You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Uruguthe Ullam Negizhuthe Nenjam - 3

Quote

அத்தியாயம் 3:

என் சுயத்தை

வெளிக்கொணர்ந்தது

உன் நட்பு...

என் அபிமானத்தை

வெளிக்கொணர்ந்தது

உன் காதல்...

குழுக்களாய் பிரித்து அளிக்கப்பட்டப் பயிற்சியின் கடைசி நிலை பயிற்சியான ஒரு குழு ஒரு ப்ராஜக்ட் செய்ய வேண்டுமென்ற தேர்வுநிலையில் ராஜேஷ், ஆஷிக், மஹா, வேணி ஒரு குழுக்களாய் ப்ராஜக்ட் செய்வதில் ஈடுபட்டனர். அக்குழுவின் தலைவனாய் ராஜேஷ் இருந்தான்.

"என்ன தலைவலிக்குதா கேபி??" கேட்டான் ராஜேஷ்.

இந்த ஆஷிக்கின் உபயத்தால் அவளின் பேட்ஜ் மக்கள் அனைவரும் அவளை கேபி என்றே விளிக்கவாரம்பித்திருந்தனர்.

"இல்ல நேத்து நைட் படம் பார்த்துட்டு சரியா தூங்கலை. அதான் கண்ணு எரியுது. வேற ஒன்னுமில்ல" என்று தன் வலப்புறத்திலுள்ள கணிணியில் அமர்ந்து வேலை செய்துக் கொண்டிருந்த ராஜேஷிடம் உரைத்தாள் வாணி.

"அதென்ன படம்னு கேளு ராஜேஷ்" என்று அவனுக்கு எடுத்துக் கொடுத்தாள் இடப்புற கணிணியில் அமர்ந்திருந்த மஹாலட்சுமி.

இருவரின் நடுவில் தன் கணிணியில் கண் பதித்திருந்த வாணி மஹாவின் இப்பதிலில் அவளை முறைக்க,

"ஆஹா!!! அப்ப என்னமோ இருக்கு போலவே?? என்ன படம் பார்த்தீங்க நேத்து நைட்" எனக் கோரசாய் கேலியாய் கேட்டனர் ராஜேஷும் அவனருகில் இருக்கையிலிருந்த ஆஷிக்கும்.

"ஃபேமிலி படம் தான் பார்த்தோம். விவாஹ் இந்தி படம் ஜீ சேனல்ல போட்டான். அதை தான் பார்த்தோம்" விரைப்பாய் வாணி உரைக்க,

"பார்த்தோம் இல்லடி. பார்த்தேனு சொல்லு. டைம் ஆயிடுச்சு தூங்கலாம்னு நானும் வேணியும் கூப்பிடுகிறோம், படம் முடிஞ்சா தான் வருவேனு சொல்லிட்டா. வேற வழியில்லாம நாங்களும் இவளுக்கு கம்பெனிக் கொடுக்க முழு படத்தையும் பார்த்துட்டு தூங்கினோம்" என்று பாவமாய் மஹா உரைக்க,

"விவாஹ் ஃபேமிலி படமா உனக்கு??" என முறைப்பாய் ராஜேஷ் கேட்க, வாய்க்குள்ளேயே சிரித்துக் கொண்டே மஹா வாணியைப் பார்க்க,

"உன்னை... ரூம்க்கு வா. கவனிச்சிக்கிறேன்" என மஹாவிடம் அடிக்குரலில் சீறினாள் வாணி.

"அது எவ்ளோ அழகான காதல் படம். அதை என்னமோ விசு பட ரேஞ்சிக்கு ஃபேமிலி படம்னு சொல்லிட்ட??" என ராஜேஷ் குறைப்பட்டுக் கொள்ள,

"சரி அது அழகான காதல் கலந்த குடும்பப் படம். ஒத்துக்கிறேன்!! ஆனா அதுக்காக விசு படத்தை நீ குறைச்சு பேசுறதெல்லாம் ஒத்துக்க முடியாது" என வாணி ராஜேஷிடம் சீறினாள் இப்போது.

