You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Thooramillai Vidiyal - Episode 26

Quote

26

மின்தூக்கியின் கதவு திறந்தது. உள்ளே ஏறிவிட்ட மகேஷ் ஜீவிதா அசையாமல் நிற்க, “சிஸ் வாங்க” என்றான்.

 ஜீவாவுடன் பயணித்த நிமிடங்கள் யாவும் அவள் நினைவில் ஓடியதில் அவள் உள்ளம் தவித்தது. கண்களில் நீர் எட்டிப் பார்த்தது.   

“சிஸ்... உள்ளே வாங்க” என்று மகேஷ் மீண்டும் அழைக்கவும், தன் கண்ணில் எட்டிப் பார்த்த நீரைத் துடைத்துக் கொண்டு உள்ளே ஏறினாள்.

 “ஏதாவது பிரச்னையா சிஸ்?” என்று மகேஷ் மெதுவாகக் கேட்க, அவள் எதுவும் பேசவில்லை.

அவள் ஏதாவது சொன்னால்தான் ஆச்சரியம் என்று எண்ணிக் கொண்டவன், அவனாக அதன் பின்பு எதுவும் கேட்டு வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொள்ள விரும்பவில்லை.

இருவரும் வெளிவாயிலுக்கு நடக்கும் போது பூங்காவில் படித்துக் கொண்டிருந்த லீலா, “அக்கா” என்று ஓடி வந்து முன்னே நின்றாள்.

“நீங்க காலையில கூட என்கிட்ட பேசவே இல்ல... என் மேல கோபமா உங்களுக்கு... ஐம் சாரி க்கா... எங்க அம்மா பேசுனது எல்லாம் தப்புத்தான்” என்று விளக்கம் கொடுக்க, ஜீவிதா மறுப்பாகத் தலையசைத்தாள்.

“எனக்கு உன் மேல எந்தக் கோபமும் இல்ல... என்னால திரும்பவும் உனக்கு எந்த பிரச்னையும் வர வேண்டாம்னுதான் நான் ஒதுங்கி போனேன்” என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் கண்களில் மீண்டும் கண்ணீர்த் துளிகள் விழுந்தன.

“என்னாச்சு க்கா... ஏன் அழுறீங்க?”

“தூசு பட்டிருச்சு” என்றபடி தன் கண்களைத் துடைத்துக் கொண்டவள், “சரி நீ போய் படி” என்று அவள் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு நடந்தாள்.

மறுபுறம் ஜீவாவோ தன் அம்மாவுக்கு மாத்திரை மற்றும் தண்ணீர் எல்லாம் எடுத்துக் கொடுத்துப் படுக்கையில் சாய்வாக உட்கார வைத்திருந்தான். சித்ரா எதையும் பொருட்படுத்தாமல் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

இத்தனை களேபரத்திற்குப் பிறகும் வந்திருந்த உறவினர் கூட்டம் கிளம்பவில்லை. செல்வியைச் சூழ்ந்து நின்று அவள் உடல் நலனைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அங்கே இருப்பதைச் சங்கடமாக உணர்ந்த ஜீவா,

“நீங்கெல்லாம் வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ்... இப்போ நிலைமை சரி இல்ல... அம்மாவுக்கும் உடம்பு முடியல... நான் அவங்கள ஹாஸ்பெட்டில் கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்...அதனால நீங்க போயிட்டு இன்னொரு சமயம் வாங்களேன்” என்று நாசூக்காகச் சொல்லி அவர்களை எல்லாம் அனுப்பிவிட நினைத்தான்.

அதற்குள் செல்வி, “எனக்கு இப்போ ஒன்னும் இல்ல... டாக்டர் கிட்ட எல்லாம் போக வேண்டாம்” என்றபடி எழுந்து நன்றாக அமர்ந்து கொண்டார். 

 “முதல நல்லபடியா கல்யாண விஷயத்தைப் பேசி முடிச்சுடலாம்” என்றவர் மேலும், “நீங்க எல்லாம் போய் உட்காருங்க... நாங்க வரோம்” என்று உறவினர்களிடம் கூற, ஜீவா அவரை அதிர்ச்சியாகப் பார்த்தான்.

