You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Srushti - Episode 5

Quote

5

அர்ஜுனை அவள் அந்த சமயத்தில் எதிர்பார்க்கவில்லை. தயக்கத்துடன் அவனை எதிர்கொண்டவள், “நேகா வரலையா?” என்று விசாரிக்க, அவன் கண்களோ உருக்குலைந்திருந்த அவளின் தற்போதைய தோற்றத்தைப் பார்த்து ஸ்தம்பித்துவிட்டது.

முந்தைய முறை பார்த்த போது கொஞ்சமும் அவளின் வயதின் பிரதிபலிப்பு தெரியாமல் இருந்தவள் இன்று முற்றிலும் தலை கீழாக மாறியிருந்தாள்.

முகமெல்லாம் ஒட்டி கண்கள் உள்ளே போய் மிகவும் பரிதாபகரமான நிலையில் நின்றவளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவனை அவள், “அர்ஜுன்” என்று அழைத்தாள்.

அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. கண்களில் கண்ணீர் நிரம்பிவிட அப்போதே அவள் கேட்ட கேள்வியை நினைவுப்படுத்தி கொண்டவன்,

“ஆக்சுவலி நேகா உன்னைப் பார்க்கத்தான் கிளம்புனா… பட் ஒரு ஆக்ஸிடென்ட்” என்று சொன்னதும்,

“ஆக்ஸிடென்டா?” என்று அவள் அதிர,

“இல்ல இல்ல… ரோட்ல வேறெதோ ஆக்ஸிடென்ட்… கம்பிளீட்டடா ரோட் ப்ளாகாகி நேகாவோட கார் நடுவுல மாட்டிக்கிச்சு…

அப்புறம்தான் அவ எனக்கு கால் பண்ணி சொன்னா… நீ தனியா ரொம்ப ஃபீல் பண்ணி பேசுனதா… அதான் நான்” என்று அவன் தயக்கத்துடன் அவளை எதிர் கொள்ள,

“உள்ளே வா அர்ஜுன்” என்று அவள் புன்னகைத்து அவனை அழைத்தாள். அந்தப் புன்னகை அவள் உதட்டிற்குப் பொருந்தவே இல்லை என்று தோன்றியது. மிகவும் இயந்திரத்தனமாக…

இவ்வாறு யோசித்து கொண்டே அவன் உள்ளே நுழைய சோபாவில் அவனை அமரச் சொல்லிவிட்டு உள்ளே சென்று பழச்சாறு எடுத்து வந்து தந்தாள்.

அதற்குள் அவன் பார்வை அந்த வீட்டை அளந்துவிட்டது. அங்கிருந்தப் பொருட்கள் அனைத்தும் களைந்திருந்தது. அது அவள் மனநிலையைப் பிரதிபலித்தது. ஆங்காங்கே அவளும் கரணும் நெருக்கமாக இணைந்திருந்த காணொளி போன்ற படங்கள். அதில் தியா மிகவும் அழகாக இருந்தாள்.

அவள் தந்தப் பழச்சாறைப் பெற்றுக் கொண்டவன் அதனைப் பருகிக் கொண்டே, “உன் ஹஸ்பென்ட் எங்கே?” என்று கேட்க,

“ஆஃபிஸ் போயிருக்காரு” என்றாள்.

“எப்ப வருவாரு?” என்றவன் கேட்க அவளுக்கு அதற்கான பதில் தெரியவில்லை.

“வந்திருவாரு… வர டைம்தான்”

“நீ ஏதாச்சும் சாப்பிட்டியா தியா?” அவன் இறங்கிய குரலில் கேட்க,

“ம்ம்ம்” என்று அவள் தலையசைத்தாள்.

“பொய் சொல்லாதே”

“ப்ச்… சாப்பிடணும்னு தோனல… தோனும்போது சாப்பிடுவேன்” என்றவள் பதிலைக் கேட்டவன் உடனடியாக அவள் வீட்டின் குளிர்சாதன பெட்டியிலிருந்த ஜூஸ் பாட்டிலை எடுத்து உணவு மேஜையில் கவிழ்த்திருந்த கண்ணாடி டம்ளரைத் திருப்பி அவளுக்கும் ஒரு குவளை ஊற்றினான்.

“அர்ஜுன் என்ன பண்ற நீ… எனக்கு வேண்டாம்… ப்ளீஸ்” என்றவள் கெஞ்ச அவன் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அவள் கையில் அந்த கண்ணாடி டம்ளரை திணித்து, “குடி” என்றான் அதிகாரமாக.

