You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Srushti - PreFinal Episode

Quote

12

ரஸலை சந்தித்துவிட்டு தியாவும் அர்ஜுனும் மீண்டும் விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது தியாவின் முகத்திலிருந்த குழப்ப ரேகைகளைப் பார்த்த அர்ஜுன், “என்னாச்சு தியா… எனி ப்ராப்ளம்” என்று விசாரிக்க,

“ஹ்ம்ம்” என்றவள் தலையை மட்டும் அசைத்தாள்.

“என்ன தியா?”

“இல்ல அர்ஜுன்… அப்ப இருந்த பிரஸ்ட்டிரேஷன்ல சிஷுவை உடைச்சுப் போட்டுட்டேன்… இப்போ கேஸுக்கு அதுதான் உபயோகமா இருக்கும்னு ரஸல் சொல்றாரு… அதான் யோசிச்சிட்டு இருக்கேன்” என்றவள் கவலையுடன் சொல்லவும்,

“ஓ… ரொம்ப டேமேஜாயிடுச்சா?” என்று கேட்டான்.

“ப்ச்… ஆமா… அதான் இப்போ அதை எப்படி சரி பண்றதுன்னு”

“டென்ஷனாகாதே தியா… பார்த்துக்கலாம்… இந்த மாதிரி ரிபேர்ஸ் பண்ண ரோபோட்டிக் டெக்னிஸியன்ஸ் நிறைய பேர் இருக்காங்க”

“விஷயம் அது மட்டும் இல்ல அர்ஜுன்… லித்து அவளுடைய கடைசி நாட்களில் இருந்த மனநிலையை சிஷு ரெகார்ட் பண்ணி வைச்சு இருக்கும்னு சொன்னாரு… நான் அப்ப இருந்த டென்ஷன்ல அதெல்லாம் யோசிக்க கூட இல்ல… இப்ப என் கவலையே… உள்ளே மெய்ன்பார்ட்ஸ் டேமேஜ் ஆகி இருந்தா... ரஸல் சொன்ன மாதிரி அதுல இருக்க மெமரீஸ் எல்லாம் அழிஞ்சு போயிருக்கவும் வாய்ப்பிருக்கு இல்ல”

“நீயா ஏதாச்சும் போட்டுக் குழப்பிக்காதே… எதுக்கும் டெக்கை வர வைச்சு சிஷுவை பார்த்துட்டு அப்புறமா டிசைட் பண்ணுவோம்… வில் ஹோப் ஃபார் தி பெஸ்ட்” என்றான்.

அவள் நம்பிக்கையே இல்லாமல் தலையசைக்க, “சியர் அப்” என்று அவள் தோள்களைத் தட்டினான்.

“ம்… எஸ்” என்றவள் மேலும் அர்ஜுனைப் பார்த்து, “நான் என் வீட்டுக்குப் போய் சிஷுவை எடுத்துட்டு வந்துட்டு… அப்புறமா ஆஃபிஸ் வரேன்” என,

“ஓகே” என்றான் அர்ஜுன்.

தியா விமானத்திலிருந்து இறங்கியதும் அர்ஜுனிடம் சொல்லிவிட்டு கரண் வீட்டிற்குச் சென்றாள். எப்போதும் போல அவள் தன் வீட்டிற்குச் செல்லும் பழக்கத்தில் விரல் ரேகையைப் பதித்துவிட்டு உள்ளே செல்ல அங்கே அவளுக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது.

கரணும் வேறொரு பெண்ணும் முகப்பறையில் அணைத்து முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து பின் மீண்டு, “ஓ மை காட்… ஐம் சாரி” என்று அவள் பின்னடைய, கரணுமே நிலைமை உணர்ந்து அப்பெண்ணை விட்டு விலகி நின்றான்.

தியாவிற்கு அப்படியொரு அசூயை உணர்வு. மேலும் கோபம், வெறுப்பு என்று உணர்வு பிடியில் சிக்கிக் கொண்டு கதவருகில் சிலையாக நின்றுவிட… சுதாரித்துக் கொண்ட கரண், “உள்ளே வா தியா” என்று மிக சாதாரணமாக அழைத்தான்.

ஆனால் தியாவின் படபடப்பு அடங்கவே இல்லை.  அவனால் எப்படி முடிந்தது. அவள் உள்ளமும் உடலும் எரிந்தது.

