You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Shamili Dev's Ennai ma(r)nanathayo-14

Quote

14

பிரபா த்ரிஷ்யாவின் கையில் இருந்த தன் கைப்பேசியையும் அவளின் முகத்தையும் மாறி மாறி பார்த்தான்.

அவள் முகத்தில் இருந்த உணர்ச்சிக்கலவைகளை அவன் காண தவறவில்லை. த்ரிஷ்யாவின் முகம் வியர்த்து கைகள் நடுங்கின. கோபத்தில் சிவந்த அவள் முகத்தை கண்டு அங்கிருந்த மற்ற மூவருக்குமே சிறு நடுக்கம் தொற்றிக்கொண்டது.

த்ரிஷ்யா அவள் கையில் இருந்த கைபேசியை அழுத்திய விதத்தில் அது நொறுங்கி தூள் தூளாக உடையாமல் இருந்ததே ஆச்சர்யம் தான். கோபத்தில் உதடுகள் துடிக்க த்ரிஷ்யா பிரபாவிடம் அந்த புகைப்படத்தை காட்டி, "இது... இந்த போட்டோல இருக்கிறது.... இது யார்?" என்று கேட்டாள்.

"இது என் அப்பா மற்றும் சித்தப்பா" என்று கூறியவனின் முகத்தில் குழப்ப ரேகைகள். அவள் கண்கள் அவன் சித்தப்பா என்று காட்டிய முகத்திலே பதிந்திருந்தது.

"த்ரிஷ்யா என்னம்மா என்ன ஆச்சு?  ஏன் இவ்வளவு கோபம்... " என்று கேள்வி காற்றில் கரைந்தது. ஏனெனில் அவனுக்கு பதில் சொல்ல அங்கு த்ரிஷ்யா இல்லை.

பிரபா புரியாமல் பாத்திமாவை பார்க்க அவளும் அவன் கைபேசியில் இருந்த புகைப்படத்தை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் முகத்தில் கோபம் இல்லை. அவளின் முகம் பயத்தில் வெளிறி இருந்தது. அவன் பாத்திமாவின் தோல் தோட்ட அசைத்த பின்னரே அவள் கண்கள் த்ரிஷ்யாவை தேடின. தன் தோழி அங்கு இல்லை என்று தெரிந்த மறுகணம் பாத்திமாவும் பதிலின்றி வெளியேறினாள்.

உணவகத்தில் பணம் செலுத்திவிட்டு ஆண்கள் இருவரும் அவர்கள் தங்கி இருந்த ரி சார்ட்டிற்கு சென்ற பொது அங்கேயும் பெண்கள் இருவரையும் காணாமல் போகவே ரயில் நிலையத்திற்கு வந்தனர்.

அங்கே த்ரிஷ்யாவும் பாத்திமாவும் வெறித்த பார்வையோடு நடைமேடையில் அமர்ந்திருந்தனர்.

அவர்களை கண்டு நிம்மதி அடைந்த பிரபாவும் சரவணனும் அமைதியாகவே அவர்களுடன் மைசூரை சென்றடைந்தனர்.

பயிற்சி விடுதிக்கு சென்றபின் த்ரிஷ்யாவின் எண்ணப்போக்கை அறிந்த பாத்திமா அதிர்ச்சி அடைந்தாள்.

"இனிமே நானும் நீயும் பிரபா சார் கூட எந்த பேச்சு வார்த்தையும் வைச்சுக்க போறதில்ல".

"என்னடி பேசுற. அந்த பிரபாவுக்கு அந்த ஆளு சித்தப்பானுதால பிரபாவும் கெட்டவர் ஆகிவிடுவாரா ?"

"பிரபா கெட்டவர்னு நான் சொல்லல பாத்திமா. அவங்களோட நம்ம பழக்கம் ஏதோ கெடுதல்ல கொண்டுபோய் விடுமோனு என் மனசுக்கு தோணுது."

"சரி பிரபாவுக்கு தான் அவன் சித்தப்பா. சரோ என்ன பண்ணாரு. அவரை ஏன் ஒதுக்குற?" என்று கேட்ட தோழியை விசித்திரமாக பார்த்தாள் த்ரிஷ்யா.

"ஓ..ஓ..சார் பக்கம் உங்க கடைக்கண் பார்வை கடைசியா திரும்பிடுச்சா? நைஸ்.." என்று கூறிய விசிலடித்த தோழியை வெறித்தாள் பாத்திமா.

