You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Thooramillai Vidiyal - Episode 15

Quote

15

லிங்கம் டவர்ஸ். சந்திரசேகர், ராஜன், ஜீவிதா மூவரும் உஷாராணியின் அறையில் நின்றிருந்தனர்.

ராஜனையும் தீவிரமாக நோக்கிய உஷா, “இடிக்குற வேலையை மட்டும்தானே பார்க்க சொன்னேன்... ஏன் தேவை இல்லாத பிரச்னை எல்லாம் இழுத்து விட்டுட்டு வந்து இருக்கீங்க” என்று கண்டனமாகக் கேட்க,

“நானா ஒன்னும் பிரச்னைக்கு போல மேடம்... அந்த ஆளுதான்” என்று ராஜன் முடிப்பதற்குள்,

“இல்ல... முதல பிரச்னை பண்ணது இவர்தான்” என்று ஜீவிதா அவன் பக்கம் திருப்பினாள். அவளால் தாங்க முடியவில்லை. அதுவும் அவள் கண் முன்பாகவே ஜீவாவை இழுத்து கீழே தள்ளிவிட்டான்.

ராஜசேகர் மட்டும் அந்த நேரத்தில் இடையில் வந்திருக்காவிட்டால் அங்கேயே வைத்து அவன் கன்னம் சிவக்க ஒன்று கொடுத்திருப்பாள்.

அதேசமயம் ஜீவி புறம் திரும்பிய உஷா, “ஆமா... நீ ஏன் அங்க நின்னுட்டு இருந்த... பைலை எடுத்து கொடுத்துட்டு ஆபிஸ் போக வேண்டியதுதானே” என்றார். 

“அது வந்து மேடம்” என்ற அவள் யோசிக்க அதற்குள் ராஜன், “எல்லா பிரச்னைக்கு காரணமே இவங்கதான் மேடம்” என்றான்.

“என்ன... நானா?” என்று எரிச்சலுடன் அவன் புறம் திரும்பியவள்,

“பின்ன அந்த ஆளு உன்கிட்டதானே எகிறிட்டு இருந்தான்... நான் உனக்கு சப்போர்ட் பண்ணலாம்னுதான் அவன்கிட்ட சண்டைக்கே போனேன்” என்றான்.

“நான் உங்களை சப்போர்டுக்கு கூப்பிட்டேனா?” என்று ஜீவி கேட்க பதிலுக்கு ராஜன் அவளை முறைக்கும் போதே,“இரண்டு பேரும் முதல நிறுத்துங்க” என்று உஷா அதட்டவும் இருவரும் அமைதியாகிவிட்டனர்.

மூச்சை இழுத்து விட்டு கொண்டவர், “சரி நடந்தது நடந்து போச்சு... போய் வேலைய பாருங்க?” என்று அவர்களை அனுப்பி விட்டு ராஜசேகர் புறம் திரும்பி,

“என்ன சார் இரண்டு பேரும் உங்க டீம்தானே...  இப்படி சண்டை போட்டுக்குறாங்க” என்று அவரையும் நன்றாக காய்ச்சிவிட்டார்.

“சாரி மேடம்... இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறேன்” என்று விட்டு அவமானத்துடன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவர் வெளியே வர,

“இங்க இவ்வளவு பேச்சு பேசுற நீ... ஏன் அந்த ஆள் திட்டும் போது மட்டும் அப்படியே வாயை மூடிட்டு இருந்த?” என்று ராஜன் ஜீவிதாவிடம் கடுகடுத்தான்.

“தட்ஸ் நன் ஆப் யுவர் பிஸ்னஸ் ஓகே” என்று பதிலுக்கு அவளும் ஏறினாள்.

“உனக்கு எல்லாம் சப்போர்ட் பண்ண வந்தேன் பாரு... என்னை செருப்பாலேயே அடிச்சுக்கணும்”

“அது உங்க இஷ்டம்” என்று ஜீவி சொல்ல, அந்தக் காட்சியைப் பார்த்து இன்னும் எரிச்சலான ராஜசேகர்,

“அவ்வளவு தூரம் மேடம் சொல்லியும் நீங்க இரண்டு பேரும் வெளியே வந்து சண்டை போட்டுட்டு இருக்கீங்களா” என்று சத்தமிட்டார். 

