You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Shamili Dev's Ennai ma(r)nanthayo-19

Quote

19

பாத்திமா பிரபாவிடம் த்ரிஷ்யாவிற்கு தெரியாமல் இரவு வந்துவிடுவதாக கூறினாளே ஒழிய அந்த வார்த்தையை காப்பாற்றுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஏற்கனவே அவள் பிரபாவிடம் பேசியதற்காக தன் தோழியிடம் வாங்கி கட்டிக்கொண்டிருந்தாள். இந்த நிலையில் இரவு தனியாக வெளியே செல்லவேண்டி இருப்பதாக அவள் கூறியதை அவளது தோழி ஏற்க தயாராக இல்லை.

"என்ன தான் பிரச்சனை உனக்கு? உனக்கு எங்க போகணும் என்ன வாங்கணும்னாலும் என்கூட தானே வருவ. இன்னைக்கு என்ன புதுசா தனியா போகணும்னு அடம்பிடிக்குற?" என்று த்ரிஷ்யா பாத்திமாவிடம் கோபத்துடன் வினவினாள்.

"எனக்கு டோனட் சாப்பிடணும்னு ஆசையா இருக்கு. இப்போ இங்க காபி டே வேற மூடிட்டாங்க. வெளில போய் சாப்பிடலாம்னு நினைக்குறேன். உனக்கு டோனட்னாலே பிடிக்காது. நீ ஏன் இந்த ராத்திரில எனக்காக கஷ்டப்பட்டு வரணும்னு நினைச்சேன். இதுக்கு போய் ஏன் இவ்வளவு கேள்வி கேட்குற?"

த்ரிஷ்யா சந்தேகமாக அவளது முகத்தை உற்றுப்பார்க்க பாத்திமா தடுமாற்றத்துடன் வேறுப்புறம் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

"சரி சரி. போக வேணாம்னா போகல.... அதுக்கு ஏன்... இப்படி குறுகுறுன்னு பார்க்குற?" என்று பாத்திமா தட்டு தடுமாறி கேட்க த்ரிஷ்யாவின் மூலையில் பொறி தட்டியது.

'ஓஹோ... மேடம் அந்த பிரபா கூட வெளியில போறாங்க போல. ஏற்கனவே இந்த பிரபா எனக்கு எதிரா ஏதோ சாதி செய்றான். இதுல இவ வேற கூட்டா? சரி சரி பார்த்துக்குறேன்.' என்றவாறு எண்ணமிட்டவள் பாத்திமாவிடம் மேற்கொண்ட வாதம் புரியாமல் அவளை வழியனுப்பி வைத்தாள்.

"சரிங்க மேடம். போயிட்டு வாங்க. அப்புறம் என்னால தான் டோனட் சாப்பிட முடியலன்னு நைட் பூரா புலம்புவ. கிளம்பு." என்று கூற பாத்திமாவின் உள்ளம் துள்ளியது. ஆனால் பெரிதாக தன் உணர்வுகளை வெளிக்காட்டி கொள்ளாமல் அமைதியாகவே கிளம்பிவிட்டாள்.

பிரபா பாத்திமாவிற்காக பயிற்சி வளாகத்தின் வெளி பகுதியில் இருந்தான். பாத்திமா வர தாமதமாகும் என்பதாலும் வளாகத்தின் நுழைவாயிலில் காவலாளிகளுக்கு பதில் சொல்ல நேரிடும் என்பதாலும் பிரபா பயிற்சி மையத்தின் எதிர் திசையில் இருந்த ஒரு ஹோட்டலில் அவளுக்காக காத்துக்கொண்டு இருந்தான்.

பாத்திமா நுழைவாயில் அருகில் பிரபாவை காணாததால் அவனை அழைக்க தன் கைபேசியை எடுத்த சமயம் ஒரு இளைஞன் அவளை அணுகினான்.