பாத்திமாவிற்கும் தெரியும் சரவணன் அவளை நேசிக்கிறான் என்று. அதனாலேயே நால்வரும் ஒன்றாக இருந்தாலும் சரவணனிடம் மட்டும் அவள் கொஞ்சம் ஒதுக்கம் காட்டியபடியே பழகினாள். 

ஆனால் பிரபா தான் அவளை அந்த கூட்டிலிருந்து விடுவித்தான்.

"சரோ ஒன்னும் நீ அவன் கிட்ட சகஜமா பேசினாலே காதல்னு நினைக்குற அளவுக்கு மெச்சூரிட்டி இல்லாதவன் இல்ல. நீ அவன் கிட்ட இவ்வளவு ஒதுக்கம் காட்ட தேவை இல்ல பாத்திமா. எனக்கு ஒரு தங்கச்சி இருந்திருந்தாலும் நான் இப்படி தான் சொல்லி இருப்பேன். உன்னை நான் ஒரு தங்கையா நினைச்சு தான் பழகுறேன். அந்த உரிமைல தான் நான் உனக்கு இதை சொல்றேன். ஏத்துக்கறதும் ஏத்துக்காததும் உன் இஷ்டம்." என்று பிரபா கூறியபோது அவன் சொல்லை அவள் அப்படியே ஏற்று நடந்தாள்.

பாத்திமாவிற்கு அந்த புதிய அண்ணன் என்ற உணர்வு புதுவிதமான நேசத்தையும் பாதுகாப்பு உணர்வையும் அளித்தது. அதே நேரம் பிரபா சொன்னது போல சரவணனும் மிகவும் கண்ணியமாகவே நடந்துகொண்டான்.  அவளை பேசவைத்தான். நகைச்சுவையாக பேசி சிரிக்க வைத்தான். அவளுக்கு பாடம் கற்றுத்தந்தான். அவனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டான். என்ன தான் அவள் மீது அவனுக்கு ஆசை என்று அவன் அன்று பிரபாவிடம் சொன்னாலும் அவனின் நடத்தையில் அந்த உணர்வுகள் எதுவும் பிரதிபலிக்காதப்படி நடந்துகொண்டான்.

பாத்திமாவிற்கு அவனின் இந்த நட்புறவு புத்துணர்வை அளித்தது. அவனை நல்ல நண்பனாக மட்டுமே நினைத்திருந்த பாத்திமாவிற்கு தன் தோழியின் குற்றச்சாட்டு பெரும் வேதனையை அளித்தது என்றே கூறவேண்டும்.

யார் வேண்டுமானாலும் அவளை பற்றி இப்படி கூறலாம். ஆனால் த்ரிஷ்யா அவள் நிலைமையை நன்கு அறிந்தவள். அவள் இப்படி கூறியது பாத்திமாவிற்கு தாங்கமுடியாத வேதனையை அளித்தது. அவளின் முகமாற்றத்தை கண்ட த்ரிஷ்யவிற்கும் அந்த வேதனை தொற்றிக்கொள்ள அவளை சமாதானம் செய்ய முயற்சித்து அதில் வெற்றியும் அடைந்தாள்.

மேலும் இரு வாரம் கழிந்த நிலையில் தோழிகள் இருவரும் பிரபா சரவணன் முகத்தை கூட பார்க்காமல் அவர்களை தவிர்த்தது பிரபாவின் கோபத்தை அதிகரித்தது.

"என்ன பிரச்சனை இவங்க ரெண்டு பேருக்கும். என்னனு சொன்ன தானே சரி பண்ண முடியுமான்னு பார்க்கலாம். அவங்க பாட்டுக்கு யாரோ மாதிரி போறது நல்லவா இருக்கு."

"இரு பிரபா. அவங்க உங்க சித்தப்பா போட்டோவை பார்த்துட்டு தான் அவ்வளவு கோபப்பட்டாங்க. அது என்ன எதுன்னு நம்ம தெரிஞ்சுக்கணும்."

"எப்படி சரோ. அவளா சொல்லாம எப்படி தெரியும். பெண்கள் மனசு கடலை விட ஆழம்னு சும்மாவா சொன்னாங்க. சரியான அழுத்தக்காரிடா அவ. பாத்திமாவையும் நம்மகிட்ட பேசவிடாம தடுத்துட்டா. எனக்கு வர ஆத்திரத்துக்கு அவள.... " என்று பல்லை கடித்தான் பிரபா.