தங்கள் குழு செய்யும் ப்ராஜக்ட் தான் முதல் மதிப்பெண் பெற வேண்டுமென்ற பெரும் குறிக்கோளுடன் இரவு வரை தங்களின் நேரத்தை நீட்டித்து வேலை செய்தாலும், இவ்வாறாக சந்தோஷமாய் கேலிக் கிண்டலுடன் பேசி அரட்டை அடித்து வேலை செய்யும் அலுப்புத் தெரியாத வண்ணம் குதூகலமான மனதுடனே செய்தனர். அவ்வாறு செய்ய வைத்தனர் அக்குழுவின் தலைவன் ராஜேஷூம் ஆஷிக்கும்.

இவ்வாறு வேலை செய்வது வெகுவாய் கவர்ந்தது வாணியை. மனதில் அழுத்தமில்லாமல் குறிக்கோளை அடைய உதவிச் செய்யும் இவ்விரண்டு பேரும் வாணியின் உற்ற தோழர்களாய் மாறிப் போனார்கள். அதன் விளைவே இத்தகைய பேச்சிலும் அவளை இயல்பாய் பதிலுரைக்கச் செய்தது.

ராஜேஷ் அவர்களின் பேட்ஜ் மேட். இப்பொழுது வாணிக் குழுவின் தலைவன். இவனின் தலைமையில் இயங்கியது வாணியின் குழு.

கலகல சுபாவம் கொண்டவன். எவரையும் தன் கேலியான பேச்சால் நிமிடத்தில் சிரிக்கச் செய்பவன். எவர் அவனிடம் பழகினாலும் அவனை தனக்கு நெருக்கமானவனாய் எண்ண வைத்து விடுவான். மிகுந்த கோபக்காரன். சுயநலவாதியும் கூட. அவனுடைய சுயநலத்தால் தனக்கு அவன் கற்பிக்கப் போகும் வாழ்க்கை பாடம் அப்போது அறிந்திருக்கவில்லை வாணி.

ஆஷிக் அனைவரிடமும் ஓர் எல்லை வைத்து பழகுபவன். பிறருக்கு தன் உதவி தேவை எனும் போது உதவுவான் அதன் பின் அவர்கள் யாரோ எவரோ என்பது போல் நடந்துக் கொள்வான்.

தேவையில்லாது ஒரு வார்த்தை அவன் வாயிலிருந்து வராது.

ஏனோ ஆரம்பித்திலிருந்தே வாணியிடம் மட்டும் தான் தன் இயல்பையும் மீறி பேசினான் ஆஷிக்.

மூன்று மாதத்திற்குப் பின் பணியிடம் சென்னை வாங்கிவிட்டு செல்ல வேண்டுமென்ற எண்ணத்தினால் தன் தோழிகளால் தன் சகப்பணியாளர்களால் கிடைத்த சிறு சிறு சந்தோஷ நிகழ்வையும் தன்னை பூரிக்கச் செய்த தருணங்களையும் மனதில் சேமித்துக் கொண்டாள் வாணி.

வேணிக்கும் மஹாவிற்கும் இவை ஏதும் புதிதாய் தோன்றவில்லை. இயல்பாய் கடந்து வந்தார்கள் அந்த பயிற்சியினையும் அவர்களுக்கு கிடைக்கப் பெற்ற நட்புகளையும்.

அம்சவேணியுடனும் மஹாவுடனும் நெருங்கிப் பழகவாரம்பித்திருந்தாள் வாணி.

தன் ப்ராஜக்டின் தலைவன் என்கின்ற முறையில் பேசவாரம்பித்தது ராஜேஷிடம். அவனிடம் பேச வருபவர்களை நிமிடத்தில் சிரிக்க வைத்துவிடும் அவனின் சுபாவம் மிகவும் பிடித்து விட்டது வாணிக்கு. தன் உற்றத் தோழனாய் உணர்ந்தாள் அவனை. அவனும் அவ்வாறே அவளை உணரச்செய்தான் அவனின் பேச்சினால். ஆனால் இவை எல்லாம் கானல் நீரென உணரவில்லை அவள். மனதில் பெரும் இடம் கொடுத்து புண்பட்டு போனாள் பின்னாளில்.