“இல்ல சார் ராஜன்தான் ஆரம்பிச்சது” என்று ஜீவிதா அவன் புறம் கை நீட்ட, “ஐயோ நான் இல்ல சார்... ஜீவிதாதான்” என்றவன் அவள் புறம் நீட்டினான்.  

“இப்போ இரண்டு பேரும் உங்க சீட்டுக்கு போறீங்களா இல்ல நான் உங்க சீட்டை கிழிக்கட்டுமா?” என்று அவர் மிரட்டவும், அமைதியாக இருவரும் தங்கள் இருக்கைகளுக்குச் சென்றனர்

இருப்பினும் ஜீவிதாவால் சுலபத்தில் அந்தச் சம்பவத்திலிருந்து மீண்டு வர முடியவில்லை.

 ஜீவாவின் கோபத்தை அவள் ஒரு சாரியில் முடித்திருக்கலாம். ஆனால் அதற்குள் ராஜன் உள்ளே புகுந்து பிரச்னையை வளர்த்துவிட்டான்.

அவன் பேசியதில் சீற்றமான ஜீவா அவன் சட்டையைப் பிடிக்கப் போக, ராஜன் அவனைத் தள்ளிவிட்டான்.

அவள் பதறி போய் அவனைத் தூக்கச் சென்றாள். ஆனால் அதற்குள் கூட்டம் கூடிவிட யாரோ ஒரு நபர் ஜீவாவின் கையை பிடித்துத் தூக்கிவிட்டார். எல்லாமே அவள் கையை மீறிப் போய்விட்டது.

அவள் முன்னே சென்று அவனிடம், “ஐம் சாரி” என்றாள். ஆனால் அந்த வார்த்தை அவன் காதில் விழுந்ததாக கூட தெரியவில்லை.

அங்கிருந்து நகர்ந்தவன் விழிகள் தரைமட்டமாகிக் கொண்டிருந்த தன் வீட்டை வலியுடன் பார்த்து கொண்டே கடந்தன. அந்த காட்சியை இப்போது நினைத்தாலும் கண்களில் கண்ணீர் சுழன்றது.

“என்னாச்சு ஜீவிதா?” என்று அப்போது ராஜசேகர் வந்து அவள் முன்னே நின்றதை கண்டு அவசரமாகத் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். இந்த குழப்பத்தில் எதிரே இருந்த தன் மடிக்கணினியைக் கூட அவள் இயக்காமலிருப்பதைக் கண்டவர்,

 “நீ என் ரூமுக்கு வா... பேசணும்” என்று கறாராகக் கூறினார்.

என்ன சொல்ல போகிறார் என்ற சிந்தனையுடன் உள்ளே சென்று அவர் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

 “அந்த ஜீவாவை உனக்கு எத்தனை நாளா தெரியும்?” என்று அவர் கேட்க அவளுக்கு பதற்றமானது.

எப்படி கண்டுபிடித்தார்? இப்போது என்ன சொல்வது என்றவள் ஒரு நொடி திகைத்துப் பின் ஒருவாறு சமாளித்துவிட்டாள்.

“ஒன்னு இரண்டு தடவ... பஸ்ல போகும் போது வரும் போதும் பார்த்துப் பேசி இருக்கோம் சார்... அவ்வள்வுதான்”

அவளை நம்பாமல் பார்த்தவர், “அதுக்காகவா நீ உனக்காக சப்போர்ட் பண்ண ராஜனை விட்டு கொடுத்து பேசுன” என்று கேட்கவும் அவள் கோபமாகிவிட்டாள்.

