You don't have javascript enabled

மோனிஷா நாவல்கள்

Vilakilla Vithigal Avan - E 42

Quote

42

தியாகுவிற்காக மாலதி வீட்டு வாயிலிலேயே காத்துக் கிடந்தாள்.

“எங்கடி போயிருக்க போறாரு… வந்துருவாரு” என்றவள் பெற்றோர்கள் மாறி மாறி சமாதானம் கூறிய போதும் மாலதியின் செவியை அவை எட்டியபாடில்லை.

நேரம் ஆக ஆக, ‘அவர் நல்லபடியாக வந்து விடுவார்’ என்றவள் மனதில் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சம் நம்பிக்கையும் வடியத் தொடங்கியது.

தன் உறவினர்கள் வீட்டில் விசாரிப்பதாக கூறியிருந்த அவர் மகன் ராஜா கூட எந்த தகவலும் சொல்லவில்லை.

இதற்கு மேலும் காத்திருப்பது சரியாக வராது என்றவள் எண்ணி எழுந்த போது, கேட்டை திறந்து கொண்டு நுழைந்தார் தியாகு.

மாலதிக்கு அப்போதுதான் மூச்சே வந்தது.

“எங்க போனீங்க தாத்தா? சொல்லாம கொள்ளாம” என்றவள் கோபமாக முறைத்துக் கொண்டு நிற்க,

“என் ப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்… நைட்டே வந்துடலாம்னுதான் நினைச்சேன்… ஆனா அவன் ரொம்ப கம்பெல் பன்னதால  தங்கிட்டு வரும் படியா ஆயிடுச்சு” என்றவர் கூற,

“அது சரி… உங்க ஃபோனுக்கு என்னாச்சு? எத்தனை தடவை ட்ரை பண்ணேன் தெரியுமா? ஸ்விட்ச்ட் ஆப் ஸ்விட்ச்ட் ஆப்னு வந்துச்சு?” என்றவள் மேலும் கோபமாகக் கேட்டாள்.

“வீட்டுலேயே மறந்துட்டு போயிட்டேன் டா… அது சார்ஜ் இல்லாம ஸ்விட்ச்ட் ஆப் ஆகியிருக்கும்… என்ன பண்றது? வயசு ஆக ஆக மறதி அதிகமாயிடுச்சு” என்றவர் காரணம் கூற,

“போங்க தாத்தா… இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்” என்று அவள் கடுப்பாகச் சொல்ல, உள்ளே இருந்த மாலதியின் தாய்,

“வந்துட்டீங்களா… நேத்துல இருந்த உங்களை காணோம்னு எங்களை எல்லாம் இவ படுத்தி எடுத்துட்டா” என்றார். தியாகு புன்னகைத்தார்.

ஆனால் அந்த புன்னகையில் உயிர் இல்லை. ஏதோ ஆழமான வலியிருந்தது போல உணர்ந்தாள் மாலதி.

“நீ உள்ளே வா மாலு… தாத்தா ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று அவள் அம்மா அழைக்க மாலதியின் மனம் ஒரு நிலையில் இல்லை. தியாகுவின் முகத்தில் களைப்பையும் தாண்டி சொல்லவொண்ணா துயரம் படர்ந்திருந்தது.

அவரை பார்த்ததும் ஏற்பட்ட சந்தோஷத்தில் அவள் இது எதையும் கவனிக்கவில்லை.

தியாகு வீட்டிற்குள் சென்று கதவையடைத்து கொள்ள, மாலதியின் மனம் பரபரத்தது. 

‘உஹும்… தாத்தா பொய் சொல்றாரு… வேறெதோ நடந்திருக்கு’ என்று யூகித்தவள், அவர் வீட்டிற்குள் சென்றாள்.  