"அவள நீ ஒன்னும் பண்ண மட்ட. பண்ணவும் முடியாது. பாத்திமா நம்ம கூட பேசணும்னு நினைச்சா எப்படியும் பேசி இருப்பா பிரபா."

"இல்ல. பாத்திமாவை பத்தி உனக்கு சரியா தெரியல. த்ரிஷ்யா கண்ண காட்டி கடல்ல குதின்னு சொன்னாலும் பாத்திமா குதிப்பா. "

"அதென்ன மச்சி அப்படி ஒரு பிரியம். ஒருவேளை இந்த நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் படத்துல வர மாதிரி ரெகார்ட் நோட் ஏதாச்சும் எழுதி கொடுத்திருப்பாளோ."

"ஆமாண்டா இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியம். அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சனை. இந்த வெறுப்பேத்துற வேலை எல்லாம் வைச்சுக்காம உருப்படியா பாத்திமாவை தனியா எப்படி பார்க்கிறதுன்னு ஐடியா இருந்தா சொல்லு."

"உன் ஆள உன்னாலேயே சமாளிக்க முடியலைன்னா நான் என்ன மச்சி பண்ணட்டும்."

"நீ ஒன்னும் பண்ண வேணாம் என்கூட வா." என்று பிரபா சரவணனை அழைத்து சென்றது த்ரிஷ்யாவும் பாத்திமாவும் எப்பொழுதும் செல்லும் மாலுக்கு.

அவர்கள் எதிர்பார்த்தது போலவே இருவரும் அங்கு தான் இருந்தனர். ஆனால் பெண்கள் முகத்தில் இருந்த பழைய குதூகலம் காணாமல் போய் இருந்தது. பிரபா நேரே த்ரிஷ்யா முன் சென்று நின்றான். அவளை உறுத்து விழிப்பது போல் பார்த்தவன் அவளின் செயல்களுக்கு விளக்கம் வினவினான்.

"எதுக்கு எங்க கிட்ட ரெண்டு பெரும் பேச மாற்றீங்க. இப்போ எனக்கு தெரிஞ்சாகணும்." என்று பிரபா கேட்டதும் நிதானமாக பிரபாவை பார்த்த த்ரிஷ்யா பதில் ஏதும் சொல்லாமல் முன்னேறி சென்றாள்.

இந்த இரண்டு மாத பழக்கத்தில் த்ரிஷ்யாவை பற்றி அவனுக்கு சிலவிஷயங்கள் புரிந்தது. அது த்ரிஷ்யாவின் எதிர் மறை நடவடிக்கைகள். அவளிடம் எதையாவது செய் என்று வேண்டினாள் நிச்சயம் செய்வாள். ஆனால் கட்டளைகள் எதிர்மறையாகவே முடியும். அவளை வற்புறுத்தி எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது.

இப்பொழுது அவள் கண்களில் தெரிந்த பிடிவாதத்தை பார்த்த பிரபாவிற்கு இவளிடம் பேசி பயன் இல்லை என்று புரிந்தது. எனவே பாத்திமா தனித்திருக்கும் நேரத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். பாத்திமாவை தனித்து ஃபுட் கோர்ட்டில் சந்தித்த நண்பர்கள் இருவரும் அவளிடம் விவரம் கேட்டனர்.

அவர்கள் கேட்ட விவரம் கூற பாத்திமா தயங்கினாள்.

"ப்ளீஸ் பாத்திமா. என்ன பிரச்சனைனு சொன்னாதான் அதுக்கு தீர்வு காணமுடியும். ஒதுங்கி போறது எல்லாத்துக்கும் தீர்வு ஆகாது. உன் பிரென்ட் ஒரு கோழை. என் முகத்தை ஃபேஸ் பண்ணமுடியாம ஒடுறா. என் முகத்தை பார்த்து பேசிட்டா எல்லாத்தையும் வெளிப்படையா பேசிடுவோமோ பயம்." என்று பிரபா வெறுப்புடன் கூறிமுடித்தான். பிரபா கூறியதில் உண்மை இருந்ததால் பாத்திமா அவனை மறுத்து பேசவில்லை.

ஆனால் இவர்களிடம் எல்லாவற்றையும் சொல்வது எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்றும் பாத்திமாவால் அறிய முடியவில்லை.

