You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Solladi Sivasakthi - Episode 15

Quote

15

கோபமும் ஏளனமும்

சக்தி செல்வன் சற்றும் குறையாத கம்பீரத்தோடு அறைக்குள் நுழைய அவனை நேர் கொண்டு பார்க்க முடியாமல் சிவசக்தி தயங்கி நின்றாள்.

“உட்காருங்க சக்தி செல்வன்” என்று ஜோதி சார் உரைக்க அவனைப் பார்ப்பதை தவிர்க்க,

“அப்பா நான் கிளாஸுக்கு போறேன்” என்று வெளியே செல்ல யத்தனித்தாள்.

“இரு சக்தி” என்று ஜோதி சார் அவளைப் போகவிடாமல் தடுத்தார்.

அவள் தவிர்க்க முடியாமல் திரும்பி நோக்க அப்போது சக்திசெல்வன் அவன் முகம் தெரியாத வண்ணம் இருக்கையில் அமர்ந்திருந்தான்.

“வந்து நீயும் உட்காரும்மா” என்றார்.

எதற்குத் தன்னை அழைக்கிறார் என்று தெரியாமல் சக்தி விருப்பமின்றி இருக்கைக்கு அருகில் வர சக்திசெல்வன் சிவசக்தியை பார்த்த பார்வையில் ஒருவிதமான வெற்றிப் புன்னகை தெரிந்தது.

அவள் முதன் முதலில் அவனைச் சந்தித்த போது அவனிடமிருந்த ஆடம்பர தோற்றம் முற்றிலும் இன்று மாறி சாதாரணமான உடையில் காட்சியளித்தான். உடைதான் மாறி இருந்ததே ஒழிய அவனின் தோரணையில் அந்த ஆடம்பரமும் கம்பீரமும் துளி கூடக் குறையவில்லை.

சக்தி அவன் அருகிலிருந்த இருக்கையில் அமர முடியாமல் நின்றபடி,

“சொல்லுங்கப்பா ?” என்று கேட்டாள்.

“முதல்ல நீ உட்காரு” என்று ஜோதி சார் மீண்டும் அழுத்தமாய் உரைக்க, சக்தி மூச்சை இழுத்துவிட்டபடி விருப்பமின்றி அமர்ந்தாள்.

சிவசக்தி அவனருகில் அமர்ந்திருந்தும் பாரா முகமாய் இருந்தபடி,

“என்ன விஷயம்பா?” என்று ஜோதி சாரை நோக்கியபடி கேட்டாள்.

“இவர்தான் சக்தி செல்வன்” என்று ஜோதி சார் கை காண்பிக்க இப்போது அவனைப் பார்த்தே தீர வேண்டிய கட்டாயத்தில் வேறு வழியில்லாமல் இயந்திரத்தனமாய்ப் புன்னகையை உதிர்த்தாள்.

ஜோதி சார் சக்தி செல்வனை நோக்கி,

“இவங்க பெயர் சிவசக்தி... ஸோசியல் டீச்சர்... என்னோட மகள் மாதிரி” என்றார்.

சக்திசெல்வன் அப்போதுதான் அவளைப் பார்ப்பது போல்,

“நைஸ் மீட்டிங் யூ சிவசக்தி” என்று அவளைப் பார்த்து வசீகரமாய்ப் புன்னகையித்தான்.

இப்போது ஜோதி சார் தொண்டையைக் கனைத்துவிட்டு,

“இத பாருங்க சக்தி செல்வன்... உங்க பயோடேட்டா ரொம்ப இம்பிரஸ்ஸிவ்வா இருக்கு... ஆனா உங்க தகுதிக்கு நீங்க இன்னும் பெட்டரான இடத்தில வேலை செய்யலாம்… இங்கே ஸேலரி கொஞ்சம் கம்மிதான்... நீங்க யோசிச்சு முடிவெடுங்க” என்றார்.

