You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Shamili Dev's Ennai ma(r)nanthayo-9

Quote

உங்கள் கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி... shamili

9

த்ரிஷ்யாவோ பாத்திமாவிற்கு பதில் ஏதும் சொல்லாமல் இல்லாத காலரை தூக்கிவிட்டு பெருமிதமாக சிரித்துக்கொண்டாள். அப்பொழுது தான் பாத்திமா தன் தோழியின் வெறுமையான கழுத்தை கவனித்தாள்.

"ஹே த்ரிஷ்யா உன் செயின் எங்க?" என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

"கழுத்துல ..." என்று சொல்லிக்கொண்டே தன் கழுத்தில் கைவைத்துப் பார்த்தவள் அது அங்கு இல்லாமல் போகவே திகைத்தாள்.

"எங்க விழுந்திருக்கும்..." என்று யோசனையும் கவலையுமாக வெளிவந்தது அவள் குரல்.

 இரண்டு மணிநேரகமாக அந்த பயிற்சி வளாகத்தில் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் சென்று இருவரும் தேடினார்கள். ஆனால் அவர்களால் அந்த செயினை மட்டும் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் இருவரும் சோர்வடைந்த போதும் தங்களின் தேடலை மட்டும் நிறுத்தி கொள்ளவில்லை.

அப்பொழுது அவர்கள் பின்னிருந்து ஒரு குரல்,"என்ன தேடறீங்க ரெண்டு பேரும்?" என்று கேட்க,  இருவரும் யாரென்று திரும்பிப் பார்த்தனர்.

அது நம் நாயகன் பிரபா அன்றி வேறு யாராக இருக்க முடியும்? 

அவனின் சட்டையில் த்ரிஷ்யாவால் வேண்டுமென்றே ஊற்றப்பட்ட ரசம் நீரால் துடைக்கப் பட்டிருந்த போதும் அது வெள்ளை சட்டை என்பதால் மஞ்சள் கறை அப்பட்டமாக தென்பட்டது. 

பாத்திமா அவனை பார்த்து தயக்கத்துடனே, "அது இவளோட செயின்... " என்று அவன் கேள்விக்கு பதில் சொல்லும் முன்னரே அவளின் கையை அழுத்தி பிடித்து தடுத்த அவளின் அருமை தோழி, "ஒன்னும் இல்ல சும்மா இங்க இருக்க செடிங்கள்ல எவ்வளவு இலைகள் இருக்குனு எண்ணிக்கிட்டு இருந்தோம்." என்று கடுப்பாக சிரித்துக்கொண்டே பதில் சொன்னாள் .

ஆனால் அவளின் குரலில் மட்டும் எரிச்சல் அப்பட்டமாக தெரிந்தது.

இதனை கேட்ட பிரபா மனமோ,  'நக்கலு... இரு டி உனக்கு வைக்குறேன் கச்சேரி.'  என்று நினைத்துக்கொண்டது.

தோழிகள் இருவரும் ஓசைப்படாமல் திரும்பி நடந்தனர். அப்பொழுது பாத்திமா, "த்ரிஷ்யா ஒருவேளை சார்க்கு தெரிஞ்சிருந்தா." என்று கேட்டாள்.

"அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை" என்று அசைட்டையாக பதில் வந்தது த்ரிஷ்யாவிடமிருந்து.

பாத்திமாவோ மீண்டும், "இல்லனா சார் கிட்ட சொல்லி வைச்சா யாராச்சும் செக்யூரிட்டி கிட்ட சொல்லி தேட சொல்லுவாங்க இல்ல " என்றாள் .

த்ரிஷ்யா அவளை  முறைத்து பார்க்க, 

அதற்குள் பிரபா அவர்கள் பின்புறம் நின்று,  "என்ன தேடுறீங்கனு சொன்ன நானும் உதவி பண்ணலாம்னு பார்த்தேன்" என்றான்.