'இந்த பிரச்னை அனைத்திற்கும் நாம தான் காரணம். இது சொல்லாமல் தீராது. வருவது வரட்டும். பிரபாவை பார்க்காமல் த்ரிஷ்யா படும் வேதனையை பார்க்க முடியல.

நமக்கு என்ன தீங்கு வந்தாலும் பரவாயில்ல. த்ரிஷ்யா விரும்புற வாழ்க்கை அவளுக்கு கிடைக்கணும். பிரபாவுடன் பழகிய இந்த இரண்டு மாதத்தில் த்ரிஷ்யா எவ்வளவோ மாறி இருக்கிறா.

அவள் முகத்தில் இருக்கும் பூரிப்பு மகிழ்ச்சி இது எல்லாவற்றிற்கும் பிரபா தான் காரணம். அந்த மகிழ்ச்சி அவன் முகத்தில எப்பவும் இருக்கணும்னா இந்த பிரச்சனைய சரி செய்தே ஆகணும். எல்லாத்தையும் பிரபாகிட்ட சொல்லிட்டா மத்ததை அவர் பார்த்துப்பார்.

ஆனா சரோ. உண்மை விஷயம் எல்லாம் தெரியும் பொது அவன் எப்படி நடந்துகொள்வான். அவனுடனா நட்பே போதும் என்று நினைத்தால் இதென்ன தேவை இல்லாத யோசனை. அவனுக்கு விஷயம் தெரிந்த அப்பறம் அவன் நண்பனாய் இருந்தா சந்தோஷம் இல்லனா அது அவன் விருப்பம்.'

இவ்வாறான பாத்திமாவின் எண்ண போக்கில் பிரபா குறுக்கிட்டு, "என்ன நான் பாட்டுக்கு கேட்டுட்டு இருக்கேன். நீ ஏதோ யோசனைல இருக்குற. உனக்கு உடம்பு ஏதும் சரி இல்லையாமா.." என்று கேட்ட அவன் கரிசனத்தில் அவளுக்கு கண்களில் நீர் பெருகிற்று . ஒரு நீண்ட பெருமூச்செறிந்து பாத்திமா உண்மை விவரத்தை கூறினாள்.

பிரபாவின் கைபேசியில் இருந்த அவனின் சித்தப்பா பாத்திமாவின் தாயை இரண்டாம் முறை திருமணம் செய்துகொண்ட அயோக்கியன். பாத்திமாவிற்கு இரண்டு வயது இருக்கும் போதே அவளின் தந்தை இறந்து விட்டார். அஸ்மாவிற்கு சொந்தம் என்று பெரிதாக யாரும் இல்லாத நிலையில் ஒரு கணவனை இழந்த பெண்ணாக அவளுக்கு பல வித தொல்லைகள் உருவெடுத்தன.

தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு தேவை என்று தோன்ற அஸ்மா மறுமணம் புரிந்தவன் தான் பிரபாவின் சித்தப்பா ராஜசேகர். அஸ்மாவிற்கு ராஜசேகர் நல்லவனாக தோன்றவே அவருக்கு மதம் ஒரு பெரிய இடைஞ்சலாக தோன்றவில்லை. ஆனால் திருமணமான சிலநாட்களிலேயே ராஜசேகர் தன சுயரூபத்தை காட்ட தொடங்கி விட்டான். வேலைக்கு செல்வதில்லை. தினமும் குடி. அவசரப்பட்டு தவறு செய்துவிட்டோமோ என்று அஸ்மா கலங்கியது சில நாட்கள் மட்டுமே.

எப்படியோ அவளுக்கு ஒரு பெரிய வீட்டில் பணியாளாக வேலை கிடைத்தது. தேவைக்கேற்ப உணவு மற்றும் உடைகள் அளித்த மூன்று பேர் வாழ போதுமான அளவு சம்பளம் கிடைத்ததால் அஸ்மாவிற்கு ராஜசேகரின் செய்கைகளினால் பெரிதும் கவலை ஏற்படவில்லை. ஏதோ ஆண் என்று வீட்டில் ஒரு துணை இருப்பதே பாதுகாப்பு தானே என்று நினைத்து கொண்டாள்.