"நீங்க பிரபா சாரதானே தேடுறீங்க. அவர் அதோ… அங்க மரத்தடியில் இருக்குற பஸ் ஸ்டாப்க்கு எதிர்ல உங்களுக்காக வெயிட் பன்றாரு. உங்கள பார்த்தா அங்க அனுப்பிவைக்க சொன்னாரு." என்று கூறிவிட்டு அந்த இளைஞன் சென்றுவிட்டான்.

அவன் கூறிய இடத்தை அடைந்தவள் அங்கே நின்றுகொண்டு அவளை பார்த்து சிரித்தவனை கண்டு அதிர்ச்சியில் சிலையாக உறைந்து நின்றாள்.

"நீ.. நீ...." என்று கூறியவளின் கைகள் நடுங்க கால்கள் தாமாக பின்னடைந்தன.

"நான் நானே தான். என்ன மறந்துட்டியா கண்ணு. அப்படியெல்லாம் உன்னால என்ன மறக்க முடியுமா? அப்படியா நாம பழகினோம்." என்று கூறி ராட்சனை போல் சிரித்தவனை கண்டவள் ஏதோ அசிங்கத்தை மிதித்தவளை போல் முகத்தை சுழித்தாள். அவன் கூறியதின் பொருள் புரிய அவள் உடல் முழுவதும் பற்றி எரிவதை போல் தோன்றியது.

ஏனென்றால் எந்த மிருகத்தால் அவள் நத்தையாக  தன்னை சுருக்கிக்கொண்டு வாழ்கிறாளோ எந்த உருவத்தால் தன் குழந்தை பருவ மகிழ்ச்சிகளை இழந்தாலோ எந்த ராட்சசனின் தொடுகையினால் தன் இளமைக்கால உணர்வுகளை மறந்தாலோ அந்த ராஜசேகரே எமனை போல் அவள் முன் நின்று சிரித்துக் கொண்டிருந்தான்.

அவன் முகம் ஒரு பக்கம் விகாரமாக காட்சியளிக்க, பத்து வருடங்களுக்கு முன் அமிலத்தால் தாக்கப்பட்ட முகம் என்பதை பறைச்சாற்றியது.

"என்னடி செல்லக்குட்டி? எங்க ஓடப்பார்க்குற? நீ இனிமே எங்கயும் போகமுடியாது..." என்று கூறியவன் அருகில் இருந்த தன் இரு ஆட்களையும் அழைத்தவன் "டேய் சீக்கிரம் இவளை தூக்கி வண்டிக்குள்ள  போடுங்க டா." என்று ஏவினான்.

 

அவர்களில் கைப்பிடியில் சிக்கிய பாத்திமா திமிறிக்கொண்டு ஓட முயற்சி செய்ய அவள் முயற்சிகள் அனைத்தும் காற்றில் கரைந்தன. ஆனந்தராஜ் பாத்திமா மற்றும் த்ரிஷ்யா ஆகிய  இருவருக்குமே தற்காப்பு கலைகள் கற்றுக்கொடுத்திருந்தார். ஆனால் ராஜசேகரை கண்ட அதிர்ச்சி அவளை நிலைகுலைய செய்திருந்தது. அவள் மனக்கண்ணில் இயலாமையில் சிக்கி தவித்த அந்த பத்து வயசு சிறுமி பாத்திமா தோன்ற அதே இயலாமையுடன் இன்றும் அவள் சிக்கித்தவித்து கொண்டிருந்தாள்.

அந்த நேரம் பிரபா அவளின் கைப்பேசியில் அழைக்க அந்த ஒலி அவளுக்கு ஆபந்தபாந்தவனின் குரலாக ஒலித்தது. அவசரமாக அவனின் அழைப்பை ஏற்றவள், "பிரபா பிரபா... இங்க வெளில ராஜா... ராஜாசெக்.... " என்று கூறி முடிக்கும் முன்னரே ராஜசேகர் அவளது கைபேசியை பிடிங்கி வீசி எறிந்தான்.