அதன் பின் அவர்கள் முகப்பறையில் சென்று மீண்டும் அமர, “வா ஜீவா” என்று செல்வி மகனின் கையை பிடித்துக் கூட்டிச் சென்றார்.

அவன் சம்மதத்தை பற்றிய கவலையே இல்லாமல் நிச்சயம், கல்யாணம் என்று அவர்கள் பேசியதை எல்லாம் பார்த்து அவனுக்கு எரிச்சல் கூடியது.

அவன் உள்ளுர கொதித்து கொண்டிருக்க அப்போது அந்தப் பெண்ணின் தந்தை, “சொந்தகாரங்க எல்லாம் கூப்பிட்டு கை நனைக்குறதுக்கு முன்ன மாப்பிளையும் நீங்களும் நம்ம வீட்டுக்கு வந்து பொண்ண பார்த்துட்டா நல்லா இருக்கும்” என்றதற்குச் செல்வி பதில் சொல்வதற்குள் ஜீவா முந்தி கொண்டான்.

“இல்ல நாங்க வர மாட்டோம்” என்ற ஜீவாவின் குரல் மிக நிதானமாக ஒலித்தது. எல்லோரும் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தனர். செல்வி, “என்னடா பேசுற?” என்றார்.

“என்ன பேசுறன் ஏது பேசுறனு நல்லா தெரிஞ்சுதான் பேசுறேன்... உங்களுக்குதான் நான் சொல்றது புரியல... திரும்பவும் சொல்றேன் கேட்டுக்கோங்க...

நான் ஜீவிதாவை லவ் பண்றேன்... நான் ஜீவிதாவைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்று முடிவாகக் கூற, அந்த உறவினர்கள் முகங்கள் அதிருப்தியாக மாறின.

அந்த நொடியே அவர்கள் செல்வியிடம் கோபமாகப் பேசிவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டனர்.

 மகனைக் கடுப்பாகப் பார்த்த செல்வி, “என் மானத்தை வாங்குறதுன்னு இப்படி எல்லாம் பண்றியா” என்று கேட்டார். 

“நீங்க என் வாழ்க்கையை நாசம் பண்றதுக்குனே இப்படி எல்லாம் பண்றீங்களா” என்றவன் திருப்பிக் கேட்டான். 

“நானா டா உன் வாழ்க்கையை நாசம் பண்றேன்” 

“எதுக்கு? நான் ஏதாவது சொன்னா நீங்க நெஞ்சை பிடிச்சுக்குவீங்க... நான் எதுவும் சொல்லல” என்று அலட்சியமாக உதட்டைச் சுழித்தவன் வாயிற் கதவை நோக்கி நடந்தான்.

“எங்கே போற அந்த பொண்ணு வீட்டுக்கா?” என்று செல்வி குறுக்கே வந்து நின்றார்.

“ஆமா போறேன்... ஒரு வேளை போக கூடாதுன்னு நீங்க தடுத்தீங்கனா... அப்பவும் நான் போவேன்... ஆனா போயிட்டு திரும்பி வரவே மாட்டேன்” என்று ஒரே போடாக போட செல்வியின் முகம் வெளிறிப் போனது.

ஒன்றும் பேசவும் முடியவில்லை. மகனைத் தடுக்கவும் முடியவில்லை .

அதேநேரம் வெளியே வந்த ஜீவா ஜீவிதாவின் வீடு பூட்டியிருப்பதைப் பார்த்து அதிர்ந்தான். உடனடியாக அவள் அலைப்பேசிக்குத் தொடர்பு கொள்ள முயன்றான்.

இரண்டு முறை முழுவதுமாக அடித்து ஓய்ந்தது. மூன்றாவது முறையோ அணைத்து வைக்கப்பட்டதாக அறிவிப்பு வர, அவன் நொறுங்கிப் போனான்.

கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அவள் போய்விட்டாளா? அவள் சொன்னது போலவே தன்னை விட்டு மொத்தமாகப் போய்விட்டாளா? இனி திரும்பி வர மாட்டாளா? என்று யோசித்தபடி வந்து பூங்காவின் பெஞ்சில் அமர்ந்தான்.

