You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Solladi Sivasakthi - Episode 28

Quote

28

ஒளிந்து கிடக்கும் காதல்

சிவசக்தி தன் இல்லத்தை வந்தடைந்த பின் எல்லாமே இயல்பாக மாறிவிட்டதாகத் தன்னைத் தானே நம்ப வைத்துக் கொண்டாள். சக்திசெல்வன் நினைவுகளை இரண்டாம் பட்சமாக ஒதுக்கி வைத்துவிட்டுப் படிப்பதில் மும்முரமாக இறங்கினாள். ஆம் இரண்டாம் பட்சமாகத்தான். முழுமையாய் அவளால் மறக்க இயலாது.

அவனின் நினைப்பால் சிதறியிருந்த கவனம் இப்போது தெளிவுப்பெற்றது. எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு முழு முனைப்போடு முயற்சி செய்து தேர்வினை எதிர்கொண்டாள். அவளின் இலட்சியத்தை நோக்கிய பயணம் சீராகவே இருந்தது.

சிவசக்தி தேர்வில் இருந்த ஆர்வத்தில் பார்வதியின் சிகிச்சைக்கான பணத்தை ஏற்பாடு செய்வதை மறந்து போனாள். உடல் நிலை மோசமாக மருத்துவமனையில் பார்வதி அனுமதிக்கப்பட்டாள்.

ஜெயா உதவி செய்ய எண்ணினாலும் இப்போது அவர்கள் நிலைமையும் நெருக்கடியில் இருந்தது. யாரிடம் கடன் பெறுவது எப்படி என்று புரியாமல் அவள் குழம்பிய போது மருத்துவமனையில் சிகிச்சைக்கான பணம் செலுத்தப்பட்டதாக உரைத்தனர்.

உடனடியாக அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் துரிதமாக்கப்பட்டன. யாராக இருக்கக் கூடும் என்ற கேள்விக்கு நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சக்திசெல்வன்தான். சிவசக்தியும் அவனாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகம் கொண்டாள். ஆனால் சக்திசெல்வன் நம் நாட்டிலேயே இல்லை.

அவன் முடிந்த வரை தொழிலில் முனைப்பாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். இருந்தும் சிவசக்தியின் காதல் வார்த்தைகளும் அவனை உதாசினப்படுத்திய பேச்சுக்களும் மாறி மாறி நினைவுக்கு வந்து பாடாய் படுத்திக் கொண்டிருந்தது.

துஷ்யந்த மன்னனைப் போலக் காதலியையும் காதலையும் மறந்திட முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அத்தகைய வரம் அவனுக்குக் கிடைக்கப்பெறவில்லை. மாறாய் துஷ்யந்தனை போலக் காதலை மறந்து கிடப்பது அவனின் காதலிதான்…

இந்த நிலைமையில் பார்வதி அம்மாளின் உடல் நிலை குறித்த செய்தி சக்திசெல்வனைச் சென்றடையவில்லை. அவனும் உதவவில்லை எனில் பின் யார்?

விஜய் சென்னையில் தன் அப்பாவின் தயவால் ஒரு புதுக் கம்பெனியை தொடங்கி நிர்வகிக்கிறான். சிவசக்தியை பார்க்க எண்ணி வந்தபோது விஷயம் தெரிந்து அவளுக்காக அத்தகைய உதவியைப் புரிந்தான்.

சக்தியின் முன்னே விஜய் வந்து நிற்க அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை.

அவள் புரியாத தயக்கத்தோடு, “தேங்க்ஸ் பட் இந்தப் பணத்தைச் சீக்கிரம் கொடுத்திடிறேன்” என்றாள்.

“நட்புக்குள்ள தேங்க்ஸ் எதுக்கு?” என்றான்.

“கரெக்ட் நட்புன்னு வந்துட்டா தேங்க்ஸ் இருக்கக் கூடாது... அதே போலக் கடனும் இருக்கக் கூடாது... அதுதான் எனக்கு ரொம்பச் சங்கடமா இருக்கு” என்றாள்.

