You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E 41

Quote

41

“நான் என்ன தப்பு செஞ்சேன்… என்னை ஏன் கொல்லணும்னு நினைக்கறீங்க… ப்ளீஸ்… என்னை விட்டுடுங்க…” என்று துர்கா முகுந்தனிடம் கை கூப்பி இறைஞ்ச,

“என்னடி நடிக்கிறியா? நீ இங்க வந்ததுலயே ஏதோ ப்ளேன் இருக்குடி” என்றவன் எரிச்சலாகக் கூறியபடி துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்த முற்பட்டான்.

“சத்தியமா அப்படியெல்லாம் எதுவும் இல்ல” என்றவள் அவன் காலை பிடித்துக் கொண்டாள். ஆனால் அப்பொழுதும் அவன் மனம் கொஞ்சமும் இறங்கவில்லை.

அவள் தலை முடியைக் கொத்தாகப் பிடித்து தூக்கியவன், “உனக்கும் அந்த பாரதிக்கும் என்னடி லிங்க்?” என்று ஆக்ரோஷமாக வினவ தேம்பி தேம்பி அழுதபடி அவள் தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்.

“பீகார்ல இருந்து வந்து எங்க அம்மா இங்கே கட்டிட வேலை செஞ்சாங்க… என்னை நல்லா படிக்க வைக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாங்க… ஆனா எங்க அம்மா இறந்த பிறகு” என்றவள் விம்மிக் கொண்டே தனக்கு நேர்ந்த கெதியை எடுத்துரைத்தாள். மேலும் அப்படியொரு தருணத்தில் பாரதியைச் சந்தித்த நிகழ்வையும் விவரித்தாள்.

“நான் பாரதியை காதலிச்சேன்… ஆனா பாரதி என்னை காதலிக்கல… அதுக்கப்புறம்தான் என்னை இந்த ஆசிரமத்துல சேர்த்திட்டாங்க… ஆனா இப்போ எங்க அம்மா ஆசைபட்ட மாதிரி நான் படிச்சு பெரியாளாகணும்னு ஆசைப்படுறேன்” என்றவள் சோகம் பிழிய  விவரித்த விதத்தில் அவனுக்கும் கொஞ்சமாக அவள் மீது இரக்கம் பிறந்தது.

துர்காவுக்கும் பாரதிக்குமான தொடர்பை பற்றி தீவிரமாக யோசித்த முகுந்தனின் மூளையில் அந்த ஆபத்தான யோசனை உதித்தது.

“அந்த பாரதி உண்மையிலேயே உன்னை காதலிக்கலயா?” என்று அவன் அவளிடம் கேட்க,

“உஹும் இல்ல” என்றவள் விம்மலோடு தெரிவித்தாள்.

துர்காவை மேலும் கீழுமாக பார்த்தவன், “இப்பவும் நீ அந்த பாரதியை காதலிக்கிறியா?” என்று கேட்டான்.

“இல்ல… அவருக்கு என்னை பத்தின கவலையும் அல்ல… அக்கறையும் இல்ல… நான் ஏன் அவரை பத்தி யோசிக்கணும்… எனக்கு படிக்கணும்… அதுக்காகதான்… நான் இந்தளவுக்கு இங்கே இறங்கி வந்து” என்று மேலே சொல்ல இயலாமல் மீண்டும் முகத்தை மூடி அழ தொடங்கிவிட்டாள்.

முகுந்தனின் சிந்தனை வேறெங்கோ பயணித்தது. ராஜீவை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று நந்தினி பிடிவாதமாக இருக்கிறாள். அதற்கு காரணம் பாரதிதான். துர்காவை வைத்து ஒரு நாடகத்தை நிகழ்த்தினாள் என்ன என்று எண்ணியவன்,

“நான் உனக்கு வேண்டியதெல்லாம் செய்றேன்… நீ எந்த பிரச்சனையும் இல்லாம படிக்கவும் நான் ஹெல்ப் பண்றேன்… ஆனா அதுக்கு பதிலா நீ எனக்கு ஒரு உதவி செய்யணும்” என்று பீடிகையோடு பேச ஆரம்பித்தான்.

 முதலில் துர்கா ஒன்றும் புரியாமல் விழித்தாள். முகுந்தன் தன் திட்டத்தைச்  சொன்ன கேட்ட பின்பு அவளுக்குச் சற்றே அதிர்ச்சியாக இருந்தது.

“ஒரு வேளை நான் சொன்னதை நீ செய்ய மாட்டேன்னு சொன்னன்னு வை” என்றவன் அவளை முறைத்து பார்க்கவும்,

“இல்ல… நீங்க என்ன சொல்றீங்களோ நான் அதை அப்படியே செய்றேன்” என்றவள் ஒப்பு கொண்டாள்.