"அதுக்குள்ள ஆள் புடிச்சுக்குட்டியா? அன்னைக்கு அந்த ஆனந்தராஜ் வந்து காப்பாத்தினான். இன்னைக்கு எந்த ஹீரோ வந்து உன்னை காப்பாத்துறான்னு நானும் பார்க்குறேன்." என்று கூறி மீண்டும் இடியென சிரித்தான்.

பாத்திமா பதற்றத்துடன் பேசியதை கேட்டு கலவரம் அடைந்த பிரபா அவசரமாக தான் இருந்த ஹோட்டலில் இருந்த வெளியில் ஓடிவந்தவன் தூரத்தில் யாரோ இருவர் ஒரு பெண்ணை ஒரு ஜீப் போன்ற வண்டியில் ஏற்றுவதை கண்டான். இதனை கண்டு அவன் அதிர்ச்சியடைந்தது ஒரு சிலவினாடிகளே. விரைவில் அது பாத்திமாவாக தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தவன் அந்த வண்டியை பின்தொடர்ந்து ஓடினான்.

எவ்வளவு வேகமாக ஓடிய போதிலும் அவனால் அந்த வண்டியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னடைந்தான். அவனால் வண்டி சென்ற திசையை கணிக்க முடியவில்லை. ஆனால் பிரபா பதட்டம் அடையாமல் அதே நேரம் துரிதமாக சில வேலைகளில் ஈடுபட்டான்.

முதலில் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு முழு விவரத்தை கூறியவன் தான் கண்ட வண்டியின் எண்ணையும் தெரிவித்தான்.

தொடர்ந்து சரவணனுக்கு தொடர்புகொண்டு விஷயத்தை கூறி தான் இருக்கும் இடத்திற்கு பைக்கை எடுத்து கொண்டு வரச்செய்தான்.

ஐந்தே நிமிடத்தில் பிரபா கூறிய இடத்தை அடைந்தவன் அவனை அழைத்துக்கொண்டு வேகமாக வண்டியை செலுத்தினான். பிரபா சரவணன் இருவருமே அங்கு இருந்த இரண்டு வருடங்களில் மைசூரை முழுவதுமாக அறிந்து வைத்திருந்தனர். இன்றும் அவர்களுக்கு தெரியாத ஒரு இடம் கூட அங்கு இல்லை என்று கூறலாம். எனவே பாத்திமாவை கடத்தி சென்ற வண்டி எங்கெல்லாம் செல்ல வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஒரு பட்டியலிட்டு அங்கெல்லாம் தேடிச்சென்றனர். அதற்குள் காவல் நிலையத்திலிருந்து தொடர்புகொண்ட ஒரு காவலாளி சில விவரங்களை கூறினார்.

"நீங்க சொன்ன வண்டி நம்பரை எல்லா செக் போஸ்ட்லயும் கொடுத்து இருக்கும். இப்போ வரை அந்த நம்பர்ல எந்த வண்டியும் போகல. டிராபிக் சிக்னல் ஃபுட்டேஜும் பார்த்தாச்சு. அவங்க அங்க சுத்தி இருக்குற அஞ்சு கிலோமீட்டர தாண்டி போயிருக்க வாய்ப்பே இல்ல."  என்று கூறியவர் தானும் அந்த வண்டியை தேடிக்கொண்டிருப்பதாக கூறினார்.

இந்த விவரங்கள் அவர்களுக்கு பெரும் உதவிகரமாக இருந்தது. அவர்களின் பயிற்சி வளாகத்தின் அருகில் இருபது ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட ஒரு பெரிய காடு அமைந்திருந்தது. அந்த காட்டிற்குள் பயணித்த நண்பர்கள் இருவரின் மனமும் பலவாறு கலங்கி இருந்தது.