அது அவளுக்கு ரொம்பவும் பழக்கப்பட்டதும் கூட. அவன் அன்பைக் கூட அதிகாரமாகதான் காட்டுவான். ஆனால் அதில் ஒரு ஆழமான காதல் இருக்கும்.

இப்போதும் அந்த உணர்வு இருந்ததோ?

அவள் மௌனமாக தன் கரத்தில் திணிக்கப்பட்ட ஜூஸ் டம்ளரை பார்த்திருந்தாலே ஒழிய பருகவில்லை.

“உனக்கு சமாதானம் சொல்ல முடியும்னு எனக்கு தோனல… ஆனா நீ இப்படி உருகுலைஞ்சு நிற்குறதை என்னால பார்க்க முடியல… ப்ளீஸ் தியா… ப்ளீஸ்… குடி” அவன் கெஞ்சத் தொடங்க, அவள் இதயத்தை யாரோ கசக்கிப் பிழிவது போலிருந்தது.

அவனைக் கண்ணீருடன் ஏறிட்டவள் அமைதியாக அந்தப் பழச்சாறைப் பருகினாள்.

அதன் பிறகு சில நிமிடங்கள் மௌனங்களாக கழிந்தது. அர்ஜுனின் நினைவுகளில் தியாவுடனான காதல் நாட்கள் காட்சிகளாக ஓடியது.

திறமையானவள். அழகானவள். இதெல்லாம் தாண்டி அவள் உணர்வுப்பூர்வமானவள். எந்த உறவுக்கும் உண்மையாக இருக்க வேண்டுமென்று நினைப்பவள். அதுதான் தியாவின் தனித்துவம்!

தற்போதைய காலக்கட்டத்தில் உண்மைக்கும் உறவுக்கும் யாருக்கும் அர்த்தமே தெரிவதில்லை. உணர்வு என்பதெல்லாம் வார்த்தையளவில் மட்டுமே இருக்கின்றன.

இதெல்லாம் வெளிநாட்டு வேலையும் வாய்ப்பும்தான் முக்கியமென்று ஓடிய பிறகுதான் அவனுக்குப் புரிய வந்தது. அதுவும் தியாவின் உணர்வுப்பூர்வமான காதலில் திளைத்தவனுக்கு வெறும் உடல் தொடும் காதல்கள் பிடிக்கவில்லை.

உண்மையான காதலைத் தேடி அவன் களைத்துப் போய்விட்டான். தியாவிடம் திரும்பிவிட வேண்டுமென்ற மனம் நினைத்தாலும் தோற்று போய் மீண்டும் அவள் முன்னே வந்து நிற்பதா என அவன் ஈகோ அவனைத் தடுத்துவிட்டது.

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக ரோபோட்டின் ஆளுமையில் முழுக்க முழுக்க இயந்திரகெதியில் மாறிவிட்ட மனித உறவுகள் மீது வெறுப்பு வந்துவிட, அப்பொழுதே அவன் திரும்பி வர முடிவெடுத்தான். தனக்கென்று ஒரு உறவும் காதலும் வேண்டுமென்று வந்தான்.

இத்தனை வருடமாக தியா தனக்காகக் காத்திருப்பாள் என்று யோசிப்பதே முட்டாள்தனம் என்று தெரிந்த போதும் வந்தான். ஏதோ ஒரு மூலையில் இன்னும் அவளிடம் தனக்கான காதலும் அன்பும் ஒட்டிக் கொண்டிருக்குமா என்ற நப்பாசை அவனுக்கு.

ஆனால் அவள் இப்படி மகளை இழந்து உருக்குலைந்து நிற்பதைப் பார்க்க அவன் துளியும் விரும்பவில்லை.

இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் அவன் திரும்பியே வந்திருக்க மாட்டான். ஏதோ ஒரு ஒரத்தில் அவள் நன்றாக இருக்கிறாள் என்ற நம்பிக்கையாவது மிச்சம் இருந்திருக்கும்.

அவளின் உயிரோட்டமான புன்னகை மட்டுமே பதிந்திருந்த அவன் நினைவுகளில் இந்த உருக்குலைந்த தியாவை வைத்து பார்க்கவே அவனால் முடியவில்லை.

