You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Thooramillai Vidiyal - Episode 18

Quote

18

அது ஒற்றை படுக்கையறை வீடு என்பதால் ஜீவா தரையில் மெத்தை விரித்துப் படுத்துக் கொள்ள, செல்வியும் சித்ராவும் மேலே படுக்கையில் படுத்துக் கொண்டனர்.

ஜீவா தன் செல்பேசியை கையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அதிலிருந்து வெளிப்பட்ட வெளிச்சத்தைப் பார்த்த செல்வி,

“என்னடா இந்நேரத்துல போனை கையில வைச்சுட்டு இருக்க” எனவும், “இல்ல ம்மா ஒரு மெசஜ் பார்த்துட்டு இருந்தேன்” என்றான் ஜீவா. அவனுக்கு விஜியிடம் பேச வேண்டும்.

 “நேரங்கெட்ட நேரத்துல மெசஜ் பார்க்குறேன் அத பார்க்குறேனு... எடுத்து ஓரமா வைச்சுட்டு தூங்குடா” என்று அவர் அதட்ட ஜீவா கடுப்புடன் செல்பேசியை ஓரமாக வைத்து விட்டான்.

ஆனால் நேரில் சந்திக்கலாம் என்ற குறுந்தகவலைப் பார்த்ததிலிருந்தே அவன் மனம் சந்தோஷத்திலும் எதிர்பார்ப்பிலும் பொங்கிக் கொண்டிருந்தது.

திருமணம், காதல் போன்றவை தனக்கு ஒத்துவராது என்று முடிவெடுத்திருந்த போதும் விஜியால் மனதில் எழுகிற சலனத்தை அவனால் தடுக்க முடியவில்லை. எவ்விதமாகத் தடுப்பது என்றும் தெரியவில்லை. அவளை நேரில் கண்ட பின் ஒரு வேளை இந்த உறவுக்கும் உணர்வுக்கும் புது அர்த்தம் பிறக்கலாம்.

இப்படியே யோசித்து கனவில் மிதந்தபடி படுத்திருந்தவன் எப்போது உறங்கினோம் என்று தெரியாமல் உறங்கிப் போனான். ஆனால் ஜீவிதாவிற்கு எப்போதும் போல உறக்கம் வரவில்லை.

ஞாயிற்றுக் கிழமைக்கு முன்பு அவனை எந்த காரணம் கொண்டும் சந்தித்து விடக் கூடாது என்று நினைத்தாள். மீண்டும் ஏதோவொரு சிக்கலை உண்டாக்கவும் அவன் வெறுப்பைச் சம்பாதிக்கவும் அவள் விரும்பவில்லை.

ஆதலால் அடுத்து வந்த நாட்களில் அவன் சென்ற பிறகே அவள் வீட்டிலிருந்து கிளம்பினாள் அல்லது அவன் புறப்படுவதற்கு முன்னதாக கிளம்பினாள்.

அதேநேரம் மாலை வெகுநேரம் கழித்தே அலுவலகத்திலிருந்து புறப்பட்டாள்.

அன்றும் எல்லோரும் சென்று விட்ட பிறகு அவள் தனித்து வேலை பார்த்துக் கொண்டிருக்க, “என்னம்மா இன்னும் கிளம்பலயா?” என்று விசாரித்தார் ராஜசேகர்.  

“இல்ல சார் வீட்டுக்கு போனா வேலை செய்ய முடியுறது இல்ல” என்று காரணம் சொல்ல,

“ஆனா இந்த டிசைனை முடிக்கத்தான்  இன்னும் இரண்டு வாரம் இருக்கே” என்றார்.