மூன்று மாத பயிற்சி முடிவடைய ஒரு வாரம் இருந்த நிலையில் அப்பயிற்சி நிறுவனம் அவர்களுக்கு விருந்து(Party) தருவதாயுரைத்தது. அந்நாள் மறக்க முடியாத நாளாய் மாறியது மக்கள் அனைவருக்கும்.

அனைவருக்குமே இத்தகைய விருந்து புதிதே. எனினும் மூன்று மாதத்தில் எல்லோரும் பரிச்சயமாகிய நிலையில் மகிழ்வாய் அமைந்தது அந்த பார்ட்டி.

ஆனால் வாணிக்கு இந்த பார்ட்டி மறக்க முடியாத நாளாய் அமைந்ததற்கு காரணம் வேறு.

--

லீலா பேலஸ் என்ற 3 ஸ்டார் ஹோட்டலில் ஸ்னோ பௌலிங் கேம் மற்றும் டிஜே டான்ஸ் பின்பு சவுத் இன்டீஸ் ஹோட்டலில் இரவு உணவு என ஏற்பாடு செய்திருந்தனர்.

ஸ்னோ பௌலிங்கில் ஆரவாரமாய் பங்கேற்று அனைவருமே விளையாட, டிஜே டான்ஸில் சில பெண்களும் அனைத்து ஆண்களும் பங்கேற்று நடனமாட பின்பு இரவு உணவு உண்டு கிளம்பும் நேரம் பதினொன்றைத் தொட்டது.

மற்ற பெண்கள் அனைவரும் ஒரு குழு ஆண்களுடன் தங்கள் பிஜிக்கு செல்ல, வாணி வேணி மஹா மூவரும் ராஜேஷ் ஆஷிக் மற்றும் சில ஆண்களுடன் தங்களின் பிஜிக்கு பயணப்பட்டனர்.

ஹோட்டலிலிருந்து ஒரு கிலோமீட்டரில் பிஜி இருப்பதாய் எண்ணி இவர்கள் தொடங்கிய நடைப்பயணம் இரண்டு மணி நேரம் தொடர்ந்தது இவர்களின் தவறான தூரக்கணிப்பினால்.

இரவு வேளையில் நிலவொளியில் மனதில் சிறு அச்சமும் துணிச்செயல் செய்வதாய் ஓர் எண்ணமுமாய் மூன்று பெண்கள் ஐந்து ஆண்கள் கிண்டலும் கேலியுமாய் ஓர் நடைப்பயணம்.

மிகவும் ரசித்தாள் வாணி. தன் மனதின் நினைவு பெட்டகத்தில் இணைத்துக் கொண்டாள் இந்நிகழ்வை. புகைப்படமெடுக்க மிகுந்த ஆர்வமுள்ள மஹா அந்நாளின் சுவாரசியமான நிகழ்வுகளை புகைபடமாக்கவும் தவறவில்லை.

லீலா பேலஸில் உற்சாகமாய் ஸ்னோபௌலிங் விளையாடிய மஹா, இரவுணவிற்காக உணவகம் சென்றப்பின் அமைதியாகிப் போனாள். அவள் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருப்பதாய் தோன்றியது அவளின் தோழிகளுக்கு.

அவர்கள் அவளிடம் ஏன் அமைதியாய் இருக்கிறாளெனக் கேட்டும் கூறவில்லை அவள்.

அன்றிரவு மிகுந்த சோர்வில் வாணியும் வேணியும் படுத்தவுடன் உறங்கிவிட, மஹா மதியைப் பற்றிய நினைவில் உறங்காது விழித்திருந்தாள்.

அன்றிரவு அவ்வுணவகத்தில் அவள் உண்ட பாசுந்தி அவனின் நினைவை தூண்டுவிட, அவளின் மனம் அவனின் நினைவுகளில் பயணித்தது.