த்ரிஷ்யாவிற்கு அவனிடம் உதவி கேட்க விருப்பம் இல்லை. ஆனால் பாத்திமாவின் வற்புறுத்தலின் பேரில் அவள் மௌனம் காத்து நின்றாள்.

பாத்திமா அவனிடம், "ஒன்னும் இல்ல சார். இவளோட செயின் காணோம். நீங்க எங்கயாச்சும் பார்த்தீங்கன்னா.... இல்லனா யாராச்சும் அந்த செயின பார்த்துட்டு செக்யூரிட்டி ஆபீஸ்ல குடுத்திருப்பாங்களானு கேட்டு சொல்லமுடியுமா? நாங்க இங்க புதுசு. அதான் யாரையும் சரியாய் காண்டாக்ட் பண்ண தெரியல" என்று தயக்கத்துடனே கேட்டாள்.

"அதுக்கென்ன பாத்திமா தாராளமா கேட்டுச்சொன்னா போச்சு"

பாத்திமாவிற்கு அவன் தன்னை காலையில் வைட் சுடி என்று அழைத்தது நினைவிற்கு வந்தது. "என் பேர் உங்களுக்கு எப்படி?" என்று இழுத்தாள்.

உடனே த்ரிஷ்யா, "இது ஒரு பெரிய விஷயமா? நாம ரெண்டு பேர் மட்டும் தான் லேட்டா வந்தோம்னு சொன்னாரு இல்ல. அட்டெண்டன்ஸ்ல நம்ம ரெண்டு பேர மட்டும் லேட் லிஸ்ட்ல போட்டவர்க்கு நம்ம பேர் தெரியாதா என்ன?" என்று எகத்தாளமாக அவனை பார்த்து சொல்லிவிட்டு வேறுப்புறம் திரும்பிக்கொண்டாள்.

"பரவாயில்ல பாத்திமா உங்க தோழிக்கு வாய் தான் நீளம்னு நினைச்சேன். மூளை மூணாவது சந்து வரைக்கும் போயிட்டு வருதே" என்றான் பிரபாவும் நக்க்லாக.

பாத்திமா இருவரையும் பரிதாபமாக பார்த்தாள். அவளுக்கு ஏதோ புலிக்கும் சிங்கத்திற்கு நடுவில் மாட்டிக்கொண்டது போன்ற உணர்வு.

பிறகு பிரபா பாத்திமாவை பார்த்து, "நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு தீவிரமா தேடுறத பார்த்தா அந்த செயின் ரொம்ப விலை உயர்ந்ததா இருக்கும் போல" என்றான்.

"இல்ல சார். பிரச்சனை விலை இல்ல. அது அவளோட தாத்தா இறக்கும் தருவாயில அவர் கழுத்துல இருந்ததை அவ கழுல போட்டுவிட்ட செயின். கிட்டத்தட்ட பதினஞ்சு வருஷமா வைச்சிருக்கா சார். அவளுக்கு அது ரொம்ப ப்ரேஸியஸ்"

"அப்ப்பாடா... நான் கூட புதுசுனு நினைச்சுட்டேன்" என்று வடிவேல் பாணியில் பேசி நக்கல் அடித்தான் பிரபா .

த்ரிஷ்யாவின் பொறுமை காற்றில் பறந்தது. பிரபாவை முறைத்துவிட்டு பாத்திமாவின் கையை பிடித்தவள் அவளை திட்டிக்கொண்டே திரும்பி நடந்தாள்.

அதற்குள் பிரபா தன் குரலை உயர்த்தி, "ஹலோ த்ரிஷ்யா நீங்கள் பாண்டிய நாட்டு இளவரிசியா?" என்று கேட்டான். முதலில் த்ரிஷ்யா இவன் தன்னை நிற்கவைக்க ஏதோ உளறுகிறான் என்று அசட்டையாக நடந்தவள் சட்டென்று பிரேக் அடித்தது போல் நின்றாள். பின் திரும்பி அவனை முறைத்த முறைப்பில் பிரபா எரிந்து பொசுங்காமல் இருந்ததே ஆச்சரியம் தான்.

