You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Thooramillai Vidiyal - Episode 14

Quote

14

சிவகுமாரும் சீதாவும் சோபாவில் சென்று அமரவும், ‘மாமாவும் மாமியும் எதுக்கு வந்திருக்காங்க’ என்ற தயக்கத்துடனே ஜீவா சென்று அவர்கள் அருகில் நின்றான்.

“கொஞ்சம் முக்கியமா பேசணும் ஜீவா... அம்மாவையும் கூப்பிடு” என்று சிவகுமார் உரைக்க, ஜீவா ஆச்சரியமாகப் பார்த்தான். அவருக்கும் அம்மாவிற்கும் சுத்தமாக பேச்சு வார்த்தையே இல்லை. எதுவாக இருந்தாலும் அவனிடம்தான் இருவருமே சொல்லி மற்றவரிடம் சொல்லச் சொல்வார்கள்.

இன்று என்னவானது என்று அவன் குழம்ப, “என்ன நின்னுட்டு இருக்க... அம்மாவை கூட்டிட்டு வா” என்று அழுத்தி சொல்ல, அவர்கள் குரல் கேட்டு செல்வியே வெளியே வந்தார். சித்ராவும் அம்மாவின் முந்தானையைப் பிடித்தபடி  பின்தொடர்ந்து வந்தாள்.

“செல்வி வா... வந்து  உட்காரு” 

என்றும் இல்லாத திருநாளாக மாமி அம்மாவை உரிமையாக அழைக்க, ஜீவா புரியாமல் பார்த்தான்.

மகன் அருகே வந்து நின்ற செல்வி, ‘என்னடா விஷயம்’ என்று கண்ணசைவால் கேட்க, அவன் தெரியாது என்பது போல உதட்டைப் பிதுக்கினான்.

“ஜீவா உட்காரு... அம்மாவையும் உட்கார சொல்லு” என்று சிவகுமார் கூற செல்வி உட்கார்ந்தார். ஜீவாவும் அமர எத்தனிக்கும் போது சித்ரா, “ஜீவா வா... நம்ம உள்ளே போலாம்” என்று கையை இறுக பிடித்துக் கொண்டாள்.

“போலாம் க்கா...  மாமா கிளம்பனதும் போலாம்... நீயும் உட்காரு” என அவள், “உஹும்” என்று முரண்டு பிடித்தாள்.

“சரி வா... நான் உனக்கு ரூமுக்குள்ள பாட்டு போட்டு விடுறேன்” என்று அழைத்துச் சென்று அவளை சமாதானம் செய்து பாட்டு போட்டுவிட்டுத் திரும்பிய போது, 

“இந்த வீட்டை விற்க உனக்குச் சம்மதமா செல்வி” என்று  மாமி அவன் அம்மாவிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஜீவா அதிர்ந்து நின்றுவிட்டான்.

பாட்டி இருந்த வரைக்கும் இந்த வீட்டை விற்பது பற்றிய பேச்சே வந்ததில்லை. அவர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று தெரிந்துதான் இந்த பேச்சை மாமாவும் எடுக்காமலிருந்திருக்க வேண்டும் என்று யோசித்தவன் விழிகள் ஒரு நொடி அந்த வீட்டைச் சுற்றி வளைய வந்தன.

அதேசமயம் சிவகுமாரும், “நீ என்ன செல்வி சொல்ற?” என்று தங்கையிடம் வினவினார்.

தன் மகனுக்குப் அவர் மகளை கொடுக்கவில்லை என்று காரணத்தால் இன்று வரை தமையனிடம் செல்வி முகம் கொடுத்துப் பேசுவதில்லை. சிவகுமாரும் இதுதான் சாக்கு என்று தங்கையிடம் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இன்று காரியம் ஆக வேண்டுமே. ஆதலால் அவரே தங்கையிடம் கேட்க, ஜீவா தன் அம்மா என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வமாக எதிர்பார்த்தான்.  

 செல்வியோ சிறு தயக்கமில்லாமல், “சரிங்க அண்ணா... வித்துடுங்க” என ஜீவாவிற்கு இன்னும் அதிர்ச்சி அதிகமானது.

அவன் பிறந்தது வளர்ந்தது எல்லாமே இந்த வீட்டில்தான்.  இந்த வீட்டைக் கடந்த ஓர் உலகமே அவனுக்கு இதுவரையில் இல்லை என்று சொல்லலாம். ஒரு வகையில் அதுவே அவனுக்கு நிறைய மனவுளைச்சலையும் தந்திருக்கிறது.

