You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Solladi Sivasakthi - Episode 20

Quote

20

சதுரங்க பாஷை

ஆனந்தி சக்திசெல்வனிடம் பாடங்களைப் பற்றியும் வேறு சில விஷயங்களைப் பற்றியும் ஆர்வமாகப் பள்ளியிலிருந்து வீடு வரை வழி நெடுக பேசிக் கொண்டே வந்தாள். அவர்கள் இடையில் செல்லாமல் சிவசக்தி பின்னோடு நடந்து வந்து கொண்டிருந்தாள்.

அவனின் மீதான காதல் அளவாய் இருந்த போது அதை மறைக்க முடிந்தது. இன்று அது ஊற்றாகவே பெருக்கெடுக்க, சொல்வதற்கு வார்த்தைகளின்றித் தவித்தாள்.

அவனுடனான தன் வாழ்க்கை அழகானதாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று தன்னோடு இருக்கும் அவன் நாளை அவனுடைய வாழ்க்கையை நோக்கி பயணப்பட்டுத்தானே ஆகவேண்டும்.

காதல் என்ற உறவு திருமணப் பந்தத்தில் முடியும் போது தானும் சிவசக்தி இல்லத்தை விட்டு வெகு தூரம் செல்ல நேரிடும். ஏன் பெண்களுக்கு மட்டும் இத்தகைய அநீதி? என்ற அவள் தனக்குள் கேட்ட கேள்விக்கான விடை இந்தச் சமூகத்தில் உள்ள யாரிடமும் இல்லை.

சிவசக்தி தான் செய்ய நினைக்கும் காரியங்களின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் செயல்படுபவள். ஆனால் இன்று அவன் மீதான காதலை சொல்ல மட்டும் அவள் மனதிற்குள் இத்தனை பெரிய போராட்டத்தை மேற்கொண்டாள் எனில் இன்னமும் ஏதோ ஒரு தயக்கம் அவளுக்குள் மிச்சமிருந்தது.

வீட்டின் வாசலை அடைந்த போது சக்திசெல்வனையும் ஆனந்தியும் பார்த்த மரியாவின் முகம் கடுகடுவென மாறியது. அவள் கோபத்தின் மிகுதியால் ஆனந்தி என்று அதட்டலாய் அழைத்து உள்ளே போகச் சொன்னாள். சிவசக்திக்கு மரியாவின் செயல் வேதனைப்படச் செய்த அதே சமயத்தில் சக்திசெல்வனுக்குச் சினம் உண்டானது.

“என்ன பிரச்சனை உங்களுக்கு... என் மேல ஏன் நீங்க காரணமில்லாமல் கோபத்தைக் காட்டிறீங்க... முதல்ல ஒரு விஷயத்தைப் புரிஞ்சிக்கோங்க... நான் ஆனந்தியை என் சொந்த தங்கையைப் போலத்தான் பார்க்கிறேன்... உங்க தப்பான கண்ணோடத்தால எங்க உறவை கலங்கபடுத்தாதீங்க ப்ளீஸ்” என்று அழுத்தமாய்ச் சொல்லிவிட்டு நொடி பொழுதில் மாடிப் படிக்கெட்டுகள் ஏறி மறைந்தான்.

சிவசக்தி அதிர்ந்து போய் நின்றிருந்தாள். மரியாவோ கோபம் சிறிதும் குன்றாமல் சிவசக்தியை குற்றவாளியைப் போலப் பார்த்துவிட்டு அகன்றாள்.

வீட்டிற்கு உள்ளே சென்ற சிவசக்தி மரியாவை சமாதானப்படுத்துவது அத்தனை எளிதல்ல என்பதைப் புரிந்துக் கொண்டாள். தலைப் பாராமாய்த் தோன்ற அவள் நேராகச் சமையலறையில் இருந்த கமலாவிடம் சென்றாள்.

கமலா அவள் மனதைப் புரிந்தபடி சூடான காபியோடு நிற்க சிவசக்தி,

“தேங்க்ஸ் கா”என்று வாங்கிக் கொண்டாள்.