ஆனால் ராஜசேகர் அடிமடியிலே கைவைப்பான் என்று அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

அஸ்மா எப்போதும் வேலைக்கு சென்று வர மாலை ஆகிவிடும். அப்பொழுது பத்து வயதை நெருங்கி கொண்டிருந்த பாத்திமா பள்ளி முடிந்து வீடு வந்து சேர்ந்த பொழுது ராஜசேகர் வீட்டிலேயே குடித்துக் கொண்டிருந்தான். இதெல்லாம் அருவருப்பாக இருந்த போதிலும் பார்த்து பார்த்து பழகி விட்டிருந்த பாத்திமா நேரே படுக்கை அறைக்கு சென்று படிக்கச் தொடங்கி விட்டாள்.

அன்று தான் ராஜசேகரின் வக்கிர புத்தி பாத்திமாவின் புறம் தலை திரும்பியது. ஆவேசமாக அவன் பாத்திமாவை இழுத்து அணைக்க அந்த சிறிய பட்டாம்பூச்சி மனதில் அந்த அரக்கத்தனத்தின் தன்மை அறியாமல் விடுபட வழிதேடி தவித்தது. மொட்டு அரும்பும் முன் பூவை நசுக்கிய கொடுமையான செயலை செய்தான் ராஜசேகர். வேதனை தாளாமல் வலியால் அழுத பாத்திமாவிற்கு அந்த வேதனைக்கு தீர்வு தான் தெரியவில்லை.

தாய் வந்தவுடன் அவளிடம் சொல்லி அழ நினைத்த அந்த சிறுமியான பாத்திமாவை கொடுரமாக மிரட்டினான் ராஜசேகர்.

"ஏய் இங்க நடந்த விஷயம் மட்டும் உங்க அம்மாவுக்கு தெரிஞ்சுது. என் கைல இருக்குற இந்த ஆசிட் பாட்டில உங்க அம்மா மூஞ்சில விட்டெறிஞ்சுடுவேன். அப்பறம் அவ துடி துடிச்சு சாவா. அத பார்க்க ஆசையா?" என்று கேட்டவிதத்தில் அவளுக்கு அவன் ராட்சசனாகவே தோன்றினான்.

அந்த அவல நிலை அன்று ஒருநாளோடு முடிந்திருந்தால் கூட பரவாயில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடமாக அவளுக்கு அந்த கொடுமையை ராஜசேகர் செய்து கொண்டிருந்தான். பலமுறை இதை தாயிடம் சொல்லவேண்டி ஓடிய பாத்திமாவின் கண்களின் தாயின் அழகு முகம் படிய அவளது எண்ணத்தை மாற்றிக்கொண்டு திரும்புவாள்.

நாளுக்கு நாள் ராஜசேகரின் கொடுமை எல்லை மீறிக்கொண்டு போனது. அவளை ஒரு நாள் அடித்து துன்புறுத்த ஆரம்பித்தான். இதனை தாங்கமுடியாமல் பாத்திமா அஸ்மா வேலை செய்யும் இடத்திற்கே ஓடினாள்.

எப்பொழுதுமே பாத்திமா அந்த வீட்டிற்கு சென்றதில்லை. தாயும் அவளை அங்கே அனுமதித்ததில்லை.

அந்த வளமான வீடும் அங்கே வாழும் இன்னொரு குழந்தையின் வளமான வாழ்வை கண்டு பாத்திமா என்றும் ஏங்கிவிடக்கூடாது என்பதற்காகவே அஸ்மா தன் மகளை அங்கு வர அனுமதிக்கவில்லை.

ஆனால் பாத்திமா எப்படியோ அன்று தாயிடம் விஷயத்தை தெரிவித்து அந்த கொடுமைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி வந்த அந்த இல்லத்தில் குட்டி தேவதையாக உலாவிக்கொண்டிருந்தாள் த்ரிஷ்யா.

பாத்திமாவின் வீங்கிய முகமும் அழுது வடிந்த கண்களும் த்ரிஷ்யாவிற்கு எதையோ உணர்த்த பாத்திமாவிடம் விவரம் கேட்டாள். கிட்டத்தட்ட ஒரே வயதை ஒத்த இன்னொரு பெண்ணால் தன் கவலைகளுக்கு தீர்வு காண முடியாது என்று எண்ணிய பாத்திமாவிற்கு தாய் அந்த வீட்டில் கண்ணில் படாதது பெரும் ஏமாற்றத்தையே தந்தது.