முகப்பறையில் யாரும் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட, “தாத்தா” என்று தேடி கொண்டு உள்ளே சென்றவள் படுக்கையறையில் அவர் தலையை கவிழ்ந்து முகத்தை மூடி அழுதிருக்கவும்,

“என்னாச்சு தாத்தா?” என்று கேட்டு பதறினாள்.

அவள் குரலைக் கேட்ட மறுகணம், “ஒன்னும் இல்ல” என்று அவர் முகத்தை துடைத்து கொண்டு நிமிர,

“பொய் சொல்லாதீங்க… நீங்க ப்ரெண்ட் வீட்டுக்கு போகலதானே… ஏதோ நடந்திருக்கு? என்கிட்ட மறைக்க பார்க்காதீங்க… உண்மையை சொல்லுங்க” என்று அவள் தோண்டி துருவ தியாகுவின் கண்களில் நீர் பெருகியது.

 “என்னாச்சு தாத்தா… சொல்லுங்க” என்று அவர் அருகில் ஆதரவாக அமர,  மாலதியிடம் அவரால் தன் மனவேதனையை மூடி மறைக்க முடியவில்லை.

நேற்று வீட்டிற்கு வந்த இருவர் அதிகாரிகள் என்று கூறி அவரை ஏதோ விசாரணை என்று அழைத்து சென்றதாகவும், ஊரை விட்டு தள்ளியிருந்த ஒரு குடோனில் கட்டி வைத்து பாரதியை பற்றி விசாரித்தகாவும் கூற மாலதியின் முகத்தில் ஈயாடவில்லை.

“அய்யயோ… அப்புறம்” என்றவள் பதற்றமடைய,

“எனக்கு தெரியாதுன்னு எவ்வளவு சொல்லியும் அவங்க நம்பல” என்றவர் மனம் இப்போதும் நடந்தவற்றை நினைத்தால் படபடவென அடித்துக் கொண்டது.

அவர் முன்னே அந்த அதிகாரிகள் ஒரு மடிக்கணியை வைத்தனர்.

“எப்படி இருக்கீங்க பா” அந்த மடிக்கணினியில் இருந்த வெளிவந்த பெண்ணின் குரல். களைப்பிலும் மயக்கத்திலும் இருந்தவர் மெல்ல விழிகளைத் திறந்தார்.

யார் முகத்தில் விழிப்பது பெரும் பாவமென்று கருதினாரோ யாரை தன் அடிமனதிலிருந்த ஆழமாக வெறுத்தாரோ அவள்…  அவளேதான்…

வாழ்நாளில் பார்க்கவே கூடாது என்று நினைத்த அவள் முகமேதான் அது…

துர்கா இணையத்தின் காணொளி சந்திப்பு வழியாக அவருக்குக் காட்சி தந்தாள்.

அந்த முகத்தைப் பார்த்த நொடி அவர் அசூயையாக முகத்தைச் சுளித்து,  

“சீ நீயா… இந்த ஜென்மத்துல உன் முகத்துல முழிக்கவே கூடாதுன்னு நினைச்சேன்” என்றவர் வார்த்தைகளால் வெறுப்பை உமிழ,

“என்ன பண்றது பா… நம்ம இரண்டு பேரும் இத்தனை வருஷம் கழிச்சு  பார்க்கணும்னு விதி இருக்கு போல” என்று அவள் அலட்டி கொள்ளாமல் கூற,

“எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கல… பாரதி வாழ்க்கையை அழிச்ச துரோகி… என் பொண்ணை கொன்ன கொலைக்காரி” என்றவர் வசைமாரி பொழிந்தார்.