சக்திசெல்வன் கம்பீரத் தொனியில்,

“யோசிக்க வேண்டிய அவசியமில்ல... ஸேலரி நாட் அ பிராப்பளம்... நான் இங்க வொர்க்க பண்ண டிசைட் பண்ணிட்டேன்... இனிமே நீங்கதான் நான் உங்க ஸ்கூல்ல வேலை செய்யத் தகுதியானவனான்னுசொல்லனும்” என்றார்.

“தகுதி உங்களுக்கு நாங்க எதிர்பார்த்ததை விட அதிகமாவே இருக்கு... அதுவும் இல்லாம சக்திமா என்ன சொல்றான்னா... நீங்க இன்னும் பெட்டர் ஜாப் கிடைச்சு பாதியிலேயே நின்னுட்டா... அப்புறம் டுவல்த் ஸ்டன்டட் வேற... எங்களுக்குத்தான் ரிஸ்க்” என்றார்.

சக்தி செல்வன் சிரித்துவிட்டு,

“அப்படி எல்லாம் எந்த வேலையையும் அறைகுறையாய் பாதியிலேயே விட்டுவிட்டு போற பழக்கம் எனக்கில்லை” என்று சக்தி செல்வன் சொல்லி முடித்து சக்தியை திரும்பிப் பார்த்த பார்வையில் அவன் சொன்னதன் உள்ளர்த்தம் வாசகர்களுக்குப் புரிந்ததோ தெரியவில்லை. ஆனால்சிவசக்திக்கு நன்றாகவே புரிந்தது.

சிவசக்தி ஜோதி சாரை நோக்கி,

“டுவல்த் ஸ்டான்டை எல்லாம் எக்ஸ்ப்பிரீயன்ஸ் இல்லாம மேனேஜ் பன்றது... ரொம்பக் கஷ்டம்” என்றாள்.

“அப்போ என்னால முடியாதுன்னு சொல்றீங்களா சிவசக்தி ?!” என்று அவளிடம் நேரடியாகவே திரும்பி சக்தி செல்வன் கேட்டான்.

சிவசக்தி உடனே அவன் புறம் திரும்பி

“நான் யதார்த்தத்தைச் சொன்னேன்... எக்ஸம்ஸ்ல என்ன கேள்வி வரும்?... மார்க் வெயிட்டேஜ்... இப்படி எதாவது தெரியுமா... உங்களுக்கு?” என்று கேள்வி எழுப்பினாள்.

“எக்ஸேம் நோக்கத்தில படிச்சா மார்க் வாங்கலாம்... பட் எதிர்காலம் கேள்வி குறியாயிடும்... எக்ஸ்பிரீயன்ஸை விட ஒரு டீச்சர்கிட்ட சப்ஜக்ட் நாலேஜ் இருக்கான்னு பார்க்கனும்” என்றான்.

“பிளஸ் டூ போஷன்ஸ் ரொம்ப நிறைய இருக்கும்... போன தடவை இருந்த டீச்சர் கம்பிளீட் வேற பண்ணல... எதுவும் தெரியாம இவரால் மேனஜ் பண்ண முடியாதுப்பா” என்று ஜோதி சாரை பார்த்துத் தீர்க்கமாக உரைத்தாள்.

சிவசக்தி இப்படி ஒருவரை நிராகரிக்க ஆர்வம் காட்டுவதை ஜோதி சாரால் நம்பவே முடியவில்லை. அவள் எதற்காக நிராகரிக்கிறாள் என்பது சக்திசெல்வனுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் அவன் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

சக்தி செல்வன் எழுந்து நின்றபடி,

“முடியாதுங்கிற வார்த்தையே என் அகராதியில் கிடையாது... என் மேல நம்பிக்கை இருந்தா மட்டும் இந்த வேலையை எனக்குக் கொடுங்க...” என்று சக்திசெல்வன் கர்வத்தோடு உரைக்க அவன் பேச்சில் ஜோதி சார் கவர்ந்து இழுக்கப்பட்டார்.