பிரபா, 'எப்பா என்ன கண்ணுடா.. கண்ணாலேயே கொல்றாளே.' என்று மனதில் நினைத்தவன் பின் "இல்ல மீன் சின்னம் பொருந்திய சங்கிலியெல்லாம் கழுத்துல போட்டுட்டு சுத்துறீங்களேனு கேட்டேன்." என்று ராகமாக கூறி முடித்தான் .

தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் வியப்பாக பார்த்துக்கொண்டனர்.

பிறகு த்ரிஷ்யா பொறுமையை கடைப்பிக்க எண்ணி மெதுவாக அவனிடம்,"என் செயினை நீங்க பார்த்தீங்களா?" என்று கேட்டாள்.

பிரபா சிரித்துக்கொண்டே அவன் கையிலிருந்த செயினை காட்டினான்.

அதனை பார்த்த பெண்கள் இருவரும் மகிழ்ச்சியில் குதித்தனர். பிறகு அவன் கையில் இருந்து அதனை வாங்க கைநீட்டிய த்ரிஷ்யாவின் கைக்கு செயின் சிக்கவில்லை.

ஏனெனில் அவள் அதை வாங்கும் முன் பிரபா தன் கையை பின்னுக்கு இழுத்துக்கொண்டான்.

த்ரிஷ்யா அவனை புரியாமல் பார்க்க பிரபாவே தொடர்ந்து, "செயின் வேணும்னா நீங்க அதாவது நீங்க மட்டும்" என்று த்ரிஷ்யாவை கை கட்டிய பிரபா, "என்னோட இந்த வெள்ளை சட்டையை வெள்ளையாவே மாறுற மாதிரி துவச்சு ... உங்க கையாள துவைச்சு குடுக்கணும்." என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் அழுத்தம் கொடுத்து கூறினான்.

இதற்கெல்லாம் அசைந்துவிட்டால் அவள் த்ரிஷ்யாவே இல்லையே. சிரித்துக்கொண்டே பாத்திமாவை பார்த்து, "பாரு பாத்திமா யார்கிட்ட என்ன பேசுறோம்னு சார்க்கு தெரியல பாவம். இவர்க்கு ரொம்ப தான் ஆசை. நான் இவர் துணிய துவைக்கணுமாம்" என்று நக்கலடித்தான்.

பிரபாவோ, "அப்போ உங்க செயின் வேணாமா?" என்று கூறி செயின் இருந்த கையை காற்றில் வீசினான்.

த்ரிஷ்யா பதட்டத்துடன் அவன் கை வீசிய திசையை நோக்கி பார்த்தாள். ஆனால் செயின் கீழே விழுந்தது போல் இல்லை. திரும்பவும் அவன் கையை பார்க்க அது அவன் கை சிறைக்குள் தான் இருந்தது என்றதும் ஓர் நிம்மதி பெருமூச்செறிந்தாள்.

அவள் கண்ணில் கலவரைத்த பார்த்த பிரபாவின் முகத்தில் சிரிப்பு குடிக்கொண்டது. "அப்போ செயின் கண்டிப்பா வேணும்... அப்படி தானே?" என்று த்ரிஷ்யாவை பார்த்துக்கொண்டே செயினை இடதுகையிலும் வலதுகையிலும் மாற்றி மாற்றி பிடித்தான்.

த்ரிஷ்யா பல்லைக்கடித்தபடி அமைதியாக இருந்தாள். தோழியின் நிலைமையை பார்த்த பாத்திமா அவன் முன்னின்று, "உங்க ஷர்ட்ட குடுங்க சார் நான் துவைச்சு எடுத்துட்டு வரேன்." என்று கேட்டாள்.

