You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Solladi Sivasakthi - Final Episode

Quote

35

திருமணப் பந்தம்

அன்று இரவு சிவசக்திக்கும் சக்தி செல்வனுக்கும் ஆடம்பரமான திருமண மஹாலில் பார்ப்பவர் பிரமிக்கும் வண்ணம் வரவேற்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஒருவருக்கு ஒருவர் எனப் படைக்கப்பட்டதாய் எல்லோரும் வியந்து பாராட்டிக் கொண்டிருந்தனர்.

அவர்களின் பொருத்தம் அந்தளவுக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. மீனாக்ஷி எந்தப் பெண் தன் மகனைத் திருமணம் செய்யத் தகுதியற்றவள் என்று உரைத்தாளோ இப்போது எல்லா விருந்தாளிகளிடமும் சிவசக்தியை குறித்து ஓயாமல் புகழுரையைப் பாடியபடி இருந்தாள்.

சிவசக்தி ஆடம்பரமான திருமணத்திற்கு மறுத்த போதும் மீனாக்ஷியால் அந்த ஆடம்பரங்களைத் தவிர்க்க முடியவில்லை. பெரிய பெரிய அரசியல் பிரமுகர்கள் அதிகாரிகள் என அரங்கம் நிறைந்திருந்தது.

அதே நேரத்தில் சிவசக்தி தன் உறவினர்கள் எனக் கருதும் சிவசக்தி இல்லத்தில் உள்ளவர்களும் அங்கே பெண்வீட்டார் சார்பில் அவளுடன் நின்றனர்.

பார்வதிம்மா, கமலா, மரியாவும் இருந்தனர். அதிலும் ஆனந்தியோ பார்க்க அவளின் வெகுளித்தனம் குறைந்து இளமையோடும் அழகோடும் காட்சியளித்தாள். திவ்யா சிவசக்தி அருகிலேயே மணமேடையில் துணையாய் நின்றிருந்தாள்.

வனிதாவும் தன் கணவனோடு வந்திருந்தாள். அவள் மகன் கண்ணன் முன்னை விடக் கொஞ்சம் உயரமாய் வளர்ந்திருந்தான். ஜெயா ராமோடு வந்திருந்தாள். என்ன, இம்முறை அவளின் மகன் அஜயுடன் வந்திருந்தாள். ராம் பெண் பார்க்கும் போது சொன்னது போலவே மகனுக்குப் பெயர் வைக்கும் சுதந்திரத்தை ஜெயாவிடமே விட்டிருந்தான்.

கீதாவை சக்தி விடாமல் டிக்கெட்டை எடுத்துக் கொடுத்ததிற்காகத் தன் கோபத்தைச் சண்டையிட்டு தீர்த்த பின்னே அவளிடம் சமாதானமாகினாள். கீதாவும் தன் கணவனோடும் அவளின் வடநாட்டுச் சாயலில் உள்ள மகளுடன் வந்திருந்தாள். இவர்களோடு ஜோதி சாரும் அவருடன் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் வந்திருந்தனர்.

மீனாக்ஷியும் மோகனும் விருந்தினர்களை ரொம்பவும் மரியாதையோடு வரவேற்றனர். எல்லாம் ரொம்பவும் சரியான திட்டமிடலோடு அழகாகவும் நேர்த்தியாகவும் நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்வு முடிந்து அந்த ரம்மியமான காலைப் பொழுதில் திருமணச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்க சக்திசெல்வன் சிவசக்தியின் கழுத்தில் மாங்கல்யத்தைக் கட்டும் போது இருவரும் அவர்களுக்குள் ஏற்கனவே நடைபெற்றுவிட்ட கந்தர்வ திருமணத்தை எண்ணிப் புன்னகைப் புரிந்து கொண்டனர்.

அந்த நிகழ்வு அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த ரகசியம். அவர்களைப் பொறுத்த வரையில் இரண்டு வருடம் முன்பே அவர்களுக்குத் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் இது வெறும் ஊருக்கு அவர்கள் உறவை அறிவுறுத்தும் சடங்கு மட்டும்தான். அந்தச் சடங்கு இனிதே முடிவடைந்தது.