“இதைச் சக்தி தம்பிக்கிட்ட கொடுத்திடு பாப்பா... உனக்கு வேற போட்டு வைக்கிறேன்” என்றாள் கமலம்.

“அப்போ இது எனக்கில்லையா?!” என்று சக்தி ஏமாற்றத்தோடு கேட்க,

“போய்க் கொடுத்திட்டு வா பாப்பா... சூடாறிடப் போகுது” என்று கமலா உரைத்தாள்.

சிவசக்தி முறைத்தபடி “என்னக்கா புதுசா தம்பி எல்லாம்” என்றாள்.

“ரொம்ப நல்ல தம்பி... என் சமையலை புகழ்ந்திட்டு போச்சு... நான் இந்த மாதிரி சாப்பிட்டதே இல்லைன்னு... சொல்லி எப்படிப் பேசிச்சு தெரியுமா!” என்று கமலம் சொல்லிப் பெருமிதம் கொண்டாள்.

அவளைப் பொருத்தவரை சமையலறைதான் அவளுக்கு உலகம். யாராவது அவள் சமையலைப் பாராட்டிப் பேசிவிட்டாள் அவளுக்கு அளவுகடந்த சந்தோஷம் ஏற்படும்.

சக்திசெல்வன் அப்படி வாய் ஓயாமல் கமலாவைப் பாராட்ட அதனாலயே அவனைக் கமலாவுக்கு ரொம்பவும் பிடித்துப் போனது. அந்த மாற்றத்தின் காரணம் புரியாமல் சிவசக்தி சந்தேகமாய்,

“இதெப்போ நடந்துச்சு... எனக்குத் தெரியாமா?” என்று கேட்டாள்.

“சூடாறிடப் போகுது... போ பாப்பா” என்று கமலம் சிவசக்தியை விரட்ட, அவன் மேலே போனால் கோபமாய் இருப்பானோ என்று அச்சத்தோடு அவள் படியேறினாள்.

சக்திசெல்வன் அறையின் வெளியே நின்றிருக்க அவனின் முகத்தில் உக்கிரம் தாண்டவமாடியது. ஏற்கனவே கீதா சொன்ன வார்த்தை சிவசக்திக்கு இப்போது நினைவுக்கு வந்தது. அவன் கோபத்துடன் இருந்தால் அரகென்ட் என்று சொல்லி இருந்தாள்.

இதுநாள் வரை அப்படி ஒரு கோபத்தை அவள் எதிர்கொண்டதே இல்லை. இன்று அது நடைபெறுமோ என்று எண்ணியபடி காபியை அவனிடம் பதிலேதும் பேசாமல் நீட்டினாள்.

சக்திசெல்வன் தன் கோபப் பார்வையைச் சிவசக்தியின் புறம் திருப்ப

“என்னை ஏன் முறைக்கிறீங்க... இதுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் ?” என்றாள்.

“நீ நினைச்சபடி என்னைப் பழிவாங்கிட்ட இல்ல” என்றான்.

“ஒ மை காட்... சத்தியமா இல்ல சக்தி… நானே இப்படி எல்லாம் எதிர்பார்க்கல... ஐம் சோ சாரி” என்று அழுத்தமாய் உரைத்தாள்.

சக்திசெல்வன் சிவசக்தியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை அவன் முகப்பாவனையில் நன்றாகவே புரிந்தது.

சிவசக்தி மேலும் “மரியா அக்காவுக்கு ஏற்பட்ட அனுபவம் ரொம்ப மோசமானது சக்தி... நிறைய ஏமாற்றம்... ரொம்பச் சின்ன வயசில ஏற்பட்ட வலி...

இதெல்லாம் அவங்களை அப்படி யோசிக்க வைச்சிருச்சு... உங்க மேல அவங்களுக்குத் தனிப்பட்ட கோபமோ வெறுப்போ கிடையாது. ஆண்களைக் கண்டாலே அவங்களுக்குள்ள உருவாகிய கோபம்... டிப்பிரஷன்... தட்ஸ் இட்” என்று சிவசக்தி பொறுமையாய் எடுத்துரைக்க சக்திசெல்வன் மௌனமாய் நின்றான்.

