You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Uruguthe Ullam Negizhuthe Nenjam - 18

Quote

அத்தியாயம் 18

உன் நினைவு மட்டுமே

என்னுள் உலாவிட

நீ மட்டுமே வேண்டுமென

ஏங்குகிறது மனது...

நீ எனக்கு மட்டுமே

உரிமையானவனென

துடிக்கிறது இதயம்....

உன் காதலில் உழன்று

தவிக்கிறேன் நான்...

என்னை என்ன செய்தாயடா??

 

"என்னடா கவலை உனக்கு ?? சொன்னா தானே தெரியும்" என்றவன் கேட்க,

"நான் உனக்கு ஏத்தவ தானா இளா??" என வேணி மனதின் வலியை முகத்தில் தேக்கி அவனை நோக்கி கேட்க,

அவளின் கேள்வியின் திகைத்தவன்,

"உன்னை தவிர எனக்கு வேற யாரும் பெஸ்ட் பேர்ரா இருக்க முடியாதுடா இந்த ஜென்மத்துல" என்றான் இளா அவள் விழிகளில் தன் பார்வையை ஊடுருவச் செய்து.

"நான் ரொம்ப சின்னப்பிள்ளைதனமா இருக்கேன்ல இளா. பாரு மஹா மதிய மரியாதையா பேசுறா.... வீடு வாங்கிட்டாங்க. அவங்க பிள்ளைகள் வரைக்கும் பியூசர் ப்ளான் வச்சிருக்காங்க. ஆனா நான் இன்னும் உன் கூட சண்டை போட்டுகிட்டு சமையல் கூட ஒழுங்கா செய்ய தெரியாம உன்னை படுத்தி எடுத்திட்டு இருக்கேன்ல" என்று பாவமாய் வேணிக் கேட்க,

அவளை அருகிலழைத்து தன் மார்பில் சாய்த்துக் கொண்டவன், "அவங்கவங்க அவங்கவங்களா இருந்தா தான்டா நல்லாயிருக்கும். மஹா வேற வேணி வேற தானே. நீ நீயா இரு...  எனக்கு நீ இப்படி இருந்தா தான் பிடிக்கும். என்ன கொஞ்சம் பொறுப்பு வரணும். அது வரவேண்டிய நேரத்துல வரும்" என்றவள் தலையை வருடி அவன் கூற, சற்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாளவள்.

தற்பொழுதெல்லாம் அவனுக்கு முத்தம் கொடுப்பது இயல்பான விஷயமாய் மாறிப்போயிருந்தது வேணிக்கு. அவ்வாறு இயல்பாக்கியிருந்தான் இளா அவளை.

அவளின் முத்தத்தில் முகம் மலர்ந்தவன், "சரி மேடம் பொறுப்பு வந்து என்ன ஃப்யூசர் ப்ளான்லாம் யோசிச்சீங்க" என்றவன் கேட்க,

"முதல்ல உன்னை பப்ளிக் ப்ளேசுல மரியாதையா பேசனும்" என்றவள் தீவிரமாய் கூறியதும் அதிர்ந்து விழித்தவன்,

"எப்போதுலருந்து இந்த ஞானோதயம். உங்கம்மா சொல்லும் போதே கேட்காத ஆளு தானே நீ" என்றவன் கேட்க,

"மப்ச் நான் உன்னை எப்படி வேணாலும் பேசுவேன். அது எனக்குள்ள உரிமை. அதை வச்சி வெளி ஆளுங்க யாரும் அவன் பொண்டாட்டியே அவனை மதிக்கிறதிலனு சொன்னா என் மனசு ரொம்ப கஷ்டப்படும். அதான்"

"சூப்பர். ட்ரையலுக்கு ஒரு நாள் நம்ம வாணிய வீட்டிக்கு வர வச்சி நீ எப்படி என்னை மரியாதையா பேசுறனு பார்க்கலாம்" என சிரித்தானவன்.

"அய்யோ அவளா... வேற வினையே வேண்டாம். அவளே என்னை குழப்பி விட்டுருவா" என்று கூறியவள் தன் ப்யூசர் ப்ளானை தொடர்ந்து கூற,

"சரி அம்முகுட்டி. நம்ம சம்பாதிச்சி வீடு கட்டி பணம் லாம் சேர்த்து வச்சி யாருக்குமா கொடுக்கப் போறோம். அனாதை ஆசிரமத்துக்கா" என கிண்டலாய் அவன் கேட்க,

"ஏன் அனாதை ஆசிரமத்துக்கு கொடுக்கனும். நம்ம பெத்துக்கப்போற பிள்ளைக்கு கொடுப்போம்" என்றாளவள் வெள்ளந்தியாய்.