“உங்களுக்கு தெரியாது சார்... நான் அந்த ராஜன்கிட்ட சொன்னேன்... அந்த தொட்டி எல்லாம் எடுத்துட்டு பிறகு இடிச்சுக்கலாம்னு... ஆனா கேட்கவே இல்ல”

“இன்னைக்கு இடிக்க போறோம்னு... ஜீவாவுக்கு ஏற்கனவே இன்பார்ம் பண்ணியாச்சு... அவன் அதெல்லாம் எடுக்காதது நம்மோட தப்பா” என்று அவரும் கோபமாக கேட்க,  அவள் முகம் சுருங்கிவிட்டது.

அவர் மேலும், “நீ அந்த ஜீவாவை பத்தி தெரியாம அவன்கிட்ட பழகி இருக்க” என்று கூற அவள் அதிர்ச்சியானாள்.

“லிங்கம் டவர்ஸ் கட்ட ஆரம்பிச்சதுல இருந்தே அவனுக்கும் நம்ம கம்பனிக்கும் நிறைய பிரச்னை... உனக்கு தெரியுமா... கட்டி முடிச்ச நம்ம ஆபிஸ் படிக்கட்டை இடிக்க வைச்சுட்டான்

என்ன... ஒரே ஒரு இஞ்ச் அவன் வீட்டுப்பக்கம் தள்ளி வந்திருச்சு... அந்த பழைய வீட்டை நம்ம முதலாளி அப்பவே விலைக்கு கேட்டாரு... அந்த கெழவி... கொடுக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்துச்சு” என்று கடுப்பாக சொன்னவர் இறுதியாக ஒரு வஞ்சப் புன்னகையுடன்,.  

“கடைசில என்னாச்சு... அந்த வீட்டை  நம்ம வாங்கிட்டோம் இல்ல” என்று அதிரடியாகக் கூறியதை அவள் அதிர்ச்சியுடன் நோக்கினாள்.

அப்படி எனில் ஜீவாவிற்கும்  இந்த நிறுவனத்துடன் முன்பே முட்டலும் மோதலும் இருந்திருக்கிறது. அதனால்தான் அவளின் அடையாள அட்டையைப் பார்த்ததும் அவன் அந்தளவுக்கு வெறுப்பை காட்டினான் போல.

தேவையே இல்லாமல் இவர்களுக்கு இடையில் தான் வந்து மாட்டி கொண்டோம். இப்போது இந்த பிரச்னையை எப்படிச் சரி செய்வது என்றுதான் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. 

 இதெல்லாம் தெரிய வந்ததில் அவள் மனநிலை இன்னும் மோசமானதுதான் மிச்சம். வேலையில் கவனம் செலுத்தவே முடியவில்லை. ஆதலால் அனுமதி கேட்டு விரைவாக அன்று கிளம்பிவிட்டாள்.

ஜீவாவின் வீடு முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டிருந்ததை வண்டியில் செல்லும் போது கவனித்தவள் உள்ளம் கலங்கியது. சொந்தமில்லாத தனக்கே இப்படி என்றால் அங்கே வாழ்ந்த ஜீவாவிற்கு எப்படி இருக்கும்?

அவ்வளவுதான். இந்த வீடு போலத் தங்கள் நட்பும் முறிந்துவிட்டது? தடம் தெரியாமல் அழிந்துவிட்டது என்று மனம் நொந்து அவ்விடத்தை அவள் கடக்க நேரிட்ட போது அந்த மண்ணுக்கும் கற்களுக்கு இடையில் ஒற்றை மஞ்சள் ரோஜா பூ உயிர்ப்புடன் தலையை நீட்டிக் கொண்டிருந்ததை பார்த்தாள். வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த இடிபாடுகளுக்கு இடையில் நடந்து இருந்த செடியை கையில் எடுத்தாள்.

 தொட்டி உடைந்திருந்த போதும் செடிக்கு ஒன்றும் சேதாரம் இல்லை. அப்போதுதான் அந்த தொட்டியில், ‘அன்பு தோழி விஜிக்கு’ என்று எழுதியதைக் கண்டு வியப்புற்றாள்.

இதை அவன் தனக்குப் பரிசாகக் கொடுக்க வைத்திருந்தானா? அவளுக்கு அந்த நொடி பறக்காத குறைதான். துவண்டிருந்த அவள் மனம் பரவசமானது.