சக்தியும் சிவசக்தியும் பேசுவதற்குக் கூட நேரம் கிட்டாத அளவுக்கு உறவினர்களும் விருந்தினர்களும் அவர்களைச் சூழ்ந்தபடியே இருந்தனர்.

இறுதியாய் அவர்கள் உறவோடு இணைந்திடப் போகும் அந்த இரவு நட்சத்திரப் பட்டாளங்களை அழைத்தபடி வந்து சேர்ந்துவிட்டன.

அன்று இரவு சக்திசெல்வன் அந்தப் பிரமாண்டமான வீட்டில் அவன் படுக்கை அறைக்குள் சிவசக்தியை எதிர்பார்த்துக் காதல் நிரம்பிய ஆசையோடு நுழைய அவனுக்கு ஏமாற்றம் காத்திருந்தது.

பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மெத்தையில் அழகிய ரோஜாப் பூங்கொத்து வைக்கப்பட்டிருக்க அதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அந்தப் பூங்கொத்தை கையில் எடுத்துப் பார்த்த போது அதில் இருந்த அட்டையில், “சவால் நினைவிருக்கிறதா?” என்று எழுதியிருந்தது.

கோவிலில் அன்று அவள் விடுத்த சவாலை தான் மறந்து போய்விட்டோம். ஆனால் அவள் அதை மறக்காமல் அதற்கான சந்தர்ப்பத்தைச் சரியாகவே பயன்படுத்திக் கொண்டாள் என்பதை உணர்ந்து கொண்டான்.

என்ன எண்ணம் கொண்டு இவ்வாறு செய்கிறாள் எனச் சிந்தனை எழ அவன் உண்மையிலேயே ரொம்பவும் கோபமடைந்திருந்தான். அவளை எங்கே என்று தேடுவது.

இந்தப் பிரமாண்டமான வீட்டில் அவர்களுக்கு மட்டும் தனியாக முதலிரவுக்குத் திட்டம் போட்டது அவன். ஆனால் அந்தச் சூழ்நிலையை அவள் பயன்படுத்திக் கொண்டுவிட்டாள். இந்த வீட்டைச் சுற்றி எல்லா அறையிலும் தேடுவதற்கான பொறுமை அப்போது அவனிடம் இல்லை.

இறுதியில் சக்திசெல்வன் தன் கைப்பேசியை எடுத்து சிவசக்தியை அழைத்தான். ரொம்ப நேரம் அடித்துக் கொண்டிருந்த அழைப்பு மணிச் சத்தம் தடைப்பட்டுச் சிவசக்தியின் குரல் ஒலித்தது.

“என்ன மிஸ்டர். எஸ். எஸ்... டென்ஷனா இருக்கீங்களா?” என்று குறும்புத்தனமாய் அவள் குரல் ஒலிக்க,

“எங்கடி இருக்க?... இதான் உனக்கு விளையாடற நேரமா?” என்று சக்திசெல்வன் அந்த எதிர்பாராத ஏமாற்றத்தால் கோபமாய் வினவினான்.

ஆனால் அவள் சிறிதும் அவன் கோபத்தைப் பொருட்படுத்தாமல் பொறுமையாக,

 “எஸ் மிஸ்டர். எஸ். எஸ்... இது நான் உங்களுக்கு விளையாட்டு காட்டிற நேரம்...” என்றாள்.

அவள் அவ்விதம் உரைக்க அவனுக்குக் கோபம் தலைக்கேறியது.

“திஸ் இஸ் யுவர் லிமிட் சக்தி... ஒழுங்கா வந்திடு” என்றான்.

“இது சக்திசெல்வனோட ஆட்டிடியுட் இல்ல... சவாலான விஷயம்னா உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்தானே... கம்மான் சக்தி என்னைக் கண்டுபிடிங்க” என்றாள்.