"ஹோ சரி. பிள்ளை எப்படி தானா மரத்திலயிருந்து குதிக்குமா??" என நமட்டு சிரிப்புடன் அவன் கூற,

அதன்பின்பே அவன் கூற வருவதன் பொருள் உணர்ந்தாளவள்.

அதன் அர்த்தம் விளங்கியதும் அவள் உடல் விரைத்துக் கொள்ள, "எனக்கு தூக்கம் வருது" எனத் தள்ளி படுத்துக் கொண்டாள்.

"என்னடா அம்ஸ். உனக்கு இதுல என்ன பிரச்சனைனு சொன்னா தானே எனக்கு தெரியும்" என்றவளருகில் சென்று அவன் கேட்க,

"என்னனு சொல்ல தெரியலை இளா. எனக்கு கொஞ்சம் டைம் வேணும். அன்னிக்கு நீ சொன்னியே தாம்பத்தியம் நீயில்லாம நானில்லை அந்த ஃபீல் உன்னை உன் உயிரை நான் தாங்கனும்ங்கிற அந்த ஆவல் எனக்கு வரனும் இளா"

"நான் உன்னை கஷ்டப்படுத்துறேனு தெரியுது..." என துக்கமாய் அவளுரைக்க,

"அதெல்லாம் ஒன்னுமில்லை அம்முகுட்டி. உன் ஃபீலிங்க்ஸை தெரிஞ்சிக்க தான் கேட்டேன். இதெல்லாம் தெரிஞ்சி பேசி தானே மேரேஜ் செஞ்சோம். அதனால இது என்னிக்குமே எனக்கு டிஸ்அப்பாய்ன்மெண்ட்டா இருந்ததில்லை" என்றுரைத்தவன்,

"அதுக்காக தள்ளி தான் படுக்கனும்னு அவசியமில்லை" என்றவன், அவளை தன் கைவளைக்குள் வைத்து உறங்கச் செய்தான்.

அவளுறங்கியதும் அவளின் நெற்றியில் முத்தமிட்டவன், "என் செல்ல அம்முகுட்டி. நீ இப்படி என் கைக்குள்ள இருந்தாலே போதும்டி. தள்ளியிருந்தவ இப்படி என்னை ஒட்டிக்கிட்டு தூங்கிற அளவுக்கு வந்திருக்கியே. அதைப்போல அதுக்கும் உன் மனம் மாறும். அதுவரை நான் காத்திட்டு இருப்பேன்டி தங்கம்" என தன் மனதிற்குள் பேசிக் கொண்டானவன்.

 

நல்ல நிலவு தூங்கும் நேரம்

அவள் நினைவு தூங்கவில்லை

கொஞ்சம் விலகி நின்ற போதும்

இந்த இதயம் தாங்கவில்லை

காற்று வாங்க போனேன்

ஒரு கவிதை வாங்கி வந்தேன்

அதை கேட்டு வாங்கி போனாள்

அந்த கன்னி என்ன ஆனாள்

பக்கத்து வீட்டிலிருந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்த பாடல் ஜன்னலின் வழியாக இவனின் செவியை தீண்ட தன்னவளை எண்ணிய ஏகாந்த மனநிலையில் உறங்கிப்போனானவன்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல, சென்னையில் தங்களின் புதிய ஃப்ளாட்டில் செட்டிலாகி இருந்தனர் மஹாவும் மதியும்.

ஓர் நாள் மாலை மஹா வீட்டை அடைந்த நேரம், தான் வர சிறிது நேரமாகுமென கைபேசியில் அழைத்து கூறினான் மதி.

எட்டு மணி வரை இரவுணவு தயாரித்துவிட்டு மெத்தையில் மஹா அமர்ந்த நேரம், ஒலித்தது வீட்டு அழைப்பு மணி.

சென்று கதவை திறந்தாள் மஹா. வேலையால் ஏற்பட்ட சோர்வு முகத்தில் இருந்தாலும் அவளை கண்டதும் உண்டாகிய பளீர் புன்னகையுடன், "ஹாய் டார்லிங்" என்றபடி உள் நுழைந்தான் மதி.