அவனைக் கண்ட லீலா, “சார் என்ன சார் உங்க கண்ணெல்லாம் கலங்கி இருக்கு” என்று விசாரிக்க,

அவன் முகத்தைத் துடைத்துக் கொண்டபடி, “அதெல்லாம் ஒன்னும் இல்லமா..  கண்ணுல தூசி பட்டிருச்சு” என்றான்.

அவனை ஆச்சரியத்துடன் பார்த்தவள், “கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஜீவிதா அக்காவும் உங்களை மாதிரியேதான் சொன்னாங்க... தூசி பட்டிருச்சுனு” என,

ஆர்வமாக நிமிர்ந்த ஜீவா, “ஜீவிதாவை பார்த்தியா...  என்ன சொன்னா” என்று கேட்க, லீலா அவள் சொல்லிவிட்டுச் சென்றதை உரைத்தாள்.

ஜீவாவின் வேதனை இன்னும் அதிகமானது. மீண்டும் மீண்டும் அவளைத் தான் காயப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணியவன் அவள் யாருடன் சென்றால் என்பதையும் கேட்டான்.

லீலா சொன்ன அடையாளங்களை எல்லாம் வைத்து அவன் அவள் தம்பி மகேஷாகத்தான் இருக்கும் என்று யூகித்தான். முன்பொரு முறை காவலாளி மூலம் அவனுடைய எண்ணை வாங்கி வைத்திருந்தான். ஆனால் பேசுவதற்கான சூழல் அமையவில்லை.

தற்சமயம் அவனுடைய எண்ணிற்கு அழைக்க மகேஷ் எடுத்து,“ஹலோ யாரு” என, “நான் ஜீவா பேசுறேன்” என்று தயக்கத்துடன் ஆரம்பித்தான்.

 “யாரு ஜீவா?” 

“நான் ஜீவிதாவோட பிரண்டு” என்றவன் தடுமாற்றத்துடன் பேச மகேஷ் புரியாமல்,

“அக்காவுக்கு போன் பண்ணாம நீங்க ஏன் என் நம்பருக்கு கூப்பிடுறீங்க” என்று கேட்டான்.

“இல்ல உங்க அக்கா என் போனை எடுக்க மாட்டுறா... என் மேல கோபமா இருக்கா... அந்த கோபத்துலதான் உங்க கூட கிளம்பி வந்துட்டா” என்றதும் மகேஷிற்கு ஒரு வேளை அப்படிதான் இருக்குமோ என்ற யோசனை வந்தது.

“சரி இப்போ நான் என்ன பண்ணனும்” என்று மகேஷ் அவனிடமே கேட்க,

“எனக்கு ஜீவிதாகிட்ட பேசணும்... ப்ளீஸ் அவளை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணி என் கூட பேச வையுங்களேன்” என்று சொன்னான்.

தீவிரமாக யோசித்த மகேஷ், அப்படி மட்டும் செய்து ஜீவிதா இவனுடன் சமாதானமாகி தன்னுடன் வரும் முடிவை அவள் மாற்றிக் கொண்டால் என்ன செய்வது என்ற எண்ணம் வந்தது.

அதுவுமில்லாமல் இப்போது பார்த்து ஜீவிதா, “பசிக்குது” என்று சொன்னதால் காரை உணவகத்தில் நிறுத்திவிட்டு கை கழுவும் இடத்திற்கு அவன் வந்திருந்தான்.

இதைப் பற்றி அவளுக்குத் தெரிவிக்க வேண்டுமா? வேண்டாம் என்று நினைத்தான். அடுத்த கணம் அவன் அழைப்பைத் துண்டித்து ஏரோப்ளேன் மோடில் போட்டுவிட்டான்.

அதன் பின் அவன் உணவு மேஜைக்கு வர, அங்கே ஜீவிதா தூரமாக எதையோ வெறித்தபடி இருந்தாள்.

“என்னக்கா சாப்பிடுறீங்க?”

“நான் ஆர்டர் கொடுத்துட்டேன்... உனக்கு வேணும்னா ஏதாவது சொல்லிக்கோ” என்றாள். அவள் முகத்தில் ஏதோ பெருந்துயரத்தில் ஆழ்ந்திருப்பது போலத் தெரிந்தது.

