You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Solladi Sivasakthi - Episode 23

Quote

23

மீண்டும் ஓர் பயணம்

அன்று பள்ளியில் பாராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சிவசக்தியும் ஜெயாவும் நிற்கவும் நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினருக்கான வரவேற்பு உரை, மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் பரிசு தொகை என எண்ணற்ற வேலைகளை இரு தோழிகளும் கவனித்துக் கொண்டனர். பரிசு வழங்க மாவட்டச் செயலாளர் விருந்தினராய் அழைக்கப்பட்டிருந்தார்.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் அவர்களின் எதிர்காலக் கனவையும் புதுக் கல்லூரிப் பயணம் குறித்தும் ஆர்வமாய்த் தங்கள் இருக்கையில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர்.

மாணவர்களின் இரைச்சல் சத்தம் விழா அரங்கைச் சுற்றி ஒலிக்க, விருந்தினர் நுழைந்த மறுகணம் அமைதி ஏற்பட்டு விழா ஆரம்பமானது. எல்லோரின் காத்திருப்பும் கேள்வியும் சக்திசெல்வனைப் பற்றியே இருந்தது. ஜோதி சாரும் கூட ஆவலோடு அவனை மீண்டும் பார்க்க காத்துக் கொண்டிருந்தார்.

ஜெயா தம் ஆவலை சிவசக்தியிடமும் வெளியிட்டாள்.

“என்ன சக்தி... விழா ஆரம்பிச்சிடுச்சு... சக்தி ப்ரோ வரலியே... பசங்க எல்லாம் கூட ரொம்ப எதிர்பார்த்திட்டு இருக்காங்க” என்றாள்.

சிவசக்தி அவளை நோக்கி,

“சக்தி வரமாட்டாரு ஜெயா... தேவையில்லாம எதிர்பார்க்காதே” என்று தீர்க்கமாய் உரைத்தாள்.

“நீதான்டி மெயில் அனுப்பு சொன்னே”

“மெயில்தான் அனுப்பச் சொன்னேன்... சக்தி வருவார்னு சொன்னனேனா ?!” என்றாள் சக்தி.

ஜெயாவுக்குச் சிவசக்தி சொன்னதன் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால் சிவசக்தி அவனைச் சரியாகவே கணித்திருந்தாள். தன்னைத் தவிர்த்து விட்டுச் சென்றவன் இன்று மீண்டும் அவள் முன்னிலையில் வருவானா என்ற அவளின் எண்ணம் சரியாகவே இருந்தது. அவனை எதிர்பார்த்துக் காத்திருந்த எல்லோருக்குமே ஏமாற்றமே மிச்சமாயிருந்தது.

சக்திசெல்வன் முழுமையாய் அவர்களை ஏமாற்றிவிடவில்லை. அவனின் சார்பாக விழா நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நபர் வந்து இறங்கினர். அவர் ஜெயாவை பற்றிக் கேட்க அவளும் யாரென்று புரியாமல்,

“யார் நீங்க... என்ன வேணும் உங்களுக்கு?” என்று வினவினாள்.

அந்த நபர் ஒரு கடிதத்தை நீட்டினார். அதைப் பிரித்தவள் சக்திசெல்வனின் கையெழுத்தைக் கண்டு ஆர்வமாய்ப் படிக்கலானாள்.

“ஜெயா,

நான் பாராட்டு விழாவுக்கு வர முடியல. ஐம் எக்ஸ்ட்டிரீம்லி சாரி. எல்லா ஸ்டூண்டட்ஸுக்கும் கிஃப்ட்ஸ் அனுப்பி இருக்கேன். எல்லார்க்கிட்டையும் என்னோட விஷ்ஷஸை மறக்காம கன்வேபண்ணிடு... ஜோதி சார்கிட்டயும் நான் மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடு” என்று முடிந்திருந்தது.

ஜெயாவிற்கு இது எதிர்பாராத அதிர்ச்சியாய் இருந்தது.

அந்தக் கடிதத்தில் சக்தியை பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடவில்லை என எண்ணும் போது சக்திசெல்வனின் மீது ஜெயாவிற்குக் கோபத்தை உண்டுபண்ணியது.

சக்திசெல்வன் அனுப்பிய நபர் எல்லா மாணவர்களுக்கும் அவன் கையெழுத்துடன் கூடிய பரிசை வழங்கினார். அந்த நபர் ஆனந்தியிடம் தனிப்பட்ட முறையில் சக்திசெல்வன் கொடுத்த பரிசையும் தந்து விட்டு விரைந்தார்.

