You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Thooramillai Vidiyal - Episode 19

Quote

19

ஜீவா தன் வீட்டு பால்கனியில் நின்று தூரமாக எங்கோ வெறித்திருந்தான்.

எப்படி இப்படி ஒரு குழப்பம் நேர்ந்தது.

அதுவும் ஜீவிதா அறிமுகம் செய்து கொண்ட அந்த தருணம்... அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

தன்னுடன் நட்பாகப் பழகிய அதே பெண்ணிடம்தான் இத்தனை நாளாக வெறுப்பையும் கோபத்தையும் காட்டி இருக்கிறோமா என்று குழம்பிய நிலையில் நின்றதாலேயே ஜீவாவால் அவளிடம் எதுவுமே பேச முடியவில்லை.

ஆனால் அவள் தொடர்ந்து,

“என்னை மாதிரி பொண்ணுகிட்ட நின்னு பேசக் கூட உங்களுக்கு அசிங்கமா இருக்கும் இல்ல... பைன்... நான் இனிமே உங்க டிக்னிட்டியை குறைக்கிற மாதிரி... போன்ல இல்ல நேர்லயோ பேச மாட்டேன்... என் நம்பரை நீங்களும் டெலீட் பண்ணிடுங்க... நானும் அந்த டேட்டிங் ஆப் அன்இன்ஸ்டால் பண்ணிட போறேன்” என்று தீர்க்கமாக உரைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.

அவனுக்குப் புரியவில்லை. நடந்தது எல்லாம் விதியின் சதியா அல்லது தன்னுடைய அரைவேக்காட்டுத்தனமா?

அவன் இவ்விதமாக யோசித்துக் கொண்டு நிற்க அப்போது அங்கே வந்த செல்வி, “என்னடா கூப்பிட்டுடே இருக்கேன்... நீ எங்கேயோ பார்த்துட்டு இருக்க” என்ற அவன் தோளைத் தொட்டார்.  சிரமப்பட்டு தன்னை இயல்பு நிலைக்கு மாற்றிக் கொண்ட ஜீவா,

“என்னம்மா” என்று கேட்டு அவர் புறம் திரும்பினான்.

“மழை வர்ற மாதிரி இருக்கு... காத்து வேற அடிக்குது... நீ ஏன் இங்க நின்னுட்டு இருக்க” என்ற போதுதான் ஜீவா வானத்தைப் பார்த்தான்.

 கருமேகங்கள் சூழந்து பெரு மழை வருவதற்கான அறிகுறிகள் தெரிந்தன.

அந்த வெளி சூழ்நிலைகள் எதுவும் அவனைக் கிஞ்சிற்றும் பாதிக்கவில்லை.  

அதேநேரம் மகனின் வாட்டமான முகத்தை கண்ட செல்வி,

“என்னடா... உன் முகம் ஒரு மாதிரி இருக்கு” என்று விசாரித்தார்.  

“அதெல்லாம் ஒன்னும் இல்லயே” என்றவன் சமாளித்த போதும்,

“இல்ல... என்னமோ இருக்கு... உன் குரலே சரி இல்ல”என்றார்.

“ஒன்னும் இல்லன்னா ஒன்னும் இல்ல... விடுங்க” என்று கடுப்பாகப் பேசிவிட்டு அங்கிருந்து அகன்றான்.

ஆனால் அன்று முழுக்கவும் அவன் முகம் அப்படிதான் இருந்தது.

“என்ன ஜீவா... பேசு ஜீவா” என்று சித்ரா அவனை  உலுக்க,

“ப்ளீஸ் க்கா... தொல்லை பண்ணாத”  என்று வெளியே சென்றுவிட்டான்.

“டேய் மழைல எங்கடா போற” என்ற செல்வியின் அழைப்பை அவன் காதிலேயே வாங்கவில்லை.

மகனுக்கு ஏதோ பிரச்னை என்று அவருக்குப் புரிந்தது. ஆனால் என்னவாக இருக்கும் என்று அவருக்குப் புரியவில்லை.

 ஒரு வேளை தனக்குத் திருமணம் ஆகவில்லை என உள்ளூர மருகுகிறானா? என்ற காரணத்தை அவராகவே யூகித்து கொண்டவர் விரைவாக அவனுக்குத் திருமணம் முடித்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

இந்த நிலையில் அன்றைய இரவு நல்ல மழை பெய்ததால் பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை அறிவித்து விட்டார்கள். ஆனால் உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி இயங்கும் என்று அறிவிப்பு வந்ததால் ஜீவா கிளம்பினான்.

தன் வீட்டு வாயிலைக் கடந்ததும் அவன்  பார்வை அனிச்சையாக அவளின் வீட்டுப் பக்கம் திரும்பியது. அவளைப் பார்த்துப் பேச வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் மனம் துடித்தது.