“எப்படி? எப்படி? என்னை விட்டு வேறொரு பெண்ணோட” என்றவன் சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டுமென்று மனதில் எழுந்த எண்ணத்தை மிகவும் பிராயத்தனப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

“உள்ளே வா தியா” என்று கரண் மீண்டும் அழைக்க, அவளுக்குதான் எதற்கு இங்கே வந்தோம் என்பதெல்லாம் மறந்துவிட்டது.

“அது… ஐம் சாரி கரண்… நான் நம்ம வீடுதானேன்னு எப்பவும் போல பிங்கர் ப்ரிண்ட்ஸ் வைச்சு… ஐம் சாரி… ஐம் சாரி கரண்” என்றவள் தடுமாற்றத்துடன் பேச,

“இட்ஸ் ஓகே தியா… உள்ளே வா” என்றவன் அவள் தோள்களை அணைத்தவாறு உள்ளே அழைத்து வரவும் அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது. கொஞ்சம் கூட குற்றவுணர்வே இல்லையா அவனுக்கு? அவன் வேறொரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்தான் என்பதைவிட தான் அதை பார்த்துவிட்டோம் என்ற வருத்தமாவது அவன் முகத்தில் இருக்க வேண்டாமா?

ம்ஹும்… அவன் முகத்தில் சிறு சலனம் கூட தெரியவில்லை. அதை பார்க்கையில்தான் அவளுக்கு அதிகமாக வலித்தது.

 அவன் பிடியை விலக்கிவிட்டு அவள் விலகி நிற்க முயல அவனோ, “தியா… திஸ் இஸ் ஹனி… ரீஸண்டா நிறைய இடத்துல மீட் பண்ணிக்கிட்டோம்… அப்புறம் ஃப்ரண்ட்ஸாகி” என்று அறிமுகம் செய்ய, அவள் அந்தக் கதையெல்லாம் கேட்க கொஞ்சமும் விருப்பப்படவில்லை.

கரணின் பிடியிலிருந்து வெளியே வந்தவள், “நான் சிஷுவை கொண்டுப் போகலாம்னு வந்தேன்… எடுத்துட்டுப் போயிடுறேன்” என்று அருகே இருந்த அறைக்குள் சென்றுவிட்டாள்.

அவள் தொண்டைக் குழியிலிருந்து வெளியே வரவிருந்த அழுகையைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு அந்த அறையில் சிஷு வைக்கப்பட்டிருந்த இடத்தைக் கண்டறிந்து அந்த அட்டைப் பெட்டியை எடுத்துக் கொண்டாள்.

கரண் அவள் பின்னோடு வந்து, “இப்போ எதுக்கு உனக்கு அந்த உடைஞ்சு போன ரோபோ” என்று வினவ,

“கேஸுக்கு தேவை படுது கரண்… எடுத்துக்கிட்டேன்… தேங்க்ஸ் கிளம்புறேன்” என்றவள் அவன் முகத்தைக் கூட பாராமல் அவசர அவசரமாக வாயிலை நோக்கி நகர,

“ஹே தியா… இரு… ஏதாச்சும் சாப்பிட்டு போ” என்றான்.

“நோ தேங்க்ஸ்… நான் ஆஃபிஸ் போகணும்” என்று அவசரமாகச் சென்றவள் சட்டென்று கரணிடம் திரும்பி,

“லாக்ல இருக்க என்னோட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் ரிமுவ் பண்ணிடு கரண்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

அலுவலகம் விட்டு வந்த அர்ஜுன் நேராக தன் குடியிருப்புக்குள் நுழையாமல் தியா வீட்டின் கதவைத் தட்டினான். ஏதோ ஜடம் போல எழுந்து கதவைத் திறந்தவள் அர்ஜுனைப் பார்த்ததும் புன்னகைக்க முயன்றாள்.

“என்ன தியா ஆஃபிஸ் வரேன்னு சொன்ன… வரவே இல்ல… என்னாச்சு?” என்றவன் கேள்வியுடன் ஏறிட அவனிடம் தன் மன வேதனையைப் பகிர்ந்து கொள்ள அவள் விழையவில்லை.

“சிஷுவை எடுத்துட்டு வந்துட்டேன்… பட் போயிட்டு வந்ததுல கொஞ்சம் டையர்டா இருந்துச்சு… அதான் சோஃபாலேயே அப்படியே தூங்கிட்டேன்” என்றவள் சமாளிக்க,

“இப்போ ஓகேதானே” என்றவன் அக்கறையாகக் கேட்டான்.