“சக்தி செல்வன்... எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு... ரொம்பத் துடிப்பான ஆள் நீங்க... உங்களை மாதிரி ஒருவர் இந்த ஸ்கூலுக்குத் தேவை... அப்பாயின்மென்ட் ஆர்டர் எடுத்துட்டு வரச் சொல்றேன்... ஆபிஸ் கேபின்ல வெயிட் பண்ணுங்க” என்று ஜோதி சார் உரைத்தார். சக்திசெல்வன் ஜோதி கிருஷ்ணனிடம் கை குலுக்கிவிட்டு வெளியே சென்றான்.

அவன் சென்ற பிறகு சிவசக்தி மீண்டும் ஜோதி சாரிடம்,

“டெமோ கிளாஸ் எடுக்கச் சொல்லுங்கப்பா... அதுக்குள்ள என்ன அவசரம்” என்றாள்.

“சக்தி... நான் பல வருஷமா இந்த ஸ்கூலை நடத்திட்டிருக்கேன்... பல பேரை என் வாழ்கைக்யில பாத்திருக்கேன்... அதனால ஒருத்தரைப் பார்த்ததும் என்னால் நிச்சயம் அவங்க தகுதியானவங்களான்னு தெரிஞ்சிக்க முடியும்.

அதுவும் இல்லாம சக்தி செல்வன் பேச்சில் என்ன ஒரு தெளிவு, தைரியம் பார்த்தியா... இத்தனை வருஷ அனுபவத்தில் சொல்றேன்... சக்தி செல்வன் நிச்சயமா ரொம்பவும் தகுதியான பொறுப்பான ஆள்” என்றார்.

சிவசக்திக்கு என்ன சொல்வதென்றே புரியாமல்,

“உங்ளுக்கு ஒகேன்னா சரிதான்... நான் கிளாஸுக்கு போறேன்...” என்று திரும்பியவள் மீண்டும் ஏதோ நினைவு வந்தவளாய், “ஜெயா ஏன் இன்னும் வரலப்பா?” என்று கேட்டாள்.

“நான் சீக்கிரம் வந்துட்டேன்ல... அதனால அவ தூங்கி எழுந்து லேட்டாதான் வருவா... திருந்தாத ஜென்மம்” என்று ஜோதி சார் சொல்ல சக்தி சிரித்தபடி, “ஒகேப்பா” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள்.

சிவசக்தி கையில் வாட்ச்சை பார்த்துவிட்டு விறுவிறுவெனத் தன் வகுப்பிற்கு விரைந்தாள். அங்கே பெரிய கூச்சலும் குழப்பமும் நடந்திருந்தது. சக்தி உள்ளே வந்த நொடியில் அங்கே நிசப்தம் குடிகொண்டது.

மேஜை மேல் இருந்த ரெஜிஸ்டரை புரட்டினாள். அவனைப் பற்றிய ஆயிரம் கேள்விகள் மனதில் சுழற்றிக் கொண்டிருக்க அன்று முழுவதுமே அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை.

மாலை நேரம் வேலை எல்லாம் முடிந்து சோர்வோடு கிளம்பும் நேரத்தில்தான் ஜெயாவை பார்க்கவே இல்லையே என்ற எண்ணம் தோன்றியது. நேராக அலுவலகத்திற்குச் சென்றவள் அங்கே ஜெயாவும் சக்திசெல்வனும் ரொம்ப நாள் பழகியவர் போலப் பேசி கொண்டிருந்தனர்.

ஜெயாவிடம் சக்தி செல்வன் எல்லா விஷயத்தையும் சொல்லி இருக்கக் கூடுமோ என்ற பயந்தபடி நோக்கினாள். ஜெயா சிரித்துக் கொண்டே சிவசக்தி வாசலில் நிற்பதை பார்த்துவிட்டு உள்ளே வரச் சொல்லி அழைத்தாள்.