ஆனால் இந்த வீட்டை மொத்தமாக விட்டுப் போவதைப் பற்றி எல்லாம் அவன் யோசித்ததே இல்லை.

இப்போது வீட்டை விற்பது பற்றி நினைக்கையில் கொஞ்சம் கலக்கமாக இருந்தது.

அப்போது சிவகுமார்,  “ஜீவா... என்ன நிற்குற... வா... உட்காரு” என்று அவனை அழைத்து அமர வைக்க,

“நான் காபி எடுத்துட்டு வரேன்” என்று செல்வி அங்கிருந்து நகர்ந்துவிட, “ஏன் மாமா திடீர்னு வீட்டை விற்கணும்கிறீங்க” என்று ஜீவா சந்தேகத்துடன் விசாரித்தான். 

“கொஞ்சம் பணம் தேவை இருக்கு... பிஸ்னஸ்லயும் சில இன்வஸ்ட்மென்டடுக்கு தேவைப்படுது” என்றவர் மேலும்,

“அதுவும் இல்லாம இந்த பழைய வீட்டை இதுக்கு மேல வைச்சு இருந்தாலும் பிரயோஜனம் இல்ல... வர்ற பணத்துல நீயும் அம்மாவும் கூட புதுசா ஒரு வீடு வாங்கிக்கலாம்” என்றவர் சொல்லி கொண்டிருக்கும் போதே,

“ஆமா... கொளத்தூர் பக்கம் எல்லாம் டபுள் பெட்ரூம் பிளாட்டு முப்பது லட்சம்தான்” என்று மாமி இடையில் கருத்து கூறவும் சிவகுமார் மனைவியை அமைதியாக இருக்கச் சொல்லிக் கண்ணசைத்தார் .

ஜீவாவிற்கு புரிந்துவிட்டது, “வீடு விற்க பார்ட்டி ரெடியா?” என்று கேட்க சிவகுமார் தயங்கிவிட்டு,

 “ரெடிதான்... உங்களுக்கு ஓகேனா... எப்ப வேணா ரெஜிஸ்டிரேஷன் வைச்சுக்கலாம் ஜீவா” என்றதும்,  

“வேறு வீடு பார்த்து திங்க்ஸ் எல்லாம் ஷிப்ட் பண்ண வேண்டாமா? அதுக்காச்சும் கொஞ்சம் டைம் கொடுங்க” என்று அவன் கடுப்பில் கூற,  

“ஏங்க... நம்ம வீட்டு கீழ் போஷன் காலியாதானே இருக்கு... வேணா இப்போதைக்கு அங்கேயே இவங்க ஷிப்ட் ஆகிடட்டும்” என்ற மாமி மாமாவிடம் சொல்ல, ஜீவாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

விழா, பண்டிகை என்றால் கூட வீட்டு பக்கம் கூப்பிட மாட்டார்கள். இன்று அவர்கள் வீட்டிற்கே குடி வர சொல்கிறார்கள்.

இது நிச்சயம் பாசம் இல்லை. இந்த வீட்டை விற்பதற்கான அவசரம் என்று ஜீவா நினைத்திருக்கும் போது செல்வி காபி கொண்டு வந்து நீட்டினார்.

காபியைப் பார்த்ததும்தான் காபி ஷாப்பிற்கு செல்ல வேண்டியது நினைவு வர,

‘அட கடவுளே... விஜி வெயிட் பண்ணிட்டு இருப்பாங்களே?’ என்று பதறியவன் பாக்கெட்டில் இருந்த செல்பேசியை  எடுத்து ஏதாவது குறுந்தகவல் வந்திருக்கிறதா என்று பார்த்தான்.

ஆனால் அப்படி எதுவும் வரவில்லை. ஒரு வேளை அவள் வந்திருக்க மாட்டாளோ? இல்லை வந்துவிட்டுக் காத்திருக்கிறாளோ என்று யோசித்தான். 

“என்ன ஜீவா... என்னாச்சு எதாவது பிரச்னையா?” என்று  சிவகுமார் அவன் முகமாறுதலை பார்த்து கேட்க, “அதெல்லாம் இல்ல” என்று மறுத்தவன் தன் பதற்றத்தை மறைத்துக் கொண்டு அந்தக் காபியைப் பருகி முடிக்க,

“அம்மா பீரோல இருக்க வீட்டு பத்திரத்தை கொஞ்சம் எடுத்துட்டு வா” என்றார்.

“தோ எடுத்துட்டு வர்றேன் மாமா” என்றவனுக்கு இவர்கள் எப்போது கிளம்புவார்கள் என்ற யோசனை மட்டும்தான்.

