாலும் அவன் நடிக்கும் நாடகங்களில் அவன்தான் கதாநாயகன்.

நாயகன் தோற்றத்திற்கு அவன்தான் வெகுப் பொருத்தமாக இருப்பான் என்ற காரணத்தினாலேயே அவனுக்கு அந்தச் சலுகை!

‘நீ பார்க்க விஜய் மாதிரியே இருக்கடா… உன்கிட்ட நல்ல நடிப்பு திறமை இருக்கு… நீ மட்டும் சினிமா ல நடிச்சேன்னு வைய்யு… விஜய் அஜித் எல்லாம் காணாம போயிடு வாங்க’

இப்படியான அதீத புகழுரைகள் அவனுக்குள் சினிமா கனவுகளை வேரூன்றி வளர்த்தது. தமிழ் திரைப்படங்களில் நாயகனாக வலம் வர வேண்டுமென்ற ஆசை அவனுக்குள் கொழுந்துவிட்டது

சிறிய குளத்தில் வாழும் மீன் சமுத்திரத்தை நோக்கி பயணிப்பது போல் அவன் சினிமாவில் வாய்ப்புத் தேடி சென்னை வந்து சேர்ந்தான். வானவில் போல பல வண்ணமயமான கனவுகளோடு!

எத்தனை திறமைசாலியாக இருந்தாலும் இன்றைய சினிமா உலகத்தில் நட்சத்திரமாக ஒளிர்வதெல்லாம் சற்றே அசாத்தியமான காரியம்தான்.

அப்படியிருக்க சுரேஷ் ஒரு சிறு ஊரிலிருந்து புறப்பட்டு வந்து எதுவும் தெரியாமல் சென்னையில் தங்கி சினிமா வாய்ப்புத் தேடி அலைவது நீச்சல் தெரியாதவன் கடலில் மூழ்கி முத்தெடுப்பது போலதான்.

ஆனால் சினிமா மீதான அபிரிமிதமான காதல் அவனைத் துவளவிடவில்லை. எத்தனையோ தோல்விகளும் நிராகரிப்புகளும் கடந்து அவன் தன் முயற்சிகளைத் தொடர்ந்தான்.

அவன் முயற்சியின் பலனாக விளம்பரங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிட்டியது. அந்த வாய்ப்புகளை பயன்படுத்திப் படிப்படியாக மேலே ஏறி தமிழ் சினிமாவில் பெரிய கதாநாயகனாக வலம் வரலாம் என்றுக் கனவு கோட்டைக் கட்டிக்கொண்டிருந்தான்.

ஆனால் எப்படியோ அவனுக்கும் அனன்யாவிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்து கல்யாணத்தில் முடிந்திருந்தது.

திடீரென்று அனன்யா அவனைத் திருமணம் முடித்து வீட்டிற்கு அழைத்து வந்தாள்.

அஜய் அனன்யாவின் தந்தை பாஸ்கரன் அன்றைய நிலையில் இந்தியாவில் வளர்ந்து வரும் பெரிய தொழிலதிபர். அனன்யா ஆட்டோ மொபைல் சர்வீஸில் தொடங்கிய அவர் வாழ்க்கை இன்று சென்னையில் புத்தம்புது கார்களை விற்கும் ஏ.கே. கார் டீலராக உயர்ந்திருந்தது.

சென்னையில் மட்டும் நான்கு பெரிய கார் ஷோ ரூம்கள் இருந்தன அவருக்கு. அதன் மொத்த நிர்வாகமும் தற்போது அவரின் மகன் அஜய் கிருஷ்ணா வசமிருந்தது. 

ஆனால் பாஸ்கரன் குழந்தைகளின் சந்தோஷத்தை விட பணத்தையும் அந்தஸ்தையும் ஒரு பொருட்டாக நினைப்பவர் அல்ல.

அதுவுமில்லாமல் மகனை விடவும் மகள் மீது அவருக்கு அதீத பாசம். அவள் தன்னிடம் சொல்லாமல் மணம் புரிந்து கொண்டதில் அவருக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அவள் காதலுக்கும் திருமணத்திற்கும் அவர் பெரிதாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மகளைப் பிரிய மனமில்லாமல் அவர்களை தங்களோடே தங்கவும் வைத்துக் கொண்டார். அவர்களின் மகன் அருணுக்கு தற்போதுதான் முதல் பிறந்த நாள் முடிந்திருந்தது .

அதனை மிகவும் பிரமாண்டமாக நடத்திய அந்த சந்தோஷத்தின் தாக்கம் குறைவதற்குள்ளாக இப்படி ஒரு துயரம் நிகழ்ந்து முடிந்துவிட்டது.

அனன்யாவை விடவும் அருணை நினைத்தால்தான் மதுவுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது. அவனுக்கு அம்மாவையும்விட அப்பாதான் எல்லாம். அந்தளவு சுரேஷ் தன் மகனை அன்போடும் அக்கறையோடும் கவனித்துக் கொண்டான்.