“இப்படியெல்லாம் கத்தாதீங்கபா… உடம்புக்கு நல்லதில்ல” என்றவள் அக்கறையாக கூறுவது போல பாவனை செய்ய,

“சீ… யாருடி உனக்கு அப்பா… என்னை அப்படி கூப்பிட்டனா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்றவர் மீண்டும் கத்திவிட்டு தொண்டை அடைத்து இருமவும்,  

“சொன்னேன் இல்ல… கத்தாதீங்கன்னு… நீங்க கத்துனதால இப்போ பாருங்க” என்று நக்கல் சிரிப்புடன் உரைத்தவள்,

“உங்களுக்கு இருந்த ஒரே மகளும் போயிட்டா... அதான் நானாவது அப்பான்னு கூப்பிட்டு உங்க மனசை தேத்துலாம்னு பார்த்தேன்… என்னதான் இருந்தாலும் நானும் உங்க தத்து மகதானே பா… எனக்கும் உங்களை அப்பா ன்னு கூப்பிடுற உரிமை இருக்குதானே” என்று அவள் நீளமாக விளக்கம் தரவும்,

“உன் மேல பாவப்பட்டுதான் உன்னை நான் தத்து எடுத்தேன்… ஆனா நீ… என குடும்பத்தையே நிலைகுலைய வைச்சுட்டியே டி பாவி” என்றவர் வேதனையோடு பொருமினார்.

“இத்தனை வருஷம் கழிச்சு இதை பத்தி எல்லாம் பேசுறதுனாலயோ இல்ல நீங்க கத்துறதுனாலயோ ஏதாச்சும் மாறிட போகுதா என்ன? இல்ல செத்து போன உங்க மகதான் திரும்பி வந்துட போறாளா?” என்று அலட்சியமாகக் கூறியவள்,

“சரி… எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு… உங்ககிட்ட பேசி  வீணா டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க முடியாது… நான் கேட்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிட்டு… நீங்க பத்திரமா வீட்டுக்கு கிளம்புற வழிய பாருங்க” என்றாள்.

அவளை எரிப்பது போல பார்த்தவர், “என்னை நீ கொன்னு கூட போட்டுக்கோ… ஆனா நான் பாரதி இருக்கிற இடத்தை சொல்ல மாட்டேன்” என்க, அவள் எள்ளலாகச் சிரித்தாள்.

பின்னர் அவரை எறிஇறங்க பார்த்துவிட்டு, “என்னதான் இருந்தாலும் நீங்க என்னோட வளர்ப்பு அப்பா … உங்களை போய் கொல்ல சொல்லு வேணா… அந்த ஆபீசர்ஸ் கிட்ட வேணா  கேட்டு பாருங்க… உங்க மேல ஒரு அடி கூட படக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்… ஏன்னா எனக்கு தெரியும்… உங்களை அடிச்சா எந்த பிரயோஜனமும் இல்லன்னு” என்றவள் நிறுத்தி இடைவெளிவிட்டு,

“அதான் துபாய்ல இருக்க உங்க பேத்தியை கடத்த சொல்லிட்டேன்” என்று சொல்லி வஞ்சமாக புன்னகைத்தாள்.

அந்த திரையின் மற்றொரு பிரிவில் அவரின் பேத்தி கண்கள் கட்டப்பட்டு அடைக்கப்பட்டு இருந்த காட்சி தென்படவும் அவர் விதிர் விதிர்த்து போனார். 

“அடிப்பாவி ராட்சஸி” என்று தியாகு பதற,

“டென்ஷனாகதீங்க பா… நீங்க என் கேள்விக்குப் பதில் சொல்லலன்னாதான் உங்க பேத்தியை ஏதாச்சும் பண்ணுவேன்” என்றவள்   சொன்ன மறுநொடி,

“எனக்கு உண்மையிலேயே பாரதி எங்க இருக்கான்னு தெரியாது… அவன் ஜெயில இருந்து ரிலீசான பிறகு நான் அவனை பார்க்கல… அவனும் என்னை தேடி வரல… எனக்கு தெரியாத விஷயத்தை சொல்லு சொல்லுன்னு சொன்னா நான் என்ன சொல்றது?” என்றவர் வினவ,

“உங்க பேத்தி மேல சத்தியமா பாரதி இருக்குற இடம் உங்களுக்கு  தெரியாதா?” என்றவள் கேட்டு அவரை ஏற இறங்க பார்க்க, அவர் தடுமாறி போனார்.