அத்தனை நேரமிருந்த வேதனை வலி யாவும் காணாமல் போக, உடனடியாகப் பக்கத்துக் கடையிலிருந்து ஒரு நெகிழி பையை கேட்டு வாங்கி வந்து அந்த செடியை அதற்குள் பத்திரப்படுத்தி எடுத்து வந்தாள்.

 வீட்டிற்கு வந்து சேர்ந்ததுமே பிளாஸ்டிக் பக்கெட் ஒன்றில் சிறிய ஓட்டையைப் போட்டு அந்த செடியை வைத்தாள்.

அதற்கு இன்னும் மண் தேவைப்பட, தன் அடுக்குமாடியின் பூங்காவிற்குச் சென்றவள் அங்கே செடிகள் நட்டிருந்த மண்ணை அள்ளி பையில் போட்டுக் கொண்டிருக்க, யாரோ அவள் தோளை தொட்டார்கள்.

அவள் பதறி திரும்பவும், “என்ன க்கா பன்றீங்க?” என்று புத்தகத்துடன் நின்றபடி லீலா கேட்டாள்.  

“நீயா... நான் யாரோனு பயந்துட்டேன்” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் மண்ணை அள்ளினாள்.

“செடி வைக்க போறீங்களா?” என்றவள் கேட்க,

“ஆமா” என்று அவள் தலையசைத்தாள். 

“என்ன செடி க்கா”

“ரோஜா செடி” 

“எனக்கு ரொம்ப பிடிக்கும் க்கா... எங்க வாங்கிட்டு வந்தீங்க?” என்று அவள் ஆர்வமாகக் கேட்க ஒரு வழியாக அள்ளி முடித்துவிட்டு எழுந்த ஜீவிதா,

“இல்ல பிரண்டோட கிப்ட்” என்ற போது அவள் முகத்தில் அப்படியொரு பிரகாசமான புன்னகை மிளிர்ந்தது.  

“ஓ” என்று புரிந்தவளாக லீலா புன்னகை செய்ய,

“படிக்கிற வேலைய பாருடி” என்று விட்டு அவள் முன்னே நடந்தாள்.

“யார் அந்த பிரண்டுன்னு அப்புறம் சொல்றீங்களா?” என்ற லீலாவின் குரலுக்கு திரும்பிய ஜீவிதா,

“எல்லாம் உனக்கு தெரிஞ்ச ஆளுதான்” என்றாள்.

“எனக்கு தெரியுமா? ஐயய்யோ யாருன்னு சொல்லிட்டு போங்க க்கா... எனக்கு மண்டையே வெடிச்சுடும்” என்று லீலாவின் கதறலை காதில் வாங்காமல் வீட்டிற்கு வந்துவிட்டாள்.

அவள் அந்தச் செடியுடன் இந்த மண்ணையும் கொட்டி அதனை நட்டு முடித்து தண்ணீரை ஊற்றினாள்.

துவண்ட நிலையிலிருந்த அந்த மஞ்சள் ரோஜா லேசாக தலையை நிமிர்த்தியது.

அதன் அருகே சென்றவள் எதிர்பார்ப்புடன்,

“நீ பிழைச்சுக்குவதானே... பிழைச்சுக்கோ ப்ளீஸ்... எனக்காக” என்று இறைஞ்சினாள். அதற்கு அவள் பேசும் மொழி புரிந்ததோ தெரியாது.

ஆனால் அவள் உணர்வில் வடியும் காதல் மொழி அதற்கு நிச்சயம் பிடிபட்டிருக்கும். அந்த நொடியிலிருந்து பழக்கமில்லாத அந்த இடத்திலும் மண்ணிலும் தன்னை பொருத்திக் கொள்ள அது போராடப் போகிறது.