ஜீவாவின் அழைப்பைத் துண்டித்துத் தான் சுயநலமாக நடந்து கொண்டோமோ என்று மகேஷின் உள்ளம் குத்தியது. இருந்தாலும் அவனால் வேறு மாதிரியாக யோசிக்கவும் முடியவில்லை.

அவனுக்கு அவன் அம்மா அப்பாவின் சந்தோஷம்தான் முக்கியம். அவர்களுக்குத் திருமணம் முடிந்து பதினைந்து வருடமாகிவிட்ட போதும் மகிழ்ச்சியாக அவர்கள் வாழ்வையும் உறவையும் கொண்டாடியதே இல்லை.

ஜீவிதாவிற்கு அநியாயம் செய்துவிட்டோமோ என்ற குற்றவுணர்வுடனே தங்கள் திருமண நாளை அவர்கள் ஒவ்வொரு வருடமும் கடக்கிறார்கள்.

ஒரு வேளை ஜீவிதாவை அவர்கள் நெருங்கிவந்தால் இன்னும் தூரமாக அவள் தங்களை விட்டுப் போய்விடுவாளோ என்று பயந்து அவர்களும் விலகியே நிற்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் இவள்தான் காரணம் என்று அவனுக்கு அவள் மீது ஆத்திரமாக வரும். ஆனால் அவன் அம்மா ஷீலா, “அவ இடத்துல இருந்து பார்த்தால்தான் உனக்கு அவ இழப்பும் வலியும் புரியும்” என்று சொல்ல, அவனும் அவ்விதமாக யோசித்தான்.

பிரேம்குமார் அவனுக்குப் பெற்ற தந்தையாக இல்லாவிட்டாலும் நல்ல வளர்ப்புத் தந்தையாக சிறிந்த வழிகாட்டியாக அவனுக்கு இருந்துள்ளார்.

ஒரு வகையில் ஜீவிதாவிற்கு கிடைத்திருக்க வேண்டிய அன்பையும் பாசத்தையும் தான் தட்டிப் பறித்துக் கொண்டோம் என்ற குற்றவுணர்வுதான் அவள் என்ன அவமானப்படுத்தினாலும் அவளை அவனால் வெறுக்க முடியவில்லை.

இப்படியாக அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது அந்த உணவகத்தில் சிப்பந்தி பல வகையான உணவுகளைக் கொண்டு வந்து அந்த மேசை முழுக்க நிரப்பினான்.

“என்னங்க... வேற டேபிள் ஆர்டரை இங்கே மாத்தி கொண்டு வந்து வைக்குறீங்களா?” என்று மகேஷ் சந்தேகமாக வினவ, 

“இல்ல இதெல்லாமே மேடம்தான் ஆர்டர் பண்ணாங்க” என்று ஜீவிதாவை கை காட்டினான். அதற்கு ஏற்றார் போல அவளும் வந்த உணவைத் தன் தட்டில் எடுத்து வைத்து உண்ண துவங்கினாள்.

“சிஸ் நீங்களா இதெல்லாம் ஆர்டர் பண்ணீங்க”

அவள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் வாயைத் திறக்காமல் தலையை மட்டும் அசைத்தாள். அவனுக்கோ அந்த உணவை எல்லாம் பார்த்து மலைப்பாக இருந்தது.

‘இவ்வளவையும் இவள் எப்படிச் சாப்பிடுவாள்’ என்று அவன் அதிர்ச்சியாகும் போதே இன்னும் சில உணவுப் பொருள்கள் கொண்டு வந்து வைக்கப்பட, அவனுக்கு தலை சுற்றியது.

அவள் பாட்டுக்குச் சாப்பிடு சாப்பிடு என்று சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள். ஒரு பக்கம் நேரம் ஓடிக் கொண்டே இருந்தது.

ஏதாவது ஒரு கட்டத்தில் அவளே போதுமென்று எழுவாள் என பார்த்தால், அவள் கடைசி பருக்கை வரை உண்டு முடித்த பின்னரே எழுந்து கொண்டாள் .