சிவசக்தி உள்ளே சென்று அவனைச் சந்திக்க விருப்பமின்றி,

“நான் கிளம்பனும் ஜெயா... பை” என்று சொல்லிவிட்டுப் புறப்படப் பார்த்தவளை ஜெயா கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள்.

“விடு ஜெயா... நான் கிளம்பனும்” என்று சக்தி ஜெயாவின் கையை உதறினாள். ஜெயா சிவசக்தியின் தவிப்பைப் புரிந்து கொள்ளாமல் இருவரையும் அறிமுகம் செய்வித்தாள்.

“காலையிலேயே நாங்க அறிமுகமாயிட்டோம்” என்று சக்தி செல்வன் உரைக்க ஜெயா சிவசக்தியினை நிமிர்ந்து பார்த்து,

“அப்படியா சக்தி?” என்று கேட்டாள்.

“ஆமாம்” என்று முகத்தைத் தொங்கப் போட்டபடி நின்றாள்.

“என்னோட பெஸ்ட் பிஃரண்டு” என்று சிவசக்தியின் தோள்களில் கை வைத்து ஜெயா பெருமையோடு சக்திசெல்வனிடம் உரைக்க, அதெல்லாம் அவன் முன்னமே அறிந்த கதைதானே.

“சக்தி... நான் கேட்க வந்ததையே மறந்துட்டேன்... உங்க ஏரியாவில ஏதாச்சும் வீடு வாடகைக்கு இருக்கா?” என்று சிவசக்தியை நோக்கி ஜெயா கேட்க,

“எதுக்குக் கேட்கிற?” என்று சிவசக்தி வினவினாள்.

“மிஸ்டர். சக்திக்காகத்தான்” என்றாள்.

இப்போது சிவசக்தியின் புருவங்கள் சுருங்க சக்திசெல்வனை நோக்கி பொறுமை இழந்தவளாய்,

“இத பாருங்க சக்தி... இதுவரைக்கும் நீங்க விளையாடின விளையாட்டெல்லாம் போதும்... இனிமேயும் புதுசா ஏதாச்சும் ஆரம்பிக்காதீங்க... ப்ளீஸ் இங்கிருந்து போயிடுங்களேன்...” என்று கோபத்தோடு உரைக்க ஜெயாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

“ஒரு வாடகை வீடு கேட்டது தப்பா?!” என்று ஜெயா கேட்க,

“நீ வேற ஜெயா புரியாம?” என்று சக்தி அலுத்துக் கொண்டாள்.

ஆனால் சக்தி செல்வன் எதுவும் பேசாமல் மௌனம் காத்தான்.

மீண்டும் சிவசக்தி அவனை நோக்கி, “அன்னைக்கே நாம பேசி முடிச்சிட்டோம்... இப்போ புதுசா என்ன... உங்க பணக்கார விளையாட்டில எல்லோரையும் முட்டாளாக்க பார்க்காதீங்க...” என்று வெறுப்பைக் காட்டியபடி சொல்லும் போதும் அவன் இயல்பாகவே அமர்ந்திருந்தான். அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல ஆர்வம் காட்டவில்லை. ஏன் அவள் பேசியதை அவன் பொருட்படுத்தவும் இல்லை.

“நான் பேசிறது உங்க காதில விழலயா மிஸ்டர்... ஸே சம்திங்” என்று சிவசக்தி சொன்ன போதும் அவன் கவனிக்காதது போலவே அமர்ந்திருந்தான்.

ஒருபுறம் சிவசக்தியின் திடீர் கோபம். மறுபக்கம் ஏளனமான பார்வையோடு திரும்பிக் கூடப் பார்க்காமல் அமர்ந்திருக்கும் சக்திசெல்வன். இருவரின் நடவடிக்கையும் ஜெயாவை பெரிதும் குழப்பமடையச் செய்தது.

You cannot copy content