ஒன்று அவர்களில் கணிப்புப்படி அவள் அந்த காட்டிற்குள் இருந்தால் என்றால் கூட அவளை கண்டுபிடிக்க பலமணி நேரமாகலாம். ஆனால் அந்த இடைவேளையில் அவளுக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது.

இரண்டு அவர்கள் கணிப்பு தவறாக இருந்தால் பாத்திமாவை கண்டு பிடிக்க காலதாமதம் ஆகிவிடும்.

இவ்வாறு பல எண்ணங்கள் தோன்றி மறைய சரவணன் வேகமாக பைக்கை செலுத்த அவன் பின்னால் அமர்ந்து கொண்டிருந்த பிரபாவின் கண்களில் அவர்கள் தேடிக்கொண்டிருந்த வண்டி தென்பட்டது. வெகு அருகில் ஒரு பெண்ணின் முனகல் சத்தமும் கேட்க, அது பாத்திமாவின் குரல்தான் என்பதனை கணிக்க அவர்களுக்கு பெரும் முயற்சி தேவை படவில்லை.

 

அந்த வண்டி ஒரு பெரிய ஆலமரத்தின் அருகில் இருந்தது. பாத்திமாவின் குரல் அந்த மரம் பின்னால் இருந்து வருவதை கணித்தவர்கள் வேகமாக அந்த மரத்தின் மறுபக்கத்தை அடைந்தனர்.

அங்கே அவர்கள் கண்ட காட்சி இருவரின் ரத்தத்தையும் உறையும் படி செய்தது. பாத்திமாவின் உடலில் மேலாடை இன்றி தரையில் ஏதோ முனகியபடி கிடந்தாள். அவளை நெருங்க அந்த ராஜசேகர் தயாராக நின்றான். ஆனால் அடுத்த நொடி சரவணனால் பலமாக தாக்கப்பட்டு தரையில் விழுந்து வழியால் துடித்தான். 

இதனை கண்ட ராஜசேகரின் ஆட்கள் சரவணனை பிடித்துக்கொள்ள அவன் அவர்களுடன் போராடத்தொடங்கினான். இதற்கிடையில் பிரபா தன் சட்டையை கழற்றி பாத்திமாவின் மேல போர்த்த உணர்வு மீண்டவளாக  எழுந்த பாத்திமா தன் நிலையை கண்டு அவசரமாக எழுந்து மரத்தின் பின் புறம் ஓடி மறைந்து நின்றாள். அவள் ஓடிய வேகத்தின் பிரபாவின் சட்டை நழுவி கீழே விழுந்தது.

அவன் மீண்டும் சட்டையை அவளிடம் கொடுக்க எத்தனிக்க, அதனை வாங்காமல் ஏதோ பேயை கண்டவள் போல் பயந்து அலறினாள்.

ராஜசேகர் பாத்திமாவை கடத்திக்கொண்டு வந்ததுமே அவளுக்கு மிகவும் வீரியமான போதை பொருளை ஊசியினால் ஏற்றிவிட்டிருந்தான். அதன் தாக்கத்தின் சிக்குண்டதால் தான் என்ன செய்கிறோம் என்பதே அறியாமல் தன்னிலை இழந்து வீறிட்டாள். இதனை கண்டு பிரபா செய்வதறியாது திகைத்தான்.

"பாத்திமா ப்ளீஸ் இந்த சட்டையை போட்டுக்கோம்மா?"

"வேணாம் பிரபா வேணாம் என்கிட்ட வராதீங்க ப்ளீஸ் பிரபா வேண்டாம்."

"நான் அங்க வரவில்லை. நீ சட்டையை மட்டும் வாங்கிக்கோ. வேற யாரவது வந்துடபோறாங்கமா" என்று இறைஞ்சியபடி கூற அவளிடம் இருந்து பதில் ஏதும் வராததால் மரத்தின் பின் சென்றான்.

Quote

Twist ,, ..

You cannot copy content