நான்கு வருடங்களுக்கு முன்பு...

கல்லூரியில் சேர்ந்த அந்நாளில் தான் மதியழகன் மஹாவை முதன்முதலாய் பார்த்தது.

மதியழகன், காண்பதற்கு ஹைக்ளாஸ் பையனாகத் தெரிந்தாலும் பாரபட்சமின்றி எவ்வித வேறுபாடுமின்றி எளிமையாய் பழகும் குணாளன் அவன்.

அவனின் தாய் தந்தை அரசாங்க ஊழியர்கள். பெரும் செல்வ நிலையில் வளர்க்கப்பட்டவனாய் இருந்தாலும் அனைவரிடமும் இனிமையாய் பழகும் குணமுடையவன். பெரியவர்களை மதிக்கும் பண்புடையவன்.

சிறு வயதிலிருந்தே இரு பாலரும் பயிலும் சிபிஎஸ்இ யில் பயின்றவனாதலால் சரளமாய் மேலை நாட்டு ஆங்கிலத்தில் உரையாற்றுவான். ஆண் பெண் பாகுபாடின்றி நட்புகள் உண்டு.

கல்லூரியில் இருவரும் ஒரே வகுப்பில் பயில மஹாவிற்கு தன் வகுப்பில் பயில்பவன் என்ற நிலையில் மட்டுமே பரிச்சயமானவன் அவன்.

கல்லூரியில் சேர்ந்து ஆறு மாதமாகிய நிலையில் அனைவரிடமும் நட்பு பாராட்டி சரிசமமாய் பேசித் தோழனாய் ஆனவனால் ஏனோ மஹாவிடம் மட்டும் நேர்க்கொண்டு பேச இயலவில்லை.

அவளிடம் பேசும் போதெல்லாம் வார்த்தைக்கு திண்டாடிப் போனான். ஏதோ ஓர் தயக்கம் அவனை சூழ்ந்துக் கொள்வதைப்போல் உணர்ந்தான்.

இதைப் பற்றி மேற்கொண்டு யோசிக்க மனமில்லாமல் விட்டுச் சென்றான்.

இவ்வாறாக இரண்டு செமஸ்டர் முடிவடைந்திருந்த நிலையில் மதியிடமே மஹா உதவிக்கேட்கும் சூழ்நிலை அமைந்தது.

மஹாவும் மதியும் ஒரே கல்லூரிப் பேருந்தில் தான் பயணிப்பர்.

மஹா அவள் நிறுத்தத்தில் இறங்கிய பின்பே இவனின் நிறுத்தம் வரும்.

அவ்வாறு ஒரு நாள் அவளின் நிறுத்தத்தில் அவள் இறங்கியதும் அவளின் பின்னே ஓர் ஆடவன் அவளைத் தொடர்ந்து செல்வதைக் கண்டான் மதி.

தொடர்ந்து ஒரு வாரமாக அவ்வாடவன் இவளை தொடர்ந்துச் செல்வதைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான் மதி. மஹாவும் அவன் தன்னை தொடர்வது தெரிந்தும் கண்டும் காணாததுப் போல் நடந்துக்கொண்டாள்.

மறுநாள் அவளிடமே ஏதேனும் பிரச்சனையாயென வினவலாமென அவன் எண்ணியிருக்க,

அன்று அவளிடம் பேச அவனுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக...

அன்று மாலை அவள் இறங்கியதும் அந்நிறுத்தத்தில் அவ்வாடவனுடன் அவள் நின்றுப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது மதிக்கு.

பேருந்து நகர்ந்து விட...

கல்லூரிப்பேருந்தின் ஜன்னலின் வழியாய் இவற்றைப் பார்த்துக் கொண்டேப் போனானவன்.

அவளின் முகப் பாவனைகள் வைத்து அவளின் உணர்வுகளை கண்டுபிடிக்க முடியவில்லை அவனால்.

ஆனால் அவனின் மனம் ஏதோ தவறாய் நிகழப்போவதாய் உரைத்தது அவனுக்கு.

