You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Srushti - Episode 10

Quote

10

நேகா காரை நிறுத்திய இடத்தைப் பார்த்து தியா அதிர்ந்தாள்.

“இது அர்ஜுன் இருக்கிற அப்பார்ட்மெண்ட்டாச்சே” என்றவள் கேட்கவும், “ஆமாம்” என்று நேகா ஆமோதிக்க, தியாவிற்குத் தூக்கிவாரிப் போட்டது.

“அப்போ நீ அனுப்பின வீட்டோட ஃபோட்டோஸ் எல்லாம் இந்த அபார்ட்மெண்ட் வீடுதானா?” என்றவள் அதிர்ச்சி மாறாமல் கேட்க,

“இதே அபார்ட்மெண்ட்தான்… நான் உனக்கு அட்ரெஸ் கூட மெஸேஜ் பண்ணேனே” என்று சொல்லிக் கொண்டே நேகா இறங்கி தியாவின் பெட்டியை இறக்கவும்,

“ஏய் ஏய் நிறுத்து நிறுத்து” என்று அவசரமாக இறங்கி வந்து தியா அவளைத் தடுத்தாள்.

“என்னாச்சு தியா?”

“இந்த அபார்ட்மெண்ட் வேண்டாம்… நாம வேற பார்க்கலாம்”

“வாட்? பிக்ஸ் பண்ணி அட்வான்ஸ் கொடுத்தப் பிறகு”

“இட்ஸ் ஒகே… நாம ரிட்டர்ன் வாங்கிக்கலாம்” என்று தியா சொல்ல,

“ஏன் வேண்டாங்குற… ஆஃபிஸ் பக்கத்துலயே இருக்கு பாரு… வாக்கபிள் டிஸ்டன்ஸ்… நீ நடந்தே ஆஃபிஸ் வந்துடலாம்… அதுவும் நல்ல லக்சுரியான அப்பார்ட்மெண்ட்… இப்படி சிட்டிகுள்ள கிடைக்காது… இதெல்லாத்துக்கும் மேல உனக்கு ஹெல்புக்கு அர்ஜுன் வேற இருக்கான்” என்று நேகா சொல்லிக் கொண்டே போக,

“பிரச்சனையே அதானே” என்று தியா பல்லைக் கடித்தாள். 

“எது?” என்று நேகா புரியாமல் கேட்க,

“உனக்கு அதெல்லாம் புரியாது” என்று தியா சொல்லும் போதே அவள் குறிப்பிட்ட பிரச்சனையே கால் முளைத்து எதிரே நடந்து வந்து கொண்டிருந்தது.

“ஓ மை காட்” என்று தியா தலையைப் பிடித்துக் கொள்ள,

“ஹாய்” என்றவன் இரு பெண்களுக்கும் பொதுப்படையாகக் கைக்காட்டிவிட்டு, “ஏன் இங்கேயே நிற்குறீங்க வாங்கப் போலாம்” என்றபடி அவன் நேகாவின் கையிலிருந்தப் பெட்டியை வாங்கிக்கொண்டு முன்னே நடந்தான்.

“உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா… அவன்கிட்ட ஏன்டி என் பெட்டியைக் கொடுத்த” என்று தியா நேகாவிடம் கடுகடுக்க,

“நான் எங்கே கொடுத்தேன்… அவன்தான் வாங்கிட்டுப் போறான்” என்றாள். தியா அவளை முறைத்துப் பார்க்கவும்,

“இப்போ ஏன் என்னை அப்படி பார்க்கிற… நீதானே எனக்கு டைம் இல்ல… நீயே ஒரு வீடா பாரு… நான் நேர்ல வந்து பார்க்கணும்னு கூட அவசியம் இல்ல… பார்த்து டிசைட் பண்ணுன்னு சொன்ன” என்று கேட்க,

“அதுதான் நான் செஞ்ச பெரிய தப்பு” என்றவள் முனங்கிக் கொண்டாள்.

“இப்ப என்னதான்டி உன் பிரச்சனை”

அதற்குள் நேகாவின் கைப்பேசி அர்ஜுனின் அழைப்பை அறிவுறுத்தியது. அவள் அதனை ஏற்றுப் பேசிவிட்டு,

“அர்ஜுன் லிஃப்ட்ல இருக்கானாம்… நம்மல கூப்பிடுறான்” என்றதும் தியா எரிச்சலுடன்,

“நான் வரல… ஒழுங்கா போய் என் பெட்டியை அவன்கிட்ட இருந்து வாங்கிட்டு வா” என்றாள்.