“இங்கே ஒத்துக்கிட்டு என்னை ஏமாத்தணும்னு நினைச்ச” என்றவன் எச்சரிக்கையாக பார்த்து வைக்க,

“அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்… எனக்கு என் படிப்பு… என் வாழ்க்கை… அது தவிர… வேற எதுவும் வேற யாரும் முக்கியமில்ல” என்று திட்டவட்டமாகச் சொன்னவள், “நீங்க என்னை முழுசா நம்பலாம்” என்று உறுதி கொடுத்தாள்.

ஆனால் அவன் அப்போதும் முகவாயை தடவியபடி சந்தேகமாகப் பார்த்து, “நீ என்னதான் இருந்தாலும் அந்த பாரதியை காதலிச்சிருக்க” என்று சொல்ல,

“ஆமா காதலிச்சேன்… ஆனா அவரு என் உணர்வை ஒரு பொருட்டா கூட மதிக்கல… நான் எவ்வளவோ கெஞ்சினேன்… அழுதேன்… அவர் என் மனசை புரிஞ்சிக்காம  என்னை இந்த ஆசிரமத்துல சேர்த்துட்டாரு… உங்களுக்கும் அவர் மேல என்ன கோபம் இருக்குன்னு எனக்கு தெரியாது… ஆனா எனக்கு அதை விட அதிகமா இருக்கு” என்றவள் கண்கள் சிவக்க கண்ணீரோடு கூறும் போது அவனுக்கு அவள் மீது நம்பிக்கை வந்திருந்தது. 

“சரி… நான் உன்னை நம்புறேன்… ஆனா நீ நடுவுல எங்கயாச்ச்சும் மனசு மாறுன” என்றவன் அழுத்தமாக கூற,

“என்னை கொன்னுடுங்க” என்றவள் நெற்றில் பொட்டில் அவன் கரத்தை பிடித்து துப்பாக்கியை வைத்தாள்.

அவளை பார்த்து குரூரமாக சிரித்தவன், “தப்பு செய்றவனைத்தான் கொலை எல்லாம் பண்ணுவேன்… ஆனா நம்ப வைச்சு துரோகம் செய்றவங்களை சாதாரணமா சாக விட மாட்டேன்… அவங்க வாழுற ஒவ்வொரு நொடியும் நரகமா மாத்திடுவேன்… ஒரு வேளை நீ அப்படி என்னை நம்ப வைச்சு ஏமாத்திடலாம்னு நினைச்ச… மும்பைல இருக்க விபாச்சாரி விடுதில நீ இருப்ப… அங்க உன் உயிரை மட்டும்தான் மிச்சம் வைப்பாங்க… புரிஞ்சுதா?” என்றவன் வஞ்சமாகச் சொன்ன தொனியில் துர்காவுக்கு தான் எத்தனை பெரிய ஆபத்தில் சிக்கி இருக்கிறோம் என்பது புரிந்தது.

கரணம் தப்பினால் மரணம் என்பார்கள். துர்காவின் நிலைமை அதைவிடவும் மோசம்

அவள் இனி எடுத்து வைக்கப் போகும் ஒவ்வொரு அடியிலும் ஆபத்து காத்திருந்தது.

முகுந்தன் மிக சாதுரியமாகத் திட்டமிட்டு பாரதியின் வாழ்வில் துர்காவை இணைத்தான். ஆரம்பத்திலிருந்து யோசித்துப் பார்த்தால் நந்தினி ஒன்றும் துர்கா பாரதியின் காதலுக்கு இடையூறாக வரவில்லை.

துர்காதான் நந்தினியின் காதலை அழிக்க வந்தால் என்பது புரியும். பாரதியை துர்கா அணைத்திருந்தது போல செய்தித்தாளில் அச்சிடப்பட்ட புகைப்படம் கூட முகுந்தனின் சதிகளில் ஒன்று.

அந்த புகைப்படம்தான் நந்தினியின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்தது. அதன் பிறகு எந்த சூழ்நிலையிலும் பாரதியை நந்தினி நெருங்கவிடாமல் துர்கா பார்த்துக் கொண்டாள்.  

இறுதியாக பாரதி கொலைக் குற்றவாளியாகக் கைதாகி அவன் லட்சியத்தை உருக்குலைத்ததும் முகுந்தனின் சதி வேலைதான். ஆனால் அவற்றை மிக சாதுரியமாகச் செயல்படுத்தியது துர்காவின் மூளைதான்.

துர்காவின் அந்த திறமையில்தான் முகுந்தன் கவரப்பட்டான். அவளும் சமான்யப்பட்டவள் அல்ல.

பதினெட்டு வயதிலேயே கொலை, துரோகம் என்றவள் செய்யாத அக்கிரமங்கள் எதுவும் இல்லை. அவளை பொறுத்துவரை நீதி நேர்மை நியாயம் என்பதெல்லாம் செல்லாக்காசு.