ஆனால் சிவகுமார் சாவகாசமாக பத்திரத்தை வாசிக்க ஆரம்பித்தார். வாசித்து முடித்ததும் கிளம்பி விடுவார் என்று பார்த்தால் யாரோ ஒரு வழக்கறிஞரை வீட்டிற்கு வரச் சொல்லி செல்பேசியில் அழைக்க, ஜீவாவிற்கு ஐயோ என்றாகிவிட்டது.

தனக்கு என்று எந்த நல்லதும் நடக்காது என்று உள்ளூர பொறுமி கொண்டவன் இந்த சூழ்நிலையில் கிளம்ப முடியாது என்று தோன்றவும், 

தேவையில்லாமல் தனக்காக அவளை காத்திருக்க வைக்க வேண்டாம் என்று எண்ணி, ‘சாரி... வர முடியல’ என்ற குறுந்தகவல் போட்டுவிட்டான்.

சிவகுமாரோ அதன் பிறகும் இரண்டு மணி நேரம் இருந்து பேசி விட்டுதான் கிளம்ப எத்தனித்தார். 

“சாப்பிட்டு போக சொல்லுடா” என்றார் செல்வி,

ஜீவாவிற்கு கடுப்பில் இருந்தாலும், “சாப்பிட்டு போங்க மாமா” என்று கூற,

“கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு கிளம்பணும்” என்று மறத்து விட்டனர். ஆனால் அதன் பிறகு சீதா செல்வியின் கையை பிடித்து ஏதோ பேசி விட்டுச் சென்றார்.

‘கூட பொறந்த அண்ணன்கிட்டயே  பேசாதவங்க... என்ன புதுசா அண்ணிகிட்ட உருகுறாங்க’ என்று நடந்தவற்றை எல்லாம் விசித்திரமாகப் பார்த்திருந்த ஜீவா அவர்கள் கார் வாயிலை கடந்ததும், 

“மாமிகிட்ட என்ன பேசுனாங்க உன்கிட்ட” என்று செல்வியிடம் ஜீவா விசாரிக்க,

“அது ஒரு விஷயம்... உன்கிட்ட அப்புறமா சொல்றேன்” என்று விட்டு விஷயத்தை சொல்லாமலே அவர் நழுவி விட, அவனுக்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை.

‘என்னவோ’ என்று பெருமூச்செறிந்த ஜீவாவின் கவனம் மீண்டும் செல்பேசியில் விழுந்தது. விஜியிடமிருந்து ஏதாவது பதில் வந்திருக்கிறதா என்று பார்த்தான். ஆனால் எதுவும் வரவில்லை.

அவன் மீண்டும் சாரி என்று அனுப்ப அதற்கும் அவளிடம் பதில் இல்லை.

'கோபமா? உண்மையிலேயே தவிர்க்க முடியாத சூழ்நிலையில மாட்டிக்கிட்டேன் பா... வர முடியல... சாரி’ என்று அவன் அடுத்து அனுப்பிய  தகவலுக்கும் அவளிடம் பதில் இல்லை.

இனி தன்னிடம் பேசவே மாட்டாங்களா? என்று அவன் உள்ளம் தவித்துப் போனது. அவள் பதில் போட்டிருக்கிறாளா என்று பார்த்துப் பார்த்து ஒரு பக்கம் அவன் மனம் ஏமாந்து போனது .

‘நமக்குனு எந்த நல்லதும் நடக்கவே நடக்காது போல...  இதுவும் அவ்வளவுதானா?’ என்று சுயபச்சாதாபத்துடன் புலம்பிக் கொண்டே அவன் உறங்கிப் போனான்.

காலை விடிந்ததும் எப்போதும் போல அடித்து பிடித்து கிளம்பி பேருந்தில் ஏறி அமர்ந்தவன், அப்போதுதான் தன் செல்பேசியில் ஜீவிதா அனுப்பிய குறுந்தகவலைக் கவனித்தான்.

‘உங்களுக்கு என்கிட்ட பேசணும்னு தோணுச்சுனா கால் பண்ணுங்க’ என்று அவள் தன் செல்பேசி எண்ணையும் சேர்த்து அனுப்பியிருக்க,  ஒரு பக்கம் மனம் சந்தோஷம் கொண்டாலும் மறுபுறத்தில் ஒரு சிறிய குறுகுறுப்பும் எட்டிப் பார்த்தது.