உடனே அந்த வீட்டை விட்டு ஓடி சென்று தன் வீட்டு வாசலை அடைந்தபோது அங்கு ராஜசேகர் இல்லாதது பெரும் ஆறுதலை அளித்தது. தாய் வரும் வரை வேறு வழியே இல்லை என்று எண்ணிய பாத்திமா வீட்டிலேயே அடைக்கலம் புகுந்தாள். ஆனால் அங்கு தான் பாத்திமா தவறு செய்தாள். எங்கே பாத்திமா தன் கேவலமான செயல்களை அஸ்மாவிற்கு சொல்லி விடுவாளோ என்று அஞ்சி பின் புறம் ஒளிந்து நடப்பதை கண்காணித்த ராஜசேகர், தாய் மகளுடன் வாரததால் தைரியமாக மீண்டும் வீட்டினுள் நுழைந்தான்.

"ஏண்டி எவ்வளவு திமிர் இருந்தா உங்க அம்மாகிட்ட சொல்றேன்னு ஓடுவ. இந்த ஆசிட உங்க அம்மா முகத்துல இல்ல உன் முகத்தில ஊத்தினா தான் நீ அடங்குவ" என்று கூறி தன் கையில் இருந்த பாட்டிலை திறந்தான்.

திடீரென்று அவன் நுழைந்த விதமும் ஆசிட் பாட்டலை திறந்து கொண்டு சொன்ன செய்தியும் பாத்திமாவிற்கு பெரும் பீதியை உண்டு பண்ணியது. மழைக்கு ஒதுக்கும் பறவை குஞ்சை போல் அந்த சிறுமி நடுநடுங்கி போனாள்.

"வேணாம் வேணாம் ப்ளீஸ் நீங்க என்ன சொன்னாலும் செய்றேன் வேணாம்" என்று கண்ணீர் விட்டு கதறினாள்.

"அப்படி வா வழிக்கு" என்று கூறிக்கொண்டே அவளை நெருங்கிய ராஜசேகர் திடீரென்று, "ஆஆஆ" என்று அலறி கீழே சரிந்தான். பாத்திமா ஒன்றும் புரியாமல் நிமிர்ந்து பார்க்க அங்கே த்ரிஷ்யா உடைந்த மீன் தொட்டியை கையில் பிடித்து கொண்டு நின்றிருந்தாள். அவள் கண்கள் கோபத்தால் ரத்தம் கசிவது போல் சிவப்பேறி இருந்தது.

தலையில் ரத்தம் கசிய நிமிர்ந்து பார்த்த ராஜசேகர் அங்கே த்ரிஷ்யாவை கண்டதும் அதிர்ச்சி அடைந்தான்.

ஒரு பத்தோ பதினொன்றோ வயது ஒத்த சிறு பெண் அடித்து தான் கீழே விழுவதா என்று அவமானமாக உணர்ந்தவன் உடனே த்ரிஷ்யாவின் தலை முடியை கொத்தாக பிடித்தான்.

"ஒண்ணுக்கு ரெண்டு லட்டு கிடைச்சிருக்கு. இன்னைக்கு எனக்கு விருந்து தான்" என்று கூறிய படியே பாத்திமா மற்றும் த்ரிஷ்யா ஆகிய இரு சிறுமிகளின் கழுத்திலும் கையை வைத்து காட்டில் மெத்தையில் அழுத்தினான் அந்த வெறிகொண்ட மிருகம். இருவரின் முதலில் சமாளித்துக்கொண்டு த்ரிஷ்யா தன் கால் கொண்டு ஓங்கி அவன் இருகால்களுக்கும் மத்தியில் உதைத்தாள்.

வலிதாங்காமல் அடிபட்ட இடத்தில கைவைத்து பிடித்து கொண்ட ராஜசேகர் பார்த்த பார்வையில் அனல் வீசியது. மீண்டும் த்ரிஷ்யாவின் முடியை பிடிக்கும் முன் அவள் அவன் கைக்கு கீழ் குனிந்து ஓட அந்த அலமாரியில் அவன் வைத்திருந்த ஆசிட் பாட்டில் கீழே விழுந்து நொறுங்கியது.

மீண்டும் த்ரிஷ்யாவை பிடிக்க அவன் முயற்சிக்கும் பொழுது திடீரென்று கீழே விழுந்து அவன் அலறிய அலறல் அந்த சிறிய வீடு முழுவதும் எதிரொலித்தது.

என்ன நடந்தது என்று இருசிறுமிகளுக்கும் புரியாமல் திரும்பி பார்த்த பொழுது தான் அங்கே ஆறடி உயரத்தில் கம்பீரமாக ஒரு மனிதன் நின்றிருந்தான். த்ரிஷ்யா அவனை அப்பா என்று அழைத்து ஓடி சென்று அவன் கால்களை கட்டிக்கொண்டாள்.