ஆனால் அனன்யா அப்படியே அவனுக்கு நேர்மார். வேலை வேலையென்று இரவும் பகலும் ஓடிக் கொண்டே இருப்பதால் மகனைக் கவனித்து கொள்வதில் அவளுக்கு அவ்வளவாக நேரமும் கிடையாது. அக்கறையும் கிடையாது. ஆதலால் அவளுக்கும் சேர்த்து சுரேஷ் தன் மகன் அருண் மீது அன்பையும் பாசத்தையும் கொட்டினான்.

அதேநேரம் அவன் எல்லோரிடமும் ரொம்பவும் இனிமையாகவும் எளிமையாகவும் பழக கூடியவன். இதனால் சுரேஷின் மீது மதுவுக்கு தனிப்பட்ட முறையில் மரியாதையிருந்தது.

ஆனால் திடீரென்று வந்த அவனின் மரண செய்தி எல்லோரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. அனன்யாவோ நொறுங்கிப் போயிருந்தாள்.

தன் தந்தைக்கு என்ன நேர்ந்தது என்று அறியாத அந்தப் பிஞ்சு, ஓயாமல் தம் மழலையால் அப்பாவைக் கேட்டுக் கொண்டேயிருந்தது.

அந்த இளம் தளிருக்கு எப்படி அவன் அப்பா இறந்து போன செய்தியைச் சொல்லி புரியவைப்பது. தந்தையின் ஈம சடங்குகளை செய்யும் வயதா அவனுக்கு! 

இந்த இரண்டு நாட்களாக வீடு முழுக்க துக்கத்தின் சாயல் படிந்திருந்தது. அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் தான் இங்கே வந்திருக்கவே கூடாது.

ஆனால் சரவணின் வேதனையையும் தவிப்பையும் பார்த்த பின் அவளால் எப்படி வராமல் இருக்க முடியும். அவன் மீது கொண்ட ஆழமான நட்பின் காரணத்தால் அவளால் மறுத்து பேச முடியவில்லை.

 அவன் ஒருவனுக்காக மட்டுமே இப்படியொரு மோசமான மனநிலையிலும் சூழ்நிலையிலும் அவள் வந்தது.

மற்றபடி இந்துமதிக்கு அவளுக்கும் என்ன இருக்கிறது? சொல்ல போனால் இந்துமதியை அவளுக்கு சுத்தமாகப் பிடிக்காது. சுரேஷிற்கும் இந்துமதிக்கும் தவறான தொடர்பிருப்பதாக அரசல் புரசலாக அவள் காதுகளில் விழுந்த வதந்திகளும் ஒரு முறை சுரேஷும் இந்துவும் கைக்கோர்த்துப் பேசிக் கொண்டிருந்த அந்தக் காட்சியும் அவள் மனதை இன்றவளவிலும் நெருடிக் கொண்டிருக்கின்றன.

இருப்பினும் தீர விசாரிக்காமல் யாரையும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.

ஆனால் நடப்பதையெல்லாம் யோசித்துப் பார்த்தால் ஒருவேளை உண்மையிலேயே சுரேஷுக்கும் இந்துவுக்கும் தொடர்பிருந்திருக்குமோ என்று சந்தேகம் உதித்தது.

ஆனாலும் ஏனோ இந்துமதி சுரேஷைக் கொலைச் செய்திருப்பாள் என்பதை ஏற்க முடியவில்லை. ஒரு பக்கம் நண்பனின் வாழ்க்கையை எண்ணிக் கவலையாக இருந்ததென்றால் இன்னொரு பக்கம் தன் கணவன் அஜய்க்கு இந்துமதிதான் குற்றவாளி என்றுத் தெரிந்தால் அவன் என்ன செய்வானோ என்றுப் பயமாக இருந்தது.

தன் சகோதரிக்கு நடந்த அநியாயத்திற்குப் பதிலடியாக அவன் இந்துமதியை என்ன வேண்டுமானாலும் செய்ய துணிவான். அதற்கு பிறகு இந்துமதியை யார் என்ன முயன்றாலும் காப்பாற்ற முடியாது.

அவள் தீவிரமாக இதுப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போது கார் சடாரென்று ஏதோ பள்ளத்தில் இறங்கி சாயவும் அவள் பதறிப் போனாள்.

“என்ன ண்ணா என்னாச்சு?” என்று அவள் பதட்டத்தோடு வினவ,

“வண்டி சேறுல மாட்டிக்கிச்சு போல” என்றவர் தீவிரமாக அக்சிலேடரை அழுத்தி காரினைச் சேற்றிலிருந்து மீட்க முயன்றுக் கொண்டிருந்தார். ஆனால் அவர் முயற்சிக்கு கார் ஒரு அடி கூட முன்னே நகர வில்லை.