ஆதலால் அவன், “எனக்கும் உங்ககிட்ட பேசணும்னு ரொம்ப ஆர்வமா இருக்கு...  இன்னும் கேட்டா நேத்தோட நம்ம உறவு முடிஞ்சிருச்சோனு நினைச்சு நான் ரொம்ப வருத்தப்பட்டேன்

ஆனா இன்னைக்கு பார்த்தா என்னை நம்பி நீங்க உங்க நம்பரை அனுப்பி இருக்கீங்க... தேங்க்ஸ்... தேங்க் யூ ஸோ மச்

ஆனா நான் உங்களுக்கு கால் பண்ண போறது இல்ல... நம்ம முதல் சந்திப்பும் பேச்சும் நேர்ல இருக்கணும்னு நான் விரும்புறேன்” என்று அனுப்பியதைப்  படித்து ஜீவிக்கு வியப்பாக இருந்தது.

‘எப்படா ஒரு பொண்ணு நம்பர் கொடுப்பானு காத்திருக்காங்க... ஆனா ஜீவா நம்ம நம்பர் கொடுத்தும் பேசல.. ஹி இஸ் ரியலி எ ஜெம்’ என்று மனதிற்குள் அவனை மெச்சியவள்,

“சரி எப்போ மீட் பண்ணலாம்னு நீங்களே டேட் அன் டைம் முடிவு பண்ணிட்டு சொல்லுங்க ஜீவா” என்றதும் அவன், “சரி ஓகே” என்று பதில் அனுப்பினான்.

ஆனால் அந்த வாரம் அறிவியல் மாணவர்களுக்குப் பயிற்சி தேர்வுகள் வந்துவிட்டது. கூடவே வீடு விற்கும் விஷயமும் சேர்ந்து கொண்டதில் அவனுக்கு அந்த வார முழுக்க அலைச்சலாகவே இருந்தது.

இந்த நிலையில் அவன், “வீட்டுல ஒரே பிரச்னை விஜி...ஸ்கூல வேற பிராக்டிக்கல் எக்ஸாம்... இந்த வாரம் ரொம்ப டைட் ஷெட்யூல்தான்” என்று ஜீவிக்கு அனுப்ப,

“இட்ஸ் ஓகே” என்று புரிந்து கொண்டாள். அதன் பிறகு இரண்டு நாளைக்கு ஜீவாவிடமிருந்து எந்தத் தகவலுமே இல்லை.

இதற்கிடையில் ஜீவிதாவிற்கு அந்த மாதச் சம்பளப் பணம் வந்துவிட முன்தொகை செலுத்தி புது பைக் ஒன்றை வாங்கினாள்.

மிச்சத் தொகையை மாத மாதம் கடனாகச் செலுத்த முடிவு செய்தவள் டெலிவிரி எடுத்த புது வண்டியைச் சந்தோஷமாக அலுவலகத்திற்கு ஓட்டி வந்தாள்.

அதுவும் அவள் அலுவலகத்திற்கு உள்ளே அல்லது வெளியே செல்லும் போது ஜீவா வீட்டைப் பார்க்காமல் கடக்கவே மாட்டாள்.

இன்று அதே போல அவள் திரும்பி பார்க்க, அவன் வீட்டு வாசலில் ஜே ஸி பி வண்டி ஒன்று நின்றிருந்தது. கூடவே அவள் மேலதிகாரி உஷாராணி வேறு அங்கே நிற்க அவளும் அங்கே வண்டியை நிறுத்துவிட்டாள்.

“குட் மார்னிங் மேடம்... நீங்க...” என்று அவள் பேசத் துவங்குவதற்கு முன்பாக,

“ஆ... வா ஜீவிதா...  என் ரூம்ல ஒரு பைல் இருக்கும் எடுத்துட்டு வர்றியா... அப்படியே ராஜன் இருந்தா அவனை அழைச்சுட்டு வா” என்று வந்ததும் வராததுமாக அவளுக்கு வேலை கொடுத்தார்.

என்ன ஏதென்று புரியாமல் அவள் வண்டியை நிறுத்திவிட்டு மாடிக்குச் சென்று அவர் சொன்ன கோப்பினை எடுத்து கொண்டு கூடவே ராஜனை அழைத்து வந்தாள்.

உஷா அவள் தந்த கோப்பினை வாங்கி அலசிவிட்டு அந்த ஜேசிபி ஓட்டுநரிடம் சென்றவர், “நான் சொன்ன மாதிரி க்ளீனா இடிச்சுடணும்... ராஜன்... நீ இங்க நின்னு பார்த்துக்கோ” என்று விட்டுச் செல்ல,

‘என்னது... வீட்டை இடிக்க போறாங்களா’ என்று ஜீவி அதிர்வுற்றாள்.