சக்திசெல்வன் எங்கே இருந்தாலும் எல்லோரையும் ஆச்சரியப்படுத்துவதில் அவனுக்கு நிகர் அவனே. மாணவர்கள் எல்லோருக்கும் தனிப்பட்ட முறையில் அவன் அனுப்பியிருந்த பரிசுகள் அவர்களை வியப்பில் ஆழ்த்தின.

சக்திசெல்வன் வரவில்லை என்றாலும் தான் யாரையும் மறந்துவிடவில்லை என்பதை உணர்த்திவிட்டான். எப்படியோ பாராட்டு விழா திருப்திகரமாகவே முடிவடைந்தது.

சிவசக்தி அவன் வர வாய்ப்பில்லை என்று கணித்தாலே ஒழிய இப்படி அவன் எல்லோருக்கும் பரிசு அனுப்பி வைப்பான் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த யோசனையில் அவள் ஆழ்ந்திருக்க ஜெயா விழா முடிந்துவிட்ட நிம்மதியில் பெருமூச்சு விட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தாள்.

“சக்தி ப்ரோ எல்லோருக்கும் கிஃப்ட்ஸ் அனுப்பினது இல்லாம எல்லாத்திலயும் கையெழுத்தையும் போட்டு கொடுத்திருக்காரு... இவ்வளவும் செய்ய முடிஞ்ச சக்தி ப்ரோ நினைச்சிருந்தா நேர்ல வந்திருக்கலாமே... ஆனா ஏன் வரல... என்ன காரணம்?” என்று ஜெயா எழுப்பிய சந்தேகம்

சிவசக்தியின் மனதிலும் உதித்தது. அதே சமயம் ஆனந்தி சக்திசெல்வன் அனுப்பிய பரிசை சிவசக்தியிடம் காண்பித்தாள்.

அது பாராதியர் கவிதைகள் புத்தகம். அதற்குள் அன்புத் தங்கை ஆனந்திக்கு என்று தன் கையாலேயே எழுதி கையெழுத்தும் போட்டிருந்தான். சக்தியின் முகம் பிரகாசமானது. இதைக் கவனித்த ஜெயா புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டாள்.

சிவசக்தி முகம் மலர,

“சக்தி ஏன் வரல?... எதுக்கு வரலன்னு எனக்குத் தெரியல?... ஆனா இந்தப் பாரதியார் கவிதைகளை சக்தி ஆனந்திக்கு அனுப்பினதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம்... ஆனா எனக்குத் தோன்றது ஒரே காரணம்தான்” என்றாள்.

ஜெயா ஆர்வமாய் “என்னது?” என்று கேட்டாள்.

“எனக்கு எப்பவுமே உன் ஞாபகம் இருக்கு சக்தின்னு எனக்குப் புரிய வைக்க முயற்சி செய்றாருன்னு தோணுது” என்றாள்.

ஜெயாவுக்கு ஏனோ அவள் சொன்ன காரணத்தில் நம்பிக்கை வரவில்லை. அவள் உடனே சக்தியின் இடது கையில் உள்ள கை கடிகாரத்தைக் காண்பித்து,

“இதுக்கென்ன அர்த்தம்?” என்று விளையாட்டுத்தனமாய்க் கேட்க,

“நான் எப்பவுமே உன் கையை விடமாட்டேன் சக்தின்னு இருக்கலாமே” என்றாள் சிவசக்தி புன்னகையோடு!

இதைக் கேட்ட ஜெயா உண்மையிலேயே கவலையுற்றாள். சிவசக்திக்கு காதல் பைத்தியம் முற்றிவிட்டதோ என்று மனதில் எண்ணிக் கொண்டாள்.

சக்திசெல்வன் தன்னவளுக்கு உணர்த்த நினைத்ததை அவள் சரியாகவே புரிந்து கொண்டுவிட்டாள். ஆனால் அது இரு சக்திகள் மட்டுமே உணர முடியும் காதல் மொழி.

சிவசக்திக்கு ஐ. ஏ. எஸிற்கான அடுத்த நிலை தேர்வு நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் தன் முழுக் கவனத்தையும் செலுத்தி படித்துக் கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஜெயா சக்தியை இல்லத்தில் பார்க்க வந்திருந்தாள்.

ஆனால் ஜெயா வந்ததைக் குறித்து ஆர்வம் காட்டாமல் சக்தி தலையை நிமிராமல் படித்துக் கொண்டிருந்தாள்.