அவனின் உயிரின் அடி ஆழம் வரை வலித்தது. பழச்சாறைப் பருகியபடி கரைபுரண்ட சிந்தனையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்தவனின் விழிகளில் நீர் எட்டிப் பார்த்தது.

அதனைக் கவனித்துவிட்ட தியா, “அர்ஜுன்” என,

“ஒன்னும்மில்ல” என்று அவன் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். அவன் தனக்காக வருந்தி கண்ணீர் வடிக்கிறான் என்பதை உணர்ந்தவளுக்கு  உள்ளம் நெகிழ்ந்தது. அதேநேரம் அவனிடம் அலுவலகத்தில் கோபமாகப் பேசியது நினைவிற்கு வர,

“சாரி அர்ஜுன்… அன்னைக்கு நான் உன்கிட்ட ரொம்ப கோபமா பேசிட்டேன்” என்றாள்.

“தப்பு என் பேர்லதான்… நீ அன்னைக்கு இருந்த பதட்டத்தைப் புரிஞ்சுக்காம நான் ஏதேதோ பேசி உன்னை டென்ஷன்படுத்தி… இட்ஸ் மை மிஸ்டேக்” என்றவன் கூற வேதனையுடன் நோக்கியவள்,

“ப்ச்… அன்னைக்கு நான் மட்டும் மீட்டிங் அட்டென்ட் பண்ணாம கிளம்பிப் போயிருந்தா…” என்றவள் பேசும் போதே அவள் விழிகள் கண்ணீரை உதிர்க்க,

“இப்படியெல்லாம் நடக்கும்னு நீ என்ன தெரிஞ்சா செஞ்ச” என்றவன் சமாதானம் கூறினான்.

“இல்ல அர்ஜுன்… எனக்கு தெரிஞ்சுது… என் பொண்ணுக்கு ஏதோ ஆபத்துங்குற மாதிரி ஒரு இன்ஸ்டிங்ட் ஃபீலாச்சு… ஆனா நான்தான்… அலட்சியமா இருந்திட்டேன்” அவள் குற்றவுணர்வுடன் சொல்லி வருந்த அவளை ஆச்சரியமாக நோக்கினான். அதுதான் தியா. அன்பிற்கு உதாரணமவள்.

எப்படி அவள் இந்த இழப்பிலிருந்து மீண்டு வருவாளோ என்று கவலைக் கொண்டவன், 

“தியா ப்ளீஸ்… முடிஞ்சு போன விஷயத்தைப் பேச வேண்டாம்… அதனால எந்த உபயோகமும் இல்ல” என்றான்.

“நானும் அப்படிதான் நினைக்கிறேன்… ஆனா என்னால முடியலேயே அர்ஜுன்” அவள் தன் அழுகையைக் கட்டுப்படுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தாள்.

“நீ பேசாம ஆஃபீஸ் வா… உன் மைன்ட் கொஞ்சம் டைவர்ட் ஆகும்”

“என்னால ஆஃபிஸ்லாம் வந்து வேலைப் பார்க்க முடியாது அர்ஜுன்”

“நீ வேலையே செய்ய வேண்டாம்… ஆஃபீஸ் வா… அட்மாஸ்பியர் சேஞ்சான மைன்ட் மாறும்”

“கரணும் நீ சொன்னதைதான் சொன்னான்… ஆனா என்னாலதான் முடியல”

“அதெல்லாம் முடியும்… நீ கிளம்பி வா” என்றவன் சொல்ல அவள் பதில் பேச வருவதற்குள், “நோ மோர் ஆர்கியுமென்ட்ஸ்… நீ நாளைக்கு வர” என்று முடிவாகக் கூறினான். அவள் மௌனமாக இருந்தாள்.

மறுத்துப் பேச முடியவில்லையா அல்லது மறுத்துப் பேச தோன்றவில்லையா என்று அவளுக்குத் தெரியவில்லை.

அர்ஜுன் அவள் முகத்தைப் பார்த்து, “நடந்தது எதையும் மாத்த முடியாது தியா… இனிமே நடக்க போறது என்னன்னுதான் நாம யோசிக்கணும்” என, அவன் சொல்வதை அவள் மூளை உள்வாங்கி கொண்டாலும் மனமோ இனி தன் வாழ்வில் நடக்க என்ன இருக்கிறது என்று விரக்தியை நிரப்பிக் கொண்டது.

அந்த சமயத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அப்படி திறந்து கொண்டு வருவதாக இருந்தால் அது கரண்தான். லேசான தடுமாற்றத்துடன் அவள் எழுந்து நின்றாள். அவன் உள்ளே நுழைந்ததும் அவர்கள் இருவரையும் கவனித்தான்.