அவர் உடனடியாக காரிலிருந்து இறங்கிப் பார்த்துவிட்டு, “கார் நல்லா சேறுல மாட்டிக்கிச்சுமா… யாராச்சும் தள்ளினாதான்… ஆனா இந்த மழையில யார் வருவா” என்று பதட்டம் நிரம்பிய குரலில் சொல்ல,

“இப்ப என்ன பண்றது?” என்றுக் கேட்டாள்.

“நீங்க உள்ளேயே உட்காருங்கம்மா… வெளியே ஒரே மழையா இருக்கு… நான் எதாச்சும் செய்றேன்” என்றார்.

அவளுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அஜய்க்கு மட்டும் இந்த விஷயம் தெரிந்தால் அவ்வளவுதான்.

 வேகமாக தன் கைபேசியை எடுத்து இயக்கினாள். அவனுக்கு தான் எங்கே போகிறோம் என்றுத் தெரிய கூடாதென்கிற ஒரே காரணத்திற்காக கைப்பேசியை இத்தனை நேரமாக அணைப்பில் வைத்திருந்தாள்.

இல்லையென்றால் அந்தக் கைப்பேசி அவள் செல்லும் இடத்தைத் தெளிவாக அவனுக்கு படம் போட்டுக் காட்டிவிடும். நவீன ஒற்று கருவி அது.

தன் பேசியில் அருகே ஏதேனும் வாடகை கார் கிடைக்கிறாதா என்று அவள் பார்த்துக் கொண்டிருக்க, அப்போது கார் ஓட்டுனர் அவளிடம்,

“ம்மா… சார் உங்க கிட்ட பேசணுமாம்” என்று அவருடைய பேசியை நீட்டினார்.

அவள் பீதியோடு அவரைப் பார்க்க, “சாரி ம்மா… நான்தான் போன் பண்ணி சொன்னேன்” என்று சொல்லவும்,

“ஏன் ண்ணே?” என்றவள் பரிதாப பார்வைப் பார்க்க,

“இல்லம்மா… இப்ப கூட சார் கிட்ட சொல்லலன்னா அவர் என்னைக் கொன்னே போட்டிருவாரு… இப்பவே பயங்கரமா திட்டினாரு” என்றார். அவரைப் பார்க்கவும் பரிதாபமாகதான் இருந்தது. தன்னால் பாவம் அவருக்கு தேவையில்லாத சிரமம் என்று யோசித்தவள், அந்த செல்பேசியை வாங்கிக் கொண்டாள்.

உள்ளுர உதறலெடுக்க, அதனைக் காதில் வைத்துக் கொண்டு அவள் மௌனமாக இருக்க,

“டென்ஷனாகதே மது… இன்னும் டென் மினிட்ஸ்ல நான் வேற கார் அனுப்பிறேன்” என்று அவன் குரல் திடமாகவும் தெளிவாகவும் ஒலித்தது.

“சரி” என்றவள் சொல்ல, “நீ ஃபோனை டிரைவர் கிட்டக் கொடு” என்றான்.

“அவரை எதுவும் திட்டாதே அஜய்… நான்தான் அவரை கம்பெல் பண்ணி” என்றவள் பேசவே தட்டு த் தடுமாறினாள். 

“அதெல்லாம் எதுவும் சொல்லமாட்டேன்… நீ போனை அவர்கிட்ட கொடு” என்றான். அதற்குப் பிறகு அவள் கைபேசியை அவரிடம் கொடுக்க அவன் அவரை உண்டு இல்லையென்று செய்துவிட்டான் என்பது அவரின் முகபாவத்திலேயே தெரிந்தது.

அதேநேரம் அவன் சொன்னது போல பத்தே நிமிடத்தில் வேறு கார் வந்து நிற்க அவள் இறங்கி அந்தக் காரில் ஏறிக்கொண்டாள்.

அந்த கார் சீராக சென்றுக்கொண்டிருக்க, அவள் மனமோ அஜயிடம் என்ன சொல்லி எப்படி சமாளிப்பது என்றுப் படபடத்துக்கொண்டிருந்தது.

திடீரென்று கார் ஓரமாக நிறுத்தப்பட, “வீடு வந்திருச்சா?” என்றவள் பார்க்க அந்த காரின் கதவு திறக்கப்பட்டது. நெடுநெடுவென உயரமாக ஒருவன் நின்றிருந்தான். அவன்தான் அஜய்!

அஜய்கிருஷ்ணா! அவளின் ஆருயிர் கணவன். அந்த நொடி அவள் இதயம் அதிவேகமாக துடிக்கத் தொடங்கியது.

ரமணிசந்திரன் நாவல்களில் வரும் நாயகனின் விவரிப்புக்கும் வர்ண்னைக்கும்  உயிரும் உருவமும் கொடுத்தது போல இருந்தது அவன் தோற்றம்.