அதன் பிறகும் ஐஸ் க்ரீம் ஒன்றை கையுடன் வாங்கி வந்து காரில் அமர, எப்படி ஒருவரால் இவ்வளவு எல்லாம் சாப்பிட முடியும்.

ஒரு வேளை இதுதான் ஸ்ட்ரெஸ் ஈட்டிங்கோ? காரின் இருக்கையில் அமர்ந்திருந்தவளை அவன் ஆராய்வாகப் பார்க்க அவள் அமைதியுடன் அந்த ஐஸ்க்ரீமை ருசித்துக் கொண்டிருந்தாள்.

அவளிடம் தெரிகிற அந்த அமைதி உண்மை இல்லை. அவளுக்குள் ஏதோ பெரிய போராட்டம்  நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

அதைப் பற்றி எல்லாம் கேட்டாலோ அல்லது பேசினாலோ அவள் காரிலிருந்து இறங்கிப் போய்விடக் கூடும் என்று பயந்தவன், திருச்சியில் உள்ள அவர்கள் வீட்டிற்குச் சென்று சேரும் வரை தன் வாயை இறுகப் பூட்டிக் கொண்டு வந்தான்.

கார் அவர்கள் வீட்டின் முன்னே நின்றது. டாக்டர் பிரேம் குமார் டாக்டர் ஷீலா என்ற பெயர்கள் வாயிலில் பொரிக்கப்பட்டிருந்தன.

அதனை ஒரு மாதிரி கசப்புணர்வுடன் பார்த்தாள்.

“வாங்க சிஸ்” என்று மகேஷ் சொல்ல,

“போ வரேன்” என்றதும் அவன் உள்ளே சென்று தன் அம்மா அப்பாவிடம், “யார் வந்திருக்காங்கனு வந்து பாருங்க... வாங்க வந்து பாருங்க” என்று மகிழ்ச்சியுடன் சொல்லி வெளியே இழுத்து கொண்டு வந்தான்.  

அவர்கள் வந்து பார்த்த போது ஜீவிதா சாலையில் நின்று தலையைக் கவிழ்த்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.

 “ஜீவிதா” என்று துடித்துப் பிடித்து மகள் அருகே சென்றார் பிரேம்குமார். 

“ஒன்னும் இல்ல ஐம் ஓகே” என்று நிமிர்ந்தவள் மீண்டும் குனிந்து தொடர்ந்து வாந்தி எடுத்தாள்.

ஷீலா மகேஷிடம், “என்னாச்சு” என்று கேட்க, அவனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. 

 பிரேம்குமார் கவலையுடன் மகள் தோளை அணைத்துப் பிடித்து, “என்னம்மா... என்னாச்சு உடம்புக்கு” என்று மிகுந்த அக்கறையுடன் வினவ,

“ஒன்னும் இல்ல... நானே வரேன்... நீங்க போங்க” என்று அவர் கரத்தை விலக்கிவிட்டாள். பின்னர் தன் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தாள்.

அப்போதும் பிரேம்குமார் மகளுடனே உள்ளே வர, “ஜீவி என்ன பண்ணது உனக்கு” என்று கேட்டார் ஷீலா.

“எனக்கு ஒன்னும் பண்ணலயே” என்று சாதாரணமாக சோபாவில் அமர்ந்தாள். பிரேமும் ஷீலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள அப்போது ஜீவிதா, “எனக்கு ஒரு காபி கிடைக்குமா?” என்று வினவினாள்.

“இந்த மாதிரி சமயத்துல காபி எல்லாம் குடிக்கக் கூடாது... நான் உனக்கு ஹாட் வாட்டர் எடுத்துட்டு வரேன்” என்றார் ஷீலா.

“நான் உங்ககிட்ட காபிதான் கேட்டேன்” என்று அவள் அழுத்தமாகச் சொல்ல வேறு வழி இல்லாமல் சமையல்காரரிடம் சொல்லி காபி எடுத்து வரப் பணித்தார் ஷீலா.