“ஏ... சக்தி” என்று ஜெயா அழைத்தபடி அவள் அருகில் உட்கார, “ம்ம்ம்” என்று சிரத்தையின்றித் தலையசைத்தாள்.

“கீதா மேரேஜ் இன்விட்டேஷன் பாத்தியா?” என்று கேட்டாள் ஜெயா.

“ம்... பார்த்தனே” என்று எதையோ எழுதிக் கொண்டே அவள் பதிலுரைக்க,

“நாம போயிட்டு வரலாமா?”

“மேரேஜ் டெல்லியில... நான் வரல... பார்வதிம்மாவுக்கு உடம்பு சரியில்லை... எனக்கு வேற நிறையப் படிக்கனும் ஜெயா... நீ போயிட்டு வா” என்றாள் சிவசக்தி விருப்பமில்லாமல்!

“கண்டிப்பா வரமாட்டியா?” என்று ஜெயா அழுத்தம் கொடுத்த கேட்க,

“நோ ஜெயா... டிஸ்டர்ப் பண்ணாதே... கிளம்பு... எனக்குப் படிக்கனும்” என்று சிவசக்தி விருப்பமில்லாமல் தவிர்த்தாள்.

“ஒகே... நான் கிளம்பிறேன்... லாஸ்ட்டா ஒரு மேட்டர்... அங்கதான் சக்தி ப்ரோ இருக்காராம்... அங்க போனா ராம் நமக்காக அவருக்குத் தெரிஞ்சவர் மூலம் சக்தி ப்ரோ கூட மீட்டிங் அரேஞ்ச் பண்றன்னு சொன்னாரு... இப்போ மேடம் வர்றீங்களா?” என்று ஜெயா கேட்க அத்தனை நேரம் நிமிர்ந்து கூடப் பார்க்காத சிவசக்தி யோசிக்கத் தொடங்கினாள்.

ஜெயாவும் அவள் முகத்தில் உண்டான மாற்றத்தைக் கவனித்தாள்.

“பொய் சொல்லலியே ஜெயா நீ” என்று சந்தேகமாய்க் கேட்க, “ஐம் வெரி ஸீரியஸ்... நீ வர்றியா இல்லயா ?” என்று அழுத்தமாய்க் கேட்டாள் ஜெயா.

“நம்ம இரண்டு பேரும் போயிட்டா அப்பா தனியா வேலையெல்லாம் எப்படிச் சமாளிப்பாரு ?” என்று தயங்கியபடி சக்தி கேட்க,

“அதெல்லாம் அப்பா பாத்துப்பாரு... நீ வர்றேன்னு சொல்லு” என்று ஜெயா சொல்ல சிவசக்தி தன் தலையை அசைத்துச் சம்மதத்தைத் தெரிவித்தாள். ஜெயா இந்தச் செய்தியை சொல்லிவிட்டு அவசரமாய்ப் புறப்பட்டுவிட்டாள்.

ஜெயா இவ்வாறு சொன்ன பிறகு சிவசக்திக்கு அதற்கு மேல் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. சக்தியை பார்க்க கிடைக்கப் போகும் அந்த வாய்ப்பை அவள் தவிர்க்க விரும்பவில்லை. அவன் தன்னைத் தவிர்க்கிறான் என்று தெரிந்த பின்பும் தான் அவனைப் பார்க்க தேடிச் செல்வது சரியா என்ற கேள்வி அவளை அழுத்தியது. இருப்பினும் அவன் மீதான காதல் அவளை யோசிக்கவிடவில்லை.

சிவசக்தி பார்வதியம்மாவை பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பை ஞானசரஸ்வதியிடம் கொடுத்துவிட்டு வந்தாள். ஆனந்தி தன் படிப்பில் கவனம் செலுத்தினாலும் சக்தி புறப்படுவதற்கான ஏற்பாடுகளுக்கும் உதவிப் புரிந்தாள். பள்ளியில் தன்னுடைய வேலைகளையும் சிலரிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வந்தாள்.

ஜோதி சார் சக்திக்கு சுலபமாய் அனுமதிக் கொடுத்துவிட்டார். ஆனால் ஜெயாதான் போராடி அவரிடம் அனுமதிப் பெற வேண்டியதாயிற்று.

மீண்டும் சிவசக்தியோடு நாம் இரயிலில் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். ஆனால் இம்முறை அது டெல்லிவரை தொடர இருக்கிறது. இதுவும் ஒருவிதத்தில் அவனைத் தேடிய ஒரு பயணம்.