அனால் பிரபா அழுத்தமாக த்ரிஷ்யாவை பார்க்க அவளும் சளைக்காமல் முறைத்துக்கொண்டு நின்றாள். அவன் த்ரிஷ்யாவை பார்த்துக்கொண்டே ஒவ்வொரு பொத்தானாக கழட்டினான். உள்ளே பனியன் போட்டிருந்த போதிலும் அவனின் கட்டுக்கோப்பான உடல் கண்ணில் பட்டதும் த்ரிஷ்யா தன் முகத்தை திருப்பிக்கொண்டாள்.

பிரபாவின் கையில் ஒரு பையும் இருந்தது. அதில் இருந்த இன்னொரு சட்டையை எடுத்து அணிந்துகொண்டு தன் கறைபடிந்த சட்டையை பெண் இருவரின் முன் நீட்டினான்.

அவன் எல்லாவற்றையும் ஒரு திட்டத்தோடு தான் செய்கிறான் என்பது பெண்கள் இருவருக்கும் அப்பொழுது நன்றாக புரிந்தது. த்ரிஷ்யா தட்டை அவன் சட்டை மேல் சாய்க்கும் போது செய்யின் அவன் மீதோ அல்லது அவன் கண்ணில் படும் இடத்திலோ விழுந்திருக்கிறது. பின் வெளியில் சென்று தன் நண்பன் சட்டையை வாங்கிவந்த பிறகும் அதனை அணிந்து கொள்ளாமல் எப்படியும் அவள் தன் செயினை தேடுவாள் என்று தெரிந்து அவளை தேடிக்கொண்டு வந்திருக்கிறான்.

இதில் அதிகமாக அதிர்ச்சி அடைந்தது பாத்திமா தான். அவள் மனதிற்குள், "பழி வாங்கறதுல இவர் த்ரிஷ்யாவையே மிஞ்சிடுவார் போலயே. நல்ல பொருத்தம் ரெண்டுபேருக்கும் " என்று நினைத்துக்கொண்டாள்.

அவன் சட்டையை இன்னும் கையில் நீட்டிக்கொண்டிருக்கிறான் என்று புரிந்து பாத்திமா அதனை வாங்க கை நீட்ட அதற்குள் த்ரிஷ்யா அந்த சட்டையை அவன் கையில் இருந்து வெடுக்கென்று பிடுங்கியவள், "நாளைக்கு துவைச்சு ஐயர்ன் பண்ணி கொடுக்குறேன் காலைல வந்து வாங்கிக்கோங்க." என்று முறைத்துக்கொண்டு கூறினாள்

"அதெல்லாம் முடியாது. எனக்கு என் ஷர்ட் இப்போவே வேணும் " என்றான் பிடிவாதமாக.

"இப்போ துவைச்சா கூட எப்படி காயும்?" என்று அவனை முறைத்துக்கொண்டு கேட்க பிரபாவிற்கும் அவள் சொல்வது சரி என்றே தோன்றியது.

எப்படியும் நாளை செயின் வாங்கவேணும் அவன் சொன்னதை அவள் செய்து தானே ஆகவேண்டும் என்று நினைத்தவன், "சரி அப்போ செயினும் நாளைக்கு கிடைக்கும்" என்று கூறிவிட்டு அவர்களை திரும்பி பார்க்காமல் வெளியே நடக்கலானாள்.

பாத்திமா த்ரிஷ்யாவை பார்த்து முறைத்தாள். "இந்த ஷர்ட்க்கு விலையா உன் செயின கொடுத்திருக்க. உனக்கு இதெல்லாம் தேவையா? " என்று கோபமாக கேட்டாள் .

த்ரிஷ்யாவின் கண்கள் சென்றுகொண்டிருந்த பிரபாவின் மீதே இருந்தது. அவள் தன் தோழியை திரும்பி பார்க்காமலே, "கவலை படாதே... அவனுக்கு வேண்டியது செயின் இல்ல. அதனால எப்படியும் என் செயின் என் கைக்கு வந்திடும்" என்றாள்.

"அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?"