அதன் பின் ஷீலாவும் பிரேம்குமாரும் அவளிடம் பேசலாம் என்று அமரப் போகவும் அவள் எழுந்து நின்று கொண்டு, “நான் ரூமுக்கு போறேன்... எனக்கு டயடா இருக்கு... காபியை மேலே ரூமுக்கு கொடுத்து விட சொல்லுங்க” என்று விட்டுச் சென்றாள்.

அவள் மேலே சென்றதும், “என்னடா ஆச்சு அவளுக்கு” என்று ஷீலா மகனிடம் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே ஏதோ சத்தம் கேட்டது.

என்னவென்று அவர்கள் திரும்பிப் பார்க்க, ஜீவிதா மயங்கி படிக்கட்டிலிருந்து உருண்டு விழுந்தாடாள். அந்தக் காட்சியைப் பார்த்த மூவரும் அதிர்ந்தனர்.

உடனடியாக ஷீலா தங்கள் மருத்துவமனை பணியாளர்களுக்குத் தகவல் கூறினாள். அவள் உடலைச் சோதித்து பிரேம், பெரிதாகக் காயம் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம் என்று மருந்துகளை எல்லாம் வரவழைத்தார்.

பின்னர் மகேஷுடன் சேர்ந்து மகளைத் தூக்கி வந்து தங்கள் படுக்கையறையில் கிடத்தினார்கள். அவள் உடலைச் சோதித்து மருந்துகள் ஏற்றிய பிறகும் அவள் மயக்க நிலையிலேயே  கிடப்பதைக் கண்ட பிரேம்குமார்,

“ஏன் இந்த பொண்ணு இப்படி எல்லாம் பண்ணுது... கொஞ்சம் கூட அவ உடம்பு மேல அவளுக்கு அக்கறையே இல்லயா?” என்று வருந்தினார். 

 “அவ என்ன இன்னைக்கு நேத்தா இப்படி எல்லாம் பண்றா” என்று ஷீலா கடுப்பாகப் பேசினார்.

“அவ இப்படி எல்லாம் செய்றதுக்கு நான்தான் காரணம்... என் சுயநலமான முடிவுதான் காரணம்... என் தேவை மட்டும்தான் முக்கியம்... நான் மட்டும்தான் முக்கியம்னு யோசிச்சிட்டேன்... என் பொண்ணை பத்தி ஒரே ஒரு நிமிஷம் கூட யோசிக்கல” என்று அவர் ஆதங்கப்பட,

 “இன்னும் எத்தனை நாளைக்கு இல்ல எத்தனை வருஷத்துக்கு இப்படி உங்களை நீங்களே குத்தம் சொல்லிக்க போறீங்க” என்று ஷீலா கேட்டார்.

“எத்தனை வருஷமானால் என்ன... இது என்னோட தப்புத்தானே... என்னோட சுயநலமான முடிவால பாதிக்கப்பட்டது என் மக ஜீவிதாதானே” என்றவர் மகளை வேதனையுடன் பார்த்து கொண்டே பேசினார்.

“யாரு அவர் பாதிக்கப்பட்டவளா...  அவளால்தான் நம்ம பாதிக்கபட்டுட்டு இருக்கோம்.. இப்போ கூட இதெல்லாம் அவளே இழுத்து விட்டுக்கிட்டதுதான்... யாரோ ஜீவாவாம்... இரண்டு பேரும் பிரண்டா இல்ல லவ் பண்றாங்களா... ஒன்னும் தெரியல... இப்போ அவன் கூட சண்டை போட்டுடுதான் மேடம் இங்க கிளம்பி வந்திருக்காங்க

பிரச்னை ஏதாவது வந்தாதான் மேடமுக்கு நம்ம ஞாபகமே வருது” என்று மகேஷ் மூலமாக தெரிந்து கொண்ட விஷயங்களை எல்லாம் தெரிவிக்கவும் அதிர்ச்சியான பிரேம், 

“ஜீவாவா... ஒரு வேளை இவனும் அந்த மைக்கல் மாதிரி எவனாச்சுமா?” என்று அச்சப்பட்டார்.

“தெரியலயே... மேடம் முழிச்சாதான் என்ன ஏதென்னு தெரியும்” என்று ஷீலா சொல்ல பிரேம்குமார் தலையில் கை வைத்துக் கொண்டார்.