"நான் ரிஃப்ரஷ் ஆயிட்டு வரேன். டின்னர் எடுத்து வைக்கிறியா??.. செம்ம பசில இருக்கேன்" என்றவன் உரைக்க,

"ஹ்ம்ம் டின்னர் ரெடி தான் மதிப்பா. நீங்க டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வாங்க சாப்பிடலாம்" என்றவள் முகப்பறையில் இருந்த மெத்தையில் அமர்ந்தாள்.

மதி குளியலறை சென்று ரிஃப்ரஷாகி முகப்பறை வந்துப் பார்க்க, மெத்தையின் நீளத்திற்கு ஏற்றவாறு தன் உடலை சுருக்கி படுத்திருந்தாள் மஹா.

அவனுக்காக காத்திருந்தவள், அயர்வில் அவளறியாது உறங்கியிருந்தாள்.

மென்னகையுடன் அவளைப் பார்த்திருந்தவன், அவளருகே இருந்த சிறு இடைவெளியில் அவளை அணைத்துக்கொண்டு அவள் முகத்தை தன் மார்பில் தாங்கிக் கொண்டு இவன் படுக்க, அந்த அசைவினில் சிறிது கண் விழித்தவள், "பசிக்குதுனு சொன்னீங்களே. வாங்க சாப்பிடலாம்" என அவள் எழப் போக,

"இல்லடா. இப்படியே கொஞ்சம் நேரம் இருக்கலாம்" எனக் கூறி அவளை தன்னுடன் அணைத்துக்கொண்டான்.

"என்னடா இன்னிக்கு ரொம்ப வேலையா?? டயர்டா தெரியறியே??" என்றவன் கேட்க,

அவன் மார்பில் தலை சாய்த்திருந்தவள் முகத்தை நிமிர்த்தி அவன் முகம் நோக்கி, "ஆமா மதிப்பா... இடுப்பு ரொம்ப வலிக்குதுப்பா" என இடுப்பில் கை வைத்து வலியில் முகத்தைச் சுருக்கி அவள் கூறிய நொடி, அவளை தன் கையில் ஏந்தியவன் படுக்க வந்திருந்தான் அவளை தங்களின் கட்டிலில்.

"இரு நான் மூவ் தடவி விடுறேன்" எனச் சொல்லி அதை எடுக்க அவன் விலக, அவன் கைகளை பற்றியவள், "அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல சாப்பிடுவோம்" என அவன் கைகளை பற்றிக்கொண்டு சாப்பிடும் அறைக்கு அழைத்துச் சென்றாள் அவனை.

இருவரும் மற்றவருக்கு ஊட்டிவிட்டு உணவினை உண்டு முடித்ததும், அவளை கட்டிலில் படுக்கச்செய்து முதுகுலிருந்து இடுப்பு வரை மூவ் தடவி நன்றாக நீவி விட்டானவன்.

அவனின் அழுத்தமான மசாஜில் வலி குறைந்து தூக்கத்தில் அவள் கண்கள் சொருக, அவனை இழுத்து தன்னருகில் படுக்கச் செய்தவள் வலி நிவாரணியாய் மாறிய அவன் கைகளுக்கு முத்தமிட்டு அவன் மார்பில் சாய்ந்து உறங்கிப்போனாள்.

மறுநாள் காலை அவளை எழுப்பியவன், "முதல்ல ஆபிசுக்கு லீவ் சொல்லு. மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் ஹோட்டல்ல சாப்டுக்கலாம். அப்புறம் டாக்டர் பார்க்க போறோம். நான் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிட்டேன்" எனக் கூறி மஹாவை கிளம்பச்சொன்னான்.

"அய்யோ சின்ன இடுப்பு வலிக்கு டாக்டரா?? அதெல்லாம் வேண்டாம் மதி. ஐம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட் நௌ." என்றாள் மஹா.

"நான் சொல்றதை இப்ப கேட்கப்போறியா இல்லையா" என்றவன் சற்று அதட்டலாய் கூற,

அவனுக்கு ஒழுங்கு காட்டியவள் குளிக்கச் சென்றாள்.

பின் இருவரும் கிளம்பி உணவகத்தில் காலை உணவை உண்டுவிட்டு பிசியோதெரபிஸ்ட்டை காணச் சென்றார்கள்.

அந்த டாக்டர் மதியின் பள்ளித் தோழர் என்பதால் சிநேகமாகவும் கிண்டலும் கேலியுமாகவே இருவரிடமும் பேசினார். பின் தன் பணியின் காரணமே இவ்வலி வந்ததாய் மஹா கூறவும் கம்ப்யூட்டரில் வேலை செய்யும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை உரைத்தாரவர்.