பேருந்தை நிறுத்தச் சொல்லி அவனும் இறங்கி அவளின் நிறுத்தத்திற்கு நடந்துச்சென்றான்.

இன்னும் அவள் அவ்வாடவனிடம் பேசிக் கொண்டுதானிருந்தாள்.

ஆனால் இப்பொழுது அவளின் முகம் கோபக்கனலாய் சிவந்திருந்தது.

மதி அவளருகில் சென்று மஹா என்றதும் தூக்கி வாரிப்போட திரும்பியவள் மதியைக் கண்டதும் ஆசுவாசமாய் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

"ஹே ரிலேக்ஸ் நான் தான்... ஏதாவது பிரச்சனையா மஹா??" மதி அவ்வாடவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே கேட்க,

மஹா அவ்வாடவனைப் பார்த்து, "நான் யாரயாவது லவ் பண்றனானு கேட்டல... இதோ இவர் தான் என் அத்தை பையன்... இவரைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு எங்க வீட்டுல எப்பவோ டிசைட் செஞ்சிட்டாங்க... இதை தான் உனக்கு அப்போதுலருந்து சொல்லிட்டு இருக்கேன்... இனியும் என்னை டிஸ்டர்ப் செய்யாம போறியா நீ" என கிட்டதட்ட கோபத்தில் உறுமிக் கொண்டிருந்தாள்.

இதைக் கேட்ட மதிக்கு நன்றாகப் புரிந்துப்போனது இவன் அவளைப் பின் தொடர்ந்து காதலிக்கச் சொல்லி டார்ச்சர் செய்கிறானென.

அவனிடமிருந்து தப்பிக்கவே இவள் இவ்வாறு உரைக்கிறாளெனப் புரிந்தது மதிக்கு.

மஹா மதியைக் காதலிப்பதாய் கூறியதும் அவ்வாடவனின் முகம் மிகுந்த வேதனையைக் காண்பிக்க,

"இங்க பாருங்க பாஸ். உங்க ஃபீலிங்க்ஸ் எனக்கு புரியுது. உங்களுக்காக பிறந்தவங்க உங்களைத் தேடிக் கண்டிப்பா வருவாங்க. மஹா உங்களுக்கானவ இல்லை. அவளோட வாழ்க்கை உங்களோட இணைக்கப்பட விதியில்லை. எனக்குத் தெரிஞ்சி இப்ப கொஞ்ச நாளா தான் நீங்க மஹாவ காதலிக்க ஆரம்பிச்சிருப்பீங்க. ஆரம்பத்திலேயே துளிர்கிற காதலை கிள்ளி எறிஞ்சிடலாம். வலி ரொம்ப இருக்காது. அது ரொம்ப வருஷமாகி மரமாகிப் போச்சுனா ரொம்ப வலிக்கும். அதனால கடவுள் இப்பவே உங்களுக்கு புரிய வச்சருக்காருனு நினைச்சு நன்றிச் சொல்லி மஹாவை மனசை விட்டு தூக்கி எறிஞ்சிடுங்க."

என மதி தன் அறிவரையை வழங்கினான்.

"பிடிக்காத பொண்ணை கட்டாயப்படுத்திக் காதலிக்க வைக்குற அளவுக்கு நான் கெட்டவன் இல்லை பாஸ். இந்த ஆறு மாசமா தான் மஹாவ எனக்கு தெரியும். அதுவும் இந்த பஸ் ஸ்டாண்ட்ல பார்க்கிறதோட சரி. அவங்களை ரொம்ப பிடிக்கும். அவங்க அமைதியா வந்தோமா போனோமானு தான் இருப்பாங்க... அந்த அமைதியான அழகு பிடிச்சுப் போய் தான் அவங்க கிட்ட வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்குறேனு சொன்னேன். அவங்க ஒத்துக்கலை. மஹா காதலிக்கிறதாப் பொய் சொல்றாங்கனு நினைச்சேன்..." என்றுரைத்தான் அந்த ஆடவன்.

