மோனிஷா நாவல்கள்
Thooramillai Vidiyal - Episode 4
Quote from monisha on November 5, 2024, 9:20 PM4
அம்மா சொன்னது போலப் பாட்டியின் நிலைமை மோசமாகத்தான் இருந்தது.
வெளிறிப் போயிருந்த பாட்டியின் முகத்தையும் அவர் மூச்சு விட மிகவும் சிரமப்படுவதையும் கவலையுடன் பார்த்தான் ஜீவா. அதுவும் அவர் வாய் வழியாகத்தான் மூச்சை விட்டுக் கொண்டிருந்தார்.
எதற்கும் பாட்டி சுயநினைவுடன் இருக்கிறாரா என்று சோதிக்க, அவர் கையை பற்றினான். அவர் எழவில்லை.
“பாட்டி... பாட்டி... நான் ஜீவா வந்திருக்கேன்” என்று சத்தமாக அழைக்க அப்போதும் அவர் கண்களைத் திறக்கவில்லை.
“ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போலாமா ஜீவா” அவன் அம்மா பின்னோடு நின்று கேட்க, அவன் மறுப்பாகத் தலையசைத்தான்.
அந்த தலையசைப்பினைப் புரிந்தவர் விழிகளில் கண்ணீர் கசிந்தது.
முந்தைய முறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதே இனி சிகிச்சைகள் எதுவும் அவர் உடலுக்குப் பயன்படாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்ர்கள்.
ஒரு வேளை இதுவே அவரின் கடைசி நொடிகளாக இருக்கலாம். சுருக்கத்துடன் துவண்டு கிடந்த அந்த வயதான பெண்மணியின் முகத்தைப் பார்த்தவனுக்கு முதுமை எத்தனை கொடுமையானது என்று தோன்றியது.
மனச்சஞ்சலத்துடன் அவர் கையை விடுத்து எழுந்து கொள்ள எத்தனித்த போது, அவர் தோல் சுருங்கிய கரம் அவன் கைவிரலை இலேசாகப் பற்றின.
அவன் நின்று அவரை குனிந்து நோக்க, விழிகள் திறந்திருந்தன. “பாட்டி”, அவன் மீண்டும் அவர் கையை பற்றிக் கொண்டு அருகே அமர்ந்தான்.
“ஹ்ம்ம்... சி...வா” என்று மூச்சு வாங்கலுடன் அழைக்க அவன் முகம் வாடியது.
சில நாட்களாகவே பாட்டியின் கண்களுக்கு அவன் சிவாவாகத்தான் தெரிகிறான்.
பாட்டியின் மூத்த மகன் அவர். சிவகுமார். இளையவர்தான் அவன் அம்மா. செல்வி.
அவனாவது பாட்டியின் கண்களுக்கு சிவாவாக தெரிகிறார். ஆனால் படுக்கையில் கிடப்பவரை இரண்டு வருட காலமாக எந்த முகச்சுளிப்பும் இல்லாமல் சுத்தம் செய்து, அவரின் ஆடைகளைத் துவைத்து என்று எல்லாம் செய்து அக்கறையாகக் கவனித்துக் கொள்ளும் அவன் அம்மாவை அவருக்கு அடையாளமே தெரியவில்லை.
சில நேரங்களில் அம்மாவை யாரென்று கூட கேட்டிருக்கிறார். அவனுக்குக் கோபமாக வரும். அவருக்கு மூத்த மகன்தான் ஒசத்தியா என்று சீறுவான்.
இன்று மரண தருவாயிலும் கூட அதே மகனின் பெயர்தான் அவர் வாயிலிருந்து வருகிறது. அவனுக்கு வருத்தமாக இருந்தாலும் அவன் அம்மாவிற்கு அதெல்லாம் பெரிய விஷயமில்லை.
வயது முதிர்ச்சியில் பேசுவதாக அம்மா சமாதானம் கூறினாலும் அவனால் ஏற்க முடியவில்லை. அவரின் மனதின் ஆழத்தில் மூத்த மகனைத்தான் அதிகம் நேசிக்கிறார். அதனால்தான் தன்னையே மறந்த நிலையிலும் பாட்டி மகனின் பெயரை உச்சரிக்கிறார்.
ஆனால் அந்த அன்பில் கால்வாசி கூட அவருக்கு இல்லை. உடம்பு முடியாத அம்மாவைப் பார்க்க வரக் கூட அவருக்கு நேரமில்லை. அதுவும் சென்னையிலேயே வசித்துக் கொண்டு.
முந்தைய முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது மட்டும் பெயருக்கு என்று வந்து எட்டிப் பார்த்து விட்டு வந்த வேகத்தில் கிளம்பியும் விட்டார்.