"பொதுவாகவே ஐடில வேலை செய்றவங்களுக்கு இந்த முதுகு வலி இடுப்பு வலி காமென் ஹெல்த் இஸ்யூவாகிப் போச்சி. அதுக்கு காரணம் அவங்க சேர்ல உட்காருர பொசிஸன் தான். நாங்க ஐடி கம்பெனிகளுக்கு போகும் போது அவங்களுக்கு கொடுக்கக் கூடிய கவுன்சிலிங்கை உங்களுக்கு நான் சொல்றேன். அதை நீங்க ஃபாலோ செஞ்சீங்கனா, இந்த வலிலாம் இருக்கவே இருக்காது" என்றவர்,

தன் கையில் ஒரு வரைபடத்தை எடுத்து வைத்துக்கொண்டு விளக்கவாரம்பித்தார்.

  1. உங்க கண் பார்வை மானிட்டருக்கு நேரா இருக்கனும். அப்படி இருக்குற மாதிரி சேர் அட்ஜஸ்ட் செஞ்சி உட்காருங்க. மேலயோ கீழயோ பார்வை இருக்க மாதிரி உட்கார்ந்தா நீங்க கழுத்தை அதற்கேற்றார்ப்போல் அசைக்கும் போது கழுத்து வலி ஏற்படும்.
  2. உங்க முதுகு மற்றும் இடுப்பு நிமிர்ந்து நேரா இருப்பது போல் அமரனும். அப்படி அமரும் போது உங்கள் முதுகையும் இடுப்பையும் சேர் பேக்சைட் சப்போர்ட் செய்யனும். ஒரு சில சேர்ல இடுப்புப்பக்கம் இடைவெளி இருக்குற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த கேப்ல சின்ன பில்லோ வச்சி உட்காரலாம். மொத்தத்தில் இடுப்பு முதுகு இரண்டு பின்னாடி ரெஸ்ட் ஆகிறது போல உட்காரனும்.
  3. கீபோர்டு அண்ட் மௌஸ் உங்க கைக்கு நேரா இருக்குறது போல வையுங்க. கையை தூக்கியோ இல்ல இறக்கியோ நீங்க டைப் செய்றது போல சேர் பொஸிஷன் இருக்கக்கூடாது. ஹேண்ட் அண்ட் கீப்போர்டு ஷுட் பி இன் ஈவன் பொஸிஷன்.
  4. Arm rest and foot rest கண்டிப்பா தேவை.

இதில்லாம நாங்க சொல்ற அடிஷ்னல் அட்வைஸ், "ப்ளீஸ் பிளிங்க் யுவர் ஐஸ். வேலை செய்ற ஆர்வத்துல கண்ணை சிமிட்ட மறந்திடுவோம். வேலை செய்யும் போது கண் சிமிட்ட மறக்காதீங்க. அப்புறம் ஒன்ஸ் இன் எவ்ரி ஒன் ஹவர் ஆர்  டூ அவர் சேரை சாச்சு கண்மூடி கண்ணை ரிலாக்ஸ் பண்ணுங்க. டிரிங்க் மோர் வாட்டர். அடிக்கடி எழுந்திருச்சி கொஞ்சம் வாக் பண்ணுங்க. அப்படியே உட்கார்ந்துட்டே இருக்காதீங்க. இதெல்லாம் பின்பற்றினாலே உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பாதுக்காக்க முடியும்" என்று தன் உரையை முடித்தவர் வலி நிவாரணியாய் சில மாத்திரைகளை வழங்கி வலி அதிகம் இருக்கும் சமயத்தில் மட்டும் உபயோகிக்குமாறு கூறினார்.

இவற்றை நன்றாய் கேட்டுக்கொண்டனர் மஹாவும் மதியும்.

பின் சிறிது நேரம் டாக்டர் நண்பனுடன் பேசிவிட்டே கிளம்பிச்சென்றனர் மதி தம்பதியர்.

வீட்டிற்கு வந்ததும் டாக்டர் கூறிய அனைத்தும் அவள் பின்பற்ற வேண்டுமென்ற கண்டிப்பான உத்தரவையும்  அவன் போட தவறவில்லை.

ஜனவரி 2013

ஆஷிக் ரஹானா திருமணம் ரஹானாவின் ஊரான ஆரணியில் நடந்து முடிந்திருந்தது. அதற்கான வரவேற்பு மறுநாள் சென்னையில் வைத்திருந்தனர்.