“ஆண்களைப் பார்த்தாலே ஒரு தப்பான கண்ணோட்டம் உனக்கும்தானே இருக்கு?!” என்று கேட்டான்.

“அப்படி எல்லாம் இல்லையே” என்று அவள் தலையசைத்தாள்.

“உன் கவிதையோட ஒவ்வொரு வரியிலும் அந்த எண்ணம் தெரிஞ்சிது... உன் கவிதையை ரசிச்சி படிச்ச அதே நேரத்தில... உன் மேல எனக்குக் கோபமும் வந்துச்சு... ஆனா எப்போ உன்னைப் பத்தியும் உன் வாழ்க்கையைப் பத்தியும் தெரிஞ்சிக்கிட்டனோ அப்போ... உன் பக்கம் இருந்த நியாயம் புரிஞ்சிது...

ஆனா நீ நினைக்கிற மாதிரி எல்லா ஆண்களும் கிடையாது... ஆண் அதிக்கம் இந்த உலகத்தில நிறையவே இருக்கு... அதை நான் மறக்கல... ஆனா ஒரு ஆணுடைய வளர்ப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது பெண்தான்... ஒரு அம்மா தன்னோட பிள்ளைக்குப் பெண்மையை மதிக்கக் கத்து கொடுத்தா முக்கால்வாசி ஆண்கள் அப்படி நடந்துக்க மாட்டாங்க...

பெண் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுத்த பலர் ஆண்கள்தான்... பெண்கள் அடிமை மனப்பான்மையோடு இருக்கும் வரை ஆண்கள் ஆளுமை எண்ணத்தோடுதான் இருப்பாங்க... பிரச்சனை இந்தச் சமுகத்திலும் ஒரு பெண்ணுக்குள்ளேயே இருக்கிற தாழ்வு மனப்பான்மையிலும் இருக்கு... மரியா சிஸ்டர்கிட்டயும் அந்த எண்ணம்தான் இருக்கு... அவங்களுக்கு நடந்தது ஒரு பேட் அக்ஸிடென்ட் சக்தி... அது காதல் இல்ல ஈர்ப்பு...

அதைப் பத்தி நினைச்சிக்கிட்டு இல்லாம... தூக்கி போட்டுவிட்டு அவங்க வாழ்க்கையை நோக்கி முன்னேறனும்... அவங்களோட இந்தக் கேரக்டர் ஆனந்தியோட மனநிலையையும் எதிர்காலத்தையுமே பாதிக்கலாம்... முதல்ல அவங்களுக்குச் சொல்லி புரிய வை!” என்றான்.

சக்திசெல்வன் பேசி முடிக்கும் போது சிவசக்தி திகைப்பில் மூழ்கி இருக்க, “சக்தி” என்று அழைத்து அவளை மீட்டெடுத்தான்.

அவள் தன் கையிலிருந்து காபியை அவனிடம் நீட்ட சக்தி அதைப் பெற்றுக் கொண்டு

“இது கோல்ட் காபி ஆயிடுச்சு... கமலக்காக்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லி சூடுபண்ணி தர சொல்றியா ப்ளீஸ்?” என்று அவன் சொல்ல அவள் மனதில் தான் என்ன இவனுக்கு வேலைக்காரியா என்று எண்ணியபடி முறைத்தாள்.

அவன் உடனே புன்னகையோடு,

“இவனுக்கு என்ன நாம வேலைக்காரியான்னு யோசிக்கிறியா?” என்று கேட்டான்.

சக்தி அவன் தன் எண்ணத்தை எப்படியாவது படித்துவிடுகிறானே என்று யோசித்தவள் கொஞ்சம் கோபமாக,

“நான் ஒண்ணும் அப்படி எல்லாம் யோசிக்கல... கப்பை கொடுங்க சூடுப்பண்ணி... எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லி வாங்கிக் கொண்டு விறுவிறுவெனச் சென்றாள்.