அவளின் குரலில் தெரிந்த விளையாட்டுத்தனம் சக்திசெல்வனுக்கு மேலும் எரிச்சல் மூட்டும் விதமாய் இருக்க,

“இப்படி எல்லாம் பண்றதுக்கு நீ ரொம்ப அனுபவிப்ப... வேண்டாம்” என்று அழுத்தமாய் எச்சரித்தான்.

அவள் சிறிதும் அச்சம் கொள்ளாமல், ”என்ன பயமுறுத்திறீங்களா... நான் இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படமாட்டேன்... யூ நோ மீ வெரி வெல்... ரைட்” என்று கேட்டாள்.

இப்போது அவன் தன் அறையை விட்டு வெளியே வந்து,

“பைஃவ் மினிட்ஸ்ல நீயா இப்போ என் முன்னாடி வர” என்று அதிகாரமாய் உரைத்தான்.

சிவசக்தி கொஞ்சம் கூட அவன் அதிகாரத்திற்கு அசைந்து கொடுக்காமல், “முடியாது... என்ன பண்ணுவீங்க சக்தி” என்றாள்.

அவளிடமிருந்த பிடிவாதம் கொஞ்சங் கூட மாறவே இல்லை என்று சக்திசெல்வன் எண்ணிக் கொண்டபடி வேறு வழியின்றித் தானே இறங்கி வந்தான்.

“சரிடி... எங்க இருக்க... க்ளுவாச்சும் கொடுத்துத் தொலை” என்றான் வெறுப்பாக.

“நீ பார்க்கும் இடமெல்லாம் நான் இருப்பதாய் தோன்றலாம்... அது என் பிம்பம் மட்டுமே” என்று தூய தமிழில் உரைக்க அவனுக்குள் மேலும் கோபம் வளர்ந்தது.

“நான் ஸீரியஸா கேட்டிட்டு இருக்கேன்... நீ இலக்கியமா பேசிட்டிருக்கியா... என் கையில சிக்கின...”

“காணும் இடமெல்லாம் நான் இருப்பேன். ஆனால் கைகளில் மட்டும் சிக்கிக் கொள்ள மாட்டேன்” என்றாள் மீண்டும் அதே இலக்கியத் தொனியில் பேசினாள்.

“சக்தி உன் கூட எனக்கு முடியல... படுத்தறடி”

சிவசக்தி மீண்டும், ”முடிவில்லாத என்னை நீ முடிவில்லாமல் தேடிக் கொண்டே இரு” என்றாள்.

இப்போது எதிர்புறத்தில் சக்திசெல்வன் அழைப்பைத் துண்டிக்கச் சிவசக்தி குழப்பமடைந்து, “கண்டுபிடிச்சிட்டாரா?” என்று யோசனையில் ஆழ்ந்தாள்.

இப்போது சக்தி செல்வனின் குரல் நேரடியாய் அவள் அருகிலேயே ஒலித்தது.

“சொல்லடி சிவசக்தி… என்னைச் சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்” என்று மேல் மாடியில் நட்சத்திர கூட்டங்களுக்கு இடையில் அழகாய் தேவதை என நின்றிருந்தவளை பார்த்துப் பாடினான்.

அவனைப் பார்த்து அவள் திகைப்புறவில்லை. மாறாய் புன்னகையோடு நின்றிருந்தாள்.

அவன் கண்டுபிடித்து விடுவான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் அவனை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஒருவாறு ஈடேறிவிட்ட பெருமிதம் அவள் முகத்தில் தென்பட்டது.

“உனக்கு இவ்வளவு திமிரு ஆகாதுடி... சவாலை மனசில வைச்சிட்டுக் கரெக்டான சமயம் பார்த்து ஏமாத்திட்ட இல்ல” என்றான்.

“அதுதான் சிவசக்தி” என்று கர்வமாய் உரைத்தாள்.