“ரொம்ப யோசிக்காதீங்க... உங்க ரூமுக்கு போய் படுங்க... நான் இங்க படுத்துக்கிறேன்”

“இல்ல நான் வேணா”

“நான் பார்த்துகிறேன் பிரேம்” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்த ஷீலா அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு ஆங்கில நாளிதழ் ஒன்றைப் புரட்டிக் கொண்டிருந்தார்.

இரவு மூன்று மணி போல ஜீவிதாவிற்கு மயக்கம் தெளிந்தது. அந்த அறையைச் சுற்றும் முற்றும் பார்த்தவளுக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்னவென்று ஆரம்பத்தில் விளங்கவில்லை.

பிறகு சோபாவில் ஷீலா சாய்ந்து உறங்குவதைப் பார்த்தாள். ஓரளவு தான் எங்கே இருக்கிறோம் என்று விளங்கிய அதேசமயம் வயிற்றில் மெலிதாக ஒருவித நமைச்சல் உண்டானது.

 அவள் எழுந்து கொள்ள முயலும் போது கையிலிருந்த வென்ப்லான் அழுத்தியதில் வலி உண்டாக,

“அம்மா” என்று அலறி விட்டாள்.

அந்த சத்தத்தில் விழித்து கொண்ட ஷீலா, “என்னாச்சு... ஜீவிதா எழுந்துட்டியா... என்ன பண்ணது உடம்புக்கு” என்றபடி அருகே வந்து நின்று விசாரிக்க,

“எனக்கு ரெஸ்ட் ரூம் போகணும்” என்றாள்.

அவர் கை பிடித்து தூக்கிவிட, “நான் பார்த்துக்கிறேன்” என்று அவர் கையை உதறினாள்.  

“நீ உன்னை பார்த்துக்கிற நிலைமையில் இப்போ இல்ல” என்றவர் தூக்கிவிட்டு அவளை அந்த அறையுடன் இணைந்துள்ள குளியலறைக்கு அழைத்துச் சென்று நிறுத்தி,

“லாக் போடாதே” என்றார்.

“என்ன?”

“உனக்கு பிபி லோவா இருக்கு... மயக்கம் போட்டு விழுந்துட்டனா... அதுக்குதான் சொல்றேன்”

“நான் அப்படி எல்லாம் விழமாட்டேன்” என்று அவர் சொன்னதைக் கேட்காமல் தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டாள்.

உள்ளே சென்றதும் தலை மேலும் கீழுமாகச் சுழன்றது. கொஞ்சம் விட்டால் மயக்கம் போட்டு விழுந்து விடுவோமோ என்று பயம் உண்டானது.

எப்படியோ சமாளித்து வெளியே வர, அங்கே காத்திருந்த ஷீலா அவள் கையை பிடிக்க வந்தார்.

“எனக்கு ஒன்னும் இல்ல... ஐம் ஓகே” என்று அவரை நிராகரித்துவிட்டு முன்னே அடி எடுத்து வைக்கப் போகும் போது அவள் உடல் தடுமாறியது.

ஷீலா மீண்டும் வந்து பிடித்துக் கொள்ள, “விடுங்க நான் போயிடுவேன்” என்றாள்.

“நீ போன இலட்சணத்தைதான் நான் பார்த்தனே” என்று கடுகடுத்த ஷீலா, அதன் பின் அவளைக் கைதாங்கலாகப் பிடித்துப் படுக்கையில் அமர வைத்தார்.

“இப்பவும் மயக்கமா இருக்கா?”

“கொஞ்சமா” என்றாள். உடனடியாக ஓ ஆர் எஸ் பவுடரை தண்ணீரில் கரைத்து அவளிடம் நீட்டிக் குடிக்கச் சொல்ல,

“எனக்கு வேண்டாம்... என்னால முடியாது” என்றாள்.