"அப்புறம் ஏன் பாஸ் ஒரு வாரமாய் அவளை ஃபாலோ பண்ணீங்க?" கூர்மையாய் அவனை நோக்கி மதி கேட்க,

"ஒரு வாரமா பேச தயங்கி கொஞ்ச தூரம் போய் ரிட்டன் வந்துட்டேன் பாஸ்... இன்னிக்குத் தான் தைரியம் வந்து பேசினேன் அதுவும் இப்படி வந்து முடிஞ்சிடுச்சு"

இதைக் கேட்டு சிரித்தவன், "ஐயம் மதி, யுவர் குட் நேம் சார்??"

"பிரபு" என்றவன் உரைத்த நொடி அவனிடம் கை நீட்டிய மதி,

"நைஸ் டு மீட் யு பிரபு. உங்களுக்கு சீக்கிரமே மஹாவை விட நல்ல பொண்ணா கிடச்சு உங்க கல்யாணம் நடக்க மை பெஸ்ட் விஷ்ஷஸ் பிரபு"

என சிரித்தப்படி பிரபுவின் கைக்குலுக்க, பிரபு சிரித்துக் கொண்டே அவனின் வாழ்த்தை இன்பமாய் பெற்றுக் கொண்டு விடைப்பெற்று சென்றான்.

மஹா, "என்னடா நடக்குது இங்க??" என்ற மன நிலையில் வாய் திறந்து திகைப்பில் மதியின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவள், அவன் இறுதியாகக் கூறிய மஹாவை விட நல்லப் பெண் என்ற கூற்றில் மதியை முறைத்துக் கொண்டிருந்தாள்.

மஹாவைப் பார்த்து சிரித்தவண்ணம் "ப்ராப்ளம் சால்வ்டு. இப்ப ஹேப்பியா??" என மதி வினவ

"ம்ம்ம்" என மண்டை ஆட்டினாள் மஹா.

"இவ்ளோ தூரம் வந்துட்டேன். உன் வீட்டுக்கெல்லாம் என்னைக் கூப்பிட மாட்டியா??" என மதி கேட்க,

"ஓ சாரி... கண்டிப்பா வாங்க. வாங்க அப்படியே பேசிக்கிட்டே நடந்துப்போகலாம்" என மஹா உரைத்த நொடி இருவரும் அவளின் வீட்டை நோக்கி நடக்கலாயினர்.

"சாரி உங்களை கேட்காமலே அப்படி ஒரு பொய் சொல்லிட்டேன்" என குற்றவுணர்வில் தலை குனிந்தவள்,

"அதை நீங்க அட்வாண்டேஜா எடுத்துக்காம இப்படி கூலா ஹேண்டில் செஞ்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்" என நன்றி உரைத்தாள்.

"தட்ஸ் ஓகே. யு ஆர் வெல்கம்" என்றுரைத்த மதி

"உங்க அப்பா அம்மானா உனக்கு ரொம்ப பயமா??" என்று வினவினான்.

"இல்லையே... ஏன் அப்படி கேட்குறீங்க??" - மஹா

"பின்னே ஏன் வேற யாரயோ லவ் பண்றேனு சொல்லி பிரபுவை ரிஜெக்ட் செய்யனும்... ஐ டோண்ட் திங்க் இட்ஸ் அ குட் ஐடியா. அவர் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்குறேனு தானே சொல்லிருக்காரு. வீட்டுக்கு வாங்கனு சொல்லிட்டு, உங்க அப்பா அம்மா கிட்ட இவரை பிடிக்கலைனு சொல்லிருக்கிலாமே அண்ட் மோரோவர் யு குட் ஹேவ் ஹேடில்டு திஸ் இன் அ பெட்டர் வே" என அவனுரைக்க,