பணம் பதவியின் முன்னே எப்பேர்ப்பட்ட குற்றமும் எடுபடாது. பதவியும் பணமும் படைத்த முகுந்தன் போன்ற அரசியல் ஜாம்பவானின் நன்மதிப்பையும் அன்பையும் பெற அவள் எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருந்தாள்.

அவள் நினைத்தது போலவே முகுந்தனை அவள் சாய்த்துவிட்டாள். அவன் அவள் மீது பித்துப் பிடித்துக் கிடந்தான். அவளுக்காக அவன் அனைத்து வசதிகளையும் செய்து தந்தவன் அவளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அவள் விரும்பிய படிப்பை படிக்கவும் வைத்தான்.

 முதலமைச்சர் பதவிக்காக அவன் ஸ்வேதாவை மணம் செய்த போதும் முகுந்தனிடமிருந்த தன் பிடியை துர்கா நழுவவிடவில்லை.

ஆனால் துர்காவுக்கு முகுந்தன் மீதிருந்தது காதல் காமம் ஈர்ப்பு என்று எந்த வகையறாவும் இல்லை. அவளுக்கு அவனின் பாதுகாப்பும் பணபலமும் தேவையாக இருந்தது. மொத்தத்தில் அவனை ஏணிப்படியாக உபயோகித்து மேலே ஏறி வந்தவள் அவன் தேவை முடிந்த மறுகணம் அந்த ஏணியை எட்டி உதைத்துவிட்டாள்.

முகுந்தனின் காலில் விழுந்தவள் சந்தர்ப்பம் வாய்த்த போது அவன் காலையே வாரிவிட்டாள். அதுதான் துர்கா.

இந்த உண்மை புரிய முகுந்தனுக்கு இத்தனை வருடமானது. அவள் முதலமைச்சர் பதவியில் அமர்ந்த போது கூட அது வர்மா ஜீயின் திட்டம் என்றுதான் அவன் நினைத்திருந்தான். ஆனால் அதற்குப் பின்னணியில் துர்காவின் சூழ்ச்சியும் சாமர்த்தியமும் இருந்தது என்பதை அவள் நேரடியாக அன்று காணொளியில் பேசிய போதுதான் அவன் மூளைக்கு உரைத்தது.

ஆனால் இதில் முகுந்தன் செய்தது துர்கா மூலமாக அவனுக்கே திரும்பி வந்ததுதான் விதி.

முகுந்தனுக்கு இப்போதுதான் முழுமையாக அவன் தவறு புரிய ஆரம்பித்தது. தலையில் பெரிய கட்டோடு பரிதாபமாக அமர்ந்திருந்த முகுந்தன் தான் செய்த அநியாயங்களை எல்லாம் யோசித்துப் பார்த்து மனம் புழுங்கி அழுதான்.

“ஏன் அழுற… என்னாச்சு… பைத்தியம் பிடிச்சிடுச்சா உனக்கு” என்று அவன் அறையிலிருந்தவன் வினவ,

“இல்ல… இப்பதான் எனக்கு பைத்தியம் தெளிஞ்சுது” என்றான் முகுந்தன்.

“அதான் நீ பைத்தியக்கார ஹாஸ்பத்திரி ல இருக்க” என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

முகுந்தனுக்குச் சிரிப்பு வந்தது.

இதுவும் துர்காவின் திட்டம் என்று அவனுக்குத் தெரியும். சிறையில் அவன் தலையிடித்து கொண்டதாக சொல்லி அவனுக்கு பைத்தியம் என்ற முத்திரை குத்தி மனநல காப்பகத்தில் சேர்த்துவிட்டார்கள்.

******

திருச்சி மாநகரம்.

தியாகுவிடம் விஷயத்தைச் சொல்ல வேண்டுமென்று பரபரப்பாக ஓடி வந்த மாலதி பூட்டிய கதவைப் பார்த்துத் தேங்கி நின்றுவிட்டாள்.

“அம்மா அம்மா” என்று தன் வீட்டிற்குள் ஓடியவள்,

“ஏன் தியாகு தாத்தா வீடு பூட்டி இருக்கு?” என்று கேட்டாள்.

“எனக்கு என்னடி தெரியும்… நான் உள்ளே சமைச்சிட்டு இருந்தேன்” என்றவர் கூற அவள் வேகமாக தன் பேசியை எடுத்து அவருக்கு அழைத்தாள்.

நீங்கள் தொடர்பு கொண்ட நபரின் இணைப்பு அனைத்து வைக்கப்பட்டுள்ளது என்று பதிவு குரல் பேச, மாலதியின் மனதில் ஏதோ நெருடியது.

வெளியே உட்கார்ந்து பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை  தியாகு வருகிறாரா என்று வாசலைப் பார்த்துக் கொண்டும் செல்பேசியில் அழைத்துக் கொண்டும் இருந்தாள்.