“இல்ல அட்வான்ஸா முடிச்சுடலாம்னு”

“நீ எவ்வளவு அட்வான்ஸா முடிச்சாலும்... பிராஜெக்ட் ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பிக்கும்”

“சார்” என்றவர் ஏதோ சொல்ல வர, “நான் பார்த்துட்டுதான் இருக்கேன்... நான் கோபமா பேசுனா நாளில் இருந்து நீ  உன்னை ரொம்ப வருத்திக்கிட்டு வேலை செஞ்சுட்டு இருக்க

சரியா நேரத்துக்கு சாப்பிட கூட போக மாட்டுற” என்றார்.

“அப்படி எல்லாம் இல்ல சார்”

“நீ முதல் லேப்டாப்பை எடுத்து வைச்சுட்டு கிளம்பு... வெளியே மழை வர மாதிரி இருக்கு... சீக்கிரம் வீட்டுக்கு போ” என்றவர் அக்கறையாக உரைக்க அவர் வார்த்தையை மறுத்துப் பேச இயலாமல் அவள் தன்னுடைய பையை எடுத்துக் கொண்டு வெளியேற, அவரும் அவளுடன் வந்து மின்தூக்கியில் இணைந்து கொண்டார்.

“நான் எல்லோர் முன்னாடியும் உன்னை அப்படி பேசி இருக்க கூடாது... சாரிம்மா” என்று தன் தவறை ஒப்பு கொள்ள ஒரு நொடி அவரை வியப்பாகப் பார்த்தவள் பின், “அதெல்லாம் பரவாயில்ல சார்... அதுவும் இல்லாம நான் செஞ்சதும் தப்புதானே” என்றாள்

“வேலையில தப்பு நடக்கிறது சகஜம்தான்... அதுவும் இல்லாம நீ ஜாயின் பண்ணியே ஒரு மாசம்தான் ஆகுது... அதுக்குள்ளே நான் இவ்வளவு மோசமா ரியாக்ட் பண்ணிருக்க வேண்டாம்... அதுவும் இல்லாம இங்கே இருக்க டிசைனர்ஸ் எல்லோரையும் விட உனக்கு அனுபவம் கம்மியா இருக்கலாம்... ஆனா உன் திறமை... எல்லோரையும் விட ஜாஸ்தி” என்று மனதார பாராட்ட, அவள் முகம் மலர்ந்தது.

“தேங்க் யூ ஸோ மச் சார்”

மின்தூக்கி நின்று அவர்கள் வெளியே வரவும், “ஆமா உங்க அம்மா அப்பா எல்லாம் என்ன பண்றாங்க?” என்று கேட்டதும் அவள் முகத்திலிருந்த சந்தோஷம் மொத்தமாக வடிந்து போனது.

எந்த அம்மா அப்பாவை பற்றி சொல்வது என்று எண்ணியபடி அவள் பின்தங்கிவிட்டாள்.  தன் காரை நோக்கி நடந்தவர் அவள் வரவில்லை என்று கவனித்ததும், “ஜீவிதா” என்று திரும்ப,

“வரேன் சார்” என்று அவருடன் நடந்தாள்.

“ஆமா உங்க அம்மா அப்பா பத்தி கேட்டேனே” என்று காரில் ஏறுவதற்கு முன் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க,

“அப்பா பிரேம் குமார்... அம்மா நித்யா” என்றாள்.

“அது சரி... அவங்க என்ன பன்றாங்க” என்று அவர் மேலும் கேட்க,

“அப்பா டாக்டரா இருக்காரு...  அம்மா சாப்ட்வேர் என்ஜனியர்” என்றாள்.

“ஓ” என்று வியப்பாக கேட்டவர், இப்போ நீ அவங்க கூட இல்லையா” என்று மேலும் குடைய அவளுக்குக் கடுப்பானது.

‘இந்த ஆளு விட மாட்டான் போல’ என்று யோசித்தாலும் , “அப்பா திருச்சில இருக்காரு... இங்க நான் என் நைனம்மா வீட்டுல தங்கி இருக்கேன்” என்று மேலோட்டமாக சொல்ல,

“ஓ ஓகே ம்மா... சரி பார்த்து போ” என்று விட்டு அவர் காரில் ஏறி கொள்ள,  ‘அப்பாடா’ என்று மூச்சை இழுத்து விட்டு கொண்டாள்.