"மோஸ்ட்லி இந்த மாதிரி பிரச்சனைய வீட்டில சொல்ல மாட்டேன். வீட்டுல இப்படி கை நிறைய சம்பளத்தோட நல்ல வேலையோட பார்க்க கொஞ்சம் அழகாகவும் ஒருத்தர் வந்து பொண்ணுக் கேட்ட என்னைய தான் கன்வின்ஸ் பண்ணப் பார்ப்பாங்க. அதுவுமில்லாம இது வரைக்கும் எனக்கு வந்த லவ் ப்ரோபோசல்ஸ் அப்படிதான் நான் ரிஜெக்ட் செஞ்சிருக்கேன். ஆனா இவரு நான் பொய் சொல்றேனு கண்டுப்பிடிச்சிட்டாரு. அதான் நீங்க வந்ததும் சொன்ன பொய்ய மேனேஜ் செய்ய அப்படி சொல்லிட்டேன் சாரி"

என்று மஹா கண்ணைச் சுருக்கி பாவமாய் உரைக்க,

அவள் கூறிய கொஞ்சம் அழகென்ற வார்த்தையில் இவனின் மனதில் சிறு பொறாமை தீ எரிவதை இவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏன் அவ்வாறு மனம் விந்தையாய் செயல்படுகிறது என யோசித்த வண்ணம் அவளுடன் நடந்துச் சென்றான்.

அவனின் அமைதியைக் கண்டு தானும் அமைதியாய் நடக்கலானாள் மஹா.

அவளின் வீட்டை அடைந்ததும்,

அவனை வீட்டின் முகப்பறையில் அமரச் செய்தவள் சமயலறைச் சென்று தாயை அழைத்து வந்து மதியை அறிமுகம் செய்து வைத்தாள்.

"ஹலோ ஆன்டி" எனப் பழக்கதோஷத்தில் கை நீட்ட,

"வணக்கம்" என கையை குவித்துக் கொண்டாரவர்.

மஹாவின் வீட்டை பொறுத்த வரை ஆண் நண்பர்களுடன் பழக தடையில்லை அவளின் பெற்றோரிடத்தில். ஆனால் எவரிடம் பழகினாலும் அவர்களிடம் உரைத்துவிட வேண்டும். அதுவே அவர்களின் எண்ணம்.

ஆக மதியைப் பார்த்ததும் மஹாவிற்கு புதிதாய் கல்லூரியில் கிடைத்த நண்பனென எண்ணிக் கொண்டார் அவளின் அன்னை கலைச்செல்வி.

"ஆன்டி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். அதுக்கு தான் வீட்டுக்கு வந்தேன்" என்று மதிக் கூற,

இவனுக்காக குடிக்க ஜூஸ் எடுக்கச் சென்ற மஹா, "நம்ம அம்மாகிட்ட இவன் என்னத்தடா பேசப்போறான்" என்ற மைண்ட்வாய்ஸூடன் முகப்பறைக்கு வந்தாள்.

பஸ் ஸ்டாண்டில் நடந்த மொத்த நிகழ்வையும் ஒரு வரி விடாமல் அவளின் தாயிடம் ஒப்பித்துக் கொண்டிருந்தானவன்.

"அடப்பாவி இப்படி போட்டுக் கொடுத்துட்டியே" என பயங்கர கடுப்பில் அவனை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் மஹா.

"டேய் நீ சொல்லலனாலும் நான் நடந்ததை சொல்லிருப்பேன்டா... ஆனா விட வேண்டியதை விட்டுடு சொல்ல வேண்டியதை சொல்லிருப்பேன்... இப்படி ஒரு வரி விடாம ஒப்பிச்சிருக்க மாட்டேன்"

அவன் ஒப்புவித்ததை கேட்டதும் "என்னது" என அவளின் தாய் மஹாவை முறைக்க,

"இப்படி என்னை மாட்டி விட்டுடியே கடன்காரா" என மனதில் அவனை ஏகமாய் வாழ்த்தி திருதிருவென முழித்துக் கொண்டு நிற்க,

"ஏன் மஹா என் கிட்ட சொல்லல" என அவளின் அம்மா கேட்க,

"உங்களை தேவை இல்லாம டென்ஷன் பண்ண வேண்டாம்னு தான்ம்மா" என அவள் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு உரைத்தாள்.