டெல்லியில் நிகழ்ந்த முதல் சந்திப்பில் சிவசக்தி சக்திசெல்வனைத் தவிர்த்து ஓட நினைத்தாள். இம்முறை அது தலைகீழாக நடக்கக் கூடும்.

சிவசக்தி இரயிலில் ஏறுவதற்கு முன்பு பெயர் பட்டியலை இரு முறை சரிபார்த்தாள். எதில் பார்த்தாலும் அவனின் ஞாபகம் அவளைத் துரத்திக் கொண்டே இருந்தது.

மூவரும் தங்கள் இருக்கையைத் தேடி அமர்ந்தனர். மூவரில் ஒருவர் நம் தோழி ஜெயாவின் வருங்காலக் கணவன் ராம். ஜெயாவிற்கு இது கொஞ்சம் புதுமையான அனுபவம்.

ஆனால் இந்தப் பயணம் சிவசக்திக்குக் கொஞ்சம் சோகம் கலந்த சுகமான நினைவுகளை எழுப்பிக் கொண்டிருந்தது.

சிவசக்தி ஜெயாவிடம், “நீ ராம் கூட வர்றதை பத்தி அப்பாகிட்ட சொன்னியா?” என்று கேட்டாள்.

“ஜோதிக்கு தெரிஞ்சா என்னைக் கொன்னுடுவாரு... நீ சொன்ன நான் உன்னைக் கொன்னுடுவேன்” என்றாள்.

“எனக்கெதுக்கு வம்பு ?” என்று சொல்லியபடி ராமை பார்த்து, “நீங்க உங்க வேலை எல்லாம் விட்டுவிட்டு எங்களுக்காக வந்திருக்கீங்க... ரொம்பப் பெரிய விஷயம்” என்றாள்.

ராம் சிரித்தபடி, “நானா எங்க வந்தேன் சக்தி... உங்க சக்திசெல்வனைப் பத்தி சொல்லி... லவ்ன்னா அவரை மாதிரி இருக்கனும்னு ஒரே அட்வைஸ்... போதாக் குறைக்கு அவ்வளவு பிஸி மேன் காதலுக்காகத் தான் வேலை எல்லாம் விட்டுவிட்டு வரும் போது உங்களுக்கு என்னன்னு மேடம் கேட்டாங்க... நியாயமான கேள்வி... ஸோ ஆனது ஆகட்டும்னு கிளம்பி வந்துட்டேன்” என்று ராம் உண்மையைப் போட்டு உடைக்க,

ஜெயா எதிரில் அமர்ந்து சொல்ல வேண்டாம் எனச் சைகைச் செய்ததை அவன் பொருட்படுத்தவில்லை. சக்தி ஜெயாவின் பின்மண்டையிலேயே அடித்து,

“இதெல்லாம் ஒரு பொழப்பு” என்றாள்.

“பொய்” என்று ஜெயா உரைக்க,

“உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்டி” என்றாள் சக்தி.

மூவருமே அந்தப் பயணத்தை முடிந்த வரை கலகலப்பாகவே அனுபவித்தனர். சக்தி சிலமணி நேரம் அவர்கள் இருவரையும் தனியே விடுத்து இங்கிதமாய் ஒதுங்கியபடி அமர்ந்து கொண்டாள்.

இந்த டெல்லிப் பயணம் சக்திசெல்வனைச் சந்திக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கி இருந்தாலும் அவனைப் பார்ப்போம் என்ற நம்பிக்கை அவளுக்குக் குறைவாகவே இருந்தது.

அந்த இரயில் இருளுக்குள் ஊஞ்சலாட்டத்தோடு செல்ல சிவசக்தி சக்திசெல்வனை எண்ணியபடி,

“சக்தி... நீங்க உண்மையிலேயே ரியல் ஹீரோதான்... நான் சொன்னதெல்லாம் பெரிய தப்பு... உங்களைப் பார்த்து என் மனசில இருக்கிற காதலை சொல்லனும்... வேர் ஆர் யூ... ப்ளீஸ் என் கண் முன்னாடி வாங்க”என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

இன்று உருகி உருகி தன் காதலை சொல்லிக் கொண்டிருக்கும் சிவசக்திக்கு அவனைப் பார்க்கும் தருணம் கிட்டும் போது அந்தக் காதல் கோபமாய் மாறிப் போகும் என்று சொன்னால் நம்புவீர்களா!

சக்திசெல்வனைச் சிவசக்தி சந்திப்பாலோ என்பது இப்போதைக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் சக்திசெல்வனை மீண்டும் காண இருக்கிறோம்.

You cannot copy content