முதலில் அவன் திகைப்படைந்த போதும் உடனடியாக சமாளித்து கொண்டு, “நீங்க அர்ஜுன்தானே?” என்று கேட்க, அர்ஜுனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

திடீரென்று கரணை எதிர்கொண்டதில் அவன் திகைத்துவிட, தியா பதில் கூறினாள்.

“ஆமா… அர்ஜுன்தான்…. எங்க ஆஃபீஸ்ல புது ஜி எம் வரபோறதா சொல்லி இருந்தேன் இல்ல… அந்த போஸ்ட்டுக்கு அர்ஜுன்தான் வந்திருக்கிறான்” என்றவள் கூறவும் கரண் புன்னகையுடன்,

“ஓ… தட்ஸ் கிரேட்… காங்க்ராட்ஸ்” என்று வாழ்த்திவிட்டு,

“நீங்க எங்க வீட்டுக்கு வந்ததுல ரொம்ப சந்தோஷம்…ஹம்… ஃபோட்டோல பார்த்த மாதிரி இப்பவும் அப்படியே இருக்கீங்க… செம ஸ்மார்டா” என்றவன் தம் கரத்தை நீட்ட அர்ஜுன் சங்கடத்துடன் புன்னகை செய்து கைக்குலுக்கிக் கொண்டான்.

“ஓகே… நீங்க பேசிட்டு இருங்க… நான் பிரெஷ்அப் ஆகிட்டு வரேன்” என்றவன் அறைக்குள் சென்றுவிடவும்,

“நான் கிளம்புறேன் தியா” என்றான் அர்ஜுன்.

“இரு அர்ஜுன்… கரண் வந்திருவான்… பேசிட்டுப் போ” என்றவள் சொல்ல,

“சாரி தியா… நான் போகணும்… நெக்ஸ்ட் டைம்… மீட் பண்ணி பேசுறேன்… நீ மறக்காம நாளைக்கு ஆஃபிஸ் வந்துடு” என்றவன் போகிற போக்கில் சொல்லிவிட்டு அவசரமாக வெளியேறினான். இன்னும் தியாவை அவன் நேசிக்கும்போது கரணை மிக இயல்பாக எதிர்கொள்வது அவனுக்குச் சிரமமாக இருந்தது.

தியா புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்போதே பின்னோடு வந்து கரண், “என்ன… அதுக்குள்ள அர்ஜுன் கிளம்பிட்டாரா? டின்னர் சாப்பிட்டுப் போகச் சொல்லி இருக்கலாம் இல்ல” என,

“தெரியல… கிளம்பணும் சொல்லிட்டுப் போயிட்டான்” என்றவள் கரணின் முகத்தைக் கூட பாராமல் அமைதியாக சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

“மேடம்… என் மேல ரொம்ப கோபமா இருக்கீங்களா… முகத்தைக் கூட பார்க்க மாட்டுறீங்க” என்றவன் அவளருகில் வந்து நெருக்கமாக அமர,

“நீ அப்படியே போறன்னுதானே சொன்ன… ஏன் திரும்பி வந்த… போக வேண்டியதுதானே” என்று சீற்றத்துடன் திரும்பி அவனை முறைக்க,

“போனேன்தான்… ஆனா என்னால முடியலயே… உன்னைத் தனியா விட்டுட்டு வந்துட்டோமேன்னு ரொம்ப கில்டியா போச்சு… வேலையில கான்சென்டிரேட் பண்ணவே முடியல டியர்.

எனக்கு நீயாச்சும் ஃபோன் பண்ணி வர சொல்லுவன்னு பார்த்தேன்… ஆனா நீ பண்ணவே இல்ல… அதான் நானே கிளம்பி வந்துட்டேன்” என்றவன் சொன்னதுதான் தாமதம். அவன் தோள் வளைவுக்குள் சாய்ந்து அழத் தொடங்கி விட்டாள்.

அவளை இறுக்கமாக தனக்குள் புதைத்துக் கொண்டவன்,  “ஐம் சாரி தியா… இனிமே இந்த மாதிரி பண்ணமாட்டேன்” என்று சமாதானம் கூற, அவள் உள்ளம் ஓரளவு அமைதி பெற்றிருந்தது.

Rathi has reacted to this post.
Rathi

You cannot copy content