“கண்டதை எல்லாம் திங்க மட்டும் முடியுமா உன்னால... ஒரு அளவு தெரியாது உனக்கு... படிச்ச பொண்ணுதானே நீ” என்று  திட்ட துவங்க,  

“என்னை இப்படி எல்லாம் திட்டுறதுக்குதான் உங்க புள்ளைய விட்டு என்னை கூட்டிட்டு வர அனுப்பிவிட்டீங்களா” என்று அவளும் பதிலுக்கு ஏற,

“ஆமா மா உன்னை அப்படியே திட்டி நீ திருந்திட்டாலும்” என்றவர் மீண்டும் அந்த டம்ளரை நீட்டினார்.

அவள் முகத்தை திருப்ப, “ஒழுங்கா குடி” என்று அதிகாரமாகச் சொல்லி அவள் கையில் தந்தார். குமட்டிக் கொண்டே அதனை குடித்து முடித்து ஓரமாக வைத்தாள்.

“சரி படுத்துக்குறியா”

“இல்ல கொஞ்ச நேரமாகட்டும்” எனவும் சோபாவில் சென்ற அமர்ந்த ஷீலா, “ஆமா யார் அந்த ஜீவா?” என்று கேட்க அவள் முகம் இறுக்கமாக மாறியது.

 “உன்னைத்தான் கேட்குறேன் யார் அந்த ஜீவா” என, அவள் தன் மௌனத்தைக் கலைக்கவில்லை.

“அவனும் அந்த மைக்கல் மாதிரியா” என்று அவர் மேலும் கேட்கவும் அவள் சீற்றத்துடன்,

“ஜீவா ஒன்னும் மைக்கல் மாதிரி கிடையாது” என்று தன்னையும் மீறிப் பொங்கிவிட்டாள்.

“சரி அப்போ என்ன மாதிரி அவன்” அவர் விடாமல் குடைய, “அது” என்று தயங்கியவள், “நானும் ஜீவாவும் லவ் பண்ணோம்” என்றாள்.

“ஓ லவ் பண்ணீங்க... அப்படினா பாஸ்டென்ஸ்... அப்படிதானே?” என்றதும் அவள் அதிர்ந்து நிமிர்ந்து,

“இல்ல... அது அப்படி இல்ல” என்ற போதும் அந்தக் காதல் தனக்கு நிலைத்திருக்கும் என்று அவளால் உறுதியாகச் சொல்லவும் முடியவில்லை.

“அப்படி இல்லனா வேற எப்படி” என்று ஷீலா தொடர்ந்து கேட்டதில் எரிச்சலான ஜீவிதா, “ஏன் இப்படி என்னைக் கேள்வி கேட்டு டார்ச்சர் பண்றீங்க... என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க ப்ளீஸ்... என்னால முடியல” என்றவள் கத்திவிட்டாள். 

“சரி கத்தாதே... நான் எதுவும் கேட்கல... ஆனா திரும்பவும் எதுவும் பிரச்னையை நீ இழுத்துட்டு வராம இருந்தா சரி” என்று அவர் சொன்னதைக் கேட்ட ஜீவிதாவிற்கு உச்சமாகக் கோபம் ஏறினாலும் அங்கிருந்து நகர முடியவில்லை.

அந்த சூழ்நிலையில் அவள் கோபத்தைக் காட்டவும் அவள் உடலில் தெம்பில்லை.

உறங்க முடியாவிட்டாலும் அவரின் கேள்விகளிலிருந்து தப்பிக்க வேண்டி கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

ஆனால் அவள் விழிகள் மூடியதுமே ஜீவா வந்து அவள் இமைகளுக்குள் நின்றான். அவளை மடியில் கிடத்திக் கொண்டான். தலையை மிதமாக வருடிக் கொடுத்தான்.

எல்லாமே ஓர் அழகான கனவு போல இருந்தது. ஒரு வேளை எல்லாமே வெறும் கனவுதானோ?

இனி இது போன்ற மிதமான வருடலும் அமைதியான உறக்கமும் தனக்குக் கிடைக்கவே கிடைக்காதோ என்ற சுயபச்சாதாப உணர்வு அவளை அழுத்தியதில் அவள் கண்களில் நில்லாமல் கண்ணீர் வழிந்தது.   

akila.l, sumathi.mathi and eswari.skumar have reacted to this post.
akila.lsumathi.mathieswari.skumar
Quote

Super ma 

You cannot copy content