பாட்டியிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
படுக்கையில் துவண்டு கிடந்த பாட்டியைப் பார்க்க, மீண்டும் அவர் கண்களை மூடிக் கொண்டன. அவன் எழுந்து வெளியே வந்தான்.
அவன் பின்னோடு நடந்து வந்த செல்வி, “மாமாவுக்கு போன் பண்ணுடா” என்று சொல்ல,
“அப்படியே பண்ணா மட்டும் ஓடி வந்துடுவாராக்கும்” என்று கடுப்புடன் உரைத்தான்.
“இல்லடா ஒரு வார்த்தை சொல்லிட்டா”
“சொன்னாலும் அவர் வர மாட்டாரு ம்மா”
“எதுக்கும் நம்ம சொல்லிடுறது நல்லது” என்ற செல்வி அதையே சொல்ல,
“அப்ப நீயே பண்ணு” என்று செல்பேசியை நீட்ட அவர் தயக்கத்துடன் நின்றார்.
“என்ன ம்மா? பண்ணு”
“நீயே பேசுடா... பேசி இந்த மாதிரின்னு விவரத்தை சொல்லுடா” என்று மறுத்துவிட்டார்.
அம்மா பேசினாலும் அவர் பதில் பேச மாட்டார். அதனால் அம்மாவும் அவரிடம் பேசுவதில்லை. ஜீவா நடந்து வந்து முகப்பறை சோபாவில் சரிந்தான்.
“நீயே பார்த்த இல்ல... உங்க பாட்டி சிவா சிவானு புலம்பிட்டு இருக்கிறதை?” என்று செல்வி மகன் அருகே வந்து நின்று கூற,
“அவங்க என்ன இன்னைக்கு நேத்தா அப்படி புலம்புறாங்க” என்று அப்போதும் அவன் பிடி கொடுக்காமல் பேசினான்.
“அடம் பிடிக்காதடா.... கடைசி கடைசியா அவங்க பெத்த புள்ளைய பார்க்கணும்னு ஆசைப்படுறாங்க... ஒரு வேளை அண்ணன் வந்து பார்த்து அவர் கையால பால் ஊத்துனா அவங்க உசுரு நிம்மதியா போயிடுமோ என்னவோ?” என்றார்.
அவன் அதற்கு மேல் அவரிடம் வாதம் செய்ய விரும்பவில்லை. பாட்டிக்கு அப்படியாவது நிம்மதியான மரணம் கிடைத்தால் நல்லதுதான் என்று எண்ணி தன் செல்பேசி எடுத்து சிவகுமாருக்கு அழைத்தான். இரண்டு மூன்று முறை தொடர்ந்து அடித்தும் அவர் எடுக்கவில்லை.
“போனை எடுக்கல” என்றதும் செல்வியின் முகம் வாடிவிட,
“ஏதாவது மீட்டிங்கல இருப்பாரு அவரே கூப்பிடுவாறு” என்றவன் சுற்றும் முற்றும் பார்வையைச் சுழல விட்டு,
“ஆமா அக்கா எங்க... காணோம்” என்றான்.
“உள்ளே தூங்கிட்டு இருக்கா” என்றவர் முகத்தைத் துடைத்துக் கொண்டே, “சரி... காபி குடிக்குறியா” என்று கேட்டார்.
“ம்ம்ம்” என்று அவன் அப்படியே சோபாவில் சாய்ந்து படுத்தான்.
செல்வி காபி போட்டு எடுத்து வருவதற்குள் அவன் அப்படியே சாய்ந்து உறங்கிவிட, மகனை எழுப்ப மனமில்லாமல் காபியைத் திருப்பி எடுத்து சென்றுவிட்டார்.
அதன் பின்பு அவரும் ஓய்வாக வந்து முகப்பறை தூண் ஒன்றில் சாய்ந்தபடி அமர்ந்து கொண்டு கண்களை மூடினார்.
சில நிமிடங்களில் ஜீவாவின் செல்பேசி அலற, செல்வி விழித்துக் கொண்டார். எழுந்து வந்து அவன் செல்பேசியை எடுத்துப் பார்க்க, அதில் மாமா என்று ஒளிர்ந்தது,
உடனடியாகப் படுத்திருந்த மகனை உலுக்கினார்.
“ஜீவா ஜீவா... மாமா போன் பண்றாருடா”
அவன் உறக்கம் களைந்து எழுந்து அமர்வதற்குள் அது அடித்து ஓய்ந்துவிட்டது.