ஆனால் கதவு வெளிப்பக்கமாகப் பூட்டி இருந்தது.

பெருமூச்சுடன் நடந்தவன் தூறல் போடவும் பையில் குடையைத் தேடினான்.

‘மறந்துட்டு வந்துட்டோமா’ என்று நினைத்தவன் லேசான தூறல் என்பதால் முன்னேறி நடக்க அவனைப் பார்த்துவிட்ட லீலா,

“குடை எடுத்துட்டு வரலயா சார்... வேணா என் குடைல வாங்க ” என்று அழைத்தாள்.

“இருக்கட்டும் லீலா... லேசாதான் மழை பெய்து ” என்று பேசி  கொண்டே அவளுடன் நடந்தவன்,

“நான் உங்ககிட்ட ஒன்னும் கேட்கட்டுமா சார்?” என்றாள்.

“பாடத்துல டவுட் கேட்க போறியா?” என்றதும்,

“அட நீங்க வேற றார்” என்று முகத்தை சுருக்கியவள் பின் மிகுந்த தயக்கத்துடன்,    

“நான் ஜீவிதா அக்கா வீட்டுக்கு போனது அவ்வளவு பெரிய தப்பா சார்” என்று வினவினாள். 

“இல்லமா தெரியாதவங்க வீட்டுக்கு போறது பாதுகாப்பு இல்லன்னுதான் சொல்ல வந்தேன்” என்றான்.

 “ஆனா எனக்கு ஜீவிதா அக்காவை தெரியும் சார்...  லிப்ட்ல போகும் போதும் வரும் போது எல்லாம் அக்காகிட்ட  பேசி இருக்கேன் சார்... அக்கா நல்லா பேசுவாங்க...  என் பேக் வெயிட்டா இருக்குனு ஸ்கூல் வரைக்கும் என்னை அவங்க பைக்ல கொண்டு போய் டிராப் எல்லாம்  கூட பண்ணுவாங்க

 அன்னைக்கு கூட நான் வீட்டுல தனியா இருக்கணும்னு சொல்லவும்தான் என்னை அவங்க வீட்டுக்கு கூப்பிட்டாங்க

ஆனா அதுக்கு போய் அம்மா அக்காவை என்னன்வோ பேசிட்டாங்க” என்று வருத்தமாக கூறினாள்.

அவள் சொன்னதைக் கேட்டவனுக்குக் குற்றவுணர்வாக இருந்தது. அதற்கு மேல் அந்த விஷயத்தை அவன் தொடரவில்லை. 

லீலாவுடன் தன் வகுப்பிற்குள் நடந்தவன் அன்று பாடம் எடுக்கும் மனநிலையில் இல்லாததால் மாணவர்களைப் படிக்கச் சொல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.

வகுப்பு முடிந்து அவன் ஆசிரியர் அறைக்குள் நுழைவதைக் கண்ட தமிழ் ஐயா,   

“எப்பவும் நீ கிளாஸ்ல உட்கார்ந்து நான் பார்த்ததே இல்ல... என்னாச்சு ஜீவா...  உடம்புக்கு எதுவும் முடியலயா?” என்று அக்கறையாக விசாரித்தார்.

 “அதெல்லாம் ஒன்னும் இல்ல ஐயா... நல்லாத்தான் இருக்கேன்” என்றபடி தன் நாற்காலியில் வந்து அமர்ந்தான்.

“ஒன்னும் இல்லன்னு உன் வாய்தான் சொல்லுது... ஆனா உன் முகம் அப்படிச் சொல்லலையே?” என, அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

“என்ன பிரச்னை? என்கிட்ட சொல்லுயா” 

“சொன்னா என் பிரச்னையை தீர்த்து வைச்சுருவீங்களா?”

“முயற்சி செய்றேன்... நீ முதல சொல்லு” என்றார். இப்போதைக்கு அவனுக்கு இருக்கும் நண்பர் நலம்விரும்பி எல்லாம் அவர் மட்டும்தான் என்பதால் அவரிடம் அனைத்தையும் சொல்லிவிட்டான்.

அவன் சொன்னதை கேட்டு அதிசயித்தவர், “நீ சொல்றது எல்லாம் உண்மையா இல்லை கதையா?” என,

“ஆமா... வேலை வெட்டி இல்லாம உங்ககிட்ட கதை சொல்லிட்டு இருக்கனாக்கும்” என்று கடுப்பானான். 

“ஆனா நீ சொல்றது எல்லாம் கேட்டா ஏதோ கதை மாதிரிதான்யா இருக்கு”

“நீங்க நம்பலனா போங்க” என்று சலித்து கொண்டான் ஜீவா.  