அதேநேரம் அந்த புல்டோசர் பெரும் சத்தத்துடன் முன்னே நகர்ந்தது. அப்போது மாடியிலிருந்த பூந்தொட்டிகளை எல்லாம் பார்த்த ஜீவிதா பதறி கொண்டு, “ஹலோ ஹலோ நிறுத்துங்க” என்று சத்தமிட, அந்த ஓட்டுநர் நிறுத்திவிட்டார்.

“ஆமா எதுக்கு நிறுத்த சொன்ன?” என்று ராஜன் இடையில் வந்து  நிற்க,

“இல்ல மேலே இருக்க அந்த தொட்டிகளை எல்லாம் எடுக்க வேணாமா?” என்றாள்.

“அதெல்லாம் நம்ம பிரச்னை இல்ல... இடிக்கணும்னு சொல்லிட்டா இடிச்சு தள்ளிடணும்... அவ்வளவுதான்” என்று அவன் அசட்டையாகக் கூற,

  “எவ்வளவு நேரம் ஆக போகுது... அந்தத் தொட்டி எல்லாம் எடுத்து வைச்சுட்டு அப்புறம் இடிச்சுக்கலாம் இல்ல” என்று அவள் சொன்னாள். 

“இதெல்லாம் வைச்சு வளர்த்தவனுக்கே கவலை இல்லையாம்... நமக்கு என்ன வந்துச்சு” என்று சொன்ன ராஜன், “ஏம்பா  என்ன வேடிக்கை  பார்த்துட்டு இருக்க... இடி” என்று கட்டளையாகக் கூற,

“இல்ல இல்ல  இடிக்காதீங்க” என்று ஜீவிதா மீண்டும் தடுத்தாள்.

“என்னங்க... நீங்க இடிங்குறீங்க... அவங்க இடிக்காதங்குறாங்க... இப்போ இடிக்குறதா வேண்டாமா? கரெக்டா சொல்லுங்க” என்று அந்த ஓட்டுநர் குழப்பத்துடன் கேட்க,

“மேடம் என்கிட்டதான் இந்த வேலையை ஒப்படைச்சிட்டு போனாங்க... நீ தேவை இல்லாம தலையிடாத” என்று ஜீவிதாவிடம் காட்டமாக உரைத்த ராஜன்,

“நான்தான் இங்க இன்சார்ஜ்... நான் சொல்றதைத்தான் நீ கேட்கணும்” என்று  ஓட்டுநரிடம் அதிகாரமாகக் கூறி இடிக்கச் சொன்னான்.

அந்த நொடியே அப்பெரிய வாகனத்தின் முன் பாகம் முதல் மாடியைத் தகர்த்துவிட, அந்தத் தொட்டிகள் எல்லாம் யாவும் சரிந்து விழுந்து நொறுங்கின.

அந்த காட்சியை பார்த்து ஜீவிதா கண்கள் கலங்கி நிற்கும் போது,

“அறிவிருக்காயா... நீ பாட்டுக்கு செடிகளை எல்லாம் இடிச்சு தள்ளிட்டு இருக்க” என்று ஒரு குரல் சீறலாக அவள் பின்னிருந்து ஒலித்தது.

யாரென்று திரும்பிப் பார்த்த ஜீவிதாவிற்கு பேரதிர்ச்சி.

அவள் முன்னே நின்றிருந்த ஜீவாவின் விழிகள் அவள் கழுத்திலிருந்த லிங்கம் கட்டுமான நிறுவனத்தின் அடையாள அட்டையைப் பார்த்ததுமே எரிச்சலானது.

இதற்கெல்லாம் பொறுப்பாளி  இவள்தான்  என்று தவறுதலாக எண்ணிக் கொண்டவன்,

“உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா... மேலே அவ்வளவு செடிங்க இருக்கு... நீங்க பாட்டுக்கு இடிச்சு தள்ள சொல்லிட்டு இருக்கீங்க... நான்தான் இன்னைக்குள்ள காலி பண்ணி தர்றேன்னு சொன்ன இல்ல” என்று பொரிந்து தள்ள, அவள் விக்கித்து நின்றாள்.

மீளா அதிர்ச்சியில் நின்றவளை ஆதங்கமும் கோபமுமாக  அவன் தொடர்ந்து திட்டிக் கொண்டிருக்க, அவனுக்கு எப்படி தன்னிலையை விளக்குவது என்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அவள் எதிர்பார்த்த சந்திப்பு இதுவல்லவே?

You cannot copy content