“மாமாதான் கூப்பிட்டு இருக்காரு... நீ போன் போடு” என்று செல்வி பதற்றத்துடன் சொல்ல,
“சரி சரி போடுறேன்... நீ போய் எனக்கு காபி எடுத்துட்டு வா” என்றவன் நிதானமாக முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தான்.
“நீ முதல போனை போடு”
“எனக்கு டயடா இருக்குமா... போய் காபி எடுத்துட்டு வந்து தா முதல” என்று அவன் எரிச்சலுடன் மொழிய அவர் முகம் சுண்டிவிட்டது.
“முதலயே எடுத்துட்டு வந்தேன்... நீதான் தூங்கிட்ட” என்று புலம்பிக் கொண்டே அவர் உள்ளே நடக்க அவன் தன் செல்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
அவர் எடுத்ததும் பாட்டியின் உடல் நிலையைப் பற்றிக் கூற, “அப்படியா?” என்று பரபரப்பே இல்லாமல் கேட்டார். இப்படிதான் பதில் வரும் என்று அவனுக்கு தெரியும்.
தன் கடுப்பை எல்லாம் ஒதுக்கிவிட்டு பாட்டிக்காக நிதானமாகப் பேசினான்.
“பாட்டி வாய் வழியாதான் மூச்சு விடுறாங்க... உங்க பேரை சொல்லி கூப்பிட்டுட்டு இருக்காங்க... நீங்க கொஞ்சம் வந்தீங்கனா” என்றவன் சொல்ல, அதற்கும் அவரிடம் பெரிதாக பதட்டமோ பரபரப்போ இல்லை.
“சரி நீ ஒன்னு பண்ணு... ஒரு பத்து நிமிஷம் கழிச்சு... வீடியோ கால் போடு... நான் அம்மாகிட்ட பேசுறேன்” என்று விட்டு அழைப்பைத் துண்டித்தார்.
நேராக உள்ளே வந்து தன் அம்மாவிடம்,
“என்னவோ போன் போடு போன் போடுன்னு குதிச்ச... உன் நொண்ணன் என்ன சொன்னாரு தெரியுமா?” என்று விட்டு
“வீடியோ கால் போடுராராம்... வீடியோ கால்” என்று கத்தி விட்டு வந்து சோபாவில் அமர்ந்தான். அவன் முகம் கடுகடுத்துக் கொண்டிருந்தது.
செல்வி எதுவும் பேசி கொள்ளவில்லை. காபியை எடுத்து வந்து மகன் முன்பு வைத்து விட்டு உள்ளே சென்றார்.
அதனை அவன் குடித்து கொண்டிருக்கும் போது சிவகுமாரின் காணொலி அழைப்பு வந்தது. காபியை அப்படியே வைத்து விட்டு பாட்டியின் அறைக்கு சென்றான்.
அவர் அருகே அமர்ந்து கொண்டு அழைப்பை ஏற்றவன், “பாட்டி பாட்டி பாட்டி... மாமா வீடியோ காலில் வந்திருக்காரு” என்றான்.
அவர் எழவில்லை. அப்போதுதான் கவனித்தான். இழுத்து இழுத்து வந்த மூச்சு கூட இப்போது வரவில்லை. செல்பேசியை ஓரமாக வைத்து விட்டு பாட்டியின் மூச்சை சோதித்தான் . ஒன்றும் இல்லை. இமைகளைத் திறந்தான்.
அதிலும் அசைவில்லை. அவனுக்கு அடிவயிற்றில் அழுத்தியது. தொண்டையை அடைத்தது. கண்கள் கலங்கத் தன் செல்பேசியை நிமிர்த்திப் பிடித்தவன்,
“மாமா... பாட்டி இறந்துட்டாங்க” என்று தழுதழுத்த குரலில் கூற,
“சரி நீ போனை வைய்யு... நான் வரேன்” என்று கூறினார். அப்போதும் அவர் முகத்தில் எந்த அதிர்ச்சியும் இல்லை. அவன் வெளியே வந்து தன் அம்மாவிடம் விஷயத்தைத் தெரிவிக்க அவர் அப்படியே தரையில் சரிந்து தலையிலடித்து கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.
அவர் அருகே அமர்ந்து அவன் சமாதானப்படுத்தி முயன்று கொண்டிருந்த சமயம் உள்ளறையிலிருந்து கண்களைக் கசக்கிக் கொண்டே வந்து நின்றாள் சித்ரா. அவன் தமக்கை.
“என்னாச்சு... அம்மா ஏன் அழுறாங்க?”