’இவளை கட்டிக்கிட்டா... நம்ம எல்லாத்துக்கும் இவக்கிட்ட இப்படிதான் கெஞ்சனும் போலயே’ என்று அவன் தனக்குள் எண்ணிக் கொண்ட அதே சமயத்தில் அவளும்,

‘இவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா இதான் நம்ம நிலைமையோ? ’ என்று பெருமூச்சுவிட்டபடி படியிறங்கினாள்.

அங்கே வழியில் மரியா நின்று கொண்டிருக்க அவள் எல்லாவற்றையும்கேட்டுக் கொண்டிருந்தாள் என அவள் முகமே காட்டிக் கொடுத்தது.

இப்போது சக்தி ஏதோ சொல்ல வாய் திறக்க மரியா அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு,

“நான் சாரி சொன்னேன்னு சக்திசெல்வன்கிட்ட சொல்லிடிறியா ?” என்றாள்.

அவனின் பேச்சு மரியாவின் மனநிலையை மாற்றியதைக் கண்டு சிவசக்தி நெகிழ்ந்து போய் நின்றாள். இப்போது அவளின் இதயம் முழுமையாய் அவன் புறம் சாய்ந்திருந்தது.

இனிமே அவள் எங்கிருந்து பிடிவாத கயிறை பிடித்துக் கொண்டு தொங்குவது. மாறாய் காதலென்று கயிற்றில் மீளமுடியாமல் கட்டுண்டாள். சிவசக்தி மனம் மாறி இருந்ததைப் போலச் சிவசக்தி இல்லமும் முற்றிலும் மாற்றம் பெற்றது.

கண்ணனுக்குப் பிறகு அந்த இல்லத்தில் உள்ளவர்களின் மனதைக் கவர்ந்தவன் சக்திசெல்வன்தான். ஆனால் பார்வதி மட்டும் கொஞ்சம் இருக்கமாகவே இருந்தாள். சக்திசெல்வன் பார்வதி இல்லாத சமயத்தில் அங்கே சுதந்திரமாய் வந்து சென்றான்.

இப்போதெல்லாம் சக்திசெல்வனுக்கு இல்லத்தில் உள்ளவர்களோடு பேசிக் கொண்டு பொழுதைக் கழிக்கச் சிவசக்திக்கு அவனிடம் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவளின் காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைப்பதில்லை.

அன்று சக்திசெல்வன் இல்லத்தில் கணக்குப் பாடத்தை மும்முரமாய் ஆனந்திக்குக் கற்பித்துக் கொண்டிருக்க ஒரு நிலையில் அவள் முகத்தில் சோர்வு ஏற்பட்டது.

சக்திசெல்வன் அதைப் புரிந்தவனாய் ஆனந்தியின் பாடப் புத்தகத்தை வாங்கி மூடி வைத்து விட்டு,

“செஸ் விளையாடலாமா?” என்று வினவினான். ஆனந்தியும் முகத்தில் சந்தோஷம் பொங்கச் சரியென்றாள்.

மரியாவின் சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு ஆனந்தியும் சக்தி செல்வனும் விளையாடத் தொடங்கினர்.

சிவசக்தி அவர்களைக் கவனித்தபடி,

“பார்வதிம்மா வரப் போறாங்க... நீங்க மேலே போங்க“ என்றாள்.

அவன் அவள் சொல்வதைக் காதில் போட்டுக்கொள்ளாமல் ஆனந்தியிடம்,

“உனக்கு யார் செஸ் சொல்லித் தந்தது” என்று கேட்டான்.

“சக்தி அக்காதான்” என்றாள்.

“அதான்... நீ என்கிட்ட தோற்று போயிட்டே இருக்க” என்றான்.

அவன் வார்த்தைகளால் சிவசக்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, சக்திசெல்வனைக் கூர்மையாய் பார்த்தபடி ஆனந்தியை அதிகாரமாய் எழுந்திருக்கச் சொல்லிவிட்டு,

“லெட் மீ பிளே” என்றாள்.