ஆஷிக்கிற்கு நண்பர்கள் அதிகம் என்பதால் அவனுடைய பள்ளி கல்லூரி தோழமைகள் பெரும் படையாய் வந்திருந்து கேக் வெட்ட செய்து ஆர்ப்பாட்டம் செய்திருந்தனர்.

அந்நேரத்தில் வந்தனர் வாணி மற்றும் ப்ரண்ட்ஸ் குழாம். வாணி தன் தந்தையுடன் வந்திருக்க, வேணி இளாவுடனும், மஹா மதியுடனும் தம்பதியராய் கலந்துக்கொண்டனர்.

வாணியைப் பார்த்ததும் கேபிக்கா என அணைத்துக் கொண்டாள் ரஹா.

"ஹே எப்படி கண்டுப்பிடிச்ச??" என ஆச்சரியமாய் வாணி வினவ,

"ஆமா இது கண்டுபிடிக்கிறது பெரிய விஷயம் பாரு. நான் கேபினு கூப்பிடறதுக்கு ஏத்த சைஸ்ல தானே நீயும் இருக்க. என்ன இப்ப கொஞ்சம் அகலமாகிட்ட" என ஆஷிக் கூற,

"டேய் நல்லநாள் அதுவுமா அடிக்க கூடாதேனு பார்க்கிறேன்" என அடிக்குரலில் சீறினாள்.

வாணியின் பேச்சில் சிரித்துக் கொண்டிருந்தாள் ரஹானா.

"எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை அடுத்து பார்க்கும் போது வச்சி செய்றேனா இல்லயா பாரு" என வாணி உரைக்க,

"ஆஆஆ அம்மாஆஆஆ பயந்துட்டேன்" என அவளுக்கு ஒழுங்கு காட்டியவன்,

"இங்க ஒருத்தி புருஷனை அடிக்கிறேனு சொல்றா. நீ கெக்கபெக்கேனு சிரிச்சிட்டு இருக்க. அவளை இந்நேரம் ஒரு வழிப் பண்ணி உன் புருஷன் பக்திய காமிச்சிருக்க வேண்டாமா" என ரஹானாவிடம் வீரமாய் அவன் வசனம் பேச,

"ரஹாப் பொண்ணு, உன் புருஷனை நான் அடிச்சா தானே தப்பு. எனக்கு பதிலா நீ அடிச்சிடுடா" என கண்சிமிட்டி வாணிக் கூற,

"கேபிக்கா சொன்னா சரி தான்" என சிரித்துக் கொண்டே வழிமொழிந்தாள் ரஹானா.

"நல்லா கூட்டு சேர்ந்திருக்கீங்க எனக்குனு. அவ அடிய எப்படி சமாளிக்கனும்னு எனக்கு தெரியும். அதுக்கெல்லாம் பயிற்சி எடுக்காமலா மேரேஜ் கிணத்துல குதிப்போம் நாங்க" என கேலியாய் அவன் கூற,

வாய் விட்டு சிரித்தனர் அனைவரும்.

"இதே போல இரண்டு பேரும் எப்போதும் சந்தோஷமா நிம்மதியா இணைப்பிரியாம விட்டுக்கொடுத்து வாழனும். விஷ் யூ போத் எ ஹேப்பி ஹேப்பி மேரீட் லைஃப்" என வாழ்த்தினாள் வாணி.

"தேங்க்ஸ் எ லாட் கேபி" என மனநிறைவாய் கூறினான் ஆஷிக்.

இவர்களின் இச்சம்பாஷணையை அருகிலிருந்து கண்டிருந்திருந்தார் வாணியின் தந்தை. அவரும் அவர்களின் நட்பில் பூரித்து தான் போனார்.

மே 2013

வேணி இளா திருமணம் முடிந்து நான்கு மாதமாகிய நிலையில்,

வேணி செகண்ட் ஷிப்ட் சென்ற அந்த நாளில், இளாவுடன் கேஃபிடேரியாவில் அமர்ந்து, தான் சமைத்து எடுத்து வந்த உணவைப் பரிமாறிக் கொண்டிருந்தாள் அவனுக்கு.