பின் தன் பைக்கை எடுத்து கொண்டு அவளும் கிளம்ப, மழை தூற ஆரம்பித்தது. மழை அதிகரிப்பதற்கு முன்பாக வீட்டிற்கு போய் சேர்ந்துவிட வேண்டும் என்று வேகமாக ஓட்டி சென்றவள் எப்படியோ குடியிருப்பிற்குள் நுழைந்துவிட்டாள்.

அவள் வண்டியை நிறுத்துவிட்டு மின்தூக்கியில் ஏற போன சமயத்தில் அங்கே நின்ற லீலாவை கவனித்து, “என்ன லீலா நீ... இங்கே நிற்குற?”என்று விசாரிக்க,   

“இல்ல... பார்க்லதான் படிச்சுட்டு இருந்தேன்... மழை வந்திருச்சு... அதான் என்ன பண்றதுனு யோசிச்சுட்டு நிற்குறேன் க்கா” என்றாள்.   

“அதுக்கு என்ன... வீட்டுக்கு போய் படி” என்று சொல்லி கொண்டே அவள் மின்தூக்கியில் ஏறப் போக,

“அம்மா அப்பா இரண்டு பேரும் லேட்டாதான் வருவாங்க... அதான் வீட்டுல தனியா இருக்கணும்னே யோசிச்சேன்” என்றவள் தயங்கி இழுக்கவும் ஜீவிக்கு அப்பெண்ணின் உணர்வுகள் தன்னையே நினைவுபடுத்தியது.

“ஒன்னு பன்னு... நீ என் பிளாட்டுக்கு வந்து படி”

“ஐயோ வேண்டாம் க்கா”

“என் பிளாட்ல யாரும் இல்ல... நான் மட்டும்தான்... சும்மா வா” என்று அழைத்து சென்றாள். கதவின் பூட்டை திறந்து கொண்டே, “நான் சுத்தமா எல்லாம் வைச்சு இருக்க மாட்டேன்... குப்பையாதான் இருக்கும்” என்றாள்.

அவள் சொன்னது போலதான் அந்த அறையின் பொருட்கள் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன.

லீலா அவற்றை எல்லாம் பார்க்க, “அதெல்லாம் கண்டுக்காத... நான் சூடா உனக்கு காபி போட்டு கொடுக்கவா... குடிக்குறியா?” என்று கேட்டாள்.

“வேண்டாம் க்கா”

“நான் எனக்கு போட போறேன்... ஸோ உனக்கும் போடுறேன்” என்று விட்டு, “நீ உட்காரு... நான் டிரஸ் சாஞ் பண்ணிட்டு வந்துடுறேன்” என்ற அவள் முகப்பறையின் ஓரமாக இருந்த மர கப்போர்டின் துணிகளை எடுத்து கொண்டு குளியலறைக்குச் சென்றாள்.

உடைமாற்றி வந்தவள் காபி போடச் செல்ல அவளுடன் சமையலறையில் வந்து நின்ற லீலா, “நல்லா சமைப்பீங்களா க்கா” என்று கேட்க,

“நல்லா எல்லாம் இல்ல... ஒரளவுக்கு” என்றபடி கப்பை எடுத்து வைத்து அதில் அவள்  காபி தூள்களைப் போட,  

“ஏன் க்கா... துணி எல்லாம் ஹால் ரூம்லயே வைச்சு இருக்கீங்க” என்று லீலா வினவினாள்.  

“அதான் சொன்னேனே... என் வீடு குப்பையா இருக்கும்னு”

“அதுக்கு இல்ல க்கா எல்லாத்தையும் பெட் ரூம்ல வைக்கலாமே” எனவும் ஜீவிதா அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லவில்லை.