ஆனந்தியும் எழுந்து கொள்ளச் சிவசக்தி சக்திசெல்வனின் எதிரே அமர்ந்தபடி,

“பார்க்கலாம் மிஸ்டர். சக்தி... யார் ஜெயிக்கப் போறான்னு... ஒயிட் ஆர் பிளாக்” என்று வினவியபடி கலைந்திருந்த காய்களைக் கருப்பு வெள்ளை நிற அட்டையில் அடுக்கினாள்.

“பிளாக் இஸ் மைன்” என்றான் சக்தியின் செயலைக் கவனித்தபடி.

ஆனந்தி அவர்களின் ஆட்டத்தை ஆர்வமாய்க் கவனித்துக் கொண்டிருந்தாள்.

சிவசக்தி அவனின் ஆட்டத்தைக் கணித்தபடி,

“மத்தவங்களைத் தோற்கடிப்பதில் உங்களுக்கு ஒரு சந்தோஷம்... இல்லையா!” என்றாள்.

சக்திசெல்வன் புன்னகையோடு,

“நான் எப்பவுமே என்னோட வெற்றியை நோக்கிதான் காய்களை நகர்த்துவேன்... உன்னைத் தோற்கடிக்கனும் நான் ஆட ஆரம்பிச்சா உன்னால இவ்வளவு நேரம் ஆடவே முடியாது... ஆரம்பத்திலேயே முடிஞ்சிருக்கும்” என்றான்.

இருவருமே சரிசமமான பலத்தோடு விளையாட ஆனந்தி சக்திசெல்வனிடம்,

“சார்... அக்காவோட பவரே ஹார்ஸ்தான்” என்றாள்.

ஆனந்தி சொன்னதைப் போலச் சிவசக்தியின் குதிரைதான் அதிகமாகக் களத்தில் சுழன்றது.

அவன் சிரித்துவிட்டு,

“அதெல்லாம் சரிதான்... ஆனா உங்க அக்காவோட ராணி வெளிய வரவே மாட்டேங்குதே ஆனந்தி... பயமா இல்ல தயக்கமா ?” என்றான்.

“இரண்டுமே இல்லை... அவசியம் ஏற்படும் போது வெளியே கொண்டு வருவேன்” என்றாள்.

சக்திசெல்வன் சிரித்து விட்டு,

“எவ்வளவு நேரம் காத்திருக்கிறது சக்தி” என்று சொல்ல சிவசக்தி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவர்கள் இருவரின் பார்வையில் அவனின் எதிர்பார்ப்பின் புரிதலும் 'அத்தனை சீக்கிரம் வந்துடுவேனா ?' என அவளின் திமிரும் தெரிந்தது.

விளையாடிக் கொண்டிருக்கும் அவர்களின் ஆட்டம் தடைப்படும் விதமாய்த் தொலைப்பேசி மணி ஒலித்தது. எழுந்திருக்கப் பார்த்த ஆனந்தியை கையமர்த்திவிட்டு சிவசக்தி போஃனை எடுத்து யாரென்று வினவ ஒரு அழுத்தமான குரல், “மீனாக்ஷி வாசுதேவன்” என்றது.

“யார் வேணும் உங்களுக்கு?” என்று அவசரத்தில் கேட்டுவிட்டு மீண்டும் நினைவு வந்தவளாய்

“ஓ சாரி... மேடம்... இருங்க சக்தியை கூப்பிடிறேன்” என்றாள்.

மறுபுறத்தில் மீனாக்ஷி, “ஆர் யூ சிவசக்தி?!” என்று கேள்வி எழுப்பினாள்.

“எஸ்... மேடம்” என்று சிவசக்தி குழப்பத்துடன் பதிலுரைக்க, “நான் உன்கிட்டதான் பேசனும்” என்றது அந்தக் குரல்.

இருவருக்கும் இடையிலான ஆட்டம் இப்போது உண்மையிலேயே தடைப்பட்டது.

You cannot copy content