“உங்களுக்கு தெரியும்… நீங்க மறைக்குறீங்க” என்றபடி அவளே  மேலும் தொடர்ந்தாள்.

“தெரியாதுன்னா தெரியாதுன்னு மட்டும்தான் சொல்லணும்…  செத்தாலும் பாரதி எங்க இருக்கான்னு சொல்ல மாட்டேன்னு நீங்க சொன்னதுல உங்களுக்கு ஏதோ தெரிஞ்சிருக்குன்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு பா” என்று நக்கல் தொனியில் கூறியவள்,

“இதுக்கு மேல என்கிட்ட மறைக்க பார்க்காதீங்க… அப்புறம் உங்க மக மாதிரியே உங்க பேத்திக்கும் அல்ப ஆயுசாகிடும்…  வசுவோட விதி மாதிரி இவ விதியும் என் கையாலேயே போயிடும்” என்றவள் குரூரமாகக் கூறி முடிக்க தியாகு வேதனையில் உள்ளம் புழுங்கி,  

“நீ நல்லாவே இருக்க மாட்ட… உன் சாவு கொடூரமா இருக்க போகுது துர்கா” என்று சபிக்க,

“சாவை பத்தி எல்லாம் நான் யோசிக்குறது இல்ல… அதை விட கொடூரத்தை எல்லாம் நான் பார்த்துட்டு வந்துட்டேன்… எனக்கு இப்போதைக்கு நான் வாழுற இந்த நிமிஷம் மட்டும்தான் முக்கியம்” என்று அலட்டி கொள்ளாமல் கூறியவள்,

“எனக்கு டைம் ஆகுது… இப்போ நீங்க உண்மையை சொல்றீங்களா இல்ல” என்றவள் மிரட்டலாக பார்க்க தியாகுவின் முகம் இரத்தம் வற்றி வெளுத்துவிட்டது.

தன் வேதனையையும் கோபத்தையும் பல்லை கடித்துக் கொண்டு அடக்கியவரால் அதற்கு மேல் பிடிவாதம் பிடிக்கவோ தெரியாது என்று மறுக்கவோ முடியவில்லை. வேறு வழியின்றி தனக்குத் தெரிந்த உண்மையை அவளிடம் கூறினார்.

“பாரதி சிறுமலை இருக்கிறதா தகவல்… மத்தபடி நான் அவனை பார்க்கல… அவன் அங்க இருக்கான்னு  கூட எனக்கு தெரியாது” என்றவர் சொன்ன பிறகுதான் அவரை கட்டவிழ்த்து அனுப்பிவிட்டனர்.

 நடந்தவற்றை எல்லாம் கேட்ட மாலதி அதிர்ச்சியே ரூபமாக அமர்ந்திருக்க,

“நீ பாரதி எங்க இருக்கன்னு தேடி கண்டுபிடிக்காம இருந்திருந்தா அவன் எங்க இருக்கான்னு எனக்கு இப்பவும் தெரிஞ்சிருக்காது… நானும் இந்த உண்மையை அந்த பிடாரிகிட்ட சொல்லி இருக்க மாட்டேன்” என்று தொண்டை அடைக்க தன் வேதனைகளை அத்தனை நேரம் விழுங்கிக் கொண்டு பேசியவர்.

“என் சுயநலத்துக்காக நான் பாரதி இருக்கிற இடத்தை காட்டி கொடுத்துட்டேன் மாலதி” என்று கூறி அந்த கணமே வெடித்து அழுதார்.  