"ப்ரோபோஸ் செய்ற எல்லார்கிட்டவும் இப்படிதான் சொல்லிட்டு திரியுறா ஆன்டி. அதனால யாராச்சும் உங்க கிட்ட அவளை பத்தி தப்பா போட்டு கொடுத்தாலும் நம்பாதீங்க அண்ட் ஆல்சோ அவளை கொஞ்சம் மிரட்டி வைங்க... இப்படி பிரச்சனைலாம் வீட்டுல வந்து சொல்லனும்னு மிரட்டுங்க"

அவனின் இவ்வார்த்தையில் "மிரட்டனுமா?? நான் என்ன பூனைக்குட்டியாட மிரட்டினதும் மிரண்டு ஓடுறதுக்கு" என மைண்ட் வாய்ஸில் கவ்ண்டர் கொடுத்துக் கொண்டிருந்தாள் மஹா.

"இவன் நல்லவனா இருக்க போய் பரவால… இதே கெட்டவனா வம்பு பண்றவனா இருந்து தனியா மாட்டிகிட்டா இவளுக்கு பிரச்சனை தானே… அதனால இந்த மாதிரி விஷயத்துல பெரியவங்க வழி நடத்துதல் ரொம்பவும் முக்கியம் ஆன்டி"

"எங்க வீட்லலாம் பொண்ணுக்கு மாப்பிள்ளை வந்தா படிக்கிறானு கூடப் பார்க்காம கல்யாணம் பண்ணி வைக்கத் தான் பார்ப்பாங்க. நான் தான் பெரியவங்களை கன்வின்ஸ் செஞ்சி வச்சிருக்கேன். பொண்ணு படிச்சு வேலைக்கு போயி சொந்த கால்ல நிக்குற கான்பிடன்ஸ் வந்த பிறகு மேரேஜ் செய்து வைங்கனு.

சோ அதே தான் என் ரெக்வெஸ்டா இங்கயும் வைக்கிறேன் ஆன்டி. எதுவும் தப்பா சொல்லிருந்தா சாரி ஆன்டி."

மதி தன் நீண்ட பெரும் சொற்பொழிவை முடிக்க,

"அடேங்கப்பா இவ்ளோ நல்லவனாடா நீ" என மஹா முழித்துக் கொண்டிருக்க,

மஹாவின் அம்மா அவனின் தலை கோதி, "ரொம்ப அருமையா உன்னை வளர்த்திருக்காங்கப்பா...நான் அவளை கண்டிப்பா கண்டிச்சு வைக்கிறேனெனக்" கூறி மஹாவை முறைத்தவர், அவனை நன்றாக உண்ணவைத்து விட்டே விடைக்கொடுத்து அனுப்பி வைத்தார்.

"மஹா என்னது இது மத்தவங்க சொல்ற அளவுக்கா நடந்துப்ப??"

அவளருகில் சென்று அவள் கன்னம் வருடி, "நீ என்னிக்கும் தப்பு செய்ய மாட்டானு தெரியும்டா அம்மாக்கு. நீயா பிரச்சனைய முடிச்சிடலாம்னு நினைச்சிருக்க... தப்பில்லை. இனி தனியா செய்யாத... எதுனாலும் அம்மாகிட்ட சொல்லிட்டு செய்... அம்மாக்கு ப்ராமிஸ் செய்" என மஹாவிடம் உறுதி மொழி வாங்கி கொண்டப்பின் தான் நிம்மதியானாரவர்.

அவனை பற்றிய இந்நினைவினிலேயே உறங்கிப்போனாள் மஹா.

அனைவரும் தேர்ச்சி பெற்று மூன்று மாத பயிற்சியினை முடித்திருத்த நிலையில், தங்களின் பணி நியமன ஆணைக்காக வேறோர் கிளை அலுவலகத்திற்கு இவர்களின் பேட்ஜ் மக்களை வரச் சொன்னார் இவர்களின் ஹெச்ஆர் தேவ். (மனிதவள அலுவலர்)

ஹெச் ஆரிடம் ரிப்போர்ட் செய்வதற்கான அந்த நாளில்...

You cannot copy content