“காபி ரெடியாகிடுச்சு... நான் எடுத்துட்டு வரேன்... நீ உட்காரு” என்ற போது லீலாவின் கையிலிருந்த செல்பேசி சத்தமிட்டது.

“அம்மாதான் கூப்பிடுறாங்க” என்றபடி அழைப்பை ஏற்று, “இல்ல ம்மா... இங்கதான்... அஞ்சாவது மாடி.. ஜீவிதா அக்கா வீட்டுல” என்று துண்டு துண்டாக பேசினாள். எதிர்புறத்தில் என்ன சொன்னார்களோ?

அவள் பதட்டமாகிவிட, “என்னாச்சு லீலா” என்று ஜீவி விசாரிக்க, “நான் கிளம்புறேன் க்கா” என்றவள் பரபரப்பாக சென்று கதவை திறந்தாள். 

“காபி குடிச்சுட்டு போ” என்று சொல்லி கொண்டே பின்னே வர லீலாவின் அம்மா நின்றிருந்தார்.

“ஆமா யாரை கேட்டு இவ வீட்டுக்கு வந்த” என்று அவர் கோபத்துடன் மகள் கன்னத்தில் அறைந்துவிட,

“ஐயோ என்ன பண்றீங்க” என்று ஜீவிதா அவரை தடுக்க முற்பட்டாள்.  

அதற்குள் அவர் மகளின் முதுகில் இன்னும் இரண்டடி போட்டார்.

ஜீவிதாவிற்கு கோபம் மூள, “இப்போ நீங்க கத்துற அளவுக்கும் அடிக்கிற அளவுக்கும் என்னாகிடுச்சு... மழை வந்துட்டதால் அவளால் பார்க்ல படிக்க முடியல... வீட்டுக்கு போன தனியா இருக்க போறோனு பயந்துட்டு இருந்தா... அதான் நான் அவளை என்வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்” என்று விளக்க,  

“நீ எதுக்கு என் பொண்ணை கூட்டிட்டு வந்த... ஏதாவது கண்டதக் கலந்து கொடுக்கவா” என்றவர் கேள்வியில் ஜீவிதாவின் முகம் வெளிறியது.

அதேசமயம் சத்தம் கேட்டு ஜீவா கதவை திறந்துவருவதை பார்த்தவள் இந்த பிரச்னையை மேலும் வளர்க்க விரும்பாமல்,

“சாரி... என் தப்புதான்... நான்தான் கூட்டிட்டு வந்தேன்... நீங்க லீலாவை அடிக்காதீங்க” என போதும் அவர் அமைதியடையவில்லை.

“நடிக்காத எல்லா தெரியும் உன்னை பத்தி” என்று பழைய கதை எல்லாம் சொல்லி அவளை மோசமாகச் சாடியவர், “ஏதாவது சாப்பிட கொடுத்தாளா?” என்று கேட்டு மகள் தோளை போட்டு உலுக்க,

“இல்லம்மா காபி போட்டு தர்றேனு சொன்னாங்க” என்று அவள் அழுது கொண்டே சொன்னாள்.

“குடிச்சிட்டியா டி” என்று கேட்டு அவர் அடிக்க பாயும் போது இம்முறை ஜீவா இடையில் புகுந்து, “ஏன் அடிக்குறீங்க... லீலா ம்மா வேண்டாம்” என்று தடுத்தான்.

அவனை கண்டதும் கொஞ்சம் அமைதியானவர் நடந்ததை எல்லாம் அவனிடம் விவரமாக உரைக்க,  

 “அறிவிருக்கா லீலா உனக்கு... மழை பெஞ்சா நேரா வீட்டுக்கு போகணும்... நீ பாட்டுக்கு யாரவது கூப்பிடுறாங்கனு அவங்க  வீட்டுக்கு போறதா” என்று அவர் சொன்னதை கேட்டு, லீலாவை கண்டித்தான்.  

“நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுங்க சார்” என்ற அவள் அம்மா மேலும் ஜீவியிடம், “இனிமே நீ என் பொண்ணுகிட்ட பேசுனா சும்மா இருக்க மாட்டேன்” என்று எச்சரித்து விட்டு மகளைக் கூட்டிச் சென்றார்.

இதெல்லாம் பார்த்துக் கொண்டு நின்ற ஜீவிதாவின் முகம் கன்றிப் போனது. அதேநேரம் அவளைக் கண்டும் காணாதது போல ஜீவா தன் வீட்டிற்குள் செல்ல எத்தனிக்க, அவளால் தாங்க முடியவில்லை.

“நீங்க எல்லாம் நினைக்குற மாதிரி நான் ஒன்னும் தப்பான எண்ணத்துல லீலாவை கூட்டிட்டு வரல” என்று கூற,

“நான் உன்கிட்ட பேசவே இல்ல” என்று திரும்பி அவளை முறைத்தான்.

 “ஆனா என்னை பத்திதானே நீங்க  லீலாகிட்ட பேசுனீங்க” என்று வினவ,

“உன்னை பத்திதான் இந்த ஒட்டுமொத்த அபார்ட்மெண்டே பேசுதே” என்றான்.

“அதெல்லாம் ரொம்ப பழைய விஷயம்... முடிஞ்சு போன விஷயம்... அதுவும் இல்லாம அன்னைக்கு நடந்த பிரச்னைல என்னோட தப்புன்னு எதுவும் இல்ல... எதையும் முழுசா தெரிஞ்சுக்காம யாரோ பேசுறதை வைச்சு நீங்களா ஒரு முடிவுக்கு வராதீங்க” என்று காட்டமாக பேச,

“நான் ஏன் முழுசா தெரிஞ்சுக்கணும்... ஆமா யார் நீ எனக்கு... நான் உன் வீட்டு பக்கத்துல இருக்கேன்... அவ்வளவுதான்... மத்தபடி உனக்கும் எனக்கும் ஒன்னும் இல்ல... அதுவும் இல்லாம உன்னை பத்தி முழுசா தெரிஞ்சு இருந்தா நான் இந்த வீட்டுக்கு குடி வந்திருக்க கூட மாட்டேன்” என,

“ஓ என் வீட்டு பக்கத்துல குடி வந்ததே உங்களுக்கு அவமானமா இருக்கா?” என்று கண்கள் கலங்கக் கேட்க,

“குடி வந்தது மட்டும் இல்ல.... உன்னை மாதிரி பொண்ணுக்கிட்ட நின்னு பேசிட்டு இருக்கிறதே அப்படிதான் இருக்கு” என்று எரிச்சலுடன் மொழிந்தான். 

“என்னை மாதிரி பொண்ணா?” என்றவள் கேட்டு கொண்டிருக்கும் போதே ஜீவா வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

நாம் நேசிக்கும் மனிதர்களால் காயப்படுவதுதான் அதிகப்படியான வலி, வேதனையைக் கொடுக்கும் என்று தெரிந்தும் அந்த வலியை அனுபவித்தும், மீண்டும் மனிதர்களை நம்பவும் நேசிக்கவும் செய்வது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்று தோன்றியது அவளுக்கு.

அழுது கொண்டே பால்கனியில் சென்று நின்றாள்.

அந்த சிறு செடியிலிருந்த மஞ்சள் ரோஜா மொத்தமாக வாடிக் கருகி இருந்ததைப் பார்க்க நேர்ந்தது. பூ மட்டும் இல்லை. செடியும் அப்படிதான் இருந்தது. 

பூக்கள் உதிர்வது இயல்புதான். ஆனால் செடியே உதிர்ந்து விட்டால் மீண்டும் பூப்பதற்கான வாய்ப்புகளே இல்லாமல் போய்விடும்.ஒரு வகையில் அவள் நிலைமையும் அப்படிதான் இருந்தது.