“நீ கொடுத்த க்ளூவை வைச்சு நான் கரெக்டா கெஸ் பண்ணிட்டேன்... பார்த்தியா?” என்று சக்திசெல்வன் சட்டைக் காலரைத் தூக்கி தன்னைத் தானே மெச்சி கொண்டான்.

“அப்போ நான் கொடுத்த க்ளூவை புரிஞ்சிக்கிட்டீங்களா?” என்று ஆர்வமாய்க் கேட்டாள்.

“ம்ம்ம்... நீ கொடுத்த மூணு க்ளூவுக்கும் அன்ஸர் வானம்... அப்போ மாடி இல்லன்னா கார்டன்ல இருக்கனும்... நம்ம நிறைய உங்க வீட்டு மாடிலதானே மீட் பண்ணி இருக்கோம்... பேசி இருக்கோம்... சண்டை போட்டிருக்கோம்... காதலிச்சிருக்கோம்... ஸோ நீ மாடிலதான் இருப்பன்னு கெஸ் பண்ணேன்... எப்படி?”

“குட் கெஸ்... பட் சவாலில் தோத்திட்டீங்களே சக்தி” என்று பாவமாய் முகத்தை வைத்துப் பரிகசித்தாள்.

“என்னை ஏமாத்திட்டன்னு ரொம்பச் சந்தோஷ பட்டுக்காதே... திஸ் டைம் லக்கிலி யூ வொன்... நாட் ஆல்வேஸ்” என்றான் ஆணவமான பார்வையோடு,

“ஹெலோ மிஸ்டர். சக்தி நான் உங்களை ஏமாத்திறது இது ஒண்ணும் முதல் தடவை இல்ல” என்று அவள் சொல்ல,

அவன் அவள் கரத்தை பற்றித் தன்னருகில் இழுத்தவன் “அப்படின்னா?” என்று புரியாமல் கேட்டான்.

அவள் புன்னகையோடு, “நம்மோட முதல் சந்திப்பில” என்றாள்.

அவன் இயல்பாகச் சிரித்தபடி, “அது பொயின்னு... எனக்கு அப்பவே தெரியும்... என்னை ஏமாத்திறதா நினைச்சிட்டு உன்னை நீயே ஏமாத்திக்கிட்ட” என்றான்.

“ஓ... எல்லாம் தெரிஞ்ச நீங்க எதுக்குச் சார்... டிக்ட்டை எடுத்து கொடுத்தீங்க?” என்றாள்.

“பிகாஸ் நீ என் மேல வைச்சிருந்த காதலை விட உன் பிடிவாதமும் ஈகோவும்தான் அதிகாம இருந்துச்சு... ஸோ கொஞ்சம் விட்டு பிடிக்கலாம்னுதான்... அப்போதைக்கு உன்னைப் பறக்க விட்டேன்... இப்போ நீயா வந்து என் கையில சிக்கிட்ட இல்ல... நவ் இட்ஸ் மை டர்ன் பேபி... லெட் மீ பிளே” என்று சொல்லி அவளைத் தன் இரு கரங்களால் தூக்கிக் கொள்ள சிவசக்தி அதிர்ந்தபடி,

 “சக்தி விடுங்க... பயமா இருக்கு” என்றாள்.

“அன்னைக்குப் போதையில தூக்கிட்டு போகும் போது பயமா இல்லயா?”

“இப்ப அது ரொம்ப முக்கியம்... கீழே போட்டுட போறீங்க”

“என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல... வாயை மூடிட்டு வா” என்று அவன் சொல்ல,

சிவசக்தி அப்போது அவன் கழுத்தை கோர்த்தபடி, “ஹீரோ சார் மேல நம்பிக்கை இல்லாமலா?” என்றாள்.

“என்ன... என்னன்னு கூப்பிட்ட... கம் அகையின்” என்று ஆச்சர்யமாக வினவினான்.

அவளும் புன்னகையோடு, “ஹீரோ சார்ன்னு கூப்பிட்டேன்” என்றாள்.