 “நம்புறேன்... ஆனா நீ போன்ல பேசுன பொண்ணு கூடவே சண்டை போட்டனு சொன்னியில்ல” என்று சந்தேகமாக வினவ,

“ஆமா போட்டேன்.. என் விதி... எனக்குன்னு எப்பவும் எந்த நல்லதும் நடக்காது... அப்படியே நடந்தாலும் அதை நானே மண்ணள்ளிப் போட்டு கெடுத்துக்கிடுவேன்... அப்படிதான் இந்த விஷயத்துலயும் நடந்துடுச்சு” என்று அவன் விரக்தியுடன் கூறினான்.

“கெமிஸ்ட்ரி படிக்க சொல்லி நீ பசங்களை கொடுமைபடுத்துறியே... ஒரு வேளை அந்த பாவத்துக்குதான் இப்படி எல்லாம் அனுபவிக்குறியோ?” என்று அவர் நக்கல் செய்யவும் ஜீவா அவரை கோபமாக முறைத்தான்.

“கோச்சிக்காதயா... சும்மா சொன்னேன்” என்று அவன் தோளை தொட்டவர் “ஆமா... நீ பசங்களையே திட்ட மாட்ட... புதுசா பார்த்த பொண்ணுக்கிட்ட போய் எதுக்கு அவ்வளவு கோபத்தை காட்டுன” என்று கேட்க,

 “அதான் சொன்னேனே... நான் முத தடவை பார்த்ததுல இருந்தே அவளை தப்பா புரிஞ்சுக்கிட்டேன்... போதாகுறைக்கு அந்த அபார்ட்மென்ட் செகரெட்டரி மத்த ஆளுங்க எல்லாம் அவளை பத்தி இன்னும் தப்பு தப்பா சொல்லவும்... முட்டாள்தனமா அதை கேட்டுகிட்டு நானும் அவளை ரொம்ப மோசமா பேசிட்டேன்” என்றான்.  

“ஆமா ஏன் அந்த அபார்ட்மென்ட் ஆளுங்க அந்த பொண்ணை பத்தி தப்பா பேசணும்”

“போன வருஷம் அந்த அபார்ட்மென்ட்ல ஒரு பையன் போதை மருந்து சாப்பிட்டுச் செத்து போனான் இல்ல”

“ஆமா”

“அதுக்கு அவதான் காரணம்னு சொல்றாங்க” என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாக,

“நீ இவ்வளவு நேரமா ஜீவிதா பத்தியா பேசிட்டு இருந்த?”என்று அதிர்வுடன் கேட்டார்.

 “உங்களுக்கு ஜீவிதாவை தெரியுமா ஐயா?”

“அவ நம்ம ஸ்கூல படிச்ச பொண்ணுதானே... தெரியாம இருக்குமா?”

“நம்ம ஸ்கூலயா?”

 “ஏழு எட்டு வருஷம் முன்னாடி இருக்கலாம்... நீ அப்போ இங்க இல்ல... ஜீவிதா ஒன்பதாவது படிச்சுட்டு இருந்தா... நான்தான் அவளுக்கு வகுப்பு ஆசிரியர்... 

ரொம்ப புத்திசாலியான பொண்ணு... ஆனா யார் கூடவும் அதிகம் பேச மாட்டா... பழக மாட்டா...  தனியாதான்  இருப்பா...

அவங்க பாட்டிதான் அவளை கூடவே வந்து விட்டுட்டு போவாங்க... நான் அவங்ககிட்ட ஏன் இந்த பொண்ணு இப்படி இருக்குனு ஒருமுறை கேட்டதுக்கு அவங்க அப்பா அம்மா பிரிஞ்சதுல இருந்து அவ தன்னைத்தானே தனிமை படுத்திக்கிட்டதா சொன்னாங்க

அதுக்கு அப்புறம் நான் அவகிட்ட நிறைய பேசனேன்...  எல்லோர்கிட்டயும் சகஜமா பழக சொன்னேன்... கொஞ்சம் மாறவும் செஞ்சா...

பத்தாவதுல ஸ்கூல் பர்ஸ்ட் வந்தா... அப்புறம் அவங்க தாத்தா இறந்துட்டாருனு... ஜீவிதா அப்பா நம்ம ஸ்கூலில் இருந்து அவளுக்கு டீ சி வாங்கி  கூட்டிட்டு போயிட்டாரு

நாலஞ்சு வருஷம் அப்புறம்தான் இந்த நியூஸ் வந்துச்சு... நம்ம ஸ்கூல படிச்ச ஜீவிதாதானு எல்லோரும் பேசிக்கிட்டாங்க...  எனக்கு அதிர்ச்சிதான்... ஏன் இந்த பொண்ணு இப்படி வழிதவறி போயிடுச்சுன்னு நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டேன்” என்றவர் பேசியதை எல்லாம் நிதானமாக கேட்டிருந்த ஜீவா,