“யா” என்றவள் தலையசைக்க, “சரி சிஷு எங்கே?” என்று அவன் கேட்க, “அதோ” என்று அங்கே ஓரமாக வைக்கப்பட்டிருந்த அட்டைப் பெட்டியைச் சுட்டிக் காண்பித்தாள்.

அதனைத் திறந்து பார்த்தவன் அவளிடம், “அந்தளவு டேமேஜ் ஆகலன்னுதான் நினைக்கிறேன்… சரி பண்ணிடலாம்” என்றான்.

“நிஜமா சொல்றியா?”

“எஸ்” என்றவன் மேலும், “காபியோட வொர்க்ஸ் டார்ட் பண்ணலாம்” என்று தன் வீட்டிற்குச் சென்று அவளுக்கும் தனக்குமாய் காபி தயாரித்து எடுத்து கொண்டு வந்தான்.

பின் சிஷுவின் பாகங்களை ஒவ்வொன்றாக வெளியே எடுக்க,

“நீயே சரி பண்ண போறியா அர்ஜுன்?” என்று கேட்டாள்.

“முதல ஃபிக்ஸ் பண்றேன்… அப்பதான் என்ன ப்ராபளம்னு தெரியும்” என்று அந்தப் பாகங்களை இணைக்கும் வேலையில் இறங்க, தியாவும் அவனுக்கு உதவியாக இருந்தாள்.

இருவருக்கும் நேரம் போனதே தெரியவில்லை. சில மணிநேரங்கள் கழித்து சிஷு தன் முழு உருவத்தை மீண்டும் பெற்றுவிட்டது.

“வொர்க் ஆகுதான்னு ஆன் பண்ணி பார்க்கலாம்” என்று அர்ஜுன் சொல்ல தியாவின் உள்ளம் படபடத்தது.

அர்ஜுன் அதனை இயக்க முற்பட அது இயங்கவில்லை. சில முறைகள் அவன் முயற்சித்துவிட்டு,

“ஏதோ டெக்னிக்கல் பால்ட் இருக்கும்னு நினைக்கிறேன்… நாளைக்கு டெக் யாரையாச்சும் வர வைச்சு செக் பண்ணி பார்த்துரலாம்” என்றவன் சொல்லிவிட்டு செல்ல தியா கவலையுடன் தலையசைத்தாள்.

அவன் சென்றதும் அவள் கதவையடைத்துத் திரும்பினாள்.

அவள் உடைத்து நொறுக்கிய சிஷு இப்போது முழுவதுமாக அவள் முன்னே புத்துயிர் பெற்று நிற்கிறது. ஆனால் அவள் மகள் லித்து…

அவளால் மீண்டு வர முடியாது. இது போன்று மீண்டும் உருவமும் உயிரும் பெற்று எழ முடியாது.

இயந்திரத்திற்கும் மனிதனுக்குமான ஆகப் பெரிய வித்தியாசம் இதுதான். இயந்திரங்கள் அழிவதில்லை. மாறாக அது வேறு பரிமாணத்தை எடுத்துக் கொள்கின்றன.

மனிதன் அழிவில்லாத இனத்தைப் படைத்துக் கொண்டிருக்கிறான். அது அவன் அழிவைப் படைக்க கூடும். அவை பணியாளர்களாகவே இருந்துவிடாது. ராட்சஸர்களாக மாறும்.

மனித இனத்தை மொத்தமாக விழுங்கி தன் ஆளுமையை நிலைநிறுத்திக் கொள்ளும் காலம் கூட விரைவில் வரலாம்.

 ஒரு வகையில் இதெல்லாம் இன்று தொடங்கவில்லை. ஆண்ட்ராய்டுகளின் ஆதிக்கங்கள் தொடங்கிய காலக்கட்டத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போதே மனிதன் இத்தகைய சுய அறிவு படைத்த இயந்திரங்களிடம் தன்னை அடிமையாக்கிக் கொண்டுவிட்டான்.

இன்னும் மிச்சம் மீதியாக அவனிடம் எஞ்சி நிற்பது உணர்வுகள் மட்டும்தான். அதுவும் மறித்துக் கொண்டே வருகிறது.