தட்டில் சாப்பாடு வைத்தும் உண்ணாமல் இளா எங்கோ வெறித்து நோக்க, எங்கிவன் பார்க்கிறானென அவன் பார்வையின் திசையைப் பின்பற்றி இவளும் பார்க்க, அங்கே ஓர் பெண் புடவை அணிந்து நீளமான தலைமுடியை பின்னலிட்டு பூச்சூடி அழகாய் சிரித்துக் கொண்டே தன் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

"அங்கென்ன பார்வை?? கண்ணை நோண்டிடுவேன்" என்றுரைத்துக் கொண்டே இளாவின் கையை நறுக்கென அவள் கிள்ளி வைக்க,

ஆஆஆவென அலறியவன்,

"ஸ்ஸ்ஸ் லூசாடி நீ... இப்படி கிள்ளி வைக்குற" எனக் கையை தடவிக்கொண்டே கூறினான்.

"உனக்கே தெரியும் நான் மாசாமாசம் முடி கட் பண்ற ஆளு. உனக்காக தான் நான் முடியை வெட்டாம நீளமா வளர்த்துட்டு இருக்கேன். இந்த மூக்குத்திக் கூட உனக்காக தான் உனக்கு பிடிக்குமேனு தான் குத்தினேன். நீ என்னடானா என் முன்னாடியே இன்னொரு பொண்ணை சைட் அடிச்சிட்டு இருக்க" என உக்கிரமாய் உரைத்து முகத்தை திருப்பிக் கொள்ள,

அவளின் பொஸஸிவ்னஸ் நிறைந்த இக்கோபத்தில் அவன் மனம் குத்தாட்டம் போட, மெலியதாய் சிரித்தவன் அவளை மேலும் சீண்டும் பொருட்டு பேசலானான்.

"டேய் அம்முக்குட்டி, என்னடா நீ இதுக்கு போய் கோவிச்சிக்கிற. எத்தனை தடவை உன் கிட்ட இந்த பொண்ணு அழகா இருக்கு. அந்த பொண்ணு அழகா இருக்குனு காமிச்சிருக்கேன். நீயும் என் கூட சேர்ந்து ஆமா சொல்லி பார்ப்பியே" என்றவன் கூற,

"அது அப்போ இது இப்போ" என்று முறைத்தாள் அவனை,

வாய்குள்ளே சிரித்துக் கொண்டவன், "ஏன் என்ன வித்தியாசம் வந்துச்சாம் அப்போக்கும் இப்போக்கும்" என்றவளை வம்பிழுக்க,

"அதெல்லாம் அப்படி தான். இப்போ என்னை தவிற அழகுனு யாரயாவது பார்த்தே கொன்றுவேன்" என ஆங்காரமாய் கூறியவள்,

பின் மெல்ல அவள் கண்களில் நீர் திரையிட அவனை நோக்கியவள், "ஏன் இளா நான் அழகா இல்லையா??" என்று கேட்ட நொடி,

எதிர் இருக்கையில் இருந்தவன் அவளருகில் இருந்த இருக்கைக்கு மாறி அமர்ந்து அவள் கைகளை தன்னுடன் கோர்த்தவன்,

"என்ன பேச்சு பேசுற நீ?? என்னை பத்தி உனக்கு தெரியாதா?? உன்னை வம்பிழுக்க தான் அந்த பொண்ணையே நான் பார்த்தேன். நம்ம மேரேஜ்க்கு பிறகு நான் எந்த பொண்ணை பத்தியாவது உன் கிட்ட பேசிருக்கேனா இல்ல பார்த்திருக்கேனா??" என அவள் விழி நோக்கி அவன் வினவ,

"சாரி இளா" என்றாள் தன் தலையை குனிந்தவாறே,

"தட்ஸ் ஓகே. சாரி நானும் உன்னை ஹர்ட் பண்ணிட்டேன் வம்பிழுக்கிறேனு" என மனம் வருந்தி அவன் கூற,

"அதெல்லாம் பரவாயில்லை இளா. உனக்கு பிடிச்ச கத்திரிக்காய் காரக்குழம்பு வச்சிருக்கேன் இன்னிக்கு" என்றுக் கூறி அந்த தட்டை அவனிடத்திற்கு வைக்க,

சாப்பாட்டை பிசைந்து உண்டவன், "செம்மயா தேறிட்டடா அம்முகுட்டி. சூப்பரா டேஸ்டா இருக்கு" என்றுரைத்துக் கொண்டே அவளுக்கு ஊட்ட கையை கொண்டுப் போக,

"அய்யோ இது ஆபிஸ்" என்றவள் பின் வாங்க,

"என் வைஃப்க்கு நான் ஊட்டுறதுக்கு எவன் என்ன சொல்லுவான்" என்று அவளுக்கு ஊட்டிவிட்டே சாப்பிட்டானவன்.