“என்னை ஜீரோன்னு சொன்ன இதே உதடு இப்போ என்னை ஹீரோன்னு சொல்லுது... நான் அந்த லிப்ஸுக்கு ஏதாச்சும் கொடுக்கனுமே” என்று சொல்லியபடி அவன் அவளைத் தன் அறையின் பூக்கள் தூவியிருந்த மெத்தையில் படுக்க வைத்தான்.

சக்திசெல்வன் அவளின் ரம்மியமான அழகில் மெய்மறந்தபடி சிவசக்தியின் இதழ்களைத் தன் இதழ்களால் மூட வர அவள் தன் கரத்தால் அவன் உதடுகளை மூடி அவனின் விருப்பத்திற்குத் தடைப் போட்டாள்.

அவன் அவளின் செயலை எதிர்பாராமல் ஏமாற்றத்தோடு, “வாட் சக்தி?” என்று அவன் கேட்க,

“என்ன அவசரம்... கொஞ்ச நேரம் பேசிட்டிருக்கலாமே?” என்றவளை பார்த்து முறைத்தபடி,

“ரெண்டு வருஷமா கிட்டதட்ட பேசிட்டுதானேடி இருந்தோம்” என்றான்.

“அப்போ சூழ்நிலை வேற... இப்போ இது வேற இல்லயா... நம்ம எதிர்காலத்தைப் பத்தி பேச வேண்டாமா...” என்று சொல்லி அவன் விருப்பம் புரிந்தும் அவனை வெறுப்பாக்கிப் பார்த்தவளை,

அவன் புன்னகையோடு, “கரெக்ட் சக்தி... நிறையப் பேசுவோம்... ஆனா வார்த்தைகளால இல்ல... கொஞ்சம் உணர்வுபூர்வமா” என்றான்.

சிவசக்தி அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட அதே நேரத்தில் சக்திசெல்வன் அவள் கரத்தை தன் கரத்தோடு கோர்த்தபடி, “இப்போ எப்படித் தடுக்கறன்னு பார்க்கிறேன்” என்று சொல்ல

அவள் தன் கரங்களை விடுவிக்க முடியாமல் இயலாமையோடு,

“சக்தி லீவ் மீ” என்றவளை பேச்சற்று போகும் விதமாய்த் தன் முத்தங்களால் மூழ்கடித்தான்.

பின்னர் அவளின் இதழ்களைத் தன் இதழ்களால் இணைத்துக் கொள்ள இம்முறை அந்தத் தருணம் அவர்களுக்கே உரியதாக மாறிவிட யாருமே அவர்களை இடையூறு செய்யாத காரணத்தால் வெகுநேரம் அந்த இதழ்களுக்குப் பிரிய மனம் வரவில்லை.

அவனின் தேகம் அவளை மொத்தமாய் ஆட்கொள்ளத் தன் வன்மையான கரங்களால் அவளின் மென்மையான தேகத்தைச் சிறைப்படுத்திக் கொண்டான்.

காத்திருப்பிற்குப் பின் தோன்றும் காதலும்... அதன் ஊடலும்... பின் ஏற்படும் கூடலும் அவர்களைக் காதல் கடலில் மூழ்கி இன்புறச் செய்திருக்க அந்த முதல் இரவு அவர்களின் முதல் உன்னத உறவை ஏற்படுத்தியது.

இத்தனை நேரம் அவனின் கைச் சிறைக்குள் பிணைத்திருந்தவளை அவன் விடுவித்துச் சென்றுவிட அப்போது சிவசக்தி விழித்தெழுந்து அவனைத் தேடினாள். அவனோ தன்னை விடுத்து கைப்பேசியைக் கரத்தில் கொண்டிருந்ததைக் கவனித்தவள் அவனை நெருங்கி அந்தப் போஃனை அவனிடமிருந்து பறித்து அணைத்து வைத்தாள்.

“சாரி சக்தி... ஒரு முக்கியமான கால்” என்றான்.