“உனக்குச் சொந்தமே இல்லாத ஒருத்தவங்களுக்காக நீ இவ்வளவு துடிக்கிற... நீ செய்ற விஷயங்களுக்கு முன்னாடி எல்லாம் என் உதவி ஒண்ணுமே இல்லை... உன்னோட லைஃ பத்தி தெரிஞ்சிக்கிட்ட பிறகு எனக்கு ரொம்பப் பிரமிப்பா இருக்கு... யூ ஆர் ரியலி கிரேட் சக்தி” என்றான்.

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல விஜய்... இரத்தத்தினால் மட்டுமே பந்தமும் உறவும் ஏற்படிறதில்ல... இட்ஸ் பியான்ட் தட்... அன்போட நேசிச்சா எல்லோருமே உறவுதான்... எனக்கு அம்மா இல்லாத குறையைப் பார்வதிம்மா சரி செய்றாங்க... இப்போ அவங்களுக்கு ஏதாச்சும் ஆகியிருந்தா...” என்று சிவசக்தி கண்கலங்கச் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவளின் மீது அவனுக்கு மதிப்பை ஏற்படுத்தியது.

அவனுக்குள் இருந்த கோபத்தினால் சிவசக்தியை அவமானப்படுத்த தான் செய்ய நினைத்ததை எண்ணிக் குற்றவுணர்வு கொண்டான்.

சிவசக்தி அவனிடம் இறுதியாய், “கூடிய சீக்கிரம் நான் இந்தப் பணத்தைத் திருப்பித் தந்திடுறேன்” என்றாள்.

“நோ நீட் சக்தி” என்றான்.

சக்தி லேசாக நகைத்துவிட்டு, “ஏற்கனவே என் தலையில் இருக்கிற நன்றி கடன் என் கழுத்தை இருக்கிட்டிருக்கு... இது வேறயா” என்று அவள் சொல்லிய பின் அவனால் பதிலேதும் பேச முடியவில்லை.

அவள் நன்றிக்கடனென்று வேதனையோடு வெறுப்படைவது சக்திசெல்வனைக் குறித்து என்பதை விஜய் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பார்விதிக்கான அறுவை சிகிச்சை நடந்துமுடிய வெகு நேரம் பிடித்தது. சக்தியும் மரியாவும் உடனிருந்து பார்த்துக் கொண்டனர். விஜயும் அன்று அவளுடன் இருந்து உதவிப் புரிந்து கொண்டிருந்தான்.

நாட்கள் கடந்து செல்லப் பார்வதி ஓரளவுக்கு உடல் நலம் தேறினாள். அந்தச் சூழ்நிலையில் விஜய் தானே முன் வந்து உதவிப் புரிந்து சிவசக்தியுடனான நட்பை பலப்படுத்திக் கொண்டான்.

ஆண்களிடம் அதிகம் நட்புப் பாராட்டாத சிவசக்திக்கு விஜய் மீது நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அவன் அவளுடன் பழகிய பின்னர் அவன் தெரிந்து கொண்ட அவள் வாழ்க்கையும் அவள் குணமும் நட்பைத் தாண்டி காதலாய்த் துளிர்விட்டிருந்தது. அதை இப்போதைக்குச் சிவசக்தி அறிந்திருக்கவில்லை.

இதெல்லாம் ஒரு புறமிருக்க ஜெயாவின் திருமணம் ஏற்பாடுகள் நெருங்கிய நிலையில் சக்தியும் ஜெயாவும் ஒன்றாய் சேர்ந்து எல்லா நண்பர்களையும் தேடி அழைப்பிதழ்கள் வைத்துக் கொண்டிருந்தனர்.