“இல்ல ஐயா... அவ தப்பான வழில எல்லாம் போகல... நல்லா படிச்சு இப்போ நல்ல வேலைலதான் இருக்கா... நடந்து அந்த சம்பவம் ஏதோ அவளைத் தப்பா காட்டி இருக்கு... இல்ல தெரிஞ்சோ தெரியாமலோ அபப்டி ஒரு சூழ்நிலைல அவளைத் தள்ளி இருக்கலாம்

அதெல்லாம் புரிஞ்சுக்காம நானும் மத்தவங்க சொல்றதை வைச்சு அவளை தப்பான பார்வைல பார்த்துட்டேன்” என்றான்.

“நீ முகம் பார்க்காம பேசி பழகி இருக்க... இத்தனைக்கும் அவ அவளோட உண்மையான பேரை கூட சொல்லல... அப்புறம் எப்படி நீ அவளை நம்புற”

“அவ பொய்யான பேர் சொல்லி இருக்கலாம்... ஆனா எங்க பழக்கம் பொய்யில்லை... முகம் பார்க்காமதானாலும் அவகிட்ட பேசி பழகுன சமயங்களில் நான் மனசளவில ரொம்ப சந்தோஷமா அமைதியா உணர்ந்திருக்கேன் 

நிச்சயம் அவ தப்பான பொண்ணா இருக்கவே முடியாது... நான்தான் எதுவும் தெரிஞ்சுக்காம அவளை காயப்படுத்தி பேசிட்டேன்... என்ன செய்றது... யார் என்ன சொன்னாலும் நம்புற ஆட்டு மந்தை புத்திதானே நம்மளுடையது” என்று சொல்லி வருத்தப்பட்டவன் விழிகளில் கண்ணீர் நிரம்பி வழிய பதறிய தமிழ் ஐயா,

“ஜீவா என்னது இது... கண்ணை துடை” என்றார். அவன் முகத்தை துடைத்து கொண்டே,  “எல்லாம் என் தப்புதான் ஐயா”என்று சொல்ல,

“சரி தப்பு செஞ்சுட்ட... அதை சரி பண்ணு... ஜீவிதாகிட்ட  பேசி புரிய வை” என்றார்.

 "எங்க நட்பை நம்பிக்கையை எல்லாத்தையும்தான் நான் உடைச்சுட்டேனே... இதுக்கு அப்புறமும் அவ என்கிட்ட பேசுவானு கூட நினைக்குறீங்களா?” என்று ஜீவா அவநம்பிக்கையுடன் கேட்க, 

“கண்டிப்பா பேசுவா... மனசளவில நீங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டீங்க... அதனால்தான் அவ்வளவு நட்பா பழகி இருக்கீங்க... அந்த நட்பை நீ தொடரணும்

உனக்காக இல்லாட்டியும் ஜீவிதாவுக்காக... இல்லனா அவ இன்னும் அதிகமா தன்னை தனிமைப்படுத்திக்க வாய்ப்பு இருக்கு”என்றவர் சொன்னதைக் கேட்ட ஜீவா தீவிரமாக யோசிக்கலானான்.

அன்று வீட்டிற்குத் திரும்பியதும் அவளிடம் பேசலாம் என்று நினைத்தான். ஆனால் அவள் வீட்டுக் கதவு பூட்டி இருந்தது.

அடுத்தடுத்த நாட்களில் அவன் பார்க்கும் சமயங்களில் எல்லாம் அவள் வீட்டுக் கதவு பூட்டி கிடந்தது.

எப்போது வருகிறாள் போகிறாள் என்று ஒன்றுமே புரியவில்லை. ஒரு வேளை அவள் வீட்டில் இருக்கிறாளா என்று கூட சந்தேகமாக இருந்தது.

ஆதலால் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து, 

“ஐம் சாரி ஜீவிதா” என்று பெரிதாக எழுதி அவள் கேட்டின் இரும்புக் கம்பியில் ஒட்டி வைத்தான்.

அடுத்த நாள் காலை அதே தாள் கிழிந்த துண்டுகளாக அவன் வீட்டு வாசலின் முன்னே கிடந்தன.

அதனைப் பார்த்தவனுக்கு அவள் வீட்டில்தான் இருக்கிறாள் என்று உறுதியானது. அதேநேரம் தன்னை பார்க்கவே கூடாது என்று முடிவாக இருக்கிறாள் என்றும் விளங்கியது. அவனும் அவளைப் பார்த்துப் பேசியே தீர வேண்டுமென்று தீவிரமாக இருந்தான்.

Quote

நானும் அடுத்து என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள தீவிரமாக இருக்கிறேன்.அருமை தோழரோ...

You cannot copy content