அன்றைய நாள் அவளுக்குத் தந்த மிக மோசமான அனுபவங்களை அந்தச் செடி மாற்றி அமைத்தது. ஜீவாவிற்கும் அவளுக்குமான நட்பு மொத்தமாக முறிந்து விடவில்லை என்பதற்கான நம்பிக்கையை அது அவளுக்குக் கொடுத்திருந்தது.

அதன் பின் சூடாக நூடுல்ஸ் செய்து சாப்பிட்டவள் செல்பேசி எடுத்து ஜீவாவிற்கு தகவல் அனுப்பலாமா என்று வெகுநேரம் யோசித்துப் பின், “ஜீவா பேசலாமா?” என்று அனுப்பி வைத்தாள்.

அவன் பதில் போடுவான் என்று வெகுநேரம் அந்த திரையை வெறித்துக் காத்திருந்தவளுக்கு ஏமாற்றமே மிச்சமானது..

‘ரிலாக்ஸ் ரிலாக்ஸ்’ என்று தன்னை தானே அமைதிப்படுத்திக் கொண்டவள், ‘அவன் இப்போ என்ன மனநிலையில் இருக்கிறானோ என்னவோ... அவனா பேசும் போது பார்த்துக்கலாம்’ என்று விட்டு சோபாவில் அப்படியே சாய்ந்து கொண்டாள்.

அவள் கண்களை உறக்கம் தழுவிய சில நிமிடங்களில் காற்றுடன் மழையடிக்கும் சத்தம் கேட்டது. திறந்திருந்த ஜன்னல் வழியாகச் சாரல் உள்ளே வீசியது.

கண்களைத் திறந்தவள் உடனடியாக பால்கனிக்கு சென்று அந்தச் செடியைப் பார்த்தாள். உக்கிரமாக அடித்து ஊற்றும் மழைக்கு அந்த சிறிய செடி தாக்குபிடிக்குமா என்று பயந்து அதனைக் கொண்டு வந்து வீட்டிற்குள் வைத்தாள்.

 சில நிமிடங்களில் மழை நின்றுவிட்டது. மின் இணைப்பும் போய்விட்டது. கூடவே அவள் தூக்கமும் போய்விட்டது.

 

பாட்டு கேட்க நினைத்து செல்பேசியை எடுக்க,  அதில் சுத்தமாக சார்ஜ் தீர்ந்து போயிருந்தது.

‘வந்ததும் சார்ஜ் போட்டிருக்கணும்’ என்றவள் சோபாவில் படுக்க, இன்று நடந்த சம்பவம் எல்லாம் அப்படியே காட்சிகளாக ஓடின.

மெதுவாக அவள் கண்களை மூடிக் கொள்ள, காதுகளில் டிக்... டிக்... என்று கடிகாரம் ஓடும் சத்தம் மட்டும் மிக மிகத் துல்லியமாக கேட்டது. 

 தன் பெற்றோர்களின் பிரிவில் துவங்கி பாட்டியின் அரவணைப்பு போதையின் வாசம் மைக்கலின் இறப்பு என்று அவள் நினைவுகளில் பின்னே ஓடின.

அவசரமாகக் கண்களைத் திறந்து கொண்டாள்.

மீண்டும் டிக்... டிக்... டிக்

அவளால் முடியவில்லை. அந்த சத்தமும் அந்த சத்தத்துடன் சுழன்றடிக்கும் நினைவுகளும் அவளைப் பைத்தியம் பிடிக்கச் செய்தது.

உடனடியாக எழுந்து கடிகாரம் அத்தனையிலிருந்தும் பேட்டரியை பிடுங்கி எரிந்து தரையில் விட்டெறிந்தாள்.

அதன் பிறகும் அவளால் உறங்க முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் அவளுக்கு ஒரு யுகமாகக் கடந்தது. எப்படி எல்லாமோ படுத்து பார்த்தாள். ஆனால் உறக்கம் மட்டும் வரவில்லை.

உறக்கம் வருவதற்கான அறிகுறி கூட தெரியவில்லை. ஒரு வகையில் இதெல்லாம் அவளுக்குப் பழகியதுதான்.