நாளை மனிதனாகிய இயந்திரமும் இயந்திரமாகிய மனிதனும் மட்டுமே இப்பூமியில் சஞ்சரித்திருக்கக் கூடும். தியா ஆபத்தான வகையில் சென்று கொண்டிருக்கும் தன் எண்ணப்போக்கை நிறுத்திக் கொண்டாள்.

“பியூச்சரை பத்தி யோசிக்காம இருக்கிறதுதான் நல்லது” என்றபடி அவள் கண்களை மூடித் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் விழிகளைத் திறந்தாள்.

சிஷு ஒரு சிலை போல அவள் எதிரே நின்று கொண்டிருந்தது. அதன் பார்வை நேராக வெறித்து கொண்டிருக்க… எதிரே வந்து நின்ற தியா,

“நீ மட்டும் என் வாழ்க்கையில வராம இருந்திருந்தா என் மக என்னை விட்டுப் போயிருக்கமாட்டா… சூசைட் அட்டென்ட் பண்ணி இருக்கமாட்டா.

ஏன்… ஏன் அவள் சூசைட் அட்டென்ட் பண்ணா… அந்தக் கேள்விக்கான பதில் எனக்கு தெரியல… ஆனா உனக்கு தெரியும்… கண்டிப்பா உனக்கு தெரியும்.

பதில் சொல்லு சிஷு… பேசு… ஏன் அப்படியே ஸ்டேச்சுயூ மாதிரி நிற்குற… என் லித்துக்குட்டி ஏன் சூசைட் பண்ணிக்கிட்டான்னு சொல்லு… நான் தெரிஞ்சிக்கணும்” என்று அவள் கேட்க சிஷு அமைதியாக நின்றிருந்தது.

“நீ பேச மாட்ட… நீ வந்த வேலைதான் முடிஞ்சுருச்சே… என் பொண்ணோட உயிரைத்தான் நீ எடுத்துட்டியே… இனிமே உனக்கு பேச வேண்டிய அவசியம் இல்ல…

உனக்கு அன்புன்னா என்ன அம்மான்னா என்னன்னு எதுவும் தெரியாது… யூ ஆர் ஜஸ்ட் எ மிஷின்… இடியாட்டிக் மிஷின்.

உன்னை நம்பி என் பொண்ணை விட்டது என்னோட தப்பு… இட்ஸ் ஆல் மை ஃபால்ட்” என்று புலம்பித் தீர்த்த தியாவின் வேதனையும் வலியும் அந்தக் காதிருக்கும் இயந்திரத்திற்கு கேட்டதா என்று அவளுக்குத் தெரியவில்லை.

தலையைப் பிடித்துக் கொண்டு சோஃபாவில் அமர்ந்தவள், “நான் ஏன் இப்படி இருக்கேன்? வொர்க் ஆகாத மிஷின் கூட எல்லாம் பேசிக்கிட்டு… பைத்தியக்காரி மாதிரி” என்று அவதியுற்றாள். பின் அவள் தலையைக் கோதியபடி நிமிர சிஷுவின் விழிகள் சரியாக அவள் அமர்ந்திருந்த திசையை நோக்கி கொண்டிருந்தது.

தியா பதறிவிட்டாள். “ஓ மை காட்” என்றவள் ஜெர்க்காகி பின்னே நகர்ந்த ஒரு நொடியில் அதன் பார்வை பழைய நிலைக்குத் திரும்பியிருந்தது.

“ஒரு வேளை நம்ம கற்பனையா இருக்குமோ?” என்று யோசித்தவள் அதனுடைய இடையில் பொறுத்தப்பட்டிருந்த இயக்க ஸ்விட்ச்சை பார்த்தாள். அது அணைப்பில் இருந்ததாகவே காட்டியது. ஆனால் தியாவால் நம்ப முடியவில்லை.

சிஷு ஒரு தானியியங்கி இயந்திரம். அதனுடைய இயக்க ஸ்விட்சுகள் எல்லாம் வெறும் அவசியத்திற்காக மட்டுமே பொறுத்தப்பட்டிருக்கிறது.

மற்றபடி சிஷு தன்னைத்தானே இயக்கிக் கொள்ளும் திறன் வாயந்தது. ஒரு வேளை அதன் சுவிட்ச் அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும் தன்னுடைய எஜமானின் குரலை அங்கீகரித்து அது இயங்க தொடங்கும். அதேபோல தேவையற்ற நேரங்களில் அதுவாகவே தன்னை அணைத்துக் கொள்ளும்.