“இத பாருங்க சக்தி... எனக்கும் நிறைய முக்கியமான வேலை இருக்குதான்... ஆனா அதுக்கான நேரம் இது இல்லை... நான் உங்க பக்கத்தில் இருக்கும் போது என்னைத் தவிர வேறெதுவும் உங்களுக்கு முக்கியமா இருக்கக் கூடாது...

நாளைக்கே உங்களுக்கு வேலை எதாச்சும் வந்த துபாய் லண்டன்னு எங்க வேணா போவீங்க... நானும் என் வேலையை விட்டுட்டு உங்க கூட வர முடியாது... எப்போ வருவீங்கன்னும் தெரியாது...

அப்படி நாம அபூர்வமா சந்திச்சிக்கும் போது நாம நம்மைத் தவிர வேற எதைப் பத்தியும் யோசிக்கக் கூடாது” என்று அதிகார தொனியில் சொல்ல அவளின் காதலும் அந்த உரிமையான கோபமும் சக்தி செல்வனுக்கு நன்கு புரிந்தது.

அவன் உடனே அவளை அருகில் இழுத்து இறுக அணைத்துக் கொண்டு,

“ஒகே கலெக்டர் மேடம்... நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்” என்று சொல்லிவிட்டு அவள் நெற்றியினை வருடி முத்தமிட்டான்.

இங்கே அவர்களின் திருமணப் பந்தம் இனிதே தொடங்கிவிட்ட நிலையில் இனி அவர்கள் சந்திக்கும் எந்தப் பெரிய பிரிவும் அவர்கள் காதலை கரைத்துவிட முடியாது.

இனி வரும் அவர்கள் பயணம் இனிதே தொடரும்...

முடிவுரை

வேண்டுமடி ஒருவன்

இரும்பினை ஒத்த கைகளால்

எனக்காகப் பூங்கொத்தினை ஏந்திட வேண்டுமடி!

பாறையான மார்பகத்தில்

பளிங்கினை போன்ற இதயம் வேண்டுமடி!

பார்வதியின் பதி போலப் பாதியாக

அவனுள் நான் வேண்டுமடி!

கண்களாலும் பிற பெண்களைத் தீண்டிடாத உள்ளம் வேண்டுமடி!

பறவையாய் நானிருக்க அவன்

வானமாய் விரிந்திட வேண்டுமடி!

ஆசையானாலும் மீசையானாலும் அதில்

ஒரு அழகான நேர்த்தி வேண்டுமடி!

கடலென நிரம்பிய நம்பிக்கையும் அதில்

ஓயாத அலையென மோதிடும் அன்பும் வேண்டுமடி!

நிறத்தில் கண்ணனாகவும் என்னை மட்டும் சுற்றும் கள்வனாக வேண்டுமடி!

இராச்சியங்கள் மாறி பூஜ்ஜியங்களாய்

போனாலும் புன்னகை செய்திட வேண்டுமடி!

தங்க ஆபரணங்கள் வேண்டாத

சொக்கத் தங்கமாய் ஒருவன் வேண்டுமடி!

என் முதல் காதலான தமிழின் மீது

அவனுக்கும் தீராத பற்றுதல் வேண்டுமடி!

அருமையோ, வெறுமையோ என் கவிதைகளைப் படித்துக் குறை சொல்ல வேண்டும் சற்று ஆர்வமும், பொறுமையும் வேண்டுமடி!

இந்தக் கதை நாயகன் நாயகியின் பெயருக்குள் என் அம்மா அப்பாவின் பெயர் ஒளிந்துள்ளது. சக்தியை நீக்கிவிட்டால்

சிவகாமி சிவசக்தி

செல்வராஜ் சக்தி செல்வன்

என்னை வியக்க வைத்த உண்மையான காதலர்கள் என் அம்மா அப்பாதான். ஆதலாலேயே இந்தப் பெயரை சூட்டினேன்.

நன்றியுடன்

மோனிஷா

 

 

Quote

Super ma 

Quote

Interesting story mam.

You cannot copy content