ஜெயா கடைசியாய் சக்திசெல்வனுக்கு அழைப்பிதழ் வைத்தே தீர வேண்டுமெனப் பிடிவாதம் பிடித்தாள். சிவசக்திக்கு இதில் உடன்பாடில்லை. அவள் ஜெயாவிடம்,

“நீ மிஸ்டர். எஸ்எஸ்ஸை அவ்வளவு ஈஸியா பார்க்க முடியுமா?... பேசாம மெயில் பண்ணி விடு... ஏதாச்சும் கிஃப்ட் அனுப்புவாரு” என்று அவள் அந்தச் சந்திப்பை தவிர்க்க முயிற்சி செய்து கொண்டிருந்தாள்.

“சக்தி ப்ரோ கிட்ட நான் பேசிட்டேன்... அவர் இப்போ இங்க இருக்கிற அவங்க பிரேஞ்ச் ஆபிஸ்லதான் இருக்காராம்... அப்பா... சக்தியை நேர்ல போய் இன்வையிட் பண்ண சொல்லி கண்டிப்பா சொல்லிட்டாரு... போலாம் வா” என்றாள்.

“எல்லாம் தெளிவா பிளான் பண்ணித்தான் பண்ணி இருக்க இல்லை... நோ ஜெயா திரும்பவும் சக்தியை மீட் பண்ற ஐடியா எனக்குச் சுத்தமா இல்ல...” என்றாள்.

“சரி ஒகே ஆபிஸ் வரைக்கும் வா... நீ வெளிய வெயிட் பண்ணு நான் போய் இன்விட்டேஷன் கொடுத்துட்டு வந்திடிறேன்” என்று ஜெயா சொல்ல,

“இந்த டீல் ஒகே... ஆனா சீக்கிரம் வந்திடனும்” என்றாள்.

இருவருமே அந்தப் பிரமாண்டமான அலுவலகத்திற்குள் நுழைய சக்தி எதிர்பார்க்காத வேறொரு சந்திப்பு அங்கே நிகழ்ந்தது.

ஜெயா உள்ளே நுழைந்து சக்தியை பார்க்க அறிவுறுத்தியதும் உள்ளே அழைக்கப்பட்டாள். சிவசக்திஅவள் சொன்னபடிக்கு வெளியே காத்திருந்தாள். இருந்தும் ஜெயா என்ன உளறுகிறாளோ?!

அவனைச் சந்திக்க வேண்டி நேரிடுமோ என்ற கலக்கத்தோடு அமர்ந்திருக்க அலுவலகத்தில் இருந்த ஒருவன் சிவசக்தியை நெருங்கி வந்து,

“எம். டி உங்களை மீட் பண்ணனுமா?” என்றான்.

“நான் உங்க எம். டியை பார்க்க இங்க வரல” என்று தவிர்த்தாள்.

அவன் அந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை.

அவன் மீண்டும் சக்தியிடம், “உங்க பேர் சிவசக்திதானே?” என்றான்.

சக்தி சலித்துக் கொண்டு, “மிஸ்டர். எஸ்எஸ்கிட்ட நான் அவரை மீட் பண்ண விருப்பமில்லைனு சொல்லுங்க” என்றாள்.

“எங்க எம். டி. மோகன் ராம் ஸார்தான் உங்களைப் பார்க்கனும்னு சொன்னாரு” என்றான்.

இப்போது கொஞ்சம் நேரம் சக்தி யோசித்தபடி நின்றாள். மோகன் ராம் சக்தியின் அப்பா. மீனாக்ஷியை போல இவரும் மிரட்டவோ திட்டவோ அழைக்கிறாரோ என்று யோசித்தவள் பிறகு தான் எதற்காகப் பயப்பட வேண்டும் என்று எண்ணியபடி பார்க்க முடிவெடுத்து மோகன் ராமின் அறைக்குச் சென்றாள்.

அந்த அறைக்குள் சிவசக்தி அடியெடுத்து வைக்கும் போதே கம்பீரமான குரல், “கம்மின் சிவசக்தி” என்றழைத்தது. அவரைப் பார்த்ததாக இதுவரை சிவசக்திக்கு நினைவில் இல்லை.