சிஷுவுடன் இந்த வீட்டில் தனியாக இருப்பதை நினனத்தால் இப்போது கொஞ்சம் பயமாக இருந்தது அவளுக்கு.

அர்ஜுனைத் துணைக்கு அழைக்கலாம் என்று தோன்றிய எண்ணத்தை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். படுக்கையறைக்குள் சென்று கதவைப் பூட்டிய போதும் அவளின் அச்சம் நீங்கவில்லை.

சிஷு அந்தக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வருவது போன்ற காட்சிகள் அவள் எண்ணத்திரையில் ஓடி அவளுக்குத் திகிலூட்டின.

இரவெல்லாம் இப்படி திகிலுடனே கழிய எப்படியோ விடியும் தருவாயில்தான் அவள் விழிகளை உறக்கம் தழுவியது. ஆனால் தியாவின் வீட்டுக் கதவு வெகுநேரம் திறக்கப்படாததில் அர்ஜுன் பயந்துவிட்டான்.

பலமுறை முயற்சித்தும் அவளின் அலைப்பேசியும் எடுக்கப்படவில்லை. அவளைத் தொடர்பு கொள்ள வேறேதனும் வழி இருக்கிறதா என்ற யோசித்து குழம்பி இறுதியாக அவளது வீட்டுக் கதவைத் திறக்கும் மாற்று அக்ஸஸ் கார்ட்டை வாங்கித் கதவை ஒரு வழியாகத் திறந்துவிட்டான்.

தியா படுக்கையில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகும் அவனுக்கு நம்பிக்கை வரவில்லை. அவள் உயிருடன்தான் இருக்கிறாளா என்ற அச்சத்துடன், “தியா” என்றபடி அவள் தோள்களைத் தொட அவளோ மிரண்டு கண் விழித்தாள்.

அர்ஜுன் அப்போதே நிம்மதி பெருமூச்சு விட்டான். தியா அர்ஜுனை அங்கே எதிர்ப்பார்க்கவில்லை.

“அர்ஜுன்… நீ இங்கே” என்றவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க,

“சாரி தியா… நீ ரொம்ப நேரம் ஃபோனை எடுக்கல… கதவைத் தட்டினாலும் திறக்கல… அதான் டூப்ளிகேட் கார்ட் வாங்கி” என்றவன் தயக்கத்துடன் நிறுத்த, “ஃபோன்” என்று யோசித்தவள்,

“அதை ஹாலில் வைச்சுட்டேன்… அதான்” என்றாள்.

அப்போதும் மாறாமல் அர்ஜுன் முகத்தில் படர்ந்திருந்த வேதனையை கவனித்த தியா,

“தற்கொலை பண்ணிட்டு இருப்பேனோன்னு நினைச்சு பயந்துட்டியா அர்ஜுன்?” என்று கேட்கவும் அவன் அதிர்ந்துவிட்டான். சமீப காலமாக விபத்துக்கள் மற்றும் இயற்கை மரணங்களை விட மனஅழுத்தம் காரணமாக செய்து கொள்ளப்டும் தற்கொலைகள்தான் அதிகமாக நிகழ்கின்றன.

அந்த பதட்டத்துடனும் தவிப்புடனும் அர்ஜுன் தியாவை பார்த்திருக்க,  

“கூல் கூல்… அந்த மாதிரி ஐடியா எல்லாம் இப்போதைக்கு இல்ல” என்றாள்.  

“என்ன தியா நீ?” என்று அர்ஜுன் அவளை கவலையுடன் ஏறிட்டான்.

“அதான்… அந்த மாதிரி ஐடியா எல்லாம் இப்போதைக்கு இல்லன்னு சொல்லிட்டேன் இல்ல… அப்புறம் ஏன் மூஞ்சியை இப்படித் தூக்கி வைச்சுட்டு இருக்க… போடா போய் காபி எடுத்துட்டு வா…  நைட்டெல்லாம் சரியா தூங்காததால தலை ரொம்ப பாராமா இருக்கு” என்றாள்.

“சரி… இரு… போய் போட்டு எடுத்துட்டு வரேன்” என்று அர்ஜுன் சென்றுவிட தியா தன் படுக்கையறை விட்டு வெளியே வந்தாள்.

சிஷு அதே  இடத்தில் ஒரு சிலை போல அசையாமல் நின்று கொண்டிருந்தது.

Rathi has reacted to this post.
Rathi

You cannot copy content