“உனக்கு இங்கே தங்குறதுல என்னடி பிரச்சனை?” என்று நேகா சாவகாசமாகக் கேட்டு கொண்டிருக்கும் போதே அர்ஜுன் தியாவின் கைப்பேசிக்கும் அழைப்பு விடுத்திருந்தான்.

“இவன் விடமாட்டான் போல” என்று எரிச்சலான தியா, “சரி எந்த ப்ளாக்?” என்று நேகாவிடம் கேட்டாள்.

“இதே ப்ளாக்தான்… அர்ஜுன் போர்ஷன் அபோசிட்ல” என்றவள் கூறவும் தியா ஷாக்கடித்த உணர்வுடன், “ஓ! ஷிட்… ஏண்டி ஏண்டி… இப்படி பண்ண? ஏற்கனவே எனக்கு இருக்கிற பிரச்சனை போதாதா… இதுல இவனை வேற சமாளிக்கணுமா?” என்று கடுப்பாகிவிட்டு அவள் லிஃப்டை நோக்கி அவசரமாக நடந்தாள்.

“தியா இரு நானும் வரேன்” என்று பின்னோடு வந்த  நேகாவிடம், “வந்தன்னா உன்னைக் கொன்னுடுவேன்” என்று எச்சரித்துவிட்டு அவள் மட்டும் முன்னேறிச் சென்றாள்.

அர்ஜுன் லிஃப்டில் காத்திருப்பான் என்று அவள் எண்ணியிருக்க அங்கே அவன் இல்லை. தியாவிற்கு தலைச் சுற்றியது. வேறு வழியின்றி அவளும் லிஃப்டில் ஏறி வீட்டை அடைய அர்ஜுன் உள்ளே நின்றிருந்தான்.

“வா தியா” என்றவன் புன்னகையுடன் அழைக்க, அவள் வேகமாக உள்ளே சென்று அவள் பெட்டியை இழுத்துக் கொண்டு வெளியே செல்ல எத்தனித்தாள்.

“என்னாச்சு தியா?” என்றவன் விசாரிக்க,

“எனக்கு இந்த வீடு பிடிக்கல” என்று அவனைக் கண்டும் காணாதது போல சொல்லிவிட்டு அவள் வெளியே செல்ல முற்பட அவன் அவளை வழிமறித்து நின்று,

“நீதானே ஃபோட்டோஸ் பார்த்து ஓகே பண்ண… இப்ப என்னாச்சு?” என்று கேட்டான்.

“ஆமா பண்ணேன்… ஃபோட்டோஸ்ல பிடிச்சிருந்தது… இப்போ நேர்ல பார்த்தா பிடிக்கல”

“நீ பார்க்கவே இல்ல தியா… அதுக்குள்ள பிடிக்கலன்னு சொல்ற”

“பிடிக்கலன்னா விடேன்”

அவள் கண்களை நிமிர்ந்து பார்த்தவன், “உனக்கு வீடு பிடிக்கலயா இல்ல என் வீட்டுப் பக்கத்துல இருக்கிறது பிடிக்கலையா” என்று கேட்க,

 “உனக்கே காரணம் தெரிஞ்சிருக்கு இல்ல… அப்புறம் என்ன… வழி விடு” என்றவள் அவனை விலக்கிவிட்டு அங்கிருந்து செல்வதிலேயே குறியாக இருந்தாள்.

ஆனால் அர்ஜுன் கதவை அடைத்து மறித்து நிற்க,

 “வழி விடு அர்ஜுன்” என்றவள் முறைப்புடன் கூற,

“முடியாது தியா… நீ இங்கேதான் தங்கப் போற” என்று அவன் அதிகாரமாக உரைத்தான்.

“நான் எங்க தங்கணும்… தங்க கூடாதுன்னு நீ யாருடா டிசைட் பண்றதுக்கு?”

“நான் உனக்கு யாரும் இல்லதான் தியா… ஆனா எனக்கு நீ எப்பவுமே என் பழைய தியாதான்… நீ இப்ப இருக்க மனநிலைல தனியா எங்கேயோ போய் தங்கறது நல்லது இல்லைன்னுதான் நேகாகிட்ட பேசி உன்னை இங்கே வர வைச்சேன்” என்றவனை அவள் பார்வையால் அளவெடுத்து,

“அப்போ திட்டம் போட்டு என்னை இங்கே வர வைச்சிருக்க இல்ல” என்று கேட்டாள்.