ஒரு நொடி அவளுக்கு அங்கிருந்து குதித்து விடலாமா என்று கூட தோன்றியது. ஆனால் தற்கொலை செய்து கொள்ளக் கூட கொஞ்சம் துணிச்சல் வேண்டும். அது தனக்கு இல்லை என்று நினைத்தாள்.

தான் மிகப் பெரிய கோழையாகவே வாழ்ந்திருக்கிறோம். அன்பு பாசத்துக்காக ஏங்கியதை விடத் தான் நேசித்த மனிதர்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் பயந்து அவள் ஓடியதுதான் அதிகம்.

அவளைப் பலவிதமான ஞாபகங்கள் அலைக்கழிக்கவும்,  முகத்தை மூடிக் கொண்டு வெகுநேரம் அழுதாள். இரவும் விடியலும் அவளுக்கு எந்தவித வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.

வெளிச்சம் வந்த பிறகும் சோம்பலுடன் சோபாவில் சாய்ந்து கிடந்தவளுக்கு அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதே நினைப்பில் இல்லை. அவனைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பமும் இல்லை.

அப்போது அவள் செல்பேசி அடிக்கும் சத்தம் கேட்டது. அவள் மிகுந்த சோர்வுடன் நகர்ந்து சென்று அதனை எடுப்பதற்குள் சத்தம் நின்றுவிட்டது.

அதில் பெயர் இல்லை. யாருடைய எண் என்று யோசிக்கும் போதே அதே எண்ணிலிருந்து மீண்டும் அழைப்பு வர எடுத்து காதில் வைத்தாள்.

“நான் ஜீவா பேசுறேன்” என்ற நொடி அவளிடம் இருந்த சோர்வு மறைந்தது.

 ‘இது எப்படி’ என்று சிந்தித்தவளுக்கு முன்பொரு முறை அவனுக்கு தன் கைபேசி எண்ணை கொடுத்தது நினைவு வந்தது.

‘முட்டாள்தனம் பண்ணி வைச்சு இருக்கேன்’ என்று யோசித்தவள் அழைப்பை துண்டிக்க போகும் போது,

“என்னாச்சு விஜி... நான் என்ன தப்பு செஞ்சேன்... ஏன் இப்படி பன்றீங்க... எதுவா இருந்தாலும் ப்ளீஸ் சொல்லுங்க

என்னைச் சந்திக்க வர கூடாதுன்னு முடிவு பண்ணிடீங்களா... எதனால... என்ன காரணம்” என்றவன் அவள் பதில் அனுப்பாத ஏமாற்றத்துடன் பேசவும் அவள் முகம் மாறியது.

சற்று முன்பு அவள் கொண்டிருந்த எண்ணத்தை மாற்றி கொண்டவள், “உங்களுக்கு காரணம் தெரியனுமா?” என்று திடமான குரலில் கேட்டாள்.

“ஆமா... தெரியனும்”

“சரி நீங்க உங்க வீட்டுல இருந்து கொஞ்சம் வெளியே வந்து நில்லுங்க” என, அவன் புரியாமல்,

“என் வீட்டுல இருந்தா... ஏன்?” என்றான்.

“சும்மா வாங்க சொல்றேன்” என்றவள் தன் தலை முடியைச் சேர்த்து முடிந்து கொண்டு வெளியே வந்து நிற்க, அவனும் வந்து நின்றான்.

அவன் அவளை விழி விரித்து பார்த்த கணம், “ஹாய் ஜீவா... நான்தான் விஜி... விஜி என்கிற ஜீவிதா” என்று தன் செல்பேசியை காட்டியபடி அறிமுகம் செய்து கொள்ள, அவன் முகம் இருளடர்ந்து போனது.

அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஜீவிதாதான் தன்னிடம் பேசிய விஜியாக இருப்பாள் என்று.

You cannot copy content