எப்படியாவது அவனை வீட்டிற்கு போய் சமாளித்துவிடலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால்… இப்படி தடாலடியாக வந்து நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவேயில்லை. அவள் அவனைத் திகைத்துப் போய் பார்த்துக்கொண்டிருக்க,

“இறங்கு மது… முன்னாடி வந்து உட்காரு” என்றான்.

ஒன்றும் புரியாமல் விழித்து கொண்டிருந்தவள், “இல்ல அஜய்… எனக்கு இங்கேயே கம்பர்டபிளா இருக்கு” என்றாள்.

“பின்னாடி உட்காரந்தா சரியா வராது… நீ எழுந்திரு” என்று அவள் கரத்தைப் பிடித்து முன்னாடி இருக்கையை அவள் அமர்வதற்கு ஏற்றார் போல் சாய்வாக தள்ளிவிட்டு அவளை அமரவைத்தான்.

அதற்கு பின் அந்த ஓட்டுனரிடம் தன் காரின் சாவியைத் தந்துவிட்டு அவன் அந்த காரின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக் கொண்டு, “நல்லா சாஞ்சு உட்காரு மது” என்றுச் சொல்ல,

“நான் நல்லாத்தான் உட்கார்ந்திருக்கேன் அஜய்… நீ வண்டியை எடு” என்றாள்.

அவளை ஆராய்வாகப் பார்த்துவிட்டு எல்லாம் சரியாக இருக்கிறது என்ற பிறகே அவன் காரை இயக்கத் தொடங்கினான். ரொம்பவும் மிதமான வேகத்தில் அந்த கார் பயணிக்க, அவள் விழிகளை மூடிக்கொண்டாள். அவன் ஏதாவது கேள்வி கேட்டுவிட போகிறானோ என்ற பயத்தில்!

சற்றுமுன்பு காவல் நிலையத்தில் தைரியமாக நின்று கேள்வி கேட்டமதுவா இது? அவளுக்கே சந்தேகமாக இருந்தது.

ஓராண்டு முன்பு வரை தான் யாரைக் கண்டாவது பயம் கொள்வேன் என்று சொன்னால் அப்படிச் சொல்பவர்களைப் பார்த்து எகத்தாளமாக கேலி செய்து சிரித்திருப்பாள்.

ஆனால் இன்று எல்லாமே தலைகீழானது. அஜய் என்ற பெயரே அவளுக்குள் அச்சத்தைத் தோற்றுவித்தது.

கோபம், பழிவுணர்வு, வெறுப்பு, துரோகம் இதெல்லாம்விட இந்த உலகில் மிகவும் மோசமானது ஏதாவது இருக்க முடியுமா என்று கேட்டால் அவள் பதில் காதல்தான். அந்தளவு அவன் காதலால் அவள் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.

ஒருவர் நம்மீது காட்டும் அதீதமான காதலும் அன்பும்தான் இந்த உலகிலேயே மிக மிக மோசமானது. அப்படி அவளை நினைக்க வைத்ததே அவள் கணவன் அஜய்தான்.

அவன் அவளைப் பொறுத்தவரை ஓர் காதல் தீவிரவாதி. அந்தளவு அவள் மீது அன்பையும் காதலையும் மூச்சு திணற திணற பொழிந்துக் கொண்டேயிருந்தான்.

விஷம் வைத்து கொல்வது ஒரு வகையென்றால் இனிப்பு வைத்தே கொல்வது இன்னொரு வகை. அவன் இரண்டாம் வகையைச் சேர்ந்தவன்.

எதிரே நின்று சண்டை போடுபவனிடம் எதிர்த்து சண்டையிடலாம். ஆனால் அன்பாலும் காதலாலும் கட்டிப்போடுபவனை என்ன செய்வது?

இரும்பு சங்கலியைக் கூட உடைத்துவிடலாம். ஆனால் அன்பால் பிணைக்கும் சங்கிலியை எப்பேர்பட்டவனாலும் அத்தனை சுலபமாக உடைத்துவிட முடியாது. மதுவின் நிலைமையும் கிட்டதட்ட அதேதான். 

அஜயின் அன்பும் காதலும் அவளுக்கு அடிமை சங்கிலியாக மாறியிருந்தது. அதெல்லாம் ஒரு புறம் இருக்க, இப்போது இந்துமதிக்காக தான் காவல் நிலையம் சென்ற விஷயம் மட்டும் அவனுக்கு தெரிந்தால் அதை எப்படி எடுத்து கொள்வான்? என்று எண்ணும் போதே அவளுக்கு உள்ளுர குளிரெடுத்தது.

shiyamala.sothy has reacted to this post.
shiyamala.sothy
Quote

Super ma 

You cannot copy content