“தப்பான நோக்கம் எல்லாம் இல்ல தியா… ஒரு ஃப்ரண்டா உன் கூட இருக்கணும்னு ஆசைப்படுறேன்”

“எனக்கு உன் ஃப்ரண்ட்ஷிப் வேண்டாம்… வழி விடு அர்ஜுன்”

“சரி ஃப்ரண்ட்ஸா வேண்டாம்… நைபர்ஸா இருப்போமே”

“அர்ஜுன் ஐல் கில் யூ” என்றவள் கடுப்பாக,

“ஓகே கில் மீ” என்றவன் அப்போதும் நின்ற இடத்திலிருந்து அசையாமல் நின்றான்.

“ஏன் டா இப்படி என்னை வாழவும் விடாம சாகவும் விடாம டார்ச்சர் பண்றீங்க… கரண் நீ… எல்லாம் ஒரே ஜாதிதான்… அந்த கரண் இப்படிதான் நான் போற இடத்துக்கு எல்லாம் என்னைத் துரத்தித் துரத்தி டார்ச்சர் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான்… இப்போ ஒரே நிமிஷத்துல வேணான்னு தூக்கிப் போட்டுட்டான்… அப்படியே உன்னை மாதிரியே… இப்ப நீ திரும்பி முதல இருந்து ஆரம்பிச்சிருக்க.

நான் என்ன பொம்மையா… உங்க இஷ்டத்துக்கு விளையாடிட்டு தூக்கிப் போட… ஐ ஹேவ் ஃபீலிங்ஸ் மேன்” என்றவள் தளர்ந்து சோஃபாவில் அமர்ந்து கொண்டு அழ,

“ஐம் சாரி தியா… உன்னை நான் கஷ்டபடுத்தனும்னு இப்படி எல்லாம் பண்ணல… நீ உன் பொண்ணை இழந்து எவ்வளவு மனவேதனையில இருக்கேன்னு எனக்கு நல்லா தெரியும்… இந்த மாதிரி மனநிலையோட நீ எங்கயோ தனியா கஷ்டப்பட வேண்டாம்னு நினைச்சேன்… உனக்கு சப்போர்டா இருக்கணும்னு நினைச்சேன்.

மத்தபடி திரும்பவும் சந்தரப்பத்தைப் பயன்படுத்திக்கிட்டு உன் வாழ்க்கைகுள்ள நுழையணும்னு நான் நினைக்கல… ப்ளீஸ் தியா… என்னை நம்பு” என்றவன் மண்டியிட்டு அவள் முன்னே அமர்ந்து கெஞ்சினான்.

தியா அவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள். அவளுக்குத் தெரிந்த அர்ஜுன் தலைக்கணம் கொண்டவன். அவனும் ஈகோவும் ஒட்டிப் பிறந்த இரட்டை பிறவிகள் போல இருந்த காலம் ஒன்று உண்டு.

ஆனால் இந்த அர்ஜுன்… அவளால் நம்பவே முடியவில்லை. அர்ஜுன்தானா இது? தனக்காகவா அவன் இவ்வளவு தூரம் இறங்குகிறான்.

தன்னைப் பற்றி இந்தளவு கவலைக் கொள்கிறான். மனம் ஒரு மாதிரி அவனின் வார்த்தைகளில் உருகிப் போன போதும் எது நிஜம் எது நிரந்தரம் என்று புரியாமல் குழம்பியும் தவித்தது.

எந்த உறவு வேண்டுமென்று அவள் நினைக்கிறாளோ அவர்கள் அவளை உதறிவிட்டுப் போகிறார்கள். யார் வேண்டாமென்று அவள் விலகி விலகிப் போகிறாளோ அவர்கள் நெருங்கி வருகிறார்கள்.

இதென்ன விதி? தியாவிற்கு உண்மையில் புரியவில்லை.

அவள் வாழ்வில் சில விஷயங்களை அவள் செய்யவே கூடாது என்று உறுதியாக இருந்த போதும் நடப்பதெல்லாம் ஏறுக்குமாறாகவே இருக்கிறது.

அவள் தந்தை பிரிந்த சென்ற தன் தாயின் வாழ்வில் நிறைய ஆண்களின் பிரவேசங்கள் நிகழ்ந்திருப்பதை அவள் கண் கூடாகப் பார்த்திருக்கிறாள். அவளுக்கு அதில் எல்லாம் பிடித்தமும் இல்லை. அப்படியொரு வாழ்க்கை வாழ்வதில் அர்த்தமும் இல்லை என்று யோசிப்பவள் அவள். ஆனால் அவள் கருத்தைச் சொன்னால் இக்காலக்கட்டத்தில் யாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திருமணமே ஒரு விதமான பழமைவாதம் என்று நம்பும் இச்சமுகத்தில் இவள் கருத்தும் எண்ணமும் முட்டாள்தனமாகதான் பார்க்கப்படும்.