"ஹ்ம்ம்... பாம்பின் கால் பாம்பறியும்"

இவ்வாறு உரையாடிக்கொண்டே தோழிகள் இருவரும் விடுதிக்கு சென்றனர். 

காலை இருவரும் பயிற்சி வகுப்பிற்கு சரியான நேரத்து வந்தடைந்தனர். பிரபா அவர்களை மெச்சுதலாக  ஒரு பார்வை பார்த்ததோடு சரி. பின் வகுப்பின் பயிற்சி பாடம் எடுப்பதில் மூழ்கிவிட்டான்.

ஆனால் த்ரிஷாவின் கவனம் துளி கூட பாடத்தில் இல்லை. அவளின் செயினை பற்றியே யோசித்துக்கொண்டிருந்தாள்.

மதியம் உணவு இடைவேளை வந்ததும் பிரபா தன் (ப்ரெசென்டேஷன)விளக்காட்சியை மூடிவிட்டு வகுப்பை விட்டு வெளியேறினான்.

அவனின் வேக நடையினால் தோழிகள் இருவரும் ஓடிச்சென்று அவனை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.

த்ரிஷ்யா அவன் முன் நின்று வெறும் கையை நீட்டினாள். பிரபா அவளிடம் என்ன என்பது போல தலையசைத்தான்.

"என் செயின்"

"அப்போ என் ஷர்ட்."

"முதல என் கைக்கு செயின் வந்தா உங்க ஷர்ட் உங்களுக்கு கிடைக்கும்."

"அதெப்படி முடியும்? என் ஷர்ட் என் கைக்கு வரணும். அப்பறம் தான் உனக்கு செயின் கிடைக்கும். "

த்ரிஷ்யா அவனை பார்த்து அமைதியாக சிரித்தாள். "ஏன் பாத்திமா... இப்போ மட்டும் நம்ம நேரா எச்ஆர் கிட்ட போய் சார் என் செயின எடுத்து வைச்சுக்கிட்டு என்ன அவர் ட்ரெஸ்ஸ துவைக்க சொல்லி பிளாக் மெயில் பன்றாருனு ஒரு கம்பளைண்ட் குடுத்தா என்ன ஆகும். "

இதனை கேட்ட பிரபா அவசரமாக "அய்யோ... மேடம் மேடம் ப்ளீஸ் மேடம் அப்படிலாம் பண்ணிடாதீங்க என்னக்கு ரொம்ப பயம் பயமா வருது" என்று குளிரில் நடுங்குபவன் போல் நடுங்கினான்.

தோழிகள் இருவரும் அவனை சந்தேகமாக பார்த்தனர். அவனோ பின் வில்லத்தனமாக சிரித்தான்.

"நேத்து தான் உன் தோழிக்கு அறிவு அதிகம்னு பாராட்டினேன். அதுக்குள்ள அதெல்லாம் இல்லனு நிரூபிச்சுட்டா பார்த்தியா??" என்று கூறி பாத்திமாவை தூதுக்கு இழுத்தான்.

பாத்திமாவின் நிலை தான் பரிதாபமாக போனது. அவளுக்கு இருவரும் நேரடியாக பேசிக்கொண்டாள் தான் என்ன? என்று இருந்தது. அவர்கள் ஏன் இப்படி ஒன்றுமில்லாத விடயத்திற்கு முட்டிக்கொள்கிறார்கள் என்று அவர்களுக்கே புரியாத போது அவளுக்கு எங்கனம் புரிய போகிறது.

இப்படி மாறி மாறி பேசிய இருவரும் ஒருவரை ஒருவர் சளைக்காமல் முறைத்துக்கொண்டு நின்றனர்.

பின் பிரபாவே தொடர்ந்து, "இந்த செயின இப்பவோ தூக்கி வீசிட்டு எச் ஆர் கிட்ட இது என் ஷர்டே இல்ல. இவங்கள நான் நேத்து கிளாஸ் குள்ள விடலனு இவ்வளவு மோசமா பொய் சொல்றாங்கனு சொல்ல எனக்கு எவ்வளவு நேரம் ஆகும். உங்க லேட் அட்டெண்டன்ஸ் ரெகார்டே போதுமே." என்று சாதாரணமாக கூறி தோளை குலுக்கினான்.