அந்நேரம் அங்கு வந்த இளாவின் டீம்மெட் ஷில்பாவிற்கு இளாவை வம்பிழுக்கத் தோன்ற, அவர்களின் அருகே சென்றவள், "இளா யூ ஆர் லுக்கிங் சோ ஸ்மார்ட் டுடே" என்றுக் கூற,

"அச்சச்சோ இப்ப தான் என் பொண்டாட்டிய மலையிறக்கி சாப்பிட வச்சிட்டிருக்கேன். இவ திரும்பவும் அவளை மலையேத்திடுவா போலயே" என மைண்ட்வாய்ஸில் பேசிக்கொண்டவன்,

அவளின் புகழுரைக்கு நன்றிக் கூறி சிரித்துக் கொண்டிருக்க, இங்கே இளாவை முறைத்துக் கொண்டிருந்தாள் வேணி.

சற்று நேரம் பேசிவிட்டு ஷில்பா செல்ல, "இங்க பாரு இளா... உன் மீசை மட்டுமில்ல... நீ மொத்தமா எனக்கு மட்டும் தான் பாத்தியப்பட்டவன். எனக்கு மட்டும் தான் உன்னை ரசிக்கிற உன்னை வர்ணிக்கிற உரிமை இருக்கு. சொல்லிட்டேன். இனி எவளாவது இப்படி சொல்லும் போது ஈஈனு இளிச்சிட்டு இருந்தேனு வை... பல்லதட்டி கையில கொடுத்திடுவேன்" என்று கோபமாய் உரைத்துவிட்டு அவள் அங்கிருந்து எழப்போக,

அதுவரை அவளின் பேச்சை ரசனைப் பாவத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவன், அவள் எழப்போகவும் கோபம் உச்சமேற, "நான் இப்ப சாப்பிடவா வேண்டாமா அம்ஸ்" என்றான்.

உடனே தன் இருக்கையில் அவள் அமர, அவளுக்கு ஊட்ட அவன் கைகள் நீண்டதும் வேண்டாமென அவள் தலையசைக்க, "சரி எனக்கும் வேண்டாம்" எனக் கூறி அவன் எழ முற்பட, அவன் கைகளைப் பற்றி அமர வைத்தவள் தானே அவனுக்கு ஊட்டிவிட்டாள்.

பின் இருவரும் உண்டு முடித்து கைகழுவியதும் வேணியிடம் சிறிது பேச வேண்டுமெனக் கூறி அவர்களின் அலுவலகத்தில் பூங்கா போன்ற அமைப்பிலிருந்த ஒதுக்குப்புறமான இடத்தில் பெரிய ஆலமரத்தின் கீழிருந்த அமர்வு இருக்கையில் அமரச் செய்தான் அவளை.

அவளருகில் அமர்ந்து அவள் கைகளை தன் கைக்குள் வைத்து மிருதுவாய் தடவிக்கொண்டே பேசவாரம்பித்தானவன்.

"அம்முகுட்டி ஆர் யூ ஃபீலிங் இன்செக்யூர்டு??" என்று கேள்வியாய் அவன் அவளைப் பார்க்க,

"தெரியலை இளா. ஆனா ரொம்ப கெட்டப்பொண்ணாக்கிட்டேன்டா. இப்பல்லாம் ரொம்ப பொறாமைபடுறேன். உன்கிட்ட எந்த பொண்ணாவது ரொம்ப முக்கியத்துவம் கொடுத்து பேசினா ரொம்ப கோவம் வருது" என்றவள் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டுக் கூற,

"ஹாஹாஹாஹா" என வாய்விட்டு சிரித்தவன்,

"அப்புறம்" என்றான்

"உன் கூடவே இருக்கனும் போல தோணுது. ஒரு நாள் உன்னை பார்க்கலைனாலும் மனசு வலிக்குது. என்னென்னமோ தோணுதுடா. மொத்தத்துல எப்பவும் உன்னையே தான்டா நினைச்சிட்டு இருக்கேன். என்னை விட்டு போய்ட மாட்டல இளா. என் அளவுக்கு உனக்கும் என்னை பிடிக்குமா இளா??" என அவன் தோளில் சாய்ந்து தன் மனவுணர்வுகளை அவள் கூற,

அதுவரை சிரிப்பாய் கேட்டிருந்தவன், என்னை விட்டு போய்ட மாட்டல என்ற கேள்வியில் விக்கித்துப் போனான். அந்தளவிற்கா அவள் தன்னை நேசிக்கிறாள் என்ற எண்ணம் அவனுக்கு மயிற்கூச்செறியச் செய்தது.