அர்ஜுன் இன்னும் அவள் சம்மதத்திற்காகக் காத்திருந்தான். அதுவும் அவன் கண்களில் தெரியும் காதலையும் ஏக்கத்தையும் பார்க்கும் போதெல்லாம் அவள் மனம் தடுமாறியதை அவள் உணர்ந்திருக்கும் போது…

“இது சரி வராது அர்ஜுன்… என்னைப் போக விடு” என்றவளும் பிடிவாதமாக மறுக்க அர்ஜுன் விடாமல்,

“நான் என்ன பண்ணா நீ என்னை நம்புவ” என்று கேட்டான்.

அவனை முறைத்துப் பார்த்தவள், “எவ கூடயாச்சும் கமிட் ஆகு… நம்புறேன்” என்று சொல்லிவிட,

“அவ்வளவுதானே… நான் கமிட்டாகுறேன்…” என்றான் அவனும் சாதாரணமாக.

“நிஜமா சொல்றியா?”

“நீ இங்கே இருக்கிறன்னு சொல்லு… நான் இப்பவே இந்த நிமிஷமே கமிட்டாகுறேன்”

அவனை அதிர்ச்சியாகப் பார்த்தவள், “அதெப்படிடா ஒரே நிமிஷத்துல கமிட்டாவ” என்று வினவ,

“நம்ம ஆஃபிஸ்ல இருக்க சஞ்சனா ஏற்கனவே என்கிட்ட கேட்டுட்டு இருந்தா… இப்ப நீ ஓகே சொல்லு… நான் அவளுக்கு ஓகே சொல்லிடுறேன்… ப்ராபளம் சால்வ்ட்” என்றான்.

“அடப்பாவி… அவளுக்கு இரண்டு குழந்தை இருக்குடா… அதுவும் இல்லாம அவளோட லிஸ்டு ரொம்ப பெருசு” என்றவள் அதிர்வுடன் சொல்ல,

“அதெல்லாம் பரவாயில்ல… நீ ஓகே சொல்லு… நான் அவளுக்கு ஓகே சொல்றேன்” என்று அவன் சொன்னதுதான் தாமதம். தன் கைப்பையைக் கழற்றி அவன் தோள்களில் அடிக்க அவன் கெஞ்சலுடன், “ப்ளீஸ் தியா… ஓகே சொல்லு” என்று கேட்டான்.

“நான் ஓகே சொல்றது இருக்கட்டும்… நீ போயும் போயும் அந்த சஞ்சனாவுக்கு ஓகே சொல்லிடாதே” என்றாள் கோபத்துடன்.

அவன் தளர்வுடன் தரையில் அமர்ந்து கொண்டு, “இப்படி சொன்னா… நான் என்னதான் பண்ணட்டும் தியா” என்று கேட்டான்.

“ம்ம்ம்…பெருசா ஒன்னும் பண்ண வேண்டாம்… போய் ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா… போதும்” என்றவள் சொன்னதை கேட்டதில் அவன் குழப்பமாகப் பார்க்க,

“நான் உனக்கு நைபரா இருக்கணும்னா தினமும் நீதான் எனக்கு காபி போட்டுத் தரணும்” என்று சொல்ல, அவன் முகத்தில் அளவில்லாத சந்தோஷம் பெருகியது.

“தட்ஸ் மை ப்ளேஷர்… ஜஸ்ட் டூ மினிட்ஸ்… காபி எடுத்துட்டு வரேன்” என்றவன் விரைவாக தன் வீட்டிற்குச் சென்றான்.

அர்ஜுனின் அன்பை அவளால் நிராகரிக்கவே முடியவில்லை.

முன்பு எல்லாம் அவன் கோபத்தையும் ஈகோவையும் காட்டிக் காரியத்தை சாதித்துக் கொண்டான் என்றால் இப்போது அன்பைக் காட்டி அவன் நினைத்ததை சாதித்துக் கொள்கிறான்.

எப்படி பார்த்தாலும் அவன் பிடிவாதம்தான் ஜெயிக்கிறது என்று எண்ணித் தலையை உலுக்கிப் புன்னகைத்துக் கொண்டாள்.

Rathi has reacted to this post.
Rathi

You cannot copy content