பாத்திமா இருவரையும் பார்த்து, "ரெண்டு பேரும் பிடிவாதம் பிடித்தா இதற்கு ஒரு முடிவே கிடையாதா?" என்று கேட்டாள்.

"இருக்கு... அவளை என் ஷிர்ட்ட தூக்கி காட்ட சொல்லு. நானும் செயினை தூக்கி காட்றேன். என் ஷர்ட் நான் கேட்ட மாதிரி இருந்தா நான் செயினை குடுத்துட்டு போயிடுறேன்" என்று ஒரு தீர்வை கூறினான். பாத்திமாவிற்கும் இது சரி என்றே தோன்றியது.

ஆனால் த்ரிஷ்யா எதையோ பலமாக யோசித்துக்கொண்டு நின்றாள். பாத்திமா அவளிடம் பிரபா கூறியபடி செய்ய சொல்லி வற்புறுத்தினாள். ஆனால் அவளோ முடியாது என்று முறைத்துக்கொண்டு நிற்கவே இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண எண்ணி பாத்திமாவே அந்த கவரில் இருந்த சட்டையை தூக்கி பிடித்தாள்.

இல்லை பிடிக்க முயற்சி செய்தாள். அனால் அது தூண்டு துண்டாக உதிர்ந்து மீண்டும் அந்த அந்த கவருக்குள்ளயே விழுந்தது.

அதனை கண்ட பாத்திமா கையில் அகப்பட்ட ஒரு துண்டு துணியை மட்டும் பிடித்துக்கொண்டு அப்படியே சிலையாகிவிட்டாள். பிரபா அதிர்ச்சியோடு த்ரிஷ்யாவை பார்த்தான்.

அவளோ இது எதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல் விட்டத்தை வெகு தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

பாத்திமா அவளை இழுத்து கொண்டு வந்து தள்ளி  சென்று நிறுத்தி இறங்கிய குரலில், "இதுக்கு தான் காலைல இருந்து இந்த கவரை என்ன தொடவிடாம கட்டிகாத்தியா.. நானே வாஷ் பன்றேன்னு தானே சொன்னேன். நீ உள்ள வராத நானே பார்த்துக்குறேன்னு சொன்ன. உள்ள இந்த வேலைய தான் பாத்தியா?" என்று கேட்டாள்

அவளின் அருமை தோழுயோ, "ஆமா அவன் என்ன... என்ன அவன் வீடு வேலைக்காரின்னு நினைச்சானா. இவன் சட்டையை நீட்டினா நான் துவைச்சுடுவேனா... நான் யாருனு அவனுக்கு கூடிய சீக்கிரம் காட்டுறேன்."

"இப்பவே காட்டிட்டு தான் மா இருக்க" என்று பதில் வந்தது பிரபாவிடம் இருந்து. இவள் குரலை உயர்த்தி பேசியதும் பிரபா அவர்கள் அருகில் வந்து நின்று அவளை ஆழமாக ஒரு பார்வை பார்த்து, 

"ஆனா நான் யாருனு உனக்கு இன்னும் சரியா தெரியல" என்று விஷம புன்னகையுடன் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.

த்ரிஷ்யா ஒருவேளை அன்றே அவன் சட்டையை கொடுத்து செயினை வாங்கி சென்றிருந்தாள் அவர்கள் இருவரின் வாழ்க்கை திசையும் வேறுவிதமாக திரும்பி இருக்க கூடும். ஆனால் அப்படியெல்லாம் எளிதாக வாழ்க்கை இருந்துவிட்டாள் அதில் சுவாரஸ்யம் என்பதே இல்லாமல் போய்விடும்.

 

Uploaded files:
  • ennaimaranthayo.jpg

You cannot copy content