“அக்கா... பாட்டி செத்துட்டாங்க” என்று அவன் கண்ணீருடன் கூற சித்ரா குழப்பத்துடன் இருவரையும் மாறி மாறி தலையைத் திருப்பிப் பார்த்தாள். பின் அவர்கள் அருகே அமர்ந்தவள்,
“ஆமா... பாட்டி செத்துட்டா பரவாயில்லனு நீதானே சொன்ன... அப்புறம் ஏன் இப்போ அழுற” என்று கேட்டு வைக்கச் செல்விக்கு அதிர்ச்சி.
“அடிப்பாவி நான் பாட்டி சாகனும்னாடி எங்கடி சொன்ன” என்றவர் மகளை கோபத்துடன் சரமாரியாக அடிக்கவும்,
“ம்மா... விடும்ம்மா... அக்காவை விடு... அவ தெரியாம ஏதோ சொல்லிட்டா” என்று ஜீவா தடுத்து பிடிக்க, சித்ரா குழந்தையை போல தேம்ப ஆரம்பித்துவிட்டாள்.
“ஏன் மா... உன் கோபத்தை எல்லாம் காட்ட அக்காதான் கிடைச்சாளா?” என்று அம்மாவிடம் காய்ந்தவன்,
“அக்கா அழாதே க்காக” என்று சித்ராவை சமாதனம் செய்து ஓரமாக அழைத்து வந்தான்.
“பின்ன என்னடா... நான் உங்க பாட்டி சாகணும்னா சொன்னேன்... இப்படி படுத்த படுக்கையா இருக்கிறதுக்கு போய் சேர்ந்தாலே பரவாயில்லனு சொன்னேன்... அதை கேட்டுட்டு இவ இஷ்டத்துக்கு எப்படி சொல்றான்னு பார்த்தியா... பாவி... இப்படியே வரவங்க முன்னாடி எல்லாம் சொல்ல போறா” என்று கேட்டுக் கொண்டே இன்னும் அதிகமாக அவர் அழுது புலம்ப,
“மா... அக்காதான் புரியாம பேசுதுனு நீயும் ஏன் மா?” என்றான்.
“இவ இப்படியே வீட்டுக்கு வரவங்க கிட்ட சொல்லி தொலைச்சானா அவங்க எப்புடுறா எடுத்துப்பாங்க... மூளை வளர்ச்சி இல்லாத புள்ளதான் ஏதோ சொல்லுதுன்னு சாதாரணமா எடுத்துட்டு போவாங்களா?” என்றதும் பெருமூச்செறிந்த ஜீவா சித்ராவின் தோளை அணைத்துப் பிடித்து,
“அக்கா நீ இந்த மாதிரி யார்கிட்டயும் பேச கூடாது” என்று அறிவுறுத்தினான்.
“ஆனா அம்மா அப்படிதானே சொல்லுச்சு” என்று அப்போதும் அவள் அதையே சொல்லச் செல்வி சீற்றத்துடன், “இவளுக்கு எல்லாம் ரொம்ப தெரியும்... வாயை மூடிட்டு உள்ளே போடி” என்று கத்தினார்.
“ம்மா நீ டென்ஷன் ஆகாத... நான் அக்காகிட்ட பேசுறேன்” என்றான்.
“அவகிட்ட நீ என்ன சொன்னாலும் இப்படிதான் எடாகுடமா சொல்லி வைப்பா... பேசாம எல்லோரும் வந்து போற வரைக்கும் அவளை அந்த ரூமுக்குள்ளயே பூட்டி வை டா”
“இல்ல இல்ல... ரூமுக்குள்ள போக மாட்டேன்... ஜீவா என்னை ரூமுக்குள்ள போட்டு பூட்டாத” என்று சித்ரா அழ அவனுக்கு இருவரில் யாரைச் சமாதானம் செய்வது என்றே புரியவில்லை.
இதில் பாட்டியில் ஈமக் காரியங்களுக்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டும். உறவினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். நாளையும் பள்ளியில் விடுப்பு சொல்ல வேண்டும்.
இதெல்லாம் தாண்டி வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் செலவுக்குப் போதுமா என்ற பார்க்க வேண்டும்.
அவனுக்குத் தலையைச் சுற்றியது. அந்த நான்கு சுவர் அவனை நாலாபுறமும் சுற்றி வளைத்து அழுத்த முற்பட்டது போன்று உணர்ந்தான்.
அதற்கு மேல் உள்ளே நிற்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டான். ஒருவாறு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட பின், ஜீவா உறவினர்களுக்கு எல்லாம் அழைத்து தகவல் சொன்னான்.
4

Quote from Marli malkhan on November 11, 2024, 2:26 PMSuper ma
Super ma