அதிகபட்சமாக நான்கு மணி நேரம் உறங்குவதே அவளுக்குப் பெரிய விஷயம். ஆனால் ஜீவாவிடம் பேச ஆரம்பித்த பின் அதெல்லாம் மாறியிருந்தது. அதிக நேரம் அவள் உறங்கினாள்.

ஆனால் மீண்டும் எல்லாம் பழைய நிலைக்குத் திரும்பிவிட்ட உணர்வு. பயமாக இருந்தது. ஒரு வேளை ஜீவாவையும் தான் இழக்க நேரிட்டால்...

இந்த நினைப்பு வந்த பிறகு அவளுக்குள் இருந்த கொஞ்சம் நஞ்சம் அமைதியும் காணாமல் போனது.

  இருண்டிருந்த அந்த வீட்டைப் பார்த்த போது தனிமையும் வெறுமையும் மட்டுமே அவளைச் சூழ்ந்திருப்பதாகத் தோன்றியது.

யோசித்து யோசித்து ஒரு நிலைக்கு மேல் அவள் மூளை களைத்துவிட்ட போதும் உறக்கம் வரவில்லை. உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் ஓய்ந்து போன ஓர் விரக்தி நிலையில் அப்படியே சிலையாக சமைந்து கிடந்தவளை உலுக்கியது அவள் வீட்டின் அழைப்பு மணி.

கண்களை திறந்தாள். வெளிச்சக் கீற்றுகள் ஜன்னல் கண்ணாடிகள் வழியாக எட்டிப் பார்த்தது. கடிகாரத்தைப் பார்க்க அது இரவு ஒரு மணியில் நின்றிருந்தது.

மேலே மின் காற்றாடி சுழன்றது. ‘கரண்ட் வந்திருச்சா?’ என்றபடி எழ முயன்றவளின் கால்கள் பின்னிக் கொண்டன. வெகுநேரம் தரையில் அமர்ந்திருந்ததில் இரத்தம் ஓட்டம் தடைப்பட்டு நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறினாள்.

தலையில் மண் மூட்டைகளைச் சுமப்பது போல பாரமாக அழுத்தியதில், கழுத்தைத் தூக்கக் கூட முடியவில்லை.

மீண்டும் அழைப்பு மணிச் சத்தம்!  

‘யார்றா அது காலையில’ என்று கடுப்படித்துக் கொண்டே நொண்டி நொண்டி நடந்து கதவருகே சென்றாள்.

 கதவை பிடித்தபடி  தலை முடியை இழுத்துக் கொண்டையிட்டாள். பின் முழுதாகத் திறக்காமல் சங்கிலியைப் பிணைத்துவிட்டு கதவைத் திறக்க,

“பக்கத்துல புதுசா குடி வந்திருக்கும்... பால் காய்ச்சினோம்”  என்ற ஓர் ஆடவனின் குரல் கேட்டது.

“ஓ” என்றவள் அதே களைப்புடன் கதவைப் பிணைத்திருந்த சங்கிலியை எடுத்து விட்ட போதுதான் அவனைப் பார்த்தாள்.

“இந்தாங்க” என்று பால் டம்ளரை நீட்டியவனும் அவள் முகத்தைப் பார்த்தான். அத்தனை நேரம் அவன் முகத்தில் ஓட்டியிருந்த புன்னகை பட்டென்று மறைந்து போனது.

 ‘இவளா?’ என்றவன் விழிகள் அதிர்ச்சி வெறுப்பு இரண்டையும் ஒன்றாகக் காட்ட,

ஜீவிதா இன்னும் தான் பார்ப்பது அவன்தானா இல்லை ‘இது ஏதாவது கனவா?’ என்று விளங்கிக் கொள்ள முடியாமல் அரைப் போதை நிலையில் நின்றாள். 

Quote

Super twist same nee enbadhe naanaha

Quote
Quote from Guest on January 5, 2025, 1:19 AM

Super twist same nee enbadhe naanaha

நீ என்பதே நானாக யாரென்று தெரியாமல் சந்தித்து கொள்வார்கள். இவர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியும் 😊 

You cannot copy content