சக்திசெல்வனின் தோற்றத்தின் சாயல் தோன்ற அவர்தான் மோகன் ராமாக இருக்கக் கூடும் என எண்ணினாள். ஆனால் மோகன் ராம் ஏர்போர்ட்டில் அவளை நேரில் ஒருமுறை சந்தித்திருக்கிறார்.

பின்னர் மகனின் அபிமானக் காதலியை தெரிந்து கொள்ளும் நோக்கமாய் அவளைப் பற்றிய விவரத்தைத் தனியே விசாரித்தும் கேட்டறிந்திருக்கிறார்.

அவர் அலுவலகத்திற்குள் நுழையும் சமயத்தில் சிவசக்தியை அடையாளம் கண்டுவிட்டு பார்த்துப் பேச அழைத்திருக்கிறார். ஆனால் அவரை அவள் கவனிக்கவில்லை.

சிவசக்தி இயல்பாக இல்லாமல் கொஞ்சம் இறுக்கத்தோடு, “நீங்க ஏன் என்னை மீட் பண்ணனும்?” என்றாள்.

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்... உட்காரும்மா” என்றார்.

“பேசலாம்... ஆனா என்ன விஷயத்தைப் பத்தி நீங்க என்கிட்ட பேசனும்?” என்று கேள்வி குறியாய் பார்த்தபடி நின்றாள்.

“என் சன் சக்தியை பத்திதான்” என்றார்.

“சாரி... சக்தியை பத்தி என்கிட்ட நீங்க பேச எதுவுமில்லை...” என்றாள்.

அவளைக் குழப்பமாய்ப் பார்த்த மோகன், ”நீ இங்க சக்தியை பார்க்க வரலியா?” என்றார்.

“நான் என் ப்ஃரண்ட் ஜெயாவுக்காக இங்கே வந்தேன்” என்றாள்.

“சக்தி மேல உனக்கு ஏதோ தப்பான அபிப்பிராயம் இருக்கு... அதான் நீ இப்படி அவாயிட் பன்ற மாதிரி பேசிற” என்று அவள் பேச்சை வைத்து எண்ணத்தைப் புரிந்து கொண்டார்.

சக்திசெல்வனுக்குத் தன் அம்மாவிடம் இருக்கும் நெருக்கம் தந்தையிடம் இல்லை. இப்போது அம்மாவிடமும் மோதல் என்பது வேறு விஷயம். ஆதலால் மோகன் ராம் அவர்களின் உறவு பற்றி அறிந்திருக்கவில்லை.

“மிஸ்டர். சக்தி மேல எனக்கு எந்த அபிப்பிராயமும் இல்ல... எங்களுக்குள்ள எந்த ரிலேஷன்ஷிப்பும் இல்ல” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே கதவை தட்டி “டேட்” என்ற அழைப்போடு சக்திசெல்வன் உள்ளே நுழைந்தான்.

வெகு நாட்களுக்குப் பிறகு சிவசக்தி அவனை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அவனின் பார்வையும் அவள் மீது பதிந்தது. பிரிந்த காதலர்கள் பார்த்துக் கொள்வது போல் அவர்கள் பார்த்து கொள்ளவில்லை.

அந்தத் தருணத்தில் சக்திசெல்வனின் கோபம் நிறைந்த பார்வையும் சிவசக்தியின் அலட்சியமான பார்வையும் ஒரு சேர சந்தித்துக் கொண்டன. இதற்கிடையில் காதல் என்ற உணர்வு எங்கேயோ ஒளிந்து கிடந்தது.

இதுவரை நிகழ்ந்த சந்திப்பெல்லாம் இருவரில் ஒருவர் விருப்பம் இருந்ததினால் உண்டானது. ஆனால் இந்தமுறை இருவருமே ஒருவரை ஒருவர் பார்க்க விருப்பப்படவில்லை.

Quote

Super ma 

You cannot copy content