"உன்னை எனக்கு எவ்ளோ பிடிக்கும்னு கூடிய சீக்கிரத்துல காமிக்கிறேன்" என கண்ணடித்து அவன் கூற,

"என்னமோ வில்லங்கமா பேசுறனு தெரியுது. இதுக்கு மேல இங்கிருந்தா சரிக்கிடையாது" என்று இருக்கை விட்டு எழுந்தவள்,

வா போய் ஒழுங்கா வேலைய பார்ப்போம். சம்பளம் கொடுக்கிற எஜமானுக்கு கொஞ்சமாவது உழச்சி போடனும்ல என்றவாறு பேசிக்கொண்டே அவ்விடத்தை விட்டு நகர்ந்தனர் இருவரும்.

வேணிக்கு ஏனோ இன்று சீக்கிரம் வீட்டிற்கு செல்ல வேண்டுமென மனம் பரபரக்க, இரண்டாம் ஷிப்டில் இரவு 11 மணிக்கு கிளம்பிச்செல்பவள், இன்று 8 மணிக்கே கிளம்புவதாய் உரைத்து பெர்மிஷன் வாங்கிச்சென்றாள்.

இளாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க எண்ணி இவள் அவனிடம் கூறாது வீட்டிற்குச் சென்றுப் பார்க்க அவன் வேலைப்பளுவால் அலுவலகத்தை விட்டு கிளம்பாது இருந்தான்.

அவன் கைபேசிக்கு அழைத்து வீட்டிற்கு வந்துவிட்டதை உரைத்தவள், அவனுக்காக அவனுக்கு பிடித்தமான இரவுணவு தயாரிக்கலானாள்.

மணி பத்தை தாண்டியும் அவன் வீட்டிற்கு வராமலிருக்க, அவன் கைபேசிக்கு அழைத்தாளவள்.

அங்கு இளா அவனின் மேனேஜர் மற்றும் டீம் லீட் அவனை அவனின் கணினியை புடைச்சூழ அமர்ந்திருக்க, ஒரு இஷ்யூவை இன்றே சரி செய்யவேண்டுமென்ற முனைப்புடன் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்நேரம் சரியாய் அவனின் கைபேசி அலற, எல்லோரிடமும் எக்ஸ்க்யூஸ் சொல்லி அழைப்பையேற்றான்.

"என்னடா அம்மு... சாப்பிட்டியா?? எனக்கு வேலை இருக்குடா... எப்ப வருவேனே தெரியாது. எனக்காக வெயிட் செய்யாத... சாப்ட்டு தூங்கு" என்றுரைத்து விட்டு கைபேசியை வைத்தான்.

"ந்யூலி மேரீட்ல. கொஞ்சம் நாளைக்கு அப்படி தான். நேரத்துக்கு சாப்பிடீங்களா இல்லையானு தவறாம ஃபோன் வரும். அப்புறம் இப்டி ஒரு ஆளு இருக்கோம்ன்றதே மறந்துடுவாங்க" எனக் கேலியாய் அவனின் லீட்கூற,

அவரின் நியூலி மேரிட் என்ற விளிப்பில் அவன் முகத்தில் சிறு வெட்கம் படற அமைதியாய் அமர்ந்துக்கொண்டு வேலை பார்க்கலானான்.

மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து அவள் அழைக்க, இங்கே இஷ்யூ சால்வ் செய்ய முடியாமல் நீண்டுக்கொண்டே போவதின் எரிச்சலில் இருந்தவன்

"எக்ஸ்க்யூஸ் மீ" என தன் இடத்தைவிட்டு நகர்ந்து வந்து அழைப்பை ஏற்றவன்,

"அறிவிருக்காடி உனக்கு. இங்க மனுஷன் என்ன வேலைல இருக்கேன். சாப்டாச்சானு போன் பண்ணி டார்ச்சர் பண்ணிட்டு இருக்க" என்று அடிக்குரலில் கத்த,

மறுப்பக்கம் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் ஒரு துளி நீர் விழ, "போடா கோவக்காய்" என்றுரைத்து போனை வைத்துவிட்டாள்.

You cannot copy content