பாத்திமா த்ரிஷ்யா வீட்டில் இருந்து அழுது கொண்டே ஓடிவர அவளுக்கு ஏதோ பிரெச்சனை என்று உணர்ந்த த்ரிஷ்யா அழைத்தது முதலில் தன் தந்தையை தான். பாத்திமாவிற்கு ஏதும் பணம் உதவி தேவை படலாம் அல்லது அவளது மனக்கவலையை அறிந்து அதை தீர்த்து வைக்க முயற்சி செய்ய எண்ணியே த்ரிஷ்யா தந்தைக்கு அழைத்தாள்.

த்ரிஷ்யா தேவையின்றி அழைப்பவள் அல்ல என்பதால் அனந்தராஜும் அவள் அழைத்த உடன் வீடுவந்து சேர்ந்தார். அவர் வருவதற்குள் த்ரிஷ்யா பாத்திமா வீட்டை நோக்கி அவளை பின் தொடர்ந்தாள். அப்பொழுது அவள் கண்ட காட்சி அந்த சிறுவயதில் எந்த ஒரு குழந்தையும் காணக்கூடாத ஒன்று என்பதோடு இந்த அநீதி அவளுக்கும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. சிறுவயதில் இருந்து நல்லது கெட்டது மட்டும் இன்றி நியாயம் அநியாயம் தைரியம் என்று அனைத்தையும் அவள் தந்தை அவளுக்கு புகட்டி இருந்ததால் த்ரிஷ்யா திறன் பட செயல் பட்டு பாத்திமாவை விடுவித்தாள்.

அதற்குள் ராஜசேகரின் வெறித்தனம் அதிகாமாகியதே அன்றி குறையவில்லை. பெண்ணை தேடி வந்த ஆனந்தராஜ் அங்கே நடந்ததை ஊகித்து ராஜசேகரை ஒரே அடியில் வீழ்த்தினார். ஆனால் அங்கு யாரும் எதிர்பார்க்காத சம்பவம் ராஜசேகரின் முகம் தரையில் இருந்த அமிலத்தில் விழுந்தது தான்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான் என்ற பழமொழிக்கேற்ப பாத்திமா அனுபவித்த கொடுமைகள் அனைத்தையும் அன்று ஒரேநாளில் ராஜசேகர் அனுபவித்தான்.

உடனே அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆனந்தராஜ் அஸ்மாவிடம் அனைத்து விவரத்தையும் கூறியதோடு இனி பாத்திமா தன் வீட்டில் தான் வளரப்போகிறாள் என்பதையும் கூறினார்.

ஒரு தாயாக தன் கடமையை சரிவர செய்யவில்லை என்ற குற்ற உணர்வே அஸ்மாவை பெரும் வேதனைக்கு உள்ளாகி இருந்தது. அதனாலேயே ஆனந்தராஜின் கட்டளையை பெற அஸ்மா துணியவில்லை. அதன் பின் பாத்திமா அந்த வீட்டு பெண்ணாகவே வலய வந்தாள். த்ரிஷ்யாவிற்கு வாங்கும் உடையை போலவே அவளுக்கும் வாங்கி தந்தார்கள் த்ரிஷ்யாவின் பெற்றோர். த்ரிஷ்யாவிற்கும் பாத்திமாவிற்கும் எந்த வேறுபாடும் எள் அளவும் காட்டப்படவில்லை. ஆனால் இத்தனை ஆண்டுகள் கழிந்தும் அந்த ராஜசேகரின் முகம் இருவருக்குமே அருவருப்பை அளித்தது என்றால் பசுமரத்தாணியாக அந்த வேதனை கொண்ட நாட்கள் அவள் மனதில் பதிந்திருந்ததே காரணம்.

பாத்திமா எல்லாவற்றையும் சொல்லி முடித்ததும் அங்கு பெரும் அமைதி நிலவியது. பிரபா மற்றும் சரவணன் கண்களில் வழிந்தோடிய கண்ணீரே அவர்களும் அவளுக்காக அந்த வேதனையை அனுபவிப்பதாகவே கூறியது.

.

Uploaded files:
  • ennaimaranthayo.jpg
Quote

அழுத்தமான கதை பகுதி .

You cannot copy content