அவரை தேற்ற முடியாமல் மாலதி தவிப்புற்றாள். அவள் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

தான் சிறுமலைக்கு பாரதியை தேடி சென்றதால்தான் இவ்வளவும் என்ற தவிப்பும், இதனால் பாரதிக்கு ஏதாவது நேர்ந்துவிடுமோ என்ற பதட்டமும் சேர்ந்து அவளையும் நிலைகுலையச் செய்திருந்தது.

இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வதென்று அவள் குழம்பிப் போயிருக்க, மேலும் அவளுக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்தது.

அடுத்த நாள் விடிந்து வெகுநேரமாகியும் தியாகுவின் வீட்டுக் கதவு திறக்கப்படவில்லை. மாலதி பதறி எல்லோரிடமும் கூற,  அவர்கள் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்து அதிர்ந்தனர்.

 தியாகு உறக்கத்திலேயே மரணித்துவிட்டார்.  

அவர் படுக்கையில் இறந்து கிடந்த காட்சியைப் பார்த்து மாலதிக்கு உலகமே சுழலாமல் நின்றுவிட்டது போல அதிர்ச்சியில் அப்படியே  உறைந்து நின்றாள். இப்படியொரு அசம்பாவிதம் நிகழும் என்று அவள் கற்பனை கூட செய்யவில்லை.

பாரதியின் இருப்பிடத்தைக் காட்டி கொடுத்துவிட்டோம் என்ற குற்றவுணர்வே அவரை கொன்றுவிட்டது என்பது மாலதியை தவிர வேறு யாருக்கும் தெரிந்திராத உண்மை.   

தான் பாரதியை தேடிச் சென்றதால் வந்த வினை. ஆர்வகோளாரால் தான் செய்த முட்டாள்தனம் இன்று ஒரு உயிரையே காவு வாங்கிவிட்டது.

மாலதி மீள முடியா சோகத்தில் ஆழ்ந்திருந்த அதே நாளில் துர்கா குழம்பித் தவித்திருந்தாள்.

சிறுமலையை சல்லடை போட்டுத் தேடிய அவளுடைய ஆட்களுக்கு பாரதியை பற்றிய தகவல் கிடைத்ததே ஒழிய பாரதி கிடைக்கவில்லை. அங்கு வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு பாரதியை தெரிந்திருந்தது.  ஆனால் அவன் இப்போது எங்குச் சென்றான் என்றுதான் அவர்களுக்கும் கூட தெரியவில்லை. யாருக்கும் ஒரு சிறு தகவல் கூட தெரியாததுதான் தேடி சென்ற அவர்கள் குழுவிற்குக் குழப்பமாக இருந்தது. 

இதில் மேலும் வியப்பூட்டும் விஷயம் ஒரு வாரம் முன்பாக ‘நந்தினி மிளகு தோட்டம்’ விலை பேசி விற்கப்பட்டிருந்தது. அவர்கள் பாரதியை தேடத் துவங்கியே மூன்று நாட்கள்தான் ஆகியிருக்கும் நிலையில் முன்னமே அவன் அவ்விடம் விட்டு இடம்பெயர திட்டமிட்டிருப்பது அவளை இன்னும் இன்னும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

இதில் கூடுதலாக கிடைத்த தகவல் லெனின் என்ற பெயர்தான். நந்தினி மிளகு தோட்டம் அவன் பெயரில்தான் இத்தனை வருடங்களாக இருந்தது.

இருப்பினும் தோட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு பாரதிதான் முதலாளியாக அறியப்பட்டு இருக்கிறான்.

அப்படியெனில் இதில் லெனின் என்பவன் யார்? அவனுக்கும் பாரதிக்கும் என்ன சம்பந்தம்?

இந்த கேள்வியிலிருந்து மீண்டும் துர்காவின் குழு தங்களுடைய தேடலை துவங்கியிருந்தனர்.   

vanitha16, shiyamala.sothy and bhavanya lakshmi.nagarajan have reacted to this post.
vanitha16shiyamala.sothybhavanya lakshmi.nagarajan
Quote

Super ma 

You cannot copy content