இருட்டிய பிறகும் அவர் வராததில் மாலதிக்கு உள்ளத்தில் பதட்டம் கூடியது.

“எதுக்கு வாசலிலேயே உட்கார்ந்துட்டு இருக்க… உள்ளே வா” என்றவள் தந்தை கடிந்து கொள்ள, எழுந்து வீட்டிற்குள் சென்றவள்,

“தாத்தாவை காணோம் பா… எங்க போனாருன்னு தெரியல” என்று வருத்தமாகக் கூறினாள்.

“அவர் யாராச்ச்சும் சொந்தகாரங்க வீட்டுக்கு போயிருக்கலாம் மாலு… அவரு ஏன் நம்மகிட்ட சொல்லிட்டு போகணும்”

“இல்ல பா… தாத்தா என்கிட்ட சொல்லிட்டு போவாரு”

அவளை முறைத்தவர், “போய் சாப்பிட்டு தூங்கு மாலு… அவர் காலையில வந்திருவாரு… போ” என்று கண்டிப்பாக கூற, மாலுவின் முகம் வாடிப்போனது. 

அவளுக்குச் சாப்பாடு உள்ளே இறங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. போர்வைக்குள் புரண்டு புரண்டு படுத்தவள் விடிந்ததும் எழுந்து தியாகு வீட்டு வாசலில் வந்து நின்றதில் அவளுக்கு ஏமாற்றமே மிச்சமானது. வீடு பூட்டியபடியே இருந்தது.

ஒரு வேளை தங்கள் குழுவை விசாரித்தது போல தியாகு தாத்தாவை விசாரிக்க அழைத்துச் சென்றிருப்பார்களோ என்ற சந்தேகம் உருத்த, உள்ளே சென்று தன் தந்தையிடம்,

“எனக்கு பயமா இருக்குபா… இன்னும் தாத்தா வரல… அவர் ஃபோனும் சுவிட்ச் ஆப்லயே இருக்கு… நீங்க எதுக்கும் அவர் மகனுக்கு ஃபோன் பண்ணிக் கேட்டுப் பாருங்களேன்” என்றாள்.

மகளின் கவலையில் நியாயம் இருக்கிறதோ என்று யோசித்தவர் ராஜாவிற்கு அழைத்து விசாரித்தார்.

“நேத்துல இருந்த அப்பா ஃபோன் சுவிட்ச் ஆப்ல இருந்தது… நானும் என்னவோ ஏதோன்னு பயந்துட்டு இருந்தேன்” என்றவன் கூறிவிட்டு,

“சரி… நான் எங்க ரிலேஷனுக்கு எல்லாம் கால் பண்ணிக் கேட்கிறேன்” என்று அவன் அழைப்பைத் துண்டித்துவிட்டான்.  

மாலதிக்குப் பதட்டம் அதிகரித்தது. தியாகுவிற்கு ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்குமோ என்ற எண்ணி அவள் கவலையுற்ற அதேசமயம் அவரை நாற்காலியில் கட்டிப்போட்டு நால்வர் சுற்றி நின்றிருந்தனர்.

தியாகுவின் முகம் ரொம்பவும் வாட்ட முற்றிருந்தது. இரவு முழுக்க உணவு தண்ணீர் இல்லாமல் இருந்ததில் அவர் மிகவும் பலவீனமாக காணப்பட்டார்.

“வயசானவர்னு அமைதியா பேசிட்டு இருக்கோம்… ஒழுங்கா இந்த போட்டோல இருக்கவன் எங்க இருக்கான் என்னன்னு எங்ககிட்ட சொல்லிடுங்க” என்று பாரதியின் படத்தைக் காட்டி ஒருவன் மிரட்ட, அவர் மௌனமாக அமர்ந்திருந்தார்.

“இப்போ நீங்க வாயை திறந்த பேச போறீங்களா இல்லையா?”

அப்போதும் அவரிடம் மௌனம் மட்டும்தான்.

“இப்போ நீ வாயை திறக்கல?” என்றவன் அந்த இடமே அதிருமளவுக்குக் கத்திவிட்டு அவர் கழுத்தை உக்கிரமாக பிடித்து நெரிக்க,

“எனக்கு அந்த போட்டோல இருக்கவன் யாருன்னே தெரியாது” என்றவர் நிதானமாகச் சொல்ல அவன் கோபம் எல்லையை மீறியது.

“ஏ கிழவா… பொய் சொன்ன உயிரோட போக மாட்ட பார்த்துக்கோ” என்றவன் உக்கிரமாக மிரட்ட,

“நான் எக்ஸ் மிலிட்டரி ஆபிஸர்… இந்த மாதிரி மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்” என்றவர் திடமாகக் கூறினார்.

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content